சகோதரி
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரவு எட்டு மணிக்குக் கொழும்பிலிருந்து யாழ்ப் பாணம் புறப்பட்ட புகைவண்டி ‘கட, கட’ வென்ற சப்தத்துடன் ‘அடித்துப் பறந்து’ கொண்டிருந்தது. ஒரு மூன்றாம் வகுப்புப் பிரயாண வண்டியுள் ஏறி யிருந்த நான், எனது பெட்டி, படுக்கைகளைச் சரி செய்து ஒழுங்காக அமைத்த பிறகு காலை நீட்டிப் படுத்துக்கொண்டே, புகைவண்டிக்கு வரும்பொழுது வாங்கிவந்த ஒரு மாத சஞ்சிகையை எடுத்துப் படிக்க. ஆரம்பித்தேன்.

நான் ஏறியிருந்த பெட்டியுள் ஒரே ஒரு பெரியவர் மாத்திரம் அமர்ந்திருந்தார். அவரும் வண்டி நகர ஆரம் பித்ததுமே மெதுவாகத் தூங்கத் தொடங்கிவிட்டார்.
கொழும்பிலே ஒரு தினப்பத்திரிகையின் நிருபராக நான் வேலைபார்த்தேன். இருந்தாற்போலிருந்து என்னை யாழ்ப்பாணப் பகுதிக்கு விசேட நிருபராகப் போகும் படி ஆசிரியர் உத்தரவிட்டுவிட்டார். வேறு வழியின் றிப் புறப்பட்டுவிட்டேன். எழுதிப் பிழைப்பவர்களின் வாழ்க்கை அத்தனை சுலபமான தல்லவென்றுதான் உலகத்துக்குத் தெரியுமே!
ஏதோ ஒரு தங்குநிலையத்தில் வண்டி நின்றது. ஆக மொத்தம் நாலோ ஐந்து பேரோதான் அங்கே பிரயாணமாகியிருப்பார்கள்.
நான் உட்கார்ந்திருந்த பெட்டியின் உட்பக்கமாக என் கண்ணோட்டத்தைச் செலுத்தினேன். வாட்ட சாட்டமான தோற்றமுடைய அந்த இளைஞன் முதல் முறையாக என் கண்ணில் பட்டான்.
கையிலேயுள்ள தலையணையை இருக்கைமேல், ஓர் அந்தத்தில் சாத்திவைத்து விட்டு இலாவகமாக அதன் மேல் சாய்ந்துகொண்டு ஏதோ எண்ணமிட்டுக் கொண் டிருந்தான். வாலிபனின் கவனத்தை என்பக்கம் திருப்பு வதற்காக “ஏன் ஐயா, யாழ்ப்பாணந்தானே வருகிறீர் கள்?” என்று ஒரு கேள்வியைப் போட்டுவைத்தேன்!
“ஐயா, அகிலம் முழுதுமே எனக்குச் சொந்தந் தான். நான் எங்கே போகிறேனென்று எனக்கே இப் பொழுது தெரியாது”.
தான் கூறிய பதிலில் ஏதோ ஒரு பெரிய உண் மையை வெளியிட்டுவிட்டவன்போல் அவன் உரத்துச் சிரித்தான்! எனக்குத் தலை சுழன்றது. போயும் போயும் ஒரு ‘பைத்திய’த்துடனே ஒரு இரவைக்கழிப்ப தென்றால் அவ்வளவு சுலபமான விடயமா அது?
“என்ன ஐயா, சிந்தனை செய்கிறீர்கள்? என் பேச்சு உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாய்ப் படுகிறதோ? என்று கேட்டுவிட்டு அவன் மீண்டும் அதே பயங்கரச் சிரிப்புச் சிரித்தான்.
“இந்த உலகத்திலேயே நேர்மையாகவும், குழந்தை உள்ளத்தோடும் பழகுகிற எவனும் இன்றைய நாகரிக மனிதர்களின் கண்ணில் பைத்தியக்காரனாகத்தான் தோன்றமுடியும்!”.
நான் வாய்விட்டு இந்த வார்த்தைகளைக் கூறினேன்.
“ஆமாம் ஐயா, நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! நான் கூட இப்படி நடந்துகொண்ட தாலேயே பைத்தியக்காரனாகி விட்டேன். என் குழந்தை உள்ளம் அவளை-என் சகோதரி சரசாவை அநியாயமாகச் சாகடித்துவிட்டது”.
அவனுடைய துன்பமயமான வாழ்வுச்சரித்திரத்தை யறிய என் மனந் துடி துடித்தது. சரசா அவள் உங் கள் உடன் பிறந்த சகோதரியா? உங்கள் குழந்தை உள்ளத்தினால் அவள் எப்படி அநியாயமாகச் சாக முடிந்தது ஐயா?” என்று என் வாய் தானாகவே கேள் விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டது.
“சரசா,அவள் என் உடன் பிறந்த சகோதரி யில்லை. ஆனால், நான் அவளை என் உடன் பிறந்த சகோதரியிலும் பார்க்க ஆயிரம் மடங்கு அதிகமான அன்புடன் நேசிக்கிறேன்.
“அப்பொழுது எனக்கு வயது இருபத்திரண்டு. யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து ஏறக்குறைய இரு பத்தொரு மைல் தொலைவிலிருக்கிறது நான் பிறந்த கிராமம். அந்தக் கிராமத்தில் செல்வச் சிறப்புடன் விளங்கிய எனது பெற்றோருக்கு நான் ஏக புத்திரன். ஆனால் காலதேவன் இன்ப, துன்பங்களைப் பகடைக் காய்களாக உபயோகித்துச் சூதாட்ட யரும்பொழுது செல்வர் வறியராகவும், வறியர் செல்வராகவும் மாறி விடாமல் என் செய்வர்? என் தகப்பனார் தமது வியாபாரத்தில் நேர்ந்த ஒரு பெரும் மாற்றத்தின் விளைவு தெரியுமுன்னரே, மரணதேவனை நண்பனாக்கிக்கொண்டு மறைந்து விட்டார். அவர் இறந்த சோகத்திலேயே என் தாயும் ஒரு நாள் அந்தக் காலனுலகுக்குப் பயணமாகிவிட்டாள். என் இளம் உள்ளத்திலே அன்றுதான் சோகத்தின் சாயல் துளிர்விட ஆரம்பித்தது. கிடந்த நிலபுலம் எல்லாவற்றையும் விற்றுத் தகப்பனார் பட்டு வைத்திருந்த கடனை அடைத்துவிட்டு யாருமற்ற அநா தையாகவே பட்டினத்திற்கு வந்துவிட்டேன். அதிலிருந்து என் வாழ்வு நாடகத்தில் இரண்டாம் காட்சி ஆரம்பமானது.
பட்டினத்தில் என் வாழ்வு ‘சப்’பென்ற நிலையி லேயே நகர்ந்தது. நான்கு வருடங்கள் உருண்டோ டின. ஆங்கிலம் எஸ். எஸ். ஸி. சித்தியெய்தியதுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒரு தமிழ் ஆசிரி யராக முயற்சித்தேன். அது சுலபமாகக் கைகூடிவிட் டது. ஆசிரிய கலாசாலையினின்று வெளிவந்ததும் ஒரு கல்லூரியில் தமிழ் உபாத்தியாயராக உத்தியோகம் பார்க்க ஆரம்பித்தேன்.
அப்பொழுதுதான் சரசா என் வாழ்வில் குறுக்கிட்டாள். நான் உத்தியோகம் பார்த்த கல்லூரியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே படித்தனர். பெண் கள் வகுப்புப் பிரதம தமிழ் ஆசிரியை சரசா. அவள் தோற்றமும் இனிய சுபாவமும் என் இளம் உள்ளத் தில் ஏதோ ஒரு இனந் தெரியாத உணர்ச்சியைக் கிளப்பிவிட்டன. பாடஞ் சொல்லிக் கொடுப்பது சம் பந்தமாக அவள் என்னுடன் உரையாடும் பொழுதெல் லாம் நான் விவரிக்கவொண்ணா மகிழ்ச்சியடைவேன். நாளடைவில் நாங்களிருவரும் மனம்விட்டுக் கதைக்கப் பழகிக் கொண்டோம். எங்களிடையே ஒரு “பாசம்” எதைக் குறிக்கோளாகக் கொண்டோ தெரியாது தோன்றி நாளொரு வண்ணமும் பொழுதொரு புது மையுமாக வளர்ந்தது. அந்தக் கலாசாலையிலே நாங் களிருவரும்தான் உண்மை அன்புடன் ஒருவரோ டொருவர் உரையாடுகின்ற மனிதப் பிறவிகள்,
மற்ற ஆசிரியர்களெல்லாம் நவ நாகரிகத் தின் “அவதாரங்களாக ஏதோ ஆகாயத்திலிருந் திறங்கியவர்கள் போல ஒருவரோடொருவர் பட்டதும் படாததுமாய்க் கதைத்துக்கொள்வார்கள். அந்தச் சூழ் நிலையிலே சரசாவின் நட்பு எனக்கு இதமானதாக இருந்தது என்று கூறத்தேவையே இல்லை.
நாளடைவில் நான் சரசாவைப்பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் அவள் மூலமாகவே நன்கு அறிந்து கொண்டேன்.
எங்கோ ஒரு கிராமத்திலே ஏழைப் பெற்றோருக்கு ஏக புத்திரியாகப் பிறந்தவள்தானாம் அவளும். உள் ளதையெல்லாம் விற்றுத் தமது ஒரே மகளை உத்தி யோகமாக்கிய அவளின் தகப்பனார் ஒருநாள் இருந் தாற்போலிருந்துவிட்டு மரணமடைந்து விட்டாராம். தாபரிக்க ஒருவருமற்ற நிலையில் தாயையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து பட்டின வாசஞ் செய்வதாகச் சரசா கூறினாள்!
ஏறக்குறைய அவள் கதையும் என்கதையும் எல்லா விதத்திலும் ஒற்றுமையாகத்தானிருந்தன. ஏன் எதிர்கால வாழ்விலுங்கூட அவளும் நானும் ஒற்றுமையாக, உடன் இருக்கக் கூடாது என்று, நான் எண்ணமிட ஆரம்பித்தேன். என் கதையும்தான் அவளுக்குத் தெரியுமே. அவள் இதை மறுக்கமாட்டாள். நீங்களிருவரும்தான் ஏற்ற சோடிகள் என்று என் மனம் என்னுள்ளே குதிபோட ஆரம்பித்தது.
என் எண்ணத்தை ஒருவிதமான துணிச்சலுடன் அவளிடமே ஒரு நாள் வெளியிட்டுவிட்டேன். அவளுக்குண்டான மகிழ்ச்சிக்கோ அளவில்லை. “நீங்கள் இன்றுதான் என் அன்பைப் புரிந்துகொண்டீர்கள்” என்று சொல்லிச் சிரித்தாள்!
காலம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் நட்பும் நன்றாக இடைவெளியின்றிச் சமீபித்துக் கொண்டுவந்தது. ஒருநாள் அவள் கேட்டாள் “இத்தனை நாளாக நாம் அன்னியோன்னியமாகப் பழகுகிறோமே, ஒருநாளாவது என் வீட்டுக்கு வரக்கூடாதா?’ என்று. நான் தடை சொல்வேனா? சம்மதித்துவிட்டேன்.
அன்று வெள்ளிக்கிழமை. மாலை ஐந்து மணியிருக் கும். நான் சரசாவின் வீட்டுக்குப் போனேன். வாச லில் என்னைக் கண்டதும் சரசா புன்னகையுடன் வர வேற்றாள். அவள் தாயாருக்கு என்னை அறிமுகப்படுத் தினாள். அவளும் தன் “வருங்கால மாப்பிள்ளையாகிய ” என்னை உவகையுடன் வரவேற்றாள். அவர்களுக்குத் தெரியுமா காலச் சூழ்நிலைக்கேற்ப மனிதவாழ்வு பயங்கரமாகப் பாதிக்கப்படுகிறதென்று? உபசாரத்திற்குக் எல்லாம் மிகச்சிறப்பாகவிருந்தது. குறைவேயில்லை. அற்ப மனிதப்பிறவிகள் வாழ்க்கை நிலத்தில் மகிழ்ச்சி நீர் சிறிது ஊறியவுடன்தான் எத்தனை மனக்கோட்டை கள் கட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்?
எங்கள் பேச்சு எங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று கடைசியாக முற்றிற்று. நேரம் இரவு பத்துமணி. விடு திக்குப் புறப்பட நான் ஆயத்தமானேன். சரசாவும் தாயும் கெஞ்சி மன்றாடி என்னைத் தடுத்துவிட்டனர். இரவுச் சாப்பாட்டையும் அங்கேயே முடித்துக்கொண்டு படுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
சரசாதான் உணவு பரிமாறினாள்! அது யுத்த காலம்!! மூன்று நேரமும் சோறு சாப்பிட ஏழைத் தமிழாசிரியர்களுக்கு ஏது வசதி? என்.றாலும் நல்ல அரிசிமாவாலான ‘இட்லி’யைச் சரசா என் இலையில் வரிசையாக அடுக்கியபோது என்மனம் குளிர்ந்துவிட்ட தென்றே சொல்லவேண்டும். ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தேன். நான்கு வருடங்களாக ஆரு மில்லாத அநாதையாக உணவுவிடுதியில் தின்று குமைந்துகொண்டிருந்த எனக்கு அந்த ‘இட்லி’கள் தேவாமிர்தமாக இனித்தன. என் மனதில் கடந்தகால எண்ணங்கள் புற்றீசல்கள்போலக் கிளம்பின.
நான்கு வருடங்களுக்குமுன் இதே வெள்ளிக்கிழமை என்தாய் ‘இட்லி’கள் நிறைந்த கோப்பையை என் முன்னே நகர்த்திவிட்டு “சாப்பிட்டா தம்பி” என்று பாசம் பரவப் பணித்த காட்சி என் மனக்கண்முன் வந்து நின்றது. என்னையறியாமலே என் கண்கள் நீரைச்சிந்தின. வாய்விட்டு அழமுடியாத நிலைமை. இத யம் வேகமாக அடித்துக்கொண்டது. சரசா இதனை அவதானித்துவிட்டாள்.
“ஏன் சாப்பிடும்போது அழுகிறீர் கள்? அவள் குரலில் அன்பு-பாசம் நெளிந்து குழைந்தன.”ஒன்று மில்லை!” வேண்டுமென்றே ஒரு பொய்யைச் சிருட்டித்து விட்டேன். ஆனால், சரசாவின் செய்கை எனக்குப் புதிராகவிருந்தது. ஓடோடியும் வந்து தன் முந்தானைச் சேலையால் என் கண்ணீரைத் துடைத்தாள். அவள் செயல் படித்துப் பட்டம்பெற்று உத்தியோகம் பார்க் கும் ஒரு நவீன யுவதியின் செயலாக எனக்குப் பட் வில்லை. எண்ணத்தை வெளியிடும் சக்தியைக்கூட நா இழந்துவிட்டது. அடித்துவைத்த கற்சிலைபோல அசை யாமலிருந்தேன். ஆனால், மனம் மாத்திரம் ஏதோவெல் லாம் எண்ணிக்கொண்டிருந்தது. சரசா ‘கோப்பி’ போட்டுக்கொணர்ந்து தந்தாள். பேசாமல் வாங்கிக் குடித்தேன். கடைசியாகப் படுக்கைக்குப் போகும் போது மாத்திரம் சரசா சொன்ன அந்த வார்த்தைகள் இப்பொழுதும் என்செவிகளில் ஒலித்துக் கொண்டிருக் கின்றன. அவற்றை ஏழேழு யுக யுகாந்தரங்கள் மாறி னாலும் என் செவிகள் ஒலித்துக்கொண்டு தானிருக்கும்!
“இந்த ஏழையை மறந்துவிடாதீர்கள்! நீங்கள் தான் என் துணைவர்- துணைவராக வேண்டும். என் வாழ்வு உங்கள் கையில் இன்றைக்கே வந்துவிட்டது”
“இப்படியும் ஒரு படித்த பெண் தன்னை ஒரு ஆடவனுக்குப் பூரணமாக “அடிமை”யாக்குவாளோ? என்று என் மனம் அங்கலாய்த்தது. “அதுதான் பழந்தமிழ்ப் பெண்களின் வழிவந்த பண்பு-காதல்” என்று முழங்கியது அறிவு. பேசாமல் தூங்கச் சென்றுவிட்டேன்.
அடுத்த நாள் கல்லூரியில் ஒரு பெரிய அதிர்ச்சி எங்களைக் காத்திருந்தது. கல்லூரி அதிபர் சிறிது முகவாட்டத்துடனேயே அதை வெளியிட்டார். ஆம், அதுதான் சரசாவுக்கு மாற்றம்! நாட்டுப் புறத்திலே யுள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு. கலங்கிய கண்களுடன் “என்னை மறந்து விடாதீர்கள் உங்களுக்காக எவ்வளவு காலமென்றாலும் காத்திருப்பேன்”. இரண்டே இரண்டு வார்த்தைகளுடன் சரசா என்னி டம் விடைபெற்றுக் கொண்டாள், அதற்குமேல் அவளால் பேசமுடியவில்லை, அந்த நிலைமையில்!
நாட்கள் வாரங்களாகி, வாரங்கள், மாதங்களாகி உருண்டு கொண்டிருந்தன. என் வாழ்வில் ஒரே அமைதி! சரசாவின் கடைசிக் கடிதம் அன்றுவந்தது. கண்ணீரால் நனைத்து எழுதப்பட்ட கடிதம் அது. சென்ற நான்கு மாதங்களுக்குள் அந்த அபலைப் பெண்ணின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை விவரித்தது.
இராசன் சரசாவின் தாயாருக்கு தூரத்து உறவு. அந்த நாட்டுப்புறத்திலே உள்ள ஒரு ஆங்கிலப் பாட சாலைக்குத் தலைமை ஆசிரியன். அவன் குறுக்கீடு சர சாவின் தாயாரை மாற்றி விட்டது! எங்கோ ஊர். பேர் தெரியாத என்னைக் காட்டிலும் அவனை மணந் துகொள்வது மிகவும் நல்லது என்று அவள் அடம் பிடித்திருக்கிறாள். சரசாவின் மறுப்பு அவள் தாயா ருக்கு ‘வெறி’யை உண்டாக்கிவிட்டது. இராசனை மணந்துகொள், இன்றேல் என்னைப் “பிணமாகத்தான் காண்பாய்.” சரசாவின் தாய் பயங்கரமாக உறுமினாள். இக்கட்டான நிலைமை. ஒரு புறம் காதல்! மறுபுறம் கடமை!! காதலுக்கும் கடமைக்கும் போட்டாபோட்டி. இறுதியில் கடமை வென்றது! இராசன் சரசாவை மணந்துகொண்டான். சரசா இராசனை மணக்க நேரிட்டது!”
கடிதத்தைப் புரிந்து கொண்டதும் நான் நீண்ட பெருமூச்சொன்று விட்டேன், கவலைகளையெல்லாம் வெளியே தள்ளுகிற நினைவில். மீண்டும் என் வாழ் வில் அமைதி – கோர அமைதி. மயானத்தில் நிலவுகிற மகா பயங்கர அமைதி!”
கோடைக்குப் பின்னே மாரி, மாரிக்குப் பின்னே கோடை, மாறி, மாறி வருவது இயல்புதானே. எனக்கு உத்தியோக மாற்றம் என்றதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒரே இடத்தில் நெடுக அமர்ந்திருப்பவனுக்குத் தினவு எடுப்பதுபோல எனக்கும் அத்தக் கல்லூரி புளித்து விட்டது!
ஒரு சிங்களக் கிராமம்! அங்கு என்னை மாற்றிவிட் டார்கள். அங்கே நான் போனபோதுதான், நான் எதை விரும்பவில்லையோ அதை நான் கிட்டிவிட்டேன் என்று தெரியவந்தது! எனக்கு உத்தியோகமான அந்தப் பாடசாலைக்கு தலைமை ஆசிரியனாக இராசன் வந்திருந்தான்! கல்லூரியிலிருந்து பாடசாலைக்குப் போவதைப் போலத்தான் அமைதியிலிருந்து சஞ்ச லத்தை நோக்கி என் வாழ்வு நகர்ந்தது.
இராசன் ஒரு ஆடம்பரப் பேர்வழி என்பதைப் பழகிய ஒரு சில தினங்களுக்குள்ளேயே நான் அறிந்துவிட்டேன். பாடசாலை ஓய்வான நேரங்களிலெல் லாம் அவன் மிதமிஞ்சிய ‘குடிவெறி’யில் தத்தளித்துக் கொண்டிருந்தான். மதுவின் போதையில் அவன் அறிவு ஒளி வரவர மங்கிக்கொண்டிருந்தது. எத்தனை யோமுறை என்னைத்தன் வீட்டுக்கழைத்தான். பலமுறை மறுத்தேன். ஆனால் மனிதசுபாவத்தை மாற்றி நெடுங்காலம் மறுக்கமுடியுமா?
ஒருமுறை அவன் வீடு சென்றேன். என்னை அழை த்துவிட்டு அவன் மதுவின் போதையில் எங்கோ போனவன், வரமறந்துவிட்டான். ஏகாந்தமான நிலைமை யில் சரசா என்னைக் கண்டாள். என் கால்களைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள். மது போதையிலே இராசன் தன்னைப் படுத்தும் பாடுகளைக் கூறி மனம் வெதும்பி னாள். “நீ என் சகோதரி; அவனைத் திருத்தி நன்றாக வாழுதல் உன் கடமை” என்று புத்திமதி சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
“அண்ணா என் மனதில் ஒருவருக்குத்தான் இடம் உண்டு. ஆனால் வழி தவறி நடக்கமாட்டேன். காலத்திற்கு வெம்பி விழும் கனியைப்போல துன்பச் சுமையினால் என்றோ என் உயிர் பிரிந்து விடும். அதுவரையும் என்னை மறவாதீர்கள் அண்ணா! அடிக்கடி இங்கு வந்து போங்கள்.”
அவள் வேண்டுகோளை என்னால் மறக்கமுடியவில்லை – என் மனம் தான் ஏற்கனவே சபலசித்தத்திற்குச் சாவுமணி அடித்து விட்டதே. உண்மையான சகோதர பாசத்தோடு அவளுடன் பழகினேன். ஒத்தாசை செய்துவந்தேன்.
ஆனால்..!
குருட்டுச் சமூகம் – அதன் கோர எண்ணங்கள், நேர்மையான உள்ளமுடைய ஒரு பெண்ணை எப்படி அணு, அணுவாய் அரித்துச் சாக்காட்ட முடியுமோ அதற்கு இலக்காக முடிந்தது சரசாவின் வாழ்வு!!
பாடசாலையிலும் வீட்டிலும், அவளும் நானும் பழகிய விதத்தைச் சமூகம் சந்தேகக் கண்களுடன் பார்க்க ஆரம்பித்தது. மதுவின் போதையிலே மதியை இழந்த இராசன், சரசாவைப் படாதபாடு படுத்தினான். கணவன் என்ற உரிமையினால், அதன் விளைவு..?
ஒருநாள் முரட்டுக் கணவனையும் அன்புத் தாயினையும், உயிர்ச்சகோதரனாகிய என்னையும் பிரிந்து சரசா எங்கோ ஓடிவிட்டாள்!
எங்கே…? தெரியாது! ஆனால் திரும்பிவர முடியாத உலகிற்கு என்பது பலர் அபிப்பிராயம் உண்மையும் அதுதானோ..?
எனக்கு உலகமேவெறுத்து விட்டது. உத்தியோகத் தையும் விட்டுவிட்டு எங்கெல்லாமோ சுற்றினேன்; எங்கெல்லாமோ அடைபட்டுக் கிடந்தேன். இப்பொ ழுது மீண்டும் நாடோடியாக வாழ்நாளைக் கழிக்கின்றேன்?” கதை சொல்வதை நிறுத்தினான் வாலிபன்.
புகைவண்டி ஒரு நீண்ட பெருமூச்சொன்றைக் குரலாக ஒலித்துவிட்டு நின்றது. தலையை வெளியே நீட்டிப் பார்த்தேன். சனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு ஏறுவதும், இறங்குவதுமாக இயங்கிக்கொண்டிருந்த னர். “நான் இங்கே இறங்கப் போகிறேன் ஐயா” என்று சொல்லிவிட்டு, கைப்பெட்டியையும், தலையணையையும் தூக்கிக்கொண்டு பதிலுக்குக் காத்திராமல் நெருங்கிநின்ற சனத்திரளினூடே மறைந்தான் வாலிபன். அவன் கதையும், தோற்றமும், சுபாவமும் எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. நெடுநேரம் விழித்திருந்து கதைகேட்ட அலுப்பு கண்ணைமூடியது. இருக்கையில் படுத்துத்தூங்க ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேனே எனக்குத்தெரியாது. நான் கதை கேட்டுக் கொண்டிருந்த போது தூங்கிக் கொண்டிருந்த பெரியவர் என்னைத் தட்டி எழுப்பினார், இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதென்று. சோம்பல் முறித்துக்கொண்டு எழும்பிய என்னை யாழ்ப்பாண நிலையம் வரவேற்றது.
பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு இறங்கி நடந்தேன். பத்திரிகைக்காரப் பையனின் குரல் பின்னுக் கிழுத்தது. ஒரு பத்து சதக் குத்தியை விட்டெறிந்து விட்டுப் பத்திரிகையை வாங்கிப் புரட்டிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். முதற்பக்கத்தில் காட்சியளித்த புகைப்படம் என்னை ஒரு குலுக்குக் குலுக்கியது! யாருடைய கதையை இரவு முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தேனோ அவருடைய புகைப்படம் தான் அது. அதன் கீழே பெரிய எழுத்துக்களில் பின்வரும் செய்தி பிரசுரமாகியிருந்தது:
“சித்தப்பிரமையினால் பீடிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் சுகமுற்றார்.
மருத்துவமனையினின்றும் வெளியேறினார் !
கொழும்பு, ஐப்பசி, 20
இலங்கையின் பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரும் கடந்த மூன்று வருடங்களாக அங்கொடை மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருமான திரு. “கனிமொழியார்” நேற்றுப் பிற்பகல் நான்கு மணிக்கு மனநோய் மருத்துவமனையினின்றும் பூரண சுகமடைந்தவராய் வெளியேற்றப்பட்டார். அவரை நமது நிருபர் பேட்டி கண்ட போது “தாம் இனிமேல் சுயேச்சையாகத் தமிழ்த்தொண்டு செய்து வரவிரும்புவதாகவும், பழையபடி ஆசிரியத் தொழிலில் ஈடு பட விரும்பவில்லையென்றும்” கூறினார். அவர் வெளிப் பாடு தமிழ் இலக்கியத்திற்குள்ள மகத்தான அதிட்டத்தையே நிரூபிக்கிறது.
செய்தியை வாசித்து முடித்ததும் என் தலைசுழன்றது. இத்தகைய ஒரு மகாமேதையா இரவு முழுவதும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார் என்று மனம் மகிழ்ந்தது. உடனே “பிரபல எழுத்தாளருடன் ஒரு இரவு” என்ற செய்தியை எழுதி எனது பத்திரிகைக்கனுப்ப விரைந்து நடந்தேன்.
– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |