ஆசிரியரான ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 125
1970 ஆம் ஆண்டு. செங்கல்பட்டு நகரின் மிகப்பெரிய தனியார் பள்ளிக்கூடம் அது. திங்கட் கிழமை காலை நேரம். இரண்டு மாதங்கள் வெளிநாடு சுற்றுலா போயிருந்த அதன் தாளாளர் முருகானந்தம், தாயகம் திரும்பி அன்று பள்ளிக்கு வந்திருந்தார். அவரைப் பார்க்க, அவரது அறைக்கு தலைமை ஆசிரியர் குணசேகரன் வந்து நின்றார்.
‘குட் மார்னிங் சார்’
‘குட் மார்னிங் குணா சார்… இங்கிலீஷ் டீச்சர் நீங்க அப்பாயின்ட் பண்ணிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்… நல்லா கிளாஸ் எடுக்கறாரா?’
‘சித்தார்த்தன் னு பேரு யங்கஸ்ட்டர் நல்லா எடுக்கறார் சார் பசங்களுக்கும் அவரைப் பிடிச்சு போச்சு . ஒங்களுக்கு அறிமுகப்படுத்த அழைச்சுட்டு வந்தேன்.’
‘வரச் சொல்லுங்க…’
தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே சென்று கட்டுடல் இளைஞன் ஒருவனை அழைத்து வந்தார்.
தாளாளர் முருகானந்தம் இளைஞனைப் பார்த்ததும் எழுந்து நின்றார்.
குணசேகரன், தாளாளரின் இந்த செயலைக் கொண்டு வியந்தார்.
‘என்ன தம்பி நீங்க நம்ம பள்ளிக்கூடத்துல… என்ன விளையாட்டு இது.. அனந்தபுரம் ஜமீன் வீட்டு பிள்ளை நீங்க … நம்ம ஸ்கூல்ல… ‘
‘வணக்கம் கரஸ்பான்டன்ட் சார், என்னை வேலைல வெச்சுக்க மாட்டீங்களா?’
‘உங்களுக்கு எதுக்கு தம்பி… இதெல்லாம்… ‘
‘என்னோட சொந்தக் கால்ல ஒரு நாலு காசு சம்பாதிக்கத்தான் … நான் குவாலிபைடு டீச்சர் இல்லதான் ஆனா குணா சார் எனக்கு நல்லா டெஸ்ட் வெச்சு தான் அப்பாயின்ட் பண்ணி இருக்காரு… நானும் பசங்களோட ஐக்கியம் ஆயிட்டேன். நீங்க கொடுக்கிற சம்பளம்ங்கிறது.. என்னோட சுய சம்பாத்யமா இருக்கும் இல்லையா? ஆசிரியர் தொழில்ல ஆரம்பிச்சு மேல மேல போன்வங்களும் இருக்காங்க இல்ல … எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்க பார்க்கறேன். சார் எனக்கு ஆசீர்வாதம் பண்ணனும்…’
‘சரி வாழ்த்துக்கள் கிளாசுக்குப் போங்க ‘ என்று கூறிவிட்டு தமது இருக்கையில் அமர்ந்தார். இளைஞன் சித்தார்த்தனும் குணசேகரனும் அந்த அறையை விட்டு வெளியேறினர்.
(போனகம் என்பது தானுழந்து உண்டல் – கொன்றை வேந்தன் – 69 – ஒருவன் தன் உழைப்பால் ஈட்டிய பணத்தினால் பெற்ற உணவை உண்ண வேண்டும்)
– இலக்கிய வரிக் கதைகள் – ஔவைப் பாட்டியின் கொன்றை வேந்தன்….
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
