கசேநா ஸ்டூடியோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 2,762 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணன், நாகராஜன், சேகர் மூவரும் புகுமுக வகுப்பு மாணவர்கள், கல்லூரி விடுமுறை விட்டதும் எப்படிப் பொழுதைப் போக்குவது என்று மூன்று பேரும் ஆலோசனை செய்தார்கள்.

திடீரென்று நாகராஜன் ஒரு துள்ளுத் துள்ளினான்.

“டேய்! ஒரு பிரமாதமான ஐடியாடா?” என்றான்.

மற்ற இருவரும், “சொல்லித் தொலை!” என்று உத்தரவு கொடுத்தார்கள்.

“டேய், ஸ்டூடியோ வைக்கலாம்டா!” என்று தன் ஐடியாவைக் கூறினான் சேகர்.

“டேய். ஸ்டூடியோ வைத்தால் எப்படிடா கட்டுப்படியாகும்? எவண்டா நம்ம படத்தில் நடிக்க வருவான்?”

”அவசரக் கொடுக்கு, சும்மா இருடா!” என்றான் கண்ணன்.

நாகரஜன், ”அட மண்டு! சினிமா ஸ்டூடியோ வைத்தால் விவேகானந்தர் பாறையில் உட்கார்ந்து ஜபம் பண்ண வேண்டியது தான். நான் சொல்வது போட்டோ ஸ்டூடியோ. நமக்கோ டெவலப்பிங், பிரிண்டிங் எல்லா டெக்னிக்கும் தெரியும். வருமானம் நிறைய வரும்!” என்று கூறினான்.

இந்த யோசனை திருப்தி தந்ததால் மூவரும் அடுத்த நாளே ஸ்டூடியோவுக்குத் திறப்பு விழா நடத்திவிடுவது என்று முடிவு செய்தார்கள்.

“ஸ்டூடியோவின் திருநாமம் என்னவோ?” என்றான் கண்ணன்.

சேகர், “சேகர் ஸ்டூடியோ!” என்றான்.

“நாகராஜ் ஸ்டூடியோ!” என்றான் நாகராஜன்.

“போடா! நான் சொல்கிற மாதிரி வைக்கலாம். நம் மூன்று பேரின் பெயர்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்துக் கசேநா ஸ்டூடியோ என்று வைப்போம்” என்றான் கண்ணன்.

அந்தப் பெயர் மூவருக்கும் பிடித்திருந்தது. சில நிமிடங்களில் புதிய போட்டோ ஸ்டூடியோவின் பெயர்ப் பலகை மூவரின் கைவண்ணத்தாலும் உருவாயிற்று. கண்ணனின் வீட்டு வாசலில் சைன் போர்டை மாட்டினார்கள். டெவலப்பிங், பிரிண்டிங் முதலியன செய்வதற்கு ‘டார்க் ரூம்’ தேவையானதால் கண்ணனின் ரூம் இருட்டடிப்புச் செய்யப் பட்டது. வீட்டிலிருந்த போர்வை, ஜமுக்காளம், ஆகியவை வெளிச்சத்தை மறைக்க உதவின. டெவலப்பர், ஃபிக்ஸர் ஸொலுஷன் முதலியவற்றைக் கரைத்து வைக்க வீட்டிலிருந்த பினாஸ்டிக் ‘டிரே’க்கள் பயன்பட்டன.

போட்டோ எடுக்கவும் அந்த நாள் காமிரா ஒன்றைச் செப்பனிட்டுக் கொண்டார்கள். என்லார்ஜிங் செய்யவும் அதையே பயன்படுத்த நினைத்தார்கள். ‘டேபிள் லாம்ப்’பின் வாயில் ஒரு சிவப்பு ‘செலபன்’ பேப்பரை ஓட்டி, ‘ரெட் லாம்ப்’பாக மாற்றிக் கொண்டார்கள்.

இப்படியே ஒவ்வோர் உபகரணமும் தயார் ஆயிற்று. அடுத்த நாள் திறப்புவிழாவுக்காக ரெடியாக இருந்தது, கசேநா ஸ்டூடியோ.

அன்று, காலை மணி எட்டு. ஸ்டூடியோ வாசலில் ஃபிலிம்ரோல் கட்டியிருந்தது. கிப்பனுக்குப் பதிலாக திறந்து வைப்பவராகத் திருவாளர் சேகர் கையில் கத்திரிக்கோலுடன் வந்து நின்றிருந்தார். மணி எட்டேகாலுக்குத் திருவாளர் சேகர் ஃபிலிமைச் கத்தரித்துத் திறப்பு விழா நடத்தினார். எல்லாருக்கும் சந்தனத்துக்குப் பதிலாக டெவலப்பர் வழங்கினார்கள். அத்துடன் விழா முடிவடைந்தது. கல்லாவில் அமர்ந்து தொழிலை நாகராஜன் தொடக்கி வைத்தான். கண்ணன் முதன் முதலாகக் காமிராவை முடுக்கிவிட்டான். ‘கசேநா ஸ்டூடியோ’ இயங்க ஆரம்பித்தது.


காலை மணி மணிக்கு ஒரு மனிதர் அவர்களுடைய ஸ்டூடியோவுக்கு வந்தார். அவர் கையில் ஒரு ஃபிலிம் ரோல் இருந்தது.

வந்த மனிதர் கண்ணனிடம், “இந்த ரோலை டெவலப் செய்து பிரண்ட் போட எவ்வளவு ஆகும்?” என்று கேட்டார்.

கண்ணன், “டெவலப் செய்ய 60 பைசாவும் பிரிண்ட் என்றான். ஒன்றுக்கு 40 பைசாவும் ஆகும்”

“அதெல்லாம் முடியாது! டெவலப் செய்ய 40 பைசாவும், பிரிண்ட் ஒன்றுக்கு 20 பைசாவும் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் வேறு ஸ்டூடியோவுக்குப் போகிறேன்” என்றார் அந்த மனிதர்.

தேடிவந்த ‘முதல் போணி’யை விட்டுவிடக் கண்ணனுக்கும் மனமில்லை. ஆகவே பக்கத்தில் அமர்ந்திருந்த பார்ட்னர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சரி, சாயத்தரம் ஆறு மணிக்கு வாருங்கள். ரெடியாக வைத்திருக்கிறேன். அட்வான்ஸ் ஒரு ரூபாய் கொடுங்கள்” என்றான்.

அந்த மனிதர், “அதெல்லாம் முடியாது. படம் கைக்கு வந்தவுடன் தான் பணம் தருவேன்!” என்றார்.

சுண்ணன் சரி என்று தலையை ஆட்டிவிட்டு, அந்த மனிதருடைய அட்ரஸை ஒரு கவரின் மேல் குறித்துக் கொண்டு அவரை அனுப்பி வைத்தான்.

பிறகு ‘டார்க் ரூமி’ல் அந்த ஃபிலிம் ரோலை டெவலப் செய்த கண்ணன் நெகடிவ்வை எடுத்துப் பார்த்ததும் அவன் முகம் கெரசின் குடித்தது போல் ஆயிற்று.

காரணம் புரியாமல் அவனருகில் வந்த மற்ற இருவரும் கண்ணன் கையில் பார்த்தது பிம்பமே இல்லாத வெள்ளை நெகடிவ்.

கண்ணனுக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. தான் தவறு ஏதாவது செய்து படம் அப்படி வெளிறிக் கிடக்கிறதோ என்று.

ஆனால் மற்ற இருவரும் அவன் குழப்பத்தைத் தெளிவு செய்த பிறகுதான் அவனுக்குப் புரிந்தது. தவறு அவன் மேல் இல்லை.

“படம் ‘எக்ஸ்போஸ்’ செய்யப் பட்டிருந்தால் படம் கறுப்பாகப் பிம்பமேயில்லாமல் கிடைக்கும். படம் வெள்ளையாகப் பிம்பமில்லாமல் இருந்தால் போட்டோ எடுத்தவர் செய்த தவறுதான் அது!” என்றான் சேகர்.

“அதெல்லாம் சரிடா! இப்போ அவன் வந்து நாம்தான் படத்தைக் கெடுத்து விட்டோம்னு சொல்வானேடா! அவனுக்கு என்ன பதில் சொல்லது?”

“அவனிடம் அவன் செய்த பிசகைச் சொன்னால் போச்சு!”

“அப்படி அவன் எதையும் ஒத்துக் கொள்ளாமல் ஃபிலிம் ரோல் வேண்டுமென்று கேட்டால் பழைய ‘எக்ஸ்போஸ்டு’ ரோலைக் கொடுத்து அவனை அனுப்பிவிடுவோம். அது ‘ எக்ஸ்போஸ்டா, அன் எக்ஸ்போஸ்டா’ என்று அவன் என்னத்தைக் கண்டான்?” என்றான் கண்ணன்.

மூவரும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.


மாலை மணி ஆறு. காலையில் ஃபிலிம் ரோலைக் கொடுத்த மனிதர் வந்தார்.

“இதுக்கெல்லாம் பங்க்சுவலாக வருவான்கள்!” என்று முணுமுணுத் தான் சேகர்.

அந்த மனிதர், “என்ன டெவலப்பிங், பிரிண்டிங் எல்லாம் முடிந்து விட்டதா?” என்று கேட்டவுடன் கண்ணன், “கொஞ்ச நேரம் இருங்கள் சார்! நெகடிவ் இன்னும் காயவில்லை” என்று சாக்குச் சொன்னான்.

எத்தனை நேரம்தான் சமாளிக்க முடியும்? மணி ஏழானவுடன் ஒரு கவரில் வைத்து அந்த ரோலை அவரிடம் கொடுத்தான் சேகர்.

ஆவலுடன் தாம் எடுத்த முதல் ரோல் ஒழுங்காக வந்திருக்கிறதா என்று பார்த்த அந்த மனிதரின் கண்கள் சிவந்தன. கோபத்துடன் கண்ணனின் முகத்துக்கு நேராக அந்த ரோலை ஆட்டிக்கொண்டே, “என்ன ஐயா இது? ஒரே வெள்ளையாகப் பிளாஸ்டிக் பேப்பர் போல இருக்கிறது?” என்று கேட்டார்.

“நீர் போட்டோ எடுத்த லட்சணத்துக்கு வெள்ளையாக இல்லாமல் கறுப்பாகவா இருக்கும்?” என்று கேட்க நினைத்த நாகராஜன் கோபத்தை அடக்கிக்கொண்டான். “ஸார் நீங்கள் கொடுத்த ரோலைத் தான் நாங்கள் ப்ராஸஸ் செய்தோம். வெறும் பிளாஸ்டிக் பேப்பரை அல்ல. உங்கள் காமிராவில் ‘ஷட்டர்’ சரியாக ‘ஓபன்’ ஆகியிருக்காது. ஃபிலிம் துளிக்கூட எக்ஸ்போஸே ஆகவில்லை. அல்லது நீங்கள் லென்ஸ் காப்பை (Lens cap) எடுக்காமலேயே போட்டோ எடுத்திருக்க வேண்டும்!” என்று பிரசங்கம் செய்தான்.

அந்த மனிதருக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. தான் ‘லென்ஸ், காப்’பைக் சுழற்றாமலேயே ‘கிளிக்’ செய்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். என் போட்டோ கிராபியைப் பற்றி அப்படி மட்டமாக நினைத்துவிடாதீர்கள். புத்தம் புதிய காமிராவில் ஏது ஐயா ரிப்பேர்? நீங்கள் தான் ஏதோ டெவலப்பிங்கில் ‘மிஸ்டேக்’ செய்துவிட்டீர்கள்! எனக்கு இந்த ரோலுக்குப் பதிலாக வேறு புது ரோல் கொடுத்தால் நான் ஆச்சு!” என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

கண்ணனின் ஏற்பாட்டின்படி அந்த மனிதருக்குப் ‘புதிய’ ஃபிலிம் ரோல் கொடுக்கப்பட்டது.

அவரும் பெருமிதத்துடன் வெளியே சென்றார்.

கண்ணன் சேகரை, ‘”எந்த ரோலை எடுத்து அவனுக்குக் கொடுத்தாய்?” என்று கேட்டான். சேகர் பெருமிதத்துடன் ஒரு ரோலைச் சொல்ல, கண்ணனுக்குக் கோபம் வந்தது. “டேய் மண்டு! அந்த ரோலில் காலையில் தாண்டா புது ஃபிலிமைச் சுற்றினேன்!” என்று அலறினான்.

சேகர், “அட பாவி! நேற்றுச் சாயந்தரம் நான் பார்த்தபோது அந்தப் பெட்டியில் இருந்தது. வேஸ்ட் ஆன ரோல்ன்னு சொன்னயேடா!” என்றான். ”சரி! நம் நஷ்டக் கணக்கில் ஐந்து ரூபாயை எழுதிவிடு!” என்றான்.


இன்னொரு நாள், ஒரு கிராமத்தான் ‘கசேநா ஸ்டூடியோ’ வுக்கு விஜயம் செய்தான். அதுவும் அவனாக வரவில்லை. தெருவில், பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைக் கண்டது போல் வெறித்துக் கொண்டு சென்றவனை அவர்கள் தான் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். அவனை அழகான போஸில் போட்டோவும் எடுத்து வைத்தார்கள்.

படத்தை டெவலப் செய்து பிரிண்ட் போட்டுக் கொடுத்தவு டன, “நல்லாத்தான் இருக்கு!” என்றபடி தன் சுருக்குப் பையில் அதை வைத்துக் கொண்டு நடையைக் கட்ட ஆரம்பித்தான் அந்த நாட்டான்.

கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தி, “யோவ்! பணம் கொடுக்காம போறியே. நீ நல்லா இருப்பியா?” என்றான்.

அந்த ஆசாமியோ, “ஏதோ நீங்கள் எல்லாம் அன்பா, ஆசையாக் கூப்பிட்டதனாலே தான் நான் வந்து படம் எடுத்துக்கிட்டேன். என்னாலே உங்களுக்கு வரும்படி வேறே! எங்கிட்டயே பணம் கேட்டா எப்படி?” என்றான்.

“வரும்படியா? என்ன ஐயா உளர்றே?” ‘என்று மூவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.

உடனே அவன், ”பின்னே! இதை நீங்க கொட்டாயிலே போட்டுக் காண்பிக்க மாட்டிங்களா? என் படத்தைப் பார்க்க எல்லாரும் வருவாங்க இல்லியா, துட்டுக்குடுத்து?” என்று அளக்க ஆரம்பித்தான்.

மூவரும், “உன் ராஜகளை மூஞ்சிக்குச் சினிமாப் படம் வேறே எடுப்பாங்களோ?’ என்று வாய்க்குள் பொருமினார்கள்.

உடனே அவன், “என்ன நான் சொல்றது நெசந்தானே?” என்று வேறு கேட்டான்.

கண்ணன், “அது வேற ஸ்டூடியோ. இது வேறே ஸ்டூடியோ. இது வெறும் போட்டோப் படம் எடுக்கிற ஸ்டூடியோ தான்!” என்று விளக்க ஆரம்பித்தான்.

அந்த எமகாதகனோ, “அதெல்லாம் முடியாது. நான் சொன்னாச் சொன்னதுதான். பணம் பைசா கூடக் குடுக்க மாட்டேன். ஆமா!” என்று கூறிவிட்டுக் கண்ணனைத் தள்ளி கொண்டு வெளியேறினான்.

அவன் போவதையே எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த மூவரும், வீதியிலே போகிற சனியனை விலைக்கு வாங்கிய கதை ஆயிற்றே என்று வருந்தினார்கள்.

அன்று மாலையே அவசரக் கூட்டம் நடந்தது. ‘நமக்கும் ஸ்டூடியோவுக்கும் ஒத்துவராது!’ என்று மூவரும் தீர்மானித்து, அதற்கு மூடுவிழா நடத்தத் தீர்மானித்தார்கள். அடுத்து அவர்கள் கணக்குப் பார்த்த போது நஷ்டம் சுமார் பதினைந்து ரூபாய்!

– 01-03-1971 கண்ணன் இதழில் வெளியானது.

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *