கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 2,694 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கஸ்தூரி…கூல்டிறிங்ஸ். கரைக்கத் தண்ணி வேணும்’ 

‘…..’ 

‘கஸ்தூரி தண்ணி வேணும்… நேரம் போகுது, கெதியாய் எடுத்துக் கொண்டு வாருங்கோ’ 

‘காது கேட்கிறதில்லையே… கஸ்தூரி?’ 

காது கேக்கும்…! 

‘… தண்ணி வேணும்…’ 

‘நானென்ன வேலைக்காரியே’ வழக்கம் போல் கஸ்தூரி தனது கோபவலையை பத்மராசா மீது வீசுகிறாள். கஸ்தூரி எல்லோருக்கும் நல்லவள், அடக்கமானவள், கெட்டிக்காரி. புத்மராசாவோடு மட்டும் எப்பவும் இப்படியே நடந்து கொள்கிறாள். 

பல மாணவர்களுக்கு மத்தியில் கஸ்தூரி இப்படிக் கூறி விட்டது பத்மராசாவுக்கு வெட்கமாகப் போய் விட்டது. மௌனியாகி தலையைக் கவிழ்ந்து கொள்கிறான். அவன் எந்த விஷயத்திலும் நாணலைப் போன்றவன். 

‘எனக்கொருதரும் கட்டளை இட வேண்டாம்’ 

‘நான் ஆருக்கும் கட்டளை இடயில்லை… நீங்கள் பெண்களுக்கு லீடர் எண்ட வகையிலை உங்களிட்டைச் சொன்னன்…’ 

‘எனக்குப் பிடிக்காதவை இருக்கிற கவுசிலை நான் இருக்கமாட்டன். எனக்கு லீடர் பதவி வேண்டாம் எண்டு சொன்னது இதுக்காகத் தான்… சேர் தான் விடாப்புடியாய் நிண்டவர்… தண்ணி எடுக்க என்னாலை ஏலாது…’ 

‘…….’ 

‘பணத்துக்குப்  பயந்தவையளைத்தான் பணக்காரர் பய முறுத்தலாம். நாங்கள் ஏழையள் தான். ஆனால் … 

பணக்காரருக்கு பயப்பிடமாட்டம்… என்ன பணம்… இடையிலை வந்தது தானே’ எங்கோ உருவான பிரச்சினைக்கு புதுக் கொக்கியிட்டு ‘திரைமறைவான’ தொரு பிரச்சினையொடு இணைத்து அந்த மையத்தில் நின்று திரைமறைவான பிரச்சினையைத் திரைநீக்கம் செய்கிறாள் அவள். 

சக மாணவர்கள் மெளனமாக நிற்கின்றனர். கஸ்தூரியால் திரைநீக்கம் செய்யப்பட்ட பிரச்சனை அவளையும் அவனையும் பொறுத்தவரை பழசுப்பட்டது. அடிக்கடி அவளால் ‘தூசு’ தட்டப்படும் விஷயம் என்பது பத்மராசா உட்பட அதிக மாணவர்கள் அறிந்த உண்மை. பத்மராசா விஷயத்தைப் புரிந்து கொள்கிறான். 

‘தகப்பன் குற்றவாளியெண்டால் மகனும் குற்றவாளியாகி விட முடியுமா கஸ்தூரி? பத்மராசா வழக்கம் போல் நாணலாகிப் பேசுகிறான். அவனது முகத்தில் பிரதிபலித்த அத்தனை உணர்வுகளும் மறைந்து போக வேதனையில் அவன் உள்ளம் வலையில் சிக்கிய மீன் துடிப்பது போல் துடிப்பதை முகம் காட்டுகின்றது. 

‘தகப்பன்ரை உடல்லை ஓடுற இரத்தந்தானே மகனிலையும் ஓடும்’

‘அப்பிடியெண்டால் கஸ்தூரி என்ரை உடல்லை ஓடுற இரத்தந்தானே உங்களிலையும் ஓடுது!’ 

‘அதுதானே இல்லையெண்டு எப்பவோ முடிவாயப் போச்சு’ 

‘இரத்த உறவை இல்லையெண்டு சொல்லுறியளா?’ 

‘என்னைப் பொறுத்தவரை அந்த உறவு இல்லையெண்டு முடிவாய்ப் போச்சு’ 

‘கறுப்புக்கு வெள்ளையடிக்கலாம் கஸ்தூரி. இவருக்கு வெள்ளையடிக்கலாமே?’ 

‘அப்பிடியெண்டால்…’ 

‘எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலை எப்பிடியோ நடந்து போனதாகக் கூறப்படும் ஒரு பிரச்சினை… இப்பவும் நடக்கிற சம்பவங்களுக்கு அது தான் காரணம் என்று நீங்கள் நினைக்கிறது அர்த்தமில்லாதது.’ 

‘செய்தவைக்கு அந்த அர்த்தம் மறந்து போகலாம். மறைந்தும் போகலாம். அதால் பாதிக்கப்பட்டு கஸ்டப்படுகிற எங்களாலை அந்த அர்த்தத்தை மறக்கவோ, மறைக்கவோ முடியுமா?’ 

‘எலும்பில்லாத நாக்குத் தானே! எப்படியும் கதைக்கலாம்!’ 

‘எனக்கு மட்டும் தான் எலும்பில்லையா?’ 

இருவருக்குமிடையில் சாதாரணமாக எழுந்த பிரச்சினை மிகவும் பரந்த அளவில் பர்ணமித்து குடும்பப் பிரச்சினையோடு சங்கமித்து அந்த இடத்திலேயே நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றது. 

‘என்ன பத்மராசா… இந்த நேரத்திலையும் சண்டையே… நீங்கள் எல்லாம் வெளியிலை போங்கோ’ வெளியே நின்ற இல்ல ஆசிரியர் உள்ளே வந்து பிற மாணவர்களை வெளியேற்றுகிறார். 

‘என்ன விஷயம் கஸ்தூரி?’ 

‘இல்லைச்சேர் கூல்டிறிங்ஸ் கரைக்க என்னைத் தண்ணி கொண்டு வரட்டாம். ஒரு நாய் சொன்னால் கூட நான் செய்வன் சேர்’ கஸ்தூரியின் கண்களில் கண்ணீர் பனிக்கிறது. 

‘இவர் எனக்கென்ன சொல்றது’ 

‘ஏன் கஸ்தூரி இந்த விளையாட்டுப் போட்டி ஆருக்காக நடக்கிது? ஆசிரியர் மாருக்கோ உங்களைப் போல் மாணவருக்காகத்தான் நடத்தப்படுகின்றது. அதிலையும் பெரிய வகுப்பு மாணவர் நீங்கள், கவுஸ்லீடர்மார்… பொறுப்பில்லாமல் நடக்கலாமே?… நீங்கள் இரண்டு பேரும் பொறுப்புள்ளவர்களெண்டு தானே லீடராய் தெரிஞ்சது’ விளையாட்டுப் போட்டியை திறம்பட நடத்தி முதலாவதாக வந்தால் அதிலை ஆருக்குப் பெருமை?… அதிலையும் பத்மராசா ஆர்… உங்கடை அண்ணன்…! குடும்பப் பிரச்சினை பழைய தலைமுறையோடை மறைந்து போகட்டு… இப்ப உங்கடை தலைமுறை.. படிக்கிற நீங்கள் ஒற்றுமையாய் இருங்கோ…’

‘சேர் நீங்கள் விஷயம் தெரியாமல் கதைக்கிறியள்’ 

‘என்ன சொல்லு கஸ்தூரி’ 

‘இது வருடம் ஒருக்காவாற விளையாட்டுப் போட்டி தானே!”

‘ஓம்…’ 

‘நான் பல மாணவிகளுக்கு முன்னாலை கொடி பிடிச்சு தலைவியாய் போறதைச் காண என்னை பெத்தவர்களுக்கு ஆசையிருக்காதே?’ 

‘கண்டிப்பாக இருக்கும்… வரலாம் தானே…’ 

‘வரலாம் சேர் எப்பிடி வாறது..!…?’ 

“ஏன்…” 

‘…வீட்டிலைதான் கந்தல் துணியோடை நிக்கலாம்… இஞ்சையும் அப்பிடி வரலாமே…!..? என்ன சேர்… இது உங்களுக்குத் தெரியுமா…? இது ஆராலே வந்தது… இவையின்ரை குடும்பத்தாலை வந்தது…’ அவளது உள்ள உணர்வுகள் சிறகடித்துப், பறக்க வாய் விட்டு அழுகின்றாள். அவளது தாயும் தகப்பனும் இருபாணங்களாகி அவனது உள்ளத்தைக் குத்திக் கிளித்து விட, இரத்தஞ் சொட்டுகின்ற தன் இதயத்தை வெளியே எடுத்து ஆசிரியர் முன் வைக்கின்றாள். 

‘தாய் தகப்பன் பிழை விட்டிருக்கலாம்… அதுக்காக பத்மராசாவை வெறுக்கிறது… முறையில்லை…’ தராசின் நிறை காட்டு முள்ளின் நிலையில் நின்று பேசுகிறார் ஆசிரியர். 

“தாய் தகப்பன்ரை இரத்தம் தானே… இதுகும்…” 

“அப்பிடிப் பார்த்தால் கஸ்தூரி எங்கடை உடலிலையும் அதே இரத்தம் தானே ஓடுது… ஒரு கொடிக்காய்கள் தானே” 

“அந்த உறவு எப்போ விட்டுப் போச்சு… இரத்த பாசம் அதெல்லாம் வீண் கதை…” 

”சரி எல்லாத்தையம் விடுங்கோ… இண்டைக்கு விளையாட்டுப் போட்டி முடியட்டு… பிறகு பாப்பம்… தண்ணி தானே வேணும்… நான் எடுத்து வாறன்…” 

“நான் போறன் சேர்… உங்களுக்காகப் போறன்” கஸ்தூரி வாளியை எடுத்துக் கொண்டு பைப்பை நோக்கிப் போகிறாள். 

கஸ்தூரியும், பத்மராசாவும் இதே பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் கூடப் பிறந்த அண்ணன் தம்பியின் பிள்ளைகள் இருவரும் பத்மராசா அண்ணனின் பிள்ளை கஸ்தூரி தம்பியின் பிள்ளை. ஆரம்ப காலத்தில அண்ணன் தம்பிக்குள் நடந்த சொத்துப் பங்கீட்டு பிரச்சினையில் அண்ணன் தம்பியை மோசடி செய்து அன்று பிரிந்த குடும்பங்கள் இன்றும் அப்படியே இருக்கின்றனவென்றும் மோசடியில் பெற்ற பயனைக் கொண்டு அண்ணன் பொருளாதாரத்தில் மிதந்ததாகவும் மோசடிக்குளானதால் தம்பி வறுமைக் குள்ளானான் என்பதும் இப்பகுதியில் நிலவி வருகிற பொதுவான அபிப்பிராயம். 

இவை நடந்து பல ஆண்டுகள் சென்றாலும் கஸ்தூரிக் குடும்பத்தின் வறுமைக்கு இதையே காரணமாகக் கற்பித்துக் கூறி விட்டனர் பெற்றோர். வறுமையின் கொடுமையால் அதற்குக் காரணம் என்று கருதுகின்ற பத்மராசா குடும்பத்தினரை பழி தீர்த்துக் கொள்ள முனைகிறாள் கஸ்தூரி. 

கஸ்தூரியின் வறுமையும் பத்மராசாவின் செல்வமும் அப்பட்டமான உண்மை! 

இந்த இரு நிலைகளுக்குக் காரணம்…!? 

பாடம் சம்பந்தமான படங்கள் வந்து பாடசாலை மாணவர்கள் பார்க்கப் புறப்பட்டால் பத்மராசா முன் நிற்பான். கஸ்தூரி எப்படியோ நழுவி விடுவாள்! 

காரணம் காசில்லை. 

சுற்றுப் பிரயாணஞ் சென்றால் இதே நிலை! 

மாணவர்கள் மத்தியில் சிலவோடு சம்பந்தமான எந்தப் பிரச்சினைகளிலும் இதே நிலை! 

ஒவ்வொரு சம்பவங்களும் கஸ்தூரியின் மனதில் படிந்திருந்த வெறுப்பிற்கு வைச்சிரமாக அமைகின்றது. 

கிட்டத்தட்ட மூன்று மணியளவில் ‘ஒலிம்பிக்லைற்’ ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகின்றது. விளையாட்டு மைதானம் மிகச் சிறியதாக இருந்தாலும் விளையாட்டுப் போட்டி பெரிய கல்லூரி நிர்வாகத்திற்குச் சோடை போகாமல் நடக்கின்றது. அத்தனையும் விளையாட்டு ஆசிரியர் ஸ்ரெனியின் செயல்திறன். 

நீல இல்லம் நாற்பது புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று முதலாம் இடத்தை வகித்து வருகின்றது என்ற செய்தியை அறிவிப்பாளர் அறிவிக்கின்றனர். நீல இல்லத்தில கை தட்டல், சிரிப்பு பேச்சு இல்லத்தை நிரப்பி நிற்கிறது. இல்ல ஆசிரியருக்கு பெருமிதம் இருந்தாலும் உள்ளுரவைத்துக் கொண்டு சாதாரணமாக நிலையில் வாசலில் நிற்கிறார் 

“சேர் வழக்கம் போல் இந்த முறையும் எங்கடை நீல இல்லம் தான் முதல்” 

“நாற்பது புள்ளிகள் கூட அது எங்கடை தான் முதலாவது” 

“உந்தப் பச்சை இல்லம் எங்களோடை போட்டி போட்டவை…” 

“ஏன் மஞ்சள் இல்லம்…” 

“எல்லாம் முடியட்டு அவையோடை கதையிருக்கு…” உணர்ச்சி வேகத்திலை ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு அபிப்பிராயத்தைக் கூறுகின்றனர். 

ஆசிரியர் ஒரு சிரிப்பால் எல்லோருடைய பேச்சுக்களையும் சந்தற்பத்துக்கேற்றவாறு சமாளிக்கிறார். 

“சேர் அடுத்தது தடை ஓட்டமமாம்” 

“நீங்களும் வேறை ஆர்…” 

”நானும் தாமோதரமும்…” 

“கவனமாக இருங்கோ…” 

“இதையடுத்து மேற் பிரிவுக்கான தடையோட்டம் நடைபெறும்… அதில் கலந்து கொள்வோர் கவனிக்க வேண்டியது… முதலாவதாக வைக்கப்பட்டிருக்கும் சோடாவை வீணாக்காமல், மிச்சமின்றிக் குடிக்க வேணும்… இரண்டாவதாக… வைக்கப்பட்டடிருக்கும் பலூனை ஊதி உடைக்க வேணும்… கடைசியாக தட்டில் வைக்கப்பட்டிருக்கும் மாவுக்குள் வைக்கப்படப்படிருக்கும் ஒரு சதக் காசை வாயால் எடுக்க வேண்டும்… முதுலாவது சோடா, இரண்டாவது பலூன், மூன்றாவது மாவுக்குள் உள்ள காசு…” அறிவிப்பாளர் போட்டி விதிகளைக் கூறி முடிக்கிறார். 

போட்டி ஆரம்பமாகின்றது. போட்டி விதிப்படி முதலில் சோடா குடிக்கப்படுகின்றது. கீழிறங்கி மேலேறும் குரல் வளை முடிச்சின் வேகம் மாணவர்களின் ஆவலைப் பிரதிபலிக்கின்றது. 

பத்மராசா முந்திக் கொண்டு விட்டான். 

இரண்டாவது பலூன். 

இதிலும் பத்மராசா தான்! 

மூன்றாவது தட்டில் வைக்கப்பட்டிருக்கும் மாவுக்குள் உள்ள ஒரு சதக்காசு. 

உதடுகளைக் கூப்பிப் பிடித்து முடிந்தவரை வேகமான ஊதுகின்றனர். கிட்டத்தட்ட சிறு புகைமண்டலம் என்றே கூறலாம்… போட்டியாளரின் முகங்களில் மாத்துகழ்கள் படிந்து வெண்மையாக்கி விட்டது… கடைசி நேரம்! 

பத்மராசா காசை நாக்கால் எடுத்து விட்டான். 

இல்ல மாணவர்களின் கை தட்டல் குரலொலி 

பார்வையாளரின் கை தட்டல் குரலொலி அறிவிப்பாளரின் விமர்சன புகழ் மொழி. 

பத்மராசா இல்லதுக்கு வந்து விட்டான். 

சக மாணவர்கள் ஆரவாரித்து வரவேற்கின்றனர். மாணவர்களின் ஆதரவு வார்த்தைகள் ஒன்றைத் தாண்டி ஒன்று வருகின்றது. 

“அம்மா… அம்…” பத்மராசாவின் அவலக்குரல் இல்ல ஆரவாரத்துக்கிடையே அரை குறையாய்த் தோன்றி பிரதிபலித்து மரணிக்கின்றது. கதிரையில் இருந்த அவன் நிலத்தில் சாய்கிறான். ஒரு வினாடி எல்லோரும் நிலையிழந்து நிற்கின்றனர். ஒருவன் மைதான டாக்டரிடம் ஓடுகிறான். நிலத்தில விழுந்த பத்மராசா நெருப்பில்’ விழுந்த புழுப்போல் துடிக்கிறான் பேச்சு வர மறுக்கின்றது. 

விளைாயாட்டு ஆசிரியர் உடல் பலமும் மனப் பலமும் மிக்கவர் பத்மராசாவின் மூக்குத் தூவாரத்தில் தனது வாயை வைத்து உறிஞ்சி இழுக்கிறார். மாக்களிபட்டும் படாமலும் வருகின்றது… தொடர்ந்து ஸ்ரெனி ஆசிரியரின் முயற்சி தோல்வியடைகிறது. 

“தட்டிலுள்ள மாவை ஊதிய முறையும் ஊதும் ஆவலில் காற்றை வேகமாக உள்ளே இழுத்திருக்கிறான். மா உட் சென்று சுவாசக் குழலை அடைச்சுப் போட்டுது… சுவாசம் வர மறுக்கின்றது… ஆஸ்பத்திரிக்கு கொண்டு வாருங்கோ” டாக்டர் கூறுகிறார். 

பத்மராசா படும் அவதியும் வேதனையும் எல்லோரையும் நிலைகுலையச் செய்து… ‘இனி என்ன…? என்றொரு நிலையை உருவாக்கிவிட்டது. டாக்டர் முன் செல்லரஸ்னி பத்மராசாவைத் தூக்கிக் கொண்டு பின் தொடருகிறார். 

“தவிர்க்க முடியாத காரணத்தால் விளையாட்டுப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” அடி தலையற்ற பதட்டமான செய்தி அறிவிக்கப்படுகின்றது. 

பார்வையாளர் மத்தியில் ‘விபரம் தெரியாத கொந்தளிப்பு’ பாடசாலையிலிருந்து ஆஸ்பத்திரி கால் மைல் இருக்கும் டாக்டரின் காரில் பத்மராசாவைத் தாங்கிய வண்ணம் ஸ்ரனி அமர்ந்திருக்கிறார். கார் ஆஸ்பத்திரியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. 

பாடசாலைக்கும் ஆஸ்பத்திரிக்கும் இடையே ஒரு குறுக்குப் பாதை எறும்பு கொடிவிட்டு நகர்வது போல் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆஸ்பத்திரியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். 

பத்மராசா அனுமதிக்கப்பட்ட வாட்டில் ஆசிரியர்களைத் தவிர மற்றும் எவரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் கஸ்தூரி உள் நுளைந்து விட்டாள்! 

கண்களிலிருந்து கண்ணீர் வடிய வாய் விட்டுக் கதறுகிறாள் 

ஊசி மூலம் குளுக்கோசும் மருந்தும் ஏற்றப்படுகின்றது. 

படிப்படியான வளர்ச்சி… பத்மராசாவின் அவதி குறைந்து லேசாக மூச்சு வருகின்றது. 

கிட்டத்தட்ட பூரண சுகமடைந்து சாதாரண நிலையை அடைகிறான். 

“அண்ணா..”  கஸ்தூரி அழைக்கிறாள். பத்மராசா தலையைத் திருப்பிப் பார்க்கிறான். கண்ணீரோடு கஸ்தூரி நிற்கிறாள். 

“என்னண்ணை செய்யிது…” 

“இப்ப ஒண்டுமில்லை.” 

“கோப்பி குடிக்கப் போறியே…” 

ஸ்ரெனி ஆசிரியர் முன்னேற்பாடாக வாங்கி வைத்திருந்த கோப்பியை வாங்கிய கஸ்தூரி பத்மராசாவின் தலையை இடது கையால் தாங்கிய வண்ணம் பருக்குகிறாள். 

இரு துருவங்களாக இருந்த உள்ளங்கள் சங்கமிக்கின்றன. கண்ணைத் திறந்து பார்க்கின்றான் பத்மராசா “இரத்த பாசமெல்லாம் வீண்கதையா” என்று கேட்கிறது அவன் பார்வை. 

– ஈழநாடு, 21.10.1973. 

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *