ஆலமரமும் வௌவால்களும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 96 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தப் பழந்தின்னி வௌவால்கள் ஒரு பாழடைந்த மண்டபத்தில் வசித்து வந்தன. கோடைகாலத்தில் அவைகள் வசித்து வந்த அந்தக் கட்டிடத் தில் வெப்பம் அதிகமாகக் கனன்றது!….. குளிர்காலத்திலோ அதிகக் குளிராக இருந்தது!

இதனால் மிதமான சீதோஷ்ணநிலை கொண்ட வேறு ஒரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்ல அந்த வௌவால்கள் எண்ணின. அதுவுமல்லாமல் மண்டபத்தின் மற்றொரு பகுதியில் பூச்சி தின்னும் அந்த வௌவால்கள் வசித்து வந்தன. அவைகள் இந்த பழந்தின்னி வௌவால்களைச் சீண்டிக் கொண்டேயிருந்தன. கண்பார்வைக் குறைவான இவைகள் ஒரு அதிகாலைப் பொழுதில் வேற்றிடம் தேடிக் கூட்டமாகப் பறக்கத் துவங்கின.

அது மார்ச் மாதம். இளவேனிற் காலப்பருவம். ஒரு நீர்நிலைப் பிரதேசத்தின் அருகில் ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் ஏராளமாய் ஆலம்பழங்கள் காய்த்துக் கிடந்தன. பச்சைப் பசேலென்ற இலைகளும், கொத்துக் கொத்தாய் சிவந்த நிறப் பழங்களுமாய் அந்த மரம் பார்ப்பதற்கு மிக அழகாகக் காட்சியளித்தது. நூறாண்டுகள் கண்ட விருட்சம் அது! நீளமான விழுதுகள் தாய் மரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தன. தன்னில் காய்த்துக் கிடக்கும் இந்தப் பழங்களை உண்ண ஏதேனும் பறவைகள் வந்தால் நல்லது என அந்த ஆலமரம் எண்ணிக் கொண்டிருந்தது.

வேற்றிடம் தேடிச் சென்று கொண்டிருந்த அந்த வௌவால்கள் ஆலமரத்தைப் பார்த்தன. அதன் கிளைகளில் கொத்துக்கொத்தாய் காய்த்த கனிகள் அவைகளின் கவனத்தை ஈர்த்தன. பழந்தின்னி வௌவால்களுக்கு ஆலம்பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம்! அவைகள் கூட்டமாக அந்த மரத்தில் வந்தமர்ந்தன. நீண்டதூரம் பறந்து வந்த களைப்புத் தீர பழங்களைக் கொறித்து பசியாறின.

அவைகள் ஆலமரத்திடம், “இத்தனை நாளா இந்த இடத்துல இப்படி ஒரு மரம் இருக்குறது எங்களுக்குத் தெரியாமப் போச்சு! நாங்க இங்க தங்கிக்கலாமா?” என்று கேட்டன.

“உங்களை மாதிரி உயிரினங்கள் வந்து தங்ககுறதுக்காகத்தான் நான் விருட்சமா வளர்ந்து நிற்கிறேன்! தாராளமா தங்கிக்கலாம்!” என்றது ஆலமரம்.

அந்த ஆலமரத்தில் ஆந்தை ஒன்று வசித்து வந்தது. அது இரவு இரை தேடச் சென்று விட்டு மறுநாள் அதிகாலை பொந்திற்குத் திரும்பியது. வழக்கத்திற்கு மாறாக நூற்றுக்கணக்கான வௌவால்கள் மரத்தில் அடைந்து கிடப்பதைப் பார்த்தது! வௌவால்களுக்கு ஆலம்பழம் என்றால் ரொம்பப் பிடிக்கும்! அவைகள் பழத்தை உண்ண வந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டது. ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் வௌவால்கள் அங்கேயே இருப்பதைக் கண்ட ஆந்தை மரத்திடம் பேச்சுக் கொடுத்தது.

“வந்தோம் பழத்தைத் தின்னோம் போனோம்னு இல்லாம, இதுக ஏன் இங்கேயே அடைஞ்சு கிடக்குதுங்க?” என்று கேட்டது.

“அதுக நம்ம விருந்தாளிங்க கிடையாது! இனிமே இங்குதான் தங்கப் போகுதுங்க!” என்றது ஆலமரம்!

இதைக் கேட்ட ஆந்தையின் முகம் சுருங்கி விட்டது.

பரந்து விரிந்த அந்த மரத்தின் ஒரு பகுதியில் கிளிகள் வசித்து வந்தன. மைனாக் கூட்டமும் இருந்தது. ஆனால் அவைகள் பகற்பொழுதில் விழித்திருந்து இரை தேடிப் பிறகு இரவில் ஓய்வெடுக்கும் பறவைகள். ஆந்தையோ, இரவில் விழித்திருந்து பகலில் ஓய்வெடுக்கும் பறவை! இதனால் மற்ற பறவைகள் பெரும்பாலும் ஆந்தையை நேருக்கு நேர் சந்திப்பதில்லை. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் ஆந்தையின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி அவைகள் பின் வாங்கி விடும்! அந்தத் தாய் மரத்தின் பொந்தில் வசித்து வந்த ஆந்தை கிட்டத்தட்ட அந்த மரத்தின் ராஜாவாக இருந்து வந்தது! ஆனால் வௌவால்கள் இரவாடிகள்! (இரவு விழித்திருக்கும்)…. ஆந்தை இன்னொரு இரவாடியுடன் தனது வசிப்பிடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஆந்தை சிறு வௌவால்களை அவ்வப்போது பிடித்து உண்ணும்தான்! ஆனால் அளவில் பெரிய இந்தப் பழந்தின்னி வௌவால்களை அவைகள் கூட்டமாக இருக்கும் போது எதுவும் செய்து விட முடியாது!

ஆந்தை மரத்திடம் மீண்டும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தது.

“வௌவால்கள் பறவையே கிடையாது! பாலுட்டி வகையைச் சேர்ந்த விலங்கு! பாக்குறதுக்கே அறுவெறுப்பா இருக்கு! மரம் முழுக்கத் தலைகீழா வேற தொங்கிக்கிட்டிருக்கு! இதுகளை உன்னோட கிளைகள்ல்ல அடைய விடலாமா? இதனால் உன்னோட அழகு கெடலையா? இதுகளை வேற எங்கயாவது வசிக்கச் சொல்லு!” என்றது ஆந்தை.

“உன்னோட தோற்றத்தைப் பார்த்து கூடத்ததான் மத்தவங்க அறுவெறுப்பு அடையுறாங்க! அதுக்காக நான் உன்னை வெறுக்கவா செய்யுறேன்?”……. என்ற வார்த்தைகள் மரத்திற்கு வாய் வரை வந்து விட்டது. பிறரின் தோற்றத்தை வைத்து பரிகசிப்பது இழிவான செயல்! அது மனதைக் காயப்படுத்தும்! …… என மரம் நினைத்தது. ஆந்தை குறுகிய எண்ணத்துடன் பேசுகிறது என்பதை மரம் புரிந்து கொண்டது. அது பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தது.

இனி மரத்திடம் பேசி பயனில்லை என்பதை ஆந்தை புரிந்து கொண்டது. அந்த மரத்தை ஒட்டி விவசாயி ஒருவரின் நிலம் இருந்தது. விவசாயி தினமுமம் நிலத்திற்கு வருவார். அங்கே வேலை செய்து விட்டு மரத்தடியில் ஓய்வெடுப்பார். மரத்தடியில் திண்ணைக்கல் ஒன்று உண்டு. ஆந்தை அந்த மரத்தில் வசிப்பதும் வௌவால்கள் புதிதாக அங்கு வந்து அடைவதும் அவருக்குத் தெரியும். ஒருநாள் ஆந்தை அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தது.

“இந்த வௌவால்களை இங்க இருந்து விரட்டுறதுக்கு எதாவது ஏற்பாடு பண்ணுங்க!”… என்றது ஆந்தை.

“எதுக்காக வௌவால்களை இங்க இருந்து விரட்டனும்னு நினைக்குறே?” என்று கேட்டார் விவசாயி,

“இதுக இங்க வந்ததுல இருந்து இந்த இடமே சுத்தம் இல்லாமப் போச்சு! நீங்க படுத்து ஓய்வெடுக்குற திண்ணைக் கல்லைக் கூட எச்சம் போட்டு அசுத்தம் பண்ணிருதுங்க! தினமும் நீங்க அதை சுத்தம் பண்ணிட்டுத்தான் ஓய்வெடுக்குற மாதிரி இருக்கு” என்றது ஆந்தை.

ஆந்தை தவறான எண்ணத்துடன் இருப்பதை விவசாயி புரிந்து கொண்டார். அவர் அதன் மனஓட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டி வேண்டுமென்றே பேச்சுக் கொடுத்தார்.

“வௌவால்களை விரட்டுறதுனா எப்படி விரட்டுறது?” என்று ஆந்தையிடம் கேட்டார்.

“வௌவால்களுக்கு வேட்டுச் சத்தம்னா அறவே ஆகாது! நீங்க ஒரு ரெண்டு மூணு நாள் இந்த மரத்தடில் அதுக அடைஞ்சு இருக்குற நேரமாப் பாத்து வெடி போடுங்க! அதிர்ச்சி அடைஞ்சு இந்த இடத்தை விட்டுக் காலி பண்ணிட்டுப் போயிரும்ங்க!” என்றது ஆந்தை!

“வௌவால்களுக்கு மட்டுமா வேட்டுச் சத்தம் ஆகாது! எல்லாப் பறவைகளுக்கும் தான்! ஏன் உனக்குக் கூடத்தான் ஆகாது!” என்றார் அவர்!

“நான் என் பொந்தை அடைச்சுக்குறேன்! காதை இறுக்கமா பொத்திக்கிறேன்! இந்த வெடி போடுற விஷயம் உங்களுக்கும் எனக்கும் மட்டுந்தான தெரியும்!” என்றது ஆந்தை.

விவசாயி சிரித்தார். அவர் பேச ஆரம்பித்தார்.

“இன்னைக்கு இந்த மரம் ஒரு பெரிய விருட்சமா வளர்ந்து நிக்குதுனா அதுக்கு இதுல அடையுற வௌவால்கள் பறவைகள் மற்ற சிற்றுயிர்களோட எச்சம்தான் காரணம்! அந்த எச்சங்கள்தான் மக்கும் உரமா மாறி இந்த மரத்தோட வளர்ச்சிக்கு உதவியிருக்கு! அதுக்கு நன்றிக் கடனாத்தான் மரம் உங்களுக்குப் பழங்களைத் தருது! இதோட நிக்கல! நீங்க இந்தப் பழங்களைச் சாப்பிட்டு அதோட விதைகளை எங்கயாவது வீசிட்டுப் போயிர்றீங்க! யார் கண்டது? பக்கத்துல எங்கயாவது வளர்ந்து இருக்குற ஒரு ஆலமரத்தோட வித்து நீங்க வீசுன இந்த மரத்தோட வித்தாக் கூட இருக்கலாம்! நான் விவசாயி! நான் உற்பத்தி செய்யுற தானியங்களுக்குப் பெருத்த சேதாரத்தை உண்டு பண்ணுற எலிகளோட பெருக்கத்த நீதான் கட்டுப்படுத்துற! அதுனால நீ விவசாயிகளோட நண்பன்! உணவுச்சங்கிலில் ஒவ்வொரு உயிர்களும் இப்படித்தான் ஒண்ணை ஒண்ணு சார்ந்து இருக்குற மாதிரி இயற்கையா அமைஞ்சிருக்கு! இயற்கையோட இயைந்து வாழணும்!…..யாரையும் வெறுக்கக் கூடாது! நீ ஒரு இரவாடி! இன்னோரு இரவாடியோட உன்னோட இருப்பிடத்தைப் பகிர்ந்துக்குறதுல்ல உனக்கு என்ன சிரமம்? முதல்ல இந்த மரத்துக்கே நாமதான் ராஜாங்குற நினைப்பை விடு!” என்றார் விவசாயி.

ஆந்தை யோசித்தது. அது தனது தவறை உணர்ந்தபடி மவுனமாக அங்கிருந்து நகர்ந்து சென்றது.

– தினமணி, சிறுவர்மணி, 26-10-2019.

மா.பிரபாகரன் எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *