கொலைப்பித்தன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 12,245 
 
 

(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

அத்தியாயம் – 22

பித்தனின் பிதற்றல்

டெலிபோன் ரிஸீவரைக் கையிலெடுத்தார் டிப்டி சூப்பி ரண்டு சிங்காரவேலு முதலியார். அடுத்த விநாடியே அவர் முகம் பிரகாசமுற்றது. ஆ! அப்படியா? இதோ வருகிறேன்!” என்று கூறியவாறு எழுந்தார் தம் இருக்கையை விட்டு. 

“என்ன விசேஷம்?” என்று துப்பறியும் கேசவன் அவரைத் தன் விழிகளால் வினவினார். 

கனகப்பனுக்குச் சிறிது பிரக்ஞை வந்திருக்கிறதாம். நான் அவனைப் பார்த்துவரப் போகிறேன். நீங்களும் வருகிறீர்களா ?” 

“ஓ! பேஷாக!” என்று தானும் எழுந்தார் கேசவன். 

போலீஸ் இலாகாவிலேயே நேர்மைக்குப் பேர் போனவர் சிங்காரவேலு முதலியார். இருந்தாலும், அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் ஓர் அற்ப ஆசை சுடர்விடத் தொடங்கியது. “என்னை அடித்தவன் செல்லையாதான்,” என்று துப்பறியும் கேசவன் எதிரிலேயே கனகப்பன் கூறிவிட மாட்டானாவென, அவர் நெஞ்சம் அவாவுற்றது. 

இருவரும் ஆஸ்பத்திரியின் வாசலில் போய்க் காரை விட்டி றங்கினார்கள். உடனே அவர்களை நோக்கி அவசரமாக ஓடிவந்தார் ஒரு டாக்டர். 

“சார், ஓர் எச்சரிக்கை. நோயாளிக்கு இப்போதுதாள் பிரக்ஞை வந்திருக்கிறது. அவனுடன் நீங்கள் ஒரு நிமிஷத்திற்கு மேல் பேசக்கூடாது. அவன் மனத்தைப் புண்படுத்தக்கூடிய எந்த விஷயத்தையும் பிரஸ்தாபிக்கக் கூடாது”, என்றார் அவர் டிப்டி சூப்பிரண்டை நோக்கி. 

வேறு வழியில்லாமல், “சரி” என்று முணுமுணுத்தார் டிப்டி. “அவனிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும்!”

கனகப்பன் படுக்க வைக்கப்பட்டிருந்த ‘பிரைவேட்’ வார் டுக்கு, அவர்களை அழைத்துச் சென்றார் டாக்டர். அவன் படுக் கைக்கு அருகில் ஒரு நர்ஸும், அவ்வறையின் ஒரு மூலையில் போலீஸ் இலாகாவைச் சேர்ந்த ஒரு துப்பறியும் இன்ஸ்பெக் டரும் உட்கார்ந்திருந்தனர். 

கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டிருந்தான் கனகப்பன். அவன் கண்கள் இலேசாகத் திறந்திருந்தன. தலையில் அவனுக்குப் பலமான கட்டுப்போடப் பட்டிருந்தது. 

அவனருகில் போய் நின்றுகொண்டு, தன் இயல்புக்கு மாறான கனிவான குரலில், அவனைக் கேள்வி கேட்கத் தொடங்கினார் டிப்டி சூப்பரிண்டு : 

“கனகப்பா, நான்தான் போலீஸ் டிப்டி சூப்பரிண்டு. நேற் றிரவு உன்னை இப்படி மண்டையில் அடித்துக் காயப்படுத்தியவன் யார்? அவனை உனக்குத் தெரியுமா?”. 

“நன்றாய்த் தெரியும்!” என்று தன் விழிகளை அகல விரித்தான் கனகப்பன். அவனது வெறித்த பார்வைக்கு ஒரு கணப் பொழுது இலக்கானார் டிப்டி சூப்பரிண்டு. “எனக்குத் தெரியா தென்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரோ? ஓஹோ?” எனக் கூறியவாறு, அவன் தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முயன்றான். 

“ஊஹூம்; நீ எழுந்திருக்கக் கூடாது. படுத்துக்கொண்டே பதில் சொல்,” என்று அவனைத் தடுத்து அமர்த்தி சாந்தப்படுத்தினாள் நர்ஸ். 

“வேறொன்றும் வேண்டாம். உன்னை அடித்தவனுடைய பேரை மட்டும் சொல்; போதும்.” என மிகக் குழைவோடு கோரினார் டிப்டி. 

“என்னை அடித்தது…முத்தையா முதலியார் தான்!” என்று தன் கண்களை மூடினான் கனகப்பன். 

எல்லோருக்கும் தூக்கிவாரிப் போட்டது! முகத்தில் ஏமாற்றம் ததும்ப, முதலியார் துப்பறியும் கேசவனை நோக்கினார். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் இறந்துபோன முத்தையா முதலியார்தான் தன் மண்டையிலடித்தார் என்கிறானே, இந்தப் பித்தனின் பிதற்றல் எப்போதுதான் தெளியுமோ, எப்படித்தான் இவனிடம் விஷயத்தைக் கிரகிப்பது என்று பார்த்தார். 

“சரி. இனி நீங்கள் அவனை ஒன்றும் தொந்தரவு பண்ணக் கூடாது.வாருங்கள் என் ஆபீஸ் அறைக்குப் போகலாம்,” என்று வழிகாட்டி நடந்தார் டாக்டர். டிப்டியும் துப்பறியும் கேசவனும் டாக்டரை மௌனமாகப் பின் தொடர்ந்தார்கள். 

ஆபீஸ் அறையில் போய் அமர்ந்ததும், கேசவன் டாக்டரைக் கேட்டார்: “இவன் பிழைத்தெழுவானென்று நினைக்கிறீர்களா?” 

டாக்டர் மிக்க அவநம்பிக்கையோடு தலையை ஆட்டினார். “மண்டையிலுள்ள காயத்தைப் பற்றித் தான் நாங்கள் முதலில் பயந்தோம்.ஆனால், ஆச்சரியகரமாக அது குணமாகிக்கொண்டு வருகிறது. எனினும் அவனுடைய ஹிருதயமானது மிக மோசமான நிலையில் காணப்படுகிறது, அதிகபக்ஷம், இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரகாலம் அவன் உயிரோடிருக்கலாம்! ஆனால் இத்தகைய இருதய வியாதிகளில் எதையும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை!” என்றார் டாக்டர். 

“அப்படியானால், வேறொரு டாக்டரையும் நான் இங்கு கூட்டி வந்து காட்டலாமா?” 

“யாரது?” எனச் சற்றுக் கடுப்போடு கேட்டார் டாக்டர். “வேறு யாருமில்லை. அவர் எனக்கு மிகவும் வேண்டிய ஒரு நண்பர். டாக்டர் ராமானுஜம் என்று பெயர்.” 

அந்தப் பெயரைக் கேட்டதும், டாக்டரின் வதனமண்டலம் மலர்ச்சியுற்றது : “ஓ! பேஷாகச் செய்யுங்கள். அவரை உங்கள் மூலமாக அறிமுகம் செய்து கொள்ள நான் ஆவலோடிருக்கிறேன்!” 

“யாரது, டாக்டர் ராமானுஜம்?” என்று விழித்தார் டிப்டி சூப்பிரண்டு முதலியார். 

“அவர் ஒரு பிரசித்திபெற்ற மனோதத்வ நிபுணர். ஆனால் பார்வைக்குப் பித்தன்போலிருப்பார்! வைரத்தை வைரத்தால் தான் அறுக்கவேண்டும் என்பதுபோல், பித்தனைப் பித்தனைக் கொண்டுதான் ஆராயவேண்டும்!” என்றார் புன்முறுவலுடன் துப்பறியும் கேசவன். 

“அதிருக்கட்டும். உமக்கு ஏதேனும் மனோதத்வ சாஸ்திரம் தெரியுமோ?” என்று புன்முறுவலோடு வினவினார் டிப்டி சூப் பரிண்டு. 

“ஏன்?” 

“முத்தையா முதலியாரே வந்து தன்னை மண்டையிலடித்த தாகப் பிதற்றுகிறானே கனகப்பன்,அதன் தத்துவம் என்ன? ஒரு வேளை முத்தையா முதலியாரின் ஆவியைப் பார்த்திருப்பானோ?” 

“நியாயமான கேள்விதான்,” என்று தன் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார் துப்பறியும் கேசவன்- “ஆனால், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுமுன், நான் உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்.” 

“என்ன?” 

”அந்தக் காலத்தில் முத்தையா முதலியாரின் கொலை வழக்கை நடத்தியது தாங்கள் தானே?” 

“ஆமாம், அதற்கென்ன இப்போது?” என்றார் டிப்டி சூப்பரிண்டு. 

“அந்த வழக்கில் சாட்சியங்களெல்லாம் செந்தில் நாத முத லியாருக்கு எதிரிடையாகவே யிருந்தும், அவர் எப்படித் தண்டனை யடையாமல் தப்பினார்?” 

“அதுதான் எனக்கும் புரியவில்லை. இத்தனைக்கும், செந்தில் நாதர் சரியாகக்கூட எதிர் வழக்காடவில்லை. அவர் அமர்த்தி யிருந்த வக்கீலும் அவ்வளவு திறமைசாலியல்ல.” 

“ஆனால் அவருக்காக வேறொரு நபர் திறமையாக வாதாடி யிருக்கிறார். அதனால் தான் செந்தில் நாதர் விடுதலையடைந்தார். இந்த உள் குட்டு நேற்றுத்தான் எனக்குத் தெரிய வந்தது!” என்றார் துப்பறியும் கேசவன். 

“நீங்கள் சொல்வது ஒன்றுமே எனக்கு விளங்கவில்லையே?” என விழித்தார் டிப்டி. 

“அந்த வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்ட ஜூரர்களில் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் தான் எல்லாவற்றையும் எனக்கு விவரமாகக் கூறினார்,” என்று ஆரம்பித்தார் கேசவன். “சாட்சிகளின் விசாரணை யெல்லாம் முடிநது, நீதிபதியும் வழக் கின் சாரத்தை எடுத்துரைத்த பிறகு, ஆலோசனைக்காகத் தம் அந்தரங்க அறைக்குள் புகுந்தனர் ஜூராகள். அவர்களில் ஒரே யொருவர் தவிர,-அவர் பெயா மைக்கேல் பிள்ளை, பாக்கி அத்தனை பேரும, செந்தில் நாதர் குற்றவாளியென்றே தீர்மானித்து விட்டனர்….”

“இல்லையே? அவர்களெல்லோருமே ஏகோபித்தல்லவா செந் தில் நாதரை நிரபராதி யென்று தீர்ப்பளித்தார்கள்?” என்று இடைமறித்தார் சிங்காரவேலு முதலியார். 

“அதற்குக் காரணம், அந்த மைக்கேல் பிள்ளை ஒருவரே; தம் திறமையான வாதத்தால், மற்ற அனைவரது மனத்தையும் மாற்றி விட்டார். அதற்கு முக்கிய ஹேதுக்களாயிருந்தவை, செந்தில் நாதரது கடந்த கால நன்னடக்கை நற்பண்புகளும், அவரைக் கன்னா பின்னாவென்று திட்டிய சமையற்காரக் கனகப்பனின் பிதற்றல்களுமேயாகும். செந்தில் நாதர் ஒரு பரம சாதுவாகை யால், அவா ஒரு நாளும் இந்தக் கொலையைச் செய்திருக்க முடி யாது; கனகப்பனே தன் பித்த வெறியில் முத்தையா முதலி யாரைக் கொன்றிருக்கலாம், என்பது அவர் வாதம். இதைக் கேட்டதும், இதர ஜூரர்களின் மனத்திலும் சந்தேகம் தட்ட ஆரம்பித்தது. சந்தேகத்தோடு ஒரு நிரபராதியைத் தூக்கு மேடைக்கு அனுப்புவதைக் காட்டிலும், ஒரு குற்றவாளியை விடுதலை செய்வதால் பாதகமில்லை யென்று அவர்கள் முடிவு செய்தார்கள்!” 

“அப்படியா சமாச்சாரம்? எனக்கு இது இத்தனை நாளும் தெரியாதே?” என்று பிரமித்தார் முதலியார். 

“உங்களுக்குத் தெரியக் காரணமில்லையல்லவா ?” 

“அப்படியானால், அந்த மைக்கேல் பிள்ளையின் கொள் கையை,-அதாவது, கனகப்பன் தன் பித்த வெறியில் கொலை செய்திருப்பான் என்பதை,-நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் டிப்டி. 

“இல்லை, பித்த வெறியால் கனகப்பன் கொலை செய்திருப் பான் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்,” என்று அழுத்தந் திருத்தமாக உரைத்தார் துப்பறியும் கேசவன். 

அத்தியாயம் – 23

பயங்கரச் சதி

“கொஞ்சம் ஏமாந்தோமானால், நம் திட்டங்கள் எல்லாம் குட் டிச் சுவராகி விடும்” என்றான் கோதண்டராமன். “ முதலாவதாக யாருக்கும் தெரியாமல் சேல்லையாவை நாம் படகுக்கு அழைத்து வரவேண்டும். எப்படியோ அவனை அழைத்து வந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அடுத்த படியாக, அந்தப் படகுக்கு நாம் ஒரு விபத்தை விளைவிக்க வேண்டும். அந்த விபத்தில் செல் லையாவும் பழனியப்பனும் ஒன்றாகக் கொல்லப்பட வேண்டும். ஆனால், பார்ப்பவர்கள் யாரும் சந்தேகிக்காதபடி, அது தெய்வாதீனமாக நேர்ந்த விபத்தைப் போல் தோன்ற வேண்டும். உதா ரணமாக, உன்னுடைய ரோந்துப் படகை,–அதன் பெயரென்ன? மறந்து விட்டேனே?” 

“என் படகின் பேர் கடல் பேய்,” என்றான் இருளப்பன்.

இருளப்பனும் கோதண்டமும் கமல வனத்துக்கு வடக்கேயுள்ள ஒரு காட்டூரணியின் கரையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். கோதண்டம் தொடர்ந்து பேசினான். 

“உதாரணமாக, கரையிலிருந்து இரண்டு மூன்று மைல் களுக்கு அப்பால் கொண்டு போய், கடல் பேயை நாம் தீயிட்டுக் கொளுத்தி விடுவதாக வைத்துக் கொள்வோம். அது சுலபமான காரியம் தான். ஆனால், அதில் செல்லையாவும் சேர்ந்து எரிந்து விடுவானாகையால் அவன் பிரேதம் நமக்குக் கிடைக்காது. பிரேதம் கிடைக்கா விட்டால், அவன் இறந்து விட்டதை நிரூபிப் பதற்கு வெகு காலம் பிடிக்கும். அது வரையில் பத்மாவதியிடம் சொததுக்கள் ஒப்படைக்கப்பட மாட்டா. அவளிடமிருந்து நாமும் ஒன்றும் பெற முடியாது…”

“படகை எரிப்பதென்பது சுத்த அபத்தமான யோசனை,” என்று ஆமோதித்தான் இருளப்பன். “மற்றதெல்லாம் கிடக் கட்டும். நடுக் கடலில் அது தீப்பற்றியெரியும் போது, இதர படகுகள், அல்லது கப்பலாட்கள், அல்லது விமானங்கள் அதைப் பார்த்து விட நேரலாம். 

நேரலாம். அவைகள் உடனே உதவிக்கு வந்து, நெருப்பை அணைத்தும் விடலாம். அதைவிட, கடல் பேயை ஏதேனும் ஒரு பாறையில் மோதி மூழ்கடித்து விட்டாலென்ன?”

“அப்படிக் கடற்பாறை ஏதேனும் இங்கே சமீபத்தில் இருக்கின்றதா?” 

“ஓவியர் கிருஷ்ண மூர்த்தியின் பங்களாவை யடுத்த கடற் கரையிலிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திற்குள் ஒரு பாறை யிருக்கிறது,” என்றான் இருளப்பன். “இன்றிரவு நடைபெற விருக்கும் விருந்தின் மத்தியில், ஒருவருமறியாமல் செல்லையா வைக் கடற்கரைக்கு இழுத்து வந்து விடவேண்டியது உன் பொறுப்பு…”

“அதற்கு நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன்,” என்றான் கோதண்டம்.

“எப்படி?” 

“செல்லையாவை டெலிபோனில் கூப்பிட்டு, பழனியப்பன் மிகுந்த அபாயத்திலிருப்பதாகவும், அவனுக்கு உதவி புரிய விருப்பமிருந்தால், ஒருவருக்கும் தெரியாமல் வந்து சேருமாறும் அவ னிடம் நான் கூறப் போகிறேன். உடனே அவன் கடற்கரைக்கு வந்து சேருவான்…” 

“அது என்ன நிச்சயம்?” என்று சந்தேகித்தான் இருளப்பன்.  

“இல்லை. அவன் நிச்சயமாக வருவான். பழனியப்பனிடம் அவனுக்கு அளவு கடந்த பிரியமுண்டு”. 

“ஒரு வேளை, தனக்கு வந்த டெலிபோன் செய்தியை அவன் துப்பறியும் கேசவனிடம் தெரிவித்து விட்டால்?” 

“ஒரு போதும் தெரிவிக்க மாட்டான். நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. ஏனெனில் கேசவனிடம் விஷயத்தைக் கூறினால் அவன் பழனியப்பனுக்கு உதவி புரிய விடமாட்டான்; மேலும் அவன் பழனியப்பனைப் போலீசாரிடம் பிடித்துக் கொடுக்க முயல் வான் என்பது செல்லையாவுக்குத் திண்ணமாகத் தெரியும்!” என்றான் கோதண்டம். அப்படியே கேசவனுக்கு விஷயம் தெரிந்து, செல்லையாவைப் பின் தொடர்ந்து அவன் கடற்கரைக்கு வருவானானால், நீ சட்டென்று இருட்டில் ஒதுங்கிக் கொண்டு விடேன்?” 

“அது சரிதான்,” என்று ஆமோதித்தான் இருளப்பன். ஆனால் கடற்கரைக்கு நான் போகப் போவதில்லை. நான் கரை யிலிருந்து சிறிது ஒதுக்குப் புறமாகக் கடற்பேயை இருட்டில் நிறுத்திக் கொண்டு, அதிலேயே உட்கார்ந்திருக்கப் போகிறேன். மாயாண்டியிடம் ஒரு சிறு வத்தையைக் கொடுத்தனுப்பினால், அவனே செல்லையாவைக் கண்டு பேசி, அந்த வத்தையில் ஏற்றி அவனை என் படகுக்குக் கொண்டு வந்து விடுவான். கடற் பேயைப் பாறையில் மோதித் தகர்த்த பிறகு, நானும் மாயாண்டி யும் அந்த வத்தையின் மூலம் தப்பித்துக் கொள்வோம்!” 

“யோசனை நன்றாகத் தானிருக்கிறது… ஆனால் ஒரு விஷயம்…” என்று இழுத்தான் கோதண்டம். 

“என்ன?” 

“நீ சொல்லும் பாறையானது, கரையிலிருந்து ஒரு மைலுக்குள்ளேயே இருக்கிறது…”

“ஆனால் அவ்விடத்தில் தண்ணீர் இருபதடி ஆழத்துக்கு மேலிருக்கும். அவ்விருவரையும் மூழ்கடிக்க அது ஏராளம்…”

“நான் அதைச் சொல்லவில்லை.- செல்லையா, பழனியப்பன் இருவருமே நன்கு நீந்தத் தெரிந்த பயல்கள். அவர்களது கைகால் களைக் கட்டிப்போடவும் முடியாது. ஏனென்றால், அடபோது அது தற்செயலான விபத்து அல்ல என்று வெளியாகி விடும். டாக்டர் களது பிரேத பரிசோதனையில், இம்மாதிரி பல நுணுக்கமான உண்மைகள் எளிதில் புலப்பட்டு விடும்…”

“அதற்கு நான் வேறொரு திட்டம் வைத்திருக்கிறேன்”, என்று சிரித்தான் இருளப்பன். 

“என்ன?” 

“பழனியப்பனுக்குச் சிறிது மயக்க மருந்துகொடுத்து அவனை நீராவிப்படகிலுள்ள காபின் அறைக்குள் சாமான்களோடு ஒன் றாகப்போட்டுப் பூட்டி வைத்திருக்கிறோம். அதே அறைக்குள் நாம் செல்லையாவையும் தள்ளி…”

“பிரயோஜன மில்லை. பின்னால் போலீசார் வந்து பார்க்கும் போது, உடைந்த படகின் காபின் அறை வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருக்குமானால், அவர்கள் கட்டாயம் சந்தேகப் படுவார்கள்.” 

“காபின் கதவை நான் பூட்டப்போவதில்லை.” என்றான் இருளப்பன். 

“பிறகு?” 

“செல்லையாவை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தி, அதன் வெளிப்புறத்தில் பாராங்கற்கள் போன்ற இரண்டு பெரிய கனமான உப்புக் கட்டிகளை வைத்து அடைத்து விடுவேன்…”

“உப்புக் கட்டிகளா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான் கோதண்டம். 

“ஆம்! அவற்றை நான் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் இரண்டு அரிசி மூட்டைகளின் பளு வாய்ந்தவை. படகு மூழ்கிய சில நிமிஷங்களுக்கெல்லாம், பழனியப்பனும் செல்லையாவும் இறந்துவிடப் போகிறார்கள். அதற்கப்புறம் அந்தக் கட்டிகளும் கரைந்து போய்விடும். பிற்பாடு போலீசார் வந்து பரிசோதனை செய்தால்கூட, படகு மூழ்கிய சமயத்தில் பயல்களிருவரும் காபின் அறைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார்களென்பதை, அவர்களால் கண்டு பிடிக்க முடியாது!” என்றான் இருளப்பன். 

அத்தியாயம் – 24

மஞ்சுளாவின் கோபம்

“விருந்துக்கு வரமுடியாதென்று யாருமே சொல்லவில்லை ஆனால் நாம் அழைத்திருக்கும் நபர்கள் எல்லாம் தவறாமல் வரு வார்களா வென்பதுதான் சந்தேகம்,” என்றாள் பவானி. 

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று வினவினாள் அவள் சகோதரி லலிதா. 

“ஏனென்றால், அந்த அநாமதேயக் கடிதங்களின் மூலம் ஏற் கனவே எல்லோருக்கும் செல்லையாமீது ஓர் அருவருப்பு ஏற் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நேற்றிரவு கனகப்பன்வேறு அடிபட்டிருக்கிறான். இவற்றையெல்லாம் உத்தேசித்து, பெரிய மனிதர்கள் பலர் வராமலிருந்து விடலாம்!” என்று பவானி சொல்லிக்கொண்டிருக்கும்போதே.- 

“அட பைத்தியக்காரப் பெண்ணே!” என்று சிரித்தவண்ணம் சமையல் அறையின் உள்ளே வந்தார் ஓவியர் கிருஷ்ண மூர்த்தி. “இன்றிரவு நம் விருந்துக்கு இந்தக் கமலவனம் முழுவதுமே திரண்டு வரப்போகிறது. கவலைப்படாதே!” 

“ஏன், இங்கே ஏதாவது அபூர்வமான காட்சிகள் நடக்கப் போகிறதோ?” என்று தன் தந்தையைக் கிண்டலாகக் கேட்டாள் பவானி. 

“சந்தேக மில்லாமல்! முதலாவதாக, குழந்தைப் பருவமுதல் காட்டு மிராண்டிகளிடையிலேயே வளர்ந்துவிட்டு, திடீரென்று இங்கு ஒரு கோடீஸ்வரனாய் வந்து குதித்திருக்கும் செல்லையாவே ஓர் அபூர்வமான காட்சிப் பொருள்தான். அத்துடன், மகாப் பிரசித்தி பெற்றவராகிய துப்பறியும் கேசவனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு இதைவிட்டால் வேறு வாய்ப்புக் கிடைக்குமா? பேசா மல் இந்தவிருந்துக்கு நான் ஒரு டிக்கெட்டு வைத்திருக்க வேண் டும்; குறைந்த பக்ஷம் ஆயிரம் ரூபாயாவது இன்றைக்கு வசூலாகும். அந்தப் பணத்தைக் கொண்டு உனக்கு ஒரு கல்யாணத்தை நடத்திவிடலாம். அப்படிச் செய்யாததுதான் பைத் தியக்காரத் தனமாகப் போய்விட்டது!” என்று சிரித்தார் ஓவியர் கிருஷ்ண மூர்த்தி. 

“ஏது, வரவா அப்பா ஒரு பெரிய வியாபாரியாகி விடுவார் போலிருக்கிறதே?” என்று சிரித்தார்கள் இரு பெண்களும். ஏனெனில், பண விவகாரத்துக்கும் ஓவியர் கிருஷ்ணமூர்த்திக்கும். தோட்டம் தூரம் என்பது பகிரங்க உண்மை. லாபநஷ்டங்களை மதிப்பிட்டு ஒரு காரியம் செய்வதென்பது அவருடைய இயல் பிலேயே கிடையாது. கையில் பணமிருக்குமானால் யார் கேட் டாலும் இல்லை யென்று சொல்ல அவருக்கு மனம்வராது. பணம் இல்லாத சமயத்தில் யாரேனும் வந்து உதவி கோரினால், அவர்களுக்காகத் தம் விலையுயர்ந்த சித்திரங்களைக்கூட அவர் அற்ப விலைக்கு விற்றுவிடுவார்! 

ஓவியர் கிருஷ்ண மூர்த்தி எதிர்பார்த்தது போலவே, அழைக் கப்பட்டிருந்த விருந்தினர்கள் அனைவருமே வந்திருந்தார்கள். செல்லையாவை நேருக்கு நேர் சந்தித்தவுடன் அவன் மீது அவர் கள் உள்ளத்தில் ஒருவித அனுதாபம் உண்டாகியது. அவர் களுடைய கம்பீரமான நடை உடைபாவனைகள், மெருகேறிய பேச்சுத்திறமை இவற்றையெல்லாம் நோக்கும்போது, தன். னுடைய நாகரீகக் குறைபாடுகள் செல்லையாவிற்குத் தெற் றெனப்பட்டது. தன்னுடைய வாழ் நாளிலேயே அவன் அது வரையில் அத்தகைய நாகரிக வாலிபர்கள், நாரீ மணிகளின் மத்தியில் பழகியதில்லை யாகையால், அவர்களிடம் பேசுவதற்கே அவனுக்கு சங்கோசமாயிருந்தது. ஆனால், அந்தச் சங்கோசமே அவன் மீது அவர்களுக்கு ஒரு கவர்ச்சியை விளைத்தது. கோடித் தீவில் அவன் அடைந்த வாழ்க்கை யனுபவங்களைப் பற்றி, மிக ஆவலோடு அவனிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அங்கு குழுமியிருந்த ஆண் பெண்களனை வரும். 

ஆனால், பவானி மட்டும் அவனிடம் அதிகமாக நெருங்கவே யில்லை. அவன் வந்தவுடன் மரியாதைக்காக “வா” என்று கேட்டாள்; அப்புறம் அவன் பக்கம் அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதற்கு ஈடுசெய்வதுபோல, மஞ்சுளா அவனை இடைவிடாது அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருந்தாள். அவளுக்கே அவன் சொந்தமாகி விட்டது போலவே, மஞ்சுளாவின் பேச்சும் தோரணையும் காணப்பட்டன. கண்ணனுக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. மஞ்சுளாவிடம் அதைப் பச்சை யாகவே அவன் கூறிவிட்டான். 

“நீ கொஞ்சம் எல்லை மீறிப்போகிறாய், மஞ்சுளா! உனக்கு இங்கிதம் தெரியவில்லை. செல்லையா அதி சீக்கிரத்தில் உன்னிடம் அலுப்படைந்து விடப்போகிறான். ஜாக்கிரதை!” என்றான் கண் ணன் குசுகுசுவென்ற குரலில். அதன் பிறகு மஞ்சுளாவும் கண் ணனும் இரகசியமான குரலில் கோபத்துடன் பேசிக்கொள்ள லானார்கள். 

“நீ என்ன சொல்லுகிறாய்?” என்று அவனைச் சீற்றத்தோடு கேட்டாள் மஞ்சுளா. ஏற்கெனவே, செல்லையா தன்னிடம். நடந்து கொள்ளும் தோரணையில் அவளுக்கு மிகவும் எரிச்சல் ஏற்பட்டிருந்தது. அதற்கு முதல்நாளெல்லாம் அவள் இஷ்டம் போல் வளைந்து கொடுத்துக்கொண்டிருந்த அவன், அன்று காலை யிலிருந்து ஒரு மாதிரியாக நடக்கத் தலைப்பட்டான். அதற்குக் காரணம், துப்பறியும் கேசவனின் துர்ப்போதனைதான் என்று மஞ்சுளா தீர்மானித்துக் கொண்டாள். 

“ஒரு வாலிபனை அதிகமாக விரட்டுவாயானால், அவன் ஒரு நாளும் உனக்கு வசப்படமாட்டான், மஞ்சுளா!” என்று கண் ணன் மஞ்சுளாவின் காதுக்குள் சொல்லிவிட்டுக் கேலியாகச் சிரித்தான். “இனியும் நீ இப்படியே அவனைச் சுற்றித் திரிந்தால், தன் பணத்தின்மீது நீ கண்ணோட்டம் வைக்கிறாயோ வென்று அவன் சந்தேகிக்கத் தொடங்கி விடுவான்!” 

“அவன் என்னை அப்படிச் சந்தேகித்தால், அதற்குக் கார ணம் நீயாகத்தானிருக்கும்;” என்றாள் மஞ்சுளா. 

“அப்படியே வைத்துக்கொள். இருந்தாலும் நீ இவ்வளவு பச்சையாக அவனிடம் உன் அபிப்ராயத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்தாற்போல், பவானி எப்படி நடந்து கொள்கிறாள் பார்த்தாயா?” 

“அவள் எப்படி நடந்து கொண்டால் என்ன? இந்நேரவரையில் அவள் மூஞ்சிக்கட்டையைப் பார்த்து அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.” 

“பேசுவதற்கு அவனுக்கு ஆவலிருக்கிறது. அது அவன் பார்வையிலிருந்தே தெரிகிறது. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. அதேபோல் அவள் மனத்திலும் அவனிடத்தில் பிரியமிருக்கிறது. இருந்தாலும் அதை மறைப்பதற்காகவே அவள் தினகரனோடு சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாள். அதைப் பார்க்கப் பார்க்கச், செல்லையாவுக்கு அவள் மீது ஆசை அதிகரிக்கிறது…”

“போதும் உன் பிதற்றல்!” என்று வெடுக்கென்றுரைத்தாள் மஞ்சுளா. ‘செல்லையாவுக்கும் அவளுக்கும் கொஞ்சம்கூடப் பிடிக்காது. அது எனக்குத் தெரியும்”. 

“செல்லையாவைப் பிடிக்காவிட்டால், நேற்றிரவு கல்யாண வீட்டிலிருந்து திரும்பும்போது அவள் எதற்காக வெள்ளை மாளி கைக்குப் போகவேண்டும்?” என்று சற்று கடுமையாகப் பேச ஆரம்பித்தான் கண்ணன். அதிருக்கட்டும். நீ இனிமேல் செல்லையா பக்கம் போகாதே. என் வார்த்தை மீறிப் போவாயானால், நாளைக்குப் போலீசார் கேட்கப்போகும் பல கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல நேரும்!” என்றான் .மஞ்சுளாவின் காதுக்குள் மிகவும் குசுகுசுவெனக் கண்ணன். 

“என்ன ? இன்றைய விருந்திலும் நீ ஏதாவது விஷமம் செய்யப்போகிறாயா? இப்போதென்ன புதுச் சதி?’ எனத் துணுக்குற்றாள் மஞ்சுளா. 

“அதெல்லாம் இப்போது என்னைக் கேட்காதே மஞ்சுளா! இங்கே பார்! செல்லையாவுக்கு இப்போது உன்மீது சுவாரசியம் குறைந்து விட்டது. என்னைப் புறக்கணித்துவிட்டு நீ அவனை அடையவும் முடியாது! நீ புத்திசாலிப் பெண்ணயிருந்தால்… செல்லையாவை விட்டுத் தொலைத்து விட்டுப்போய் நன்றாகத் தூங்கு! விடிந்து எழுந்ததும் வெள்ளை மாளிகையின் சொந்தக்காரிக்கு வாரீசுக்காரியாகி விடுவாய்; நானும் சொத்துக்கும் வாழ்க்கைக்கும் பங்கு காரனாகிவிடுவேன்!” என்று உதட்டுக்குள்ளேயே சிரித்தான் கண்ணன். 

மஞ்சுளாவின் உள்ளத்தில் சஞ்சலமும் கோபமும் ததும்ப லாயின. கண்ணன், செல்லையா இருவர் மீதும் அவள் வெறுப்புற்றாள். 

“நேற்றிரவும் இப்படித்தான் நீ காரியத்தைக் கெடுத்து விட் டாய்! நீங்கள் எக்கேடோ கெட்டுப்போங்கள். நான் வீட்டுக் குப்போகிறேன்!” என்று கோபத்தோடு கூறிவிட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மஞ்சுளா தன் வீட்டைநோக்கிப் புறப்பட்டாள். 

முதல்நாளிரவைப் போலவே, தன் மகள் விரைவாகத் திரும்பி வந்து விட்டதைக் கண்டு வியப்புற்றாள் பத்மாவதி. அதன் பிறகு தாயும் மகளும் வெகுநேரம்வரை குசு குசுவெனப் பேசிக் கொண்டே இருந்தார்கள். 

– தொடரும்…

– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *