கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 169 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புமிக்க சகோதரி சுஜாதா,

வீட்டை அலங்கோலமின்றி எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்வது எவ்வாறு சாத்தியமெனக் கேட்டிருக்கிறாய்.

வீட்டைச் சுத்தமாகவும், அழகாகவும், வைத்துக் கொள்வது ஒரு கலை. எங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் வீட்டை நன்றாக வைத்துக் கொள்வதையே தன்னுடைய வாழ்க்கை லட்சியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பெருமையுடன் சொல்லுகிறேன். மிகைப்படுத்தி நான் சொல்லவில்லை.

வீட்டின் அலங்கோலத்துக்கு அநேக காரணங்கள் – தாம்பத்யக் கலகம், அசிரத்தை, சோம்பேறித்தனம், ஆரோக்கியக் குறைவு, வறுமை, இப்படிப் பலவித காரணங்களால் மனம் பேதப்பட்டு அலங்கோலமாகத் தோற்றம் அளிக்கலாம். இவைகள் ஒன்றுமே இல்லாமல் வசதியான வாழ்க்கை பெற்ற சிலருடைய வீடுகளும் அலங்கோலமாக இருப்பதையும் பார்க்கின்றேம்.

மகா காவியங்களில் மகரிஷிகளுடைய மேதா விலாசத்தைச் சொல்லுமுன் அவர்களுடைய ஆசரமத் தோற்றத்தைப் பற்றி வெகு அழகாக வர்ணிக்கப் பட்டிருக்கும். மரத்தடியில் குடி இருந்தாலும் அதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேணும்.

ஒரு சிநேகிதிக்கு வசதியான வீடும் இதரப் பொருள்களும் இருக்கின்றன. எப்பொழுது போனாலும் அவளால் வந்தவர்களை வரவேற்க முடியாது. மேஜைமேல் துணி மூட்டை. கட்டில் மேல் வீட்டில் உள்ள சகல சாமான்கள், வீடு முழுவதும் காகிதக் குப்பைகள், ஆங்காங்கு குட்டை குட்டையாக ஜலம், காய்ந்த பழத்தோல் – இப்படியாக இருக்கும். அந்தச் சகோதரி அவசரம் அவசரமாக எல்லாவற்றையும், சீர்ப்படுத்திக் கொண்டே ‘இன்று லீவுநாள். குழந்தைகள் படுத்தும் பாடு. யார் யாரோ சாப்பிட வந்தார்கள். இதனால் இப்படி ஆகிவிட்டது’ என்று நாம் கேட்டது போல் சொல்லிக் கொண்டு சிரமப்படுவாள்.

ஒரு பெரிய குடும்பத்தில் வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள், சம்பந்திகள் வந்தால் ஒரு விசித்திர ஏற்பாடு செய்வார்கள். குழந்தைகளிடம் நம்பிக்கை இல்லை. எல்லாக் குழந்தைகளையும் ஒரு அறையில் போட்டு அடைத்து நிறைய விளையாட்டுச் சாமான்களையும் தின் பண்டங்களையும் போட்டு விட்டு அறையை அடைத்துப் பூட்டி விடுவார்களாம். இந்த ஏற்பாடு ஒரு நாள் விபரீதமாய் விட்டது. வந்தவர்கள் குழந்தைகள் எங்கேயெனக் கேட்டிருக்கிறர்கள். வெளியே விளையாடப் போய் விட்டதாகச் சொல்லி விட்டார்கள். உள்ளே அடைக்கப்பட்ட குழந்தைகள் ஒன்றுக் கொன்று சண்டையிட்டுக் கதவை உடைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதைச் சமாளிக்க முடியாமல் பெரியவர்கள் தோல்வியுற்றார்கள்.

மேனாட்டார் வீட்டை அலங்காரமாக வைத்துக் கொள்வதில் தனிப்பட்ட கவனம் செலுத்துகிறார்கள். அது அவர்களுடன் பிறந்த நல்ல வழக்கம். மூன்றே மாதங்கள் ஒரு ஊரில் இருந்தாலும் ஒரு சின்னத் தோட்டம் போட்டு, வீட்டுக்குத் தகுந்த சாமான்கள் வாங்கி அழகு பெறச் செய்வார்கள். சாப்பாட்டு அறையில் பாடப் புத்தகமும், படுக்கும் அறையில் வேண்டாத தட்டுமுட்டுச் சாமான்களும் அடைக்க மாட்டார்கள்.

முன் காலத்தைப் போல் பெரிய வீடுகளில் வாழ முடியவில்லை. நகர வாழ்க்கையில் மிகச் சிறிய வீடுகள்தான் கிடைக்கின்றன. பம்பாய் போன்ற நகரங்களில் ஓரிரு அறைகளில் சகோதரிகள் பாங்காகக் குடும்பம் நடத்துகிறார்கள். பம்பாயில் ஒரு சகோதரி தன் வீட்டில் நீள வீணைப் பெட்டிமாதிரி வாசிக்கத் வைத்திருந்தாள். ‘வீணை தெரியுமா?” என்று கேட்டேன். “அழுக்குத் துணிகள் போட இம் மாதிரி பெட்டி வாங்கினேன். மேலே உட்காரவும் வசதியாக உபயோகப்படுகிறது” என்றாள். அவளைப் புத்திசாலி யென வியந்தேன்.

தற்காலத்தில் மரச்சாமான்கள் பகலில் உட்காரும் சோபாவாகவும் இரவில் படுக்கும் கட்டிலாகவும் மடக்கி வைக்கும்படியாக, எல்லாம் விதவிதமான சாமான்களாகக் கிடைக்கின்றன. நாம் விரும்பினால் வீட்டை நன்றாக அழகு பெறச் செய்ய முடியும்.

பூமாதேவி.

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

வசுமதி ராமசாமி2 ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *