இதயப் பசுமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 1,594 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு ஏழு மணி ஆகியிருக்கும். கதைப் புத்தகத்து டன் காப்பிக் கடையில் உட்கார்ந்திருந்தேன். அந்த வட்டா ரத்துக்கு நான் புதியவன். அவ்வளவாக யாரோடும் பழக்க மும், தொடர்பும் இன்னும் ஏற்படவில்லை. தனிமைத் துன்பம் போக்கக் கதைப்புத்தகத்துடன் ‘அமைதி இல்லம்’ என்று என்றால் புனைந்துரைக்கப்படும் அந்தச் சீனர் காப்பிக்கடைக்குச் சென்று அடைக்கலம் புகுவது என்னு டைய பழக்கமாக இருந்து வந்தது. எப்போதும் குறையாத கூட்டமும் இருக்கும்; அதே சமயத்தில் அமைதியாகவும் இருக்கும். இங்கே அதிசயிக்கத்தக்கதும் குறிப்பிடத்தக்கது மான ஒன்று என்னவென்றால் அந்தக் காப்பிக்கடையில் எப்போது பார்த்தாலும் முப்பது வயதுக்கு மேற்பட்ட வயதினரைத்தான் பார்க்க முடியும். எல்லா மொழிச் செய்தித்தாள்களும் அங்கே இருக்கும். ஏறக்குறைய ஒரு நூலக இயக்கம் போலத்தான் இருக்கும். ‘வெட்டிக் கதை’ பேசுவோர் அங்கு வருவதில்லை. எப்போதோ இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அது எப்படியோ இப்போதும் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. எனக்கு மட்டுமல்ல-அந்த அயலூர் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அது ஒரு புதுமையாகவும் போற்றத்தக்கதாகவும் இருந்தது. நண்பர்களை விட நவில்தொறும் நயம் பயக்கும் நல்ல நூல்கள் தனிமைத் துன்பம் போக்கவல்லது என்ற சிறந்த கருத்து என்னளவில் செயல்பட்டு வந்தது.

கடை அடைக்கப்படும் நேரம்வரை அதாவது இரவு பன் னிரண்டு மணிவரை அங்கே படிக்கலாம்; எழுதலாம்; பேசவும் செய்யலாம். பேரிரைச்சல் போடாதவாறு மற்றையோர்க்கு மனக்குமைச்சல் உண்டாகாதவாறு! வாடிக்கையாளர்களிடம் கடை முதலாளி பழகும் முறையே ஒரு தனி அலாதி. ஓரிரு தினங்கள் எக்காரணங் கொண்டோ அங்கே போகவில்லை யென்றால் மிகவும் அக்கறையோடு விசாரித்து அறிந்து கொள்வார். அத்தகைய அன்பு-பிரீதி! நூலகக் கடையில் நானும் அங்கத்துவம் பெற்றிருந்தேன்; அன்றாடம் செல்வேன் அடைபடும் வரை படிப்பேன்; எழுதுவேன்.

அன்றொரு நாள் இரவு மணி பதினொன்று ஆகியிருக்கும். நான் மிகக் கவனமாகக் கதை எழுதிக் கொண்டிருந்தேன். ‘வணக்கம்! காப்பி சாப்பிடுங்கள்’ என்ற உபசாரச் சொற்கள் கேட்டு உறுத்தலோடு தலை நிமிர்ந்தேன். புதிய நண்பரொருவர் புன்முறுவலோடு சொன்னார். முகப்பழக்கம் இருந்த காரணத்தால் முகஸ்துதிக்காகத்தான் சொல்லியிருக்க வேண்டும். ஆமாம்; ரொட்டியில் பாதியும், காப்பியில் அரைவாசியும் ‘ஜீரணம்’ ஆகியிருக்கக்கூடிய நேரத்தில்தான் சொன்னார்.

‘ரொம்ப நன்றிங்க சார்’ – பதிலுக்குப் பதில் என்ற அமைப்பில் நானும் சிரித்துக்கொண்டே சொன்னேன்; அறிமுகப்படலம் ஆரம்பமாயிற்று. இருதரப்பு நிலவரங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றன. ‘ஜஸ்ட் ஏ விஸ் சிங்’ என்ற அமைப்பில் அறிமுக உறவு வளர்ந்து கொண்டே வந்தது. ஐந்தாறு மாதங்கள் ஆகியிருக்கும்.

ஆனாலும் இன்னும் ‘அறிமுக உறவு’ என்ற அடிப்படை யிலேதான் எங்கள் பழக்கவழக்கம் இருந்து வந்தது. ‘நட்பு’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு இன்னும்கூட வளர வில்லை – உறவு மலரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் அளவளாவுவதற்குரிய வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக இருக்கலாம். எப்போதும் இரவு நெடுநேரம் வரை வேலை செய்து விட்டு வீடு திரும்பும் வழியில் வெறுமனே ஒரு வணக்கமும் புன் சிரிப்பும் செய்து விட்டு போகின்ற போக்கு தானே! நெஞ்சம் கலக்க நேரவில்லை. அவசியம் நேரமில்லை; இப்படிப் பட்ட நிலையில்தான் ஒருநாள்…!

அப்போது இரவு மணி பத்தாகியிருக்கும். வானொலி நாடகம் ஒன்று எழுதுவதற்குரிய ‘கருப்பொருளை’ உருப் போட்டு காட்சிப் பகுப்புகளை வகுத்து வகைப்படுத்திக் கொண்டிருந்தேன். உள்ளச் சோர்வுக்கு ஒரு ‘கப்’ காப்பி சாப்பிட்டு தாகசாந்தி செய்துகொள்ளலாம் என்று கருதி ‘ஆர்டர்’ கொடுத்தேன். காப்பி மேசைக்கு வரவிருந்த போது அறிமுக உறவு நண்பரும் வந்தார். வெறும் ‘முகஸ்துதி’ என்ற அமைப்பில் சொல்லாமல், வேண்டாம் என்று அவர் சொன்னதையும் பொருட்படுத்தாமல் அவருக்கும் காப்பி கொண்டு வரச் சொன்னேன். அவர் அலுத்துப் போயிருந்தாரோ அல்லது சலித்துப் போயிருந்தாரோ அது அப்போது எனக்குத் தெரியவில்லை. முகத்தில் தெளிவு இல்லை – உடலில் தெம்பு இல்லை. பேச்சில் ஒரு ‘சுவாரஸ்யம்’ இல்லை. மொத்தத்தில் ‘சுதாரிப்பு’ என்பதே இல்லாமல் இருந்தது. காப்பிக் கோப்பைகள் மேசைக்கு வந்துவிட்டன. காப்பியைக் கலக்கிவிட்டுக் கொள்வதிலேயே அவருடைய கலக்கம் பளிச்சிட்டுத் தெரிந்தது. ஆமாம், உணர்வற்ற நிலையில்; ஏன் ஒர் உயிர்ப்பற்ற நிலையில் தான் இருந்தார் கோபாலன். ஆமாம், அதுதான் என்னுடைய அறிமுக உறவு கொண்டவரின் பெயர். காப்பியை அருந்திக் கொண்டே, ‘ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்’ என்று கேட்டேன். ‘சும்மாவாச்சுக்கும்’ என்று சொல்வார்களே அந்த நிலையில் கேட்கவில்லை. சுமையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்தான் கேட்டேன். மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் கலக்கம் ஒரு பெரும் பாரமாக இருக்கும். மனத்துயரம் ஒரு பெரும் சுமைதானே! அதை யாரிடமாவது சொல்லிக்கொண்டால் துன்பச் சுமை சிறிது குறைந்தது போல் ஓர் ஆறுதல் பிறக்குமல்லவா? அந்த நியதிக்குட்பட்டுத் தான் கேட்டேன். அவர் பெருமூச்சு விட்டுக் கொண்டார். கலக்கத்துக்குரிய காரணத்தைக் கதையாக்கப் போவதற்கான அறிகுறியாகத் தான் எனக்குப்பட்டது.

‘கொஞ்ச நாளைக்கு முந்தி நடைபெற்ற எங்கள் கம்பெனி ‘ஸ்டரைக்’ சம்பந்தமாகக் கேள்விப்பட்டிருப்பீங்க. அதுல, தீவிரமாக ஈடுபட்டிருந்த எங்கள் எல்லாரையும் வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. அப்படி பாதிக்கப்பட்டவங்கள்ள நானும் ஒருத்தன். வேலை இழந்துட்டேன் வேற வேலை தேடனும்’ என்று வேதனையின் விளிம்பில் நின்றுகொண்டு சொன்னார் கோபாலன்.

அண்மைக் காலத்தில் நடைபெற்று முடிந்திருந்த அந்தப் பிரபல கம்பெனியொன்றின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நாளிதழ்களில் நானும் படித்து அறிந்திருந்தேன். அரசியல் சூதாட்டக்காரர்கள் அப்பாவித் தொழிலாளர்களைச் சொக்கட்டான் காய்களாகப் பயன்படுத்திக் கொண்ட பரிதாபத்தை நினைத்து வருந்தினேன். ‘காலம் இப்படியே போயிடாதுங்க சார்; கவலைய விடுங்க; வேற வேலை தேடிக்கொள்ளலாம்’ என்று, ஆறுதலுக்காகச் சொல்லாமல் உள்ளபடியே அனுதாபத்துடன் தான் சொன்னேன்.

‘இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறது அவ்வளவு சுலபமில்லீங்க சார். எனக்கு காலும் ஓடல கையும் ஓடல. வாழ்க்கையே இருண்டு போன மாதிரி இருக்குதுங்க சார்’ என்று தன் ஆற்றாமையைப் பெருமூச்செறிந்து சொன்னார் கோபாலன். ஒப்புக் கொள்கின்ற கருத்தைத்தான் சொல்லுகிறார் என்று என் மனம் கருதியது. ‘அது சரி’ போடுகின்ற அமைப்பில் என் தலை சற்றே அசைந்து கொடுத்தது.

‘பாதகமில்லை: நானும் உங்களுக்கான வேலை வாய்ப்புக்கு முயற்சிக்கிறேன் – விரைவில் வேலை கிடைத்து விடும்’ என்று, நம்பிக்கை தொனிக்கின்ற உறுதிமொழியை நான் அவருக்குச் சொன்னேன். அவரும் ஓரளவு ஆறுதலும் தேறுதலும் பெற்றிருக்க வேண்டும். அப்போதைக்கு அவரது முகத்தில் கொஞ்சம் ‘களை’ ஏற்பட்டது. காப்பி தந்த சுறுசுறுப்பா? கவலையைப் பரிமாறிக் கொண்ட ஆறுதலா? காலியாகியிருந்த காப்பிக் கோப்பையைக் ‘கரண்டியால், வெறுமனே அலசிக் கொண்டிருந்தார். அவரது மனத்தின் அடித்தளத்தில் ஆரம்பித்துக் கொண்டிருந்த அவலத்தின் பிரதிபலிப்பு அது! ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். ஒரே அமைதி! வேலை வாய்ப்புக்கு யாரிடம் சிபாரிசு செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். துக்கம் தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டிருக்க வேண்டும். இலேசாகக் கனைத்துக் கொண்டார் கோபாலன்,

‘உலகம் ஒரு ஏமாற்றுக்கார சந்தைங்க சார்’ – என்று விரக்தி வெளிப்படக் கூறினார். இத்தனை நேர மனப் பொறுமலின் பிரதிபலனமா? துன்பம் வரும்போது மனிதன் வேதாந்தியாகின்றான் என்று பேரறிஞர் ஒருவர் சொல்லியிருப்பது இப்போது என் நினைவுக்கு வந்தது. பேச்சின் திசை திரும்பியது கண்டு சிந்தனையோடு பேசாமல் இருந்தேன். அவரே தொடர்ந்தார்.

‘என்னோடு குடித்துக் கும்மாளம் போட்டுக்கிட்டிருந்தவங்க எல்லாரும் வேலையிழந்துட்டேன்னு தெரிஞ்சதும் நின்னு கூடப் பேசறதில்ல. நேருக்கு நேர் சந்திச்சிக்கிட்டாக் கூட ரொம்ப அவசரமாப் போறதுபோல கைய ஆட்டிட்டு வேகமா நடந்து போயிடறாங்க. வேலை செய்யிற போது நான் உங்களோட உக்காந்து பேசினது கூட இல்ல. ஆனா; இன்னிக்கி நீங்கதான் எனக்குக் காப்பி வாங்கிக் கொடுத்து ஆறுதலாய்ப் பேசுறீங்க’ என்று நன்றியுணர்ச்சி பொங்கி வழியப் பேசினார்.

‘அதையெல்லாம் நினைத்துக் கவலைப்படாதீங்க. அது ஒரு நேரம் இது ஒரு நேரம்’ என்று, அவருடைய ஆத்மதிருப்திக்காக ஏதாவது சொல்லவேண்டுமே என்பதற்காகச் சொல்லிவைத்தேன். நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. நெக்குருகிய நிலையில் கோபாலனும், நீண்ட சிந்தனையில் நானும் பிரியா விடை பெற்றுக் கொண்டோம். பெருஞ்சாலை எல்லைக்கு வந்து திருப்புமுனையில் பிரிந்தோம். கோபாலன் ஒரு வழிச்சாலை வழியே போய்க் கொண்டிருந்தார். உடனடியாகத் தனக்கு ஒரு வேலை கிடைத்தாக வேண்டும் என்ற ‘ஒரே சிந்தனை’யில் அவர் உழன்று கொண்டிருப்பதை அது எனக்கு அறிவுறுத்தியது புலப்படுத்தியது.

இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன என்பதற்காகக் காலம் மெது நடையோ வேக நடையோ போடுவதில்லை. எப்போதும் போலவே இயற்கை தன்னியக்கம் பெற்றுக் கொண்டிருந்தது. நாள் தவறினாலும் நானும் கோபாலனும் சந்திப்பது மட்டும் தவறாது. ஏறத்தாழ ஏழெட்டு மாதங்கள் ஆகியிருக்கக்கூடும். இன்னும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இருப்பு குறைய ஆரம்பித்திருக்க வேண்டும். அள்ளக் குறையாத ‘அமுத சுரபியையா’ அவர் ‘இருப்புப் பெட்டியாக ‘வைத்திருக்க முடியும் ? வரவு இல்லை ஆனால் செலவுகள் இல்லாமலில்லை. சில்லறைக்குக் கொஞ்சம் சிக்கல் ஏற்படத் தொடங்கி விட்டது. சிரமங்கள் ஏற்படும்போது அனாவசியச் செலவுகளை வேண்டுமானால் குறைத்துக் கொண்டு விடலாம்; அல்லது அடியோடு விட்டு விடலாம். ஆனால் அன்றாட அத்தியாவசியச் செலவுகளைச் செய்து தானே ஆகவேண்டும்…? அவ்வப்போது இயன்ற அளவு உதவி வந்தேன். மனமிருந்தது எனக்கு மார்க்கம் தான் இல்லை. பத்து நூறு என்று கொடுத்துதவ முடியாவிட்டாலும் பட்டினி கிடக்கக்கூடாத அளவுக்குப் பரிவு காட்டி வந்தேன்.

பசித்துன்பம் தீரும்போது அல்லது தீர்க்கப்படும் போதெல்லாம் அதற்கு மாற்றாக ‘நன்றி’ வரும். ‘நன்றி’ என்ற சொல்லுக்கு விலையில்லாமல் ஆகிவிடுமோ என்று தான் ‘நமக்குள் எதுக்குங்க சார் நன்றியெல்லாம்’ என்று கூட ஒரு நாள் பேச்சோடு பேச்சாகச் சொல்லி வைத்தேன். ஆமாம்; நன்றி என்பது ஒரு வெற்றுச் சொல்லாக சம்பிரதாய வார்த்தையாக ஆகிவிடக்கூடாதல்லவா? ‘நன்றி’க்கு உயிர்ப்பு வேண்டும்!

என்னுடைய பரிந்துரைகள் பலவற்றில் ஒன்று பலிதமாயிற்று. ‘டிராவல் சர்வீஸ்’ கம்பெனியொன்றில் ‘டிரைவர்’ வேலை கிடைத்தது. போதுமான அளவு சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைதான். அவருக்கு வேலை கிடைத்ததில் எனக்கும் ஓர் ஆறுதல், ஏன்? எல்லாம் அந்த ‘சில்லறை’ விஷயம்தான்.

அவர் வேலைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். ஆறு மாதங்கள் அந்தக் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருப்பார். அதற்குள் அங்கே ஒரு ‘திருவிளையாடல்’ நடைபெற்று விட்டது! அந்தக் கம்பெனியில் ‘டைப்பிஸ்ட்டாக’ வேலை செய்த ஒரு பெண்ணுக்கும் கோபாலனுக்கும் உறவு ஏற்பட்டுவிட்டது. பருவம் யாரை விட்டு வைத்தது? பந்தம் கொள்ளச் செய்து விட்டது. அவர்களது பழக்கம் பழுத்து வந்த சமயத்தில் பாழாய்ப் போன வேலையிழப்பு இருவருக்கும் சேர்ந்தே வந்துவிட்டது. ‘டிராவல் சர்வீஸ்’ கம்பெனி தன் நீண்ட கால ‘சர்வீஸை நிறுத்திக் கொண்டது,

கோபாலன் வந்து விவரங்கள் எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார். முதலில் வேலை இழந்த போது துன்பச் சுமையின் அதிகரிப்பில் வாழ்க்கையில் பிடிப்பற்ற நிலையோடு பேசுவார். ஆனால் இப்போது அவருக்கு அந்தப் ‘பிடிப்பு’ வந்து விட்டிருந்தது என்று சொல்லத்தான் வேண்டுமா என்ன?

‘கடன் கொண்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று இராமாயணத்தில் கம்பர் உவமை நயம் பாடியிருக்கிறார். அதை விட ‘காதல் கொண்டார் நெஞ்சம் போல் கலங்கினான்’ என்று உதாரணம் சொல்லியிருக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றியது. வேலையில்லாத வேதனை ஒரு புறம்; விடுதலரியா ‘வேட்கை’ தரும் வேதனையும் மற்றொருபுறம். இரண்டு பெரும் வேதனைக் கிடையே இருதலைக்கொள்ளி எறும்பு போலத் தவித்தார் – தத்தளித்தார் கோபாலன்.

கோபாலன் அவர்களுக்குப் பெண் கேட்டு வர அழைத்துச் செல்லப்பட்டேன். சொந்த வீடு இருக்கிறது. ‘கண்ட்ராக்டில்’ வேலை செய்து வருகிறார், கண் கலங்காமல் வைத்துக் காலம் முழுவதும் வைத்துக் காப்பாற்றுவார் என்றெல்லாம் சொன்னேன். இருமருங்கிலும் உண்மை என்ற சர்க்கரை; இடையே பொய் என்ற கடுக்காய்த் தூளும் இருந்தது. திருமண காரியமென்றால் ‘சாத்திரத்துக் காவது’ சிறிதளவு பொய் இருக்க வேண்டுமே விதிவிலக்கு கூடவே கூடாது.

“அதெல்லாம் சரிதான், ‘அத்துக்கூலிக்கு’ வேலை செய்வது இல்லாமல் கொஞ்சம்தான் சம்பளம் என்றாலும் நிரந்தரமான ஒரு வேலை கிடைத்த பிறகு யோசிக்கலாம்…” என்று முடிந்த முடிவாகாச் சொல்லிவிட்டார்கள்.

‘கிணற்றுத் தண்ணீரை ஆற்றுவெள்ளமாகொண்டு போய்விடும்.. ?’ என்று பழமொழி சொல்லி விளங்க வைத்தார்கள். தமிழில் ‘பழமொழிக்குப் பஞ்சமே இல்லை’ என்று ‘சலித்துக்’ கொண்டார் கோபாலன். துடிப்பு காரணமா?

திருமணம் சொர்க்கத்தில் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்லுவார்கள். கோபாலன், கோகிலா உறவும் சொர்க்கத்தில் தீர்மானிக்கப்பட்டதாகத்தான் இருக்கும் என்று கருதுகின்றேன். ஆமாம்; கோபாலன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார். தனக்குச் சொந்தமாக விருந்த வீட்டை விற்று விட்டு அந்தப் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்வது என்ற தீர்மானம் தான் அது. சிந்தனை செயல்பட்டிருக்க வேண்டிய நேரத்தில் தக்கதொரு வேலை வாய்ப்பும் வந்தது. வாய்த்த வேலை யும் வரப்போகிற மனைவியின் குடியிருப்பு வட்டாரமாகவே அமைந்தது. கோபாலனுக்கு இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சி. உடனடியாகத் திருமண உடன்பாடுகள் தீவிர மாக நடைபெற்றன. அமுதும் தேனும் கிடைத்த அளப்பரிய மகிழ்வில் திளைத்தார் கோபாலன்.

இப்போதெல்லாம் நண்பர் கோபாலனை வாரத்திற் கொரு முறை பார்க்கின்ற வாய்ப்பு கூடக்கிடைக்காமல் இருந்தது. இதற்கிடையில் எனக்குக் கொஞ்சம் பொருளாதாரச் சரிவு ஏற்படத் தொடங்கியிருந்தது. புதுப்பழக்கம் எதுவும் ஏற்பட்டு பொருளிழப்பு ஏற்படவில்லை. நண்பர்கள் சிலரின் பேச்சை நம்பி கூட்டு முதலாளியானேன் கூட்டு போட்டு வந்த கூட்டாளிகளில் சிலர் அவ்வப்போது வந்து ‘அட்ஜஸ்’ பண்ணிக்குங்க சார்…! என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவரவர்கள் அவசரம் அவரவர்களுக்குத்தான் புலனாகும். ‘அட்ஜஸ்’ செய்து வந்த அமைப்பு ஆயிரக்கணக்கில் கடனாக உருவாகியது, கூட்டு எடுத்தவர்களுக்கு ‘மொத்தப் பணம்’ கொடுக்க முடியாத நிலையில் மாதாமாதம் அல்லல்பட வேண்டிய நிலையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனாலும் எப்படியோ என்றில்லை; ஐந்து காசு பத்துக்காசு வட்டிக்குக் கடன் வாங்கி ‘பைசல்’ செய்து கொண்டு வந்தேன். அன்றுதான் கடைசிக் கூட்டு…!

அதே காப்பிக் கடை. அனவரதமும் ஒடுங்கிய நிலை யில் அமர்ந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டுப் பணம் பெற வந்துவிடப் போகும் அந்த நபருக்கு என்ன சொல்வ தென்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அப்போது கோபாலன் அந்தப் பக்கமாக வந்தார். ‘ஆபத்பாந்தனாக’ அவரை எண்ணிப் பார்த்துக் கொண்டேன். வேதனையை அவரிடம் விவரிக்கத் தொடங்கினேன். வேண்டுதலை – தேவையை விளக்கினேன், வேண்டாத வேலைக்குப் போய்விட்டதாகக் குற்றம் சாட்டினார்; இலேசாகப் புத்திமதிகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்குப் புத்திமதிகள் தேவைப்படவில்லை; பணம் தேவைப்பட்டது. இருந்தாலும் அவர் சொன்ன அறிவுரைகளை அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவசரப்பட்டால் முடியுமா? காரியம் ‘சாதனை’ பெறவேண்டுமே என்ற கவலை எனக்கு! தத்துவங்களைப் பொழிந்து கொண்டிருந்தார் அவர்; தத்தளித்துக் கொண்டிருந்தேன் நான். இருப்பவன் தத்துவ மேதையாகிறான்; இல்லாதவன் பொல்லாதவனாகிறான்; இல்லை வேதாந்தியாகிறான் என்ற பட்டறிவுக்கு நான் இலக்காகிக் கொண்டிருந்தேன்.

ஆமாம்; இப்போது கோபாலனிடத்தில் இருப்பு இருந்தது; அது எனக்குத் தெரியும். எப்போதோ நிறைவேற்றப் பட்டிருந்த வீடு விற்கும் தீர்மானத்தை அவர் இப்போது அமுல்படுத்தியிருந்தார். பத்தாயிரம் வெள்ளிக்கு வீட்டை விற்று விட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். தனக்கிருந்த அந்த ஒரே வீட்டை விற்றுவிட்டு மாமியார் வீட்டுப் பக்கமாகவே ஒரு புது வீட்டை வாங்கிவிடக் கருதியிருந்தார். வீடு விற்று ஒரு மாதம்கூட ஆகியிருக்க முடியாது. புது வீடு வாங்குவதற்குரிய முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். எனக்கு அப்போதைய தேவை மூன்னூறு வெள்ளி மட்டும்தான். ‘வட்டி கொடுத்துவிடலாம். ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்று கேட்டேன்.

தனக்கொரு நண்பர் இருப்பதாகவும், அவரைக் கேட்டு வாங்கி வந்து தருவதாகவும் சொன்னார். வட்டியும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்; அதுவும் இப்போது என்னால் உறுதி சொல்ல முடியாது என்று இடையில் ஒரு இலேசான இழுபறிப்பையும் வேறு உணர்த்திக் கொண்டார். வெற்றிகரமாக முடியவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

உலகத்தில் மரண பயத்தை விட வேதனையானது வேறெதுவும் இல்லையென்று சொல்லுவார்கள். ஆனால், எனக்கு அதைவிடப் பயங்கரமானதாக இருந்தது கூட்டுப் பணம் வாங்க வரவிருக்கும் அந்த நபரின் வருகை.

உயிர்பிடிக்க பாசக்கயிற்றோடு எமன் வருவதாகக் கூறுவார்கள். அப்படிக் கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன். மொத்தத்தில் ‘பிராணாவஸ்தை’ என்று சொல்லுவார்களே? அந்தப் பெருந்துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

கண்ணிமை நேரத்தில் அந்த நபர் கண்ணெதிரே நின்றிருந்தார்.

ஆறாத உணர்வாக இருக்குமோ? இல்லை; வர வேண்டிய நேரம்; வந்திருந்தார்.

‘பல்லெல்லாம் தெரியக்காட்டி பருவிரல் முகத்தில் தேக்கி…’ என்றொரு கவிதை இருக்கின்றது. அந்தப் பாடலுக்கு நான் ‘அபிநயம்’ பிடித்தேன்.

ஆமாம்! நான் கூனிக்குறுகி நாணிச் சிரித்து, ‘வாங்க… வாங்க; உட்காருங்க. காப்பி சாப்பிடுங்க…’ என்றெல்லாம் அந்த நபரை உபசரித்தேன். ‘பாதகமில்லை’ என்று ஒரே சொல்லில் பதிலளித்தார். பணத்தை வாங்கிக் கொண்டு போவதில் ‘குறியாக’ இருந்தார் அவர்.

‘எப்படிச் சொல்வது ?’ எப்படியாவது சொல்லித் தீரவேண்டுமே! என்று இதற்கிடையே மனத்துக்குள் போராடிக் கொண்டிருந்தேன். தலையில் ஏதோ ஒரு நமைச்சல்; வலது கைப்பிடறிப் பக்கத்தில் தான். இலேசாகச் சொரிந்து விட்டுக் கொண்டே ‘ஆங், கூட்டுப் பணத்தில் கொஞ்சம் குறையுதுங்க. ஒருநாள் அவகாசம் கொடுங்க. நாளைக்கு எப்படியும் ஏற்பாடு செய்துடறேன்’ என்று பணிவாகவே சொன்னேன். நான் இன்னும் முடிக்கவில்லை. இடையில் புகுந்து ‘என்னங்க இதெல்லாம் குறையுது கூடுதுன்னு! இந்த மாதிரி இழுபறியெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க..’ என்று தன் நாணயத்தை ஒருவாறு புலப்படுத்திக் கொண்டார். அவரும் அட்ஜஸ் பேர்வழிதான்.

‘அதெல்லாம் சரிதாங்க. அவசியம் நாளைக்கு இந்த நேரத்தில்..’ என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ‘இராவணன் கிட்ட இராமன், ‘இன்று போய் நாளை வா’ன்னு சொன்னது போல இல்ல நீங்க எங்கிட்ட சொல்றீங்க?’ ம்… சரி! நாளைக்கு நாளைக்கிங்கிற தெல்லாம் நமக்கு ஒத்துவராது; ஒரேயடியா ரெண்டு நாள் கழிச்சி வர்ர சனிக்கிழமை வர்றேன். பணம் ரெடியா இருக்கணும். இங்க பாருங்க, இந்த ஒத்திவைப்புக்கூட முன்பொரு சமயம் எனக்கு நீங்க ஒரு சின்ன உதவி செஞ்சிருக்கீங்க ; அதுக்காகத்தான்…’ என்று சொல்லி கம்பராமாயண உவமை நயத்துடன் தன்னுடைய உறுதியையும் உறுமலையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

‘சரிங்க…!’ நிச்சயம் சனிக்கிழமை பணம் வாங்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னேன். இப்போது என் குரல் சிறிது கம்மலாகவே இருந்தது.

 ‘ம்…சரி சரி! நான் வர்றேன்!’ என்று கூறிய அவருடைய குரல் சற்று கம்பீரமாகவே ஒலித்தது. அவர் போய்விட்டார்.

‘ஸ்… அப்பாடா!’ பெருமூச்சு விட்டுக் கொண்டேன். அதே நேரத்தில் நெஞ்சுக்குள் சிரித்துக் கொண்டேன். ஒரு சமயம் நான் அவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டேன். மூவாயிரம் வெள்ளி ரொக்க ஜாமீன் கேட்கப்பட்டதற்கு என்னுடைய தனித்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஓர் அரசியலதிகாரியின் பரிந்துரையுடன் ஒரே ஒரு கையொப்பத்தில் மீட்டுக் கொடுத்தேன். இவ்வளவு பெரிய உதவியை நான் செய்வேன் என்று தான் எதிர்பார்க்கவில்லை யென்றும் எந்த மறுப்பும் சொல்லாமல் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் செய்ததைத் தன் ஆயுட்காலம் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும், வாழ்நாள் முழுவதிலும் கடமைப்பட்டிருப்பதாகவும் அன்று சொன்ன அதே நபர் இன்று ‘முன்பொரு சமயம் சின்ன உதவி செஞ்சிருக்கீங்க’ என்று சொன்னாரே அதைச் சிந்தித்துக் கொண்டேன் – சிரிப்பு வந்துவிட்டது. உதவிக்குக் காலப் போக்கில் ‘கனம்’ கூடவும் குறையவும் செய்யுமோ? அத்துடன் இராமன் இராவணன் உவமை சொன்னாரே இதில் யார் இராமன் ? யார் இராவணன்? பிறருடைய இரக்கத்தில் தன்னுடைய உயர்வின் உவமைகளும் தத்துவங்களும் சிந்தனையில் தடம் புரண்டு வருமோ?

மொத்தத்தில் நான் அலைபாய்ந்து கொண்டிருந்தேன். சித்தத்தில் என்ன போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்ததோ அது எனக்குத் தெரியாது. அமைதிக்குளத்தில் அருந்தாமரையாக அன்பர் கோபாலன் அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் விடை பெற்றுக் கொண்டார்..! நடந்து கொண்டிருந்தார் அவர் – நலிந்து கொண்டிருந்தேன் நான். பிரச்சினையா? சிந்தனையா?

அடுத்த நாள் சொல்லி வைத்தாற்போல நண்பர் கோபாலன் வந்து விட்டார். நண்பருக்கு உதவுவதில் எவ்வளவு பொறுப்புணர்ச்சி..! என்று நான் உள்ளபடியே உள்ளத்துக்குள் வியந்து போற்றிக் கொண்டே வரவேற்றேன். இப்போதும் நான் அவரை ‘ஆபத்பாந்தனாகவே’ கற்பனை செய்து கொண்டேன். கையூட்டாக அல்ல; கரிசணையோடு தான்! காப்பி வந்தது – அருந்தினோம்.

வந்ததும் வராததுமாகச் சொல்லக் கூடாது என்றிருந்தாரோ என்னவோ? அல்லது எப்படிச் சொல்லலாம் என்று அடிப்படை அமைத்துக் கொண்டிருந்தாரோ? அது எனக்குத் தெரியவில்லை. அவர் பேசாமல் இருந்தார். காரியம் சித்தியாகியிருக்க வேண்டுமே என்று கலங்கிக் கொண்டிருந்தேன்.

அப்படியே இருந்து விட முடியுமா என்ன? எப்படி யாவது ‘பதில்’ சொல்லித்தானே ஆக வேண்டும்? எப்படியோ சொல்லத் துணிந்து விட்டார்.

‘முயற்சி செஞ்சேன்; கிடைக்கல. அவருக்கிட்ட இருப்பு இல்லியாம். என்னை மன்னிச்சிடுங்க சார்…! நான் பாருங்க சார். வீடு வித்த பணத்தைக் கொண்டு போய் பேங்குல ‘ஃபிக்ஸ் டிபாசிட்டுல’ போட்டுட்டேன். ஒரு வருசத்துக்கு எடுக்க முடியாதுங்க சார்….’ இன்னும் என்ன எல்லாமோ சொல்லித் தனது கழிவிரக்கத்தைப் புலப்படுத்திக் கொண்டார். ஏமாற்றத்தின் எதிரொலியில் ஏக்கம் பிரதிபலிக்க, எஞ்சியிருக்கும் இருபத்து நான்கு மணி நேரத்தில் வேறு ஏதேனும் ஏற்பாடு செய்ய வேண்டுமே என்ற சிந்தனையில் அமர்ந்திருந்தேன்.

‘யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்’ என்று யாரோ சொன்னது மிகத் தெளிவாகக் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன்; தெருவழியே போய்க் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மிட்டாய்க்காகப் போராட்டம் செய்து கொண்டபோது தெறித்து வீழ்ந்த சொற்கள் அவை! எங்கோ, எதற்கோ சொன்னது இங்கேயும் பொருந்துகிறதே! ஒரு வேளை அசரீரியாக இருக்குமோ?

‘சரிங்க சார்…நான் போய் வேறு யாரையாவது பார்த்து முயற்சி செய்யிறேன்; செய்தாகணுமே!’ என்று சொல்லிக் கொண்டே அவரது பதிலுக்குக் காத்திருக்காமல் எழுந்தேன். என்னுடைய அவசரமும், அங்கலாய்ப்பும் எனக்குத் தானே தெரியும்? அவரும் விடைபெற்றுக் கொண்டார்.

நாளும் – கிழமையும் நலிந்தோர்க்கு இல்லையென்பதால் நாட்கள் நகராமலா இருக்கின்றன. நாட்களும் பொழுதுகளும் விழுது விட்டுக் கொண்டேயிருந்தன.

பிரச்சினைகளே இல்லாமல் ஒரு மனிதன் இருக்க முடியாதா என்ன? பிரச்சினைகளின் மொத்தக் கூட்டுருவம் தானே மனிதன்! இருந்தாலும் கடன் என்பதுதான் பெரும் பிரச்சினை. நான் இப்போது ‘பெரும் பிரச்சினைவாதி’ என்ற நிலைமையிலிருந்து விடுபட்டிருந்தேன். ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கும். ஒரு சில விஷயங்களில் கொஞ்சம் நெருங்கிப் பிடித்தேன். பொருளாதாரச் சரிவிலிருந்து தலைதூக்கி விட்டேன். வல்லரசு நாடுகளில் ஒன்றாக வந்துவிட முடியாவிட்டாலும் – வளர்ந்துவிட முடியாவிட்டாலும், வளர்ந்து வரும் நாடுகளைப் போலுள்ள நிலைமைக்கு வந்துவிட்டேன்.

இப்போதும் நண்பர் கோபாலன் எப்போதாவது வந்து போய்க் கொண்டு தான் இருந்தார். பழக்கத்தில் மாற்ற மில்லை. பாதையில் தான் சிறுமாற்றம். புரிந்துணர்வு இருதரப்பிலும் ஏற்பட்டிருந்தது என்று சொல்லலாம்.

ஒரு நாள் மாலை நேரம். புதியவர் ஒருவர் வந்து, ‘உங்க கூட்டாளி கோபாலன் உங்களை அவசியம் நாளைக்கு வரச்சொன்னார். கட்டாயம் வருவீங்களாம்’ என்று செய்தி சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த நாள் சென்று பார்த்தேன். ஒன்றரை ஆண்டுக்கு முன்னால் வாங்கியிருந்த அவருடைய வீடு சம்பந்தப்பட்ட ஒரு பெரும் தகராறு குறித்துச் சொல்லிக் கலங்கினார். நான் முன்னூறு வெள்ளித்தேவைக்கு தத்தளித்த சமயத்தில் ஒரு வாரகால இடைவெளியில் வீடு வாங்கப்பட்டிருந்ததாகத் தஸ்தாவேஜுகள் எடுத்துக் காட்டின. எடுக்க முடியாத ‘ஃபிக்ஸ் டிப்பாசிட்’ பணம் எடுபட்டிருந்தது. பயன் படுத்தப்பட்டிருந்தது. நாட்குறிப்பு எழுதும் என்னுடைய பழக்கம் மனிதர்களைப் படித்துக் கொள்ளப் பயன்பட்டதா?

மனித மனம் தானே..! தெருவழிச் சிறுவர்களின் மிட்டாய்ப் போராட்டமும் அசரீரி வாக்கும் நினைவலைகளில் வந்து மோதியது. ‘முயற்சி செய்கிறேன், முடிஞ்சா உங்க பாக்கியம்’ என்று எனக்காக மிகவும் சிரமப்பட்டு தன் நண்பரிடம் கடன் கேட்கப்போன அன்று என்னிடம் அவர் சொல்லிவிட்டுப்போன அதே பொன்மொழிகளைத் தான் இப் போது நான் கூறினேன். இப்போது எனக்கு தத்துவார்த்த சிந்தனைகள் தடம் புரண்டு வந்தன, அவரவர்கள் பாதிக்கப் படும்போது தத்துவங்களும் வேதாந்தங்களும் பேசப்படுவதில்லை என்ற உண்மையை அவர் உணர வேண்டு மென்பதற்காக அந்தச் சிந்தனையை அப்படியே விட்டு விட்டேன். ‘ஆனவரை முயல்வோம்; ஆகட்டும் பார்க்கலாம்’ என்று இருபெரும் அரசியல் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்ற ஆறுதல் சொற்களை நானும் சொல்லி வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.

நீங்க நினைச்சா காட்டாயம் முடியும்? என்று ஒரு பெரிய ‘ஜேக்’ வைத்துப் பேசினார். சிரிப்பு வந்தது. நமட்டுச் சிரிப்பாக நான் அதை முறித்து விட்டேன். ஏன்? எதற்காக?

யார் யாரைச் சந்திக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசினேன். நான் கூட எதிர்பாராத அளவு காரிய சாதனை வெற்றிகரமாகவும் விரைவாகவும் முடிந்து விட்டது. அது ஒரு வேளை கோபாலனுடைய அதிர்ஷ்டவசமாக இருக்கலாமோ? எது எப்படியோ காரியம் முடிந்து விட்டது. அந்த மட்டில் எனக்குக் கொஞ்சம் திருப்தி.

ஒரு வாரம் ஆகியிருக்கலாம். நண்பர் கோபாலன் என்னைத் தேடி வந்தார். அந்தி நேரம். ஆறு மணியிருக்கும். அதே அந்த நூலகக் காப்பிக் கடையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு வந்து அமர்ந்தவர் வீட்டு விவகாரம் சம்பந்தமாக எல்லாம் வெற்றிகரமாக முடிந்ததைப் பற்றிச் சொல்லி விட்டு, பத்தாயிரம் வெள்ளி போயிடுச்சின்னு நான் அதிர்ச்சியடைஞ்சி போயிட்டேன்; தக்க சமயத்துல வந்து என்னைக் காப்பாத்திட்டீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வழக்கமாக, ஆமாம்; அதுதான் வாடிக்கையாக எனக்கு வரும் காப்பியுடன் அவருக்கும் சேர்த்தே காப்பிக் கோப்பைகள் மேசைக்கு வந்துவிட்டன. ‘ம்…. சரி; காப்பி சாப்பிடுங்க’ என்று விருந்தோம்பல் பண்போடு சொன்னேன்.

காப்பியைக் கலக்கிக் கொண்டே ‘மூணு நாலு நாளா ராத்திரியிலே காய்ச்சல் அடிக்குது, வறட்டு இருமல் வேற ஆளைக் கொல்லுது…!’ என்று தனது உடல் நலக்குறைவைப் பிரலாபித்துக் கொண்டார்.

‘உடம்பைக் கவனிச்சிக்குங்க. ஏனோ தானோன்னு இருந்தா சரியா இருக்காது; உடனுக்குடன் கவனிச்சி மருந்து சாப்பிடுங்க..’ என்று ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காகப் பேசினேன். அவரும் காப்பியை ஒரே மூச்சில் இழுத்து விட்டு, கோப்பையைக் கீழே வைத்துக் கொண்டே, ‘ரொம்ப நன்றிங்க சார்’ என்று எல்லாவற்றுக்குமாகச் சேர்த்தே நன்றி சொன்னார். நான் ஏறிட்டுப் பார்த்தேன். அவர்தம் உதடுகள் உலர்ந்துகிடந்தன. ஒரு வேளை இரவுக் காய்ச்சலின் வறட்சியாக இருக்குமோ? – சிந்தித்துக் கொண்டேன்.

பல முறைகளில் நண்பர் கோபாலன் நன்றி சொல்லும் போது நெஞ்சில் ஈரம் இருந்ததோ இல்லையோ; அது எனக்குத் தெரியவில்லை உதடுகளில் ஈரம் இருந்தது. இப்போது உதடுகளும் உலர்ந்தே கிடந்தன.

– மனங்கமழும் பூக்கள், முதல் பதிப்பு: நவம்பர் 1997, மலர்மாமணி பதிப்பகம், சென்னை.

மு.தங்கராசன்2 மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *