காதுக் கடுக்கனைத் திருடியவன்
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 15
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணிவண்ணன் என்பவர் ஒரு வியாபாரி தொழிலில் நல்ல இலாபம் வந்தபடியால் வைரக் கடுக்கன்கள் செய்து இரண்டு காதுகளிலும் போட்டுக் கொண்டார்.
ஒரு நாள் வியாபார நிமித்தமாக அவர் வெளியூர் செல்ல வேண்டி நேரிட்டது. இரவு வெகு நேரமாகி விட்டதால் அங்குள்ள சத்திரத்தின் திண்ணையில் படுத்துக் கொண்டார். அவ்வாறு படுக்கும்போது அவர் ஒருக்களித்தவாறு படுத்திருந்தார். அவருடைய இடது காது தரையிலும், வலது காது மேற்புறமாகவும் இருந்தது.
மணிவண்ணனுக்கு எதிரே ஒரு வழிப் போக்கன் படுத்திருந்தான். அவன் மணிவண்ணனின் வலது காதில் மின்னும் வைரக் கடுக்கனைப் பார்த்து விட்டான். அவன் மிகவும் பொல்லாதவன்.
மணிவண்ணன் நன்றாக தூங்கியதும் அவருக்கு எதிரே படுத்துக் கொண்டிருந்தவன் மெல்ல எழுந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.
எல்லோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டதும் மெதுவாக மணிவண்ணனின் வலது காதிலி ருந்த கடுக்கனைக் கழற்றித் தனது இடது காதில் போட்டுக்கொண்டு முன் போலவே அவர் எதிரில் படுத்துக் கொண்டான்.
காலையில் விழித்து எழுந்த மணிவண்ணன் தனது வலது காதில் கடுக்கன் இல்லாததைக் கண்டார்.
எதிரே படுத்திருந்தவனது இடது காதில் தன்னு டைய வைரக் கடுக்கன் இருந்ததைக் கண்டார்.
“திருட்டுப் பயலே, என்னுடைய கடுக்கனைத் திருடிக் கொண்டு என் எதிரிலேயே படுத்திருக்கிறாயே?” என்றார் மணிவண்ணன்.
திருடனோ, “யாரைப் பார்த்துத் திருடன் என்கிறாய். நீதான் என் காதில் இருந்த ஒரு கடுக்கனைத் திருடி உன் காதில் போட்டுக் கொண்டிருக்கிறாய். நீதான் திருடன். வா, மரியாதைராமனிடம் செல்வோம்” என்று கூறியவாறு மணிவண்ணனை அழைத்துக்கொண்டு மரியாதை ராமனிடம் சென்றான்.
மணிவண்ணனுக்கோ தன் காதுக் கடுக்கனில் ஒன்று போனதுமல்லாமல் தன்னையே திருடனாக்கி விட்டானே என்று வருத்தம் ஏற்பட்டது.
இவர்களுடைய வழக்கைக் கேட்ட மரியாதைராமன், “நீங்கள் இந்த மாதிரி ஒருவரையொருவர் திருடன் என்று கூறுவதில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் இருவரும் சத்திரத்தில் எவ்வாறு படுத்தீர்களோ அதைப் போல இங்கு படுத்துக் காட்டுங்கள்” என்றான்.
இருவரும் எதிரும் புதிருமாக ஒருக்களித்துப் படுத்திருந்தனர்.
அப்பொழுது மணிவண்ணன் இடது காது தரையில் இருந்தது. திருடனது இடது காது மேலே இருந்தது. அந்தக் காதில் கடுக்கன் இருந்ததையும், மேல் புறமாக இருந்த மணிவண்ணனின் வலது காது காலியாக இருந்ததையும் மரியாதைராமன் கண்டான்.
மணிவண்ணனின் மேல் புறமாக உள்ள வலது காது காலியாக இருந்தது. திருடுவதானால் அந்தக் காதில் இருந்துதான் ஒருவன் திருடியிருக்க வேண்டும். எதிரே படுத்திருந்தவனது காலியான இடது காது தரையில் படிந்துள்ளது. இதில் இருந்து ஒருவரும் கடுக்கனைத் திருடியிருக்க முடியாது. எனவே மணிவண்ணனின் கடுக்கனைத் திருடியவன் இவனே! என்று திருடனைப் பார்த்துக் கூறிய மரியாதைராமன் அவனிடமிருந்து கடுக்கனை வாங்கி மணிவண்ணனுக்கு கொடுத்துத் திருடனுக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனையும் கொடுத்தான்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |