அம்மாவாக அல்ல
கதையாசிரியர்: சிதம்பர திருச்செந்திநாதன்
தின/வார இதழ்: ஈழநாதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2025
பார்வையிட்டோர்: 1,024
(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காதோரம் தான் அந்தச் சத்தம் கேட்டது. “அம்மா” என்று மெல்லிய விசும்ப- லாக இளம் கன்றின் குரலாக அம்மா முதுகு சிலிர்த்து எழுந்தாள்.
அவன் குரல் தான். எங்கே வந்தானோ. இப்போது ஏன் வந்தான் இவ்வளவு காலத்திற்கு பிறகு? அவளுக்கு மூச்சு திணறியது.
விரிந்த வளவின் ஒரு புறத்தே ஓலைக் குடிசை, தென்னையும் தென்னோலை- களும் குரும்பை குப்பையுமாக அந்த வளவு புழுத்துக் கிடந்தது. ஒற்றை மனிசியாக வளவை பராமரிக்க அவளால் முடிவதில்லை. மர நிழல்களில் படுத்துக் கிடப்பதும், புல் மேய வரும் மாடுகளோடும் தீன் பொறுக்க சிலுப்பித் திரியும் கோழிகளோடும் பொழுது சரிந்து விடும்.
எப்போதாவது அவனின் தோழர்கள் வருவார்கள்.
“அம்மா பசிக்குது” என்று கூறி தென்னைகளில் ஏறுவார்கள். மாங்காய் பிஞ்சை பிய்ப்பார்கள். கிணற்றில் குளிப்பார்கள்.
குடிசை வாசலில் ஓலை பரப்பி அரை வட்டமாக உட்காரர அம்மா நடுவில் அமருவாள். வாளை இலைகளை பிய்த்துக் கொண்டு கைகளை நீட்டிப் பம்பலடித்துக் கொண்டு அம்மா குழைத்துத் தரும் சாப்பாட்டைச் சாப்பிடுவார்கள்.
“மணியான சாப்பாடு அம்மா” என்று வேறு சொல்லுவார்கள்.
அம்மா அவர்களில் ஒவ்வொருவருடைய முகத்திலும் மகனைத் தேடுவாள். விழிகளின் ஒளிர்வில் அவள் மகனின் முகத்தைக் காண முடியாவிடினும் அகத்தைக் காணுவாள். அகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தாகத்தினையும் உணருவாள். ஆனால் ஒரு நாளாவது அவன் வந்ததில்லை.
கார்த்திகை மாதத்து மாலை நேரம் ஆறு மணிக்கு கிட்டத்தில் இருக்கும். தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வானம் தொடுத்- திருந்த யுத்தம் காலையில் தான் ஓய்ந்திருந்தது.
மழை குடித்த நிலம் இறுகிப் போய் இருந்தது. மரம் செடி கொடிகள் முழுகித் தலை உலர்த்தியதால் பளீர் என்றன. இதமான குளிர் வேறு. தளர்ந்து போன மாலையும், அமானுசமான அமைதியும் அம்மாவுக்கு வித்தியாசமாக தெரியவில்லை.
அவள் உலகத்தில் எப்போதும் போல அப்போதும் வெறுமைதான். அதில் காகம் கரைந்தாலும் ஒன்று தான். “மிக்” சத்தம் கேட்டாலும் ஒன்றுதான்.
“அம்மா” மீண்டும் மிக மென்மையாக ஆதரவாக, அம்மாவின் நெஞ்சு அதிர்ந்து கலங்கியது. காதுகளில் தீப்பற்றியது. எவ்வளவு நாட்களுக்குப் பிறகு கேட்கும் குரல். என்றாலும், எந்த விதமான ஊறும் நேராத அவனின் குரல் தான் எவ்வளவு காலத்திற்குப் பிறகு கேட்டாலும் மறக்க முடியாத குரல்.
அம்மா குரல் வந்த திசையைப் பார்த்தாள். காற்று சற்று நேரத்திற்கு முதல் இருந்ததை விட வேகமாக வீசியது. தென்னை மரத்து தென்னோலைகள் கைகளை வீசிக் குதித்தாடின. மழை இருள் இல்லாவிடினும் மின்னல் ஒன்று மின்னியது.
யாரையும் காணவில்லை. சூழல் முன்பை விட அமைதி. அம்மா இருந்த இடத்தை விட்டு எழும்பினாள்.
அவள் முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றோ தொலைந்த மகிழ்ச்சியை அவள் மீண்டும் தேட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் கேடு கெட்ட மனம் தான் துடிக்க ஆரம்பித்திருந்தது.
பர்வையை நாலாபுறமும் சுழற்றிய போது அந்தக் காட்டி பூத்தது. ஆடிக் கொண்டிருந்த தென்னை மரம் தன் ஆட்டத்தை நிறுத்தியது போலவும் அதன் தோளில் இருந்து இறங்கி வந்தது போலவும் படம் எடுத்தால் அப்படித்தான் எடுக்க முடியும்.
அம்மாவின் மகன் வந்தான். கடைசியாக அவனைக் கண்டதைவிட வேறு விதமாக? என்ன விதமாக என அம்மாவினால் ஊகிக்க முதலே அம்மா மூச்சுத் திணறிப் போவாள்.
“என்ரை ராசா” என்ற படி தான் பாய்ந்தாள். அவனைப் பிடிக்க படாதபாடு பட்டாள். அவன். சிரித்து சிரித்து நழுவினான். நழுவி நழுவிச் சிரித்தான்.
அந்தச் சடுகுடு விளையாட்டில் அம்மா களைத்துப் போய் “நில்லடா” என்றாள்.
அவன் நிற்பது போல போக்குக் காட்டிக் கொண்டு அப்பால் போனான். அம்மா மீண்டும் “நில்லடா” காட்டுக் கத்தலான அந்தச் சத்தம் வெடித்து சிதறியது.
அதைவிடப் பெரிதாக அவன் சிரித்தான். அந்தச் சிரிப்புக்கு முன்னால் அம்மாவின் கத்தல் வாலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டது.
“அம்மா என்னோடை வா ஒருக்கா” அதுதான் அவன் பேசியது. “ஏன்” என்று அம்மா முதலில் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் சிரித்தான்.
“வா….. பிறகு வந்து எல்லாம் கதைக்கலாம். இப்ப என்னோடை வா” அம்மாவின் மனத்தில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உருவாகி நான் முந்தி நீ முந்தி என்று அந்தரப்பட்டுக் கொண்டிருந்தன. அம்மா அவற்றினை கஷ்டப்பட்டு அடுக்கி வைத்தாள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று.
“சரி வா” அம்மா பதில் சொல்ல-
“சீலையை மாற்றிக் கொண்டு வாங்கோ. ஒரு புனிதமான இடத்துக்கு போக வேணும்”
அம்மா வியப்புடன் மகனைப் பார்த்தாள். நல்ல சேலை கட்டுவது என்பது அம்மாவைப் பொறுத்த வரை புதிரான விடயம் தான். எங்கு தேடுவது நல்ல சேலை.
அவன் பழையபடி சிரித்தான். கையை நீட்டி.
“இதை உடுங்கோ” என்ற அவன் கையில் புதுச்சேலை, ஒரு காலத்தில் அம்மா விருப்பமாக உடுத்த நிறத்தில் டிசைனில். அவன் முன்னால் நடக்க அம்மா பின்னால் அவன் நடக்கிறானா ஓடுகிறானா தெரியவில்லை.
“மெதுவாகப் போடா எனக்குக் களைக்குது”
அவன் பதில் சொல்லாமல் சிரித்தான். அவன் வேகம் குறைய- வில்லை. ஆனால் அம்மாவுக்கு அதன் பின் இப்போது நடப்பது போலத் தெரியவில்லை. களைப்புத் தெரியவில்லை.
அவன் நடக்கும் பாதை கூட வழக்கமானதாக இருக்கவில்லை. புதிய பாதை – புதிய இடம்.
இருளில் கூட அவன் முகம் மட்டுமல்ல உடல் கூட பளபளத்தது. இவ்வளவு பளபளப்பு உடையவனாக எப்போது மாறினான் என்று அம்மாவுக்குப் புரியவில்லை.
இடிந்த கட்டிடங்கள் கூரைபடுத்த இடங்கள் சுருட்டி உருட்டி விடப்பட்ட முள்ளுக் கம்பிகள் அடங்கிய இடம் ஒன்று வந்தது. “இதெல்லாம் நாங்கள் சண்டை பிடிச்ச இடம். இந்தா இது ஒரு ஆமிக்காரரின்டை சப்பாத்து” என்றபடி அதனைக் காலால் உதைத்தான்.
அம்மாவுக்கு பகீர் என்றது.”ஏன்டா அவன்களும் மனிசர் தானே என்றாள் குரல் பிசிற.
“ஓமோம் நாங்கள் எங்களை எங்கடை இடத்தில ஆக்கிரமிக்க வாறவனைத் தான் எதிர்க்கிறம்’
அம்மா ஆக்கிரமிப்பால் அழிந்து கிடந்த இடங்களைப் பார்த்தாள். அப்பால் காட்சி மாறியது.
இடிந்த கட்டிடங்களின் மத்தியில் புதிதாக குடிசைகள் முளைத்- திருந்தன. நல்ல கூரை பறிபோன கட்டிடங்களின் ஓலைக் கூரைகள் முளைத்திருந்தன.
“இஞ்சை பாருங்கோ அம்மா. ஆக்கிரமிப்பு விரட்டப்பட்ட இடங்களில் எங்கடை சனம் மீளக்குடி வந்திட்டுது” என்று சொன்ன அவன் குரலில் சந்தோஷம் தெரிந்தது.
வயல் வெளிகளில் வயல் வேலைகள் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
அந்த மாற்றங்களை அம்மா புரிந்து கொண்டாள். காற்றினை ஆழமாக சுவாசித்தாள். புதிய உற்சாகம் பிறந்தது.
“கெதியாய் நடவுங்கோ அம்மா” என்ற அவன் மேலும் வேகமானான்.
அம்மாவில் வேகம் பிறந்தது. மகனோடு இணைய முனைந்து அவன் கைகளைப் பிடித்தால் என்ன என்று நினைத்து நெருங்க அவன் விலகினான்.
சட்டென்று இடம் மாறியது. ஏராளமான மனிதர்கள் கொண்டதாக அந்த இடம் எழுந்தது. அவர்கள் மத்தியில் ஒழுங்காக ஒரே சீரான வரிசையில் சுடர் ஒளிகள்.
அம்மா பிரமிப்பில் ஆழ்ந்தாள். மகன் அம்மாவின் கைகளில் எதையோ திணித்தான். உணர் திறனால் அம்மா அதனை மலர்கள் என உணர்ந்து கொண்டாள்.
பிறகு அவன் காணாமல் போனான். மின்னற் பொழுதுக்கு இடையில் அவன் மாயமானான். அம்மாவின் கண்கள் இருண்டன. கண்ணீர் மிக நீண்ட காலத்தின் பின்னர் இப்போது தான் எட்டிப் பார்த்தது.
ஓவென அவள் அழ ஆரம்பித்தாள். அக்கம் பக்கம் நின்றவர்கள் அவளை அழைத்துச் சென்று அவளின் மகனின் நடுகல் முன்னால் விட்டார்கள்.
அம்மா மகனின் அந்த நடுகல்லில் பூக்களை சொரிந்தாள். கண்களை துடைத்தாள். விளக்கேற்றினாள்.
– ஈழநாதம், 25-11-2000.
– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.