கம்பி மத்தாப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2025
பார்வையிட்டோர்: 3,111 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)+

கிழவியின் மனம் கவலைப்பட்டது. 

பூக்கட்டி விற்றுச் சேர்த்த பணத்தில் அன் றாடச் செலவுபோக என்ன மீந்துவிடப் போகிறது! வயிற்றை வாயைக் கட்டித் தன்னுடைய உண்டியற் பெட்டியிலே போட்டு வைத்திருந்த காலணாக்களை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தாள். நான்கு ரூபாய் மூன்றே முக்கால் அணா இருந்தது. பய லுக்கு ஒரு துண்டு; அந்தச் ‘சிறுசு’க்கு ஒரு பாவாடை. இவை இரண்டுக்கும் இந்தப் பணம் போதுமா? 

கிழவி, கிழிந்துபோன தனது வெள்ளைப் புடவையை – ஒரு காலத்தில் வெள்ளையாயிருந்த புட வையை – கிழிசல் போக மீதியிருந்த இடத்தில் ஊசி யைக் கொடுத்துத் தையல் போட்டுக்கொண்டு, பேரனையும் பேத்தியையும்- பாவம், தாயில்லாக் குழந்தைகள் – கூட்டிக் கொண்டு கடைத் தெருவுக்குப் போனாள். ஜவுளிக் கடைக்காரனைக் கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சி ஒரு வகையா கத் தன்னுடைய தீபாவளிக் கொள்முதலை முடித் துக் கொண்டு வீடு திரும்பினாள். 

விடிந்தால் தீபாவளி! 

“தாயம்மே!” என்று கூப்பிட்டாள். இப்பொழுதுதான் வீட்டுக்கு வந்தது, அதற்குள்ளே அந்தச் ‘சிறிசு’, வெளியே போய்ப் பண்ணையார் வீட்டிலே பட்டாசு விடுவதைப் பார்த்துக்கொண்டு நின்றது! மறுபடியும் கூப்பிட்டாள். பதிலையே காணோம். 

முருகையா உள்ளே வந்தான். “ஆச்சி…ஆச்சி” என்று சிணுங்கினான். 

“ஆச்சி, தங்கச்சிக்குக் கம்பி மத்தாப்பு வேணுமாம….அழுதா!” என்றான். 

கிழவி தன்னுடைய தளர்ந்துபோன கண்களை மேலே எடுத்து முருகையாவைப் பார்த்தாள். முருக னும் தன்னுடைய ஆச்சியின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். 

தாயம்மைக்குக் கம்பி மத்தாப்பு வேண்டும்; எதிர் வீட்டில் பண்ணையார் மகள் பாப்பா கம்பி மத்தாப்புத்தான் கொளுத்திக் கொண்டிருந்தாள்! 

கிழவிக்குக் கம்பி மத்தாப்பு என்றதும் விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய தாவர ஜங்கம சொத் துக்கள் அத்தனையும் அன்றைக்குக் கொள்முதலில் சரியாகிவிட்டன. இனி கம்பி மத்தாப்புக்கு என்ன செய்வது? கிழவிக்குக் கண்ணீர் தான் வந்தது! 

முருகையா சிறு பயல்தான். ஆனால் அவ னுடைய மூளை ஏழைமை என்ற சாணையிலே பிடித்து நன்றாகக் கூர்மையாகி யிருந்தது. ஆச்சியிடம் அவன் அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. வெளியே வந்து விட்டான். ‘தாயம்மைக்குக் கம்பி மத்தாப்பு வேண்டும். கிழவியிடமோ பணம் கிடையாது. தங்கச்சியோ பிடிவாதக்காரி ஒரு மத்தாப்பு இரண்டு மத்தாப்பைக் கொண்டு கொடுத்தால் தூக் கித் தூர எறிந்து விடுவாள். ஒரு பெட்டி மத்தாப் புக் கொடுக்க வேண்டும்! ‘- முருகன் தன்னுடைய நெற்றியைப் பலமாகப் பிசைந்து யோசனை பண்ணினான். 

2

இரவு பத்து மணியிருக்கும். மறு நாள் தீபாவளி யானதால் விடியற்காலமே எழுந்திருக்க வேண்டும் என்று பண்ணையார் வீட்டில் இப் பொழுதே எல்லாரும் படுத்து விட்டார்கள். பட்டாசுகளின் ஒசை ஒடுங்கிக் குறட்டை பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. முருகையா வராந்தாவுக்குள் வந்துவிட்டான். 

காவற்காரன் காளிமுத்து பகல் முழுவதும் கடை கண்ணிக்கு அலைந்த அலைப்பில் இடி விழுந் தால்கூட யாரோ ‘புஸ்’ வாணம் விடுகிறார்கள் என்று மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொள்ளக் கூடிய நிலையில் சயனித்திருந்தான். முருகன் பண்ணையார் வீட்டின் வராந்தாவையும் தாண்டி உள்ளே அடியெடுத்து வைத்தான். 

ஜன்னலின் மறுபக்கத்தில் வீட்டினுள் கவுதத்தின்மேல் பட்டாசுக்கட்டு இருந்தது. வராந்தா வில் நின்று கொண்டே ஜன்னல் வழியாகக் கையை விட்டு அதை எடுத்துவிடலாம்தான்! முருகனுக்கு நன்றாய்த் தெரியும்: அந்த பொட்டலத்துக்குள்ளே டஸன் டஸனாகக் கம்பி மத்தாப்பு இருந்தது!

முருகனுக்கு ஒரு சூரத்தனம் வந்து விட்டது. துணிச்சலாகக் கையை நீட்டி அந்தப் பட்டாசுக் கட்டைக் கம்பி வழியாக இழுத்தான்.ஆனால் அந்த இடைஞ்சல் பிடித்த பட்டாசுக் கட்டு கம்பி வழியாக வரமாட்டேன் எனச் சாதித்து விட்டது! 

முருகனுக்கு ஒரே எரிச்சலாகப் போய்விட்டது. இனி, பொட்டலத்தை அவிழ்க்காமல் வெளியே இழுப்பது முடியாத காரியம். ‘இரண்டு கையையுமே ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்து அந்த முடிச்சை ஒரு சுண்டுச் சுண்டி, கம்பி மத்தாப்பை மட்டும் வெளியே எடுத்துவிட்டால் என்ன?” 

முருகன் வேகமாக ஆரம்பித்தான். அந்த முடிச்சை ஒரு உலைப்பு உலைத்துவிட்டுப் பலமாகச் சுண்டி இழுத்தான். ‘டபார்’என்றது பொட்டலம். அதற்குள்ளே இருந்த ஒரு கல்வெடி வெடித்து, முருகனைக் காட்டிக் கொடுத்துவிட்டது! 

இதன் பிறகு என்ன நடந்தது என்று சொல் லவாவேண்டும்! பண்ணையார் போட்ட சப்தத்தில் அந்த நரகாசுரன் காளிமுத்து பதறிப்போய் விழித் தான்! மறு கணம் அந்த வீடு முழுவதும் எதிர் பாராத எதிரி’யின் முற்றுகையைச் சமாளிக்க அணி வகுத்துப் புறப்பட்டது. முருகன் அகம் பட்டுக் கொண்டான். 

‘இந்தத் திருட்டுப் பயல் முருகனை என்ன செய் வது?’ என்ற தீவிரமான பிரச்னையில் ஆழ்ந்து கொண்டே, அவனைக் கையையும் காலையும் பிணைத் துத் தூணிலே கட்டிப் போடும்படி கட்டளையிட்டு விட்டு வீட்டிற்குள்ளே போனார் பண்ணையார். 

இதுவரை நடந்துகொண்டிருந்த இத்தனை நாட கங்கள் எதிலும் சம்பந்தப்படாமல் எட்டி நின்ற ஓர் ஜீவன் அந்த வீட்டில் உண்டு என்றால், அது இந்தப் பட்டாசுக் கட்டுக்கு ஏகபோக உரிமை கொண்ட பாப்பாதான்! அவள் இப்பொழுது வெளியே வந்தாள். 

போன வருஷம்வரை அவளோடு முருகன் கண் ணாம்பொத்தி விளையாடியிருக்கிறான். எனவே அவளைக் கண்டதும் அடக்க முடியாத பயமும், விவரிக்க ஒண்ணாத ஒரு வெட்கமும் முருகனை வதைத்தன. ஆனால் நடந்தது என்ன? முருகன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை! அப்பா வீட்டுக்குள் போனாரோ இல்லையோ, பாப்பா என்ன செய்தாள்? ஜன்னலுக்கு மேலே இருந்த அந்தப் பட்டாசுக் கட்டிலிருந்து கம்பி மத்தாப்பு டப்பா ஒன்றை எடுத்தாள். 

“இந்தாடா, முருகா! தாயம்மைக்குக் கொண்டு போய் கொடு.எங்க அப்பாகிட்டே மட்டும் சொல்லிடாதே” என்று சொல்லிக்கொண்டே மத்தாப்பை அவன் பக்கம் நீட்டினாள்! 

அதை வாங்குவதற்கு முருகையனுக்குக் கை ஏது? அதைத்தான் காலோடு கொண்டு இணைத்துத் தூணிலே கட்டிப் போட்டிருந்தாரே, பண்ணையார்! 

இக்கட்டான இந்த நிலைமையில் முருகையன் ‘திரு திரு’ என்று விழித்துக் கொண்டிருந்தபோது, உள்ளே சென்றிருந்த பண்ணையார் இந்தச் சம்பாஷ ணையைக் கேட்டுக்கொண்டே வெளியே வந்தார். அவருக்கு ஒரே திகைப்பாய்ப் போய்விட்டது! 

மனத் தத்துவத்தை ஆராய்ந்து முடிவு காணு கிற புத்தகங்கள் நூறாயிரம் படித்து மூளை காய்த்துப் போயிருந்த பண்ணையாருக்கு அப்பொழுதுதான் தமது மகளுடைய மனம் புரிந்தது! அவர் ஒன்றுமே பேசவில்லை. முருகனுடைய கைக் கட்டுகளை ‘விறு விறு’ வென்று அவிழ்த்தார். அந்தக் கம்பி மத்தாப் புப் பெட்டியை அவன் கையிலே கொடுத்துக் கொண்டே ஒரு குழந்தையின் மனத்தைத் தமக்கு அருளும்படி இறைவனைப் பிரார்த்தனை செய்தார் அவர்! 

விடிந்தால் தீபாவளி : தாயம்மையின் கையிலிருந்து கம்பி மத்தாப்பு பொறி பொறியாக ஒளி விட்டுச் சிதறியது! 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *