காட்டின் கரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2026
பார்வையிட்டோர்: 168 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெயிலாகி பெயிலாகி நாலாப்பு தாண்டுவதற்குள் பாண்டியின் அப்பா இறந்துவிட்டார். பதினோரு வயதிலேயே ஆட்டுக் கம்பைத் தூக்கி விட்டான். செம்மறியாடுகளின் சின்னவாலின் துடிப்பில் இழுபடுகிறது, இவனது பிழைப்பு. 

செம்மறியாடுகள் ஓடைக்கிடங்குகளில் மேய்கின்றன. அகலமான ஓடை. உயரமான ஒழுங்கற்ற கரைதெரியாமல் புற்களின் பசுமை. சீமைக்கருவேலமரங்கள் நீளநீள விளார்களுடன் செழித்திருக்கின்றன. 

‘கிழிந்தகாது’ வேலிக்குள் ஊடுருவி புஞ்சைப் பொழியில் வாய் வைக்கிறது. பாண்டி “ஏய்ய்க்” என்று கத்துகிறான். கத்தலுக்கு முந்திப் போகிற கல்லின் ‘விர்ர்ர்’ ரென்கிற இரைச்சல். 

ஓடைக்கரைகளின் இருமருங்கிலும் தோட்ட வெள்ளாமைகள். மிளகாய்த் தோட்டங்களும், மக்காச் சோள வெள்ளாமைகளும், பச்சைப் பசேலென்று பயிர்கள். 

‘மூக்கு வெள்ளை’ கள்ளக் கழுதை. எங்குட்டுக் கூடியாச்சும் நைஸாக நழுவிப் பாய்ஞ்சிடும்’ என்ற நினைவெச்சரிக்கையில் அதைத்தேடினான். அது ஆவாரஞ்செடித்தூரைச் சுற்றி அடர்ந்திருந்த பசும்புல்லை ‘பார்ருச், பார்ர்ருச்’ சென்று போட்டு வளைத்து மாட்டிக் கொண்டிருக்கிறது. 

மற்றவர்கள் பார்வைக்கு எல்லாம் ஒரே மாதிரியான செம்மறிகள். பாண்டியின் பார்வையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொன்றுக்கும் ஒரு நுட்பமான வித்தியாசம். அதுவே அதன் அடையாளமாக… பெயராக… 

கருநாக்கு… கால் வெள்ளை… வவுத்துக் கருப்பு, ஊளைமூக்கு… ஓட்டைக் கால்… கோணக்கால்… குறுக்கு வளைசல்… 

‘கோணக் காலைக் காணலியே…’ பாண்டிக்கு ஒரு சின்ன அதிர்வு. செடி, புதர் மறைவுகளில் பார்வையை எறிந்தான். அங்கிட்டும் இங்கிட்டுமாக அலைபாய்கிற கண்கள். 

‘வெள்ளாமையிலே போய் வாயை வைச்சிருச்சா?’ வெலவெலப்புடன் முணுமுணுத்த பாண்டி, காய்ந்த முள்கவைக்கு அடியில் படர்ந்து கிடக்கிற கோவைக்காய் கொடியை கறும்பிக்கொண்டிருக்கிற கோணக்கால். 

“யப்பா…டி! நல்லவேளை… இப்பத்தான். உசுரே வந்துச்சு…” திணறித் தவித்த நெஞ்சின் இறுக்கம், சற்றே தளர்ந்து ஆசுவாசப்பட்டது. 

“வேண்டாம் டா… இந்தச் சனியன் புடிச்ச ஓடைக்காடு. பயந்து பயந்து ‘கழிய’ வேண்டிய துருக்கு.” 

ஆங்காங்கே அதுகள் பாட்டுக்கு ‘பாராருச் பார்ருச்” சென்று ஆவி ஆவி கடித்துக் கொண்டிருந்த செம்மறிகளை…” “ஆய்ய்க்… ஆய்ய்க்… ஆய்ய்ய்க்’கென்று அதட்டி திரட்டினான். 

‘திரட்டி நகர்த்தி இடம் மாற்றுகிறான்’ என்பதைப் பத்தும் தொனியிலேயே உணர்ந்து கொண்ட ஆடுகள். செவிடுகளைப்போல பொருட்படுத்தாமல் மேய்கின்றன. ‘பர்ர்ருச், பர்ர்ருச், சிலேயே கவனமாக இருந்தன. பச்சைப்புல். முற்றாத இளம்பசும்பல். பல்லுக்குச் சிக்காமல் கரைகின்ற இரை. கஞ்சியை மண்டுவதைப்போல் திங்கச்சுகமாக இருக்கிற புல். ஈரமிருதுவான கொழுந்துப்புல் வாயின் இரு விளிம்புகளிலும் நுரை தள்ள பிடித்து மாட்டுகிறது. அதுகளுக்கு ஒரே குதூகலக் கொண்டாட்டம். 

பாண்டியின் அதட்டல் சத்தம். கெட்டவார்த்தைகளிலான வசவுச்சத்தத் தெறிப்புகள். 

ஆவல் பறப்பாக மேய்கிற மும்முரத்தில் ஆடுகள். சில ஆடுகளைக் கம்பால் தட்டுகிறான். செல்லமான முதுகுத்தட்டல். 

வேகமில்லாத கைச்சுழற்சியில் கல்வீச்சுகள். சிதறி மேய்கிற ஆடுகளைத் திரட்டுகிறான். 

“ம்ம்ம் மேய்க்க்… ம்ம்ம் மேய்ய்க்க்” என்ற செம்மறிகளின் கனைப்புகள். புழுதித்திட்டுகளாக ஏராள அடர்த்தியான கனைப்புக் கூப்பாடுகள். 

திரள்கிற ஆட்டுக்கூட்டத்தை “ஆய்ய்ய்க், ஆய்ய்ய்க்,” கென்று பத்தி நகர்த்துகிறான். உச்சி மதிய வெயில், தகிப்பில்லாமல் அடிக்கிறது. கனத்த கரிய மேகங்களின் பின்னால் மறைந்து கொள்கிற பொழுதுக்காலின் பரிவு. நிழல் வெயில். மச்சுவீட்டையே துளைக்கிற மார்கழிப் பனி, மதிய வெயிலையும் நனைக்கிறது. 

இடம்பெயர்கிற ஆடுகள் புழுக்கைகள் போடுகின்றன. செருமிச் செருமி சளியையும், வாசத்தையும் காற்றில் ஏற்றுகின்றன. 

அய்யா செத்த மறுமாசம், ஆட்டுக் கம்பைத் தூக்கிக் கொடுத்த அம்மா. அப்போது பாண்டிக்கு ஒரே குதூகலம் மனசுக்குள். ரகசியக் கூத்தாடல், ரகசியப் பரவசம். 

“ஏம்மா… அழுவுதே?” பின்னாலேயே வந்து, முதுகைத் தொடுகிற பாண்டி. “அழாதேம்மா… அழாதேம்மா… என்னத்துக்கும்மா… அழுவுதே?” 

“பெத்த புள்ளையை வுத்து வவுத்துக்கஞ்சி குடிக்க வைச்ச கூத்துவன் கொடுமையை நெனைச்சு நெனைச்சு பதறுதுடா… மனசு…” 

“எதுக்கும்மா…? என்னை யாருக்கு வித்தே? நீ காச்சுற கஞ்சியைக் குடிச்சுட்டு, ஓம் மடியிலே படுக்கப் போறேன்… ஆடு மேய்ச்சா என்னம்மா? அதுவும் ஒரு வேலை தானேம்மா?” 

கேவுகிற அம்மாவின் தோளைப் பரிவுடன் வருடுகிற பாண்டி. அம்மாவின் சிதறிக்கிடந்த தலைமுடிகளைத் தடவி ஒன்று சேர்க்கிற மகன். கன்னத்தில் ஓடிய மனச்சோக நீர்க்கோடுகளைப் பிஞ்சுவிரல்களால் துடைக்கிறான். 

“அழாதேம்மா… அய்யா போய்ட்டா என்னம்மா? நா ஆடு மேய்ச்சு ஒன்னைக் காப்பாத்துதேம்மா…” 

அம்மாவுக்கு நெஞ்செல்லாம் நெகிழ்ந்து நெக்குருகி விட்டது. உள்மனப்பீறிடல். 

முதுகுக்குப் பின்னால் உரசிக்கொண்டு நின்ற மகனை இழுத்து மடியில் போட்டுக் கொண்ட பாச வெறி. நெகிழ்கிற ஆரவாரப் பரபரப்பு. 

“அடி… எந்தங்கக்கட்டி… எஞ் சிங்கக்குட்டி… எங்கண்ணு… எஞ்செல்லம்…” 

கண்ணீரும் கதறலுமாக பரவசப்பெருக்கினால், மகனை முத்தமிட்டாள். வெறிபிடித்த ஆவேச வேகத்தில் முத்தமிட்டாள். பாசப் பெருமிதம். 

அப்போது பாண்டிக்குத் தன்மீதே ஒரு மரியாதை வந்தது. அம்மாவைச் சந்தோஷப்படுத்திப் பார்க்கிற பெரிய மனிதனாகிவிட்ட மாதிரியோர் உணர்வு. 

“கழுத்துப் புருஷன் கண்காணாம செத்துட்டாலும், வவுத்துப்புருஷன் கைப்புடிச்சு காப்பாத்திருவான்” 

என்று அழுகையும் சிரிப்புமாக உணர்ச்சிப்பரபரப்போடு பேசிக் கொண்டே அவனைப் பார்த்த அம்மாவின் கண்ணில், ஆனந்தச் சிரிப்பு. மனச்சிலிர்ப்பின் ஒளிப்பிரவாகம். 

அப்படி… கம்பு தூக்கியவன்தான், பாண்டி. ராமையாக் கோனாரின் செம்மறியாடுகளை மேய்க்கத் தொடங்கினான். 

பாண்டி ஆசைப்பட்ட மாதிரியேயிருந்தது. வகுப்பு, வீடு, தெரு என்ற வரம்புக்குட்பட்ட வட்டத்துக்குள் அடைபட்டுப் புழுங்கியவனுக்கு, காடு எல்லையற்ற பெருவெளியாக இருந்தது. தடையற்ற சிறகுகளின் பறப்புக்கு வாசலும் வழியும் திறக்கிற வனாகாயம். 

வெட்டவெளித் தரிசுப் பொட்டலில் கிடக்கிற புல்லையும் தழைகளையும் இஷ்டம்போல மேயுங்கள் என்று சுதந்திரமாக ஆடுகளை விட்டுவிட்டு, இவன் சுதந்திரமாகி விடுவான். 

‘வெள்ளாமை விளைச்சலில் தப்பித்தவறி வாய்கீய் வைத்துவிடுமோ’ என்ற பயமற்ற சுதந்திரம். பலவண்ணங்களில் பறந்து திரிகிற பட்டாம் பூச்சிகளைப் பம்மிப் பதுங்கி றெக்கையை நுனிவிரலால் பிடிப்பான். விரலின் நுனியில் மென்பவுடராக ஏதோ ஒட்டும். அது பூவிதழைவிடவும் மிருதுவாக இருக்கும். பூச்சியை சுதந்திரமாக விட்டுவிட்டு நுனி விரல்களை ரசிப்பான். 

குழியைக் குச்சியால் தோண்டி, ஒற்றையாளாக கோலி விளையாடுவான். ஆவாரஞ் செடித் தூருக்கடியில் ஊசிக்கூடு (நத்தையில்லாத வெறுங்கூடு)கள் கிடக்கும். பம்மிக்கிடக்கிற காடைகளை மேல்துண்டால் அமுக்கிப் பார்ப்பான். பலநேரம் தப்பித்து விடும். முட்டைகளை மட்டும் பொறுக்கி வதக்கித் தின்பான். சிலநேரம் சிக்கி விடும். காடையை அப்படியே ரோமத்தைப் பறித்துவிட்டு, சுட்டுத்தின்பான். ஈரப்பஞ்சை வாயில் வைத்தமாதிரி மிருதுவாக இருக்கும். கருகல் வாசமும், கறிருசியும் மனசுக்குள்ளும் மணக்கும்.

செம்போத்து கூவுவதைக் கேட்டால், குயிலைவிட இனிமையாக இருக்கும். பெண்குயிலைப் பார்த்தால், வெண்புள்ளிகளுடன் கூடிய சாம்பல் நிறத்தில் இருக்கும்.

குயிலின் நிறம்சாம்பல் என்றால், யாராவது நம்புவார்களா? ஆனால், அதுதான் நிஜம்.

பாண்டிக்கு ரெக்கை முளைத்தமாதிரி இருக்கும்.

ராமையாக் கோனாரும் சொல்லி விட்டார்.

“ஏலேய் பாண்டி, நீ சின்னப்பயலா இருக்கே. விடியக்காலை ஆடுபத்திட்டு, கருங்கல் கிடங்குத் தண்ணியிலே போட்டெடுத்துட்டு… தொழுவுலே அடைச்சிரு. போதும்டா. மத்ததை நா பார்த்துக்கிடுதேன்” என்றார்.

இவனுக்கும் இது இயலக்கூடியதாகவே இருந்தது.

அப்படித்தான்…

ஒருநாள். காலை ஒன்பது மணி இருக்கும். கஞ்சியைக் குடித்துவிட்டு, மதியக் கஞ்சி உள்ள தூக்குச் சட்டியையும், கயிறு கட்டிய தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டான். மேல் துண்டு டவுசர் மேல் பெல்ட்மாதிர கட்டி, அதில் ரெண்டையும் கட்டித் தொங்க விட்டுக் கொண்டான். கம்பை எடுத்துக் கொண்டான். 

“யம்மா… நா ஆட்டைப் பத்தப் போறேம்மா.” 

“போய்ட்டு வாடா… கண்ணும் கருத்துமா கவனிச்சு ஆட்டைப் பார்த்துக்கோ.” 

“ஆட்டும்மா…” 

“ரொம்ப வெயில்லே நிக்காதேடா. செடி செத்தை நெழல்லே நில்லு.” 

டயர் செருப்பு சடக், சடக் கென்று சத்தம் போட… வேகவேகமாக நடந்தான். ராமையா கோனார் தொழுவத்திற்கு வந்தான். இவனைப் பார்த்ததும் ‘அவக், தொவக்’ கென அவசரமாக எழுந்த ஆடுகள் அசை போடுவதை நிறுத்திவிட்டு, நட்புடன் பார்க்கிற அதன் கண்கள். அடர்த்தியான அதன் கனைப்புச் சத்தங்கள். 

படல்கதவைத் திறந்தான், பாண்டி. சாணியும் மூத்திரமுமாய் சகதியில் படுத்துக்கிடந்த அதன் நாற்றம். உதிர்ந்து கிடந்த அதன் ரோம இணுக்குகள். 

“ஆய்ய்க்… ஆய்க்க்க…” என்று செம்மறியாடுகளை எழுப்பினான். திரட்டினான். படல் திறந்தவுடன் வெளிப்பட்ட ஆடுகள், சுவர்களில் போய் தன் உடம்பால் தேய்க்கின்றன. சிலதுகள் நெட்டிமுறிக்கின்றன. துள்ளிக் குதிக்கின்றன. கூளப் படப்புகளை நோக்கி நழுவுகிற ஒன்றிரண்டு ஆடுகள். 

நாலாதிசைகளிலும் சிதறி ஓடுகிற எல்லாவற்றையும் அதட்டி, சத்தம் போட்டு… ஒன்றுதிரட்டி பத்தினான். 

தெருப்புழுதி புகைப்படலமாக எழுந்தது. சூரிய ஒளியில் புழுதி மண்டலம் ஒளித்திரையாகத் தெரிகிறது.

ஆடுகளை மடக்கிப் பத்தினான். தெருவழியே நகர்த்தினான். விலகியோடப் பார்க்கிற கள்ள ஆடுகளை நோக்கி அவனது கற்கள் சிறகு முளைத்துப் பறந்தன. வசவுச் சொற்களில் காற்றும் வெயிலும் அதிர்ந்தது.

ராமையா அவனையே பார்க்கிறார். அங்கிட்டும் இங்கிட்டுமாய் ஓடிப் பாய்கிற அவனது துரிதம். ஆடுகளை மடக்கி ஒழுங்குபடுத்துகிற லாகவம்.

‘சின்னப்பயலாயிருந்தாலும்,கெட்டிக்காரப்பயலா இருக்கான்’ என்ற நினைப்புடன் மீசையைத் தடவிக் கொள்கிற ராமையா.

“ஏலேய்… பாண்டி, ஆட்டை பாத்து மேய்டா.”

“ஆட்டும்.”

“ரொம்ப வெளையாடுதீயாம்… ஆட்டை சரியா கண்காணிக்காம காடைகௌதாரி புடிச்சுக்கிட்டுத் திரியுதீயாம்.”

“யார் சொன்னா..?”

“ம்க்ம்…ஒனக்கென்ன? யாராச்சும் வந்து தாக்கல் சொல்வாக இல்லே? தெரியாமலா போயிரும்?”

மௌனமாக தலைமடக்குகிற பாண்டி.

“ஏலேய்…ஆடு குட்டிகளை நல்லா கவனிச்சு மேய்.

ஏதாச்சும் தப்பு கிப்பு நடந்துராம பாத்துக்க.”

“ம்…”

பாண்டிக்கு கம்புகனப்பது போலிருக்கிறது.

வனச்சுதந்திரம் களவு போகிற மாதிரியோர் உணர்வு. மிரட்டலும், அதட்டலுமான அவரது எச்சரிக்கை, அவனுக்கு சங்கடமாக இருந்தது. 

அன்றைக்கு- 

கருகருவென்று மயங்குகிற பொழுதில் ஆடுகளைத் தொழுவத்துக்குள் பத்தினான், பாண்டி. மறிகள் அனைத்தும் வயிறு புடைத்திருந்தது. கருங்கல் தண்ணிக் கிடங்கில் விழுந்து, நீந்தி வந்ததில் ஒரு சுத்தம். 

விலகிய படல் கதவைப் பிடித்துக் கொண்டு ஆடுகளைக் கூர்மையாக கவனிக்கிற ராமையா கோனார். 

பாண்டிக்குப் பசியென்றால்… பசி,அப்படியொரு பசி. மதியம் குடித்த கஞ்சி. வேறு எதுவும் சிக்கவில்லை. குலைபட்டினியாகக் கிடக்கிறான். அம்மாவிடம் ஓடணும்… மடியில் விழணும். அம்மா வாங்கி வைத்திருக்கிற தின்பண்டங்களை ஒரு மாட்டு மாட்டணும்.தண்ணி குடித்து, அம்மா போட்டுத் தருகிற பால்டீயை ஆவி பறக்கக் குடிக்கணும். 

வயிறும் மனசும் கிடந்து தவித்தது. ‘எப்படா அம்மாவிடம் போய்விழுவோம்.’ என்று கிடந்து அடித்துக் கொள்கிற மனத்துடிப்பு. 

எல்லா ஆடுகளும் தொழுவத்திற்குள் போய்விட்டன. படல் கதவை சாத்தப் போன பாண்டி, 

பதற்றமும் பதைப்புமாகக் கேட்கிற ராமையா, 

“ஏலேய் பாண்டி, கோணக்காலை எங்கடா?” 

இவனும் எல்லா ஆடுகளையும் உற்றுப் பார்த்தான். கோணக்கால் ஆட்டைக் காணோம். 

என்னாச்சு? எங்க போச்சு? எந்த இடத்துலே நழுவுச்சு? 

அவனுக்குள் பகீரிடுகிற எண்ணங்கள். ஓடிப் பாய்ந்து அலைபாய்கிற மனசு. பதற்றமும் நடுக்கமுமாக. வெலவெலப்பாக அவரைப் பார்க்கிற பாண்டி. 

“எங்கடா தொலைச்சே, ஆட்டை? பணம் பெத்த ஆடுடா…” 

“தெரியலியே…” 

“என்னோட மொதலுக்கு (பணத்துக்கு) நீதாண்டா பொறுப்பு.போ… ஓடுடா… ஓடு… ஓடு… ஓடுடா…” 

பதறிப்பதறிக் குமுறுகிற பெரியவர். 

தண்ணீருக்குள் விழுந்த சுண்டெலியாக வெலவெலத்து திகைக்கிற பாண்டி.’ ‘என்ன செய்ய, ஏது செய்ய’ என்று எதுவும் புரியாமல்… தவித்த அவன், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியோர் குழப்பம். 

குடலைப்புரட்டுகிற பசி. தொண்டை வரைக்கும் உலர்ந்து போன நாவறட்சி. அம்மா மடியில் விழ வேண்டும் என்று துடிக்கிற பாலக வயசு. டவுசர் மனசு. 

இருட்டப் போற நேரத்துலே எங்க போய்த் தேட? 

வேறு வழியில்லாத நிலையில்… ஓட்டமாய் ஓடினான். இருட்டி விட்டது. கோணக்காலைத் தேடி தரிசு முழுக்க வேண்டினான். முள்ளு மொடலில் விழுந்தான். உயிர் வாதையாக இருந்தது. உயிரை வெறுத்து ஓடினான். 

வேலி மரத்தூருக்குள் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்த கோணக்காலை இவன், ஆட்டின் செருமல் சத்தத்தால் இனம் பார்க்கிற போதுதான், 

அவனுக்கு அவன் உயிரே வந்தது. 

கோணக்காலுடன் தொழுவத்திற்குள் வருகிறபோது, மணி பத்துக்கு மேலாயிற்று. உயிர்துவண்ட வாட்டம். உடம்பெல்லாம் வலியும் ரணமும். ‘எங்கடா வுழுந்து சாவோம்’ என்று சோர்ந்து துவண்ட மனசு. 

இப்போதெல்லாம்- 

பாண்டிக்கு ஆட்டுக்கம்பு கனக்க ஆரம்பித்து விட்டது. ஆகாயமாக விரிந்திருந்த காடு, ஓடைக் கரையாக குறுகிப்போன மாதிரியோர் நினைவு. 

ஆடலாம். ஓடலாம். விளையாடித் திரியலாம் என்ற அவனது நினைப்பைக் கடித்து மேய்ந்த அனுபவ ஆட்டின் அசை. வலி நிறைந்த அனுபவம். அசை போட அசை போட… அந்த நினைவின் பூதாகாரம். 

இப்பத்தான்… 

அம்மாவின் அழுகைக்கும் கதறலுக்கும் அர்த்தம் புரிகிறது. பெத்த பிள்ளையை வித்துப் பிழைக்கிற விதியின் கனம், மனசை அழுத்துகிறது. 

ஓடைக்கரையை விட்டு தரிசுக்கு வந்த ஆடுகளைத் தேடுகிறான். ஊளைமூக்கு, கோணக்கால், குறுக்கு வளைசல், கால் வெள்ளை, கருநாக்கு, ஓட்டைக் கால், கிழிந்த காது, வவுத்துவெள்ளை எல்லாமே சரியாக இருக்கின்றனவா என்று கண்காணிக்கிற பதற்றம், பயம், எச்சரிக்கை. இன்னும் என்னென்ன பயங்கரம் ஒளிந்திருக்கிறதோ… இந்த ஆட்டுக் கம்புக்குள். 

ஆட்டுக்கம்பு, வாழ்வின் பாரமாக அழுத்துகிறது, பாண்டிக்கு. 

– பிப்ரவரி 2009, அம்ருதா.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *