கீழ்கரவை பொன்னையன்

 

இலக்கியத்துறையில் இளைய தலைமுறை-15 – ஈழநாடு வாரமலர், 24-06-1979

காலத்தைவென்று நிலைப்பவையே நல்இலக்கியங்கள்

‘இலக்கியங்கள் சமகாலப் பிரச்னைகளையே கருவாகக் கொண்டுள்ளன. அதுவே வரவேற்கத்தக்கதும் கூட. இக்காலப் பிரச்னை நாளையும் தொடரும் என்பதற்கில்லை. அவ்வாறு பிரசனை அற்றுப் போன ஒரு காலத்தில் அப்பிரச்னை கூறும் இலக்கியத்தை மக்கல் ரசிப்பார்களா? புறக்கணித்து விடுவார்களல்லவா? அப்படி புறக்கணிக்கப்படுமாயின் அது நல்ல ஒரு இலக்கியமாகாது. ஒரு ‘பிரச்னை’ அது உள்ள காலத்து மக்களால் மட்டுமன்றி எக்காலத்து மக்களாலும் விரும்பிப்படிக்கத் தக்கதாக இலக்கியம் படைக்க வேண்டும். அதுதான் நல்ல இலக்கியத்தின் இலக்கணம் என்று கருதுகிறேன். அத்தகைய இலக்கியங்கள் இப்போது படைக்கப்படுவ குறைவு. நீங்க என்ன கூறுகிறீர்கள்? ‘கீழ்கரவை பொன்னையன்’ கேட்கப்போன என்னையே கேட்கிறார்.

“பிரச்னைகள் தானா இலக்கியம்” என்று கேட்டுவிட்டு நான் சிரிக்கிறேன்.

நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நெஞ்சும் நீண்ட முகமும் கொண்ட வாலிபனான பொன்னையனும் சிரிக்கிறார், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி .

சந்தித்தேன்-

ஆடம்பரமும் வீறாப்பும் இல்லாமல் எளிமையும் அடக்கமும் கொண்டவராக இனிமையுடன் பழகினார்.

வாசகனோ அல்லது விமர்சகனோ தன்னுடைய எண்ணத்தை மட்டும் வைத்து படைப்பை மதிப்பிடுவதும் – கட்சி அணிகளுக்காக விமர்சனமென்ற போர்வையில் ‘பொய்’ கூறுவதும் ஈழத்து இலக்கியத் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. ஆக்கியவன் உள்ளார்வத்தை – அவனுடைய இலக்கிய நோக்கு என்ன என்பதை கண்டுபிடித்து அதை அவன் நிறைவேற்றியுள்ளானா என்று பார்ப்பதே பயனுடைபதாகும் என்றார்.

1968-ம் ஆண்டளவில் இலக்கியத்துறைக்கு வந்த பொன்னையன் இதுவரை 15 சிறுகதைகளை எழுதியுள்ளார்.

‘ஏழையின் கற்பு’ என்ற இவரது முதற்கதை ‘கன்னி’ என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. ஊனமுற்ற தன் கணவனையும் பிள்ளைகளையும் காப்பாற்ற ஒருத்தி தன் உடலை விற்கிறாள். ஊர் தூற்றுகிறது வேறு வழியை அவளுக்கு இல்லாமல் செய்த அதே ஊர் தூற்றுகிறது, ஆனால் அவள் கணவனை தெய்வம் என்கிறாள். பொன்னையனும் அவளைக் கொண்டாடுகிறார். அப்போது இக்கதைக்கும் பெண்கள் மத்தியிலே பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. ‘கன்னி’யின் ஆசிரியராகவுமிருந்து அவ்வெதிர்ப்புக்கு முகம் கொடுத்த பொன்னையன் நினைவுபடுத்திக் கூறினார்.

‘இதே கருத்து அரங்கேற்றம் படமாக வந்தபோது அதே பெண்கள் பாராட்டியிருப்பார்கள்’ என்கிறேன் நான்.

அதுகூட எனது படைப்புக்கு வெற்றி தான் என்று பெருமிதத்தோடு கூறும் அவர் நாம் ஒரு கருத்தைக் கூறும்போது சீறும் நம்மவர்கள் அதே கருத்து தமிழ் நாட்டிலிருந்து படமாக வந்தால் ஓகோ என்கிறார்களே என்று வேதனைப்பட்டார்.

பெருமிதத்தில் சிறந்த அவர் முகம் திடீரென சோகத்தில் கூம்பியது. எப்படித்தான் உடனே முரண்பட்ட உணர்ச்சிகளை அவரால் முகத்தில் வெளிப்படுத்த முடிகிறதோ?

நடிகரல்லவா?

ஈழத் தமிழ் நாடகத்துறையில் பரிச்சயமானவர்களுக்கு கீழ்கரவை பொன்னையன் என்ற பெயரைவிட ‘வில்லங்கம்’ என்ற பெயர்தான் பரிச்சயமானது. வில்லங்கமான ஒரு ஆளாக ‘வில்லன்கள்’என்ற நாடகத்தில் நடித்ததால் தான் இப்பெயரே நிலைத்து விட்டது. அதனாலொன்றும் அவர் வில்லங்கமான ஆளல்ல, “இதயம்” என்ற நாடகம்தான் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக்கொடுத்து.

இரு சகோதரர்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார்கள். இந்த உண்மை அண்ணனுக்குத் தெரிந்து விடுகிறது. அவர்களது தந்தை இறந்து விட அவரதுஉருவத்துடன் ஒற்றுமையாக இருக்கும் தமையன் அந்தச் செய்தியை மறைத்து விட்டு தன் தம்பிக்கே அந்தப் பெண்ணைப் பேசி முடித்து வைக்கிறான். 72-ம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் வரவேற்பைப் பெற்ற கரவெட்டி வள்ளுவர் மன்றத்தின் “எதிர் பாராதது’ என்ற நாடகம் இது. எதிர்பாராத சம்பவம் கோவைகளைக்கொண்டு சஸ்பென்சின் உச்சிக்கு இட்டுத் செல்லும் இந்நாடகத்தில் தந்தையாகவும் தனயனாகவும் இரு வேடங்கள் தாங்கி இரசிகரின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இவர். இவரது நடிப்பும் பாவமும் தனக்கென தனி முத்திரையைப் பதித்துள்ளது என்று கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார். இந்நாடகத்தின் கதாசிரியரும் இவர் தான்.

நாடகத்துறையில் கதாதிரியராகவும் நடிகராகவும் பணியாற்றிய இவர் 74க்குப் பின்னரே சிறுகதைத் துறையில் கவனம் செலுத்தினார், மக்கள் வங்கியில் பணியாற்றவருமுன் ஐந்து ஆண்டுகள்வரை மாவட்ட நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றினார். அக்காலத்தில் பெற்ற பல அனுபவங்களும் அவை ஏற்படுத்திய தூண்டல்களுமே அவரை கதை எழுதத் தூண்டியது.

வறுமையில் தள்ளப்பட்ட தலைவனற்ற ஒரு குடும்பத்தின் மூத்தமகள் ஆனந்தி. அவளை உடலை விற்கத் தூண்டுகிறாள் தாய் – (நடக்குமா?) ஆனால் அவனோ ஒருப்படவில்லை. சிந்தனைக்குழப்பத்தோடு வின்சர் தியேட்டரடிக்கு வருகிறாள். தகப்பனை முன்னர் ஏமாற்றிவரின் மகன் காரில் வருகிறான். அவனது காரில் அடிபட்டு விழுகிறாள். அப்போது கூடிய கூட்டம் அவனைத் திட்டுக்கிறது. அப்போது தற்செயலாக அவ்வழி வந்த வருங்கால மாமனார் அவனைக் காக்க பொலிசிலிருந்து மறைக்க அடிபட்ட ஆனந்தியை தூக்கிப் பெற்றுத் தன் குடும்பத்துக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்துவிடுகிறாள். மானத்தோடு “ஒன்றை இழந்தால்-” என்ற ஈழநாடு வாரமலர் சிறுகதை 74-ல் வெளிவந்தது. பல குறைபாடுகளுடன் இருந்த போதும் வெளியிட்டு உற்சாகப்படுத்தியது ஈழநாடு.

விளைவு?

இப்போது அவரது தரமான கதைகளை அறுவடை செய்துள்ளது. பக்தியின் பெயரால் செடில் குத்தி வேடம் போட்டுப் பிழைக்கும் ஒரு சிறுவன். அவனால் வாழும் ஒரு குடும்பம். இதனைக் கண்டு துடிக்கும் தட்டெழுத்தாளனின் துடிப்பு. அண்மையில் ஈழநாட்டில் வெளிவந்த கதை. வாழ்க்கை அனுபவம் கதையாக விரிந்து கிறக்கிறது, அந்தச் சிறுவன் இரத்தம் சிந்துவது கண்டு மகிழும் சமுதாயம். கொதிக்கும் எழுத்தாளர். இப்படிப் பல கதைாள் இப்போது. அனுபவ விரிவு தந்த படைப்புகள்.

இப்போதைய இவரது சிறுகதைகளின் நிறைவிலும் ஒரு குறை. இவர் கதைகளை விரித்தே எழுதுகிறார். சொற்சுருக்கமும் சம்பவச் செறிவும் இன்றி ஒரு சிறு விடயத்தையே பக்கம் பக்கமாக எழுதுகிறார். இது சிறுகதைக்குப் பொருந்தக்கூடிய பண்பல்ல. நாவலுக்கு.. அதற்கே பொருத்தமானது. எதிர்காலத்தில் அவரது நாவல் முயற்சி வெளிப்படும்போது அச்சிறப்பை நாம் ருசிக்கலாம்.

கீழ்சரவை பொன்னையன் சிறந்த மேடைப் பேச்சாளர். மேடை நடிகருக்கு மேடையில் பேசச் சொல்லியா கொடுக்க வேண்டும்? மேடையில் போலவே பழகுதமிழிலேயே நேரிலும் கதைக்கும்போது இனிமையாக இருந்தது. வட்டாரப்பேச்சுவழக்கு அதுதான் யதார்த்தம் என்று தமிழைக் கொச்சைப்படுத்தாமல் மேடையில் பேசுவது போல் பழகு தமிழைப் பாவிக்கலாமே – கதைகளிலும் என்றார். தமிழ்ப்பற்று மிக்க இவரது கதைகளிலும் இயன்றவரை அதை கைக்கொள்ள முயற்சிப்பது கவனிக்கத்தக்கது.

‘எமக்கு நிறையக்கடமைகள் இருக்கின்றன. கருத்தூன்றி அக்கடமைகளைச் செய்வோம் சமுதாயத்துக்கு’ என்கிறார் அவர்.

– ஈழநாடு வாரமலர், 24-06-1979.