சாதியே! நீ சாகாயோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 70 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் ஒரே மகன் இறந்துவிட்டான் ஐயா!. தான் விரும்பின தாழ்ந்த சாதிப்பெண்ணைக் கட்டிக்கொள்ள விடவில்லை யென்று அவன் மனமுடைந்து…… நஞ்சு குடித்து, ஐயோ அவன் இறந்தே விட்டானா?

‘காதலித்து விட்டேன்! இனி அவளைக் கட்டினாலும் சரி. வேறு பெண்ணை மணந்தாலும் சரி, செத்தாலும் சரி, அவளைக் காதலித்ததைச் சொல்லி உலகம் பழித்தே தீரும். ஆகவே அவளை நான் மணந்து கொள்ள அனுமதியுங்கள் அப்பா!’ என்று கெஞ்சினான் ஐயா!

நான் அதைக் கேட்டேனா? அந்தப் படித்த பிள்ளை சொன்னது எத்தனை உண்மை! அவன் இறந்தும் அவனை இகழ்வதன் மூலம் இந்தப் பாழும் உலகம் என்னைத் துன்புறுத்தத்தானே செய்கிறது? என் ஒரே பிள்ளையை துடித்துப்பதைத்துச் சாக வைத்த துயரத்தோடு நான் சமூகத்தின் இந்தக் கொடுமையை அனுபவிப்பதை விட அவனை ஆனந்மாக வாழ் வைத்து, அந்த நிம்மதியோடு இரக்கமற்ற கொடிய உலகின் புறக்கணிப்பை ஏற்றுக் கொண்டிருக் கலாமல்லவா?

ஐயோ! இனி உணர்ந்து கொண்டு என்ன பலன்? ஆ! கொடிய உலகமே! நீ வகுத்த ஏற்றத்தாழ்வுகளை மீறினாலும் புறக்கணித்துத் துன்புறுத்தும் நீ, அவற்றிற்குக் கட்டுப்பட்டாலும் கைகொட்டிச் சிரித்து வேதனை தருகிறாயே!

எனக்கு மட்டுமா வேதனை? என் மகனை நம்பின அந்த ஏழைப் பெண்ணின் வாழ்வு? ஆமாம் கட்டுவது கந்தையானாலும் நெஞ்சு நிறைந்த மானம் உள்ள பெண் அவள். எனக்குத் தெரியும்! அதோ குடிசையின் முன்னால் ஆலமரத்தின் அடியில் அவள் அலங்கோலமாகக் கிடந்து புரண்டு புரண்டு அழுகிறாளே! அவளைப்பெற்ற தாயும் தகப்பனும் இடிந்து போய் அவளருகில் அமந்திருக்கிறார்கள். வீட்டில் நான்கு நாட்களாக அடுப்பே புகையவில்லை.

நான் என் மூன்றடுக்கு மாடி வீட்டையும் இரண்டு இலட்சத்துக்கு இருக்கும் நிலம்புலம் நகை நட்டுக்களையும் அவளுக்கே கொடுக்கப் போகிறேன். அப்படியே கொடுத்து “என் மருமகளே!” என்று உரக்கக் கூவியழுது அவள் கையால் உணவு வாங்கி உண்டாலும், நான் அவளுக்கு மாமன் ஆகிவிட்டாலும் அவள் இழந்த வாழ்வு மீண்டுவிடுமா?

ஐயோ! இனி என்னால் சரியான தீர்வுக்கு வரவே முடியாதா? ஆமாம் சரியான முடிவு ஏற்படுத்த வேண்டியவன்தான் சமூகத்தின் கொடூரமான கட்டுப்பாட்டால் சாகடிக்கப்பட்டு விட்டானே!

ஏ! கொடிய சாதியே! நீ சாக மாட்டாயா? 

இனி யென்றாலும் மனிதனை இங்கே வாழவிட்டு இதுவரை எடுத்த உயிர்ப்பலிகளால் திருப்தியடைந்து நீ செத்தொழிய மாட்டாயா?

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *