காருண்ய காண்டம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 2,660 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆவணித் திங்களில் நன்நாளாம் ஒரு ஞாயிற்றுக் கிழமை. ஞாயிற்றுக்கிழமை அதுவும் ஆவணி ஞாயிறு ஆயிற்றே. வேறு சொல்லவும் வேண்டுமா என்ன! ‘செல் வந்த’ பிரதேசமான வடமாராட்சிப் பிராந்தியமே ஒரு சோபையுடன் துலங்குவதை நிதர்சனமாகக் காணலாம். 

அண்மையில் உள்ள ஊர்களான வல்வெட்டித்துறை, மயிலிட்டி. உடுப்பிட்டி, பொலிகண்டி, வியாபாரிமூலை, அல்வாய், கரவெட்டி, கரணவாய். துன்னாலை, புலோலி, அடங்கலான பிரதேசத்தில் பாதையெங்கும் சாரி சாரியாகப் பக்த கோடிகளின் படையெடுப்பு. இப்பொழுது எல்லாம் ஆண்கள் மட்டும் என்ன பெண்களுமே துவிச்சக்கரவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களிலும் ஆசை அருமையாக “மோட்டார் கார்” களிலும் வல்லிபுரத்தாழ்வாரைத் தரிசிக்கக் கூட்டம் அலைமோதும். இதில் கணினியுகக் கதாநாயகர்கள், வாலிபரை வலைவீசவென்றே வரும் சிலுக்கு வகைத் தேவதைகள்… அப்பப்பா இதைக் காணக் கண்கோடி வேண்டாமோ! 

அன்று பெரும்பாலானோர் வயது வித்தியாசமின்றி விரதம் நோற்பார்கள். வல்லிபுரத்தானுக்கு நேர்த்தி வைத்து பொங்கல் இடுவார்கள். நாள் நட்சத்திரம் நன்றாக அமைந்தால் திடீர்த் திருமணங்களும் அரங்கேறுவதுண்டு. ஏன் ஊர்க்கல்யாணத் தரகர்கள் கூட தாங்கள் ஒழுங்கு செய்யும் வரன்களுக்கு பெண் பார்க்கும் படலங்கள் கூட இரகசியமாகவும், சாமர்தியமாகவும் நடாத்தி முடித்து விடுவதுமுண்டு. ஆனால், மாதவனின் விருத்தாந்தமே வேறு. அவனது பெற்றோர் நீண்ட காலம் பிள்ளைச் செல்வம் இல்லாது வல்லிபுரத்தானுக்கு நேர்தி வைத்து தவம் கிடந்து பெற்ற பிள்ளை என்பதால் அவனுக்கு மாதவன் என்று நாமகரணம் சூட்டியது மட்டுமின்றி அவனையும் ஒரு வல்லிபுர மாயவனின் விசுவாசியாகவே வளர்த்து விட்டுப்போய் விட்டனர். 

மாதவன் இப்போது ஓர் திறமைமிக்க கார். துவிச்சக்கர வண்டி மெக்கானிக். எத்தனை வேலையிருந்த போதும் ஞாயிற்றுக்கிழமை என்றால் விடுமுறைதான். காலை எழுந்ததும் குளிக்காமலே கோயிலுக்குப் புறப்பட்டுவிடுவான். கோயிலில் தான் குளிப்பு. இதற்கென்றே மாற்று உடுப்பும் வாளியும் கொண்டு வருபவர் எத்தனை பேர். குருக்காட்டுப் பிள்ளையார் கோயிலின் பின்னால் உள்ள குளத்தின் அந்தச் சீதள நீரில் ஆசை தீரக் குளிப்பதில் தான் என்ன சுகம். அது சொல்லில் வடிக்க முடியாத சுகானுபவம். அதற்கென்றே முண்டியடித்துக் கொண்டு வந்து வாளிக்கு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பவரைப் பார்க்க வேண்டுமே. 

மாதவன் காலை ஏழு மணிக்கெல்லாம் குளத்தடியில் பிரசன்னமாகி விட்டான். ஆற அமர முண்டி அடிக்கும் இளவட்டங்களுக்கெல்லாம் இடம் கொடுத்து பராதிப்படாது குளித்து அருகில் அருகில் உள்ள விநாயகரை வணங்கி பாதையைக் கடந்து வல்லிபுர ஆலய முன்றிலை அடைந்தான். கோயிலைச் சுற்றி கிழக்கில் இருந்து வந்த அகதிகளின் கூட்டம் அதிகம் தான். 

நல்லவேளை, பூஜை ஆரம்பமாகும் நேரம் வந்து விட்டதில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, ஆராதனை எல்லாம் முடித்து பூசகர் அர்ச்சனைத் தட்டுடன் வந்தார். மடியில் இருந்து பத்து ரூபாெையடுத்த மாதவன் ஏனோ ஒரு பொறிதட்ட மனம் மாறி கையது திசை மாறி அங்கு சுவரருகில் ஏழ்மையே உருவாக நின்ற ஒரு வயோதிபனின் கையில் திணித்துவிட்டுப் போய் இலுப்பை மரநிழலில் சிறிதுநேரம் இளைப்பாறினான். 

அகன்ற மணல் வெளி கடந்து அகோரமாய் வீசிவரும் அனல் காற்று சவுக்கு மரத்தோப்பினைத் தழுவி, உயர் பனை மரங்களை உரசி இலுப்பை மரங்களுடன் இரகசியம் பேசி ஜில் லென்று பரவ அதன் இன்பலயிப்பில் மெய்மறந்து முன்பெல்லாம் என்னமாய் இந்தக் கோயில் சூழலில் இருந்து விளையாடி.உறங்கிக் களித்த நாட்கள் எத்தனை! எல்லாம் பொய்யாய், பழங்கதையாய். கற்பனையாய்… இப்போதெல்லாம் அப்படி ஆசுவாசமாக இருக்க முடிகிறதா… ஒரு நீண்ட பெருமூச்சை உதிர்த்த மாதவன் ‘சடாரென எழுந்தான். நேரம் பத்து மணிக்கு மேல்… இனி வீட்டிற்குப் போய் எதாவது உண்டு… ஓ எத்தனை வீட்டு வேலைகள் தலைக்குமேல் கிடக்கின்றன. 

கடையில் என்ன கண்டறியாத வருமானமா கொட்டிக்கிடக்கிறது. ஏதோ கண்ணியமாகக் கிடைக்கும் அல்ப வருமானத்தில் தானே அவன் மனைவி தறுதலை என்ற பெயர் பெற்ற ஏக புத்திரன் மாயவன் எல்லோரும் வயிறு கழுவவேண்டும். விரலுக்கு ஏற்ற வீக்கம். கடையில் கிடைக்கும் சராசரி மூவாயிரம் ரூபாவில் தான் இந்த மூன்று ஜீவன்களுக்கும் என்ன பெரிதாக செய்து விட, கரைத்துக் குடிக்கிற கையறு நிலைதான். 

எழுந்து துவிச்சக்கர வண்டியை எடுத்தவன் சக்கரத்திற்கும் நோகாமல், காலுக்கும் நோகாமல் நிலத்திற்கும் நோகாமல்…

இதென்ன சைக்கிள் ஓட்டம். மெதுமெதுவாக… தெரிந்தவர்களும், நண்பர்களும் பச்சைத் தண்ணீர்’ என்று பட்டப் பெயர் சூட்டியதும் பொருத்தம்தான் போலும். 

துவிச்சக்கர வண்டி பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கிறது. மந்திகைக்குத் திரும்பும் ‘கொத்தராட்டி’ சந்தியையும் தாண்டி அசைந்து அசைந்து… இனி ஆனைவிழுந்தான் மயானம். பல்லப்பைச் சந்தி. வராத்துப்பளை, கற்கோவளம், தும்பளை, பருத்தித்துறை. அதிகமாக இராணுவம் உபயோகிக்கும் வீதி என்பதாலோ என்னவோ பாதை நன்கு திருத்தப்பட்டு சைக்கிள் ஓட்டுவதில் அத்தனை சிரமம் முன்பு போலில்லை. 

ஆனைவிழுந்தான் மயானத்தை அண்மித்தவன் எதையோ அவதானித்வனாகத் துவிச்சக்கர வண்டியைச் சடாரென பிறேக் போட்டு நிறுத்தினான். அருகில் இருந்த பனங்கொட்டு ஒன்றில் சைக்கிளைச் சாய்த்து நிறுத்தி விட்டு பற்றைகளினூடாகப் பதனமாக மெல்ல மெல்ல அடி வைத்து நெருங்கிப் பார்த்தால்… ஒரு மாட்டுக்கன்று. இந்த மரணம் மலிந்த பூமியில் ஜனித்த சில மணித்தியாலங்களே ஆகியிருக்கும் போல் தொப்பிள் கொடி அறுந்த நிலையில் ஈன்று போட்டு விட்டு இந்தக் கொடிய தாய்மாடு எங்கே தான் ஏகிவிட்டது. கால் குரைகள் கூட வெட்டப்படாத நிலை… 

அவன் மனதுக்குள் மாட்டுக் சொந்தக்காரரை வைதவாறே நல்ல வேளையாக மடியில் திறப்புக் கோர்வையுடன் இருந்த சிறிய கத்தி கொண்டு கால் குரை வெட்டி எடுத்து, எங்கோ தூரத்தில் இருந்த கிணற்றில் நீர் மொண்டு சுத்தி செய்து அருகில் இருந்த காவோலை ஒன்றில் கிடத்தி வாஞ்சையுடன் நீவி விட்டான். 

இதன் தாயைத் தேடிய அதனிடம் இதை ஒப்படைக்க வேண்டும். சுற்றும் முற்றம் பார்வையை ஓடவிட்டான். சற்றுத் தூரத்தே நின்ற ஒரு பசுவைக் கண்டு அதனருகில் செல்ல முயற்சித்தான். அது இவனைக் கண்டதும் தூர இன்னும் தூர… மிகமிகத்தூர அரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இதனை ஈன்ற மாடு இரு தானோ என்று கூடத் தெரியவில்லை. தாய் மாடு தேடி வரும் என்று சமாதானம் செய்து கொண்டு போகவும் மனது ஒப்பவில்லை. இந்த நிலையில் விட்டுச் சென்றால் வெறிநாய், நரிகளோ, காகம், கழுகுகளோ இதற்கும் ஏதும் ஊறுவிளைவித்து விடுமோ என்ற அவனின் ஏழை மனம் விசனித்தது. கன்றின் அருகில் வந்து பழியாய்க் கிடந்தான். இடைக்கிடை அதன் மிருதுவான உடலை நீவி விட்டபடி. 

நேரமோ இப்போது ஒரு மணி, கோயிலிருந்து போவோரும் வருவோரும் ‘இதென்ன ஒரு பைத்தியம்’ என்பது போல் இவன் மீது ஒரு நக்கல் பார்வையை நழுவ விட்டபடி அகன்று சென்றனர். 

ஆவன் அசைந்தால்தானே, காலை வேளையே வெறும் வயிற்றுடன் தலை தோய்ந்து விரதம் இருக்கும் உடம்பு, பசிக்களை, தலை தட்டாமாலை சுற்றிற்று. ஆனாலும், அந்தப் பசுவின் கன்றை அந்த நிலையில் விட்டுப்போக மனம் இசையவில்லை. ஒரு காவோலையை எடுத்துப் போட்டு அதன் மீது மெலிதாகச் சாய்ந்து படுத்தான். 

“காலம்பற வீட்டை விட்டுக் கிளம்பின மனுக்ஷன் நேரம் நாலு மணியாகிப் போச்சு…? “ மனம் அலைமோதிக் கொண்டிருக்கிறாள் மனைவி லட்சுமி. “இந்தத் தறுதலை வாலையும் காணவில்லை. நிண்டால் ஒருக்கால் விட்டுப் பார்ப்பிக்கலாம்” என்று அங்கலாய்த்தவள் படலையடியில் போய் வீதியை நோட்டம் விட்டபடி நின்றாள். 

அவளுக்கு சாப்பிட மனம் இல்லை. அவன் என்றாள் அவளுக்கு உயிர். அவனுக்கும் அப்படித்தான், வாய்த்தது என்னவோ வறுமை வாழ்க்கை தான்… 

அன்றாடம் காய்ச்சி சீவியம் தான். எனினும் அன்பு, பாசம், கடமை, கருணை. கண்ணியம் இவைகளுக்குள் சிக்குண்ட சீரிய வாழ்க்கை அது. அவன் மனம் கோணாது. அவளும் அவள் மனம் கோணாது இவனும்… 

அவனின் குணம் ஒன்றுதான் அவளுக்கு அத்தனை பிடிபதில்லை. பிற உயிர்கள் என்றால் அதுவும் மிருகங்கள் மேல் அதீத அன்பும் அக்கறையும், கருணையும், கரிசனையும் காட்டும் இவனின் காருண்யம். 

சாப்பிட வழியில்லை என்றாலும் வீட்டில் உள்ள செல்ல நாய் வீரனுக்கம் செல்லப்பூனை “பூசிக்கும் உணவு கொடுத்து விட்டுத்தான் மறு வேலை. அவனுக்கு ஒரு செல்லப் பிராணி ஆட்டுக்குட்டியும் இருந்தது. ஆதைக்கட்டி வைத்து வளர்க்க மாட்டான். அது துள்ளித்துள்ளி மே….மே… என்று அனுங்கிக்கொண்டு ஓடி தத்தித் தத்தி விளையாடுவதில் தனி இன்பம் காண்பான் அவன். லட்சுமி ஆசையோடு பார்த்துப் பார்த்து வளர்க்கும் பூ மரங்களையும் நன்னி. நன்னிக் கடித்து நாசமாக்கி விட்டாலும் அதை ஒரு குறும்புச் சிரிப்புடன் ஆமோதித்துக் குட்டியை நீவி விடும் போது அவளுக்குப் பற்றிக் கொண்டு வரும். லட்சுமிக்கு வயிற்றைப் பிசைந்து என்னென்னவோ செய்தது. பசி ஒரு பக்கம். ஆளைக் காணோமே என்ற ஏக்கம் ஒரு புறம். அடையாள அட்டையைத் தவறவிட்டு “ஆமி’ பிடிச்சு வைச்சிருக்குதோ என்று உள்ளுக்குள் புகைந்தவாறே அவள். 

அறிதுயிலில் அயர்ந்து போய்க் கிடந்த மாதவனுக்குத் திடீரென விழிப்புக் கண்டது. “சீ!” அதுக்கிடையில் ஒரு கண்டறியாத உறக்கம்..” என்று தனக்குத்தானே முனகிக் கொண்டு நேரத்தைப் பார்த்தால் மாலை ஐந்து மணி! “ஐயொ! கன்றின் நிலைமை எப்படியோ?” எனப்பதறியவாறே கன்று கிடந்த திக்கை நோக்கி நோட்டம் விட்டான். 

என்ன ஆச்சரியம்! 

தாய்ப்பசு கன்றை நக்கியபடி பால் கொடுத்துக் கொண்டிருந்தது. கன்று நிற்கக் கூடத் திராணியற்று தளர் நடை போட்டபடி தாய்ப்பசுவின் அசைவுகளுக்கு ஈடுகொடுத்து முலைக் காம்பைப் பிடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி பால் குடிக்க எத்தனிப்பதைத் தன்னையே மறந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். 

சில நிமிட நேரம் காத்துக் கொண்டிருந்தான. சில கணங்களின் முன் தடுமாறிய அந்தக் கன்றுக்குட்டி ஒரு தேர்ந்த அனுபவஸ்தன் போல் என்ன லாவகமாகத் தாயின் மடியை இடித்து இடித்து பால் அருந்துவதும் தாய் கன்றை நக்கி மோந்து கொடுப்பதுமாய்…. இப்போது அவனுக்கு தண்ணீர் விடாயும், பசிமயக்கமும். மெல்ல எழுந்தது. துவிச்சக்கர வண்டி நிறுத்திய இடத்துக்குச் சென்றான். வண்டியை உழக்கி வீட்டுக்குப் போய் சேரமுடியாத உடல் நிலையிலும் மனத்திருப்தியும், அமைதியும் வீட்டுக்குக் கொண்டுபோய்சேர்க்கும். 

– தினக்குரல், 05 ஆவணி 2001.

– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *