கொலைப்பித்தன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 11,806 
 
 

(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33

அத்தியாயம் – 28

பதின்மூன்றாவது ஆண்டு நினைவுவிழா

“என்ன மிஸ்டர் கேசவன், உம்முடைய கட்சிக்காரன் செல்லையாவைப்பற்றி ஊரெங்கும் ஒரே பேச்சாயிருக்கிறதே? தன்னுடைய அபாரமான தீரச் செயலால் அவன் மூன்று உயிர்களைக் காப்பாற்றி விட்டான் என எல்லோரும் வானளாவப் புகழ்கிறார்களே?” என்று விசாரித்தார் டிப்டி சூப்பரிண்டு சிங்கார வேலு முதலியார். 

“நானும் அதை ஓர் அபூர்வ சாதனையாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் விசாரிக்கும் போது, அவனுக்கு இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயம் என்று தெரிகிறது. ‘கடலின் உள்ளே ஏதாவது சுறாமீன் தென்பட்டிருந்தால், கொஞ்சம் சுவாரஸ்ய மாயிருந்திருக்கும்,’ என்கிறான் அவன்!” 

“அட!” என்று ஆச்சரியமுற்றார் டிப்டி இதெல்லாம் அவன் கோடித்தீவிலிருக்கும் போது அந்தக் காட்டு மிராண்டிகளிடம் கற்றுக் கொண்ட வித்தை போலிருக்கிறது!” 

“அது எப்படியோ இருக்கட்டும்! என் தினகரனுயிரைக் காப்பாற்றியதற்காக அவனுக்கு நான் கடமைப்பட்டு விட்டேன், அதன் பொருட்டாவது, அவன் தந்தை மீதுள்ள அபவாதத்தை நான் போக்கிவிட வேண்டும்! அதாவது அவன் தந்தை உண்மையாகவே கொலையாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்!” என்றார் கேசவன். 

“உம்!” 

“வெள்ளை மாளிகையில் முத்தையா முதலியார் கொலை யுண்டு, நேற்றிரவோடு பன்னிரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. இன்று பதின்மூன்றாம் ஆண்டு ஆரம்பம். அதை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் இன்றிரவு ஏறத்தாழ அதே நேரத்தை யொட்டி ஒரு சிறிய ஆண்டு நினைவு விழா விருந்து நடத்தப் போகிறேன். அதற்கு நீங்களும் அவசியம் வரவேண்டும்!” என்றார் துப்பறியும் கேசவன். 

“வேறு யாரார் வரப்போகிறார்கள்?” 

“விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் ஜாபிதா இதோ இருக்கிறது, பாருங்கள்,” என்று கேசவன் ஒரு காகிதத்தை நீட்டினார். அதைக் கையில் வாங்கிப் பார்வையிட்டார் டிப்டி. 

“இது யார் கோதண்டராமன்? பெயர் புதிதாய் இருக்கிறதே?” 

“நமது எல்லப்ப பிள்ளையின் குமாஸ்தா. பத்மாவதியம்மாளுக்கு ரொம்ப வேண்டியவர். என் அழைப்பைக் கண்டு அவர் வியப்புற்றிருக்கலாம். ஒரு வேளை அவர் வராமலும் இருந்துவிடலாம். அப்படிக்கின்றி, அவர் கட்டாயம் வந்து சேருமாறு தாங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்று கண்ணைச் சிமிட்டினார் துப்பறியும் நிபுணர். 

அத்தியாயம் – 29

குட்டு உடைகிறது!

“என்ன வேடிக்கையாயிருக்கிறது? கொலை நடந்து பன்னி ரண்டு வருஷங்கள் கழித்து, அதே வெள்ளை மாளிகையில், அதே தினத்தில், அதே இரவில், அதே நேரத்தை யொட்டி ஆண்டுவிழா விருந்தாமே? இந்தக் கேசவன் எதற்காக என்னையும் அதற்கு அழைத்திருக்கிறான்?” எனப் புழுங்கினான் கோதண்டராமன். 

“ஒருவேளை, பத்மாவதியின் வீட்டுக்கு நீ இரண்டொரு தடவை வந்து போனது அவனுக்குத் தெரிந்திருக்கலாம்!” என்று பதிலளித்தான் கண்ணன். 

“அதற்கும் முத்தையா முதலியார் கொலைக்கும் என்ன சம்பந்தம்? அந்தக் காலத்தில் நான் இந்த ஊரிலேயே இல்லையே?” 

“நான் கூட அந்தக் காலத்தில் ஒரு பள்ளிச் சிறுவனாய்த் தானிருந்தேன். ஆனால் இப்போது நான் ஒண்ணாம் நம்பர் சந்தேகப் பேர்வழியாகக் கருதப்படுகிறேன். இன்று காலையில் பழனியப்பன் விஷயமாக டிப்டி சூப்பரிண்டு என்னைப் பன்னிப் பன்னிக் கேள்விகள் கேட்டார். எனக்கு ஒன்றுமே தெரியா தென்று நான் சாதித்துவிட்டேன்…” 

“நீ என்னைப்பற்றி எதுவும் சொல்லிவிடவில்லையே ?” என்று திகிலோடு கேட்டான் கோதண்டராமன். 

“நீ என்னை என்ன அவ்வளவு அடிமுட்டாள் என்று எண்ணிக்கொண்டாயா?” என்று கோபித்தான் கண்ணன். “இன்றிரவு நம்மெல்லோரையும் கேசவன் எதற்காக அழைத்திருக்கிறான் என்று நினைக்கிறாய்? நம்மை ஒருங்கு கூட்டி வைத்துத் திகிலடையச் செய்து, அப்போது நாம் ஏதேனும் வாய் தவறி உளறிவிட்டால் அதை வைத்துக்கொண்டு நம்மீது குதிரை ஏறுவதற்கே அவன் இந்த ஏற்பாடு செய்திருக்கிறான். நாம் மட்டும் ஜாக்கிரதையாய் வாயை மூடிக் கொண்டிருப் போமானால், நம்மீது அவன் எத்தகைய குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது!” 

“அப்படியா சமாச்சாரம்?” என்று தலையை ஆட்டினான் கோதண்டராமன்- “வரட்டும், இன்றிரவு என்னதான் நடக்கிற தென்று பார்ப்போம்.” 

“ஆமாம். அதற்குள் நாம் ஏன் ஆதாரமற்ற யூகங்களி லிறங்கி, நம் மூளையை அனாவசியமாகக் குழப்பிக்கொள்ள வேண்டும்?” என்றான் கண்ணன். 

அத்தியாயம் – 30

சாட்சியம் பொய்யா?

இரவு மணி பத்தாயிற்று. அந்நேரம் வரையில் எங்கெங்கோ போய்ச் சுற்றியலைந்து விட்டு, வெள்ளை மாளிகைக்கு வந்தார் துப்பறியும் கேசவன். 

அம்மாளிகையைச் சுற்றிலும் ஒரே இருள் சூழ்ந்திருந்தது. உள்ளிருந்து ஒரு சின்னஞ் சிறு ஒளிக்கதிர்கூட வெளிப்படாதவாறு, அதன் ஜன்னல் களெல்லாம் சாத்தப்பட்டிருந்தன. முன்புற மிருந்த பெரிய ஹாலில், ஒரேயொரு ஊதா பல்ப் மட்டும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. வீடெங்கும் சுற்றிப் பார்த்து விட்டு, அடுத்தாற் போல் நடைபெறவிருக்கும் நாடகத்துக்கு வேண்டிய அமைப்புக்களெல்லாம் செவ்வனே யிருக்கின்றன வென்று, தம் மனத்திற்குள்ளே திருப்தியுற்றார் கேசவன். 

அவருடைய அழைப்பில் குறிப்பிட்டிருந்தவாறு, சரியாகப் பத்தரை மணிக்கு மேல் விருந்தினர்கள் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கினர். முதன் முதலில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கேசவனின் ரோல்ஸ்ராய்ஸ் காரில் அருளானந்த சாமியாரை அழைத்து வந்தான் தினகரன். சுமார் அறுபது வயதுக்கு மேலாகி விட்டதால், சற்று கூனிக் குறுகிக் காணப்பட்டார் அப் பெரிய மனிதர். எனினும், அவரது பார்வையிலும் பேச்சிலும் ஒருவிதக் கனிவும் தெளிவும் கலந்து விளங்கின. 

“ஏதோ நீங்கள் அழைத்ததை மறுக்கமாட்டாமல் நான் வந்திருக்கிறேன். மற்றபடி, வேறு எவ்விதத்திலும் உங்களுக்கு நான் உதவியாயிருக்கக் கூடுமென்று என்னால் நம்ப முடியவில்லை!” என்றார் அவர் கேசவனை நோக்கி. 

“நீங்கள் வந்ததே பெரிது. அதற்கு நான் நன்றி செலுத்துகிறேன்”, என்று கூறிவிட்டு, செல்லையாவை அவருக்குக் கேசவன் அறிமுகப்படுத்தி வைத்தார். 

“உன் தந்தை எனக்கு ரொம்ப வேண்டியவர்,” என்று தம் கண்களில் ஜலம் ததும்ப அவர் அவனைக் கட்டித் தழுவினார். எனினும், அவருக்கு விரோதமாக நான் சாட்சியம் கூற நேர்ந்தது. அன்று நான் கோர்ட்டில் கொடுத்த அதே வாக்குமூலத்தைத் தான், இன்று நீங்கள் கேட்டாலும் நான் திருப்பிச்சொல்லப் போகிறேன்!” என்று அவர் கேசவனை நோக்கினார். 

“எனக்கு அது போதும்!” எனப் புன்னகைத்தார் துப்பறியும் நிபுணர். 

சிறிது நேரத்திற்கெல்லாம் இதர விருந்தினர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களெல் லோரையும் அந்த இருளடைந்த படிக்கட்டின் வழியாக மேல் மாடிக்கு அழைத்துச் சென்று, ஒரு சிறிய அறையில் உட்கார வைத்தான் தினகரன். 

தினகரனுக்கும் செல்லையாவுக்கும் மத்தியில் டிப்டி சூப்பரிண்டு சிங்காரவேலு முதலியார் உட்கார்ந்திருந்தார். அடுத்தபடி யாகக் கேசவன் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்கே தெரியாம லிருந்தது. அவரைப் போலவே, கண்ணன், கோதண்டம், பத்மாவதி, மஞ்சுளா, அருளானந்த சாமியார், செல்லையா ஆகிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித ஊகத்தில் ஆழ்ந்து போய், மௌனமாக உட்கார்ந்திருந்தனர். கடைசியாக, கேசவன் பேசத் தொடங்கினார். 

“நண்பர்களே, முத்தையா முதலியார் கொலையுண்ட பதின் மூன்றாவது ஆண்டு இன்று ஆரம்பமாகிறது. அந்தக் கொலை நடந்த சமயத்தில் இதே வீட்டில் தங்கியிருக்க நேர்ந்த அருளானந்த சாமியார் அவர்களும் பத்மாவதியம்மாளும் இப்போதும் இங்கு இருக்கிறார்கள். நான் கூறப்போகும் பல விஷயங்கள், அவ்விரு வருக்கும் ஏற்கெனவே தெரிந்தவைதான் என்பதில் சந்தேகமில்லை. 

“அப்போது உலக மகாயுத்தம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, இந்தக் கமலவனத்தின் அருகாமையில் இலங்கைப் பட்டாளம் ஒன்று தங்கியிருந்தது. அந்தப் பட்டாளத்தைச் சேர்ந்த சில உயர்தர அதிகாரிகள் முத்தையா முதலியாருக்குத் தற்செயலாக நண்பரானார்கள். அவர்கள் இவ்வூரை விட்டு மாறிப்போக வேண்டிய நாள் வந்தது. அதற்கு முதல் நாளிரவு, அவர்களுக்கு இந்த வெள்ளை மாளிகையில் ஒரு விருந்து நடத்தினார் முத்தையா முதலியார்…” 

“ஆம். அன்றிரவுதான் அவர் கொல்லப்பட்டார்,” என்று குறுக்கிட்டார் அருளானந்த சாமியார். 

“அது உண்மைதான்! யாரும் எதிர்பாராத விதமாக, சென்னையிலிருந்து அன்று மாலை செந்தில்நாத முதலியாரும் வந்திருந்தார். அவருக்கும் முத்தையா முதலியாருக்கும், பத்மாவதியம்மாள் விஷயமாக மனக்கசப்பு ஏற்பட்டிருந்த தென்பது பகிரங்க ரகசியம். அதாவது செந்தில்நாத முதலியாரை விட்டு விட்டு முத்தையா முதலியாரைப் பத்மாவதியம்மாள் மணக்க உத்தேசித்ததை முன்னிட்டு அந்த மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது. அவ்வாறு தமக்குப் பின் தம் தம்பிக்குச் சொத்துப் போகவிடாமல் செய்வதற்காகவே முத்தையா முதலியார் பத்மாவதியம்மாளை மணக்க விரும்பினதாகச் செந்தில்நாதர் ஆத்திரப்பட்டார் எனச் சொல்லப் படுகிறது. தற்செயலாக அன்று பத்மாவதியம்மாளும், ஏதோ தாங்க முடியாத ஒரு தலைவலியினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்…” 

“காரணம் வேறொன்றுமில்லை. அன்று வெய்யில் அவ்வளவு கடுமையாயிருந்தது!” என்றாள் பத்மாவதி 

“ஓஹோ! அப்படியா சமாச்சாரம்? நான் வேறுவிதமாக அல்லவா நினைத்தேன்?” என்று அவளைக் கூர்ந்து நோக்கினார் கேசவன். 

“என்ன வேறுவிதம்?” 

“நீங்களே நன்றாய் ஞாபகப்படுத்திப் பாருங்கள். உங்களுக்கு வந்தது வெறும் சாதாரணத் தலைவலியல்ல. ஒரு மயக்கமும் அதில் கலந்திருந்தது. அதனால், விருந்தில் கூடக் கலந்துகொள்ள முடியாமல், உங்கள் அறையில் போய் நீங்கள் படுத்துக்கொண்டு விட்டீர்கள்-“

“நான்தான் அந்த அம்மாளைப் போய்ப் படுத்துக்கொள்ளச் சொன்னேன். அவர்கள் முகத்தில் அவ்வளவு வேதனை காணப் பட்டது!” என்று விளக்கினார் அருளானந்த சாமியார். 

“அது எப்படியோ இருக்கட்டும். அதற்கென்ன இப்போது?” என்று சிடுசிடுத்தாள் பத்மாவதி. 

“ஏன் அவசரப்படுகிறீர்கள்?” என்று சிரித்தார் கேசவன். “அன்று விருந்துக்கு வந்திருந்த ராணுவ அதிகாரிகளில், காப்டன் கஜேந்திரம்பிள்ளை யென்பவர் ஒருவர். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். பத்மாவதியம்மாளும் இலங்கையிலிருந்தவர்கள். இருவரும் ஒருவரையொருவர் நன்கறிந்தவர்கள். இது உண்மைதானா?” என்று அவர் பத்மாவதியை நோக்கினார். 

இதைக் கேட்டதும், அவள் முகத்தைப் பளீரென்று ஒரு பிரேதக் களை கவ்வியது. 

“எனக்குத் தெரியாது!” என்று ஈனஸ்வரத்தில் இழுத்தாள் பத்மாவதி. 

“அப்படியானால் அவரைக் கண்டதும் உங்களுக்கு மயக்கம் வரக் காரணம்?” என்றார் கேசவன். 

அவர் தொடர்ந்து பேசினார்: “அந்தக் கஜேந்திரம்பிள்ளை இப்போது காலமாகிவிட்டார். ஆனால் அவரைப் பற்றித் தீர விசாரித்து எனக்குத் தகவல் தெரிவிக்குமாறு, இலங்கையிலுள்ள என் நண்பர் ஒருவருக்கு டெலிபோன் செய்தேன். அங்கிருந்து வந்த செய்தியின்படி, கஜேந்திரம்பிள்ளை ராணுவத்தில் சேருமுன், அவர் ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் என்று தெரிய வந்தது. அந்த யாழ்ப்பாணம் கிரிமினல் கோர்ட்டில், பத்மாவதி யென்ற நபர் மீது ஏதேனும் கேஸ் நடந்ததுண்டா என்று என் நண்பரை மறுபடியும் விசாரித்தேன். அவர் போய்க் கோர்ட்டு ரிகார்டுகளையெல்லாம் புரட்டிப் பார்த்து, எனக்குப் பதில் தெரிவித்தார். ஒரு நம்பிக்கை மோசடி வழக்கில் தன் கணவனுடனும் குருமூர்த்தி என்ற மற்றோர் பேர்வழியுடனும், ஆறுமாதம் சிறைவாசம் அனுபவித்தவள் பத்மாவதியம்மாள் எனத் தெரிய வந்தது. அந்த வழக்கில், போலீஸ் தரப்பில் கேஸ் நடத்தியவர் தான் கஜேந்திரம்பிள்ளை. அந்தப் பூர்வாசிரமக் கதையை அவர் வெளியிட்டு விடுவாரோ என்ற பயத்தால் தான், அவரைப் பார்த்ததும் பத்மாவதியம்மாளுக்கு மயக்கம் கண்டது…!” 

“ஆம்! நான் சிறைவாசம் செய்தவள்தான்!” என்று திடீ ரென்று கத்தினாள் பத்மாவதி. “ஆனால் முத்தையா முதலியார் கொலைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அவரைக் கொலை செய்தது கூட நான்தான் என்று கூறுகிறாயா? அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” என்று அவள் சீறினாள் கேசவன் மீது. 

டிப்டி சூப்பரிண்டு உள்பட, எல்லோருமே திக்பிரமையுற்று மௌனமா யிருந்தனர். ஆனால் அவள் சீற்றத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது, சிரித்துக் கொண்டே பேசினார் கேசவன்: 

“அன்றிரவு பத்மாவதியம்மாள் பயந்தது சரியாய்ப் போயிற்று. கஜேந்திரம்பிள்ளை முத்தையா முதலியாரிடம் பத்மாவதியம்மாளின் பழங்கதையைக் கூறியே விட்டார். இதைக் கேட்டதும், இயற்கையிலேயே குணக் கேடராகிய முதலியார், பிரளய ருத்திரனைப் போல் பெருங் கோபம் கொண்டார். அதனால் தான் தம் தம்பி செந்தில்நாத முதலியாரிடமும் அவர் எரிந்து விழுந்து பேசினார். தம் சொத்துக்களை யெல்லாம் தான் மணக்கப் போகும் பத்மாவதியம்மாள் பேருக்கு எழுதி வைத்திருந்த உயில் டிராப்டைக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட்டார். ஆனால் அந்த டிராப்டைச் செந்தில்நாதர் கிழித்ததாகக் கோர்ட்டு விசாரணையின் போது போலீஸ் தரப்பில் வாதிக்கப்பட்டது…” 

“அது சும்மா வெறும் சந்தர்ப்ப சாட்சியம்தான்!” என்று இடைமறித்தார் டிப்டி சூப்பரிண்டு- “முத்தையா முதலியாரின் அறையை விட்டுச் செந்தில்நாதர் வெளியே வந்த நேரம் என்ன? அது பன்னிரண்டு அடித்து ஐந்து நிமிஷமா, அல்லது பன்னிரண்டு அடிக்க ஐந்து நிமிஷமா என்பதே அந்த வழக்கில் பிரதான பிரச்னையாக விளங்கியது!” 

“அந்தப் பிரச்னையைத் தான் நான் அடுத்தபடியாக எடுத்துக் கொள்ளப் போகிறேன்,” என்றார் கேசவன். “‘முத்தையா முதலியாரைக் கொலை செய்தது கூட நான்தானா?’ வெனச் சற்று முன்பு பத்மாவதியம்மாள் என்னைக் கேட்டார்கள்…” 

“அதை இப்போதும்தான் கேட்கிறேன்!” என்று சப்தமிட்டாள் பத்மாவதி 

“நீங்கள் முத்தையா முதலியாரைக் கொலை செய்யவில்லை யம்மா ; ஆனால், ஒரு பொய்ச்சாட்சி சொன்னதன் மூலம் அவருடைய தம்பி செந்தில்நாத முதலியாரைக் கொலை செய்ய – அதாவது, தூக்கு மேடைக்கு அனுப்ப, முயன்றீர்கள்!” என்று சாவதானமாகக் கூறினார் கேசவன். 

“பொய்ச் சாட்சியா! அருளானந்த சாமியார் கூறியதைத் தான் கோர்ட்டில் நானும் உறினேன். அப்படியானால் அவர் சொன்னதும் பொய்ச்சாட்சி தானா?” 

“பத்மாவதியம்மாள் கேட்பது நியாயமான கேள்வி!” என்று ஆமோதித்தார் அருளானந்த சாமியார். “அந்த அம்மாளின் பழைய சரிதைகள் எனக்குத் தெரியாது. அதைப்பற்றி எனக்கு அக்கறையுமில்லை. ஆனால், அந்த அம்மாள் கோர்ட்டில் கொடுத்த வாக்குமூலம் மாத்திரம் பரிசுத்தமான உண்மையென்பதில் சந்தேகமில்லை. அதை நீங்கள் பொய்யென்றால், என் சாட்சியத்தையும் நீங்கள் பொய்யென்று கூறுவதாகத்தான் அர்த்தம்…” 

“உங்களை நான் அவ்வாறு குற்றம் சாட்டவில்லை. ஏனெனில், உங்கள் சாட்சியத்திற்கும் அந்த அம்மாள் சாட்சியத்திற்கும் மலைக்கும் மடுவுக்கு முள்ள வித்யாசமிருக்கிறது!” 

“எப்படி?” என்றார் வியப்புடன் அருளானந்த சாமியார். 

“அதை உங்களுக்கு இதோ விளக்குகிறேன்?” என்றார் துப் பறியும் கேசவன்.

– தொடரும்…

– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *