நம்பிக்கை மோசம் !





ஒருநாள் முல்லாவிடம் ஒரு மனிதன் வந்தான்
“”முல்லா அவர்களே! எனக்குக் கொஞ்சம் பணக்கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து ஒரு பொற்காசு கடனாகக் கொடுங்கள். கூடிய விரைவில் நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்!” என்று அந்த மனிதன் கூறினான்.
அந்த மனிதனைப் பற்றி முல்லாவிற்கு நன்றாகத் தெரியும். கண்டவர்களிடம் கடன் வாங்குவது அவனுடைய வழக்கம். ஆனால், வாங்கிய கடனை அவன் திரும்பித் தரமாட்டான். அந்த மனிதன் திரும்பத் திரும்ப வந்து தனக்குத் தொந்தரவு தரவேண்டாம் என்று எண்ணிய முல்லா, அவனுக்கு ஒரு பொற்காசை அளித்தார்.
அந்த மனிதன் முல்லாவைத் தலை தாழ்த்தி வணங்கிவிட்டுப் போய்விட்டான்.
வாங்கிய கடனைத் திருப்பித் தரவேண்டுமே என்று அஞ்சி அவன் தன் வீட்டுப் பக்கமே வரமாட்டான் என்பது முல்லாவின் எண்ணம். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக இரண்டொரு நாட்கள் கழித்து, கடன் வாங்கிய மனிதனே வந்து தான் வாங்கிய கடனைத் திரும்பிக் கொடுத்துவிட்டான்.
சில நாட்களுக்கு பிறகு, அதே மனிதன் திரும்பவும் முல்லாவிடம் வந்தான்.
“”முல்லா அவர்களே! தயவுசெய்து ஐந்து பொற்காசுகளைக் கடனாகக் கொடுங்கள். கூடிய விரைவில் நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்!” என்றான்.
முல்லா அந்த மனிதனை நோக்கி, “”என்னிடம் கடன் வாங்கிய விஷயத்தில் நீ நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய். அதனால், உனக்குக் கடன் தரமாட்டேன்!” என்று உறுதியான குரலில் கூறினார்.
அதைக்கேட்டு அந்த மனிதன் திகைத்துவிட்டான்.
“”முல்லா அவர்களே! நான் நம்பிக்கைத் துரோகம் செய்தேன் என்றா கூறினீர்கள்? நான்தான் உங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டேனே!” என்றான்.
“”அந்த விஷயத்தில்தான் நீ நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய். நான் உன்னிடம் பணம் கடன் கொடுத்தபோது, நீ திருப்பித் தரமாட்டாய் என்று நம்பினேன். ஆனால், என் நம்பிக்கைக்கு விரோதமாக நீ கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டாய். ஒருவகையில் இது நம்பிக்கைத் துரோகம்தானே?
“”இப்போது உன்னைப் பார்க்கும்போது வாங்கிய கடனை நீ திருப்பிக் கொடுத்துவிடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது. என் நம்பிக்கைக்கு விரோதமாக நீ வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமலிருந்து விடுவாயோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதனால், இந்த தடவை உனக்குக் கடன் தரமாட்டேன்!” என்று கூறினார் முல்லா.
கடன் வாங்க வந்த மனிதனின் நோக்கமும் அதுதான். “ஒரு பொற்காசுக் கடனை தான் திருப்பிக் கொடுத்துவிட்டால், முல்லா நம்பிக்கை கொண்டு ஐந்து பொற்காசுகளைக் கடனாகக் கொடுப்பார்; கடன் கைக்கு வந்ததும் திருப்பிக் கொடுக்காமல் இருந்துவிடலாம்,’ என்று அந்த மனிதன் திட்டமிட்டிருந்தான்.
அதை எப்படியோ விளங்கிக் கொண்ட முல்லா தனக்குக் கடன் கொடுக்காமல் தவிர்த்துவிட்டார் என்பதை உணர்ந்து அந்த மனிதன் முல்லாவின் புத்திசாலித்தனத்தை எண்ணி ஆச்சரியம் அடைந்தான்
– செப்டம்பர் 24,2010