நான் ரசித்த சிறுகதைகள் – ஆர்.வெங்கட்ராமன்

ஆர்.வெங்கட்ராமன்
 

சிறந்த சிறுகதைகள்என்று சித்தரந்தப் படுத்த வேண்டிய பொறுப்பு மிகமிகப் பெரியது. அந்தப் பொறுப்பு எனக்கு வேண்டாம். என் அபிப்பிராயத்தில் காலமே அந்தப் பெரும் பொறுப்பை ஏற்கத் தகுந்தது ஆகும். காலத்தை மிஞ்சிய நீதிபதி–பாரபட்சமற்று எடை போடும் விமரிசகன் – இருப்பதாக நான் நம்ப வில்லை. காலத்திற்கு விருப்பு வெறுப்பு இருப்பதில்லை. வேண்டியவன் வேண்டாதவன் என்ற வர்க்கபேதமிருப்பதில்லை. எல்லாமே அதற்கு ஒன்றுதான். மக்கலான சரக்குகள் சீக்கிரத்திலேயே மடிந்து போகின்றன. இரும்பைப் போன்றவை கொஞ்ச காலத்தில் துறு ஏறிப் போகின்றன. ஆனால் எக்காலத்திலும் எதனாலும் மாறுதலடையாத அரும் பொருள்கள் இல்லாமல் போவதில்லை. அப்படிப் பட்ட பொருள்தான் பரம்பொருளுக்கு அடுத்தபடி அழிவற்ற நிலையில் உள்ளது. அதுதான் உண்மை. உண்மைப் பொருளைத் தான் மற்றப் பொருள்களிலும் சிறந்தது என்று கொள்கிறோம். சிறந்த கதைகள் கால வெள்ளத்தில் சென்று மறையாமல் எதிர்த்து நின்று நிலை பெற வேண்டுமானால், உண்மை பொதிந்திருக்க வேண்டும். ஆதி கவி வால்மீகி போன்றார் அந்த அழிவற்ற ஒரு பெரும் நிலையில் இருப்பதைக் காண்கிறோம். ஆகவே, காலம் கணித்துக் கூற வேண்டிய ஒன்றை, எவ்வளவு அரியதாயினும், அற்பமானதாயினும், சிறந்தது, அல்லாதது என்று கூறத்துணிகிற எண்ணம் எனக்கு இல்லவே இல்லை.

விரல் நகத்தால் தேங்காயைத் தட்டி, முற்றிய காய், இளங்காய் என்று தேறுகிற பரீட்சை அல்ல இது! நாக்கினால் நெட்டையிட்டு இனிப்பு, கசப்புப் பார்க்கிற அநுபவ ருசியுமல்ல இது! இது வேறு ஒன்று. பல வருஷ காலம் உள்ளத்தில் ஊறித் தோய்ந்து நினைக்கும் போதெல்லாம் இன்பமோ துன்பமோ தருகின்றதா என்று சிந்தித்துப் பார்த்துக் கூற வேண்டிய ஒன்று, அன்று இருந்த மனநிலை, அறிவின் பக்குவம், கருத்துப் பிரச்னைகள் எல்லாம் வேறு. காலப் போக்கில் எல்லாம் முதிர்ந்து வாழ்க்கையையும் அதன் உயர் தத்துவங்களையும் நாம் பார்க்கின்ற கோணமே வேறு. அதற்கேற்ப முதிர்ச்சியும் புது உணர்வு ம் பெற்று விடுகின்றோம். அன்றிருந்த அபிருசிகளில் இன்று எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டு வீடுகின்றன. ஆயினும் இதெல்லாவற்றையும் கடந்து, மனக்குழியிலே அன்று தேங்கிய உணர்ச்சிகளும் உண்மைகளும் சிறிதும் மறையாமல் மங்காமல் நிற்கின்ற நிலையிலிருந்து காண்கின்ற பரீட்சை இது. உடல், உள்ளம், சூழ்நிலை எல்லாவற்றையும் பொறுத்து மாறுகின்ற ருசி-பேதங்களைக் கடந்தது இது. எனவே அவரவர்களுடைய சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப கருத்து வேற்றுமை இருக்கலாம். கருத்துப் பரிமாற்றமே வளர்ச்சிக்கு ஊன்றுகோல் போன்றதல்லவா?

சிறு கதையின் லட்சணத்தைப் பற்றியே மாறுபாடாகத் தொனிக்கிற கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரே உணர்ச்சி அல்லது மையக்கருத்து, அதை ஒட்டிய சிறு நிகழ்ச்சிகள் இவற்றைச் சுற்றியே சிறுகதைகள் அமைய வேண்டும் என்பது ஒரு கருத்து. கதையம்சம் கொண்ட சிறு நிகழ்ச்சியின் அல்லது உணர்ச்சியின் படமே சிறுகதை என்பது வேறு கருத்து. குணசித்திரத்துக்குச் சிறுகதையில் இடம் இல்லை என்பது ஒரு கருத்து. குணசித்திரத்துடன் கலந்த நிகழ்ச்சிகளின் வளர்ச்சியே ஒரு சிறு கதையாக உருப்பெறலாம் என்பது வேறு கருத்து, எதுவாயினும் இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் வெகுவாக வெளியாகிற நாவல் சுருக்கம் போன்றவை சிறு கதைகளல்ல என்ற அளவு வரையில் இந்தக் கருத்துக்களில் ஒருமைப்பாடு இருக்கிறது. ஊன்றிப் பார்த்தால் இந்தக் கருத்துக்களில் மாறுபாடாகத் தொனிப்பது சொற்களே தவிர சிறு கதையின் லட்சண உறுப்புக்கள் அல்ல என்பதே என் முடிவு. எல்லாமே சிறு கதையின் அம்சங்களையே வரையறுக்கின்றன என்றே கருதுகிறேன். இந்த அடிப்படையிலேயே நான் ரசித்த கதைகளைக் கூறுகிறேன்.

தமிழில் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தோன்றிய கதைகளில் நான் ரசித்தவற்றைப் பற்றிக் கூறுவதே என் வேலை. இந்த எல்லையை 1936 முதல் இன்றுவரை என்று கோரிக் கொள்கிறேன். அதாவது 17 ஆண்டுகளில் வளர்ந்து நிலவும் கதைகள். ஒன்றிரண்டு சற்று முன்பின்னாக இருக்கலாம்.

நான் படித்த சிறு கதை என் இப்போது முதல் முதலாக ஞாபகத்திற்கு வருகிறது. நாடோடிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், புராண இதிகாச உபாக்யானங்கள், விக்கிரமாதித்தன்–மதனகாமராஜன் போன்ற நம் காட்டுக் கட்டுக் கதைகள் இவற்றையெல்லாம் படித்தும் கேட்டும் இருந்த என் உள்ளத்தில் நான் படித்த அந்த முதல் மறுமலர்ச்சிக் கதை ஸ்ரீமான் வ. வே. சு. ஐயர் தமிழில் தந்திருந்த, ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற கதையே யாகும். அந்தக் கதை நமக்கெல்லாம் இப்போது தெரிந்த கதையே ஆகும். அதில் ஓர் அரசமரம் ஒரு பாத்திரமாக இருந்து பேசுகிறது. விருப்பு வெறுப்பற்ற இதயநீதி கூற அதை விட வேறு பாத்திரம் இருக்க முடியும் என்றே நான் கருத வில்லை. அந்தக் கதை, அதன் பாணி, பாஷையிலுள்ள மந்திரக் கவர்ச்சி எல்லாம் என் மனத்தில் ஒரு மலர்ச்சியை உண்டாக்கின என்றே கூறுவேன். அந்தக் கதையை பல ஆண்டுகள் கழித்து இன்று படிக்கிறபோது என் மனத்தில் ஓர் இன்ப விளைவையே ஏற்படுத்துகிறது என்பன மட்டும் குறிப்பிட்டு மேலே செல்கிறேன். ரசித்தவற்றை யெல்லாம் சொல்லும்போது எந்த வரிசைப் படியும் நான்வகுத்துச் சொல்ல வில்லை என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன். தமிழில் வந்த அத்தனை கதைகளையும் படித்து விட்டேன் என்ற பாத்தியத் தோடும் சொல்லவில்லை. பெரும் பாலானவற்றைப் படித்திருக்கிறேன் என்று மட்டும் சொல்லலாம். நான் அவ்வப்போது நல்ல கதை என்று பிறர் படிப்பதற்கு எளிதாக ஒரு குறியீட்டு வைப்பதுண்டு. சேர்த்தும் வைத்ததுண்டு. ஆனால் அவையெல்லாம் இன்று எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் சிறப்பான அம்சங்களை நான் எந்தக் கோணத்திலிருந்து ரசித்தேன், ரசிக்கிறேன் என்று விரிவாகச் சொல்ல முடியும். ஒரு விதத்தில் அவை கிடைக்காதது பற்றிக் கவலையுற வில்லை. என் மனப் பரிசோதனையில் தேறி நிற்கும் கதைகளையே இங்கு குறிப்பிடுகிறேன். அந்த வகையில் நான் ரசித்ததற்கு இதுவே ஒரு சான்று தானே?

கல்கி எழுதிய, ‘கேதாரியின் தாயார்’ என்ற கதை என் மனத்தைக் கவர்ந்த கதைகளில் ஒன்று. சிறுகதை இலக்கணத்துக்குப் புரம்பான கதை என்று நான் விமரிசகர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது பெருங்கதையோ குறுநாவலோ அளவில் சிறியகதை என்றாவது ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஓர் இளம்பெண், பச்சைக் கிளி போன்ற அழகு வந்த பெண் கடைசியில் மொட்டையடித்து முக்காடிடப்பட்ட பரிதாபக் காட்சியில் காணப்படுகிறாள் அந்தக் கதையில், அது பிரசாரக் கதையாக இருக்கலாம். ஆனால் கலைத் திரத்தோடு உருவாக்கப் பட்டிருப்பதைக் காண்கிறேன். ஒரே விஷயத்தையே, உணர்ச்சியையே மனத்தில் பதிய வைக்கும் அந்தக் கதை அப்பட்டமான சிறுகதைதான் என்பது என் அபிப்பிராயம். அதில் வரும் கேதாரியின் தாயார், ஆசிரியரின் குணசித்திர வேலைப் பாடுகளினால், இன்னும் என் மனத்திரையில் முழு உருவத்துடன், திடசித்தத்துடன் கம்பீரமாக நிற்கிறாள். அந்தக்கதை அசல் தமிழ்க்கதை என்பதினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை படித்துள்ளேன். அவசியமோ இல்லையோ தேவைக்கும் அதிகமான சொற்களைக் கொணர்ந்தேனும் கடையில் ஒரு கவர்ச்சி யைத் தேடித் தருபவர் கல்கி.

அதேபோலே, எஸ். வி. வி. கோயில் யானையும் என் மனதில் பதிந்த ஒரு கதை. அது ஒரு சிறுகதையா, சித்திரமா (Sketch) என்று இலக்கண டேப்பை வைத்துக்கொண்டு நான் சிரமப் படவில்லை. எச். இ. பேட்ஸின் கருத்துப்படி அதைச் சிறுகதை யாகவே நான் கொள்கிறேன். அந்தக் கதையில் வரும் யானை ஒரு சமயம் தென்கலை நாமமும் இன்னொரு சமயம் வடகலை நாமமும் மாறி மாறிப் போட்டுக் கெரண்டு, தெய்வமே என்று நிற்கும் காட்சி என் கண்ணில் நிற்கிறது. இவர்களுடைய சண்டை முடிவதற்குள் யானை சாகவில்லை; அவர்களுடைய தெய்வபக்தியே செத்துவிடுகிறது. விசிஷ்டாத்வைதம் கோர்ட்டுக்குச் சரணாகதி ஆகிர நிலையில்தான் வந்து நிற்கிறது. அது ஒரு ரஸமான சிறுகதைான்; சந்தேகமேயில்லை. இதயத்தோடு ஒட்டிக்கொள்கிற ஹாஸ்ய நடை, ‘தீபன்’ எழுதிய ஒருசிறு துணுக்கு — சின்னஞ்சிறு கதை-நான் ரஸித்தவற்றில் ஒன்று, ‘பாப்பாவும் மரப்பாச்சியும்’ என்பது அதன் பெயர். வைத்தியர் வந்து ஜுரமாகப் படுத்திருந்த குழந்தைக்கு மட்டுமே மருந்து கொடுத்துப் போகிறார். ஆனால் பாப்பாவின் மரப்பாச்சிக்கும் ஜூரம் வந்திருப்பதையும் அதற்குக் கை பார்த்து மருந்து கொடுக்கவேண்டும் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளாதது இன்னும் எனக்கு ஞாபகத்திலிருந்து மறையவில்லை. குழந்தையின் உள்ளப் பாங்கை இறைவனுக்கு அடுத்தபடி உணர்ந்தவர் யார்?

கு.ப. ராஜகோபாலனுடைய ‘திரைக்குப் பின்னே” யாமினியும் பில்ஹணனும் இன்றல்ல, என்றென்றும் உட்கார்ந்து, கவி நிறைந்த காவிய நடையில் உரையாடுவார்கள்; தந்தையின் அறியாமைமைப் போன்ற அந்தத் திரையை மனம் இரண்டறக் கலந்ததும் கிழித்தெறிவார்கள்; கூடி மகிழ்ந்து கொண்டே யிருக்கிறார்கள். நிலவு உள்ள வரையில் அவர்களுடைய காதலுக்குச் சாட்சி கூறிக் கொண்டுதான் இருக்கும். சிறுகதைக்கு ஜோடனையும் காவியச் சுவையும் கூட்டி ஒரு சிறு சிற்ப மாளிகையாகச் செய்திருக்கிறார். கு.ப.ரா. திருவாங்கூர் யானைத் தந்தத்தில் தாஜ்மஹாலைச் செதுக்கியது போல, கு.ப.ரா. வின் நடையே ரத்ன சுருக்கமான நடை. ஒரே சொல்லை மயக்கத் தேனாக்கிவிடுவார். ‘கவலை மாடு’ என்ற ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை மனதிலிருத்து அழியாத ஒரு கிராமச் சித்திரம். மருமகனுடைய சத்துமா சேர்வைகாரருக்கு மட்டும் இனிக்கவில்லை. நமக்கு இன்று நினைத்தாலும் இனிக்கிறது. சேர்வைகார் உட்கார்ந்திருக்கும் திண்ணைக்கு எதிரே நின்று பார்க்கிற நமக்கு, மாவின் ருசியில் கோபத்தைக் கரையும் படி போகவிட்ட சேர்வைகாரர் தான் அந்த வீட்டின் அதிகாரி என்பது ஞாபகத்தில் இருந்து கொண்டே யிருக்கிறது. கதையின் ஒரு வரியில், ஒரு சொல்லில் உள்ளத்தையே வாரிக்கொண்டு போகும் சொல்லாட்சி படைத்த நடை.

‘புதுமைப் பித்தன்’ உடல் ஒடுக்கமாகி விட்டது என்னமோ உண்மைதான். ‘ஸித்தி’ என்ற சிறுகதையில் சாந்தலிங்கச்சாமி நாலுமணி நேரத்துக்கு முன்னே ஒடுக்கமானதும் அதைப்போலவே உண்மைதான். ஆனால் சண்பக ராமன்பிள்ளை சாந்தலிங்க சாமியாகச் சிதம்பரத்திலே இருந்தவர். உயிரோடு, காவியின் புழுக்கத்தோடும் புளங்காகிதத்தோடும் நம்மோடு பஸ்ஸில் பிரயாணம் செய்துக்கொண்டு தான் இருக்கிறார். மனிதனுடைய ஞாபகசக்திக்கு ரசிக்கிற தெம்பு இருக்கிற வரைக்கும் சண்பகராமன்பிள்ளை புதுமைப் பித்தனின் புகழோடு பிரயாணம் செய்து கொண்டு தான் இருப்பார். மின்னலின் நெளியும் சவுக்குச் சொடுக்கும் இடக்கான நடை.

கற்பனை வளமும், நகாசும் சங்கீதத்தில் எந்தச் சமயத்திலும் மேல் ஷட்ஜமம் வரையில் அநாயாசமாகப் போய் எட்டிப் பிடிக்கிறது போன்ற நிச்சயமான துணிவும் நிறைந்த கதைகளில் ந.சிதம்பரசுப்பிரமணியத்தின் “சசாங்கனின் ஆவி” என்ற சிறுகதையும் ஒன்று என்றே நான் வியக்கி றேன். கட்டுக் கதைகளிலும் பழங்காலக் கதைகளிலும் காணாத நயமும் இல்லாத ஒருமைத் தன்மையும் சொற் செட்டும் வேகமும் இந்தச் சசாங்கனின் ஆவியில் பரிமளித்து நிற்பதை நான் நினைக்கும் தோறும் உணருகிறேன். ரியலிஸம், ஐடியலிஸம் போன்ற இனங்களையெல்லாம் கண்டு உதட்டின் கோணத்துக்குள்ளேயே சிரித்து விட்டு, ‘கலைக்காகவே கலை’ என்று அந்தச் சிரிப்பை விழுங்குகிற உள்ளச் சிரிப்பைத்தான் அந்த ஆவி முழக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. படிப்படியாகக் கதை எழுந்து விஸ்தாரமாய்ப் பரவி வளைத்துக் கொள்னச் செய்கிற திறமைக்கு இந்தக் கதை ஓர் எடுத்துக்காட்டு.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும் என்று எனக்குப் படுகிறது. ‘நான் ரளித்த சிறுகதைகள்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுடைய ஒவ்வொரு கதையாக மட்டுமே குறிப்பிட்டுச் செல்வதை நான் உணருகிறேன். அந்தத் தலைப்புச் சரியாகப் பார்த்ா தால் இது ஓரளவு பொருத்தமற் றதுதான். பற்பல திறனையும் பண்புகளையும் காட்டும் இதே ஆசிரியர்களுடைய வேறு சில கதைகளையும் குறிப்பிட வேண்டு மென்பதுதான் என் ஆசை. ஆனால் சாத்தியமல்ல என்றே மேலே செல்கிறேன். இதிலிருந்து குறிப்பிடப் படுகின்ற கதை ஒன்றைத்தான் நான் கருத்தில் வைத்துக் கொண்டிருப்பதாக யாரும் எண்ணமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

பி. எஸ். ராமையாவின் ‘பணம் பிழைத்தது’ என்ற சிறு கதை நான் ரசித்த கதைகளில் ஒன்று. ஆசிரியரின் கைத்திறம் என்னைப் பிரமிக்க வைக்கிறது. எமனையே ஏமாற்றப் பார்க்கிற ஒருவரைச் செக் எழுதி வைக்கும்படி செய்து, மூட நம்பிக்கைகளைப் பகடைகளாக வைத்து அவர் இஷ்டப் படி இப்படியும் அப்படியுமாகப் புரட்டுகிறார். உண்மைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையே அகஸ் மாத்தாக நிகழுகிற சம்பவங்கள் எவ்விதம் முடி போடப்படுகின்றன என்பதை ரஸமாகச் சித்திரிக்கிறது அந்தக்கதை. விமான வேகமும் தவறாது வந்து பாயும் குறியும் கொண்ட கதை.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே நான் படித்த இன்னும் ரஸமான சில கதைகளின் பெயர்கள் எனக்கு மறக்கவில்லை. கதையின் மற்ற அம்சங்கள் மட்டும் தெளிவாக ஞாபகம் இல்லை, அதனால் விவரமாகக் கதைகளைப் பற்றிச் சொல்ல முடியவில்லை. ஆயினும் ரஸமான கதை என்ற அபிப்பிராயத்தில் மாறுதல் எதுவும் கிடையாது. அத்தகைய கதைகளில் ‘ராமராயன் கோவில் ‘என்ற சிறு கதையும் ஒன்று, இதை எழுதியவர் த.நா.குமாரசுவாமி.

விஜயாகா சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்துக்கு ஆதாரமாகப் பின்னிய சரித்திரக் கதை இது, முரட்டு ராமராயனையும் அதில் வரும் காதலர் ஜோடியையும் என்னால் இன்னமும் மறக்கமுடிய வில்லை. அவருடைய அபார வர்ணனையும் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும் கதையின் பிளாட்டும் என்னைக் பிரமிக்க வைத்திருக்கின்றன. இப்படி ஒரு கதையை இவரால் எவ்விதம் கற்பனை செய்ய முடிந்தது என்று மலைப்புத் தட்டிய துண்டு எனக்கு.

அதேபோல ‘எங்கிருந்தோ வந்தான்’ என்ற கதையும் எனக்கு விவரமாக ஞாபகத்தில் இல்லை. அதை எழுதியவர் யார் என்ற ஞாபகம் மட்டும் நன்றாக இருக்கிறது. Mysticism நிறைந்த கதை அது. மர்மத்தைக் குழம்பாக்கிச் சமைத்த கதை, எங்கிருந்தோ ஒருவன் வந்து, பிறர் கவனத்தைப் பெற்று, ஒரு பெண்ணின் காதலைக் கவர்ந்து விட்டு மீண்டும் எங்கோ – மாயத்திரை மறைக்கும் மர்மவானத்தினுன்ளே போய் வீடுகிறான்! அசுர லோகத்தைக் கொண்டு போய்க் காட்டி, பிறகு இழுத்து வந்து போட்ட உணர்ச்சியைத் தருகின்ற நடையை என்னால் மறக்க முடியவில்லை.

தி.ஜ.ர.வின் ‘நொண்டிக்கிளி’ ரளபுஞ்சமான சிறுகதை. நொண்டிக்கிளி ஒன்று வந்தது; அதை நோஞ்சல் பூனை ஒன்று கண்டது என்று அதில் முதல் இரண்டிகள் கொண்ட பாட்டு வருகிறது. கிளி போன்றிருந்த அந்தப் பெண்ணுக்குக்கால் தான் கொஞ்சம் கொண்டி. ஆனால் அவள் உள்ளம் ஊனமல்ல. ஆனால் பூனை போன்ற பையனுடைய செயலும் சரி, உள்ளமும் சரி எல்லாமே நோஞ்சல்! மணியில் நூல் கோத்தது போல் சரளமும் தங்கஉமிசத்தில் வைரம் பதித்தது போன்ற கட் டிட அமைப்பும் கொண்ட கதை நடை.

நொண்டி என்று சொன்னதும் சி.சு.செல்லப்பாவின் கொண்டிக்குழங்தை’ என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லையே என்று கூவியழைப்பது போல் தோன்றுகிறது எனக்கு. குழந்தைகள் எல்லாம் தெருவில் விளையாட ஆறு வயது நிரம்பிய ஞானம் திண்ணையிலேயே உட்கார்ந்து விளையாட்டில் லயித்திருக்கும் காட்சி மறக்கக் கூடிய காட்சியல்ல. ஞானத்தினால் சிருஷ்டிகோரத்தின் கடுமையைப் பூரணமாக உணர முடியவில்லை. ஆனால் இதர குழந்தைகள் அறிந்துவித்தியாசம் பாராட்டின. அவனுக்காக மனமிரங்கிய இளம் உள்ளம் ஒன்று உண்டு. அந்த இளம் உள்ளத்தோடு ஒன்றி நிற்கவே என் மனம் இன்றும் ஆசைப்படுகிறது. அத்தனை அழகான கதை! பாத்திரங்களுக்குத் தகுந்த பாஷை ஒதுக்குகிறார். செல்லப்பா!

அந்த நொண்டிக் குழந்தைக்குப் பிறகு ‘பச்சைக் கனவு’ கண்ட அந்த ஊமைப் பெண்ணைப் பற்றிய சிறுகதை ஞாபகத்துக்கு வருகிறது. ஊமைப் பெண்ணுக்கு அழகைக் கொடுத்தானே அந்தக் கடவுள், அவள் வாழ ஒரு வகையைச் செய்து தந்திருக்க லாகாதா? அவள் ஒருவனுக்குக் காதலியாகி, யாருக்கு மனைவியாக ஆனாள் என்பதைச் சொல்ல முடியாதவனாகி, கர்ப்பமாகி, கடைசியில் ஊமைக் கனவாகவே முடிந்து, பிணம் குளத்தில்மிதந்து கிடக்கிற காட்சியை, பச்சைக் காயமாக மனத்தில் பதிய வைத்து விடுகிறார் லா.ச.ராமாமிருதம், சுற்றிச் சுற்றி எங்கோ இழுத்துச் சென்று, கடைசியில் வழியைப் பார்க்கிற கடைதான் ராமாமிருதத்தின் பாணி.

கி. சந்திரசேகரனின் வெள்ளையன் தூய கதைகளில் ஒன்று என்பது என் அபிப்பிரரயம், டிப்தீரியாவில் வெள்ளையனைப்பறி கொடுத்த தோட்டக்காரனின் போக்கில் ஒரு பெருந்தன்மையான உயர்ந்த போக்கும் நோக்கும் இருப்பதை எந்த ரளிக உள்ளமும் காணாமலிருக்க முடியாது. எளியவனிடத்தும் உயர்ந்த மனப் பண்பைக் காணுகின்ற, அதைக் கலை உள்ளத்தோடு வித்தியாசப்படுத்த திறமை மிகுந்து நிற்கிறது அந்தக் கதையில் சமதரையில் சொகுஸாக ஓடுகின்ற வண்டியில் உட்கார்ந்து சுற்றிலும் எதிரே சுற்றும் மரங்களைப் பார்ப்பது போன்ற நடையில் அமைந்திருக்கிறது கதை.

கதையே யில்லாத கதையை ரஸமாகச் செய்து, சம்பவங்களுக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ முக்கியத்துவம் எதுவும் கொடுக்காமல் உணர்ச்சிகளையே துருவித் துருவிக் கழற்றி வைக்கும் க.நா.சு. வின் ‘இரண்டாம் கல்யாணம்’ எனக்கு மிகவும் பிடித்த சிறு கதைகளில் ஒன்று, ஸ்மசான வைராக்கியம் உள்ள ஒருவர் தாயில்லாத நாலு குழந்தைகளுக்குத் தந்தையான பிறகு, அந்தக் குழந்தைகளின் ஆறுதலுக்காக என்று இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டாரே, அவருக்கு அந்த ஆறுதல் கிடைத்ததா என்று க.நா.சு, வைக் கேட்க வேண்டுமென்று எனக்கு ஆசைதான்! பகளிலும் இருண்ட ஜவுளிக் கடையினுள் விளக்கு ஏற்றி, அந்த வெளிச்சத்தில் பொருள்களைப் பார்க்கின்ற வர்ண பேதமான கடையில் வேண்டு மென்றே எழுதுகிறவர் க.நா.சு.

நிச்சயமாக, சொல்லுகிறசொல்லின் தொனி அறிந்து இடம் அறிந்து, பலம் அறிந்து பிரயோகிக்கிற தி.ஜானகிராமனின் ‘ரத்தப்பூ’ ஒரு சிறுகதை ஓவியம் என்று படுகிறது எனக்கு. குண சித்திரத்தை வெகு ஒயிலாக சிறு கதையில் உணர்ச்சிகளோடு வைத்து இழைத்து நிகழ்ச்சிகளுக்கு நிஜவர்ணமே பூசுகிற வேலைப்பாடு கொண்டது அந்தக் கதை.

பதினெட்டு வயது கூட நிரம்பாத அந்தப் பெண், கணவன் இறந்து விட்டான் என்ற கொடுமையைக் கூட உணராத வயது படைத்தவள் அறியாத என்பதைக் கதையில் வரும் கிழ வர் சொல்லும் போது பாட்டி நம்ப மறுக்கலாம்; ஆனால் என்னால் மறுக்கத்தான் முடியவில்லை. அந்த அழகைக் கண்டு கடவுளுக்கே பொறுக்கத்தா னில்லையோ என்று எனக்கு சந்தேகந்தான்! மந்திரக் குளிகையைப்போல ஒரே மந்திரச் சொல்லை ஒரே தடவை காட்டி மயக்க வைத்து விடுகிற சொல் நயமும், விலகி இருந்து விரலை இழுத்துப் பாவைகளை ஆட வைக்கிற சூத்திரக் கயிறும் கொண்ட நடை.

அ.கி.ஜயராமனின் ‘கண்ணம்மா’ அக்கரை போன மச்சான் வருமளவும் கல்யாணத்திற்கு காத்திருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. கதையை விட்ட சோடு மாறாமல் நேராகக் கொண்டு போய் நிறுத்துகிறது அவரது எளிய நடை.

கி.ரா.வின் ‘சொத்துக்குடையவன்’ கொண்ட கணவனல்ல; ஐந்து வயதுக் குஞ்சுவுக்குச் சொந்தத் தகப்பன்தான். ஆனால் தாயில்லாப் பெண் என்று பெண் பாசத்தோடு வட்டி போட்டு பேத்தியை வளர்த்த தாத்தா பலராமையருக்கு அவன் தான் சொத்துக் குடையவன். அந்தக் குழந்தையை அழைத்துப் போக வருகிறேன் என்று செய்தி கிடைத்ததிலிருந்து அவர் படுகிற தவிப்பு நாமே தவிப்பது போல அல்லவா இருக்கிறது? மெல் லொலியுடன் ஓடும் சிறு ஓடையின் வேகமுள்ள நடை.

நான் மறந்துபோன கதையும் சங்கனாம் மறக்காத தலைப்புகளும் கொண்ட வரிசையில் குகப்ரியை யின் ‘ரஸியா’வும், கி.சரஸ்வதி யம்மாளின் ‘ஜரிகைச் சேலை’யும் புரசு பாலகிருஷ்ணனின் ‘பொன் வளை’யலும் சாவித்திரியம்மாளின் ‘பழைய ஞாபகங்களும்’ வருகின்றன. அருமையான கதைகள் என நான் படித்து ரளித்த இந்தக் கதைகள் ரஸமான கதைகள் தான் என்பது வரையில் நிச்சயமாகக் கூறுவேன். றாலியின் ‘கண்டதும் காதல்,’ எம்.வி.வெங்கடராமனின் ‘வேதனா,’ வல்லிக்கண்ணனின் ‘நல்லமுத்து’ இவற்றையும் அந்த வரிசையிலே சேர்க்க வேண்டியிருக்கிறது.

ஆர்.ஷண்முக சுந்தரத்தின் ‘கல்லினுள் தேரை’ கதை அடங்கிய சிறுகதை, காட்சியைக் காட்டி உடனே மாற்றி வேறு ஒரு காட்சியைக் கொண்டு நிறுத்துகிற திறனை அதில் கண்டிருக்கிறேன்.

கி.வா.ஜ.வின் கலைச் செல்வி ஒரு ரனமான சிறுகதையே, ஒரு கோயில் சிற்பத்தைப் பார்த்ததும் அந்தச் சிற்பத்தின் அழகு தூண்டி, விரிந்த கற்பனையாகக் கலைச் செல்வி உருவாகியிருக்கிறது. சோழ அரசனின் வளமை களும் அவன் காலத்துச் சூழ்நிலையும் நன்றக வந்திருக்கின்றன அந்தக் கதையில். குழந்தைகளுக்கும் புரிகின்ற சரளமான நடை.

குமுதினியின் கதை ஒன்று விவரம் ஞாபகத்தில் இருக்கிறது; தலைப்பு மறந்து விட்டது. பெற்றோர்கள் தம் குழந்தைகளைக் கேட்காமல் கல்யாணம் நிச்சயித்து விடுகிறீர்கள். பெண்ணும் பிள்ளையும் இந்தக் கல்யாணத்துக்கு இணங்கக் கூடாது; மறுத்து விட வேண்டும் என்று தீர்மானிப்பதற்காக கடற்கரையில் ஏற்பாடு செய்து கொண்டு சந்திக்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்ததும், பேசியதும் கல்யாணத்தை நிற்காமல் நடத்தி விட்டால் தேவலை போலாகி விடுகிறது. படிக்கச் சுவையாக இருந்தது கதை.

இது வரையில் சொன்னவற்றைக் கொஞ்சம் விரிவாகவே சொல்லிவிட்டேன். ஆயினும் இன்னும் சில கதைகளைப் பற்றிச் சொல்லியே தீரவேண்டும். கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் ‘மழையிடையே மின்னல்’ ஸேனாவின் ‘சண்டையும் சமாதானமும்’, ரா.ஸ்ரீ.தேசிகனின் ‘மழை இருட்டு,’ கௌரியம்மானின் ‘தீர்மானம்’ அகிலனின் ‘காசு மரம்’ தேவனின் (கதை பெயர் மறந்துவிட்டது) ஜி. எஸ். மணி யின் ‘அலையும் அமைதியும்’ பி. வி.ஆர். இன் ‘தழும்பு’ ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணனின் (கதைப் பெயர் ஞாபகமில்லை), சோமுவின் ‘முதல் குழந்தை’ ரா.ஆறுமுகத்தின் ‘களத்து மேடு,’ இவை யெல்லாவற்றையும் குறிப்பாகச் சொல்வது என் கடமை என்றே எண்ணுகிறேன். இன்னும் ஒரு சிலரை நான் விட்டிருக்கக்கூடும்.

இங்கே என் வேலை கட்டிய வீட்டுக்குப் பழுது சொல்வதோ மதிப்புப் பொடுவதோ அல்ல. நான் படித்தவற்றில் எனக்கு ரஸமாக இருந்தவற்றை யெல்லாம் வெறும் அட்டவணையாகத் தராமல் சில குறிப்புகளுடன் உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வந்தேன். நான் குறிப்பிட்ட எழுத்தாளர்களுடைய கதைகளையே படிக்காதவர்கள் இங்கே இருந்தால் என்னுடைய குறிப்புகள் அவர்களுக்கு உதவியாக இருக்கும். நான் குறிப்பிடாத வேறு சில கதைகளைப் பிறர் படித்து ரஸித்திருக்கலாம். வேறு கருத்தும் கொண்டிருக்கலாம். அவர்களுக்கும் இத்தகைய ஓர் அபிப்பிராயம் தெரிய வேண்டியதுதானே?

நான் முதலில் ஒன்றை வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன். உலகத்துச் சிறுகதை வால்யூம்களைப் படிக்கும்போதெல்லாம் என் எண்ணம் உறுதிப் பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்களோ பிற்போக்கு எழுத்தாளர்களோ அதைப் பற்றிக் கவலையில்லை; நற்போக்கு எழுத்தாளர்கள் நம்மிடையே பலர் உண்டு என்பதே என் திடமான அபிப்பிராயம். உலகத்துச் சிறந்த சிறுகதை வரிசைகளிலே முதல் வரிசையில் உட்கார யோக்யதை – தகுதி உள்ள எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள் என்பதே நான் வற்புறுத்திச் சொல்ல விரும்பும் விஷயம். நான் இங்கு குறிப்பிட்ட சில கதைகள் எந்த மேல் நாட்டு, கீழ் நாட்டுக்கதைகளுக்கும் பின் வாங்கியதல்ல என்பதை நீங்களே அறிவீர்கள் என்று நம்புகிறேன். நான் சொல்லாமல் விட்ட இதே ஆசிரியர்களுடைய வேறு சில கதைகளும் இருக்கின்றன. வளர்ந்து வரும் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு சிறுகதை மரபு தோன்றிவிட்டது என்பதே என் கருத்து.

கடைசியாகப் புதிய எழுத்தாளர்களில் சிலரை நான் இங்கே குறிப்பிடவில்லை. ஏனெனில் 1935 முதல் 45 வரை, ஏன் 50 வரை என்றே வைத்துக் கொண்டாலும் சரி, இந்தக் காலத்தில் எழுந்து தோன்றிய சிறு கதைகளுக்கு ஈடாக இதற்குப் பிறகு தோன்றவில்லை என்ற காரணத்தினால் தான் குறிப்பிடவில்லை. தோன்றாதது மட்டுமல்ல; வர வர, தரமும் குறைந்து கொண்டே வந்து விட்டது. ஒரு சிலர் முளைத்து முனைப்பாக வரலாம். அதற்குள் அந்த சூசகத்தைச் செய்ய நான் தயாராக இல்லை. தரமும் சரக்கும் குறைந்து கொண்டே வருவதற்குக் காரணங்களை யாரைச் சொன்னாலும் பொதுமக்களைச் சொல்வது ஒரு பாஷனாகி விட்டது இப்போது. நிச்சயம் நல்ல கதைகளை – அவை பத்திரிகைகளில் வந்தாலும் சரி; தொகுப்பாக வந்தாலும் சரி, வாங்கிப் படிக்கத் தயாராகவே இருக்கிறார்கள். போட்டுப் பிரசுரிக்க ஆளைத்தான் காணோம். ‘நல்ல கதைகள் எழுதியிருக்கிறோம்; தமிழுக்குச்செய்த சேவை இதுவே அதிகம்’ என்று நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் கதைகளே எழுதாமல் இருந்தால், அவர்களை ஜனங்கள் மறக்காமல் இருந்து அவர்களுடைய புத்தகங்களை வாங்குவார்கள் என்பது என்ன நிச்சயம் என்றே பிரசுரகர்த்தர்கள் பயப்படுகிறார்கள் போலும்! அவர்களுடைய பயத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. நல்ல கதைகளை இப்போது வருகிறவை மறக்கடித்துக் கொண்டு வருகின்றனவே!

– ’அஜந்தா’ பத்திரிகையில் ஆர்வி ( ஆர்.வெங்கடராமன் )  1953-இல் எழுதிய கட்டுரை.

நன்றி: https://s-pasupathy.blogspot.com/