பாட்டைசாரியின் குறும்பு (என் மகளின் கல்யாணம்)
கதையாசிரியர்: அல்வாயூர் மு.செல்லையா
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 9
(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உங்களுக்குச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போச்சு. போன தை மாசம் என்பீர்கள்! ஆவணி மாசம் முடிக்கலாம்! கார்த்திகையிலே பார்க்கலாம்! என்பீர்கள். இப்படியே காலத்தைக் கடத்துகிறியளல்லாமல் ஒரு முடிவையும் எடுக்கிறியளில்லையே. என்னைப் போலொத்த பெண்டுகள் தங்கடை பிள்ளை குட்டிகளுக்குக் கலியாணஞ் செய்துவைச்சு அந்தக் காட்சியைப் பார்த்துச் சந்தோஷப்பட, எனக்கு மாத்திரம் ஏன் அது கிடைக்கக் கூடாது. ஏதோ இந்தத் தை மாசத்திலே கட்டாயம் எங்கள் மகளுக்குக் கல்யாணம் முடிச்சு வைக்கவேணும்” என்று இதமாகவும் பதமாகவும் பேசினாள் என் மனைவி.
நான் :- அடியப்பா “இன்றைக்கிருந்தாரை நாளைக் கிருப்பரென்றெண்ணெவோ திடமில்லையே” என்று நாங்களும் உலகமும் ஏங்கிக் கொண்டிருக்க – அரிசிக் கட்டுப்பாடு எல்லாரையும் நெருக்க – பவுண் விலை ஆகாயத்திற் பறக்க இந்த அல்லோல கல்லோல காலத்திலேயா கலியாணம் இப்போது என்ன அவசியம். போ போ உன் வேலையைப்பார்.
மனைவி : – இந்தத் தைமாசம் கல்யாணஞ் செய்யாவிட்டால் பிள்ளையின் கிரக நிலைப்படி இன்னும் 4 1/2 வரியம் செல்லுமெண்டு சாத்திரி அப்ப சொன்னதை மறந்து விட்டியளே. மாப்பிளை வீட்டாரும் அவசரப்படுத்துகினம். அவருக்கும் வேறு பகுதியாலை இரகசியமாகச் சடங்கு பேசிவருகினமாம். இந்தக் காலத்தில் இளந்தாரிப் பொடியள் அணாப்புக்கு எடுபடுவது முண்டுதானே. இனி ஆச்சியும் தான் சாகமுந்தி பீட்டப் பிள்ளையைக் காணவேணுமாம். ஆசைப்ப டுகிறா. பின்னையென்ன தங்கச்சிக்கு ஏதோ வாயிலை வயித்திலை வந்துவிட்டுதெண்டு அவசரப்படுத்துறேனே. உங்களாணை இந்த முறை மறுக்காமல் இதை நிறைவேற்றி வையுங்கோ.
நான் : நாடியிற் கையை வைத்துக்கொண்டு யோசிக்கத் தொடங்கினேன்)
மனைவி:- என்ன யோசிக்கிறியள். நகையைப் பத்தியாக்கும். இனிமேல் எனக்கென்னத்துக்கு அலங்காரம். என்ரை பென்டன் சங்கிலி கிடக்கு, அட்டியல் இருக்கு, இனியென்ன ஒரு சோடி லோலாக்கும், சிலைட்டும் தானே தேள்வை. பிள்ளைக்குத் தண்ணி வார்வைக்குச் சொல்லிச் செலவு வைச்சு வந்த காசைக் கொண்டு ஒரு சோடி காப்பு அடைவுபிடிச்சு வைச்சிருக்கிறன். அதை இப்பத்தையில் தேள்வைக்குப் போடுவம். பிறகு ஆறுமுகம் பத்தரைக் கொண்டு இந்தக் காலப் பிளானுக்குச் செய்விக்கலாம். இப்பவே இந்த அலுவல்களைத் துவங்குங்கள். இன்றைக்கு அந்தக் கந்தன்ரை விரதநாள் வெள்ளிக்கிழமை.
நான் :- என்னப்பா ஒரே மூச்சாய் எல்லாம் பேசித் தள்ளி விட்டாயே, உனக்குத்தான் உன் பிள்ளையில் அன்பு எனக்கன்பில்லை யென்பதா உனது எண்ணம். உன் தாய் பீட்டப்பிள்ளையைக் காண ஆசைப்படுவதற்காக வசதியீன மான இந்தக் காலத்திலேயே மகளுக்குக் கல்யாணம். இம் நான் விவாகம் செய்கிற காலத்திலே உன்னைப் பொல்லாத வாய்க்காரியென்று ஆட்கள் சொன்னது கொஞ்சம் உண்மை யாய்த்தான் இருக்கிறது. சீ….. போ.
மனைவி : – ஐயோ, நான் என்ன பதார்க்கதை பேசினேன். நாலாசிரு மறிஞ்ச நீங்கள் இப்படிக் கோவிக்கிறியளே, உங்களை இன்னுமொருமுறை கெஞ்சுகிறேன், மறுக்க வேண்டாம், பெண் பிள்ளைகளின் நிலைமை தாய்க்குத்தான் விளங்கும்.
நான் : சரி, பவுணைத்தான் விலைகூடக் கொடுத்து வாங்கினாலும் செலவுக்கு அரிசிக்கு என்ன செய்யலாம்?
மனைவி:- அதற்குப் புத்தி உங்களுக்குத் தெரியாமலிருக்கும்.
நான் :- (ஒருவாறு உடன்பட்டுக்கொண்டு மாப்பிள்ளை வீட்டாரிடம் போய் ஆகவேண்டியவற்றை ஒழுங்கு செய்து விட்டுப் பின்வரும் நோட்டீசையும் எழுதிக்கொண்டு வந்து என் மனைவியிடம் காட்டினேன். அதை வாசித்து அவளடைந்த மகிழ்ச்சிக்களவில்லை. வாடியபயிர் மழையைக் கண்டதுபோல முகம் மலர்ந்தாள்)
சிவமயம்
திருமண விஞ்ஞாபனம்
காலம் : விஷூ வருஷம் தைமாசம் 30ஆந் திகதி வியாழக்கிழமை
உதயம்
மணமகன்
திரு.சு.நல்லநாதன்
மணமகள்
ஸ்ரீமதி.அ.செல்வநாயகி
ஆசனம்: – பனையோலைக் கம்பளம்
முக்கிய கவனிப்பு : – அன்பர்கள் வரும்போது மறந்துவிடாமல் தமது கூப்பன்களையும் கொண்டு வருவார்களாக.
இங்ஙனம்,
தங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்
காந்திவாசம்.
அநுசுயா
8-2-42
திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. பேர்த்தியார் (எனது மாமியார் அங்கு சபையில் வந்து “தங்கச்சிக்கெண்டு போட்டு வைச்ச சல்லி முட்டி இது” என்று ஒரு கலயத்தைக் கவிழ்த்து விட்டா. கலீரென்று காசுகள் விழுந்தன. முழுவதும் ஒரு சதங்களும், அரைச் சதங்களுமாயிருந்தன. நல்லகாலம் இக் காசுகளை நமது பொலிசார் கண்டிருந்தால் “தேவைக்கு மிஞ்சிய சில்லறை வைத்திருந்த” தாகக் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடருவார்கள். அப்பால் உணவுப் பரிமாற்றம் ஆரம்பமாயிற்று. பழக்கமில்லாத செயலாதலால் அனேகர் கூப்பன்களைக் கொண்டுவர மறந்தார்கள். அவர்களுக்குப் புழுக்கொடியல், தேங்காய்ச் சொட்டு, குரக்கன் ரொட்டி என்பன கொடுக்கப்பட்டன. இந்த யுத்த காலத்தில் இப்படியொரு புது முன்மாதிரியைக் காட்டியதற்காக எல்லாரும் என்னைப் புகழ்ந்தார்கள். மிகுதி எழுதுவதற்கிடையில் இப்போது புதிதாகப் புகுந்துகொண்ட மண்ணெண்ணெய்ப் பஞ்சத்தி னால் விளக்கும் அணைந்துபோயிற்று.
– ஈழகேசரி, 08.02.1942.
– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.
![]() |
மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அந்நியம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 24, 2026
மனமாற்றம்
கல்பனா ராஜகோபால்
September 24, 2026
கூண்டை விட்டு வெளியே வா
ஸ்ரீ.தாமோதரன்
September 24, 2026
