ஒரு உறவு ஒரு பிரிவு
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2026
பார்வையிட்டோர்: 148
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்குத்துக்கு மாறாக கொஞ்சம் தாமதமாகத்தான் படுக்கையிலிருந்து எழுந்தேன். காலை கடன்களை முடித்துக் கொண்டு ‘நோரிசு’ சாலையிலுள்ள காப்பிக்கடைக்கு வந்தேன். தமிழ் நாட்டிலிருந்து கப்பலுக்குக் கப்பல் வந்துகுவியும் தமிழர்கள் கடை முழுவதும் நிரம்பி இருந்தனர்.
தோசைக்குச் சொல்லிவிட்டு, கடையின் மூலையில் இருந்த ஒரு மேசைக்குப் போய் உட்கார்ந்தேன். பல ஆண்டுகளாக வழக்கமாக அக்கடையில் காப்பி சாப்பிட்டுவிட்டு வருபவன் நான்.அதனால் கடை முதலாளி எனக்குக் காப்பியைக் கொண்டு வந்து வைத்தார். அதைக் கலக்கிக் கொண்டு தோசைக்காக காத்திருந்தேன். அப்போது அங்கு வந்தார் காத்தமுத்து.
‘என்ன காத்தமுத்து வேலைக்குப் போகலை?” என்றேன்.
“இல்லிங்க. உடம்புக்கு முடியலே. அதுதான் போகலே” என்று சொல்லிக் கொண்டே எனக்குப் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார் காத்தமுத்து.
அதற்குள் தோசை வந்து விட்டது. காத்தமுத்துக்குத் தோசை சொன்னேன்.
“இல்லிங்க. நான் பசியாறிட்டேன். எனக்கு வேண்டாம்” என்றார் அவர்.
‘அப்படின்னா காப்பியாவது குடியுங்க” என்றேன்.
காப்பி வந்ததும் குடித்தார். நானும் பசியாறி முடித்தேன். காசைக் கொடுத்துவிட்டு, “நாம் வீட்டுக் போகலாமா?” என்றேன்.
”சரி’ என்றார்.
இருவரும் பேசிக் கொண்டே என் வீட்டை அடைந்தோம்.
”ஊரிலிருந்து லெட்டர் வந்திருக்கு. அதைப் படித்துக் காட்டுங்க” என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தார் காத்தமுத்து.
“உங்க மனைவிதான் எழுதி இருக்காங்க” என்று சொல்லிக் கொண்டே அதைப் பிரித்தேன் கடிதத்தில்
அன்புள்ள கணவருக்கு அன்புடைய மனைவி காளியம்மா எழுதுவது. ஊரிலே நான், மருமவ, பேரப்பிள்ளை, நம்முடைய இன பந்துக்கள் எல்லாரும் நல்லா இருக்கோம். உங்க சுகத்தைப் பத்தி தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கேன். நான் உங்களுக்கு இதுக்கு முன் ரெண்டு மூணு கடுதாசி எழுதிவிட்டேன். அதிலே நம்முடைய பக்கத்து வீட்டு பாப்பாத்தி, கோடிவிட்டு கோமளம், அடுத்த தெரு அலமேலு எல்லாம் சிங்கப்பூருக்கு வந்துட்டாங்க. அவங்க மாதிரி நானும் அங்கு வரவேணும் என்று எழுதியிருந்தேன். ஆனா அதுக்கு நீங்க எதுவுமே சரியா பதில் எழுதலே. போன வாரம் பக்கத்து வீட்டு பாப்பாத்தி திரும்ப இங்கே வந்திட்டா. அவ வரப்போ கழுத்திலே அசோகச் சக்கரச் சங்கிலியும் கைநிறைய வளையல்களும் போட்டுக்கிட்டு, சிங்கப்பூர் சேலையும் கட்டிக் கொண்டு ரொம்ப ஜோரா வந்தா. அவளைப் பார்த்து நம்ம ஊரே மலைச்சு போச்சு. அவ சிங்கப்பூரிலே கப்பல் மாதிரி கார்கள் ரோட்டிலே ஓடுது. அண்ணாந்து பார்த்தா கழுத்து சுளுக்கிற அளவுக்கு ரொம்ப ரொம்ப உயரமான வீடு, எல்லாம் இருக்கு. சீனவங்க, மலாய்க்காரவங்க, வெள்ளைக்காரவங்க கூட இருக்காங்க. சீனப் பொம்பளைங்க சிலுவார் போட்டுக் கொண்டு இருப்பாங்க. ஆம்பிளைங்க பொம்பளைங்க எல்லாம் வேலை செய்யறாங்க என்று இன்னும் என்னென்னமோ சொன்னா. அதை எல்லாம் கேட்டதும் எனக்கு ஆசை ரொம்ப வந்துட்டுது. அதனாலே நீங்க என்னை அங்கே அழைக்க தோது செய்யுங்க. என் ஆசையை வெறும் ஆசையா ஆக்கிடாதீங்க.
உடனே பதில் போடுங்க. நான் அதுக்குள்ள பாஸ் போர்ட்டுக்கு ஏற்பாடு செஞ்சுடுறேன்.
இப்படிக்கு மனைவி காளியம்மா.
என்று எழுதியிருந்தது.
“என்ன படித்தது புரிந்ததா காத்தமுத்து?” என்றேன்.
“நல்ல புரிஞ்சதுங்க” என்றார் காத்தமுத்து.
”உங்க மனைவி ரொம்ப ஆசை படுறாங்க. இப்போதான் ரொம்ப பேர் இங்கு தங்கள் மனைவியை அழைக்கிறாங்க. நீங்களும் உங்க மனைவியை அழைத்து கொஞ்ச நாளைக்கு வைத்துவிட்டு அனுப்பி வையுங்களேன்” என்றேன்.
காத்தமுத்து எதுவும் பேசாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.
“இப்போதுதான் முன்பு மாதிரி அதிகமாக லீவு கொடுக்க மாட்டங்கராங்க. அதனாலே நீங்க ஊருக்குப் போவதும் கஷ்டமாக இருக்கு அதனாலே உங்க மனைவியை அழைத்தால் அவங்களைப் பார்க்காத கவலை உங்களுக்குத் தீரும்தானே?” என்றேன்.
“நீங்க சொல்லுவது சரிதான். ஆனா கொஞ்சம் நாள் ஆகட்டும் என்று பார்க்கிறேன்” என்றார்.
”அட நீங்க என்னய்யா கொஞ்ச நாளு கிஞ்ச நாளு என்னுட்டு” என்றேன்.
“இல்லிங்க. நான் என்ன சொல்ல வந்தேன்னா? எனக்கு இன்னும் கொஞ்ச நாளிலே வேலையில் மாத்தம் கிடைக்கப் போவதுன்னு கிராணி சொன்னார்” என்றார் காத்தமுத்து.
“அப்படியா? உங்க வேலையிலே என்ன மாற்றம் கிடைக்கப் போகுது?”
“அடுத்த மாதம் நம்ம கருப்பையனுக்கு வேலை முடியப் போகிறது. அதனாலே பெரிய வண்டியிலே அவர் பார்த்து வந்த வேலை காலியாகப் போகிறது. அந்த வேலைக்கு மாத்தி விடும்படி கிராணியைக் கேட்டேன். அவரும் சரின்னு சொன்னார். அந்த வேலைக்குப் போனால் சம்பளம் கொஞ்சம் கூட கிடைக்கும். அதுக்கு அப்புறம் பெண்சாதியை அழைக்கலாம் என்றுதான் இதுவரையில் ஒழுங்காக பதில் எழுதவில்லை” என்றார் காத்தமுத்து.
“சரி, சரி உங்க விருப்பப்படியே செய்யுங்க. நீங்க வாங்குற சம்பளம் உங்க பெண்சாதி வந்துட்டா சாப்பாட்டுக்கே போதாது. அப்புறம் நீங்க எப்படி ஊருக்கு வாங்கி அனுப்பிய கிஸ்தி பணத்தைக் கட்டமுடியும்?” என்றேன்.
“அப்போ நீங்களே இந்த கடுதாசிக்கு விவரமா பதில் எழுதிடுங்க” என்றார்.
காத்தமுத்துவைப் பற்றி ஏறக்குறைய பதினைந்து வருடமாக எனக்குத் தெரியும். அவரைப் பற்றியும் அவருடைய குடும்பத்தைப் பற்றியும் முழுமையாக என்னிடம் சொல்லி இருக்கிறார். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் திரை கடல் ஓடியும் திரவியம் தேட வந்த ஆயிரமாயிரம் தமிழர்களில் ஒருவர் காத்தமுத்து.
இந்தியாவில் அவர் ஊரிலிருந்து இவருக்கு முன் ஒரு சிலர் இங்கு வந்துவிட்டார்கள். அப்படி வந்தவர்களில் காத்தமுத்துவின் பால்ய நண்பர் ஒருவரின் உதவியால் இங்கு வர ஏற்பாடு செய்தார். அந்த நண்பரும் தன்னுடைய நண்பர் காத்தமுத்துக்கு உதவி செய்தார். அந்த உதவியால் காத்தமுத்து கட்டிய துணியோடு இங்கு வந்து சேர்ந்தார்.
மழைக்குக் கூட பள்ளியிலே ஒதுங்காத காத்தமுத்து கைநாட்டு வைச்சுதான் இங்கு வந்தார். அப்படி வந்தவருக்கு இங்கு என்ன கணக்கப்பிள்ளை வேலையா கிடைக்கும்? அவருக்கு உதவி செய்த நண்பர் காட்டிய வேலையில் போய் சேர்ந்தார். அதாவது அவர் நண்பர் வேலை செய்த அதே இடத்தில் இவருக்கும் வேலை கிடைத்தது. காத்தமுத்து நகர் சுத்தம் செய்யும் தொழிலாளியானார். அன்றையிலிருந்து இன்று வரை அவர் அந்த தொழிலாளியாகவே இருக்கிறார்.
காத்தமுத்து இங்கு வரும் பொழுது தன்னுடைய மனைவி காளியம்மாளையும், கைக்குழந்தையான மகன் முருகனையும் விட்டு விட்டு வந்தார். அவர்களுடைய நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்- துக் கொண்டு உழைத்தார். பலரைப் போல் தன் மனைவி மக்களை மறந்து தேடிய பணத்தைக் குடிப்பதிலோ, புகைப்பதிலோ பெண் சுகத்திலோ இழந்து விடவில்லை.
தான் தங்கி இருந்துவிட்டு வந்த குச்சி வீட்டை ஓட்டு வீட்டாக மாற்றினார். அந்த ஊரிலே இதுவரைக்கும் யாரும் படிக்காத அளவுக்கு தன் மகனைப் படிக்க வைத்தார். அவனுக்கு உரிய காலத்திலே ஊருக்குப் போய் கலியாணத்தைச் செய்துவைத்து விட்டு வந்தார். அவனுக்கு வேண்டிய அளவுக்குச் சொத்தும் வாங்கி வைத்துள்ளார். ஆனால் அவன் அதை எல்லாம் விட்டுவிட்டு இந்திய ராணுவத்தில் போய் சேர்ந்துவிட்டான். அதை எண்ணி எண்ணி காத்தமுத்து கவலைப்படாத நாளே இல்லை என்று சொல்லலாம்.
கர்த்தமுத்து இங்கு வந்த நாளிலிருந்து (லோரோங்லோலட்டில் ஜாலான் பெர்சே) இருந்த அரசாங்க குவார்ட்ஸில்தான் குடியிருந்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் அரசாங்க இடமாற்றத்திற்கு உள்ளாகி காலாங் பாருவில் அடுக்கு மாடி வீட்டில் குடியேறினார்.
நான் பணிபுரியும் அலுவலகமுள்ள ஆர்ச்சர்ட் சாலையில் பதினைந்து ஆண்டுகளாக காத்தமுத்து வேலை செய்து வருகிறார். அவரை நான் ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறைகளைத் தவிர மற்ற நாட்களில் பார்க்காமல் இருந்ததுஇல்லை.
காத்தமுத்துவும் தன்னுடைய சுகதுக்கங்களை என்னிடம் வந்து கூறாமல் இருந்ததில்லை. அவருக்கு உதவி தேவைப்படும் பொழுது நான் செய்ய தவறியதில்லை. என்னைப் போன்றே அவரும் அடக்கமும் அமைதியும் உடையவர். பரிவும் பாசமும் மிக்கவர். தன் வேலையில் விருப்பமும் பொறுப்பும் நிறைந்தவர். அதனாலோ என்னவோ அவர் மீது எனக்கு அதிக அன்புண்டு.
இதுநாள் வரையில் காத்தமுத்து சின்ன வண்டியில்தான் வேலை செய்து வருகிறார். அவருக்கு விரைவில் பெரிய வண்டியில் வேலை கிடைக்கப் போகிறது என்று அவர் சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
கையால் தள்ளிக் கொண்டு போகும் குப்பை வண்டியைச் சின்ன வண்டி என்றும், குப்பைகளை எடுத்துச் செல்லும் லாரிகளை பெரிய வண்டி என்றும் காத்தமுத்து போன்ற சாலை பெருக்கும் தொழிலாளி- கள் கூறுவார்கள்.
”சரி, நீங்க சொன்ன மாதிரி நான் விளக்கமாக கடிதம் எழுதுகிறேன்’ என்றேன்.
“ஆமாம் உடம்புக்கு முடியலே என்றீங்களே! டாக்டரிடம் போனீங்களா?” என்றேன்.
“இனிமேல்தான் போகணும் என்றார் காத்தமுத்து.
“உடனே புறப்படுங்கள்” என்றேன்.
காத்தமுத்து போய்விட்டார். அவருடைய மனைவி காளியம்மா- ளுக்கு அவர் சொன்ன மாதிரி விளக்கமாக கடிதம் எழுதத் தொடங்கினேன்.
காத்தமுத்து கூறியபடி ஒரு மாதத்திற்குப் பிறகு பெரிய வண்டியில் வேலை கிடைத்து விட்டது. அடுத்த வாரமே என்னிடம் வந்து ஐந்நூறு வெள்ளி பணம் வாங்கிக் கொண்டு போய் இமிகிரேஷனில் கட்டிவிட்டு மூன்று மாத விசா வாங்கி காளியம்மாளுக்கு அனுப்பி வைத்தார். காளியம்மாளும் தன்னுடைய நீண்ட நாளைய ஆசை நிறைவேறிவிட்ட சந்தோசத்தில் வந்து சேர்ந்தாள்.
காளியம்மாள் வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவள் தன் கணவனுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் கையால் சமைத்துப் போட்டு தன் கணவனைச் சாப்பிடச் சொல்லி பார்த்து மகிழ்ந்தாள். பூரித்தாள். காத்தமுத்துவும் தன் மனைவி கைப்பட சமைத்துப் போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்ட சந்தோசத்தில் இரண்டு மாதங்களில் கொஞ்சம் தடித்து விட்டார்.
வேலை முடிந்துவீட்டுக்கு வந்தநான் அந்தச் செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அந்தச் செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. அது பொய்யாக இருக்கக் கூடாதா! என்று எண்ணினேன். நேற்றிரவுதானே என்னை வந்து பார்த்துவிட்டு போனார்கள் காத்தமுத்துவும், காளியம்மாளும். இன்று காலையில் காத்தமுத்து இறந்து விட்டார் என்று சொன்னால் எப்படி நம்புவது? என்னால் நம்பவே முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடிய – வில்லை. காலையில் காத்தமுத்து வேலைக்குப் போன பெரிய வண்டி விபத்துக்குள்ளாகி விட்டதாம். வண்டியின் பின்னால் நின்றிருந்த காத்தமுத்து வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டு அவ்விடத்திலேயே இறந்து விட்டாராம். ‘ஐயோ! இது என்ன கொடுமை என்று எண்ணினேன்.
தன் பக்கத்து வீட்டு பாப்பாத்தி போல கழுத்து நிறைய அசோகச் சக்கர சங்கிலியும் கை நிறைய வளையல்களும் போட்டுக் கொண்டு ரொம்ப ஜோராக ஊருக்குப் போக வேண்டும் என்று எண்ணி வந்தாள் காளியம்மாள். ஆனால் மாங்கலியத்தை இழந்து. பொட்டிழந்து பூவிழந்து வெண்ணிற சேலை உடுத்தி, ஊர் செல்லும் காளியம்மாளை பார்த்து கண்ணீர் விட்டேன்.
காத்தமுத்து அந்தச் சின்ன வண்டியிலேயே இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்குமா? என்று எண்ணினேன். மறுகணம் நமக்கு மேல் பெரியவன் ஒருவன் இருக்கானே, அவன் எண்ணத்தை நம்மால் மாற்ற முடியுமா? என்று நினைத்துக் கொண்டேன்.
– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
September 30, 2026
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026
வேண்டுகோள்
மா.வீ.தியாகராசன்
September 27, 2026
