கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 147 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சகோதரி சுஜாதா,

சிலரை நாம் பார்க்கப் போனால் நம் சுகத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்க மாட்டார்கள். தங்கள் பெருமையையோ தங்கள் குழந்தைகளின் பெருமையையோ அல்லது இல்லாத குறைகளையோ அடுக்கிக் கொண்டே போவார்கள். ஒரு மணி நேரம் பொறுமையாக இருந்து கேட்ட பிறகு நாமாக நம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்ள நாவெழாமல் திரும்பவேண்டியதுதான்.

நல்ல கடும் வெய்யிலில் ஒரு வீட்டுக்குப் போகிறோம். தாகத்துக்குத் தண்ணீர்கூடத் தேவையாயெனக் கேட்காமல் இருந்து விடுகிறார்கள். அதுகூடத் தேவலை. ‘நீங்க ளென்ன, எங்கள் வீட்டில் சாப்பிடுவீர்களா?’ என்று சொல்கிறார்களே அதுதான் பொறுக்க முடியாதது. ‘ஏன் சாப்பிட மாட்டேன்? கொண்டு வாருங்கள்’ எனச் சொல்லத் தைரியம் வருவதில்லை. அதிகமாக வற்புறுத்திக் கடுக்காய் கஷாயம் போன்ற காப்பியைக் கொடுத்து உபசாரம் செய்வதும் கஷ்டமாகத்தானிருக்கிறது. எதிலும் மீதமிருக்கிறதல்லவா?

நம்முடைய வீட்டுக்கு ஒருவர் வந்தால் கூடியமட்டும் அவர்கள் விரும்பும் விஷயத்தைப் பேசி அன்புடன் உபசரித்து வாசல் வரையில் சென்று வழி அனுப்புவதுதான் தகுந்த மரியாதை. சில சமபம் வருகிறவர்கள் கூட யாராவது புது சகோதரியை அழைத்து வரலாம். அவர்கள் யாரென்று நாம் மரியாதையாகக் கேட்டறிந்து கொள்வது நலம். ஏனென்றால் நாம் அறியாமல் யாரையாவது பற்றிக் குறையாகப் பேசுவோம். அவர் நமக்கு எதிரிலேயே நிற்கும் புது சகோதரியாக இருக்கலாம். பிறகு நிலைமை எக்கச்சக்கமாய் விடும். கூடிய மட்டும் தனிப்பட்டவர்களைப் பற்றிப் பேசுவதை விடுத்து, பொது விஷயங்களைப் பற்றிப் பேசத்தான் முயற்சி செய்ய வேண்டும். நாமும் ரஸமாகப் பேசினால் தான் கேட்பவரும் விரும்புவார்கள்.

கோடைக்கானவில் ஒரு தோழி வீட்டுக்குப் போயிருந்தோம். திரும்பும் போது, குடையை அங்கேயே வைத்துவிட்டு மறந்து விட்டோம். சிறிது தூரம் வந்த பிறகு நினைவு வந்தது. மறுபடியும் அவர்கள் வீட்டுக்குப் போனோம். வீட்டுக்கார அம்மாள் “இவன் மஞ்சளை வாரிப் பூசிக் கொண்டு மஞ்சள் காமாலைக்காரி மாதிரி இருக்கிறாள். பட்டிக்காடு” என்றாள். அவள் பெரிய பெண் – இரட்டைப் பின்னல் கொல்லென்று சிரித்தாள். என்னைக் கண்டதும் அந்தம்மாள் முகத்தில் அசடு தட்டியது. வீட்டுக்கு யாராவது வந்து விட்டுப் போனால் அவர்களைப் பற்றி விமரிசனம் செய்வதோ பரிகசிப்பதோ மிகவும் தவறு.

ஒரு சமயம் என் தோழி வீட்டுக்குப் போயிருந்தேன். அவன்ள் ன்னை அன்போடு வரவேற்று உபசரித்தாள். பிறகு தன் ஆறு வயது நிரம்பிய பெண்ணைக் கூப்பிட்டு, “ஏன் பள்ளி கொண்டீரய்யா?” என்ற பதத்துக்கு அபிநயம் பிடித்துக் காட்டச் சொன்னாள். குழந்தை நல்ல சமர்த்துத் தான். அன்று அதற்கு மனமில்லை. என் சிநேகிதி விடுவதாக இல்லை. அதை வற்புறுத்திச் சொல்லச் சொல்ல அதற்குப் பிடிவாதம் அதிகமாயிற்று. குழந்தை பிடிவாதத்துக்கு மேல் என் தோழிக்கு அதிகமாகக் கோபம் வந்தது. அதை மிரட்டி அதட்டிச் சொல்லவே குழந்தை அழ ஆரம்பித்தது. “பரவாயில்லை! குழந்தையை விட்டு விடு. இன்னொரு சமயம் ரொம்ப நன்றாகச் செய்து காட்டுவாள்” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவள் காதில் விழவேயில்லை. எனக்கு அவள் கொடுத்த காப்பியை அருந்தக்கூடத் தோன்றவில்லை. இது என்ன அறியாமை?

என் தோழி அத்துடன் விட்டாளா? நாங்கள் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினோம். சின்ன ஒன்றரை வயதுப் பையனை எடுத்துக் கொண்டு, ‘மாமிக்கு ‘டாட்டா’ சொல்லு’ என்றாள். குழந்தையோ விழிக்கிறது. அவளோ வண்டியைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள். எங்கள் வண்டிக்கு மிகவும் கௌரவம் கொடுத்திருக்கிறோம். அது இஷ்டமிருந்து புறப்பட்டு விட்டால் பிறகு நிற்காது. நின்றால் கிளம்பாது. திருவாரூர் தேர்தான். ‘குழந்தை கையை ஆட்டி விட்டானே சமர்த்துக் கண்ணு’ என்றெல்லாம் ஆர்ப்பாட்டமாகச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தேன். அவள் அதற்கெல்லாம் ஏமாறவில்லை. ‘பாபு நன்றாகச் சொல்வானே. இன்னொரு தடவை சொல்லடா’ என்றாள். குழந்தை திரு திருவென்று விழித்தது. என் தோழி முகத்தில் அசடு வழிந்தது. இதைப் பார்க்கச் சகிக்காமல் கார் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டது.

பூமாதேவி.

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

வசுமதி ராமசாமி2 ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *