முயற்சி திருவினையாக்கும்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 146 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புமிக்க சுஜாதா,

பெண்களுக்குக் கோபம் வந்தால் தவறா? சாதுவாக இருந்தால் எல்லோரும் மேய்த்துக் கட்டி விடுகிறார்களே யெனக் கேட்கிறாய். பெண்களானாலும், ஆண்களானாலும் கோபப்படுவது விரும்பத் தக்கதல்ல.

கண்ணகி மாதிரி பெண்களுடைய கோபம் இன்னும் உக்கிரமானதுதான். எல்லா வசதிகளும் இருந்தால் எனக்கும் தான் கோபம் வராது, இவ்வளவு இடைஞ்சல் இருந்தால் கோபம் கூட வராமலிருக்குமா என்று ஒரு சகோதரி கேட்கிறாள். ஒரே பதில்தான். இடைஞ்சல்களும், கஷ்டங்களும் இருக்கும் போது தான் கோபத்தை அடக்க வேண்டும்.

பெரிய மகரிஷிகள் கோபத்தால் தங்கள் தவ வலிமையை இழந்திருக்கிறார்கள். சீதையே கோபத்தில் லக்ஷ்மணனைத் தகாத வார்த்தைகள் சொன்னதால் மகத்தான கஷ்டத்தை அனுபவிக்க நேர்ந்தது.

‘குழந்தைகளின் விஷமம் சகிக்கவில்லை. வேலைக்காரர்கள் அடம் பொறுக்கவில்லை. உடம்பு பலவீனம் சொல்லி முடியாது. அதனாலெல்லாம் கோபம் வருகிறது’ என்று சொல்வதில் பயனில்லை. கோபப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. தன் கோபத்தை அடக்குவதுதான் அதிசயம். கோபத்தில் இரு வகை. காரியங்கள் சரிவர நடக்கவும், குழந்தைகன் நல்ல முறையில் வளரவும் மற்றுமுள்ள நிர்வாகங்களுக்கும் அமைதியாக இருந்தால், நன்றாக நடை பெறாதுதான். அதற்காக ஓரளவு குரலில் அழுத்தமாக, அதட்டலாக வார்த்தைகள் தவறின்றிக் கோபப்படுவது ஒரு வகை. அது உடல் நலனைப் பாதிக்காது. ஆனால் உணர்ச்சி வசப்பட்டுத் தன் நினைவு மறந்த கோபத்தால் ஆரோக்கியம்கெடும். அதற்குப் பலன் இல்லை என்பது மட்டுமல்ல, விபரீத பலனும் ஏற்படுகிறது. கோபப்படுவது நமக்கே கெடுதல் செய்து கொள்வதுதான். ஆனால் வாழ்க்கையில் கோபமின்றி இருப்பது சாத்தியமாகிறதா யெனக் கேட்கலாம். ஒரு நாளைக்குப் பத்து தடவைகள் வரும் கோபத்தைப் பெரு முயற்சியால் ஐந்து தடவைகளுக்குக் கொண்டு வரலாம். முயற்சி திருவினையாக்கும் அல்லவா?

ஒரு சகோதரி தன் குழந்தையை அடிக்கும்போது அவள் தோற்றத்தைப் பார்த்தேன். தலைமயிர் அவிழ்ந்து தொங்குகிறது. கண் சிவந்து போய் விட்டது. என்ன பரிதாபம்! நம் குழந்தையை அடிக்கும் போது நம்முடைய தோற்றமும் இப்படித்தானே இருக்கும் என்று நினைக்கும் போது வெட்கமாக இருந்தது.

‘ஆறுவது சினம்’ என்று சிலருடைய கோபம் வெகு சீக்கிரத்தில் ஆறிவிடும். அவர்கள் இதயம் மென்மையானது. சிலருடைய கோபம் யானை போல் மனத்தில் வேரூன்றிச் செயலில் பரிணமிக்கிறது. அது மனிதத்தன்மையை மாற்றி விடும். அந்தப் பகைமை உணர்ச்சியை உதறித் தள்ளத்தான் வேண்டும்.

சென்ற வாரம் சென்னையில் ஒரு பிரபல திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தின் கோலாகல வைபவத்தைச் சென்னை நகரவாசிகள் ஆனந்தித்து அநுபவித்தார்கள். எல்லோரும் பந்தல் அழகையும், உபசரணையும், கூட்டத்தையும், பாலைவனமாக இருந்த இடம் சோலைவனமாக மாறியிருப்பதையும் வியந்து பேசினார்கள். எங்களில் சிலர் அவைகளை யெல்லாம் விட இவ்வளவு ஏற்பாடுகள் செய்து, சலியாமல், சிரித்த முகத்துடன், சாந்தமாக இருந்த மணமகனுடைய பெற்றோர்களைத்தான் வியந்தோம். அவர்கள்பட படப்பும் கோபமுமின்றி அமைதியாக இருந்ததை மறக்க முடியாது.

பூமாதேவி.

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

வசுமதி ராமசாமி2 ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *