ஒரு தலை




அவளைப் பார்த்தான் அவன்.
சூரிய ஒளி தாக்கிய பனி நீரைப் போல அவனுள் இருந்த எல்லாமே காணாமல் போய், அந்த வெற்றிடத் தில் அவள் புகுந்து சக்கென்று அமர்ந்து கொண்டாள். அப்படியே அவளைச் சுமந்து வந்தான், கிடைக்காத புதைய லாய்!
தலையணையில் அவன் சாயும் போதெல்லாம், அவள் தலையும் பக்கத்தில்!
மனம்விட்டுப் பேசினான்; முகம் வைத்துக் கொஞ்சி முயங்கினான்.
ரொம்ப நெருக்கமாகிவிட்டார் கள்.
அவன் தனிமையில் இருக்கும்போது வா என்றால் வந்துவிடுவாள்.
முட்டையின் மேல் படிந்து அடை காப்பது போல் காத்தான். அடை மழை போல் பிரியத்தைப் பொழிந் தான். ஆனந்த உலகில் சஞ்சரித் தான்.
நீடித்துக்கொண்டிருந்தது இப்படி.
சில நாட்கள் கழித்து….
முதன்முதலில் அவளைக் கண் டானே, அதே இடத்தில் இன்றும் கண்டான் அவளை.
நிறை மனசுடன் புன்னகைத்துக் கொண்டே அவளை நெருங்கினால்… வேற்று ஆளைப் பார்ப்பது போல மருண்டு திகைக்கிறாள்; விலகுகிறாள்!
‘ஓஹோ, அப்படியா! சரீ, போ!
எனக்குள் ஒரு நீ இருக்கிறாய்;
காலமெல்லாம் அவளோடு சுகித்திருப்பேன்’ எனச் சொல்லிக் கொண்டு திரும்பினான்!
– 24th ஜனவரி 2007
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |