கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 114 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

போன கிழமை, மாலை சுமார் 5 மணி போல் நம்மூரிலுள்ள கலிகைச் சந்தையிலே பெண்கள் கூட்டமும் ஆரவாரமும் மிக அதிகம். ஏனென்பது வாசகர்களுக்கு விளங்காமற்போகாது. அன்று கொத்துக்காரச் சீதேவன் மயிலாத்தையைப் பார்த்து “எணை மச்சாள், உங்கடை கொப்பன் வந்திட்டுதே” என்று கேட்டான். ஐயோ அது தானே எங்களுக்கு மிச்சங் கவலை! அங்கே திருக்கணாமலையிலே சண்டைக் குழப்படியாம் வரச் சொல்லிக் காயிதம் போட்டும் அப்பு இன்னும் வரவில்லை. ஆச்சி செத்த பிறகு நாங்கள் எவ்வளவோ கவனமாக அப்புவை பராமரிக்கிறம். என்ரை இந்தாள் கூட அம்மான் வாருங்கோ வாருங்கோ எண்டு காயிதம் போட்டது. இன்னும் அப்பு வரவில்லை என்ன செய்யிறது என்றாள் மயிலாத்தை. “இதென்ன நான் ஏதோ கேக்க நீ ஏதோ சொல்லுறாய், அரிசிக் கொப்பன் வந்திட்டுதோ எண்டதுக்கு கொப்புவின்ரை சங்கதியை ஏன் சொல்லுறாய்” என்றான் சீதேவன். 

மயிலாத்தை :- நீ என்ன அரிசிக் கொத்தலைப் பத்திக் கதைக்கிறியே. அதுக்குக் கொப்பன் எண்டே பேர். சீ, இல்லை அதுக்கு மூப்பன் எண்டு தான் பேர் மூப்பன் வந்திட்டிது. அதைக் கடையிலே குடுத்தால் கவண்மேந்துக் கணக்காலை அரிசி கிடைக்குமாம் காசு குடுக்க வேண்டாந்தானே? 

சீதேவன் :- இதார் சொன்னது. இல்லை காசு குடுக்க வேணும். 

மயி :- ஏன், எங்கடை காசைக் குடுத்து எங்கடை விருப்பத்துக்கு வாங்கினாலென்ன? கவுண்மேந்துக் கணக்குக்குக் காக் கொத்து வாங்க வேணுமோ? கனக்க வாங்கினாலென்ன? நாங்கள் வயிறு நிறையத் திண்டால் அவரவைக் கென்ன வாக்கும் 

சீதே :- இல்லை மச்சாள், அரிசியளை, சப்பான்காறன் தாழ்க்கிறானாம். அதினாலை வரத்துக் குறையுதாம் அதுக்காகத் தான் கட்டு மட்டாகச் சாப்பிட வேணுமாம். மரவள்ளிக்கிழங்கு, பயறு, பாணிப் பினாட்டு, குரக்கன், இதுகளைச் சாப்பிட்டுப் பழகவேணுமாம். எண்டு என்ரை மேன் சுந்தரம் நேத்துப் பேப்பரிலை வாசிச்சவன். 

மயி :- அப்படியெண்டால், இனிமேல் சிலவு சித்தாடையளுக்கு கூடக் கீடக் காச்ச முடியாது போல கிடக்கு. முந்த நாள் சாத்திரி கதிரேசுவுக்கு என்ரை மூத்தமோன் கதிராசியின்ரை சாதக ஓலையைக் காட்டின நாங்கள். அவர் எல்லாம் வடிவாகப் பார்த்துப்போட்டு வாறமாசக் கடைசியிலை தங்கச்சி பெரிய பிள்ளையாகும், ஒருவரியத்துக்குள்ளே கலியாணம் நடக்கும் எண்டு சொன்னவர். எங்கடை பிள்ளையார் புண்ணியமாகப் பொடிச்சி இப்ப புத்தியறிஞ்சால் இனசனமெண்டு நாலு பத்து வீட்டுக்குச் சொல்லி ஆரிச்சுப் பூரிச்சுப் பரிமளிப்பாகச் சாப்பாடு சமையல் செய்ய ஏலாது போலை இருக்கு. வாற வெள்ளிக் கிழமை தங்கச்சிக்கு ஒரு நூலும் கட்டு விக்கப் போறம். வயதும் 15 ஆச்சு. ஏன் உனக்குத் தெரியாதோ? உன்ரை மூத்த பிள்ளையின்ரை முப்பத்தொண்டுக்கு நான் வந்து ஒரு வேலையும் செய்யாமல் சத்தி ஓங்காளம் கிறுதி இதுகளோடை திண்ணையில் படுத்திருந்தனான். அதுக்கு இப்ப பதினாறு வயதானால் இதுக்கு 15 வயது தானே. இதுக்கிடையில் ஒரு கலியாணப் பேச்சும் மெதுவாக சாடையாக நடக்குது. சாத்திரி சொன்னபடி ஆகும் போலை தான் இருக்கு. 

சீதே :- ஆர் மாப்பிள்ளை, துாரமோ? கிட்டவோ? தொழிலென்ன? நாங்கள் கூசாமல் வாய் நனைக்கத்தக்க இடமோ? 

மயி :- எனக்கு ஆளைத் தெரியாது. தங்கச்சியின்ரை தேப்பன் தான் சொன்னது. கொஞ்சந் துரந்தான். அதைப் பத்தி என்ன, உத்தியோகமாம் இஞ்சிப்பத்தர் வேலையாம். 

சீதே :- ஓ! உன்ரை மேன் நல்ல சிறகக் காறியாயிருக்கு. என்ன இஞ்சுப்பத்தராம் பள்ளிக்கூட இஞ்சுப்பத்தரோ? அல்லது கள்ளு, உலைக்கப் போட்டு, இஞ்சுப்பத்தரோ இதைப் பத்திப் பேசவில்லையே 

மயி :- அதுகள் ஊருராய்த் திரியிற உத்தியோகம். ஆனால் பொடியன் வசுவிலை (பஸ்) இஞ்சுப்பத்தராம். வெய்யில், மழைக்கும் பயமில்லை எனி நீங்கள் ஏதாவது சாமான்கள் கூடக் குறையப் போட்டுக் கொண்டு பட்டணம் போனாலும் பொடியன் இனசனமெண்டு கண்டு சாய்ஞ்சு நடக்குந்தானே. ஏதோ அந்த பிள்ளையாற்றை புண்ணியம். நடக்கட்டும். இதுகளுக்கு முந்தி அரிசிக் “கொத்தல்” வந்து குறுக்கை நிக்குது. பவுணும் விலை ஏறிவிட்டுது. 

– ஈழகேசரி, 1939.

– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.

அல்வாயூர் மு.செல்லையா மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *