சரசுவின் சௌந்தர்ய லஹரி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2026
பார்வையிட்டோர்: 128 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

7. மாயா மாளவ கெள்ள

சித்து விளையாட்டுக்கள், பில்லி சூன்யங்கள் பற்றி யெல்லாம் கிராமத்தில் பல நிகழ்ச்சிகளைச் சரசு கேட்டிருக்கிறாள். 

ஆனால் சாரதாம்பாளின் கனவு தரிசனம் ஒரு சித்து விளையாட்டாக அவளுக்குத் தோன்றவில்லை. தன்னுடைய தெய்வ பக்தி என்ற கேள்விக்குறிக்கு ஆழமான பதில் ஏதோ கிடைத்துக் கொண்டிருப்பது போல் அவளுக்குத் தோன்றிற்று. 

நேரே குருவத்தூருக்குச் சென்று பார்த்துவிட வேண்டும்போல் அவளது மனத்தில் ஓர் ஆசை இருந்தது. 

“சமாதி அடைந்து ஒரு நாள்தானே ஆகிறது. அதற்குள் சமாதி கட்டியிருக்க மாட்டார்கள். அங்கு போனால் அந்தப் புனித உடலையாவது தரிசனம் செய்யலாம்” என்று அவள் எண்ணினாள். 

ஆனால், அந்த அம்மையார் இப்பொழுதுநான் வந்து குங்குமம் கொடுத்துவிட்டுப் போனார் என்று பாமா சொன்னாளே, அது என்ன வித்தை? 

அவளால் எதையும் நிர்ணயிக்க முடியவில்லை. 

அவள் ஒரு மூதாட்டியாக இருந்திருந்தால், கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம் என்றாவது முடிவு கட்டி யிருப்பாள்.

அவளுக்குப் பக்குவப்பட்டவளாக ஆகிவிட வேண்டும். என்று ஆசை இருந்ததே தவிர, பக்குவமற்றவள் தானே அவள்? 

எதற்கும் குருவத்தூர் சென்று வரலாம். திண்டுக்கல்லுக்குப் பக்கத்திலென்றால் அதிக தூரமில்லையே? “கொடைக்கானலிலிருந்து திண்டுக்கல் எவ்வளவு தூரம்?” என்று கேட்டாள் பாமாவிடம்.

“மிகக் குறைந்த தூரம்தான்” என்று உள்ளே இருந்தவாறு பதில் சொன்னான் ராஜேந்திரன். 

“நான் இப்போதே குருவத்தூருக்குப் போய் வருகிறேன்,” என்றாள் சரசு. 

“நாங்களும் வருகிறோம். எங்களுக்குந்தான் இங்கு கிடந்து போரடிக்கிறது” என்றாள் பாமா.

“மைந்துனரையும் அழைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டான் ராஜேந்திரன். 

“அவர் இல்லாமலா?” என்றாள் பாமா.

அவர்கள் குருவத்தூருக்கு வந்து சேர்ந்த போது, அங்கே ஏதும் அப்படி விசேஷம் இருப்பதாகத் தெரியவில்லை. 

வழியில் போகிறவர்களையெல்லாம் பார்த்து, “ஐயா! சாரதாம்பாள் என்ற ஓர் அம்மையார், கொடைக் கானலில் சமாதியடைந்து இங்கே கொண்டு வந்திருக்கிறார்களாமே. அவர்கள் வீடு எங்கே?” என்று கேட்டார்கள். 

“சாரதாம்பாள் என்று இங்கே யாருமில்லையே..! ராஜ ராஜேசுவரி என்ற ஒரு துறவிதான் இருக்கிறார்கள். அவர்களும் இப்போது இருப்பார்களா என்பது சந்தேகம். அதோ! அந்த ஆற்றை ஒட்டியவாறு ஓர் ஆசிரமம் இருக்கிறது. அங்கே போய் விசாரியுங்கள்” என்றனர் சிலர். 

ஆசிரமத்தை நோக்கி அவர்கள் காரைத் திருப்பினார்கள். 

இதுதான் ஆசிரமமா? 

ஒரு சிறு குடிசை; உள்ளே மங்கலான அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 

தலைகுனிந்து குடிசைக்குள் நடந்து சென்றார்கள். யாரோ ஒரு பெண் அங்கே அமர்ந்திருந்தாள். அவர்களைக் கண்டதும் அந்தப் பெண் எழுந்து நின்றாள். 

அவளைப் பார்த்தவுடனேயே சரசுவுக்கு உடம்பு வியர்த்தது. 

பூவாத்தம்மன் கோவிலில் எந்த வேலைக்காரியைப் பார்த்தாளோ, அவளே இவள்! 

“நீங்கள் யார்?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“ஏனம்மா! என்னை உனக்குத் தெரியாது? கொடை கானலின் நாம் சந்திக்கவில்லையா? பூவாத்தம்மன் கோவிலில் நீ எனக்குப் பூவும் மஞ்சளும், மாங்கல்யமும் கொடுத்து, சாரதாம்பாள் கொடுத்ததாகச் சொல்ல வில்லையா..?” என்று கேட்டாள் சரசு.

“இல்லையே! நான் கொடைக்கானலுக்கு வந்ததே யில்லையே! உங்களை எனக்குத் தெரியாதே” என்றாள் அந்தப் பெண்.

சரசுவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“அதிருக்கட்டும். சாரதாம்பாள் என்று இங்கே யாரு மில்லையா?” என்று கேட்டாள் பாமா.

“அப்படி யாருமில்லையே! ராஜராஜேசுவரி நாச்சியார் ஆசிரமம் இது! அவர்கள்கூட இப்போது இல்லை. வெளியூர் சென்றிருக்கிறார்கள்” என்றாள் அந்தப் பெண். 

“நல்லது” என்று சொல்லி விட்டு பாமாவும், ராஜேந்திரனும், ஜெயச்சந்திரனும் வெளியே வந்து விட்டார்கள். ஆனால் சரசுவினால் நின்ற இடத்தை விட்டு நகரவே முடிய வில்லை. 

இதென்ன மாய மந்திரமா? 

“இன்னும் என்னம்மா வேண்டும்?” என்று அமைதியாகக் கேட்டாள் அந்தப் பெண். 

“ஒன்றுமில்லை” என்று சொல்லிலிட்டு வெளியே வந்து விட்டாள் சரசு. 

திரும்பிப் புறப்படும் போது, பாமா சரசுவைக் கேலி செய்ய ஆரம்பித்தாள்.

“வர வர நீ ஏதேதோ கனவு கண்டு என்னென்னவோ செய்யத் தொடங்கிவிடுகிறாய். அந்தச் சாரதாம்பாள் கொடைக்கானலில் நம்முடைய வீட்டில் என்னை வந்துப் பார்த்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். ஒருவேனை அவர்கள் எங்காவது புண்ணிய கேத்திரங்களுக்கும் போயிருக்கலாம். நீ ஏன் மனதைப் போட்டு இப்படிக் குழப்பிக் கொள்கிறாய்?” என்றாள் அவள். 

“சீ! சீ! எனக்குத் தெரியாது? நான் நேரிலேயே போனேன். இதே வேலைக்காரி என்னிடம் சேதி சொன்னாள். நான் என்ன பொய் சொல்லுகிறேனா. இல்லை. எல்லாமே கனவா?” என்றாள் சரசு. 

“இருக்கலாம்! நானும் இப்படிப்பட்ட மாய மந்திரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான், முன் சீட்டிலிருந்த ஜெயச்சந்திரன். 

“என்ன பிரமையோ எனக்குப் புரியவில்லை…சரி… இப்பொழுதென்ன? இவ்வளவு தூரம் கண்ணிலும் கனவிலும் வந்த சாரதாம்பாள் இன்னொருமுறை நம்மைத் தேடி வராமலா போகிறார்கள்? பார்த்துக் கொள்வோம்” என்றான் ராஜேந்திரன்.

கொடைரோடு தாண்டி அடிவாரத்திலிருந்து மலை மீது ஏறத்தொடங்கும்போது, பலமான மழை ஆரம்பமாகி விட்டது. 

“இந்த மலைவாசமே இப்படித்தான். எப்பொழுது மழை வரும் என்று சொல்லமுடியாது” என்றான் ஜெயச்சந்திரன். 

பேச்சை மாற்ற, சரசுவின் பிரமையை மாற்ற அவன் விரும்பினான். 

“இது ஏதோ அம்பிகையின் லீலையாகத்தான் இருக்க வேண்டும். நான் கண்டது எதுவுமே பொய்யல்ல…” என்றாள் சரசு மீண்டும். 

யார் எந்தப் பக்கம் பேச்சைத் திருப்பினாலும், அவள் அந்த இடத்திலேயே வந்து நின்றாள். 

கார் மலையின் மீது ஒரு ஐந்தாறு மைல்தான் போயிருக்கும். காரின் விளக்கு வெளிச்சத்தில் யாரோ ஒரு பெண் மழையில் நடுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. 

“ஐயோ, பாவம்! யாரோ ஒரு பெண் மழையில் நனைகிறார். கொஞ்சம் நிறுத்துங்கள்” என்றாள் பாமா. 

கார் கொஞ்ச தூரத்தில் வரும்போது, நிறுத்தும்படி அந்தப் பெண்ணும் கை காட்டினாள்.

கார் நின்றது. 

சரசுவுக்கு அடுத்த அதிர்ச்சி.

அதே சாரதாம்பாள் அங்கே நின்றார். எல்லோரும் அவரைக் காரில் ஏறிக்கொள்ளச் சொன்னார்கள். சரசுவும் தள்ளி உட்கார்த்து கொண்டு அந்த அம்மாளுக்கு இடம் கொடுத்தாள். 

ஆனால் அந்த அம்மையாரிடம் எதையும் விசாரிக்கக் கூடிய துணிவு சரசுவுக்கு உண்டாகவில்லை. ஆனால், அவளுக்கேற்பட்ட அதிர்ச்சி மற்றவர்களுக்கு ஏற்படவில்லை. 

சரசுவின் பக்கத்தில், சரசுவை ஓட்டிக் கொண்டுதான் அந்த அம்மையார் உட்கார்ந்திருந்தார். அதில் ஏதோ ஒரு விதப் புல்லரிப்பு சரசுக்குத் தோன்றிற்று. பேச மட்டும் நா எழவில்லை. 

“நீங்கள் எங்கே போக வேண்டும்?” என்று கேட்டாள் பாமா. 

“சொல்கிறேன்” என்றார் அந்த அம்மையார்.

கார் மேலும் சில மைல் தூரம் வந்த பிற்பாடு, ஓரிடத்தைக் காட்டி அங்கே நிறுத்தச் சொன்னார் அம்மையார்.

அந்த இடமும் மலைப்பாங்காக இருந்ததே தவிர பக்கத்தில் வீடுகள் இருப்பதற்கான அடையாளங்கள் தெரியவில்லை. 

“எல்லோருக்கும் வணக்கம்!” என்று சொல்லிவிட்டு அந்த அம்மையார் இறங்கினார். 

அப்போது மழை நின்றுவிட்டது. இறங்கிய அவர் அந்த மலைச்சரிவில் நடந்து செல்லது, அந்த இருட்டிலும் சரசுவுக்குத் தெரிந்தது. 

கார் புறப்பட்டு விட்டது.

அதன் பிறகுதான் சரசுவுக்குப் பேசவே வந்தது. 

“பாமா! பாமா!… நிறுத்து! நிறுத்து! அதே சாரதாம்பாள் அம்மையார்! காரைத் திருப்புங்கள். நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன் ” என்றாள். 

“உனக்கென்ன பைத்தியமா? சாரதாம்பாள் முகம் எங்களுக்கென்ன மறந்தா போய்விட்டது? அவர் யாரோ ஒரு முதாட்டி” என்றாள் பாமா.

சரசு எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள். 

“இந்த இருட்டில் காரை நிறுத்தவும் கூடாது. நீங்கள் இறங்கவும் கூடாது” என்று எல்லோரும் கூறி விட்டார்கள். 

கொடைக்கானல் வீட்டினருகே கார் வந்து நின்றதும், சரசு சீட்டிலே கையை வைத்து இறங்கப் போனாள். 

அவள் கையில் ஏதோ தட்டுப்பட்டது. காரின் உள் விளக்கைப் போட்டுப் பார்த்தாள். அது ஒரு துணிப்பை. 

அந்தப் பைக்குள்ளே ஒரு தேங்காய், இரண்டு பழங்கள், மலர்கள், மஞ்சள், குங்குமம் ஆகியவை இருந்தன. 

“பார்த்தாயா!…அந்த சாரதாம்பாள் இதை வைத்து விட்டு இறங்கி விட்டாள்!” என்றாள் சரசு. 

“சாரதாம்பாள்! சாரதாம்பாள்! நல்ல பைத்தியம் பிடித்து விட்டது உனக்கு? அவர்கள் சாரதாம்பாளாக இருந்தால் இதை ஏன் வைத்து விட்டு இறங்குகிறார்கள்? சரி, சரி, வா” என்றாள் பாமா, அலுப்போடு. 

ஜெயச்சந்திரனும். ராஜேந்திரனும் இந்த வேடிக்கையைப் பற்றி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

காலையில் ராஜேந்திரன் எழுந்து வெளியில் வந்த போது, அங்கே ஒரு போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. இரண்டு போலீஸ் அதிகாரிகள் அவர்களது கார் நம்பரைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். 

உள்ளே இருந்து வந்தபடியே, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான் ராஜேந்திரன்.

“இரவில் இந்தக் காரில் யாராவது ஒரு பெண்மணி ஏறிக்கொண்டு வந்தாளா?” என்று கேட்டார் போலீஸ் அதிகாரி. 

“ஆமாம், வழியில் ஏறினாள். வழியில் இறங்கி விட்டாள்!” என்றான் ராஜேந்திரன். 

“அவள் மலைச் சரிவில் இறந்து கிடந்தாள். உடல் திண்டுக்கல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டிருக்கிறது. இந்தக் காரில் அவள் ஏறியதை யாரோ பார்த்தார்களாம். அதை விசாரித்துப் போகவே வந்தோம்” என்றார் போலீஸ் அதிகாரி.

அனைத்தையும் கேட்டுக்கொண்டு உள்ளே இருந்து வந்தாள் சரசு. 

“அந்த அம்மையார் பெயர் என்ன?” என்றாள்.

“அவர் கையிலிருந்த மோதிரத்தில் ‘ராஜ ராஜேசுவரி’ என்றிருக்கிறது” என்றார் போலீஸ் அதிகாரி.

அப்போது ராஜேந்திரனுக்கே மயக்கம் வந்துவிடும் போலாகி விட்டது! 

8. கல்யாணி

போலீஸ் அதிகாரிகள் அதற்கு மேல் விசாரணை செய்யவில்லை. 

‘இந்த வண்டியில் தான் ஏறினாள்’ என்பதே போது மானதாகக் கொண்டு போய் விட்டார்கள். 

சரசு, திக்பிரமை பிடித்தவள் போல் நின்றாள். 

எந்தப் பக்கம் திரும்பினாலும் சாரதாம்பாளும், ராஜேசுவரியும் நின்று கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தோன்றிற்று. 

ஆகாயத்திலும் பூமியிலும் அதே வடிவங்கள் பறந்து கொண்டிருப்பது போல் ராஜேந்திரனுக்குத் தோன்றிற்று. திரும்பி உள்ளே போன சரசு வெளியே நடந்ததை பாமாவிடம் சொன்னாள். 

ராஜேந்திரனும் மர்மக் கதைபோல் அதை வர்ணித்தான். 

பாமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் கணவரும், அக்காளும் ஏதோ பயந்திருக்கிறார்கள் என்றே எண்ணி விட்டாள். 

“எதற்கு வம்பு? கொடைக்கானலில் நாம் வாழ்ந்தது போதும். பேசாமல் ஊருக்குப் போய் விடுவோம்!” என்றாள் பாமா. 

”இல்லை. இந்த சாரதாம்பாளின் தெய்வீக சக்தி என்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்த விவரத்தை முழுக்கத் தெரிந்து கொள்ளாமல், நாம் ஊருக்குப் போய் என்ன செய்யப் போகிறோம்?” என்றாள் சரசு. 

“அக்கா, நாம் இனிமேல் இங்கே இருந்தாள், உனக்குப் பைத்தியமே பிடித்து விடும். பேசாமல் போய் விடுவது தான் நல்லது!” என்றாள் பாமா. 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த ஜெயச்சந்திரன், “ஊரிலே வெயில் 108 டிகிர யாம்! ஜூன் மாதத்தில் கூட வெயில் இந்தப் போடு போடுகிறது. இன்னும் ஒரு வாரம் இருந்துவிட்டுப் போங்கள்!” என்றான். 

“உன் கொழுந்தன் இனி நீ இல்லாமல் இருக்க மாட்டான் போலிருக்கிறது!” என்று பாமாவைக் கேலி செய்தான் ராஜேந்திரன். 

“எனக்குக்கூடக் கொழுந்தன் இல்லை என்றால் என்னவோபோல்தான் இருக்கும்!” என்றாள் பாமா.

இந்தப் பேச்சில் ஈடுபட விரும்பாமல் காய்கறி நறுக்கப் போய் உட்கார்ந்தாள் சரசு.

சரசப் பேச்சு என்றால் சரசுவுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. “சரி, என்னதான் முடிவு?” என்று சரசுவிடம் போய்க் கேட்டாள் பாமா. 

“நீங்கள் போவதென்றால் போங்கள். நான் ஒரு வாரம் இருந்து தினசரி பூவாத்தம்மன் கோவிலுக்குப் போய் பூஜை செய்துவிட்டு வருகிறேன். நியாயமாக ஒரு மண்டலம் பூஜை செய்யவேண்டும். நான் சொல்வ தென்னமோ ஒரு வாரம்தான்!” என்றாள் சரசு. 

“சரி, நாங்களும் இருக்கிறோம். மூலங்குடியில் போய் வெயிலில் வெந்து கொண்டிருப்பதைவிட இங்கேயே இருந்து விடுகிறோம்” என்றான் ராஜேந்திரன். 

“அவரை தினசரி வந்து சௌந்தரிய வஹரி பாடச் சொல்லு பாமா!” என்றாள் சரசு. 

“கொழுந்தனாருக்கு அதைவிட வேறென்ன வேலை? நாள் முழுக்கப் பாடிக் கொண்டிருப்பார்” என்றாள் பாமா. 

“அதோடு சில புதிய ரெக்கார்டுகளும் வருகின்றன” என்று ஜெயச்சந்திரன் சொல்லி முடிக்கும் முன்னாலேயே அவனது காரில் இருந்து சுமார் ஐம்பது இசைத் தட்டுகள் கொண்டு வந்து மேஜைமீது வைக்கப்பட்டன. அவற்றில் சில கிராமியப் பாடல்கள். 

ஓர் இசைத்தட்டை ஜெயச்சந்திரன் போட்டான். சரசுவுக்கு எரிச்சலாக வந்தது. 

“இந்தச் சினிமாக்காரர்கள் என்ன பாட்டெழுது கிறார்கள்? வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே வாழ்க்கை நடத்துகிறார்கள். எனக்குச் சௌந்தரிய லஹரியே போதும்” என்றாள் அவள். 

“சரி, இன்றைக்கு ஒரு சினிமாவுக்குப் போவோமா?” என்றாள் பாமா.

எல்லோருமே சரசுவின் மனோபாவத்தை மாற்ற முயன்றார்கள். 

‘இந்தச் சந்தியாசிக் கோலத்தை விட்டு சம்சார வாழ்க்கையில் அவளுக்குப் பற்று வந்துவிடாதா?’ என்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. 

“என்ன படமாம்?…” என்று கேட்டாள் சரசு.

“இளமை வேட்கை” என்றான் ஜெயச்சந்திரன்.

“அடடா, என்ன தலைப்பு…! நீங்களே போய்ப் பாருங்கள்!” என்றாள் சரசு. 

“நீயும்தான் சும்மா வந்து பாரேன்…!” என்று இழுத்தாள் பாமா. 


சரசுவுக்கும் படம் பார்க்கும் ஆசை வந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே அது ஒரு சிற்றின்பப் படம்தான் 

‘சின்ன வயதுப் பெண்ணொருத்தி காதல் என்ற பெயரில் ஓர் இளைஞனோடு கிராமத்திலிருந்து நகரத்திற்கு ஓடி வருகிறாள். அங்கே அவன் அவளைக் கெடுத்துக் கை விட்டு விடுகிறான். ‘கெட்டதுதான் கெட்டாய் என்னிடமும் வா’ என்று பத்துப்பேர் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவள் தொழில் நடத்தத் தொடங்குகிறாள்’. 

புது அலை இதுதானே…? 

ரவிக்கை இல்லாத உடம்போடு ஒருத்தி நடித்திருந்தாள்.  

பாடல்களோ கிராமியப் பாணியில் ஒரே காமரசம். 

சரசு கண்ணை மூடிக்கொண்டாள். காதைப் பொத்திக் கொண்டாள். ஆனாலும் கூட அது வேடிக்கையாய் இருப்பது போல் அவளுக்குத் தோன்றிற்று. 

அதற்கு மாற்று மருந்தாக, இரவிலே ஜெயச்சந்திரனைச் சௌந்தர்ய லஹரி பாடச் சொன்னார்கள் எல்லோரும். 

இரண்டொரு சுலோகங்கள் பாடினான். 

அன்று சினிமாப் பார்த்த பிறகு இந்த சௌந்தரிய லஹரியை வெறும் அம்பிகை ஸ்தோத்திரமாக மட்டும் கருத சரசுவினால் முடியவில்லை. 

அதில் ஏதோ இளமையின் ஆதங்கமும் தொனிப்பது போல் தோன்றிற்று. 

பாடுவது ஆண் குரல்; கேட்பது பெண், 

முற்றி விளைந்த நெல், லேசாக வெடித்து அரிசி தெரிவது போல், அவள் உள்ளத்துக்குள் ஏதோ எட்டிப் பார்த்தது. 

வெண்ணெய் உருகும்போது அந்த வாசம் வெளி வந்து விடாமல் முடுவது போல் சரசு அதை மூட முயன்றாள்.

நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கி விழுந்தார்கள் பாமாவும், ராஜேந்திரனும். 

பாட்டை முடிப்பதா வேண்டாமா என்று ஜெயச்சந்திரன் பாடிக் கொண்டிருந்தான். 

முடிக்க வேண்டாமே என்பது போல் அவள் கேட்டுக் கொண்டு இருந்தாள். 

வெளியே நல்ல குளிர்ந்த காற்று: உள்ளே லேசான கதகதப்பு. 

சாரதாம்பாளின் வாசகங்கள், சௌந்தரிய லஹரியோடு சேர்ந்து எதிரொலித்தன. 

தேங்காயின் மீது கோபம் கொண்டு அதைப் போட்டு உடைத்தவன், உள்ளே சுவையான கீற்று இருப்பதைக் கண்டு பிடித்ததைப்போல, லெளகீக வாழ்க்கையின் தாகம் லேசாக அவளைத் தாலாட்டத் தொடங்கிற்று. 

‘சீ! நாமா இப்படி? நமக்குள்ளா இப்படி?’ என்ற எண்ணம் திடீரென்று தோன்றிற்று. 

“ஓம்….நமோ நாராயணா! ஓம் நமோ நாராயணா!” என்று ஓங்கி உச்சரித்தாள் சரசு. 

அவள் உச்சரிப்பைவிட உச்ச ஸ்தாயியில் சௌந்தர்ய லஹரி பாடினான் ஜெயச்சந்திரன். 

தான் இருந்த அறையில் அப்படியே படுத்து விட்டாள் சரசு. அவளது நெஞ்சுக்குள்ளே இனம் புரியாத வேதனை. மார்பகத்தில் ஒரு கிளுகிளுப்பு. வலது கால் பெருவிரல் இடது உள்ளங்காலை வருடிக் கொண்டிருந்தது. ஏதோ உள்ளுக்குள்ளே ஓர் ஊற்றுப் பெருகுவது போல் அவளுக்குத் தோன்றிற்று. 

அதிகாலை மணி மூன்று. சௌந்தரிய லஹரி நின்றது. வேறொரு பக்கம் போய்ப் படுத்துவிட்டான் ஜெயச்சந்திரன். 

காலையில் கண்விழித்த போது, தன் உடல் நிலையில் ஏதோ மாற்றம் இருப்பதைக் கண்டு வெட்கப்பட்டாள் சரசு. 

அதிகாலையில் அந்த நடுங்கும் குளிரில் துணிந்து பச்சைத் தண்ணீரிலே குளித்துவிட்டு, பூவாத்தம்மன் கோவிலுக்குப் புறப்பட்டாள். 

அன்று பூவாத்தம்மனுக்கு நல்ல அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. 

ஆடிமாத அமாவாசையின்போது அப்படிச் செய்வது வழக்கமாம். சுற்றுமுற்றும் யாரையும் காணவில்லை. 

சரசு தானே தேங்காயை உடைத்துத் தீபாராதனை காட்ட ஆரம்பித்தாள். 

“ஏன், நான் இருக்கிறேனே?” என்றொரு குரல் கேட்டது. 

திரும்பிப் பார்த்தாள் சரசு, ஓர் அழகான இளம் பெண் நடு வகிடெடுத்துக் கொண்டை போட்டிருந்தாள். கொண்டையில் மல்லிகை மொட்டு; நெற்றியில் குங்குமப் பொட்டு. 

“நீங்கள் யார்?” என்று கேட்டாள் சரசு. 

“நான் ஒரு சுமங்கலிதான். எனக்கு ஓய்ளிருக்கும் போதெல்லாம் இந்தக் கோவிலுக்கு வருவேன். மற்றவர்களுக்காக நானே தீபாராதனை காட்டுவேன். இப்படி ஆயிரம் தீபாராதனை காட்டுவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்” என்று சிரித்தாள் அவள். 

சிரிப்பை உற்று நோக்கினாள் சரசு. 

முல்லை மொட்டுக்களை வரிசையாக அடுக்கினைத்தது போன்ற பற்கள். தந்தத்தால் செய்து, பாலீஷ் போட்டது போன்ற கன்னங்கள். நீலக் கருவிழிகள். மூக்கிலே பேசரி. நடுவிலே நத்துப் புல்லக்கு, கட்டியிருந்தது. காஞ்சீபுரம் பட்டு. பச்சைப் பட்டு ரவிக்கை, சரிகை போட்டது. கழுத்தில் ஒரு காசு மாலை, முத்துமாலை. சௌந்தரிய லஹரி வருணனைக்கு ஒத்து வருவதுபோல் சில தோற்றங்கள்; சிவந்த பாதங்கள். 

பாதங்களைப் பார்த்து சரசு திடுக்கிட்டாள்.

வெகுநேரம் தன்னையே பார்ப்பதைக் கண்ட அந்தப் பெண், “ஏன் என்ன விசேஷம்?” என்று கேட்டாள். 

“ஒன்றுமில்லை, இலக்கியங்களில் வருவது போலவே இருக்கிறீர்கள்!” என்றாள் சரசு. 

“திருமணமாகி மூன்று நாள் ஆகிறது. அந்த சுகத்தின் எதிரொலி இருக்காதா…” என்று கேட்டாள் அவள். 

“எனக்கு அதைப்பற்றித் தெரியாது. காரணம் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை” என்றாள் சரசு. 

“அடடா! கண்டிப்பாக நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். சாயங்காலம் என் வீட்டுக்கு வாருங்கள். கொடைக்கானலில் என் வீடு மிகப் பெரிய வீடு. நிறைய விஷயங்கள் சொல்லுவேன். இதுதான் விலாசம்!” என்று விலாசத்தைக் கொடுத்தாள் அந்தப் பெண். 

அந்த விவாசத்தை கையில் வாங்கிக் கொண்டாள் சரசு. 

தீபாராதனை முடிந்தது. சரசு புறப்பட்டாள். அந்தப் பெண் வழியனுப்பினாள். 

இந்தச் செய்தியைப் பாமாவிடம் சொன்னபோது, “என்ன இது கதை? மோகினிப் பிசாசுகள் உலாவுவதற்காகவே இந்த மலையை ஒதுக்கி இருக்கிறார்களா?” என்றாள். 

“அது எனக்குத் தெரியாது. மாலையில் தனது மாளிகைக்கு வரச் சொன்னாள் அந்தப் பெண். நாம் எல்லோரும் போவோம்” என்றாள் சரசு. 


கொடைக்கானலில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் ஒரு காட்டுக்குள் இருந்தது அந்த மாளிகை. 

அந்தப் பெண் கொடுத்து விலாசத்தில் ‘எஸ்டேட்’ என்று இருந்தது. 

அழகான மாளிகைக்குள் அவர்கள் நுழைந்த போது. சில பெண்களின் அழுகுரல் கேட்டது. 

எல்லோரும் வேகமாக உள்ளே நுழைந்தார்கள்.

அந்தப் பெண்-ஆம்; அதே பெண் – அதே பட்டுப் புடவையும், பொட்டும் பூவுமாக இறந்து கிடந்தாள்.

அவள் கழுத்தில் ஒரு மாலை போட்டிருந்தது. 

“அம்மா, சாரதா! போய்விட்டாயா?” என்று ஒரு முதரட்டி மேலே விழுந்து அழுதாள். 

சரசு அங்கேயே மயங்கி விழுந்தாள். 

9. பைரவி

‘இனி கொடைக்கானலில் இருப்பது. மரியாதை இல்ல’ என்று பாமா முடிவு கட்டினாள். 

ஏதோ ஒரு மோகினிப் பிசாசு அக்காவைச் சுற்றி வருவதாகவே அவள் முழுக்க நம்பினாள். 

ஒரு நிகழ்ச்சியைச் சொன்னால், அதுபோல் எந்தெந்த ஊரில் என்னென்ன நடந்ததென்று புதுப்புதுக் கதைகள் சொல்வது தமிழர்கள் பழக்கமல்லவா? 

ராஜேந்திரன் சில கதைகளைச் சொன்னான், ஜெயச்சந்திரன் சில கதைகளைச் சொன்னான். 

புதுப்பட்டி முதலியார் மகளை, இப்படித்தான் ஒரு மோகினிப் பிசாசு பல வடிவங்களில் வந்து மிரட்டியதாகவும், கரூர் கந்தசாமிக் கவுண்டர் மகளை, தலை மாட்டிலேயே உட்கார்ந்திருந்து திருத்தியதாகவும் எத்தனையோ கதைகள். 

போதாதா பாமாவுக்கு?… 

அடுப்பங்கரைக்குப் போகவே அவளுக்குப் பயமாக இருந்தது. 

இறந்துபோன இளம் பெண்ணின் வீட்டிலிருந்து மயக்கம் தெளிவித்து சரசுவைக் கொண்டு வந்ததிலிருந்து, எல்லோரும் அதே பேச்சையே பேசிக் கொண்டிருந்தார்கள். 

”அக்கா, நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு. இது ஏதோ ஒரு மோகினிக் கூத்துதான்! கிராமத்தில் அப்பா அம்மாவுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. நாம் மூன்று பேரைச் சந்தித்தோம்; மூன்று பேரும் இறந்து போயிருக்கிறார்கள். நீ இனி ஒரு நிமிடம்கூட இருக்க கூடாது. நான் சின்னவள் தான். ஆனால் உனக்குத் திருமணமாகி விட்டால், இதெல்லாம் நின்று விடும் போல் எனக்குத் தோன்றுகிறது. நீ இந்த வேதாந்த விசாரத்தை எல்லாம் விடு. நாளையே கிராமத்திற்குப் போய் விடுவோம். அப்பா, அம்மா சொல்கிற மாதிரி நடத்து கொள். அப்புறம் உன் வாழ்க்கையே தலைகிழாக மாறி விடும்” என்றாள் பாமா. 

சரசு ஒன்றும் பதில் பேசவில்லை. அவள் உள்ளுக்குள்ளேயே ஊசலாடி ஊமையாக இருந்தாள். 

மறுநாள். ஜெயச்சந்திரனிடம் விடை பெற்றுக் கொண்டு எல்லோரும் புறப்படும்போது, “ஒரு நிமிஷம் பூவாத்தம்மன் கோயிலுக்குப் போய் விட்டுப் போவோம்” என்றாள் சரசு. 

“பார், பார்! இன்னும் உனக்கு அந்தப் பைத்தியம், தெளியவில்லை. இனி நாம் யாரையாவது பூவாத்தம்மன் கோவிலில் சந்தித்தால் எனக்கு உயிரே போய்விடும். பேசாமல் நேரே ஊருக்குப் போய் விடுவோம்!” என்றாள் பாமா. 

”சரி, வா! தாமரையிடமாவது சொல்லிக் கொண்டு போவோம்” என்று பாமாவையும் அழைத்துக் கொண்டு தாமரையின் வீட்டுக்குப் போனாள் சரசு. 

“அடியம்மா! நீ எங்களைப் பூவாத்தம்மன் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போனாலும் போனாய்! எல்லாக் கூத்தும் நடந்து விட்டது” என்று எல்லாக் கதைகளையும் தாமரையிடம் சொன்னாள் பாமா. 

“நானா! நான் ஒரு போதும் உங்களைப் பூவாத்தம்மன் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போக வில்லையே?… இங்கே அப்படி ஒரு கோவில் இருப்பதே எனக்குத் தெரியாதே…?” என்றாள் தாமரை. 

இப்போது பாமாவுக்கே மயக்கம் வந்துவிடும் போலிருந்தது. சரசுவுக்குத் தலையைப் பிய்த்துக்கொண்டு விடலாம் போல் தோன்றிற்று. 

‘நடந்தாவது ஊருக்கு ஓடிவிட வேண்டும்’ என்று இருவரும் எண்ணத் தலைப்பட்டார்கள். 

தாமரையிடம் அவர்கள் வாதாடவில்லை. தாங்கள் தொடர்ச்சியாகப் பார்த்து வரும் தேவி தாண்டவத்தில் இதுவும் ஒரு பகுதி என்றே எண்ணினார்கள். 

“சரி, நாங்கள் போய் வருகிறோம்” என்று பயத்தோடு விடை பெற்றுக்கொண்டார்கள். 

காரில் ஏறிப் போகும்போது, “நல்லவேளை. இவளும் சாகவில்லை!” என்றாள் பாமா. 

இனம் புரியாத கலவரத்தில் சரசு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். 

ஜெயச்சந்திரனுக்கு அவர்களைப் பிரிய மனமில்லை. பிரியாவிடை கொடுத்தான். 

கார் போய்க் கொண்டிருந்த போது ராஜேந்திரன் டிரைவரைப் பார்த்து. “இந்தா டிரைவர், வழியில் யார் கை காட்டினாலும் நிறுத்தாதே!” என்றான். 

கார் மலையை விட்டுக் கீழே இறங்கிய பிறகுதான் எல்லோருக்கும் உயிர் வந்தது. 

அதன் பிறகு பாமா சற்று கலகலப்பானாள். ஆனால் அவள் பேசியதெல்லாம் மோகினிப் பிசாசு பற்றிய பேச்சுத்தான். ராஜேந்திரனும் அதை ஆமோதித்துக் கொண்டே வந்தான். 

சரசுவுக்கோ அது மோகினிப் பிசாசு அல்லவென்றும், தனக்கு தேவி ஏதோ கட்டளையிடுகிறாள் என்றும் தோன்றிற்று. 

மதுரைக்குள் அவர்கள் நுழைந்தபோது, “சொக்க நாதர் மீனாட்சியைத் தரிசித்துவிட்டுப் போகலாமே” என்றாள் சரசு. 

“போதும், போதும்! நீயும் உன் கோயிலும்! அங்கே எவளையாவது பார்ப்பாய், நாளைக் காலையில் அவளும் செத்துக் கிடப்பாள்! இனிமேல் நீ மிருகக் காட்சி சாலை, பொருட்காட்சி என்று தான் பார்க்கவேண்டும். கோவிலுக்குப் போகாதே!” என்றாள் பாமா. 

“சரிதான், நிறுத்தடி! எனக்கு நீயா புத்தி சொல்கிறாய்? கோயிலைப் பற்றியும் தேவியைப் பற்றியும் நீ ஏதாவது பேசினால் நான் காரில் இருந்து குதித்து விடுவேன்” என்றாள் சரசு. 

“அக்கா, நானென்ன நாஸ்திகமா பேசுகிறேன்…” என்று பாமா ஆரம்பித்தபோது ராஜேந்திரன் குறுக்கிட்டு அவளை அடக்கினான். 

பிறகு மூலங்குடி கிராமம் வரும்வரை காருக்குள் மயான அமைதி நிலவிற்று. 


பெண்கள் இருவரும் கோடைக்கானல் போய்விட்டதால், மூலங்குடி கிராமத்தில் அவர்கள் பெற்றோர் ஒரு வேளை சமைத்து மூன்று வேளை சாப்பிட்டு ஊர்ப் பேச்சுப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவரை ஒருவர் நன்றாகக் காதலித்த தம்பதியராதலால் ஒருவகை முதியோர் காதலையே நடத்திக் கொண்டிருந்தார்கள். 

திடீரென்று கார் வந்து நின்றதும், தாயார் முன்தானையைத் திருத்தி விட்டுக்கொண்டு, “அப்படியே நில்லுங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு சிலேட்டு விளக்கை ஏற்றிக் கொண்டு வந்தாள். 

அதை வாசற்படி அருகே வைத்து ஆரத்தி எடுத்த பிற்பாடு பாமாவைப் பார்த்து, “உனக்கு முதல்ல பிறக்கப் போறது பெண்தாண்டி! அந்த அம்பாள் தான் உன் வயிற்றில் பிறக்கப் போகிறாள்” என்றார். 

“நல்லாச் சொல்லும்மா! இன்னும் பத்துத் தடவை சொல்லு!” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டாள் சரசு. 

அன்று பகல் முழுவதும் சரசுவும் பாமாவும் ஒன்றும் பேசவில்லை. 

இரவிலே கணவனை மாடியில் படுக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் வந்து தாயாரின் அருகிலே படுத்துக் கொண்டாள் பாமா. 

சரசு வழக்கம்போல் தன் அறையில் ஒரு விக்கிரகத்தின் காலடியில் படுத்துவிட்டாள். 

“அம்மா! அக்காவுக்கு கலியாணம் பண்ணியே தீரணும். அவள் வாழ்க்கையில் ஏதோ சோதனை இருக்கிறது” என்று தொடங்கி கோடைக்கானலில் நடந்த கதை முழுவதையும் விவரித்தாள் பாமா.

அவ்வளவையும் ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மூதாட்டி, “நாம் என்னமோ நெனைக்கிறோம். அவ ஒத்துக்கலயேடி! வயித்திலே அவ முணுமாசமா இருக்கறப்போ நானும் ஒங்க அப்பாவும் சிருங்கேரிக்குப் போயிருந்தோம். அங்கே சாரதாம்பாளை தரிசிச்சோம். அவதான் என் வயித்துல பொண்ணா வந்து பொறந்துட்டா போலிருக்கு!” என்றார் தாயார்.

பாமாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. 
 
சரசு வயிற்றில் இருக்கும்போது அம்மா ஏதோ சாது சந்நியாசிகளைச் சந்தித்ததாகத்தான் பாமா நினைத்திருந்தாள். சாரதாம்பாள் என்ற பெயரைக் கேட்டதும் அவள் நெற்றி வியர்த்தது. இத்தனைக்கும் கோடைக்கானலில் நடந்த கதையைக் கூறும்போது தாங்கள் சந்தித்த அம்மையாரின் பெயர் என்ன என்பதை பாமா வெளியிடவில்லை. இயற்கையான இந்த ஒற்றுமை அவளுக்கே ஒரு பயத்தை உண்டாக்கிற்று. 

”அம்மா! நாங்கள் சந்தித்த அம்மையாரின் பெயரும் சாரதாம்பாள் தான்! சாரதாம்பாள், ராஜராஜேஸ்வரி, அந்த இளம் சுமங்கலி ஆக மூன்று பேருமே அக்காவுக்கு ஒரே விஷயத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொன்னார்கள் திருமணம் செய்துகொள் என்பதே அது. சாரதாம்பாள் அக்காவுக்கு ஒரு பவுன் மாங்கல்யம் கூடக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். நீ நாளைக்கே திருமணத்திற்கு ஏற்பாடு செய். அக்கா இனி மறுக்க மாட்டாள்!” என்றாள் பாமா. 

“அதற்கு காலம் நேரம் வரவேண்டாமா? பார்ப்போம்!” என்றபடி திரும்பிப் படுத்தாள் தாயார்.


மறுநாள் பொழுது விடிந்தபோது, காலம் நேரம் வந்துவிட்டது போல் தான் தோன்றிற்று. 

பாமாவின் தாயாருக்கு உடன் பிறந்த சகோதரி, மேலைக் குடியிருப்பு என்ற கிராமத்தில் இருந்தார்கள். அவர்களது மகன் பழனி ஊரிலே யாருக்குக் கல்யாணம் பேசுவதென்றாலும் தானே முன் நின்று கமிஷன் வாங்காமல் பேசி முடிப்பான். அது ஒரு பிரார்த்தனை அவனுக்கு.

அவன் என்னவோ திடுதிப்பென்று சித்தியின் வீட்டு வாசலில் வந்து நின்றான். அவனைப் பார்த்த உடனேயே, ‘இதுவும் அம்பாள் அனுப்பிய தூதுதான்’ என்று கருதினாள் பாமா. 

“பையன் நன்கு படித்தவனாம், வியாபார நிர்வாகத்தில் பட்டம் வாங்கியவனாம். அவன் சரசுவைக் கனவில் கண்டானாம்… ‘இது என்னடா கூத்து’ என்று நீங்களே நினைப்பீர்கள். அவனுக்கு தெய்வ நம்பிக்கை ரொம்ப ரொம்ப அதிகம். சரசுவும் அதே மாதிரி! வேறு பொருத்தம் என்ன வேண்டும்?” என்று கேட்டான் பழனி.

“அண்ணா சொன்னால் தப்பவே தப்பாது? முடிக்கச் சொல்லம்மா” என்றாள் பாமா. 

சரசு அப்போது சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள்.

“முதலில் அவர்கள் பெண் பார்க்கவேண்டும். வெள்ளிக்கிழமை வரச் சொல்லட்டுமா…?” என்று கேட்டான் பழனி. 

“சம்பந்தி அம்மா பேரென்ன?” என்று கேட்டார்கள் தாயார். 

“ராஜராஜேஸ்வரி” என்றான் பழனி. 

– தொடரும்…

– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *