கூலிக்காரன்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2026
பார்வையிட்டோர்: 68
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

துரைச்சாமிக்கு கண்ணுமுழி பிதுங்குகிறது. என்ன செய்வது என்று புரியாத தடுமாற்றம். ‘பைனான்ஸ்காரர்’ வட்டிக்குக் கடன் கொடுத்தவர். போன வாரம் போக்கு காட்டி ஏமாற்றியாகிவிட்டது. இந்த வாரம் ஏமாற்ற முடியாது. ரெண்டு வாரத்துக்கும் சேர்த்து இருநூறு ரூபாய் கட்டியாக வேண்டும்.
எப்படிக் கட்ட? எதை வைச்சு கட்ட?
துரைச்சாமியின் நடுநெஞ்சுக்குள் பகீரிடுகிற வெறுமை. வயிற்றைப் புரட்டுகிற மாதிரியோர் பிரமை. ஓடையைப் பார்த்து ஓட வேண்டியிருப்பதைப் போன்றதோர் உள்நெருக்கடி.
அன்றைக்கு இருந்த நிலைமை அப்படி! வார வட்டிக்குக் கைநீட்ட வேண்டிய நெருக்கடி. கைமாத்து கேட்டு பலரிடமும் கேட்டாகிவிட்டது. மலையில் முட்டினமாதிரி இருந்தது.
ரெண்டு மூட்டை யூரியாவுக்கும், கரண்டு பில் கட்டவும் ரூபாய்க்கு அவசரம். மொத்தம் தொள்ளாயிரம் ரூபாய் வேண்டும்.இப்பவே வேண்டும்.
ராசாத்தியிடம் கேட்டான்.
“ஒன்னாலே ஏதாச்சும் முடியுமா?’ தீராக் கடைசியாக அவளிடம் கெஞ்சினான். அவள் திகைத்தாள்.
“என்னாலே எப்படி முடியும்?”
“ஏம் முடியாது? கையிருப்பு உள்ள மகராசிக யாருக்கிட்டேயாச்சும் ஒன்னாலே கேக்க முடியாதா?”
“அப்படி எந்த மகராசி நம்ம ஊர்லே இருக்காக?”
ராசாத்தியின் விரிந்த கண்களில் தெரிந்த குழப்பம். தடுமாற்றத் தத்தளிப்பு. இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திராத ஆச்சரியம்.
“சரி… சரி… வுடு. நா எங்கிட்டாச்சும் பார்த்துக்கிடுறேன்.” ஊருக்குள் ஒரு ‘ரவுண்டு’ சுற்றினான். டீக்கடையில் வந்து நின்றான்.
“ஏம்பா. ஒரு ஆயிரரூவா இருந்தா குடு. ரெண்டு நாள்லே தாரேன்.”
“இருந்தா… நீ காட்டு. ஆயிரரூவாயை பார்த்துக்கிடுவேன். கண்ணாலே பாத்து நாலு நாளாச்சு.’
“நா வவுத்துப் பசியோட பதைச்சுப் போய் கேக்கேன். நீ என்னடான்னா… யானைக்காரன் சுண்ணாம்பு நீட்டுற மாதிரி எகத்தாளம் காட்டுதே…”
ஓட்டமாய் பிய்த்துக் கொண்டோடுகிற துரைச்சாமி. இன்னும் ஏழெட்டுப் பேரிடம் தலையைச் சொரிந்தான். பம்மிப் பதுங்கி பம்மாத்து பண்ணிப் பார்த்துவிட்டான். எதுவும் கதையாகவில்லை. சோர்ந்து துவண்ட தருணம்.
அப்பத்தான்… கன்னங்கரேலென்ற முரட்டு மோட்டார் பைக்கில் ‘பைனான்ஸ்’காரர் வந்தார். மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி. சட்டை, கண்ணியமான தோற்றம். அலுங்கப் பேசாதவர் போன்ற முகபாவம்.
“வாங்க… அண்ணாச்சி…”
“வாங்க, என்ன வெஷயம்?”
“ஆயிர ரூவா வேணும்.”
“வார வட்டிக்கா?”
“ம்…”
“கரெக்டாதவணைப்படி கட்டிருவீகளா?”
“கட்டிருவேன்…”
“ம்… அப்பச் சரி… உங்க பேரு…?”
“துரைச்சாமி.”
சிறிய பேரேடு ஒன்றை எடுத்துக்கொண்டே, “வடக்குத் தெருதானே?” என்று விசாரித்துவிட்டு,
“இதுலே ஒரு கையெழுத்து போடுங்க.”
கையெழுத்து போட்ட வேகம். முதல் வாரத்தவணையைக் கழித்துக்கொண்டு தொள்ளாயிரம் தருகிறார். பன்னிரண்டு வாரங்களுக்கு, வாரம் நூறு கட்டியாகணும்.
அன்றைக்கு அவரிடம் கைநீட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைக்கு என்னடா என்றால்… முரட்டு ‘மோட்டார் பைக்’கின் ‘என்ஜின்’ சத்தம் தூரத்தில் கேட்டாலே, மனசு கிடந்து பயந்து சாகுது. டர்ர்ர்ராராகி கிழிந்து போகிறான்.
வாங்குகிறபோது… ‘இருநூறு ரூபாய் வட்டியா?’ என்று மனசு கிடந்து கொதித்தது. இப்போது தவணை கட்ட வழியறியாமல் திகைக்கிற துரைச்சாமி.
கீழப் புஞ்சைக்கு வந்தான். தரையில் இழுபடுகிற தோகையுடன் மெதுநடை போடுகிற ஆண் மயில். பொழுதுக்கால் உயர்வாக நகரத் தொடங்கி… முக மஞ்சளைக் கழுவி வெள்ளையாகிற வெயில். குட்டைவாலோடு குட்டோட்டம் போடுகிற பெண் மயில். லட்சணமில்லாத பெண் மயிலைப் பின்பற்றி ஓடுகிற மயில் குஞ்சுகள்.
புஞ்சையில் வந்து நின்றான். பாத்திகளின் வரப்புகளில் உலர்ந்த உப்புக் கரைசலின் வெண்கோடுகள். உப்புத் தண்ணீரினால் வந்த உவர்ப்பு. முழங்கால் உயரத்தில் நிற்கிற மக்காச்சோளப் பயிர்கள். ‘இம்புட்டுத்தான் நம்ம வளர்த்தி’ என்று சொல்கிற மாதிரியான குழைவில்லாத விறைப்பு.
யூரியா உப்பு போட்டும் பிரயோஜனமில்லை. முழங்கால் உயரத்தில் கதிர் வாங்கினால்… கால் வெள்ளாமைகூட தேறாதே.
விதை ஊன்றுகிற போதே பெரும்பாடு. மயில்களின் பேய் மேய்ச்சல். தண்ணீர் பாய்ந்த பகுதிக்குள் தைரியமாக இறங்கி ஊன்றப்பட்ட விதைகளைத் தேடிக் கொத்துகிற மயில்களை துரத்துவதே பெரும் போராட்டம். கல்லெறிந்து ஓடிச் சாகணும். கத்தி, கத்தி தொண்டை கிழியணும்.
விதை முளைத்த பிறகும் மயில்களின் நாசக்காடு. பசிய உயிர்த் துளிகளாக முளைவிட்ட மழலைப் பயிர்களைக் கொத்தி இழுத்தால்… பிளவுண்ட விதையும் சேர்ந்து வரும் என்று மயில்களுக்குத் தெரிந்திருக்கிறது. காலையிலும் மாலையிலும், வந்து மயில் மந்தைகளை விரட்டி விரட்டி ஓடிக் களைத்துதான், இந்த மக்காச்சோளப் பயிர்களைப் பார்க்க முடிகிறது. யூரியா உப்பையும், உழைப்பையும் விழுங்கிவிட்டு வளர மறுத்து அடம் பண்ணுகின்றன.
பொழியில் நின்று பயிர்களைப் பார்க்கிற துரைச்சாமியின் மனக்கவலை. உட்கார்ந்து அழணும் போலிருந்தது. உள்ளிருந்து முட்டிக்கொண்டு வருகிற வருத்தம், கண்ணோரத் துளிகளாக முளைத்தது.
வடகாட்டில் ஒரு புஞ்சை. ஒண்ணேகால் குறுக்கம் (ஏக்கர்) பருத்தி போட்டிருக்கிறது. அதில் மேய்கிற காய்ப் புழுவின் மூர்க்கத்தில் உதிர்கிற பூ – பிஞ்சுகள். செடி வளர்ந்தும் பயன் பூஜ்ஜியம் என்ற பரிதாபம்.
எங்கோ தூரத்தில் ‘மோட்டார் பைக்’கின் தடதடப்பு. உள் மனசுக்குள் றெக்கையடிக்கிற பயப் படபடப்பு. ‘பைனான்ஸ்’ காரருக்கு என்ன பதில் சொல்ல? எப்படி தவணைப் பணம் தந்து, நல்ல பிள்ளையாவது?
இங்கு முக்கால் குறுக்கமும், வடகாட்டில் ஒண்ணேகால் குறுக்கமும் இறைவைப் புஞ்சை வைத்திருக்கிற சம்சாரிக்கு இந்த கண்ணு முழி பிதுங்கல்.
கொறுக்காம்பட்டிக்காரர்கள் சைக்கிள்களிலும், மொபட்டிலும் வரிசை வரிசையாகப் போகிறார்கள். வண்டிப் பாதையில் கேரியலில் வெட்டரிவாள், ஹாண்டில் பாரில் சோற்றுத் தூக்கு வாளியும், தண்ணீர் கேனும்.
வலையப்பட்டி காட்டில் வேலிமரம் வெட்டப் போகிறார்கள். இன்றே வேலை, இன்றே கூலி.
ஏனோ அவர்களை ஏக்கமாய்ப் பார்க்கிற துரைச்சாமி. அடி மனசில் துளிர்விடுகிற பொறாமை.
கனாவில் இருந்து தப்பித்தவனைப்போல ‘முழி’த்துக்கொண்ட அவன், ‘என்ன இப்படி யோசனை ஓடுது? ‘பம்ப் ஷெட் மோட்டார்’ போட்ட புஞ்சை ரெண்டு சொந்தமா வைச்சிருக்குற சம்சாரி, நா. அன்னாடம் ஒழைச்சுப் பிழைக்கிற கூலிக்காரங்களைப் பாத்து என்னத்துக்கு ஏங்கணும்?” – முணுமுணுப்பில் கசிகிற மனச் சோகம்.
புஞ்சையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கிணற்றுத் தண்ணீரையும் எட்டிப் பார்த்தான். மைனா, கிணற்று விளம்பில் நின்று பார்க்கிறது. மின் கம்பியில் நிற்கிற கரிச்சான். கிணற்றுச் சுவர் பொந்திலிருந்து ‘கர்ர்ர்ர்’ ரென்று முரட்டு இரைச்சலுடன் பாய்ந்து பறந்து போகிற நீலநிற பனங்காடை.
ஊருக்குள் வரவே தயக்கமாக இருக்கிறது. நடுக்கத்தில் உதறலெடுக்கிற மனப்பயம். ‘மோட்டார் பைக்’ வந்துருமோ என்ற திகில்.
வயிறு பசிக்கிறது. காலை வெயில் ஏறு வெயிலாகிறது. சுள்ளென்று உரைக்கிறது. எப்படியும் வீடு போகணும். கஞ்சி குடிச்சாகணும். புஞ்சை வேலைக்கு வந்தாகணும்.
தப்பித்தோட முடியாத வாழ்க்கையின் கயிறு அவனைக் கட்டி இழுத்துக்கொண்டு வருகிறது.
மடத்தருகில் ஒரு சிறிய கூட்டம். கீழத் தெருக்காரர்கள், நிலமில்லாத கூலியாட்கள். ஒரு தேடலோடும், ஆவலோடும் பேசுகிற தவிடன்.
‘இன்னும் ரெண்டாள் கெடைச்சுட்டா வேலைக்குப் பொறப்புட்டுரலாம்.”
“வேலைக்கு ஆள் கெடைக்குறதுதான் குதுரைக் கொம்பா இருக்கு.”
“மம்பட்டி வேலையாளுக பூரா சிவகாசிக்கு கட்டட வேலைக்குப் போய்ட்டா… இங்க எப்படி ஆளு கெடைக்கும்?”
நின்று கவனித்த துரைச்சாமி, ஏதோ பேசுகிறார்களே என்று விசாரித்தான்.
“என்ன தவிடா… என்ன சமாச்சாரம்?”
“டக்கருக்கு சரள் அள்ளி விடுற வேலை. மம்பட்டி வேலை. கூலியாளுக கெடைக்காம தட்டழிஞ்சி அலையுதோம்.”
“எம்புட்டுச்சம்பளம்?”
“நூத்தம்பது ரூவா. தொடர்ச்சியா… நாலுநா வேலை. அறநூறு ரூவா சம்பளம். இப்பவே… அட்வான்ஸா எரநூறு ரூவா.”
அவனுக்குள் சட்டென்று ஒரு வெளிச்சம். ‘மோட்டார் பைக்’கின் அச்சுறுத்துகிற ‘என்ஜின்’ சத்தத்தை அடைத்துவிடலாம்.
ஆனால், ஒரு மனத்தடை.
‘நிலமில்லாத கூலிக்காரங்க நிலைக்கு. ‘பம்ப் ஷெட் மோட்டார்’ சம்சாரி எறங்கணுமா? எறங்கலாமா? நிலமுள்ள விவசாயி, வெறும் கூலிக்காரனாக இறங்குவதா? பரிகாசம் பண்ணி சிரிக்கமாட்டார்களா?”
‘மோட்டார்பைக்’கின் ‘என்ஜின்’ இரைச்சல் தடதடப்பு.
“நா… வரட்டுமா?”
நம்ப மறுத்து. கேலிக்குச் சொல்லுவதாக நினைத்து… சிரிக்கிற தவிடன்.
“சும்மா இருங்க சாமி… நீங்கல்லாம் காடு கரைக உள்ள சம்சாரிக. நாங்க கூலிக்காரங்க…”
“இதெல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே? உங்களுக்கு ஆளு வேணுமா, வேண்டாமா?”
“வேணும்.”
“நா வந்தா… ஒங்களுக்குச் சம்மதமா?”
“வாங்க… ரொம்பச் சந்தோஷம்.”
ரூபாய் கைமாறியது.
“வீட்லே போய் சாப்டுட்டு… மம்பட்டியோட வாரேன்.”
இருநூறு ரூபாயை மடியில் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டபோது… எங்கிருந்தோ கீழ்நோக்கி வீழ்வது போன்றதோர் மனக்கனம்.
– 5.7.2009, ராணி வார இதழ்.
– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026
தெய்வச்செயல்!
ஜெ.ஜெயகுமார்
September 24, 2026
மரம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 21, 2026
