இளிச்சவாயன் பட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2026
பார்வையிட்டோர்: 70 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் இருந்தது அந்த கோயில், சாயங்காலம் ஆறரைக்கு மேல் இருக்கலாம், இருப்பார்களா? சந்தேக மனதுடன் கோயில் வாசலில் செருப்பை கழட்டி வைத்து விட்டு, கை பிடித்து நடத்தி கூட்டி வந்த மகளையும் செருப்பை கழட்டி வைக்க சொல்லி அவளையும் கூட்டிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தான்.

தூரத்தில் நின்றவாறே விநாயகரை கை எடுத்து கும்பிட்டவன் கோயிலை சுற்றி தன் கண் பார்வையை சுழல விட்டான்.

ஆ’ அங்கே உட்கார்ந்திருப்பது… அவர்கள்தான்..!

மெல்ல அருகில் சென்றான். எங்கோ முறைத்து பார்த்தபடி உட்கார்ந்திருந்த முதியவளின் அருகில் சென்று “க்கும்” கணைத்தான்.

இவன் கனைப்புக்கு எந்த பதிலும் வரவில்லை. அதே பார்வையில் உட்கார்ந்திருந்தாள்.

ஏன் இப்படி கோபபட்டு உட்கார்ந்திருக்கீங்க?

இவனின் கேள்வி அவளை அசைக்க முடியவில்லை என்றாலும் முகத்தில் சலனம் தெரிந்தது.

முகத்தில் தெரிந்த சலனம் இவன் மனதுக்கு நம்பிக்கையை தர மெல்ல அவள் தோள் தொட்டு வாங்க வீட்டுக்கு போகலாம்.

ஹூஹூம், நான் வரலை, உன் பொண்டாட்டி கூட என்னால இருக்க முடியாது.

ப்ளீஸ், அவ குணம்தான் உங்களுக்கு தெரியுமே, விட்டு தள்ளுங்க, வாங்க வீட்டுக்கு.

என்ன பேச்சு பேசறா? என்னமோ இவளை நம்பி நான் உட்கார்ந்திருக்கறதா நினைச்சு என்னை என்னவெல்லாம் பேச்சு பேசறா !

நான் கேட்கறேன் வாங்க, கொஞ்சம் கொஞ்சமாக அவளை பேச்சில் அசைத்து கோயிலை விட்டு வெளியே கூட்டி வந்தான்.

வயது அறுபதுக்கு மேல் ஆகி விட்டது, இருந்தாலும் எடுத்ததெதுக்கெல்லாம் கோபம்., தெருவில் இவனுடன் அமைதியாக நடந்து வந்தாள், அவள் முகத்தில் கோபம் குறைந்திருந்ததால் மலர்ச்சி தெரிந்தது. கூட வந்த பேத்தியின் கையை இறுகப் பற்றியபடி அவனுடன் நடந்து வந்தாள்.

அலுத்து களைத்து வீடு வந்த பொழுது வீடு அமைதியாக இருந்தது. இவன் மனசுக்குள் அசெளகரிய உணர்வு. எதிர் கொண்டு அழைக்கும் மனைவி, சிரித்து கொண்டோ அல்லது முறைத்து கொண்டோ வாசலில் நிற்பவள் இன்று காணவில்லை.

உள் நுழைந்து எட்டி பார்க்க குழந்தைகள் இருவரும் படிப்பது போல் பாவனையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

மகளை அழைத்தான், அப்பாவை கண்டவுடன் முகத்தில் பயத்துடன் அருகில் வந்தாள். அம்மா எங்கே? பாட்டி எங்கே?

அவங்க இரண்டு பேருக்கும் பயங்கர சண்டை, பாட்டி கோபிச்சுகிட்டு வெளியே போயிடுச்சு, அம்மா உள் ரூமுல போயி படுத்துகிச்சி.

படுக்கை அறைக்குள் நுழைந்தான். முகத்தை தலையணையில் புதைத்தபடி படுத்து கிடந்த மனைவியை தொட்டு எழுப்பியவன், என்ன ஆச்சு?

என்ன ஆச்சா? கிழவி கூட என்னால இருக்க முடியாது, ஒண்ணா அவங்க இருக்கணும், இல்லை நான் இருக்கணும், குரலில் காரம்.

என்ன நடந்திச்சு? மெதுவாக ஆரம்பித்து கடைசியில் உப்பு சப்பில்லாத பிரச்சினையில் இருவரும் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். இதை அறிந்தாலும் வெளியே சொல்லவில்லை.

மகளை அழைத்தான். புத்தகத்தை கீழே வைத்து விட்டு எழுந்து வந்தவளை கை பிடித்து வா பாட்டியை கூட்டிட்டு வரலாம், உடை கூட மாற்றாமல் தெருவின் இறுதிக்கு வந்தான். எப்படியும் கோயிலில்தான் இருக்கவேண்டும், இந்த எண்ணத்துடனே மகளுடன் கோயிலுக்குள் நுழைந்தான்.

இரவு இருவரும் முறைத்தபடி இருந்தாலும் பேசி பேசி சமாதானப்படுத்தி ஒரு வழியாக எல்லோரும் படுக்கைக்கு போகும்போது மணி பனிரெண்டு ஆகி விட்டது.

காலை ஒன்பது மணி அலுவலகத்துக்கு கிளம்பும் முன் மனைவியிடம் கொஞ்சம் கண்டிப்புடன் அதே நேரம் அவள் முறைத்துக் கொள்ளாதபடி சொன்னான்.

இங்க பாரு அவங்க உன்னை பெத்து வளர்த்து ஆளாக்கின அம்மா, கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு போயேன்.

ஆமா உங்களை மாதிரி இளிச்சவாய் மருமகன் கிடைச்சா எங்கம்மா மாதிரி ஆளுங்க மாசத்துக்கு இரண்டு வாட்டி இப்படி கோபிச்சுகிட்டு போய் உட்காராம என்ன பண்ணுவாங்க? முகத்தை நொடித்து காண்பித்து விட்டு உள்ளே போனாள்.

dhamodharan பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *