(2019ல் வெளியான கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இக்கால கட்டத் தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர். கல்லூரிகளில் படித்தவர்கள் தேசிய உணர்ச்சி மிஞ்சியவர்கள் பழமையின் எதிரிகள் வாழ்வின் உண்மை களை நேருக்கு நேர் நின்று தரிசித்து, அவற்றை விமர்சன அடிப்படையில் சர்வதேச இலக்கியத்தின் தரத்திற்குக் கலையழகுடன் தமிழில் சிறுகதை எழுதவேண்டுமெனத் துடித்தவர்கள். இவர்களுடைய சிறுகதைகளில் இயல்பாகவே தத்துவப் போக்கு, சமுதாயச் சிந்தனைகள், விதியின் ஆற்றல். சாவின் அச்சம். கலையின் நிலைபேறும், தீண்டாமை ஒழிப்பு, கிராமச் சீர்திருத்தம், விதவை விவாகம், ஒத்துழையாமை இயக்கம், மேலை இலக்கிய மரபையும் கீழை இலக்கிய மரபையும் கலந்து எழுதுதல், மனித மன உணர்வுகளை வெளிப்படுத்தல் முதலான பண்புகள் வெளிப்பட்டன.
தமிழில் கதை சொல்லும் முறைமை தொல் காப்பியர் காலத்துக்கு முன்னரே இருந்து வந்துள்ளது. “பொருள் மரபில்லா பொய்மொழி”(உண்மையில்லாத பொய்க்கதை) என்றும் “பொருளோடு புணர்ந்த நகை மொழி” (உண்மை கவந்த வேடிக்கைக் கதைகள்) என்றும் தொல்கதைகள் அடையாளங் காணப்பட்டன. பழந்தமிழ் நூலாகிய கலித்தொகையில் காணப்படும் பாடல்கள் பல, சிறுகதைகள் போன்றே காணப்படுகின்றன. சிறுகதைக் குரிய எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்பன முறையே கலி தொகையில் காணப்படும் தரவு, தாழிசை, சுரிதம் ஆகிய வற்றில் அமைந்திருப்பதைக் காணலாம். சிலப்பதி காரத்தில் காணப்படும் பார்ப்பனத்தி கீரிப்பிள்ளைக் கதை, தேவந்திகதை, பராசரன்கதை முதலியனவும் மணி மேகலையில் இடம்பெறும் ஆபுத்திரன் கதை, சாதுவன் கதை. காயசண்டிகைகதை, சுதமதிகதை முதலியனவும் சிறுகதை வடிவில் காணப்பட்டாலும் அவை செய்யுளில் காணப்படுவதாலும் இவற்றிைைனயும் சிறுகதைகளாகக் கொள்ளமுடியாது.
தமிழில் ஆரம்பகால இக்கதைகள் வாய்மொழிக் கதைகளாகவும் கர்ண பரம்பரை இதிகாசக்கதைகளாகவும் காணப்பட்டன. இது போல விக்கிர மாதித்தியன் கதைகள், தென்னாலி ராமன்கதைகள், மரியாதை இராமன் கதைகள், மதுரைவீரன்கதை, அரபிக் கதைகள், தேசிங்குராஜன் கதை, ஈசாப் பின் நீதிக்கதைகள்(1853), மதனகாம் ராஜன் கதைகள்(1855), முப்பத்திரண்டு பதுமைக்கதை(1869), மயில்ராவணன் கதை (1869), விவேக சாகரம்(1875), கதா சிந்தாமணி(1879) முதலான வாய் மொழியாக வழங்கி வந்த கதைகள் பல, நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. வாழ்வின் மெய்மையில் இருந்து விலகியதாகவும் மிகை நவிற்சிப் பாங்கோடு அமைந்திருப்பதாலும் நெகிழ்ச்சிப்பின்னல் உடையதாக இருப்பதாலும் இவற்றை யாரும் சிறுகதைகளாகக் கொள்வ தில்லை.
தமிழின் உரைநடை வரலாற்றில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருகதை ஒரு திருப்பு முனையாய் அமைந்தது. 1621-1695 காலப்பகுதியில் Jean de la Fontaine எழுதிய கதைகளைத் தழுவி தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ற வகையில் வீரமாமுனிவர் பரமார்த்த குருகதையைப் படைத் தார். 1728-இல் புதுவையில் முதல்முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்ட “பரமார்த்த குருவின் கதை” என்ற நூல் கற்பனைத்திறன் சார்ந்த படைப்பிலக்கியத்துக்கு உரை நடையும் ஊடகமாக அமையும் என்பதை எடுத்துரைத்தது.
தமிழ் சிறுகதை இலக்கியத்துக்கு வித்திட்டவர் களில் தாண்டவராய முதலியாரின் பணி இன்றியமையாதது. இவர் சோமசன்மாவின் பஞ்சதந்திரக்கதைகள் என்ற நூலை 1826ஆம் ஆண்டு மராத்தி மொழி யில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆயினும் இக்கதைகளை கன்னடத்தில் இருந்து மொழிபெயர்த்ததாகக் கருதுவாருமுளர். தாண்டவராஜ முதலி யார் “கதாசரிச் சாகரம்” என்ற வடமொழிக் கதைக்கொத்திலிருந்து சில வற்றைத் தொகுத்து “கதாமஞ்சரி” என்ற நூலினை யும் வெளியிட்டார். இவ்விருநூல் களும் பலருக்கு கதை எழும் ஊக்கத்தை அளித்தது எனலாம். இதில் “கதாமஞ்சரி” வாய் மொழிக்கதைகளின் தொகுப்பாக அமைந்தது. அட்டாவ தானம் வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரை நடைக் கட்டுரை களைத் தொகுத்து 1876இல் “வினோதரச மஞ்சரி” என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூலில் உள்ள கதைகளும் கட்டுரைகளும் “தினவர்த்தமானி” என்ற ஏட்டில் வெளிவந்தன.
இலங்கையைச் சேர்ந்த ஆர்ணல்ட் சதாசிவம் பிள்ளை தான் எழுதிய நாற்பது கதைகளைத் தொகுத்து “நன்னெறிக் கதாசங்கிரகம்” என்ற நூலை 1869ஆம் ஆண்டு வெளியிட்டார். இக்கதைகள் தமிழ்நாட்டின் சென்னை பட்டினத்தையும் யாழ்ப்பாண சூழலையும் பிரதிபலிக்கும் கதைகளாக அமைந்தன. இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் பல ஆங்கில மரபுக்கதைகளைத் தழுவி எழுதப்பட்ட கதைகளாகக் காணப்படுகின்றன. யூக பஞ்சாணன் கதை, அமைச்சரின் அருங்குணம், துஷ்ட வாரூடன் கதை என்பன நன்னெறிக் கதாசங்கிரகம் என்ற தலைப்புக்கேற்ற பொருத்தமான கதைகளே ஆகும்.
சி.மாணிக்கமுதலியார் “கதாசிந்தாமணி” என்ற நூலை 1873ஆம் ஆண்டு வெளியிட்டார். நீதிமன்ற நடுவரின் தீர்ப்புக்களை ஒட்டி எழுதப்பட்ட சிலகதைகள் இதில் இடம்பெறுகின்றன. இதேபோல் கேசவராய முதலியார் “அபிநவக்கதைகள்” என்ற தொகுப்பை வெளியிட்டார். இத்தொகுப்பில் “கற்பாலங்காரம்”, “தனபாலன்”, “கோமளம்”, “சுப்பையர்”, “கிருஷ்ணன்”, “ஆக்ஷாடபூதி” போன்ற ஆறு கதைகள் இடம்பெறு கின்றன. இதில் இடம்பெறும் “கற்பாலங்காரம்” கதை ஒரு பெண்ணின் கற்பை கண்டறிய ஓர் அரசன் செய்யும் கொடுஞ் செயல்களை எடுத்துரைக்கிறது. குறிப்பிட்ட மையப் புள்ளியை நோக்கிய முன்னோக்கு இயக்கமும் பண்புநல வெளிப்பாடும் இன்மையால் இத்தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகளையும் சிறுகதைகளாகக் கொள்ளமுடியாது.
1897ஆம் ஆண்டு இராஜேந்திரப்பிள்ளை “பூலோக விநோதக் கதைகள்” என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டார். ஆண், பெண் இருபாலரின் பருவ மாறு தலுக்கு ஏற்ப அவர்பால் தோன்றும் குணபேதங்களை நிலைகளனாகக் கொண்டு இக்கதைகள் இயற்றப்பட்டன. ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும் அக்கதையின் உட்பொருளை தெரிவிக்கும் “விநோதக்கவி” ஒன்றும் இக்கதைகளின் முன் இடம்பெற்றன.
பண்டிதர் எஸ்.எம்.நடேசசாஸ்திரியார் தமிழ் நாட்டில் பரவலாக வழங்கி வந்த கர்ண பரம்பரைக் கதை களைத் தொகுத்து “தக்காணத்துப் பூர்வ கதைகள்”(1880) “திராவிட மத்திய கால கதைகள் *(1886), திராவிட பூர்வ காலக் கதைகள்(1886) என்ற பெயர்களில் நூல்களை வெளியிட்டார். அத்தோடு தான் எழுதிய மர்மக்கதைகளை 1894ஆம் ஆண்டில் “தானவன்” என்ற “போலிஸ் நிபுணன் கண்டு பிடித்த அற்புதக் குற்றங்கள்” என்ற பெயரில் வெளி யிட்டார். இத்தொகுப்பில் இடம்பெறும் “காணாமற்போன கடிதம்”, “மாதா கோயிலில் நடந்த கொலை” முதலான கதைகள் எட்கார் அலன்போவின் சிறுகதைகளை நினை வூட்டுவதாக மா.இராமலிங்கம் அவர்கள் குறிப்பிடுவார்.
தமிழில் சிறுகதைகள் தோன்றுவதற்கு முன் எழுந்த ஆரம்ப காலக் கதைகள் வாசுதேவன் கூறுவது போல் “கதைகள் ஒரு ஒழுங்கான இலக்கணம் அமையாது மாந்தர்களுக்கு இன்பமளிக்கும் எல்லா விடயங்களையும் தன் பாலணிந்து கவினுற விளங்கின”. உழைத்து உழைத்து ஓய்ந்த மாந்தர்கள் களைப்பை போக்குவதற் காக எழுதப்பட்ட இக்கதைகள் அன்றிரவே முடிவுறும் வகையில் சிறிய கதைகளாகவும் அமைந்தன.
இந்தியாவில் ஐரோப்பியர் வருகையையடுத்து அரசியல், பொருளாதாரம் சமூக அமைப்பில் ஏற்பட்ட பெருமளவு மாற்றங்கள் நவீன புனைகதைகளுக்கு வித்திட்டன. குறிப்பாக ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட கல்விமுறை இதனைச் சாத்தியப்படுத்தின. ஆங்கில கல்வி யின் பயனாக படித்த புதிய மத்திய நடுத்தர வர்க்கம் உருவாயிற்று. இவர்கள் தாய்மொழி இலக்கியத்தில் புதிய வடிவங்களை படைக்கத் தொடங்கினர். கிழக்கிந்தியக் கம்பனியின் தோற்றமும் சென்னைக்கல்விச்சங்கத்தின் வளர்ச்சியும் இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சி தூண்டு கோலாக அமைந்தன. மற்றும் 1930களில் தமிழகத்தில் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு “இன்றைய சிறுகதைகள்” என்னும் தலைப்பில் ஆங்கிலச்சிறுகதைகள் பாடங்களாக அமைந்தன. அதில் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பஸான், ரஸ்ய எழுத்தாளரான அன்டன் செக்காவ்வினுடைய சிறு கதைகள் பாடமாக அமைந்திருந்தன. அச்சியந்திரத்தின் வருகையால் பத்திரிகைகள், சிறுசஞ்சிகைகள் அதி உன்னத வளர்ச்சியைப்பெற்றன. அவ்வகையில் இக்காலப் பகுதியில் மணிக்கொடி(1935), சூறாவளி(1939), பாரததேவி (1939), பாரதமணி(1939), கலாநிதி(1939), கலாமோகினி (1942), சந்திரோதயம் (1945), முல்லை(1945) முதலான சிறு பத்திரிகைகள் தோன்றின. இதன் காரணமாகத் தமிழில் புனைகதைகள் பாங்கிலான இலக்கிய வடிவங்கள் தோற்றம் பெற்றன.
புனைவுவகை உரைநடை இலக்கியமாகக் கருதப் படும் சிறுகதை சம்பவத்தை நிகழ்ச்சியின் அனுபவத்தை, உருவகத்தை அல்லது மையக்கருவினை விவரித்துரைக் கும் ஒரு இலக்கிய வகையாகும். உருவாக்கும் அடிப்படைக் கூறுகளாக கதாபாத்திரம், சூழமைவு, போராட்டம், கதைக் கரு, நோக்குநிலை, கதைப்பின்னல், குறிப்புமுரண், உணர்ச்சிப் பாங்கு முதலானவை அமைகின்றன. தமிழ்ச் சிறுகதைகள் என்பதன் பொருளை வரையறுப்பதற்கு சிறு கதை குறித்து அறிஞர்கள் கூறிய வரைவலிக்கணங்கள் துணை செய்கின்றன. அவ்வகையில்
“அரைமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் உள்ள காலம்வரையில் படித்து முடித்து மகிழக் கூடியதாகச் சிறுகதை இருக்கவேண்டும்”. சிறுகதை என்பது தன்னள வில் முழுமை பெற்றதாக இருக்க வேண்டும், கதையைப் படித்து முடிப்பதற்க்குள் புறத்தேயிருந்து எவ்வித குறிக்கீடு களுமின்றி வாசர்கள் முழுதும் கதையாசிரியனின் ஆதிக்கத்திற்கு கட்டுபட்டிருக்க வேண்டும் என்று சிறு கதையின் மூலபிதா என்று கருதப்படும் எட்கார் அலன்போ கூறியமை குறிப்பிடத்தக்கது வாழ்க்கையின் சாளரம் சிறுகதை” என்பார் புதுமைப்பித்தன்
பேராசிரியர் வெல்ஸ் “பத்தாயிரம் சொற்களுக்கு மேற்போகாமல் சற்றேறக் குறைய அரைமணி நேரத்தில் வாசித்து முடிக்கக் கூடிய தொன்றாக இருக்கவேண்டும்” என்பார்
சிறுகதை என்பது சிறிய கதை என்னும் பொருளில்லாமல் ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச் சொல் என பிராண்டர் மத்யூ கூறுவார்.
“சுருக்கமும் செறிவும் சிறுகதையின் முக்கிய பண்புகள்” என ஜேம்ஸ் கூப்பர் லோறன்ஸ் கூறுவர்.
கதையின் கட்டுக்கோப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரான ரஸ்ய நாட்டு சிறுகதை ஆசிரியரான ஆன்டன் செக்காவ் கூறும் போது கதையின் ஆரம்பத்தில் சுவரின் மீது ஒரு துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று எழுதுவாயானால் கதை முடிவதற்குள் அது வெடித்தே ஆகவேண்டும் என்பார்.
சிறுகதை என்பது ஓட்டப் பந்தயம் போல தொடக்கமும் முடிவும் வேகமாக அமையவேண்டும் என்பார் செட்ஜ்விக்.
சிறுகதை என்றால் “சிறிய கதை” அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்துவமான இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு. சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான் என்பார் ஜெயமோகன்.
மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்கள் சிறுகதை அமைப்பை விளங்கிக் கொள்ள துணைசெய்கின்றன.
தமிழ் மொழியில் கதை என்பது கட்டு, குறிப்பு, கிளவி, புனைவு, கதானகம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. தமிழில் கவிதைத் திறனாய்வு வளர்ந்த அளவுக்கு சிறுகதைத் திறனாய்வு வளரவில்லை. ஆரம்பகாலச் சிறுகதைகள் குறித்த மதிப்பீடுகள் அதிக மாக வெளிவந்த போதிலும் நவீன சிறுகதைகளை உள்வாங்கி வெளிவந்த திறனாய்வுகள் மிகக் குறைவே யாகும். ஆரம்பகால சிறுகதைகள் குறித்து வெளிவந்த திறனாய்வின் தொடக்கப்புள்ளியாக முனைவர் சாலை இளந்திரையனின் “தமிழில் சிறுகதை” என்ற நூல் அமைகிறது. இது போல “பேராசிரியர் கார்த்திகேசு சிவத் தம்பியின் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சி யும், க.செந்தில்நாதனின் தமிழ்ச்சிறுகதைகள் ஒரு மதிப்பீடு(1967), சிசு.செல்லப்பாவின் “தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது” (1974), பெ.கோ.சுந்தரராஜன், சோ.சிவபாத சுந்தரம் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய “தமிழில் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்(1984)”, அ.சிதம்பரநாத செட்டியாரின் தமிழிச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977), மா. இராமலிங்கத்தின் “விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்”இ வேதசகாயகுமாரின் “தமிழ்ச் சிறுகதை வரலாறு” (1979) சூ.இன்னாசியின் சிறுகதைச் செல்வம் (1993) முதலான நூல்கள் தோற்றம் பெற்றன.
இரா. தண்டாயுதத்தின் சிறுகதை முன்னோடி கள், பாரதி முதல் சுஜாதா வரை என்ற இவ்விரு நூல்களும் சிறுகதையாசிரியர் குறித்த விரிந்த பார்வையாக வெளிப் படுகிறது. தமிழ்ச் சிறுகதைகளில் வடிவத்தை முன்வைத்து கோ.கேசவனால் எழுதப்பட்ட “தமிழ் சிறுகதைகளில் உருவம்” என்ற நூல் வ.வே.சு.ஐயர், கல்கி, புதுமைப்பி த்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி, தி.ஜானகி ராமன், லா.சா.ரா ஆகிய ஆரம்பகால சிறுகதை ஆசிரியர்களின் சிறுகதைகளில் காணப்படும் கதைப்பின்னல், பாத்திர வார்ப்பு வர்ணனை, மொழிநடை முதலானவற்றை ஆராய்கிறது.
சுதந்திரத்துக்கு முற்பட்ட தமிழ்ச் சிறுகதையின் போக்குகள்
ஆசிரியர் சி.வி.சுவாமிநாதய்யர் 1892இல் “விவேக சிந்தாமணி” என்ற சஞ்சிகையைத் தொடங்கினார். இதில் மாதவையர், பி.ஆர்.ராஜமையர், எல். சாம்பன், டி.ஜி.வெங்கடரமணய்யா முதலானோர் சிறுகதைகளை எழுதினர். இச்சஞ்சிகையில் எல்.சாம்பன் எழுதிய “லெட்சுமி” என்ற கதை அரசனுக்கு இரண்டகம் செய்து விட்டஒரு மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதையாகும். தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு புதிர் இழையோடினாலும் இக்கதை கூறப்பட்ட முறைமையால் இச்சிறுகதை போதிய கவனத்தைப் பெறவில்லை. இவரின் “விசாலாட்சி” என்ற பிறிதொரு கதையும் விவேக சிந்தாமணியில் வெளிவந்தது. வெங்கட ரமணய்யா “சிவசங்கரன்” என்ற சிறுகதையையும் எழுதி யுள்ளார். இச்சிறுகதை சாதாரண குடும்பம் ஒன்று யாத்திரை செய்ய மேற்கொண்ட சமயத்தில் அக்குடும்பம் எதிர் நோக்கிய பிரச்சினைகளைச் சித்திரிக்கிறது. விவேக சிந்தாமணியைத் தொடர்ந்து 1900க்கும் 1915க்கும் இடை யில் விவேகபானு, வித்தியாபானு, சக்கரவர்த்தினி, புதுவைக் கலைமகள், வித்தியாவிகாரிணி போன்ற சஞ்சிகைகள் தோற்றம் பெற்றன. கதைகளைப் பிரசுரித்த இச்சஞ்சிகைகள் கதைகள் குறித்தான கட்டுரைகளையும் பிரசுரித்தன.
1913ஆம் ஆண்டு வெளிவந்த விவேகபோதினியில் அம்மணி அம்மாள் என்ற பெண் எழுத்தாளரின் சிறுகதை யும் பிரசுரமாகியுள்ளது. இதில் மாதவையர், பி.ஆர்.ராஜ மையர், வ.வே.சு.ஐயர் முதலானோரும் சிறுகதைகளை எழுதினர். 1908இல் வ.வே.சு.ஐயர் தன் முதல் சிறுகதை யான “குளத்தங்கரை அரசமரம்” என்ற சிறுகதையை விவேகபோதினியில் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அம்மணி அம்மாளால் எழுதப்பட்ட “சங்கல்பமும் சம்பவ மும்” சிறுகதை காட்டிலுள்ள சவுக்க மரம் காகிதமாகி, பத்திரிகையாகி ஈற்றில் அடுப்பில் சாம்பலாகப் போவதை அறிவியல் கருத்துடன் இணைத்து நகைச்சுவையாகக் கூறுகிறார்.
மாதவையா இலக்கிய ஈடுபாட்டின் காரணமாக 1917இல் “தமிழ்நேசன்” என்ற சிறுசஞ்சிகையையும் 1927இல் “பஞ்சாமிர்தம்” என்ற சிறுசஞ்சிகையையும் நடாத்தினார். மாதவைய்யாவின் சிறுகதைகள் “குசிகர் குட்டிக் கதைகள்” என்னும் தலைப்பில் தமிழில் வெளி வந்தது. இவர் ஆங்கிலத்தில் எழுதிய Kusika’s Short Stories என்ற ஆங்கில சிறுகதைகளின் மொழிபெயர்பே இந் நூலாகும். இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வர தட்சணைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தார். “பஞ்சாமிர்தம்”, “கண்ணன் பெருந்தூது” போன்ற கதைகள் உருவ வார்ப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.
சுப்பிரமணிய பாரதியார். கவிதைகளைப் போலவே சிறுகதைகளிலும் தனிமுத்திரை பதித்தவர். பாரதியார் தாகூரின் எட்டுச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து “தாகூர் சிறுகதைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டார். பாரதியாரின் முதல் சிறுகதை யாகக் கருதப்படும் துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம் என்ற சிறுகதை 1905ஆம் ஆண்டு சக்கரவர்த்தினி பத்திரிகையில் வெளிவந்தது. இக்கதையை பாரதி “ஷெல்லிதாஸ்” என்ற பெயரில் எழுதினார். பாரதியாரின் “காக்கை இலக்கணம் கற்ற கதை” உருவகக்கதையாகும். பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” சிறுகதை பிரம்மசமாஜத்தை சேர்ந்த இளைஞன் வைதீகப்பெண்ணைக் காதலிப்பதால் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கிறது. பாரதியார் “பூலோகரம்பை” என்ற சிறுகதையில் பொட்டுக் கட்டும் சமூக வழக்கத்தைச் சாடுகிறார். இந்துமதம் கிறிஸ்தவ சமய பிரச்சாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதை விளக்க பாரதியால் எழுதப்பட்ட சிறுகதைகளே “வேணு முதலி”, “வேணுமுதலிவிசித்திரம்”. இது தவிர பாரதியின் சந்திரிகையின் கதை, திண்டிமசாஸ்திரி, ஆவணி அவிட்டம், ஸ்வர்ணகுமாரி, முதலான சிறுகதைகளும் பாரதியாரால் எழுதப்பட்டன. இதில் காக்காய் பார்லி மெண்ட், காக்கை இலக்கணம் கற்ற கதை இரண்டிலும் காகங்கள் பேசிக் கொண்டாலும் அவை உண்மை கலந்த வேடிக்கை கதைகளாகவே அமைகின்றன.
வ.வே.சு.ஐயர் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அறியப்படுகிறார். புதுச்சேரியில் இவரால் நிறுவப்பட்ட “கம்ப நிலையம்” என்ற படிப்பகத்தின் மூலம் “மங்கையர்க்கரசியின் காதல்”, ” “காங்கேயன்”, “அழேன் ழக்கே”, “கமலவிஜயம்”, “குளத்தங்கரை அரசமரம்” என தனது ஐந்து கதைகளைத் திரட்டி “மங்கயக்கரசியின் காதல்” என்ற தலைப்பில் வெளியிட்டார். 1927களில் வெளிவந்த மங்கையக்கரசியின் காதல் தொகுப்பில் எதிரொலியாள், அனார்க்கலி, லைலிமஜ்னூன் ஆகிய கதைகளும் இணைக்கப்பட்டு இருந்தன. வ.வே.சு.ஐயர் “குளத்தங்கரை அரசமரம்” என்ற சிறுகதையை ஸூ.பாக்யலஷ்மி அம்மாள் என்ற பெயரிலேயே எழுதினார். இக்கதை தாகூர் எழுதிய “கடேர்கதா”(Gater Katha) என்ற சிறுகதையின் பாதிப்பில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை பெ.கோ.சுந்தரராஜன், சோ.சிவபாதசுந்தரம் ஆகியோர் முன்வைப்பர். ருக்மணியின் கதையை சவுக்க மரமும் சிட்டுக்குருவியும் பேசுவது போன்ற உத்திமுறையில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. முன்நிகழ்ச்சிகளைப் பின்கூறும் Flash back உத்தியில் இச்சிறு கதை படைக்கப்பட்டுள்ளது. வரதட் சணை கொடுமையை விளக்கும் இச்சிறு கதையைப் போல் சமகாலப்பிரக்ஞை யுடன் எழுதப்பட்ட மற்றொரு கதை “கமல் விஐயம்” ஆகும். “மங்கயக்கரசியின் காதல்”, “காங்கேயன்” ஆகிய கதைகள் ஒஸ்ஸியனுடைய பாதிப்பில் எழுதப்பட்ட தாக வ.வே.சு.ஐயர் மங்கையக்கரசியின் காதல் முன்னுரையில் குறிப்பிடுவார்.
“மங்கையக்கரசியின் காதல்” என்ற சிறுகதை கலிங்கப் படையை வெற்றி கொண்ட கருணாகரத் தொண்ட மானின் மகள் மங்கையக்கரசி தன் காதலனைக் கொன்ற மார்த் தாண்டனை கொன்று பலிவாங்குவ தாக அமைகிறது. “காங்கேயன் என்ற சிறுகதை கங்கபாடி மன்னனின் கடைசி மைந்தனான காங்கேயனுக் கும் மாதவிக்கும் இடையிலான காதலைக் கூறுகிறது. மங்கையர்க் கரசியின் காதல், காங்கேயன் முதலான கதைகளுக்கு இவர் எழுதியுள்ள சூசிகை குறித்து குறிப்பிடல். மற்றும் எதிரொலியாள், அனார்க்கலி, லைலிமஜ்னூன், முதலான சிறுகதைகளும் இவரால் எழுதப்பட்டன.
வ.வே.சு.ஐயரைப் போன்று சரித்திரக்கதைகளை சிறுகதையாசிரியர்கள் பலரும் படைத்துள்ளனர். வரலாற்று புனைகதைகள் கடந்த காலத்தினை நுணுக்கமாகச் சித்திரிப்பதுடன் ஆவணமாகவும் விளங்குகின்றது. தி.நா.சுப்பிரமணியன். எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் முதலானோர் வரலாற்று ஆய்வாளராக இருந்து சிறுகதை களைப் படைத்தவர்கள். பிச்சமூர்த்தி, தூரன், கு.ப.ரா முதலானோர் புனைகதையாசிரியராக இருந்து வரலாற்று சிறுகதைகளைப் படைத்தனர். ந.பிச்சமூர்த்தியுடைய “நேஹால்” என்ற சிறுகதை பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட சிறு கதையாகும். முத்கல் நகரத்துப் பெண்னான நேஹாலின் கைரேகையின் உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டு இச்சிறுகதையை ந.பிச்சமூர்த்தி படைத்துள்ளார். கு.ப.ரா.வின் “இருளிலிருந்து”, “மகாபோதம்”, “ஆமிரபாலி” போன்ற சிறுகதைகளும் ரா.ஸ்ரீ.தேசிகனின் “சிலைக்கு எதிரில்”, கி.ரா.வின் “புத்தன் வந்தான்” முதலான சிறுகதை களும் புத்தரின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகள் ஆகும். இதுபோல அசோகனின் வரலாற்றைத் திரு. நா.சுப்பிரமணியனின் “அசோகன்” சிறுகதையும் வீரசிவாஜியின் வரலாற்றை கு.ப.ரா.வின் “லட்சிய வீரன்” சிறுகதையும் கூறிநிற்கின்றன. கு.ப.ரா.வின் “காணாமல் போன காதல்”, தி.நா.சுப்பிர மணியனின் தோட்டியை மணந்த அரசகுமாரி முதலான சிறு கதைத் தொகுப்புக்களும் அக்கால வரலாற்றுச் சிறுகதை வளர்ச்சிக்கு சான்றாக அமைகின்றன.
1920ஆம் ஆண்டுகளில் விடுதலை எழுச்சி தீவிரம் பெற்ற நிலையில் இந்தியக் காங்கிரசின் இயக்க சக்தியாக காந்தி மாறியதும், உப்புச்சத்தியாக்கிரகம் (1930) சட்டமறுப்பு இயக்கம் (1932), ஒத்துழை யாமை இயக்கம் – போன்ற அரசியலியக்க உணர்ச்சித்தாக்கங்கள் மக்கள் மனதைப் பெரிதும் பாதித்தன. எனவே, நாட்டு மக்களைப் பல நிலைகளிலும் ஒற்றுமை யாக்க இந்திய ஒற்றுமை, தொழிற்சங்க ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கள்குடி தவிர்ப்பு, பால்ய விவாக எதிர்ப்பு, ராட்டினப் பெருமை என்பன முன்னணிக்கு வரவே, பத்திரிகைகள் மற்றும் எழுத்தாளர்களின் கவனமும் இவற்றின்பால் திரும்பின. “ஆனந்தபோதினி”, “லோகோப காரி”, “சுதந்திரன்”, “சமரசபோதினி”, “ஆனந்த விகடன்”, “ஊழியன்”, “சுதந்திரப்பாதை”, “தமிழ் உலகு”, “தமிழ் நாடு”, “பிரசண்டவிகடன்” முதலான பத்திரிகைகள் காந்தியக் கருத்துக்களை முதன்மைபடுத்தும் வகையில் செயற்பட்டன. கல்கி, ராஜாஜி, தி.ஜ.ரங்கநாதன், ந.பிச்ச மூர்த்தி, போன்றோர் காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள் எழுதலாயினர். தி.ஜ.ர.வின் “மாரியின் குற்றம்” சிறைக்கைதியின் வாழ்வைச் சித்திரிக் கும் கதை. இதில் காந்தியின் அறிவுரைகள் தலைதூக்கி நின்றன. 1925ஆம் ஆண்டு வெளிவந்த கல்கியின் முதல் சிறுகதையான “அதிஷ்ட சக்கரம்” என்ற சிறுகதை கதர் நூல் நூற்கும் கைராட்டையைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டது. இவருடைய “கணையாழியின் கனவு” சிறுகதையில் வரும் க்ஷியாம்பாபு பவானி கதையில் வரும் உமாகாந்தன் கைதியின் பிரார்த்தனை சிறுகதையில் வரும் கைலாசம் முதலான பாத்திரங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து செயற்பட்ட உண்மையான பாத்திரங்களே ஆகும். 1935இல் ராஜாஜி நடாத்திய விமோசனம்; பத்திரிகையில் ராஜாஜியும் கல்கியும் இத்தகைய கதைகளையே நிறையவே எழுதினர். கல்கியின் “பாங்கர் விநாயராவ்” சிறுகதை மதுவிலக்கு கொள்கையையும் “சிரஞ்சீவி”ச் சிறுகதை உப்புச் சத்தியாக்கிரகப் பின்னணியையும் கூறிநிற்கின்றன. பெ.தூரனின் “ரங்கபோயன்”, “புதுக்கடை”, “ஜகுப்பன்”, “முத்தம்மாள்” முதலிய சிறுகதைகள் மதுவினால் விளை யும் கேடுகளைக் கூறி நிற்கின்றன.
ந.பிச்சமூர்த்தியின் “மோகினி”, “பதினெட்டாம் பெருக்கு”, “முள்ளும் ரோஜாவும்”, “காவல்” கல்கியின் “கேதாரியின் தாயார்”, ராஜாஜியின் “தேவானை” முதலான சிறுகதைகளும் காந்தியத்தாக்கத்தில் எழுந் தவையே ஆகும். இக்காலப்பகுதியில் ராஜாஜி நீதிக்கதை களையும், போதனை விளக்கச் சிறுகதைகளையும் எழுதியிருந்தார். சத்தியத்துக்காக தன் வாழ்வைத் தியாகம் செய்ய முற்படும் பெண்ணைமையப்படுத்தி எழுதப்பட்ட என்.எஸ்.ஸ்ரீனிவாசனின் “ஜகன்மாதா”, அரசுப் பணி கிடைக்கும் என்பதால் நாட்டுக்கு துரோகம் இளைக்க முனைவோரைப் பேச்சுவன்மையால் மாற்றி தேச விடுதலையை அவர்களுக்கு ஊட்டி தேசப்பற்றை வளர்க்க முனையும் இலட்சிய மாந்தரை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டது. வி.எஸ்.எஸ்.ராஜனின் “தேசபக்தை ஹேமலதை” முதலான சிறுகதைகளும் காந்தீயத்தின் தாக்கத்தால் எழுந்த சிறுகதைகளாகும். பி.எஸ்.ராமையா வும் காந்திய அடிப்படையில், சமுதாயச் சீர்கேடுகளைச் சித்தரிக்கும் சிறுகதைகளை இக்காலத்தில் எழுதினார்.
பொருந்தா திருமணத்தை முன்னிறுத்தி இக் காலப்பகுதியில் ஏராளமான சிறுகதைகள் வெளிவந்தன. கல்கியின் “சாரதையின் தந்திரம்” என்ற சிறுகதை வயது வந்தவருக்கு திருமணம் முடித்து வைத்ததை கேள்வியுற்ற பெண்ணின் சகோதரன் தங்கையின் நல்வாழ்விற்காக அவளது கிழட்டு கணவனை விக்ஷம் வைத்து கொல்வதை எடுத்து விளக்குகிறது. யதார்த்தத்துக்கு பொருத்த மில்லாத இலட்சிய மாந்தர்களை பாத்திரமாக்கி பழைய நாடகப்பாணியில் இச்சிறுகதை எழுதப்பட்டது. ‘சாரதை யின் தந்திரம்” தொகுப்புக்கு முன்னுரை எழுதிய ராஜாஜி இச்சிறுகதை பற்றி குறிப்படும் போது “கதையின் முடிவு அழகு குறைவு” என்றார்.
குழந்தை மணத்தைச் சித்திரிக்கும் வகையில் இக்காலப்பகுதியில் சிறுகதைகள் எழுதப்பட்டன. குழந்தை மணத்தை மா.இராமலிங்கம் இரண்டாகப் பிரிப்பர். ஒன்று மூன்று அல்லது நான்கே வயதுள்ள சிறுமியரை அவர்களை விட சற்றே மூத்தகுழந்தைகளுக்கு மணமுடித்து வைத்தல். மற்றொன்று இளவயதுப் பெண்களை வயதான முதிய வருக்கு திருமணம் செய்து கொடுத்தல். புதுமைப்பித்தனின் “ஆண்மை”, பெ.கோ.சுந்தரராஜனின் “கௌரவநாசம்”, ந.சிதம்பரசுப்பிரமணியனின் “பாட்டி”, தி.ஜ.ர.வின் “கல்யாணப்பெண்” கல்கியின் “கமலாவின் கல்யாணம்” முதலான சிறுகதைகள் குழந்தை மணத்துக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்ட சிறுகதை களாகும். குழந்தை திருமணத்தால் பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வ.ராமஸ்வாமியின் “கட்டைவண்டி கலியாணம்” என்ற சிறுகதையும் திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி உறவை எதிர்கொள்ளும் உடல், உள வளர்ச்சியற்ற பெண்ணின் மனோநிலையை பெ.கோ.சுந்தராஜனின் “தாழை பூத்தது” சிறுகதையும் எடுத்துரைக்கின்றன.
ஆரம்ப கால சிறுகதைகள் காதலைப் பேசு பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டவை. ஆணும் பெண்ணும் உள்ளத்தாலோ, உடலாலோ கருத்து ஒருமித்து இணைவதைக் காதல் என்பர். இவ்வாறான ஆண், பெண் ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இக் காலக்கதைகள் எழுந்தன.பெண் உடலால் ஊனமுற்றவள் என்று அறிந்தும் அவள் மீது காதல் கொள்வதை க.நா.சுப்பிரமணியத்தின் “பேசாமடந்தை” சிறுகதையும் கு.பா.ரா.வின் “காமுவின் கதை” என்ற சிறுகதையும் எடுத்துரைக்கின்றன. பெண்ணுக்கு உடல் அழகுடன் உளஅழகும் திறமையும் இருக்கவேண்டும் என்பதை மே.ரா.மீ.சுந்தரத்தின் “கருப்புபெண்” சிறுகதை கூறிநிற்கிறது. ஆனால் தி.ஜா.ர- வின் “நொண்டிக்கிளி” சிறுகதை கால் ஊனமுற்ற ஒரே காரணத்துக்காக பெண் நிராகரிக்கபட்டதை எடுத்துரைக் கிறது. காதலனால் நிராகிக்கபட்டதன் பின் அப்பெண் எடுக்கும் உறுதியான முடிவும் இச்சிறுகதையில் வெளிப்படுத்தப்படுகிறது. வ.வே.சு.ஐயரின் அனார்கலி, கமலவிஜயம் முதலான சிறுகதைகள் மனிதக் காதலை காவியச் சுவையுடன் கூறி நிற்கின்றன. எஸ்.வையாபுரிப் பிள்ளையின் “ராமுவின் சுயசரிதம்”, “மணிமுடிமாளிகை” முதலான கதைகள் இளவயதுக் காதலை கூறிநிற்கின்றன. மௌனியின் “பிரபஞ்சகானம்”, “நினைவுச்சுவடு”, “கொஞ்ச தூரம்’ முதலான சிறுகதைகளும் காதலை மையப் பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளாகும்.
தீண்டாமை ஒழிப்பு இக்கால சிறுகதைகளில் முதன்மை பெற்றன. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தை கல்கியின் “விஷமந்திரம்” உட்பட பல சிறு கதைகள் வெளிப்படுத்தி நின்றன. விஷகடி வைத்தியரான நாரயண ஐயர் விஷ முறிப்பு வைத்தியத்தில் ஈடும்போது தீண்டத்தகாதவர் தன்னை காணக்கூடாது என்றும் விக்ஷ முறிப்பில் ஈடுபடும்போது தீண்டத்தகாதவர் காற்றுபட்டால் தன் மந்திரம் வேலை செய்யாது என்றும் நம்புபவர் ஒருமுறை வைத்தியம் செய்யும் போது அவருடன் போஸ்மாஸ்டர் ஒருவரும் கூட இருக்கிறார். பாம்பு கடித்தவன் உயிர்பெற்று எழும் போது தான் அவருக்கு போஸ்மாஸ்டர் தீண்டதகாதவன் என்பது தெரிகிறது. பகுத்தறிவுவாத சிந்தனையில் எழுதப்பட்ட இச்சிறுகதை கல்கியின் சிறந்த சிறுகதையாக இற்றைவரை போற்றப்படுகிறது. வேற்றுசாதியைச் சேர்ந்த குமாரலிங்கத்தின் காதலையும் மற்றும் அவன் கொடுக்கும் பவழமாலையையும் ஏற்கமறுக்கும் பொன்னாச்சியின் உள்ளத்தை பி.எம்.கண்ணனின் “பவழமாலை” சிறு கதையும் சாதிப்பாகுபபாட்டால் நிறைவேறாத காதலை சேது அம்மாளின் “ஸாவித்திரியின் கடிதம்” என்ற சிறுகதையும் எடுத்துரைக்கின்றன.
சாதி,கல்வி, உத்தியோக நிமித்தம் இந்துக்கள் பலர் கிறிஸ்தவசமயத்துக்கு மதம் மாறினர். எனவே இக்கால சிறுகதைகளில் மதமாற்றம் முக்கிய நிகழ்வாகச் சுட்டிக்காட்டப்பட்டன. கி.ரா.வின் “ஸ்பெக்ஷல் ஆட்டம்” சிறுகதை கிறிஸ்தவமதத்துக்கு மாறும் கணவனை மனைவியானவள் இந்துமதத்தின் சிறப்புக்களை கூறி மீண்டும் அம்மதத்துக்குள் உள்வாங்குவதை சித்திரிக்கிறது.
ஒரே நிகழ்சியினை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகளைப் படைத்தமை. பி.எஸ்.ராமையாவும் புதுமைப்பித்தனும் மணிக்கொடி அலுவலகத்துக்கு தெரு வழியாகக் கண்ட நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு புதுமைப்பித்தன் “கவந்தனும் ககாமனும்” என்ற கதையை யும் பி.எஸ்.ராமையா “கார்னிவல்” என்ற சிறுகதையையும் படைத்தனர்.
இக்கால சிறுகதைகளில் விதவைநிலையும் மிக நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டன. விதவைமகளின் காதல் திருமணத்தை தாய் தடுப்பதை ந.பிச்சமூர்த்தியின் “மீனலோசினி” சிறுகதையும் எடுத்துரைக்கின்றன. விதவையின் மீது காதல் கொண்டும் சமூகத்துக்கு அஞ்சி அவளை திருமணம் செய்து கொள்ளத் தயங்குவதை கலாரஸிகனின் “ஒரு சோறு” சிறுகதையும் கூறிநிற் கின்றது. தாய் இறந்தவுடன் தனிமையைப் போக்கிக் கொள்ள இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் தந்தை பதினான்கு வயதில் விதவையான மகள் சூர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்காத தன்மையை அழகனின் “விடுதலை” சிறுகதையிலும் தரிசிக்கலாம். தலைமுடியைக் களைந்து அழங்கோலப் படுத்த சமூகம் முனைகையில் சூர்யா தற் கொலை செய்து கொள்வதை இச்சிறு கதையில் ஆசிரியர் இயல்பாகவே எடுத் துரைக்கிறார். கணவனை இழந்த உயிருள்ள மனுஷிக்கு உயிரும் உள்ளமும் உண்டு என்பதை ஸ்ரீமதி சேது அம்மாளின் “கதையா” சிறுகதையும் எடுத்துரைக் கின்றது. கல்கியின் “கேதாரியின் தாயார்”, தி.ஜ.ர.வினன் “ராஜத்தின் கூந்தல்”, ராமையாவின் “பூச்சூட்டல்”, கு.ப.ரா.வின் “உயிரின் அழைப்பு” முதலான சிறுகதை கள் கைம்பெண்கள் பொட்டிழந்து, பூவிழந்து, கூந்தல் இழந்து அலங்கோல மாவதைச் சித்திரிக்கிறது.
இக்கால சிறுகதைகளில் கலப்பு திருமணங்களும் பேசப்பட்டன. கோபாலய்யங்கார் இடைச்சாதியைச் சேர்ந்த மீனாட்சியை மணப்பதால் ஐய்யங்கார் இனத்தவரால் தூரவிலக்கப்படுவதை புதுமைப்பித்தனின் “கோபாலய்யங்காரின் மனைவி” சிறுகதை எடுத்துரைக்கின்றது. உண்மை யில் இச்சிறுகதை கலப்புமணம் குறித்து கூறினாலும் கலப்பு மணத்தைக் கேலி செய்வதாகவே அமைகிறது. இதுபோல அந்தணன் தான் கொண்ட காதலில் உறுதியாக நின்று வேற்று சாதியைச் சேர்ந்த பெண்ணை மணம் முடிப்பதை வே.சி. எழுதிய “சக்தி கூத்து” சிறுகதையும் எடுத்துரைக் கிறது.
இக்கால சிறுகதைகள் வரதட்சணைக் கொடுமை யையும் எடுத்துக்காட்டின. ஆணின் கல்விக்கேற்ப வரதட் சணை பெறும் நிலையை நட்சத்திரத்தின் “கலியாணத்தின் கலியாணம்” சிறுகதையில் காணலாம். வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் உயர்வு என எண்ணும் தாய் மகன் வரதட்சணை பெறாமல் திருமணம் செய்ய முயல்வதை தடுப்பதை சி.சு.செல்லப்பாவின் “பந்தயம்” சிறுகதை விளக்கி நிற்கிறது. திருமணம் என்ற நிறுவனம் வியாபாரச் சந்தைக்கு வந்த பின்னர் உறவுகளுக்கிடையில் ஏற்படும் இடைவெளியை பி.எஸ்.சங்கரனின் “மழையும் தூறலும்” சிறுகதையிலும் காணலாம். புதுமைப்பித்தனின் “ஆண்மை” சிறுகதையில் ருக்மிணியும் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து வாழ முடியாமைக்கு காரணமாகச் சீதனமே அமை கிறது. புரசு பாலகிருஷ்ணனின் “பெற்றோர்” சிறுகதை மகளின் திருமணம் காரணமாகப் பெற்றோர் துன்பப்படு வதை எடுத்துரைக்கிறது. எம்.எஸ்.கமலாவின் “சீர்”, பி.எஸ்.ராமையாவின் “இலக்கிய ரசிகர்” முதலான சிறுகதை கள் சீர்வரிசையால் விளையும் கேட்டினைப் பேசுகிறது.
குழந்தை மீது தாய் கொண்டுள்ள அன்பினை மணிகொடிச் சிறுகதைகள் பல சித்திரித்துள்ளன. குழந்தையின் மீது தாய் காட்டும் பாசத்தையும் பரிவையும் ந.பிச்சமூர்த்தியின் “காபூலிக்குழந்தைகள்” சிறுகதையும் விபத்தில் குழந்தையை பறிகொடுத்த தாயின் உள்ளத்தை கே.ராமசாமியின் “விஜயன்” சிறுகதையும் நோய் வாய்ப் பட்டு உடற் குறைபாட்டால் வருந்தும் குழந்தையை சுகப் படுத்த முடியாநிலையில் தன் உயிரினை மாய்த்துக் கொண்ட தாயின் உள்ளத்தை ஆர்.சண்முகச்ந்தரத்தின் “நதிக்கரைசமாதி” சிறுகதையும் விளக்கி நிற்கின்றன. குழந்தையின் மனநிலையைக் கலை உணர்வோடு சித்திரிப் பதில் பி.எஸ். ராமையாவும் வெற்றி பெற்றார். இவருடைய நஷ்த்திரக் குழந்தைகள்” வளரும் குழந்தைகளின் வினாக்களைச் சமாளிக்க முடியாது குழந்தைகளிடம் பொய் கூறும் பெற்றார் களினால் குழந்தைகளின் உளநிலைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை இச்சிறுகதை எடுத்துரைக்கிறது.
இக்கால சிறுகதைகள் மது விலக்கையும் பேசின. இந்திய மக்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டுமானால் அம்மக்கள் மது அருந்தும் பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டிய அவசியத்தை காந்தி அடிகள் வலியுறுத்தினார். இதனால் மது ஒழிப்பு பிரச்சாரத்தை முன்நின்று நடாத்தினார். 1937ஆம் ஆண்டு சென்னை மாநில முதல்வராக இருந்த ராஜாஜி சேலம் மாவட்டத்தில் முதல்முதலாக மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வந்தார். ராஜாஜியின் “திக்கற்ற பார்வதி” மதுவின் கொடுமையை எடுத்துரைத்த சிறுகதையாகும். தன் ஊதியம் முழுவதையும் மதுவுக்கு செலவிடுவதால் அவன் மனைவி அடையும் துன்பநிலையை டி.பி.ராமசாமியின் காத்தான் சிறுகதையும் கணவனின் குடிப்பழகத்தால் சொந்த வீட்டை இழந்து சுடுகாட்டில் வாழ்வதைச் சித்திரிக்கும் புதுமைபித்தனின் “காலனும் கிழவியும்” முதலான சிறுகதைகள் குடியினால் விளையும் தீமை களைக் கூறுகின்றன.
ஆரம்ப காலச் சிறுகதைகளில் கட்டுரைப் போக் கான கருத்து வீச்சுக்கள் அதிகமாகவும் கலையம்சம் குறைவாகவும் காணப்படுகின்றன குறிப்பாக ராஜாஜியின் கதைகள் நீதி, உபதேசங்களை மக்களுக்கு எடுத்துரைக் கும் பாங்கில் எழுதப்பட்ட சிறுகதைகள் ஆகும். “ரத்தினம் பிள்ளையின் துறவு” என்ற சிறுகதை முப்பது ஆண்டுகள் நேர்மையாகவும் சாமார்த்தியமாகவும் அரசாங்கத்துக்கு உழைத்த புருஷோத்தம நாயுடுவை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதையாகும். இவருடைய பிறிதொரு சிறுகதையான “முகுந்தன்” சிறுகதை தீண்டாமையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டதாகும். மாரி என்ற ஒடுக்கப்பட்டவனுக்கு தங்க இடம் கொடுத்தமைக்காக ஊராரால் ஒதுக்கப்படும் முகுந்தனின் வாழ்வை இச்சிறு கதை கூறிநிற்கிறது. குடியின் தீமையை விளக்க ராஜாஜி யால் எழுதப்பட்ட சிறுகதையே “திக்கற்ற பார்வதி” ராஜாஜி அறத்தையும் நீதிப்போதனையும் மக்கள் மனதில் ஊட்டி வளர்ப்பதற்காகவே சிறுகதைகளை எழுதினார். இதுபோல அறத்தை வலியுறுத்தும் பி.எஸ்.ரங்கநாதனின் “வாழ்க்கை திறவுகோல்” சிறுகதை கணவனை நெறிப் படுத்தி அறிவுரை கூறும் பாங்கில் எழுதப்பட்ட சிறுகதை யாகும்.
பாலுறவுச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு இக்காலச்சிறுகதைகள் படைக்கப்பட்டன. ஆண் பெண்களுக்கிடையிலான உறவுமுறைகளையும் அது சமுதாயத்தோடு கொண்டிருக்கும் இயைபினையும் இக்காலச் சிறுகதைகள் வெளிப்படுத்தி நின்றன. காமத்தையும் காதலையும் அழகியல் தன்மையோடு சித்திரித்தவர் கு.ப.ரா. கு.ப.ராவின் “சிறிது வெளிச்சம்”, “மோகினி மாயை” முதலான சிறுகதைகளும் பாலுறவுச் சிக்கல்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. அழகில்லை என்பதால் கணவனால் ஒதுக்கி விடப்பட்ட பெண் எதிர் வீட்டில் உள்ள ஆடவனோடு சோரம் போய் கணவனைப் பழி வாங்கு வதை எம்.வி.வெங்கட்ராமின் “தொடரும் நிழல்” சிறுகதை எடுத்துரைக்கிறது. பி.ஆர்.ராஜமைய்யரின் “தண்டனை உண்டா”, காமாஷியின் “ஜ்வாலை” முத லான சிறுகதைகளும் பாலியல் சிக்கல் களை சித்திரிக்கும் சிறுகதைகளே ஆகும். காமத்தின் கனபரிமாணத்தையும் அதன் ஆற்றலையும் புதுமைப்பித்தனின் “விபரீத ஆசை”, கோ.த.சண்முகசுந்தரத்தின் “நண்பனின் மனைவி”, ப.ஸ்ரீனிவாசனின் “காமுகன்” முதலான சிறுகதைகள் எடுத்துரைக்கின்றன.
1930-1940களில் “மணிக்கொடி” சஞ்சிகை வெளி வந்தது. இக்காலத்தையே மணிக்கொடி காலம் என்பர். மணிக்கொடி இதழ் சீனிவாசனையும் டி.எஸ்.சொக்க லிங்கத்தையும் வ.ராவையும் பி.எஸ். ராமையாவையும், ஆசிரியராகக் கொண்டு சிறுகதைகளுக்கான இதழாக 1939வரை வெளிவந்தது.நவீன இலக்கியச் சிறுகதையின் பரிசோதனைக்களமாக மணிக்கொடி விளங்கியது. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜ கோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), பி.எஸ். ராமையா, மௌனி (எஸ்.மணி). கி.ரா.ந.சிதம்பர சுப்பிரமணியம், ஆர்.சண்முக சுந்தரம், எம்.வி.வெங்கட்ராம், சி.அ. செல்லப்பா, பி.எம். கண்ணன், லா.ச.ராமாமிர்தம், க.நா. சுப்பிரமணியம் என்போர் மணிக்கொடி எழுத்தாளராகப் பரிணமித்தனர். மணிக்கொடியின் மூலவர்களில் ஒருவரான புதமைப் பித்தன் வலுவும் வேகமும் கொண்ட புதுப் புதுச் சொல்லாட்சிகளைக் கொண்டு சமுதாயத்தின் உண்மை களை, ஆழமும், பரப்பும் கொண்ட சிறுகதைகளாகப் படைத்தார். மணிக்கொடி எழுத்தாளர்களுள் புதமைப் பித்தன் முதன்மையானவர். அவர் எழுதிய சுமார் 100 சிறு கதைகள் மற்றும் அவர் மொழிபெயர்த்த உலகச் சிறு கதைகள் தமிழில் சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை முழுமைப்படுத்தின. அடிமட்ட மக்களின் வேதனைகளை நகைச்சுவையோடு விளக்கும் சிறுகதைகளை புதமைப் பித்தன் எழுதினார். புதுமைபித்தனின் சிறுகதைகளை கரு.முத்தையா “தனிமனித உணர்வுகளை அடிப்படை யாகக் கொண்ட கதைகள், தத்துவங்களை அடிப்படை யாகக் கொண்ட கதைகள், சமுதாயச் சிக்கலை மையமிட்ட கதைகள்,காதலைக் கருவாகக் கொண்ட கதைகள், நகர வாழ்க்கையின் போலித் தன்மைகளை வெளிக்காட்டும் கதைகள், கேலி, கிண்டல் இவற்றைக் கருவாகக் கொண்ட கதைகள், பேய், பிசாசு, வேதாளம் இவற்றை மையமிட்ட கதைகள், வறுமையைக் கருவாகக் கொண்ட கதைகள்” என்று வகைப்படுத்துவார்.
வறுமையுடனும் வலியுடனும் போராடிக்கொண்டு வாழ்க்கை நடாத்தும் ஒரு ஏழை எழுத்தாளனான முரக தாசரின் ஒரு நாள் பொழுதினை நகைச்சுவையுடனும் உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் சிறுகதையே ஒரு நாள் கழிந்தது சிறுகதை.ரயில் தண்டவாளம் ஓரமாய் அமைந்து இருக்கும் சேரியை அடிப்படையாகக் கொண்டு புதுமைப் பித்தனால் படைக்கப்பட்ட சிறுகதையே பொன்னகரம். பொன்னகரத்து குடிசைவாசியான கூலித் தொழிலாளியான அம்மாளு குடித்து விட்டு வண்டியோட்டி பலந்த காயம் கண்ட கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற பணம் இல்லாததால் தன்னை விற்று அவ்வாசையை நிறைவேற்று கிறாள். கற்பு என்பது பதிவிரதா தர்மம் என்பதை புதுமைப் பித்தன் இச்சிறுகதை வாயிலாக 1930களில் வெளிப்படுத்தியது ஆச்சர்யம் கூடிய உண்மையாகும். புதமைப் பித்தனின் கதைகளிலே மிகுந்த துயரம் நிறைந்த செல்லம்மாள் சிறுகதை கணவன் மனைவியிடையே நிகழும் பாசாங்கற்ற அன்பின் வெளிபாட்டை கூறிநிற்கிறது. தீராத நோயினால் அவதியுறும் செல்லம்மாள் தன் சாவை எதிர்நோக்கும் ஒரு நாளில் தன் கணவர் பிரம்மநாயகம் பிள்ளையுடன் செலவிடும் ஒருநாட்பொழுதை இக்கதை உணர்வு பூர்வமாகச் சித்திரிக்கிறது. பெரு நகரம் ஒன்றின் சாலை ஓரத்தில் இறந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரக் கிழவனின் கடைசி நிமிடங்களையும், அதை வேடிக்கை பார்க்கும் சிறு பெண் குழந்தைதையின் மனஅவசங்களை யும் சித்தரிக்கும் கதையே மகாமசானம். இயல்பான வாழ்க்கைமுறையை நுட்பமாகச் சித்திரிக்கிறது.
எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி வரும் அறிவியல் சிறுகதையும் புதுமைபித்தன் படைத்துள்ளார். இவருடைய கடவுளும் கந்தசாமி பிள்ளையும் சிறுகதை அறிவியல் நோக்கில் கடவுளின் நடத்தைவாத முறைகளை அணுகுகிறது.
புராணகதைகளுக்கு புதியவடிவத்தை கொடுத்த வர்களில் முக்கியமானவர் புதுமைபித்தன். புதுமைப் பித்தன் அகலிகைக்கு புது வடிவம் கொடுக்க எண்ணி “அகலிகை”, “சாபவிமோசனம்” முதலான சிறுகதைகளை எழுதினார். ‘சாபவிமோசனம்” கதையில், அகலிகையின் புராண வரலாற்றை எடுத்துக் கொண்டு புதுமைப்பித்தன் சமுதாயத்தை விமரிசனம் செய்கிறார். இராமன் கொடுத்த சாபவிமோசனத்தை தேவையில்லை என்று தூக்கி யெறிந்து விட்டு மீண்டும் தன்னைக் கல்லாக்கிக் கொண்ட அகலிகையைப் பற்றிப் பேசும் “சாபவிமோசனம்” சிறுகதை இற்றைவரை பலரால் அதிகம் விமரிசிக்கப்பட்டு வருகிறது. புதுமைப்பித்தனின் புராண, இதிகாச வாசிப்பினைக் காட்டும் பிறிதொரு கதை “மனக்குகை ஓவியங்கள்”. இச் சிறுகதையில் நசிகேதனுக்கும் யமனுக்கு நடக்கும் மரணம் குறித்தான உரையாடல்கள் ஆழமானவை. மரணத்தின் அதிகாரியான யமனை நோக்கி, மரணத்தால் வரையறுக் கப்பட்ட மானிடன் கொள்ளும் மனக் கொந்தளிப்பை இச்சிறுகதை உணர்வு பூர்வமாக விளக்குகிறது. புதமைப் பித்தனைப் போலவே இராமாயணத்தை புதிய கோணத் தில் அணுகியவருள் ஒருவர். பி.எஸ்.ராமையா. இவருடைய “திரிலோகாதிபத்திய ரகசியம்”, “ஜானகிக்காக மாத்திர மல்ல” இருகதைகளும் சீதையின் முற்பிறவிக்கதைகளை எடுத்துரைக்கின்றன. வேதவதியான சீதை இறைவனை அடையத் தவம் செய்து கொண்டுள்ள போது இராவணன் அவளிடம் வம்பு செய்கிறான். அவனை அழிக்கவே சீதை மறுபிறவி எடுக்கிறாள் என்பதை ராமையாவின் “திரிலோகாதிபத்திய ரகசியம்” சிறுகதை சித்திரிக்கிறது. இத போல “ஜானகிக்காக மாத்திரமல்ல” சிறுகதை இறைவன் அரு ளால் எல்லாப் பயங்களையும் வெல்ல லாம் என்பதை இராம, இலக்குமணனுக் கூடாக எடுத்துரைக்கிறார்.
புதுமைப்பித்தன் கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லாம் நாம் அன்றாடம் தரிசிக்கும் நிஜமனிதர்கள். வறுமையின் பிடிக்குள் சிக்குண்டவர்கள். வாழ்க்கையின் துயரில் மூழ்கி உலக வாழ் வின் மீது நம்பிக்கை இழந்து ஏமாற்றம், வெறுப்பு என்பவற்றால் பாதிக்கப் பட்டவர்கள். நண்பர்களை நம்பி மோசம் போனவர்கள்.காதலால் தோல்வியடைந்தவர்கள் சமூகத்தை எதிர்க்கத் துணிவில்லாத வாயில்லாப் பூச்சிகள். சமூகத்தை விமர்சிப்பவர் கள். சமயப் போர்வையில் உலா வரும் போலிமனிதர்கள். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு மனத்தால் பாதிக்கப் பட்ட விதவைப் பெண்கள்.
மணிக்கொடியில் வெளி வந்த சிறுகதைகள் கதை நிகழ்ச்சிகளை விட மனோபாவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டன. சிட்டி, கு.ப.ராஜகோபாலன் முதலானவர் களின் பெரும்பாலான கிறு கதைகள் இத்தளத்திலேயே எழுதப்பட்டன. பெண்ணின் சித்தத்தை இருளாக்கும் உணர்ச்சிகளையும், கருவாக நின்றுவிட்ட வேட்கைகளையும், வெகுநுட்பமாகவும் எடுத்துரைப்பதில் நிகரற்றவர் கு.ப.ரா. இவரின் கனகாம்பரம், நூர்உன்னிசா, சிறிது வெளிச்சம் முதலான கதைகளில் இதனைக் காணலாம். சிட்டியின் அந்திமந்தாரை சிறுகதையும் பெண்ணின் உள்ளத்தைச் சித்திரிக்கிறது. பெண்மை என்னும் பெரும் சக்தியால் கவரப்பட்டவர் கு.ப.ரா. இதனால் பெண்ணின் உள்ளத் துணர்வுகளை சிறப்பாக சிறுகதைகளில் வெளிப்படுத்திய வர். ஆண் – பெண் உறவுமுறைகளில் மறைமுகமாகவும் நேரடியாக வும் எழும் சிக்கல்களை நடைமுறை வாழ்வில் பெண்மைக்கு இயற்கை தந்துள்ள நிறைகுறைகளை தம் படைப்பில் கலாநேர்த்தியோடு வெளிப்படுத்தியவர் கு.ப.ரா. இவருடைய “மோகினி மாயை” முப்பது வயது கமலத் துக்கும் இருபது வயது பாலுக்கும் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை எடுத்துரைக்கிறது. “சிறிது வெளிச்சம்” சிறுகதை கணவனால் துன்புறுத்தப்பட்ட மனைவி தன் ஏக்கங்கள், சுக துக்கங்களை தன் வீட்டில் குடியிருக்கும் வேற்று ஆடவனிடம் கூறுவதாக அமைகிறது. ஆண் பெண் பரஸ்பர உறவுநிலை கண்ணியமாக கு.ப.ராவின் சிறுகதைகளில் வெளிப்படுகிறது. பெண்ணின் உள்ளத்தில் மறைந்திருக்கும் உணவுர்களை துல்லியமாக வெளிப் படுத்திய “திரைக்குப் பின்” சிறுகதையும் மனித உறவுகளால் வரும் ஆழமான காதலை வெளிப்படுத்து கிறது. மதங்களை கடந்து வெளிப்படும் உண்மைக்காதல் தூய்மையானது. அதில் பாலியல் கவர்ச்சி இல்லை. என்றும் அது இலட்சியங்களால் கட்டுண்டது என்பதை விளக்கும் “நூர் உன்னிசா” சிறுகதையும் அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்த சிறுகதை ஆகும். கு.ப.ரா. பகுத்தறிவுவாதியாகவும் செயற் பட்டவர். சமூகத்தில் புரையேறிப்போன மூடநம்பிக்கைகளை தம்சிறுகதைகளுக் கூடாக கண்டித்தவர். அவ்வகையில் வெளி வந்த சிறுகதைகளே “அர்ச்சனை ரூபாய்”, “தாயாரின் திருப்தி”. “தாயாரின் திருப்தி” சிறுகதையில் சுந்தரேசய்யரின் தாயாருக் குச் சிரார்த்தம் வருகிறது வாயா சத்துக்குப் பிண்டம்கூட வைக்கவில்லை. வாசலில் கிழவி ஒருத்தி பசியால் துடித்துக் கொண்டு இருக்கிறாள். சுந்தரேசய்யர் பிண்டத்தில் ஒரு உருண்டையை எடுத்து கலசத்தில் கரைத்து கிழவி யின் குவளையிலல் ஊற்றுகின்றார். பிராமணர் கோபித்துக் கொண்டு வெளியேறுகின்றனர். இப்படி செய்து விட்டீர் களே என மனைவி பதறுகிறாள். “என்னடி அசடு! வாசலில் பார் அம்மா உரு வெடுத்து வந்திருப்பதை” என்கிறார். உண்மையான தானம் எது வென்பதை இச்சிறுகதை வெளிப்படுத்தி நிற்கிறது.
நிமோனியாவால் பீடிக்கப்பட்ட தன் மகன் குணமடைய வேண்டுதல் செய்து இறைவனுக்கு முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாயை தோட்டிக்கு போட்டுவிடும் குடும்பத் தலைவரின் உள்ளத்தை எடுத்துரைக்கும் “அர்ச் சனை ரூபாய்” சிறுகதையும் உண்மையான பக்தியின் வெளிப்பாட்டை கூறிநிற்கிறது. கு.ப.ரா. தம் சிறுகதை களில் ஆராவாரமின்றி நிதானமாக நிர்தாட்சண்யமற்று வைக்கும் முடிவுகள் சிறுகதையை உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன.
மௌனி சிறுகதைகளில் அகவுலகை உணர்வு பூர்வமாகச் சித்திரித்தவர். அதிலேயே வாழ்ந்தவர். அதிலேயே தோய்ந்து அதற்குள்ளேயே உன்ைறவர். இவ்வுலகு ஆழமானது. உண்மைத்தன்மை கொண்டது. மௌனி மனதின் ஆழ்போக்குகளை நடப்பியல்புகளை தம் சிறுகதைகளில் பரிபூரணமாக சித்திரித்தவர். நிகழ்ச்சி களைச் சிக்கற்படுத்தி மனித நிலைமைகளை சிக்கனச் சொற்களிலே அகண்டாரமாகக் காட்டிவிடும் ஆற்றல் மிக்கவர். அவருடைய கதை மாந்தர்கள் உணர்வுநிலைப் பட்டவர்கள். காதல்தோல்வி, பிரிவு, விரக்தி, வெறுப்பு, சலிப்பு ஆகியவற்றையே தம்சிறுகதைகளில் அதிகம் கையாண்டவர். அவனுக்கும் அவளுக்கும் இடையில் நடந்த இரண்டு சந்திப்புக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட “அழியாச்சுடர்”, மனைவியை இழந்த ஒருவனுடைய சோகத்தைப் பேசும் “காதல்சாலை” முதலிய சிறுகதைகளிலும் இப்பண்புகள் ஓங்கி நிற்ப தனைக் காணலாம். மௌனியின் சிறுகதைகளில் பிரிவின் துயரம் துல்லியமாக வெளிப்படுத்தப்படுகிறது. மனைவி யின் இழப்பினால் ஏற்படும் பிரிவை மௌனி தன் பிறிதொரு கதையான “மாறுதல்” சிறுகதையிலும் சித்திரித்துள்ளார். பெண்பார்க்கச் சென்ற இடத்தில் தன் வருங்கால மனைவியை இழந்த துயரத்தை “பிரபஞ்சகானம்” எடுத் துரைக்கிறது. இச்சிறுகதை உடலியல் தேவைக்கு அப்பாற் பட்ட காதலின் மகத்துவத்தை நுண்ணுணர்வுத் தளத்தில் எடுத்துரைக்கிறது.
சிறுகதைகளில் உருவத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுத்தவர்களில் ஒருவரான ந.பிச்சமூர்த்தி ஆழ்ந்த அனுபவங்களை, தரிசனம் நிறைந்த தத்துவச் சரடுகளில், உவகை மிகுந்த சொற்றொடர்கள் நிறைந்த நடைகளில் சிறுகதைகளை வெளியிட்டவர். இவருடைய முதற் சிறுகதையான “முள்ளும் ரோஸாவும்” உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் சிறந்து விளங்கிய சிறுகதையாகும். வானம்பாடி, ஈசுவர லீலை முதலிய சிறுகதைகள் தத்துவப் பாங்கில் எழுதப்பட்ட சிறுகதைகளாகும்.
இவருடைய “தாய்” சிறு கதை உணர்ச்சிக்கு முக்கியத்து வம் கொடுத்து படைக்கப்பட்ட சிறுகதையாகும். இவருடைய “மண்ணாசை” என்ற சிறுகதை வீடொன்றின் ஆக்கிரமிப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இச்சிறுகதையில் ஆக்கிரமிப்பின் குறியீடாக நாய், குளவி முதலானவை எடுத்துக் கட்டப்படுகின்றன. உளவெழுச்சி யில் விளையும் இக்கலைகளை நுட்பமாக தம் சிறுகதை களில் வடித்தவர்களுள் ஒருவர் ந.பிச்சமூர்த்தி. மனித நடத்தையாலும் கற்பனைத் திறனாலும் நுட்பமாகச் செதுக்கப்படும் கலையை பிச்சமூர்த்தியின் ஆரம்பகாலச் சிறுகதைகளில் தரிசிக்கலாம். கலை யுணர்வின் வெளிப் பாட்டை உள்ளுணர்வின் தடத்தில் சித்திரித்த சிறுகதை “வானம்பாடி”. இதுபோல கலையின் சிறப்பினை குறிப்பாக இசையின் சிறப்பினை மௌனியின் “பிரபஞ்சகானம்” மற்றும் கல்கியின் “வீணை பவானி” முதலான சிறுகதை களும் வெளிப்படுத்தி நிற்கின்றன. தேவதாசிக்குலத்தில் பிறந்த இசைமேதையான பவானி தன் கணவர் இரயில் விபத்தில் இறந்து விடத் தன் உயிரை மாய்த்துக் கொள் கிறாள் என்பதனைக் கருபொருளாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதையே “வீணைபவானி” ஆகும்.
மணிக்கொடி இதழில் அதிகளவில் பெண்கள் எழுதினார்கள். மணிக்கொடிப் சிற்றிதழின் ஆறாவது இதழ் (ஜீன் 9 இதழ்) ஸ்திரீகள் இதழாக வெளிவந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமதி சேதுஅம்மாள், கோதைநாயகி அம்மாள், வேங்கடலஷ்மி, ஸரோஜா ராமமூர்த்தி, கமலா விருத்தாசலம், குமுதினி, ஜயலட்சுமி ஸ்ரீனிவாசன், விசாலாஷி எனப் பலர் இக்கால கட்டத்தில் சிறுகதைகளை எழுதினர்.
இக்கால கட்டத் தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பா லானோர். கல்லூரிகளில் படித்தவர்கள் தேசிய உணர்ச்சி மிஞ்சியவர்கள் பழமையின் எதிரிகள் வாழ்வின் உண்மை களை நேருக்கு நேர் நின்று தரிசித்து, அவற்றை விமர்சன அடிப்படையில் சர்வதேச இலக்கியத்தின் தரத்திற்குக் கலையழகுடன் தமிழில் சிறுகதை எழுதவேண்டுமெனத் துடித்தவர்கள். இவர்களுடைய சிறுகதைகளில் இயல்பா கவே தத்துவப் போக்கு, சமுதாயச் சிந்தனைகள், விதியின் ஆற்றல், சாவின் அச்சம், கலையின் நிலைபேறு, தீண்டாமை ஒழிப்பு, கிராமச் சீர்திருத்தம், விதவை விவாகம், ஒத்துழையாமை இயக்கம், மேலை இலக்கிய மரபையும் கீழை இலக்கிய மரபையும் கலந்து எழுதுதல், மனித மன உணர்வுகளை வெளிப்படுத்தல் முதலான பண்புகள் வெளிப்பட்டன.
இச்சிறுகதைகளில் வடிவம் பற்றிய உணர்வு இருந்தது. படித்த இளைஞர்கள் பலர் மேல்நாட்டு உத்தி களை உள்வாங்கி எழுதினர். அக்கதை களில் பெரும்பாலானவை மனித உறவு களையும் தமிழ் பண்பாட்டு கலாசாரப் பின்னணிகளையும் சித்திரித்தன தமிழில் சிறு கதைகளின் தோற்றமானது புதிய சிந்தனைகளை உள் வாங்குவதற்கும் கலை நேர்த்திமிக்க புதிய படைப்புக்களை உருவாக்கவும் துணை செய்தன எனலாம்..
– சி.ரமேஷ், மாசி 2019, ஜீவநதி, 12ஆவது ஆண்டு மலர்.