காதலின் குரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 9, 2025
பார்வையிட்டோர்: 2,096 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“காதலைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? இதுவரை என்னை யாருமே காதலித்ததில்லை. நானா வது யாரையும் காதலிக்கலாம் என்றாலோ, காதல் புரிவதே எனக்குப் புரிவதில்லை” என்று நீலன் வேடிக்கை பேசினான். 

காதலே அப்படித்தான். சிப்பிக்குள்ளே ஒளிந்திருக்கும் முத்துமாதிரி! இரகசியமாக இருப்ப தாலே தான் நவரஸங்கள் என்ற நவரத்தினங் களில் காதல் என்னும் முத்துக்கு இத்தனை மதிப்பு!” என்று மேகநாதன் சொன்னான். 

“ஏது பெரிய கவிஞன் ஆகிவிடுவாய் போலிருக் கிறதே! தம்பி, நீ ஒரு போர் வீரன் என்பதை மறந்து விடாதே!” என்றான் நீலன். 

இரவு மூன்றாம் ஜாமம். காவிரியாற்றின் கரை யில் பராந்தகனுடைய பாசறைக்கு வெளியே ஆடம் பரமாகக் காய்ந்து கொண்டிருந்த நிலவில், போர் வீரர்கள் சிரம பரிகாரம் செய்து கொண்டிருந் தார்கள். மேகநாதன் புதிதாக ஏற்பட்ட காதல் வேகத்தினால் கண்மூட முடியாதவனாகி, நிலவில் நடந்தான். 

“நீலா, வாஸ்தவமாகவே சொல். என்னுடைய இந்த எண்ணம் வெறும் பிரமைதானா?” என்று மறுபடியும் ஆவலோடு கேட்டான் மேகநாதன். 

“இந்தா மேகநாதா! பிரமையும் பிரேமையும் எனக்கு ஒரே வார்த்தை தான். ஆனால் ஒன்று: அன்று உனக்கு வீரவாள் பரிசளித்தபோது சேனாதிபதியின் மகள் உன்னையே பார்த்துக் கொண்டிருந் தது என்னவோ உண்மைதான்.” 

“நீலா, இப்பொழுதெல்லாம் நான்என்ன காரிய மாகச் சேனாதிபதியைப் பார்க்கப் போனாலும் சரி, அவளும் அங்கு வந்து நின்று கொள்கிறாள். அவளு டைய முகமும், அந்த நீளமான கூந்தலும், கண் களிலே உள்ள ஒளியும். அம்பு பாய்வது போல அல்லவா இருக்கிறது! ஆனாலும் இந்த அம்பு பாயும் போது எத்தனை இன்பமாக இருக்கிறது!” என்று வியப்பிலே சொக்கியவாறு மேகநாதன் பேசினான். 

”மேகநாதா, உன்னுடைய காதல் வேகத்தைப் பார்த்தால் நீ பெரிய கவி ஆகிவிடுவாய் என்று வாஸ்தவமாகவே பயமா யிருக்கிறது!” என்றான் நீலன். 

மேகநாதன் அங்கிருந்து புறப்பட்டான். வணக் கம் செய்வதற்கு உயர்த்திய கையை மறித்துக் கொண்டே, ”ஒரு விஷயம் தெரியுமா?” என்று நீலன் கேட்டான். 

“எதைச் சொல்கிறாய்?” 

”நாளைக்குப் பௌர்ணமி இரவில்….”

“அடேயப்பா! இதைத்தானா புதிதாகச் சொல்ல வந்து விட்டாய்! ஒவ்வொரு பௌர்ணமியும் நடப் பது தானே?” என்று சொல்லிவிட்டு, மேகநாதன் மேலே நடந்தான். 

2

‘எப்பொழுதும் சண்டையிலும் பயிற்சியிலும் நேரத்தைக் கழிக்கிறவர்களுக்குக் களியாட்டங்கள் மிக மிக அவசியம். இல்லை யென்றால் இதயம் என்ற தத்துவத்தையே மறந்து விடுவார்கள்’-இது சேனாதிபதியின் கொள்கை. 

ஒவ்வொரு பௌர்ணமியிலும் சேனாதிபதி நிலா விருந்து ஏற்பாடு செய்வதுண்டு. காவிரியின் மணற் பரப்பில், பூர்ண சந்திரன் பரிமாறுகிற நிலவுவிருந் திலே சேனாதிபதி நவநவமான உணவு விருந்து அளிப்பார். அதோடு மட்டுமல்ல; ஒவ்வொரு விருந் திலும் ஒரோரு புதிய புதிர் விளையாட்டும் நடக்கும்.

அவருடைய மனைவி கேட்டாள்: “போர் வீரரு டைய இதயத்தில் வீரம் என்ற உணர்ச்சிக்குத் தானே இடம் உண்டு? மற்ற உணர்ச்சிகள் அந்த இதயத்தில் புகுந்தால், கடமையை மறந்துவிட மாட்டார்களா?”. 

அந்தக் கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு கவனித்தாள் அவருடைய மகள் வனிதை.

”ஒரு உணர்ச்சியிலிருந்து இன்னொரு உணர்ச் சிக்குச் சென்று மீள்வதுதான் இதயத்துக்கு ஒரு ஓய்வு. இல்லாவிட்டால் மனிதன் பைத்தியம் ஆகி விடுவான். இதய தத்துவம் மிக்க அதிசயமானது. அது உங்களுக்கெல்லாம் புரியாது” என்றார் சேனாதிபதி. 

“தத்துவம் புரியாவிட்டாலும் ஒரு விஷயம் பார்த்திருக்கிறேன், அப்பா. போர் செய்யும் வீரர்களிடம் வேறு என்ன திறமைகள் எல்லாம் ஒளிந்து கிடக்கின்றன என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!” என்றாள் வனிதை, ஆற்று மணலைக் கிளறிக் கொண்டே. 

“குமாரி, மனிதனுடைய திறமைகள் எல்லாம் இதோ பார், இந்த மணலுக்குள்ளே மறைந்துகிடக்கும் ஊற்றுப் போல். மேல் எழுந்தவாறாகப் பார்க்கும் போது, வெறும் மணல்தான்!” 

பேசிக் கொண்டே காவிரி மணலில் நெடுந் தூரம் நடந்து விட்டார்கள் மூவரும். 

“நாளைக்கு என்ன புதிர் போடப்போகிறீர்கள் அப்பா?” என்று வனிதை கேட்டாள், திரும்பிக் கொண்டே. 

“ஒரு மிகப் புதிய விளையாட்டு!” 

“என்னிடம் சொல்லலாம் அல்லவா? நான்தான் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லையே!” 

“அப்படி ஒதுங்கிவிட முடியாது. போட்டியில் முடிவு சொல்ல வேண்டியவள் நீதான்!” என்று சேனாதிபதி தீர்மானத்தோடு சொன்னார். 

“அந்த மாதிரி என்ன புதிர்?” 

“ஏதாவது ஒரு கேள்வி கேட்க வேண்டும். அதற்கு விடை பாட்டாகச் சொல்லவேண்டும் வீரர்கள்!” 

“பாட்டா! கவியா!” 

“ஆமாம்” என்றார் சேனாதிபதி. 

3 

நிலாவிருந்து நேர்த்தியாக நடைபெற்றது. ஆற்று மணலும், பௌர்ணமி நிலவும், காவிரித் தண் ணீரும் சேர்ந்து, அந்தக் களிப்பைச் சோபிக்கச் செய் தன. ஆனால் விருந்தின் முடிவில் இவ்வளவு பெரிய வியப்பான பாணம் விழும் என்று மேகநாதன் எதிர் பார்க்கவில்லை. அவன் நினைத்தான், கண்கள் இரண் டையும் துணியினால் கட்டிவிட்டு வாள்ப்போர் செய் யச் சொல்லுவார்; அல்லது காவிரித் தண்ணீரில் அந்த நிலா வெளிச்சத்தில் முக்குளி பாய நேரிடும் என்று. கவிபாட வேண்டிய சங்கடம் வரும் எனக் கனவிலும்கூட அவன் எதிர்பார்க்க வில்லை! தன்னை ‘ஒரு கவிஞனாக ஆய்விடுவாய்’ என்று நீலன் கேலி செய்தானே, தான் மட்டும் இதற்குள் அப்படி ஒரு கவிஞன் ஆகியிருந்தால் இப்பொழுது எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்? 

அவமானம் தாங்க முடியாமல் போனதற்குக் காரணம் அந்தப் போட்டியின் விவரத்தைச் சேனாதி பதியின் மகள் வனிதையே தன் அமுத மொழி களால், அவ்வளவு பெரிய கூட்டத்தில் அறிவித்தது தான். 

வீரர்கள் எல்லாரும் தங்களுக்குக் கவி பாடத் தெரியாது எனச் சொல்லி விடுவார்கள் என்றே மேகநாதன் எதிர்பார்த்தான். ஆனால் ஒருவருமே அப்படிச் சொல்லக் காணோம். அவர்களுடைய முகங் களைப் பார்த்தால் ஒவ்வொரு வீரனும் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதற் குத் துடிப்பது போலத் தெரிந்தது. ஒரு பெண்ணின் அறிவிப்புக்கு ஆடவர்கள் மத்தியில் எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தான் அவன். 

போட்டி ஆரம்பமாயிற்று. 

காவிரியில் கரையும் பனிக்கட்டியைப்போல ஒரு வினாடியில் அந்தக் கூட்டத்திலிருந்து மறைந்தான் மேகநாதன். 

4

மணற்பரப்பில் எங்கோ ஒரு ஓரத்தில் ஒதுங்கிப் போய் உட்கார்ந்து விட்டான் அவன். அவ்வளவு பெரிய கூட்டத்தில் தான் உள்ளன்போடு காதலிக் கும் வனிதையின் கண் முன்பு, அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ள அவன் மனம் ஒப்பவில்லை. அதே சமயம் மற்ற வீரர்கள் ஏதோ சொல்லுவதும்,வனி தை சிரிப்பதும் தூரத்திலே கேட்டுக்கொண்டே யிருந்தது. அவன் நினைத்தான்; “போர் வீரர்கள்கவி பாடுகிறார்கள், 

அவர்களுடைய கவித் திறமையில் உள்ளம் மகிழ்ந்து வனிதை சிரிக்கிறாள். அதேசமயம் னுடைய பேதமையை, பயங்கொள்ளித் தனத் தை எண்ணி நகைக்கிறாள். நகையாடுகிறாள்!” 

”சிரி……. வனிதையே. சிரி… மேகநாதனுடைய பேதைமைக்காகச் சிரி” என்று சொல்லிக்கொண் டே மேகநாதன் தனக்குள்ளே சிரித்தாள். வார்த் தைகளில் பொங்க வேண்டிய உணர்ச்சிகள் எல்லாம் சொல்லற்று மயங்கி அவனுடைய மூளையைக் குழப் பின. கண் சுற்ற ஆரம்பித்தது. ஆற்று மணலில் நில வின் ஒளியில் சாய்ந்து விட்டான் அவன். 

“மேகநாதா!” என்று ஒரு மெல்லிய இனிய குரல் கேட்டது. பார்த்தான்; யாரையும் காணோம். திகைப்பதற்கு முன் மீண்டும் அந்தக் குரல்; அதில் ஒரு சோகம். 

ஆனால் அந்தச் சோகத்திலே விவரிக்க முடியாத ஒரு கவர்ச்சி. இன்பமும் துன்பமும் கலந்து இணைந்த ஒரு ஆனந்த ஏக்கம் அதில் ஒலித்தது. என்ன ஆச்சரியம்! காதலில் மறுகும் மனித உள்ளத் தின் உணர்ச்சிகள் எல்லாம் ஒருமித்துத்தண்ணீரின் மேல் பரப்பிலே மிதந்து மிதந்து வந்து காதிலே ஒலித்தால் எப்படியிருக்கும்? அப்படியிருந்தது அந்தக் குளுமையான குரல். மானச உலகிலிருந்து இறங்கி வந்து மாந்தர்களின் மொழியில் உரையாடும் காவியக் கன்னி மீண்டும் பேசினாள். 

“மேகநாதா, ஏன் உறங்குகிறாய் – எழுந்திரு!” என்றாள். 

மேகநாதன் திகைத்தான்: ”நீ யார்? எங்கிருந்து பேசுகிறாய்?” என்று கேட்டான். 

“ஏன் ஒதுங்கி வந்துவிட்டாய்? முகம் எல்லாம் ஏன் இப்படி வெளுத் திருக்கிறது?” என்று அவள் கேட்டாள். 

மேகநாதன் பதில் சொன்னான்: “என் முகம் ஏன் வெளுக்காது? அறிவற்ற பேதைக்கு வேறு எப்படியிருக்கும் முகம்?” 

“எழுந்திரு, மேகநாதா! எழுந்து ஒரு பாட்டுப் பாடு’ என்றாள் அவள். 

“பாட்டுப் பாடவா? நானா? மேகநாதனா? எனக் குப் பாடத் தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கு ஓடி வந்திருக்க வேண்டும்?” 

“இல்லை. உனக்குப் பாடத் தெரியும். அதைச் சொல்லவே வந்தேன். ஆமாம்; பாடு, கேட்கலாம். 

“இல்லை. பாடத் தெரியாது. அதோ என்னைக் கேலி செய்கிற வனிதையின் சிரிப்பொலி – என்ன! சிரிப் பொலி கேட்கவில்லையே; இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்ததே. நின்று விட்டதா? இல்லை. நான் தான் உறங்குகிறேனா? என் எதிரே நான்தான் ஒருவரையும் காணோமே. நீ எங்கிருக்கிறாய்?” 

“மேகநாதா, நான் இங்குதான் இருக்கிறேன். காதல் என்ற இன்பக் கனவில் இதயம் உருகும் பொழுது நான் தோன்றுகிறேன். சொல்லே எனது வடிவம்; உணர்ச்சியே எனது ஜீவன்-எங்கே, ஒரு பாட்டுப் பாடு.” 

நிலவிலிருந்து ஒரு கீற்று இறங்கி வந்து உடம் பிலே சென்றால் எப்படி யிருக்குமோ அப்படி யிருந் தது மேக நாதனுக்கு. அவன் எழுந்து உட்கார்ந்தான். 

“பாடுகிறேன். ஆனால் எதைப் பாட? எப்படிப் பாட?”, 

“பாடு. இந்த நிலவைப் பாடு. இந்த நதியைப் பாடு. இந்த நீலவானத்தையும், அது குடை கவிழ்த்து நிற்கிறதே உலகம், இந்த உலகத்தையும் பாடு. காவிரியின் பூம்புனல், வெள்ளி மணல், சுகமான காற்று, எல்லாவற்றையும் பாடு.” 

காதல் என்ற இன்ப வேதனையில், அதன் இங்கித ஏக்கத்தில் லயித்த மேகநாதனுக்கு இது வரை அநுபவித்திராத ஒரு மனோலயம் ஏற்பட்டது. அவன் சொன்ன வார்த்தைகள்: “பாடுகிறேன். இந்தப் பிரபஞ்சத்தை யெல்லாம் பாடுகிறேன். என் னுடைய ஏக்கத்தை எல்லாம் சொல்லிலே தேக்கு கிறேன். ஆமாம்; ஊமையாக இருந்த எனக்குக் குரல் தந்தாய். மனித உள்ளத்தின் இன்பவேதனை நீ. உலக மகா காவியங்களின் அன்னையாகிய உன் சந்நிதியில் பாடுகிறேன்.” 

மேகநாதன் அந்த இடத்திலிருந்து எழுந்தான். 

5

“கந்தர்வ உபாதி” என்று சொல்கிறார்களே, அந்த மாதிரி ஒரு ஜுரத்தின் வேகத்தில் கண் இமைகள் மூடியும் திறந்தும் அவன் நடந்தான்.கண நேரத்தில் விருந்துக் கூட்டத்துக்குள்ளே பாய்ந் தான். அப்பொழுது அங்கே கேள்வி நடந்து கொண் டிருந்தது: 

“துன்பமே இல்லாததும், தோற்றவர் வென்றவர் இருவருமே மகிழக் கூடியதுமான ஒரு வெற்றி எது!” என்று போர் வீரர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார் சேனாதிபதி. 

அந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் வீரர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்ற தருணத்தில் மேகநாதனின் குரல் தூரத்திலிருந்து வந்தது:- இன்ப நங்கையின் முகங்கண்டு- அவள் 

இனிய கண்களின் எழில்உண்டு துன்பம் போன்றதோர் இன்பத்தில் – அவட்குத் தோற்றுத் திளைத்தல் வெற்றியம்மா – அது தோல்வியே எனினும் வெற்றியம்மா! 

அன்று கேலி செய்த நீலன் இன்று உண்மையீ லேயே மேகநாதனுடைய கன்னிக் கவிதையில் சொக்கிப் போய்ப் பேசினான்: 

“நிலவினிலே மலரும் அல்லியைப் போல, காதல் என்ற சந்திர ஒளியில் இதயத் தடாகத்திலே அபூர்வமான மலர்கள் மலர்கின்றன!” என்றான். 

“இதயதத்துவம் அதிசயமானது என்று அன்று சொன்னீர்கள், அப்பா. அது எனக்கு இப்பொழுது தான் விளக்கமாகப் புரிகிறது” என்றாள் வனிதை. 

சேனாதிபதி மகிழ்ச்சியோடு அந்த வார்த்தையை ஆமோதித்தார். “இதயத்துக்குக் குரல் உண்டு. அது கனவிலே கேட்கும்; கவிதைகள் பேசும்!” என்றார் அவர். 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *