ஒரே முத்தம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 12,701 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோடை நாளின் மின்னல்போல் அவள் நெஞ்சில் புதியதோர் எண்ணம் தோன்றிற்று. இடதுகைக் கடிவாளத்தை அசைத்தாள். குதிரை செங்குன்று நோக்கிப் பறந்தது. தோழிகளும் தம் குதிரைகளை அதே பாதை நோக்கித் துரத்தினார்கள். 

செல்வியும் தோழிமாரும் செங்குன்றை யடுத்துள்ள கண்ணிச் சோலையை அடைந்தார்கள்.தமது குதிரை களை நாவல் மரம் ஒன்றில் கட்டினார்கள். அழகாய் அமைந்த அச்சோலையில் நுழைந்தார்கள், மருளும் பார்வையுடைய மான்கள்போல். 

உடுக்கள் நிரம்பிய நீலவானம்போல் பச்சைத் தழை கள் அளாவிய மரங்களில் மலர்கள் குலுங்கின. எங்கணும் கொடிப் பூக்கள், புதர்ப்பூக்கள் தரையில் அழகு கொழித்தன, பூஞ்செடிகளின் கால்களை நோக்கி மடை கோலிவிட்ட தண்ணீர் சாரை சாரையாய் ஓடிக்கொண்டி ருந்தது. அமைதியில் ஊடுருவிப் பாய்ந்தது பறவைகளின் இன்னிசை. புதுப்பெண்கள் போல் ஒரு சாயலாக மயில் கள் ஒதுங்கி ஒதுங்கி நடந்தன. 

இவை செல்வியின் உள்ளத்தைக் கவர்ந்தன. கவிதைக் குரிய அழகின் கூட்டத்தை அவளால் அளவிட முடிய வில்லை. அவள் பேசுவாள், ஆயினும் ஊமையானாள். செக்கச் செவேலென்று பூத்திருந்த செங்காந்தள் மலர் களையும், அவைகளை அடுத்து உயரத்தில் தொங்கும் பொன்னிறமான சரக்கொன்றை மலர்களையும் தோழி கள் கண்டார்கள். அக்காட்சி ‘இரப்பவர் இல்லை ஒன்று ஏந்திய கைகளில் கொடையாளிகள் பொற்காசுகளைச் சொரிவதாகும் என்ற கவிதை செய்து கொண்டிருந்தார் கள். அச்சமயம் புள்ளிமான் ஒன்று வேறொரு பக்கத்தில் செல்வியை அழைத்துக்கொண்டு போயிற்று. 

கதிரவன் மேற்றிசையைத் தழுவும் நேரம் ஒரு பக்கம் பிரிந்துசென்ற செல்வி, சிறிது சோர்வால் அங்கிருந்த பளிங்கு மேடை ஒன்றில் அமர்ந்தாள். அவளுடைய நீலவிழிகள் உலவிய இடத்தில் காதல் விளைக்கும் ஆண் மயிலும் பெண் மயிலும் ஒன்றை ஒன்று கண்ணாற் சுவைத்தபடி இருந்தன, அந்தக் காதல் வெள்ளம் இரண் டிற்கும் நடுவில் ஒரு விரற்கடைத் தூரந்தான் பாக்கி, 

செல்வி தன் பார்வையைத் திடீரென்று மறுபுறம் திருப்பினாள். அவளுடைய ‘தன்னந் தனிமை’யை அவளுக்கு நினைவை உண்டாக்கின, இணை மயில்கள் அவ்ளுடைய இளமையின் இயற்கை அவளைக் கண்ணீர் விட வைத்தது, அவள் எழுந்தாள், தோழிமாரைத் தேடி நடந்தாள். 

மற்றொருபுறம் செங்குன்றூர் இளவரசர் மெரு கேற்றிய கருங்கல்மேடை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந் தான். ஆயினும் அவனுடைய இளமையும், அழகும், ஒளியும் மாத்திரம் தூங்காமல் தம்மை நாடிவரும் உயிருக்கு மற்றோர் உயிரை அளிக்கக் காத்திருந்தன. 

அவள் அவனைப் பார்த்தாள்; அவளுடைய கெண்டை விழிகள் ஆடாமல் அசையாமல் இருந்தன அவள் இவ்வுலகை மறந்தாள். 

அவனது சிகை புறக்கழுத்தளவு கத்தரித்து விடப்பட்டி ருந்தது. கதிர்விடும் விரிந்த நெற்றியில் மேலேறிய கறும்புருவம் ஒளி வீசிக் கிடந்தது. அவனுடைய இரண்டு உதடுகளின் கடைக் கூட்டில் உயிர்க்களை பின்னிக் கொண்டிருந்தது. அவனுடைய மார்பும், மார்பிற்கிடந்து ஒளி செய்யும் நவமணிப் பதக்கங்களும் உதயகிரியும் இளம்பரிதியுமாக விளங்கின. 

அவள் கண்களில் புதியதோர் ஒளி உண்டாயிற்று. அவள் முகமண்டலம் நிறைய வியப்பு! நெஞ்சில் காதற் பெருக்கு! அவன் அழகு நிலவையும். கதிரையும் மின்னை யும், பொன்னையும் கொண்டு வல்லமை ஆக்கிய சித்திரமோ என்று ஐயப்பட்டாள், அந்த ஆண்மையின் வடிவில் அறியப்படும் மற்றொரு வீர வடிவம், கேடயத் தோடு வைக்கப்பட்டிருக்கும் நீண்ட வாளாயுதம் என்று உவமித்தாள். 

அவன் தோற்றம் அவளை உயர்நிலையிற் சேர்த்தது. கண்ட மாத்திரத்தில் அளவற்ற இன்பத்தை உண்டாக்கும் அவனுடைய திருவுருவமானது. கேட்ட மாத்திரத்தில் இன்பம் விளைக்கும் செந்தமிழ்க்குச் சமம். 

அவன் திடுக்கிட்டெழுந்தான். அவள் திகைத்தாள். 

இருவர் பார்வையும், இருவர் மனமும் அமைதி பெற்ற பின் அதிசயத்தோடு நீ யார் தனியாக என்று கேட்டான் ‘நான் கொற்றவேல் மன்னன் மகள். என் பெயர் செல்வி’ என்று கூறினாள். அவள் கொஞ்சம் நாணத்தால் உடை ஒதுக்கித் தலை குனிந்திருந்தாளா யினும், அந்தக் கட்டழகனின் நல்ல பதிலை எதிர்பார்த் தாளாதலால் சற்று நிமிர்ந்து புன்சிரிப்புடன் அவனுடைய முகத்தை மற்றொரு முறை பார்த்தாள். அவனும் அவள் முகத்திற் சிந்தும் அழகைத் தன் பார்வையால் ஏந்தினான். 

அவள் வாடை யுயர்ந்த மங்கை! மிதமிஞ்சிய பருமனில்லாத மின்னற் சுரம்பொன்ற மேனியுடையவள் மெல்லிய கருங்குழலின் பின்னல், பின்னால் நீண்டு தொங் கிற்று கருநாகம்போல்! நிலவுபோல் வெண்ணிறத்தையும், நிழல்போல் மேன்மையையும் உடைய. அவளது ஆடை யான்து மேனியின் ஒளியை மறைத்துவிட முடியவில்லை. பிறைபோன்ற நெற்றி, கருவிழி, செவ்விதழ், முல்லைப்பல் ஆகிய இவைகள், வேண்டுமென்று சிரிப்பதன்றி இயற்கை யாக நகைப்பைக் கொட்டிக் கொண்டிருந்தன. 

ஆயினும் அவன் ‘அவள் பகை அரசனின் மகள்’ என்பதை எண்ணினான். தன் நெஞ்சையும் உயிரை யும் அளாவிய அந்த அழகை வலிய வெளியே இழுத்துப் போட்டான்? வாய் நிறைந்த அமுதத்தை வேண்டு மென்றே கீழே உகுத்தான்; உடல் சிலிர்க்க வந்த தென்றலை விட்டு வெதுப்பும் அறையில் குடிபோக முன்றான். அந்த அழகின் ஒளி புக வேண்டாம் என்று தன் கண்ணை இமையாமல் மூடினான். அவள் வாய் மலரின் செந்தமிழ்த்தேன் வந்து பாயாமல் தன் காதுக்குக் தாழிட்டான். 

என்னை நீங்கள் ஒப்புகிறீர்களா? – என்று அவள் ற்ற முடியாத காதல் தூண்டக் கேட்டாள். 

செல்வியே, ஒன்றை ஒன்று தழுவும் நமது இரண்டு உள்ளத்தை, நம்மிரு நாட்டின் பழம் பகையானது பிரிக் கிறது. என் அன்னை நாட்டில் ஒருத்தி யிருக்கிறாள். அவள் உன்னினும் அழகுடையவள் அல்ல எனினும் அவள் என் பகையரசனின் மகளல்ல… என்று கூறி மறுத்தான். 

இதைக் கேட்ட செல்வி உள்ளந் துடித்தாள். பகை யுள்ளத்தைத் தாண்டி அவனுடைய அன்பைத் தன்னிடம் ஓடிவரும்படி செய்ய அவளால் முடியாமற் போயிற்று. 

‘என் உள்ளத்தில் குடிபுகுந்தவரின் பெயர் என்ன? அதையாவது கூறலாமா? என்று பரிதாபமாகக் கேட் டாள். இளவரசன் தன் பெயரைச் சொன்னான் ‘வேல் மறவன்’ என்று. 

உள்ளம் ஓடிந்த செல்வி தன் உயிரைச் சுமந்து கொண்டு தள்ளாடி நடந்தாள். செல்வி தன் தோழிமாரு டன் தன் மாளிகை சென்றாள். அவனையே நினைத்திருந் தாள் மணித்துளிதோறும். ஒரு நாள் போவது அவளுக்கு ஓர் யுகம் போவதாயிருந்தது. இவ்வாறு கழிந்த நாட்கள் அவள் கணக்குபடி வருடங்கள் ஆயின. வேல்மறவன் தாய் நாடாகிய செங்குன்றூருக்கும் செல்வியின் தாயக மாகிய கேணிச்சுரையூருக்கும் சண்டை மூண்டது. 

கேணிச்சுரையூரின் கோட்டை வாசலைக்கடந்து எதிர்ப்படை அரசமாளிகையை முற்றுகையிட்டு விட்டது. கேணிச்சுரையூரின் காக்கைக் கொடி பிடிபடும் என்று இரு பக்கத்தாறும் உறுதியாக்கலானார்கள். கேணிச் சுரையூரின் கவிஞர்கள் தமது தாய்நாட்டின் பெருமையைக்காக்க அந்நாட்டு இளைஞருக்கு எழுச்சியை உணர்ச்சியைத் தூண்டினார்கள். ஆனால் அந்த நாட்டுப் பெண்கள் போரிற் கலந்துகொள்ளக் கூடாது என்பது அந்நாட்டின் சட்டமாதலால் பெண்களின் எழுச்சி அடைந்த தோள்கள் அடக்கப்பட்டன. கேணிச் சுரையூரில் வயதுவந்த இளைஞர் அனைவரும் போர்க்கோலம் பூண்டார்கள். இனந் தெரியாத இளைஞன் ஒருவன் கேணிச் சுரையூரின் படைக்குத் தலைமை தாங்கலானான். 

அரச மாளிகையை முற்றுகை யிட்டிருந்த செங்குன் றூர்ப் படையில் இனந்தெரியாத அந்தச் சிங்க இளைஞன் சிறுபடை ஒன்றுடன் புகுந்தான்! செங்குன்றூர்ப் படை சிதறி ஓடிற்று! அது கோட்டை வாசலுக்கு வெகு தூரத் தில் அமைந்திருந்த தன் கூடாரத்தை நோக்கிப் பறந்தது. 

கேணிச் சுரையூர் அரசன் மகிழ்ந்து, கூடாரத்தை. நோக்கி ஓடிய எதிரிகட்குப் பெண்ணுடைகளைக் கழுதை மேல் அனுப்பினான். 

கோட்டை வாசல் கடந்து உள் நுழைந்த பகைவர் திருப்பியடிக்கப்பட்டால் அவர்கள் எதிரிகளால் தரப்படும் பெண்ணுடைகளை அணிந்துதான் மீண்டும் போர் செய்யவேண்டும் என்பது இரு நாட்டைப் பொறுத்த கட்டளை. 

செங்குன்றூாப் படைக்குத் தலைமை வகித்திருந்த வேல் மறவன் கழுதை தூக்கிவந்த பெண்ணுடைகளை வெட்கத்தோடு உடுத்துக் கொண்டான். 

மீண்டும் போர்க்களத்தில் இரு பக்கத்துப் போர் முரசு களும் போரை ஆரம்பித்தன. உறவென்பதில்லை. நண்பென்பதில்லை. தம் தம் தாய்நாட்டின் வெற்றி ஒன்றே குறியாகக் கொண்டு போர் செய்தார்கள். தலைகள் பனங்குலை சரிவது. போல் சரிந்தன. போர் வீரர்கள் ஒருவர்க்கொருவர் விழுக்காடு நின்று வாட்போர் நடத்தினார்கள். 

இனந் தெரியாத அந்தப் படை வீரனை நோக்கி அதோ நாணத்தால் முகம் மறையும்படி பெண்ணுடை யால் மூடி நிற்கும் அந்த வீரன் தான் பகைப் படைக்குத் தலைவன்’ என்று கூறினான் ஒரு வேவுகாரன். இனந் தெரியாத அப்படைத் தலைவன் அவன் மேற் பாய்ந்தான்! இரு தலைவர்க்கும் வாட்போர் மூண்டது. விரைந்து சுழலும் இரு வாள்களும் மின்னல் ஒளியை உண்டாக்கின. போர்க் கலையின் நுட்பத்தை, மற்ற வீரர்கள் உற்றுக் கவனிக்கலானார்கள். தம் தம் போர்த் தொழிலையும் மறந்து அவர்கள் தம் தலைவர்களின் வெற்றி தோல்வியை எதிர் பார்ப்பதையும் மறந்துபோனார்கள், போர்த் திறமை வெகுநேரம் நீடிப்பதால் கலை நுட்பம் தமக்குப் புரியும் என்று நினைத்தார்கள். 

முடிவில், 

வாட்போர் செய்திருந்த அந்த இருதலைவர்களின் ரு மார்பிலும் ஒத்தகாலத்தில் இரண்டு வாள் முனைகள் நுழைந்து வெளி வந்தன. அதனால் இருவர் தோள்களும் தாழ்ந்தன. இரு மார்புகள் குருதியை உகுத்தன. கடை சாய்ந்து விழும் இரு தேர்கள்போல் இரு தலைவரும் ஒரு முகமாகச் சாய்ந்தனர். இருவர் உடைகளும் இடம்விட்டு நகர்ந்தன. இருவர் கண்களும் சந்தித்தன. கழுத்தளவு கத்தரித்து விட்ட சிகை. மேலேறிய நாகம்போன்ற பின்னல்! 

என் அன்பே என்று பதைத்தது வீரன் உடல்! என் அன்பே என்று அதிர்ந்தது செல்வியின் மலர் உடல். இருவர் தோள்களும் தழுவின காதற்பதைப்பால்! போகும் உயிர்கள் பிடித்து நிறுத்தப்பட்டன சிறிதுநேரம். 

குருதி சிந்திய போர் நிலத்தில் – அந்த மலர் மஞ்சத் தில் – ஒரே நேரத்தில் -ஒரே கணத்தில் இரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. 

அவை ஒரே ஒரு காதல் முத்தம், இரண்டு மரணம்! 

– முல்லை கதைகள், 1945ல் முல்லை இதழில் வெளிவந்த கதைகள், தொகுத்தவர்: முல்லை பி.எல்.முத்தையா, முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, முல்லை பதிப்பகம், சென்னை.

பாவேந்தர் பாரதிதாசன் பாவலர் வாழ்க்கை பயன்மரம், ஊருணி.யாவரும் கொள்வீர் இனிது. பாவேந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - மன்னர் மன்னன் 1891- ஏப்ரல் 29, புதன் இரவு 10-15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி, உடன் பிறந்தோர் : தமையன் சுப்பராயன், தமக்கை சிவகாமசுந்தரி, தங்கை இராசாம்பாள். 1895- ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக்கல்வி. இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *