சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947
மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.
சமர்ப்பணம்
தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
நன்றியுரை
“ஆனந்த விகடன் ” “மணிக் கொடி “வசந்தம்”, யுவன்”, “சக்தி” ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப் புத்தகமாகத் தொகுத்து வெளியிட முன் வந்த மணி மன்ற அதிபருக்கும் எனது நன்றி.
முன்னுரை
ஒரு சிறு சம்பவம். தெருவில் போகும் ஒரு பிச்சைக்காரன் மோட்டாரில் அடிபட்டுவிடுகிறான். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும். தெரிந்தவர்களும் பிறரிடம் ஆவலோடு விவரித்துச் சொல்கிறார்கள். கேட்பவர்களும் ஆவலோடு கேட்கிறார்கள். உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய சம்பவங்களைச் சொல்வதிலும், கேட்பதிலும், ஜனங்களுக்கு ஒரு விருப்பம். மக்கள், நகைச்சுவையை மட்டுமல்ல, சோக ரசத்தையும் பார்த்து, கேட்டு, படித்து அனுபவிக்கிறார்கள். உணர்ச்சிப் பசியினால் ஏற்படும் வேட்கை அது. இதனால் தான் நாடக மேடைகளும், இலக்கியமும் செழித்து வந்திருக்கின்றன.
மேலே கூறிய, பிச்சைக்காரன் அடிபட்ட சம்பவத்தைப் பலர் பலவிதமாகச் சொல்லலாம். பத்திரிகை நிருபர் புள்ளி விவரங்களுடன் எழுதிச் செய்தியாக வெளியிடலாம். கவிஞன் ஒருவன் இதை நேரில் பார்த்திருந்தால் அவனுக்கு இரக்க உணர்ச்சி பீறிட்டுக்கொண்டு வந்து விடலாம். அந்தப் பிச்சைக்காரனது ஒட்டி உலர்ந்த தேகத்திலிருந்து ஆறாய்ப் பெருகியோடும் இரத்த வெள்ளத்தையும்,பக்கத்தில் கிடக்கும் தகரக் குவளையையும், அவனுடைய இந்த நிலைமைக்குக் காரணமாக இருக்கும் சமூகத்தின் குறைபாடுகளையும் பற்றி எட்டு அடிகளில் ஒரு பாட்டு இயற்றிவிடுவான். பார்ப்பவன் சிறுகதை எழுதுபவனாக இருந்தால், அந்தப் பிச்சைக்காரனுக்கு ஒரு கற்பனைக் காதலியைச்சேர்த்து செல்வந்தனாக வாழ்ந்த அவனுடைய பூர்வீக நிலைமையையும் வர்ணித்து, ஒரு சோகச் சித்திரம் அமைத்துவிடுவான். இதற்குக் கற்பனாசக்தி மட்டும் போதாது. பாஷையில் லாகவமும், கதை சொல்லும் உத்தி களும் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். இத்தகைய திறமை களுடன், நடந்த ஒரு சம்பவத்தையோ, நடக்காத ஒரு கற்பனைச் சம்பவத்தையோ உணர்ச்சியுடன் சித்தரித்து விட் டால், அது நல்ல சிறுகதை ஆகிறது. பழக்கத்தால் ஏற்படக் கூடிய திறமைதான் இது.
சிறு கதை ஆசிரியன் கதாபாத்திரங்களோடு எந்த அளவுக்கு ஒன்றிப்போய் உணர்ச்சிகளை வெளியிடுகிறானோ, அந்த அளவுக்கு அவன் அதில் வெற்றி காண்கிறான். இன்று சிறு கதை உலகில் வணங்காமுடி மன்னனாக விளங்கும் ‘புதுமைப் பித்தன்’ அவர்கள் இத்தகைய ஜாலங்களை யெல்லாம் திறமையுடன் காட்டி வாசகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் திளைக்கச்செய்கிறார்.
அன்று மதுரையம்பதியிலே அறுபத்து நான்கு திருவிளையாடல்களை ஆடி முடித்த சிவபெருமானை இன்று சென்னை நகரின் வீதியிலே கொண்டுவந்து விட்டுக் கந்தசாமி பிள்ளை யுடன் விளையாட வைக்கிறார் புதுமைப்பித்தன்”. சென்னை யின் விபரீத நாகரீக வாழ்க்கையை நாம் ஆச்சரியக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதற்காகச் சிருஷ்டித்திருக்கிறார் அந்தச் சிவபெருமானை. அந்தச் சிவபெருமான் ஆச்சரியப்படும் காட்சிகளைக் கண்டு நாமும் வியப்படைகிறோம்; சிரிக்கிறோம். கந்தசாமி பிள்ளை’ அந்தச் சிவபெருமானைத் தனது பத்திரி கைக்கு ஆயுள் சந்தாதாரர் ஆகும்படி கேட்குமிடத்தில், நன்கு சிந்தித்து அனுபவிக்கக்கூடிய ஹாஸ்யரசம் மிளிர்கிறது.
தமிழில் சிறந்த சிறு கதைகள் எழுதக்கூடியவர்கள் வெகு சிலர்தான் இருக்கிறார்கள். சிலர் அற்புதமான கற்பனைகளை வைத்துக்கொண்டு, உணர்ச்சியின்றி, பாஷையின் நயமின்றி வெறும் பாட்டிக் கதைகளாக எழுதித்தள்ளுகிறார்கள். சிலர் ஒன்றுமில்லாததை எடுத்துக்கொண்டு உணர்ச்சி மிகுந்த நடையில் அலங்கார வார்த்தைகளை அள்ளிச் சொரிந்து காயப்பந்தல் போடுகிறார்கள். இன்னும் சிலர் தமிழிலிருந்தே தமிழுக்கு மொழிபெயர்க்கும்படி, பிறமொழிகளையும் கடு மொழிகளையும் பிரயோகித்து வாசகர்களைத் திணற அடிக் கிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் உணர்ச்சி மிகுந்த சம் பவத்தை எழுதினாலும் பாஷையின் கடுமையினால் வாசகர்கள் உணர்ச்சி பாவத்தை அனுபவிக்கமுடியாமல் போய்விடுகிறது. இவர்களைப்பற்றி யெல்லாம் நான் குறை சொல்வதாக இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் தனிப்பட்ட திறமை அமைந் திருப்பது இயல்புதானே.
என்னுடைய சிறு கதைகள் பதினான்கு இதோ இருக்கின்றன. நான் முன்பு சொல்லியுள்ள திறமைகள் யாவும் வெளிப்படவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்தக் கதைகளை எழுதினேன். என் முயற்சி எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிற தென்பதை வாசகர்கள் தானே தீர் மானிக்கவேண்டும். அந்தப் பொறுப்பை அவர்களுக்கே விட்டு விடுகிறேன்.
“என்ன பரிசு?” “ஆனந்தக் கண்ணீர்” இவ்விரண்டு கதைகளிலுள்ள கற்பனைகளுக்கு ஆதாரமாக இருந்தவை இரண்டு ஆங்கிலக் கதைகள். தமிழில் அதுபோன்ற கற்பனைக் கதைகள் வரவேண்டும் என்ற ஆவலுடன், வெகுகாலம் சிந்தித்த பின்னர்தான் இவைகளைக் கற்பனை செய்தேன். மொழிபெயர்ப்பு, தழுவல், மாரீசம் ஆகியவைகளை வெறுப் பவன் நான். தமிழ் எழுத்தாளன் புத்தம் புதிய கற்பனை களைச் சிந்திப்பதற்கு இந்த ‘வேலைகள்’ ஓரளவுக்கு இடை யூறாக இருக்கின்றன அல்லவா!
தமிழுக்கு மிகமிகத் தேவையாக இருக்கும் இலக்கியங்களை மட்டிலும் பிறமொழிகளிலிருந்து கொண்டு வருவதில் தவறு இல்லை. அப்படிக் கொண்டு வரும் எழுத்தாளன், அவைகள் தனது சொந்தச் சரக்கல்ல என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடவேண்டும். “என்ன பரிசு?” என்ற கதையை எழுதுவதற்கு ஒரு ஆங்கிலக் கதையின் அமைப்புத்தான் காரணமாக இருந்ததென்பதைக் கதையுடனே வெளியிட வேண்டுமென்று குறிப்பு எழுதியிருந்தேன். ஆனால் அந்தக் கதையை வெளியிட்ட “சக்தி” ஆசிரியர் அப்படி ஒப்புக் கொள்வது கௌரவக் குறைவு என்று நினைத்தோ என்னவோ அந்தக் குறிப்பை நீக்கிவிட்டார். இதை இந்த முன்னுரையிலாவது சொல்லிவிட வேண்டுமென்று ஆசை, அதையும் சொல்லிவிட்டேனாதலால் முன்னுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
திருச்சி,
28—7—47.
மாறன்.