பரீட்சை முடிவும் பரபரப்பும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 121 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சமய விஷயமாக மனிதரிடத்துத் தூக்கம் ஏற்படுங்கால் பல அடியார்கள் தோற்றி மக்களிடத்தில் ஒரு வித பரபரப்பையூட்டு வதும், அரசியல் சம்பந்தமாகக் கிளர்ச்சிகுன்றி நாம் ஓர் அரசரால் ஆளப்படுகின்றோமா என்ற எண்ணமுமற்றுச் சனங்கள் தூங்கி இருக்கும் போது அரசாங்க சபைத் தேர்தல் உண்டாகிப் பெரும் பரபரப்பை ஆக்குவதும், இறத்தல் என்பது ஒன்று உண்டா என்று எண்ணுதலின்றிப் பின்முன் யோசியா மல் வாழ்பவருக்கு ஓர் இளம் ஆடவன் அல்லது பெண் இறந்து சனங்களிடம் சுடலை ஞானப் பரபரப்பை நாட்டுவதும் இவை போன்ற பிற நிகழ்ச்சிகள் பரபரப்பைக் காட்டுவதும் இடையிடையே நடப்பதொன்றல்லவா! 

இவை போலவே சென்ற வாரம் S.S.C “தமிழ்ப் பிறிலிம்” பரீட்சை முடிவு தோன்றியதும், கல்வி என்பதொன்றுண்டா? நாம் மாணவர்களா நாம் எதிர்கால மனிதர்களா என்று சிறிதும் சிந்தியாது சோம்பித்திரிந்த மாணவரிடையிற் பெரும் பரபரப்பையூட்டிவிட்டது. பத்திரிகாலயங்களிலும் பிரதம வித்தியாலயங்களிலும் சந்திகள், மூலை முடக்குக்களிலும் சந்தையிலும் இந்த ஆரவாரந்தான். வழியிலும் இந்தப் பரபரப்புத்தான். சைக்கிள் ஓட்டம் குறையவில்லை. முடிவை அறிந்தவுடன் மகிழ்ந்தோர் மிகச் சிலர். பலர் தமது துக்கத்துக்கு 2 ஆம், 3ஆம், 4 ஆம், 5 ஆம், 6 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடினார்கள். சிலர் 9 ஆம், 10 ஆம் ஆண்டு நிறைவு விழா நடாத்தினார்கள். என்றாலும் பிழையில்லையே. சிலர் விதியில்லை, “தேவனுக்குச் சித்தமில்லை” என்று ஞாயம் பேசியதுமுண்டு! சிலர் சோதனைக்குப் புறப்பட்ட அன்றே எனக்குச் சகுனங்கூடாது. பெயில் பண்ணுவேன் என்பது அன்றைக்கே தெரியும் நான் ஒருவருக்கும் பேசவில்லை” என்று … மண் முட்டாத மறுமொழி கூறினர். நிற்க. 

வல்லிநாச்சன் என்ற கிழவி சந்தைக்குப் போகும்போது விசாலாட்சி என்ற மனுஷியும் கூடிப்போனாள். கிழவி மனுஷியைப் பார்த்து “பிள்ளை! என்ரை பேரப்பொடியன் போன வருஷப் பிறப்புக்குப் பிந்தி சட்டை சால்வை எல்லாம் போட்டுக்கொண்டு பிறிலிங்கு சோதனை குடுக்கப் போனவன், என்னம் அங்காலை முற்று வரவில்லையாம். இண்டைக்கு அது வந்துவிட்டதாம். காலத்தாலை வசுக்களிலை ஓடிப் போனான். சாப்பிடவுமில்லை. அந்த வயிரவசுவாமி என்ன செய்கிறாரோ தெரியாது. இதுக்கிடையில் அவனுக்கு ஒரு சம்மந்தமும் பேசிப் போட்டினம். நல்ல நகைநட்டு, சீதன ஆதனம் குறைவில்லை. போந்தபொலிஞ்ச பொம்பிளை. நானும் சாகமுந்தி அந்தக் காட்சியைப் பார்க்க அக்களிக்கி றேன். எப்படியோ தெரியாது” என்று பேசிக்கொண்டு போகும் போது ஒரு சிங்கள வாலிபன் பழைய புதினக் கடதாசியில் மீன்வாங்கி நீளச் சுருட்டிக் கொண்டு எதிரில் வந்தான். கிழவி அவனை நோக்கி, “தம்பீ, என்ர பொடியனும் பாசோ! உதென்ன புதினப் பேப்பர். நீயும் சோதனை குடுத்திட்டாயோ? எங்கடை வேலாயுதனைக் கண்டனியா, எங்கே ஒருக்கால் வாசித்துக் காட்டு” என்று மூச்சுவிடாமல் கேட்டது. சிங்களவன் கிழவி சொன்னது விளங்காமல் திகைத்து நின்றான். 

– ஈழகேசரி, 1939.

– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.

அல்வாயூர் மு.செல்லையா மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *