இருப்பிடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 2,372 
 
 

பெண்களுக்கு மட்டும் இரண்டுவீடு-இரண்டு முகம். முன்பாதியும், பின்பாதியும் களங்கமின்றி அன்பால் நிறைவு செய்ய வேண்டும். புகுந்தவீட்டுக்  காரியங்களை பூர்ணமாக நிறைவு செய்கிறேனா என்பதை சிலாகிப்பதிலே அம்மாவின் கேள்விகள் இருக்கும். பூர்ணமாக நிறைவு செய்தவள். இன்னும் கூட அது நிமித்தமாகவே மெனக்கிடுகிறாள். பெண்களுக்கு பிறந்தவீடு சாசுவதமில்லையோ? ஒரு பெண்ணுக்கு முழு ஓய்வு கிடைக்குமிடம் தாய்வீடாகத்தான் இருக்கும். துக்கம் விசாரிக்க வந்தவள் தங்கிவிட்டேன். ஒவ்வொருமுறையும் புறப்பட முயற்சித்து அயர்ச்சியில் இருந்துவிடுகிறேன். அண்ணியின் மரணத்திற்குப் பின் அம்மாதான் சிநேகனுக்கு தாயும்-தாதியுமாக இருக்கிறாள்.

சிநேகனுக்கு வயது எட்டுதான் இருக்கும். புதிர்புதிரான கேள்விகளைக் கேட்டு அம்மாவை துளைத்தெடுப்பான். மீன் மார்கெட் செல்லும் போதும், கசாப்பு கடைக்கு செல்லும் போதும் அம்மாவின் கைபிடித்து உடன் செல்வான். மழுமழுவென்று தோலுரித்து தலைகீழாக தொங்கவிடப்பட்டிருக்கும் ஆடுகளைப் பார்த்து ஆதங்கப்படுவான். அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் மீன்களைப் பார்த்து இரக்கப்படுவான். பேரனின் ஆற்றாமையை புரிந்து கொண்டவள், இவைகளையெல்லாம் கடவுள் நமக்காகத்தான் படைத்திருக்கிறார் என்று விளக்குவாள்.

தினம்தினம் மனிதர்கள் நடத்தும் பாரிவேட்டையை ஏற்றுக் கொள்ளும் மனம் சிறுவனுக்கு இல்லை. உயிர்வதைக்கு உடன்படாதிருப்பதிலேயே அவன் மனம் சுழன்று கொண்டிருந்தது.

அவனப்பாவிடம் அடம்பிடித்து ஆசையாசையாக வாங்கி வைத்த வண்ண மீன்கள் கண்ணாடி பெட்டிக்குள் நீந்துவதும் துள்ளிக் குதிப்பதுமாக இருக்கிறது. அதை பார்த்துப் பார்த்து சொக்கிப் போவான்.

நகர்புறத்திலிருந்து சற்று தொலைவில் மரங்கள் சூழ்ந்த தென்னந் தோப்பில்தான் அம்மாவின் வீடு.அன்று ‘சோர்’றென்று மழை பெய்து கொண்டிருந்தது. இரவாகிவிட்டது. சோற்றைப் பிசைந்து பேரனுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள்-அம்மா. நான்கு நாய்களிடமிருந்து உயிர் தப்பி அலரிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தது பூனை. ‘சருக்’கென்று வழுக்கி நின்றது. ‘மியோவ்’வென கெஞ்சியது. தகிக்கும் கண்கள். தஞ்சம் புகுந்துள்ளது என்பதை புரிந்து கொண்டாள். சற்று நேரத்திற்க்கெல்லாம் நாவை தொங்கவிட்டுக் கொண்டு மூச்சு வாங்கி நின்றன நாய்கள். மேலும் கீழும், இடம் வலம்மென தனது தேடும் வேட்டையை தொடர்ந்தன.உக்கிரப் பார்வையும் மாமிச வெறியும் அதன் முகங்களில் தெரிந்தது. அம்மாவின் அனுமதியை புரிந்து கொண்ட பூனை மெதுவாக கட்டிலின் அடியில் சென்று பதுங்கிக் கொண்டது. கூரையின் மேல் ‘மியோவ்’ என்று சப்தமிடும் போதெல்லாம் அம்மாவை கட்டிப்பிடித்து பயந்திருக்கிறான். ஆனால், இன்று தன் கட்டிலுக்கடியில் பவ்யமாக பதுங்கியிருக்கும் பூனையிடம் நட்பு கொள்ளவே மனசு துடிக்கிறது.

பாவம் என்று பார்க்கப் போய் பாலை குடித்துவிட்டால் என்ன செய்வதென்று அம்மா, பாலை நன்றாக மூடி வைத்துவிட்டு, ஜன்னலை திறந்து வைத்தாள். நிலைமை சகஜ நிலைக்கு வந்தால் பூனை வெளியே செல்லட்டும்மென்று.

பொழுது புலர்ந்தது.மழை ஓய்ந்திருந்தது. அம்மா முதலில் எழுந்தாள். கூடவே சிநேகனும் எழுந்தான். முதலில் பாலை பார்த்தாள். ‘அப்பாடா’ பால் இருக்கிறது. ஒரு வேளை வண்ண மீன்களை கபளிகரம் செய்திருக்குமோ. ‘சிநேகா’-என்றாள். சிநேகன் மீன்தொட்டியில் உள்ள மீன்களை பார்த்தான். எப்போதும் போல் நீந்திக் கொண்டிருந்தது. சிறுவனை வாத்ஸல்யத்தோடு அணைத்துக் கொண்டாள். பின்பு, பழைய பாடல்கள் காணும் பொருட்டு தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கிக் கொண்டிருந்தாள்.

இரவுப் பணிக்கு சென்றுவிட்டு காலையில் வீடுதிரும்பிய சிநேகனின் அப்பா, வந்தவுடன் கேட்ட முதல் கேள்வி எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

‘சிட்டுக் குருவிகளின் இறகுகள் மட்டும் உதிர்ந்து கிடக்கிறதே!’

அலை பேசிக் காலத்தில் அழிந்துவிடும் நிலையில் இருக்கும் சிட்டுக் குருவிகளில் ஒரு ஜோடியை தன் கிராமத்திலிருந்து பிடித்து வந்து தற்காலிக கூடமைத்து வளர்த்து வந்தார். பூனை இரண்டையும் ‘சுவாகா’ செய்துவிட்டு சென்றிருந்தது.

‘யாரும்…இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே!கருடன் சொன்னது! அதில்,அர்த்தம் உள்ளது!’ – குறைவான சுருதியில் அழுத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது தொலைக் காட்சிப் பாடல்.

கிஞ்சித்தும் சலனமுறாத மனதுடன் இன்று ஒரே முடிவாக என் பயணப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது, அம்மாவின் கண்களில் ஒரு ‘ஒளி’ தெரிந்தது!

– மே 2022, கல்வெட்டு பேசுகிறது இதழில் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *