வீடு
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 440
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘இணைப்பாளர் இளங்கோ இருக்கிறாரா?’
ஏரியாப் பொறுப்பாளர்.
‘ஓ.உள்ளை இருக்கிறார் போய்ப் பார்தம்பி’.
தாய்மார்கள் குழந்தைகளது வரவைப் பதிவு செய்து கொண்டிருக்கின்ற பவானி கூறுகின்றாள்.
ஏரியாப் பொறுப்பாளர் உள்ளே செல்கின்றார்.
வாரும் தம்பி உட்காரும் பௌவியமாகக் கூறுகின்றார் இணைப்பாளர்.
‘இந்த வீடு தேவைப்படுகுது’.
எடுத்த எடுப்பிலே கூறுகின்றார் ஏரியாப் பொறுப்பாளர்.
‘எந்த வீடு?’
வியப்புடன் இணைப்பாளர்.
‘என்ன நக்கலா? இந்த வீடுதான்’
முறாய்ப்புடன் பொறுப்பாளர்.
‘இந்த வீட்டிலை சத்துணவு நிலையம் நடக்குது தம்பி ‘
‘அதுக்கென்ன மூண்டு நாளைக்குத்தான்.’
‘இல்லை தம்பி. மாதாமாதம் கற்பிணித்தாய்மாருக்கு கிளினிக்’கும் இஞ்சைதான் நடக்குது. அதோடை ஆரம்ப சுகாதார நிலையமும் நடக்குது. ‘
‘எல்லாம் நடக்கட்டும் நல்லதுதானே மூண்டு நாளைக்குத் தானே. பிறகு நீங்கள் எல்லாத்தையும் நல்லாய் நடத்துங் கோவன்’.
‘மூண்டு நாளைக்கெண்டுதான் உவையள் சொல்லு வினை. வந்த பிறகு வீடு அவைக்கு நிரந்தரம். இதுதான் அவையின்ரை தந்திரோபாயம் உப்பிடி எத்தினை பேற்றை மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வீடுகளை அவை எடுத்திருக்கினம்.
இளங்கோ தனக்குத்தானே கூறிக் கொள்கின்றான்.
‘என்ன யோசிக்கிறியள்?’
‘தம்பி இந்த வீடு எதுக்கு? ‘
‘தற்கொலை செய்தாரே அந்த தம்பிமுத்து அவற்றை பிரேதம் வைக்க’.
‘இப்ப பிரேதம் ஒரு வீட்டிலைதானே வைச்சிருக்கினை. அங்கை மூண்டு நாளைக்கும் வைச்சிருககலாம் தானே?’
‘அந்த பிரேதம் கோயில் வீதிக்குப் பக்கத்திலையுள்ள ஒரு வீட்டிலைதான் கிடக்கு’
‘அங்கை மூண்டு நாளும் வைச்சிருக்கலாம் தானே?’
‘கோயில் வீதிக்குப் பக்கத்திலை பிரேதம் கிடக்கேக்கை பூசை நடத்தக்கூடாதாம். கோயில் குருக்கள் சொல்லுறார். ‘நேற்று இராப் பூசை நடத்தேல்லை. இண்டைக்கு உதயப் பூசையும் நடத்தேல்லை பிரேதத்தை உடனை வேறை எங்கை யாவது கொண்டு போங்கோ. அப்பதான் கோயிலை புண்ணிய தானம் செய்துபோட்டு மத்தியானப் பூசை நடத்தலாம் எண்டு குருக்கள் அந்தரப்படுத்திறார்.
ஏரியாப் பொறுப்பாளர்.
‘அப்ப தம்பிமுத்தற்றை சொந்த வீட்டிலையே அவற்றை பிரேதத்தை கொண்டுபோய் வைக்கலாம் தானே?’
‘அதெப்படி? அங்கை எங்கடை வைத்தியக் கல்லூரி நடக்குதே, மடைக்கதை சொல்லுறாய்’
கோபமாய் கத்துகிறார் பொறுப்பாளர் வசந்தன்.
‘தம்பி கோபப்படாதை. உங்கடை. வைத்தியக் கல் லூரிக்கு முன்புறமாய்த்தான் தம்பிமுத்தற்றை வீடு கிடக்குக. அது புறம்போக்காய்த்தான் கிடக்கு. அந்த வீட்டிலை வகுப்புகள் நடக்கிறேல்லை. அதை நீங்கள் உபசரிப்பு மண்டபமாய்த்தான் பாவிக்கிறியள். அங்கை பிரேதத்தை வைக்கலாம் மூண்டு நாள் தானே?’
நிதானமாய் கூறுகின்றார் இளங்கோ.
தம்பிமுத்தர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு அது. நீங்கள் அவரை வலோற்காரமாய் வெளியேற்றும் வரை அவர் வாழ்ந்த பரம்பரை மண்வீடு அது. அங்கை வைச்சுத்தான் அவற்றை பிரேதம் எடுக்க வேணும். அதுதான் முறை.தம்பிமுத்தற்றை ஆசையும் அதுதான்.
‘ஏழெட்டு வரியத்துக்கு முந்தியே தம்பிமுத்தர் தன்ரை வளவுக்கை ஒரு கல்வீடு கட்டினார். ஆனால் அவர் அந்த புதிய வீட்டிலை ஒரு நாளும் படுத்தெழும்பியதில்லை. அவற்றை மனைவியும் பிள்ளையளும்தான் கல்வீட்டிலை படுக்கிறவை.’
‘அப்ப அவர் எங்கை படுக்கிறவர்?’ பொறுப்பாளர்.
‘தம்பிமுத்தர் தன்ரை பரம்பரை வீட்டிலை, தன்ரை பாட்டனாரும் தகப்பனாரும் படுத்தெழும்பின வேப்பம் வாங்கிலில்தான் படுத்தெழும்பினார்’.
மூன்று நாட்களுக்கு முன்னர் தன்ரை பரம்பரை வீட்டிலை யிருந்து அவர் வலோற்காரமாய் வெளியேற்றப்பட்டார். அதன் பின் அவர் ஒருவருடனும் கதைப்பதில்லை. அவர் தன்ரை வாழைத்தோட்டத்திலுள்ள கொட்டிலில்தான் இருந்தார்.
அவரது குடும்பம் கந்தசாமி கோயில் மேற்கு வீதியிலுள்ள ஒரு வீட்டில் வசிக்கிறது.
கந்தசாமி கோயில் மேற்கு வீதியில் பாலர் பகல் விடுதி.
வடமேற்குப் புறமாய் அரச ஆயுர்வேத வைத்தியசாலை.
நடுவில் இயக்க முகாம்.
அண்மையில் விமானக்குண்டு வீச்சு நடந்தது.
அதிர்ஷ்டவசமாக அன்று ஞாயிற்றுக்கிழமை. பாலர். நிலையம் விடுமுறை. பிள்ளைகளில்லை.
பகல் பத்து மணி.
குண்டு வீச்சு
பாலர் நிலையத்தின் ஒரு பகுதி பாதிப்பு.
மேற்கு வீதியிலுள்ள நான்கு வீடுகளில் ஒன்று முற்றாக சேதம். வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பு பங்கருக்குள் இருந்த படியால் உயிர் தப்பிச்சினம்.
அடுத்த மூண்டு வீடுகளிலுமுள்ளவர்கள் எல்லோரும் வேறு இடத்துக்கு போய்விட்டார்கள்.
அந்த மூண்டு வீடுகளில் ஒன்றில்தான் தம்பிமுத்தற்றை குடும்பம் தங்கியிருக்கின்றது.
தன் சொந்த வீட்டிலிருந்து வலோற்காரமாய் வெளி யேற்றப்பட்ட தம்பிமுத்தர் மூன்று நாட்களாய் ஒருவருடனும் பேச்சல் பறச்சலில்லை. சகலதையும் பறிகொடுத்து விட்டதான உணர்வு.
அவர் நடைப்பிணமாய் திரிகின்றார். மூன்றாம் நாள் மதியவேளை.
வாழைத்தோட்டத்திலுள்ள கொட்டில் வாசலில் தம்பி முத்தர்.
மனைவி அவருக்கு சோற்றைக் கொடுத்திருக்கின்றாள்.
தம்பிமுத்தர் ஒரு கவளம் சோற்றை வாயில் வைக்கின்றார்.
சோழகக் காற்று சுழன்றடிக்கிறது. வாழையிலையிலுள்ள சோற்றில் மண்.
சோற்றைத் தூக்கி வீசிவிட்டு வெளியேறுகின்றார் தம்பி முத்தர்.
சிறிது நேரந்தான்.
கொட்டிலின் பின்புறத்தில் ஓங்காளிப்புச் சத்தம்
மனைவி விசாலாட்சி பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று பார்க்கின்றாள்.
சாய்ந்தபடியே கிடக்கின்றார் தம்பிமுத்தர்.
வாயில் வெண்நுரை.
‘பொலிடோல் ‘போத்தல் பக்கத்தில்.
மனைவியின் மரண ஓலம்.
தம்பிமுத்தரின் பிரேதம் கந்தசாமி கோயில் மேற்கு வீதியிலுள்ள வீட்டில்.
நேற்று மதியத்திலிருந்து கோயில் பூசை நடக்கவில்லை. பிரேதத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி. சத்துணவு நிலையம் நடக்கின்ற வீட்டில் பிரேதத்தை வைப்பதற்கு ஏரியாப் பொறுப்பாளர் வசந்தன் முயல்வு.
இணைப்பாளர் இளங்கோ சத்துணவு நிலையத்தை விட்டுக் கொடுக்க மறுப்பு.
‘ஒரு மணித்தியாலத்தில் உங்கடை சாமான்கள் எல்லாத் தையும் அப்புறப்படுத்துங்கோ. இல்லாட்டி நாங்கள் அதுகளை வெளியே எடுத்துப் போடுவோம்’. பொறுப்பாளர் மிரட்டல்.
‘தம்பி, அவசரப்படாதை.வேறை இடத்துக்கு நிலை யத்தை மாத்திறதுக்கு சம்மதமா எண்டு இஞ்சை சாப்பாடு எடுக்கிற தாய்மாரைக் கேட்டுப் பாப்பம் அவை சம்மதம் எண்டால் நாங்கள் இடம்மாறத் தயார்’
‘சரி, அவையளை இப்பவே கேப்பம்’ பொறுப்பாளர் அவசரம்
‘தம்பி இப்ப பதினொரு மணியாச்சு. தாய்மாரும் குழந்தைகளும் சாப்பிடுகிற நேரம். அவை சாப்பிட்டு முடிஞ் சதும் கூட்டத்தை வைப்பம். அவையின்ரை விருப்பத்தைக் கேப்பம். அவை ஓமெண்டால் நாங்கள் வேறை இடத்துக்கு போறம்
‘எவ்வளவு நேரம் செல்லும்?’ பொறுப்பாளர்.
‘ஒரு மணி நேரமாகும். நீர் போட்டு வாரும்’
தாய்மாரும் பிள்ளைகளும்இலைக்கஞ்சி குடிக்கின்றனர்.
சத்துணவு நிலையத் தொண்டர்கள் மூவரும் ஊரின் பல பகுதிகளுக்கு சைக்கிள்களில் பறக்கின்றனர்.
ஊர் கூடுகின்றது.
ஏரியாப் பொறுப்பாளரும் வந்துவிட்டார்.
கூட்டம் ஆரம்பம்.
நிலையத்தை மாற்றுவதிலுள்ள சிக்கல்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றார் இணைப்பாளர்.
ஏரியாப் பொறுப்பாளரும் தனது நிலைப்பாட்டை கூறுகின்றார்.
‘இந்த இடத்திலிருந்து சத்துணவு நிலையத்தை மாற்றக் கூடாது’
தாய்மாரின் கோபித்த குரல்.
‘ஏன் மாத்தக்கூடாது?’
பொறுப்பாளர்.
‘மூண்டு வரியமாய் இஞ்சைதான் நாங்கள் சாப்பாடு எடுத்துவாறம். இது எங்களுக்கு வசதியான வீடு.’
‘ஏன் வேறை வீட்டுக்குப் போனாலென்ன?’
‘இந்த வீட்டிலை சாப்பாட்டுச் சாமான்கள் வைக்க ஒரு பெரிய அறை. சாப்பாடு சமைக்க வசதியுள்ள குசினி. மருந்துகள் வைக்க சுவர் அலுமாரியுள்ள ஒரு அறை, தாய்மார்களையும் பிள்ளைகளையும் டரக்டர் பரிசோதிக்க ஒரு அறை தாய்மார்களுக்கு சுகாதாரக் கூட்டங்கள் நடத்த விசாலமான மண்டபம். இப்பிடி வசதியாக உள்ள வீடு வேறை இடத்தில் இல்லை’.
இணைப்பாளர் விளக்கிக் கூறுகின்றார்.
‘இந்த வசதியள் மாத்திரமில்லை. இந்த வீட்டுச் சொந்தக்காரர் மூண்டு வரியங்களுக்கு முன்னமே கனடாவுக்கு போட்டார். இந்த வீட்டிலை சத்துணவு நிலையமும் சுகாதார நிலையமும் தொடர்ந்து நடத்திறதுக்கு தங்களுக்கு பூரண சம்மதம் எண்டு எழுதிக் குடுத்திட்டும் போயிருக்கிறார்’.
‘மூண்டு நாளைக்குத் தானே பிறகு நீங்கள் இஞ்சை திரும்பி வந்திடலாம்’.
‘தம்பி துவக்கத்திலை உப்பிடித்தான் நீங்கள் சொல்லு வியள். பிறகு நீங்கள் நினைச்சதைச் சாதிப்பிரியள். உப்பிடி எத்தினை பேற்றை வீடுகளை நீங்கள் எடுத்தியள்? அந்த வீடுகளின்ரை சொந்தக்காறர் இப்ப பிறத்தியாற்றை வீடுகளிலை ஒண்டுக்குடித்தனம் நடத்துதகள் அவைக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் கஷ்டங்கள். உங்களுக்கு நாங்கள் எவ்வளவோ உதவியள் செய்திட்டம். அப்பிடியிருந்தும் நீங்கள் எங்களை ஏன் தொடர்ந்து தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறயள்?’
நாகம்மாப் பாட்டி ஆதங்கத்துடன் கேட்கின்றா.
‘தம்பி. நாங்கள் உங்களுக்கு பச்சையாய்த் தந்தம் சமச்சதாய்த் தந்தம். அதுவும் நாங்கள் ஆமிக்குப் பயந்து பயந்து அவங்களுக்குத் தெரியாமலே, எவ்வளவோ உங்களுக்கு செய்து வாறம். நீங்கள் என்னடாவெண்டால்….’
விசாலாட்சி மாமி மனவேதனையுடன் கூறுகின்றார்.
‘உங்களுக்கு நாங்கள் பத்தாயிரம், பத்தாயிரமாய் பணமும் தந்தம். பவுணும் தந்தம்’
பர்வதம் பாட்டி.
‘அது மாத்திரமே எங்கடை பிள்ளையளையும் தந்தம். ஆனா நீங்கள்?’
‘உங்கடை பண்ணையளுக்கு நாங்கள் பயிர்செய்த நிலங்களை புடுங்கியெடுத்தியள். நாங்கள் அரைகுறைப் பட்டினியோடை காலம்தள்ளினம்’.
செல்லையா குமுறுல்.
‘அதுமாத்திரமே. எத்தனை பேர்குடியிருந்த வீடுகளையும் பறிச்சியள்’.
‘எங்கடை ஊரின் வடக்குப் பக்கத்திலை ஏழு வீடுகளை ஒண்டாச் சேத்து உங்கடை மருத்துவக் கல்லூரிக்கெண்டு பறிச்செடுத்தியள்’.
கந்தையா கூறுகிறார்.
‘அது மாத்திரமே?’
‘தனித்தனி வீடுகளையும் தொட்டந் தொட்டமாய்ப் பறிச்சியள்.
‘எங்கடை ஊரின் தெற்குப் பக்கத்திலை ஐஞ்சு வீடுகளை ஒண்டாய் எடுத்தியள். அங்கை உங்கடை சட்டக் கல்லூரி நடக்குது’.
‘இப்ப எங்கடை சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதியள். இதிலும் பாக்க நீங்கள் எங்களை ஒரேடியாய் வன்னிக் காட்டுக்கே கலச்சுப்போட்டு நீங்களும் உங்கடை ஆக்களும் சொகுசாய் இஞ்சைஇருங்கோவன்’.
அன்னமுத்தாச்சி குமுறிக் கூறுகின்றா.
‘இந்த போசாக்கு நிலையத்தை இடம் மாத்திறதுக்கு நாங்கள் சம்மதமில்லை. இந்த வீட்டைத் தர முடியாது. நீங்கள் செய்யிறதைச் செய்யுங்கோ’.
அங்கு கூடி நிற்கின்ற மக்கள் ஏகோபித்த குரலில் கூறுகின்றனர்.
‘இல்லை கண்டிப்பாய் இந்த வீட்டிலைதான் பிரேதத்தை வைக்கப்போறம். இப்பவே சாமான்களை எடுங்கோ’
‘முடியாது. வீடு தரமுடியாது. சாமான்களையும் நாங்கள் எடுக்கமாட்டம். நீங்கள் செய்யிறதைச் செய்யுங்கோ. இந்த விசயத்துக்கு நாங்கள் உங்கடை மேலிடத்துக்கும் போகத்தயார்’.
தாய்மார்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.
‘தம்பிமுத்தற்றை சொந்த வீடு கிடக்கு. அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த பரம்பரை மண்வீடு கிடக்கு அந்த வீட்டிலை வைச்சுத்தான் அவற்றை பிரேதம் எடுக்க வேணும் அதுதான் நல்லதும் கூட’
‘நீங்கள் நினைச்சபடி நடக்கேலாது. இரண்டு மணித்தியாலாத்துக்கை இந்த வீட்டை விட்டிட வேணும் இல்லாட்டி நாங்கள் உதுக்கை கிடக்கிற சாமான்களை எடுத்து றோட்டிலை போட்டிட்டு பிரேதத்தை இஞ்சை கொண்டுவந்து வைப்பம்’
மக்கள் மத்தியில் கொந்தளிப்பு.
‘எங்க ஏலுமெண்டால் செய்யுங்கோ பாப்பம்’
வேலுப்பிள்ளை சவால் விடுகின்றார்.
‘பிள்ளை இந்திரா!கதவைப் பூட்டு‘
கந்தசாமி.
‘வாங்கோ எல்லாரும். தம்பிமுத்தற்றை பிரேதத்தை எடுத்துக் கொண்டுபோய் அவற்றை சொந்த பரம்பரை வீட்டிலை வைப்பம்’.
வேலுப்பிள்ளை வன்மத்துடன் கத்துகிறார்.
பொறுப்பாளர் தன் மோட்டார் சைக்கிளை விசுக் கொண்டு எடுத்துக கொண்டுஅவ்விடத்தை விட்டகல்கின்றார்.
மக்கள் எல்லோரும் ஒண்டுதிரண்டு செல்கின்றனர்.
தம்பிமுத்தற்றை பிரேதம் அவற்றை பரம்பரை வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
தம்பிமுத்தற்றை பாட்டனாரும், தகப்பனாரும் படுத் தெழும்பிய வேப்பம் வாங்கில் பிரேதம் வைக்கப்படுகின்றது.
– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |