குகைச் சிற்பங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 76 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென்னிந்தியாவில் பல்லவ சாம்ராஜ்யம். வேரூன்றி யிருந்த சமயம். 

திருச்சினாப்பள்ளி நகரின் நடுவேயுள்ள மலை யிலே உன்னதமான ஓர் கோவிலை அழகு பெற அமைத்தான் நரசிம்மவர்மன். இதைக் கட்டி யமைத்தபின், அஜந்தா குகைகளைப்பற்றி அவன் அடிக்கடி சிந்தித்து வந்தான். 

தன் காலத்தில் வாழ்ந்துவந்த தமிழ்நாட்டுச் சிற்பிகளின் கைத்திறமைகளையும் ஒரு தகுந்த இடத்தில் பொறித்து வைத்துவிட எண்ணினா ன் அவன். பல இடங்களை ஆராய்ந்தான். “திருச்சி னாப்பள்ளி மலைக்கோவிலின் பக்கத்திலேயே ஒரு குகை அமைத்து அதனுள் வரிசை வரிசையாகச் சிலைகளைச் செதுக்கிவிடலா” மென்று நரசிம்ம வர்மனின் ஆஸ்தானச் சிற்பியான காளிங்கன் கூறினான். 

சிற்ப சாஸ்திரத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த காளிங்கனுடைய யோசனை நரசிம்ம வர்மனுக்கு ஆறுதலளித்தது. மறுநாளே அந்த மலையில் ஒரு நீண்ட குகை வெட்டுவதற்கான திட்டங்கள் போடப்பட்டன. அதற்கு வசதியான  ஒரு இடத்தையும் அங்கு தேர்ந்தெடுத்தார்கள் கல் தச்சர்கள். 

குகை வெட்ட வெட்ட உடனுக்குடன் அந்த இடங்களில் எதிர் எதிராகச் சிலைகளைச் செதுக்கும்படி அரசன் சிற்பிகளுக்கு உத்திர விட்டான். 

ஆஸ்தான சிற்பி காளிங்கனுக்கும் ஒரு புது விதமான குதூகலம் உண்டாயிற்று. தான் புதிதாகச் சிருஷ்டிக்கப் போகும் சிலாரூபங்களைக் கண்டு மற்ற காட்டுச் சிற்பிகள் பிரமிக்கப் போகிறார்கள் என்பதில் அவனுக்கு ஒருவித கர்வம். அரசனுடைய புகழ்ச்சி வார்த்தைகளை எத்தனையோ தடவை கேட்டுக் கேட்டு அலுத்து விட்டான் காளிங்கன. தன்னைப்போன்ற ஒரு சிற்பி, தன் சிற்பத் திறமையை மெச்சி வாயாரப் புகழ வேண்டும்! இதுவே அவனுடைய அந்த ரங்க ஆவல். 

நரசிம்மவர்மப் பல்லவனுடைய உள்ளத்தில் மலர்ந்த சிற்பக் குகை, திருச்சி மலைக்கோவிலின் பக்கத்தில் சிறிது சிறிதாக உருப்பெற்று வந்தது. சிற்பிகளும் சிலைகளை வடிக்க ஆரம்பித்து விட் டார்கள். காளிங்கனுக்கு வயதாகி விட்டாலும், உணர்ச்சி வேகத்தில் ஒரு இளைஞனைப் போலவே மிகுந்த பிரயாசையுடன் கல்லை உருவாக்கி வந்தான். அவன் இதுவரை முயற்சித்திராத நுணுக்க பாவங்களை யெல்லாம் அந்தக் குகையில் சிருஷ்டிக்கும் முதல் சிலையில் காட்டிவிட எத் தனித்தான். முயற்சிக்குத் தகுந்தபடி அவனுக்குச் சிறந்த வெற்றியும் கிடைத்து விட்டது. 

சிற்பிகள் யாவரும் காளிங்கனுடைய கைத் திறமையைக் கண்டு மெச்சினார்கள். 

அவன் செதுக்கியிருந்த, நடனமிடும் கந்தர் வன் சிலையைக் கூர்மையாகக் கவனித்த சிற்பி களில் ஒருவன் குணசேகரன் வடித்திருக்கும் சிலைக்கு அடுத்தபடியாகத்தான் இதைச் சொல்ல லாம்!” என்றான். மற்றவர்களும் “ஆமாம்! அதுதான் எல்லாவற்றிலும் சிறந்தது. அதற்கு அடுத்தபடியாக உயர்ந்த பாவங்களை வெளியீடு வது இந்தச் சிலைதான் என்று அதை ஆமோ தித்தார்கள். அவர்கள் சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் சொன்ன வார்த்தைகள் காளிங்கனுடைய உள் ளத்தில் ஒரு பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. 

அவர்கள் குறிப்பிட்ட குணசேகரன் என்னும் சிற்பி கலிங்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞன். அவனிடம் கலா சௌந்தர்யம், ரூப சௌந்தர்யம், குண சௌந்தர்யம் யாவும் ஒருங்கே குடி கொண்டு விளங்கின. 

சற்று நேரத்துக்குமுன் வரையில், காளிங்க னுக்கு அவன் மீது அபாரமான அன்பு ஏற்பட்டிருந்தது. அவனுக்கு அடிக்கடி தன் வீட்டில் விருந்தளித்திருக்கிறான். குணசேகரனும் காளிங்கனுடைய சிற்ப வேலைகளில் மற்றவர்கள் காணாத அழகுகளை யெல்லாம் கண்டு மகிழ்வான். உண்மையிலேயே அவனுக்குக் காளிங்கனிடத் தில் சிறந்த மதிப்பு உண்டு. 

இவ்வாறாக அந்த இரு சிற்பிகளும் வெகு காலம் பழகியவர்கள் போல ஒருவர்மீது ஒருவர் அன்பு பாராட்டி வந்தார்கள். ஆனால் அன்று காளிங்கனுடைய காதுகளில் விழுந்த அந்தச் சிற்பிகளுடைய வார்த்தைகள் அவனை வேறு மனிதனாக மாற்றிவிட்டன. சிற்பிகளின் உலகம் குணசேகரனுக்கு அடுத்தபடியாகத் தானே தன்னை மதிக்கிறது என்ற தாழ்வு உணர்ச்சி அவனுடைய நெஞ்சில் பொறாமைத் தீயை ஏற்றி வைத்தது.குணசேகரன் அற்புதமாகச் செதுக்கி யிருந்த மணிமேகலையின் உருவத்தைக் காளிங் கன் அலட்யமாக ஒரு பார்வை பார்த்தான். அந்தச் சிலை மிகவும் அழகாகத்தான் அவனுக் கும் தோன்றியது. ஆனால் அவன் மனதில் குமுறிக் கொண்டிருந்த பொறாமைக் கனல் அவ னுடைய கலைக் கண்களைக் குருடாக ஆக்கிவிட் டது. “இதைத் தானா இந்தப் பைத்தியங்கள் இவ்வளவு பிரமாதமாக சிலாகித்துப் பேசுகின்றன” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு ஒரு பெருமூச்செறிந்தான். 

அன்றைய சம்பவத்திற்குப் பிறகும்கூட, காளிங்கனும் குணசேகரனும் முன்போலவே சாதாரணமாகப் பேசிப் பழகி வந்தார்கள். சந்தர்ப்பங்கள் நேர்ந்தபோதெல்லாம் குணசேகரன் உண்மையாகவே காளிங்கனைப் புகழ்ந்து கொண்டுதானிருந்தான். ஆனால் இப்போது அவனுடைய வார்த்தைகள் முழுதும் வஞ்சகப் புகழ்ச்சியாகவே காளிங்கனுக்குத் தோன்றியது. இருந்தாலும் காளிங்கனுடைய பகுத்தறிவு “குணசேகரன் களங்கமற்ற உள்ளன்போடு தான் உன்னோடு பேசுகிறான். அவனை நீ வெறுக் காதே என்று சொல்லி வந்தது. குணமும், அன்பும் சம்பந்தப்பட்ட வரையில் குணசேகரன் அவனுக்கு ஒரு லட்சிய புருஷனாகவே விளங் கினான். கலை விஷயத்தில் மட்டிலும் குணசேக ரனைத் தன் ஜன்ம விரோதியாகவே தீர்மானித்து விட்டான் காளிங்கன். 

இதற்கிடையில் காளிங்கனுக்கு இன்னொரு தர்ம சங்கடமும் ஏற்பட்டது. அவனுடைய மகள் கலாவல்லி குணசேகரனது குணாதிசயங் களைப்பற்றி அவனிடம் புகழ்ந்து கொண்டிரு ந் தாள். காதல் தத்துவத்தின் முதல்படி இது என்பதைக் காளிங்கன் நன்றாக அறிந்து கொண்டான். கலாவல்லியைக் குணசேகரனுக்கு மணம் செய்து வைப்பதில் காளிங்கனுக்கு எவ் வளவோ திருப்திதான். அவன் சிற்பத் திறமை களைத் தன் வாழ்க்கை முழுதும் ரசித்து இன்பமடைய இந்த மணம் மிகவும் அனுகூலமாக இருக்கும். இவ்வாறு தான் காளிங்கன் வெகு நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தான். 

குணசேகரன் சிற்பக்கலையில் மட்டிலும் தனக்கு ஒரு படி கீழான தேர்ச்சியுள்ளவனாக இருந்திருந்தால், காளிங்கன் தன் மகளை அவ னுக்கு மணம்செய்து கொடுப்பதில் கொஞ்சம் கூடத் தயங்கமாட்டான். 

கலாவல்லியின் அழகிற்கும், கலை யறிவிற் கும் ஏற்ற மணவாளன் குணசேகரன் ஒருவனைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாதென்பதை யும் அவன் நன்றாக உணர்ந்திருந்தான். காளிங்க னுடைய மனதில் இவ்விதமாக ஒரு கடும்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. 

ஒரு நாள் நரசிம்மவர்மன் குகையின் நீர் மாண வேலையைப் பார்வையிட ஒரு பல்லக்கில் வந்திறங்கினான். சிற்பிகள் ஒவ்வொருவரும் தாங்கள் உயிர்கொடுத்துள்ள சிலா ரூபங்களைப் பலபல விதமாக அலங்கரித்து வைத்திருந்தார் கள். அரசன் ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே வந்தான். முதலில் காளிங்கனுடைய கந்தர்வன் சிலையைக் கண்டு உள்ளம் பூரித்தான். “காளிங்கா, அற்புதமாக இருக்கிறது நீ வெட்டி யுள்ள கந்தர்வன் சிலை. பல்லவர் காலத்துச் சிற்பங்கள் என்றென்றும் சிறந்து விளங்கும்படி செய்துவிட்டாய்” என்று சொல்லி மகிழ்ந்தான். ஒரு சிற்பிக்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்! 

அரசன் மேலும் நடந்தான். கவிஞர்கள் தங்களுடைய காவிய உலகில் மனித சமூகத்தின் லட்சியங்களாக சிருஷ்டித்துவிட்ட அநேக கதா பாத்திரங்களை அந்தச் சிற்பிகள் கல்லில் வடித்து வைத்திருந்தார்கள். தாங்கள் கொடுக்க நினைத் திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் அவர்கள் வார்த்திருந்த சிலைகளில் அப்படியப்படியே பதித்து விட்டார்கள். நரசிம்மவர்மனுடைய ரசிகத் தன்மைக்கு அவை ஒவ்வொன்றும் தனித் தனி ருசியுள்ள ஒரு விருந்தாகவே இருந்தது. 

கடைசியாக அரசன் குணசேகரனது சிலை யைப் பார்த்தவுடன், தானும் ஒரு சிலைபோலவே பிரமித்து நின்றுவிட்டான். மணிமேகலை அக்ஷய பாத்திரத்தோடு நின்றுகொண்டிருக்கும் காட்சி யைக் கல்லில் செதுக்கியிருந்தான் குணசேகரன். அவனுடைய மனோ உலகில் வெகுகாலமாக மணிமேகலையின் அருள் உருவம் வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தது. இன்று அதை அப் படியே யாவரும் கண்டு மகிழும் கல் உருவமாகப் பொறித்து வைத்துவிட்டான், பெண்மைக் குரிய அத்தனை அன்பும் அருளும் அந்த மணி மேகலையின் இன்ப முகத்திலே பிரதிபலித்து நின்றது. மணிமேகலை தன் வாழ்க்கை முழுதும் அறநெறியிலேயே நின்று தன் லட்சியத்தை அடைந்தவள் என்ற உள் உணர்ச்சியும் அந்தச் சிலையின் முகபாவத்தில் தொனித்தது. 

கவியின் கற்பனை உருவை இவ்வளவு அழகுடன் கல்லில் செதுக்கிக் காட்டிவிடக்கூடு மென்று அரசனால் நம்பமுடியவில்லை. குணசேகரன் அடக்க ஒடுக்கத்துடன் அரசனுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான். காளிங்கனும் சற்று தூரத்தில் நின்று நடப்பவைகளைக் கவனித் துக்கொண்டிருந்தான். அரசன் குணசேகரனுடைய சிலையைப் பார்த்து ரசிக்க, காளிங்கனு டைய பொறாமைத் தீ கொழுந்துவிட்டுப் பரவ ஆரம்பித்தது. 

“குணசேகரா! சிற்பக்கலையின் உச்சி நிலையை அடைந்துவிட்டாய் நீ. துவரை நான் இதற்கிணையாகச் சொல்லக்கூடிய சிலை ஒன்றைக் கூடக் காணவில்லை” என்று சொல்லிய அரசனு டைய வார்த்தைகள் காளிங்கனுடைய நெஞ்சில் விஷம்தடவிய கூரிய அம்புகளாகவே வந்து பாய்ந் தன .குணசேகரனுக்கு வெகுமதியாகக் கொடுப் பதற்கென்று நரசிம்மவர்மன் தன் முத்துமாலை யைக் கழட்டும்போது, காளிங்கன் அதைக் காணப் பொறாதவனாய், அங்கிருந்து புறப்பட்டுவிட்டான். குணசேகரனை இவ்வாறு பெருமைப்படுத்துவத னால், மற்றச் சிற்பிகளும் அதிக ஊக்கத்தோடு தங்கள் திறமைகளைக்காட்ட முயற்சிப்பார்கள் என்று அரசன் எண்ணினான். ஆனால் அரசனுடைய இந்த எண்ணம் மற்றச் சிற்பிகளின் உள்ளங்களில் மனப்பூசலையே தூண்டிவிட்டது. இதை உணராமலே அவன அரண்மனைக்குச் சென்றுவிட்டான். 

மன்னன் அளித்த பரிசைப் பெற்றுக் கொண்ட குணசேகரன், சிறிதேனும் கர்வமடையாமல், தன் நண்பர்களிடம் காண்பித்து “அரசன் இதை நம் எல்லோருக்கும் பொது வாகவே கொடுத்திருக்கிறான். நமது கலையைப் பாராட்டும் ஒரு சிறந்த ரசிக சிகாமணியை நாம் அடைந்திருப்பது நமது பாக்கியம்தான். ஒன்றுகூடி நமது கலையை வளர்ப்பதற்கும் அதனால் நாம் ஆனந்தமடைவதற்கும் அரிய சந்தர்ப்பத்தை நரசிம்மவர்மப் பல்லவன் நமக்கு அமைத்துக் கொடுததிருக்கிறான். இன்று அவன் என்மீது பிரியம்வைத்து இந்த முத்துமாலையை வழங்கினான். நாளை உங்களில் யாருக்காவது ஒரு ரத்தின மாலையைப் பரிசாகக் கொடுக்கலாம். ஆகையால் இந்த பாராட்டுதல்களும், பரிசுகளும் சிற்பக் கலைக்கே செல்கிறது” என்று ஒரு குழந் தைபோல அவர்களோடு பேசி மகிழ்ந்தான். 

குணசேகரனின் களங்கமற்ற உள்ளம் அங்கிருந்த அவனுடைய நண்பர்களின் மனப் பூசலை உடனே அவித்துவிட்டது. காளிங்கனைப் போய்க் காணவேண்டுமென்று குணசேகரன் அங்கிருந்து புறப்பட்டான். 

காளிங்கன் தன் வீட்டின் ஒரு மூலையில் மிகுந்த ஆலோசனையோடு உட்கார்ந்திருந்தான். குணசேகரன் கையில் முத்துமாலையோடு வருவ தைக்கண்டு தன் நிலைமையைச் சமாளித்துக் கொள்ள முயன்றான் காளிங்கன். உணர்ச்சி பாவங்களை நன்றாக உய்த்துணரும் சக்தி வாய்ந்த குணசேகரனுக்குக் காளிங்கனுடைய மனோநிலை புரியாமல் இல்லை. தன்னால் இயன்றவரை அவனை மகிழ்விக்க முயன்றான். காளிங்கன் உணர்ச்சியற்ற தலை அசைப்புகளின் மூலம் குண சேகரனுக்குப் பதிலளித்து வந்தான். அதோடு திடீரென்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கலா வல்லியின் கலியாணப் பேச்சையும் அடிக்கடி கொண்டுவந்து புகுத்தினான். அந்தக் கவலைதான் தன்னை மிகவும் வாட்டி வருகிறதென்றும் அவளைக் குணசேகரன் மணந்து கொள்ளவேண்டு மென்றும் சொன்னான். 

குணசேகரன் இதைக் கேட்டதும் ஆனந்த பரவசனாகிவிட்டான். “கலாவல்லி எனக்குக் கிடைக்க முடியாத ஒரு பாக்கியம் என்று எண்ணியிருந்தேன். என்னுடைய வெகுநாளைய இன்பக் கனவு இப்பொழுது நனவாக ஆகி விட்டதைக் கண்டு எல்லையில்லாத ஆனந்த மடைகிறேன். அரசன் தந்த முத்துமாலையை விட ஆயிரம் மடங்கு மேலானது நீங்கள் கொடுக்கப்போகும் கன்னிகாதானம். இதனால் என் வாழ்க்கையே புனிதமடைந்தது” என்று
தான் உணர்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்தான். 

சிறிதுநேரம் கழிந்தது. காளிங்கன் திரும்ப வும் தன் மகளிடம் வந்தான். “பெண்ணே, நீ எனக்காக ஒன்று செய்யவேண்டும். குணசேக ரன் உன்னை மணந்துகொண்டதும், எப்படியா வது தந்திரமாக அவனிடம் நீ ஒரு வாக்குறுதி வாங்கிவிடவேண்டும்….அதாவது இனிமேல் உளி பிடித்துச் சிலை செதுக்குவதில்லையென்று அவன் வாக்களித்து விடும்படி நீ செய்ய வேண்டும் என்றான். காளிங்கன் இப்படிக் கூறியபோது அவள் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. தன் தந்தை கலைவெறியில் ஏதோ சொல்கிறார். நாளடைவில் அந்த வெறி தணிந்து விடும் என்று எண்ணி அவள் மெளனமாக இருந்தாள். 

ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக காளிங்கன் இதைப்பற்றி அவளிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்தான். தன் தந்தைக்காக அவள் இந்தக் கடமையைச் செய்துவிடுவாள் என்று அவன் நம்பியிருந்தான். 

குறிப்பிட்ட நாளில் கலாவல்லியின் கலியா ணம் சிறப்பாக நடைபெற்றது. சில நாள் வரை காளிங்கன் கலகலப்பாகவே இருந்தான். தனது வ வஞ்சக சூழ்ச்சி தன்மகள் மூலமாக நிறைவேறும் நாளை அவன் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண் டிருந்தான். ஆனால் கலாவல்லி குணசேகரனைப் பற்றிவெகுநாள்வரை ஒருவிதத் தகவலுமே தெரி விக்காமல் இருந்துவிட்டதால் காளிங்கன் பொறு மையை இழந்துவிட்டான். ஒருநாள் குணசேகரன் வீட்டில் இல்லாத சமயம் பார்த்துத் தன் மகளைக் காணச்சென்றான் காளிங்கன். மகள் செய்த உபசாரங்களை யெல்லாம் கவனிக்காமல் கலா,நான் உன்னிடம் கேட்டுக்கொண்டபடி குணசேகரனிடம் வாக்குறுதி வாங்கிவிட் டாயா?” என்று அவளிடம் கேட்டான். 

“அப்பா, என்னால் இந்தக் காரியத்தைச் செய்யமுடியவில்லை. இதை அவரிடம் சொல்வ தற்காக வாயெடுக்கும் போதெல்லாம் 6 எனக்கு உடம்பு பதறுகிறது. தலை சுழல்கிறது. கண்கள் இருண்டுவிடுகின்றன. இரண்டொரு தடவை முயற்சித்தபோது நான் மயக்கம் போட்டே விழுந்து விட்டேன். அப்பா ! இவ்வளவு கொடிய விஷம்போன்ற எண்ணத்தை என் மனதில் வைத்திருக்கவே உடம்பு கூசுகிறது. விஷத்தை விடக் கடூரமான அந்த எண்ணத்தை இப்பொ ழுதே என் மனதிலிருந்து எடுத்து எறிந்துவிட் டேன். அப்பா, தங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், இனிமேல் நீங்கள் இதைப்பற்றி மட்டிலும் என்னிடம் பேசவேகூடாது” என்றாள் கலாவல்லி. அதற்குமேல் காளிங்கன் அவளிடம் ஒன்றுமே பேசவில்லை. விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டான். 

காளிங்கன் நம்பியிருந்த சூழ்ச்சி, இப்படி வியர்த்தமானதை நினைத்தபொழுது, அவன் மனதில் குமுறிக் கொண்டிருந்த பொறாமைத் தீ ஜவாலையுடன் தகிக்க ஆரம்பித்தது. தலையைக் கவிழ்ந்த வண்ணமாகவே வீதி வழியாக வந்து கொண்டிருந்தான். அவனுக்கெதிரே குணசே கரன் வெகு தூரத்தில் வந்து கொண்டிருந்தான். அவனைக்காண விரும்பாமல் வேறு வழியாகச் சென்று தன் வீட்டை அடைந்தான் காளிங்கன். குணசேகரனுடைய சிற்பத்திறமையை எவ்வாறு ஒழிப்பது என்ற ஒரே சிந்தனையில் அவன் மூழ்கியிருந்தான். அவன்கை உளி பிடித்து சிற் பங்கள் செதுக்கும்போது மனம் மட்டிலும் சதா இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்து. அந்தச் சமயத்தில் அவன் செதுக்கிய சிலைகளி லெல்லாம் அவனுடைய இந்தக்கோர எண் ணமே பிரதிபலித்து நின்றது. தன்கோர எண் ணத்தின் சொரூபங்களைக் கல்லில் பார்க்கப் பார்க்க அவற்றின் மீது அவனுக்கு அளவில்லாத வெறுப்பு உண்டாயிற்று. அவைகளை யெல்லாம் உடைத்தெறிந்து தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான். ஆனால் அவனுடைய உள்ளத்தில் அனல் வீசிக்கொண்டிருந்த பொறாமைத் தீயின் உக்கிரம் வரவர அதிகரித்து வந்தது. 

ஒரு நாள் அந்தி மயங்கும் வேளை. சிற்பிகள் யாவரும் போனபின்பு, காளிங்கனும் குண சேகரனும் குகை வாசலில் வெகுநேரம் வரை உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். குகையின் வாசலில், நரசிம்மவர்மனின் வெற்றி களைக் குறிக்கும் ஐயஸ்தம்பம் ஒன்று நாட்டுவதற் காக இரண்டாள் ஆழமுள்ள ஒருகுழி வெட்டப் பட்டிருந்தது. அதனருகில் பால்போன்ற நில வொளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இரு சிற்பிகளும் நடு இரவு ஆகிவிட்டதைக் கவனிக் காமல் சம்பாஷணைகளில் லயித்திருந்தார்கள். 

திடீரென்று காளிங்கனின் சுண்டு விரலில் கிடந்த நாகமுத்திரை மோதிரம் அருகிலுள்ள குழியினுள் உருண்டு விழுந்து விட்டது. இரு வரும் பரபரப்புடன் குழியின் அடியில் பார்த் தார்கள். சந்திரனின் ஒளியில், குழிக்குள் கிடந்த மோதிரத்திலுள்ள வைரம் சுடர்விட்டுப் பிர காசித்தது. அதைப் பார்த்ததும் குணசேகரன், ஆத்திரப் படாமல் “மாமா, மோதிரம் கிடப்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது. நான் உள்ளே இறங்கி அதை எடுக்கிறேன். பிறகு நீங்கள் உங்களுடைய மேல்வேஷ்டி யைப் பள்ளத்தினுள் தொங்கவிட்டால் நான் அதைப் பிடித்துக் கொண்டு எளிதாக மேலே வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டுக் குழியினுள் இறங்கினான். 

குழியினுள் இறங்கிய குணசேகரன் மோதி ரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மேலே பார்த்தபொழுது, உடைபட்ட சிலைஒன்று அவன் தலைக்கு நேராக உருண்டு வந்துகொண்டிருந்தது. “ஐயோ” என்ற ஒரே குரல்! பின்பு ஒரு வினாடி அந்தப் பிராந்தியம் முழுவதிலும் அமைதி நிலவி யது. குகை வாசலில் நின்ற காளிங்கன் என்று மில்லாதபடி “கடகட” வென்று சிரித்தான். அவன் வெகுகாலமாக முயன்றுவந்த சூழ்ச்சி இன்று பலித்துவிட்டது. 

தான் செதுக்கியிருந்த கந்தர்வன் சிலையின் அருகில் போய், “கந்தர்வா, சொல்! இனிமேல் யாருடைய சிலைகள் முதன்மை ஸ்தானம் பெறும்?” என்று எக்களித்தான். வெகுகால மாகத் தீவிரமான போரில் ஈடுபட்டு வெற்றி யடைந்த ஒரு வீரனைப்போல வெற்றிக்களிப் போடு அவன் தன் வீட்டை நோக்கிச் சென் றான். தன் கணவன் ஏன் இன்னும் வீட்டுக்கு வீரவில்லை யென்று காளிங்கனிடம் கேட்பதற் காகக் கலாவல்லி அங்கே வந்திருந்தாள். நெற்றி யில் குங்குமத்துடன் விளங்கிய தன் மகளைக் கண்டவுடன், அவளுக்கு நேரவிருக்கும் வைதவ் யக்கோலம் அவன் மனதைச் சவுக்கு கொண் L ட்டித்தது. ஏதோ ஒன்று தன் இதயத்தைக் குத்திவிட்டது போல “அம்மா!” என்று அலறி னான். கீழே சாய்ந்துவிட்டான். 

குண சேகரன் குகை வாயிலுள்ள குழியில் வழுக்கி விழுந்து, அதே சமயத்தில் ஒரு கல்லும் அவன் மேல் விழுந்து அதனால் அவன் இறந்து விட்டான் என்ற செய்தி மறுநாளே நாடெங்கும் பரவி விட்டது. சிற்பிகளின் தலைவனாக விளங்கிய குணசேகரனுக்கு நேரிட்ட மரணத்தைக் கேட்டு நரசிம்மவர்மன் தனது உயிரையே இழந்து விட்டதுபோலத் துடி துடித்தான். 

காளிங்கன் வெகுநாள்வரை படுக்கையை விட்டு எழுந்திருக்கவே யில்லை. தனக்கு அருகி லிருந்து ஆறுதலளித்து வந்த தன் மகளின் “புதுக் கோலத்தை ‘க் காண அவன் மனம் நரகவேதனை அடைந்தது. 

காளிங்கனைக் கொண்டாவது குகைச்சிற்பங் களைப் பூர்த்திசெய்துவிட வேண்டுமென்று அரசன் எண்ணினான். அவன் நோய் வாய்ப் பட்டிருப்பதை அறிந்து, தானே அவனை நேரில் காண்பதற்காகச் சென்றான். காளிங்கன் இருந்த நிலைமையைக் கண்டதும், அவன் தன் மருமகனை இழந்துவிட்ட அதிர்ச்சியினால் அவ்வாறு உருக் குலைந்து விட்டான் என்று அரசன் நினைத்துக் கொண்டான். ஆகவே அரசன் அவனுக்குப் பலவிதத்தில் ஆறுதல் கூறிவிட்டு அரண்மனைக்குத் திரும்பினான். 

இரண்டு மாதங்கள் ஓடி மறைந்தன. கலா வல்லியின் இடைவிடாத ஆதரவினால் காளிங் கன் குணமடைந்து எழுந்தான். ” குகையில் வெகு துரிதமாகச் சிற்பங்கள் செதுக்கப்பட வேண்டும்” என்று அரசன் அவனுக்கு ஆக்ஞை யிட்டான். 

காளிங்கன் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு குகைவாசல் வரை சென்றான். உளியை எடுத்தவுடன் கைகள் ‘கடகட’ வென்று ஆட ஆரம்பித்தன. உளியைக் கீழே நழுவ விட்டுவிட்டான். உடம்பின் ஆட்டமும்  உடனே நின்றுவிட்டது. “இனி நான் உளி பிடித்துச் சிலை செதுக்கவே முடியாது. முடியவே, முடியாது. ஆமாம், என் வஞ்சக எண்ணத்திற்கு, என் கைத்திறமையைப் பலியிட்டுவிட்டேன். இனிமேல் நான் உளி பிடித்துச் சிலை செதுக்கவே முடியாது.  முடியாது” என் என்று உரக்கக் கத்திக்கொண்டே மலையின்மேல் தாவிக் குதித்து ஓட ஆரம்பித்து விட்டான். 

அதன்பின்பு அந்தப் பைத்தியத்தை ஒரு வருமே காணவில்லை. எங்கோ சென்று தன் முடிவைத் தேடிக்கொண்டு விட்டான். 

இரண்டு அரிய சிற்ப மணிகளை இழந்து விட்ட நரசிம்மவர்மனின் மனம் உடைந்துவிட் டது. குகை வேலையை இதோடு நிறுத்திவிடுங்கள். ஆரம்பத்திலேயே சிற்பிகளைப் பலிவாங்கும் அந்தக் குகை தோன்றவே வேண்டாம்” என்று கோபத்துடன் உத்திரவிட்டுவிட்டான். பல்லவ மன்னனின் மனதில் உருவெடுத்த சிற்பக் குகை, நிர்மாணத்தின் ஆரம்பத்திலேயே விபரீதமாக முடிந்துவிட்டது. 

திருச்சி மலைக்கோயிலின் அருகிலுள்ள பல்லவர் குகைச் சின்னங்கள் பார்ப்பவர்கள் மனதில் பலவிதக் கற்பனைகளைத் தூண்டிவிட்டுக் கொண்டு இன்னும் நிலைபெற்று நிற்கிறது.

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *