உனக்கு இஷ்டமானதைக் கொடு என்றது
கதையாசிரியர்: மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,301
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓருவன் தன் மரண காலத்திலே தன்னிடத்திலிருந்த பதினாயிரம் வராகன்களையும் தனக்குப் பழக்கமுள்ள ஒரு சாவுக்காரி கையிலே கொடுத்து, “என் புத்திரன் பெரியவ னான பின்பு இந்த வராகன்களில் உனக்கு இஷ்டமானதைக் கொடு” என்று சொன்னான்.
பின்பு சாவுக்காரி அதுகளைத் தன் வீட்டிலே கொண்டு போய் வைத்திருந்தான். பிள்ளை பெரியவனான பின்பு சாவுக்காரி இடத்திற்குப் போய்த் தன் தகப்பன் கொடுத்த பொருளைக் கேட்டான்.
அதற்குச் சாவுக்காரியானவன், “உன் தகப்பன் எனக்கு இஷ்டமானதை உனக்குக் கொடுக்கச் சொன்ன படியினாலே எனக்கு இஷ்டமானதிந்தத் தொகைதான்” என்று ஆயிரம் வராகன் கொடுக்கப் போனான்.
அந்தப் பிள்ளையாண்டான் வேண்டாமென்று விசனத்தை அடைந்துபோய் மரியாதைராமனிடத்திலே பிராது பண்ணினான். மரியாதைராமன் சாவுக்காரியை அழைப்பித்து விசாரித்து அவன் வாய்ச் சொல்லைக் கொண்டே “உனக்கு இஷ்ட மானது ஒன்பதினாயிரம் வராகனாகையால் நீ எடுத்துக்கொள்ள நினைத்தாய். அந்த ஒன்பதினாயிரம் வராகன் இந்தப் பிள்ளைக்குக் கொடுத்துவிடு. இந்தப் பிள்ளைக்குக் கொடுக்க நினைத்த உனக்கு இஷ்டமாகாத ஆயிரம் வராகனை நீ யெடுத்துக் கொள்” என்று தீர்ப்புப் பண்ணினான்,
ஊராருடைமைக்குப் பேயாய்ப் பறந்தால் வருமோ என்கிற பழமொழிப்படிக்குச் சாவுக்காரியினுடைய அதி ஆசை பயன்படாமற் போயிற்று.
– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |