கம்பர் தோற்றுவிட்டார்
கதையாசிரியர்: அல்வாயூர் மு.செல்லையா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 12
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இத்தலைப்பைக் கண்டவுடன் இராமாயணம் இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் தோற்றுவிட்டாரா? என்று கேட்டுக்கொண்டு வாசகர்கள் பலர் ஆத்திரம் ஆத்திரமாக வாசிக்கத் தொடங்குவார்கள். கம்பதாசர்கள் அன்பர்கள் அபிமானிகள் எல்லோருமே துடிதுடிப்பார்கள். இராமாய ணத்தைப் படித்து இரசித்த இலட்சக் கணக்கான தமிழர்கள் மாத்திரமா! சுப்பிரமணிய முதலியாரின் ஆங்கில இராமாயண மொழி பெயர்ப்பைப் படித்து விட்டு மில்ற்றன் முதலிய மேற்கு நாட்டு புலவர்களிலும் பார்க்க மேம்பட்டவர் கம்பர் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஆங்கில அறிஞர்கள் எல்லாம் ஆச்சரியக் கடலில் முழுகுவார்கள்.
ஆச்சரியப்படும் வாசகர்கள் எல்லாம் எப்போது எங்கே எந்தப் போட்டியில் கம்பர் தோற்றுவிட்டார் என்று அறிய அங்கலாய்ப் பார்கள். பலர் இது வெறும் பொய்க்கதை என்றே எண்ணவும் கூடும். ஆனால் நானோ பொய்இன்னதென்று அறியாதவன் அந்தக் காலத்திலே அரிச்சந்திரன் அயோத்தியை ஆண்டபோது அங்கு வாழ்ந்த சத்தியவான்களுள் ஒருவர் எங்களூரில் வந்து குடியேறினார். அவருடைய வம்சத்தில் பிறந்தவன் ஒருவன் தான் நான். ஆகையால் நான் மருந்திற்கும் பொய் பேசி எழுதி அறியேன். கம்பர் போட்டியில் தோற்றது உண்மை. அதுவும் 1958ம் ஆண்டிலே ஆவணி மாதத்திலே நடைபெற்ற சங்கதிதான் இது. விபரத்தை சொல்லுகிறேன் கேளுங்கள்.
இலங்கையிலே கல்வி வளர்ந்து வருகிறதாம். ஒவ்வொரு கல்லூரியும் வருடாவருடம் நூற்றுக்கணக்கான மாணவர்களை சோதனை என்னும் கடலை தாண்டச் செய்து வேலையில்லாத திண்டாட்டம் என்னும் நெருப்பிலே குதிக்க வைக்கின்றது. இது மாத்திரமா? பாடசாலையில் நடைபெறும் கல்வியிலும் பார்க்க விளையாட்டுக்கே முதலிடம் கொடுத்து நாட்டை வளர்க்கிறார் கள். ஒரு கல்விச்சாலையின் கட்டிடங்கள் இருக்கும் நிலப்பரப்பிலும் பார்க்க அதன் விளையாட்டு நிலம் மிகப் பெரியதாக இருப்பதனால் கல்வியிலும் பார்க்க விளை யாட்டுக்கு முதலிடம் கொடுக்கப்படுவது அத்தாட்சி ஆகிறது அல்லவா. பாடசாலைகளில் இந்த விளையாட்டு இல்லா விட்டால் மாணவர்கள் சூம்பிச் சோர்ந்து போவார்கள் என்று ஏங்குகிறார்கள் கல்வித் தலைவர்கள். இதற்காக எவ்வளவு செலவுகள் நடை பெறுகின்றன.
சுப்பிரமணிய பாரதியாரும் “செலவு தந்தைக்கு ஆயிரம் சென்றது தீது மைந்தருக்கு பல்லாயிரம் சேர்ந்தது” என்று கண்ணீர் வடித்தார் இது மாத்திரமா? இந்த விளையாட்டுக்கள் போட்டி முறையில் நடைபெறுவதனால் கல்விச் சாலைகள் ஒன்றுக்கொன்று மனஸ்தாபம். ஆசிரியர்களுக்குள் வெறுப்பு மாணவர்களுக்குள் பொறாமை. இந்தப் போட்டியும் பொறாமையும் படிக்கும்போதே வளர்ந்ததனால் இவர்களின் பிற்கால வாழ்விலும் இவை பரிணமித்து கொண்டே வருகின் றன. சங்கக்கடை அங்கத்தவர் தெரிவு தொடக்கம் பாராளு மன்றத் தெரிவு வரையும் பல கஷ்ட நஷ்டங்கள் ஏற்படுவதற்கு பள்ளிக்கூடத்தில் பயின்ற போட்டிதான் மூலகாரணம் என்பதை எனது கூழைப்புத்தி திடமாக ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் நீளப் புத்தியுடைய “பிரின்சிப்பல்” மாருக்கு இவைகள் தெரியாது தானே ஆண்பிள்ளைகள் மாத்திரமா போட்டியிடுகிறார்கள். அமைதிக்கும் அடக்கத்திற்கும் இலக்கணமாக வாழவேண்டிய பெண்பிள்ளைகளையும் அல்லவா இந்தச் சனியன் பீடித்துக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்கள் வாலிபர்கள் காணத்தக்கதாக அரைகுறை உடைகளை உடுத்துக் கொண்டு இந்த குமர் பொடிச்சிகள் விளையாடும் கும்மாளத்தை என்னென்று எழுதித் தள்ளுவது!
ஒரே ஒரு மேனகையின் உடலசைவைக் கண்டு தவசிரேஷ்ட ரான விசுவாமித்திரரே தன்நிலை கெட்டு தவறினாரானால் சாதாரண ஆண்பிள்ளைகளைப் பற்றி சொல்லவா வேண்டும். இந்தப் பெண்டுகள் தேகப்பயிற்சிக்காக செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் பல இருக்கின்றனவே. இவைகளை இவர்கள் செய்யக் கூடாதா? கைக்குத்தரிசி இல்லாமையினாற்றான் 75 வீதமான நோய்கள் உண்டாகின்றன என்று சுகாதாரப் பகுதி சாட்சி சொல்லிவருவதை தலைச்சட்டம்பிமார் சற்றுஞ் சிந்திக் கிறார்கள் இல்லையே. பெண் பிள்ளைகள் நெல்லுக்குத்தல் ஆகாதா? அல்லது ஆண்கள் காணாத இடங்களில் கூடிநின்று பொழுது போக்க முடியாதா?
இதென்ன? கம்பர் தோற்றுவிட்டார் என்று தொடங்கி விளை யாட்டைப் பற்றி எழுதுகின்றேன் என்று வாசகர்கள் குழப்ப மடையக் கூடும். கோபிக்கவும் பார்ப்பார்கள். ஆனால் அதற்குத்தான் இவையெல்லாம் பீடிகை, ஒரு பெண்கல்விச் சாலையில் விளையாட்டுப் போட்டி நடை பெற்றது, மாணவிகள் எல்லோரும் மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டார்கள். “வள்ளுவர்” இல்லம், “கம்பர்” இல்லம், “இளங்கோ” இல்லம் என்று அப்பிரிவுகளிற்கு நாமகரணம் சூட்டப்பட்டது. விளை யாட்டு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. கம்பர் இல்லத்தில் கப்டினாகிய மாணவியின் உடுப்பு மிக உயர்ந்தி ருந்தது. விளையாட்டின் மிக நெருக்கடியான கட்டத்தில் அவள் தடக்கி விழுந்தாள். உடுப்பு அவலட்சணமாயிற்று! இரசிகர்கள் அடக்கத்தை மீறிச் சத்தமிட்டார்கள். பொடிச்சிக்கு வெட்கமாய் போய்விட்டது! அவள், பின்பு விளையாடவே இல்லை. அதனால் புள்ளிகள் குறைந்து மூன்றாவது இடத்தை கம்பர் இல்லம் பெற்று தோல்வி அடைந்தது. “கம்பர் தோற்றுவிட்டார்” என்று சொல்லிக் கொண்டே விளையாட்டு இரசிகர்கள் வெளியேறினார்கள்!
– கலைச்செல்வி, மார்கழி 1958.
– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.
![]() |
மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026
தெய்வச்செயல்!
ஜெ.ஜெயகுமார்
September 24, 2026
மரம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 21, 2026
