மண்ணில் தெரியுதொரு தோற்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 4,185 
 
 

(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம் – 5

சரஸ்வதி எதிர்பார்த்த நேரம் பிந்தியே ஜானகி யும் சிவலிங்கமும் காரில் வந்து இறங்கினார்கள்.

ஜானகியைக் கண்டவுடன் பரவசமாகத் துடித்த சரஸ்வதி, “அவரும் ஜானகியும் வந்தாச்சு. புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து வாருங்கோ” என்று அறையை நோக்கி சிவபாலனிடம் கூறிவிட்டு விறாந்தையில் வந்து நின்று அக்களித்து வரவேற்றாள்.

”இன்ன றெயினில் புறப்படுகிறோம் என்று ஒரு பதில் தந்தியாவது கொடுத்திருக்க வேண்டாமா?” என்று ஆனந்தம் பொங்க செல்லமாகக் கடிந்து கொண்ட சரஸ்வதி, “சரி. உடுப்பை மாத்திக் கொண்டு ‘பாத்றூம்’ போய் கை, கால், முகத்தை அலம்பிவிட்டு வாருங்கோ” என்றாள்.

அதே வீச்சாக மூன்றாம் அறையை எட்டிப் பார்த்தாள். அப்பா உடல் அயர்ந்து நன்றாகத் தூங்கிவிட்டார்.

வீடு சோபை இழந்து வெறிச்சோடியிருப்பதுபோல் ஜானகிக்குப் புலப்பட்டது.

‘சரஸ்வதி ‘திடீ’ரென்று ஏன் அழைத்தாள்?’

ஜானகி வலுவாகச் சிந்தித்தாள்.

சாப்பாட்டுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்த சரஸ்வதியிடம் ஜானகி மெல்ல அணுகி, அவசரமாகத் தந்தி கொடுத்தாயே, “என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

“எல்லாம் விடிந்த பின் சொல்கிறேன். இப்போ சாப்பாட்டைக் கவனி” என்றாள் சரஸ்வதி.

ஜானகியின் மனசில் பிரளயம் எடுத்தது. அவளுக்கு விரிவுரையாளர் இராமசாமியைப் பார்க்க மனம் துடித்தது. ஆவலோடு கேட்டாள்:

‘சரஸ்வதி, உனது அப்பா எங்கே?”

”அவர் இவ்வளவு நேரமாக உங்களை எதிர்பார்த்திருந்தார். வழக்கமான நேரம் பிந்தி விட்டது. நீ வந்தவுடன் சாப்பாட்டைக் கவனித்துக்கொடு என்று சொல்லி விட்டுத் தூங்கிவிட்டார்.”

தந்தையில் ஜானகி வைத்த அன்பையும் மதிப்பையும் கவனித்தபோது சரஸ்வதிக்கு நெஞ்செங்கும் பொங்கிப் பூரித்தது.

‘நல்ல மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைக் குருவாக மதிப்பவர்கள். ஜானகியும் அப்படித்தான். வந்த சுவடு ஆறவில்லை, தனது விரிவுரையாளருக்கு ஸ்துதி செய்யத் துடிக்கின்றாள்.’

காலைச் சாப்பாடு முடிந்தது. விரிவுரையாளர் இன்ஸ்பெக்டரையும் ஜானகியையும் தனது றீடிங் றூமுக்கு அழைத்துச் சென்றார்.

“உங்களை நான் அழைத்தது எதற்காகத் தெரியுமா?”

சிவலிங்கம் ஒன்றும் புரியாமல் நெற்றிப் புருவங்களை நரித்துக் ‘கல கல’த்துச் சிரித்தார்.

“அதெப்படி, சொன்னாலல்லவா தெரியும்?”

“சரி, தெரியாமலிருந்ததுதான் நல்லது.”

விரிவுரையாளர் பின் அமைதியாகச் சிரித்துக் கொண்டு சொன்னார்:

“நான் சொல்லப் போவதைக் கேட்டுவிட்டு நீங்கள் அதிர்ச்சியடையக் கூடாது.”

‘அடக்கத்தின் பெட்டகம்’ எனப் பெயரெடுத்த விரிவுரையாளரின் வாயில் ‘அதிர்ச்சி’ என்ற வார்த்தை உதித்தபோதே, உண்மையாக ஜானகியின் நெஞ்சுதான் அதிர்ச்சியடைந்தது.

தலைபோகிற விஷயத்திற்கும் அஞ்சாமல் பதட்டப் படாமல் துணிந்து பேசும் விரிவுரையாளர், அதிர்ச்சி பற்றிப் பிரஸ்தாபிப்பதென்றால் அதற்குள் ஏதோ ‘பயங்கரமான’ சங்கதி இருக்க வேண்டும் என்று ஜானகி யூகிக்கலானாள்.

சிவலிங்கம் ஜானகியைப் பார்த்து வெறுமனே சிரித்தார். அவர் முகம் குல்லிட்டு ஏக்க சாயல் படர்ந்தது.

“என்ன. நான் அப்படிச் சொன்னதும் அசந்துபோய் விட்டீர்கள்? நீங்கள் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்.ஜானகி வெறும் கிளிப்பிள்ளை மாணவியாக மட்டும் என்னிடம் பயிலவில்லை. நிதானத்தையும் துணிச்சலையும் நன்கு கற்ற பெண். இந்தத் தகைமைகள் இருந்துங்கூட ஒன்றும் பேசாமலிருப்பது விந்தையாகவல்லவா இருக்கிறது?”

இதற்கு இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சற்றுக் கனைத்துக் கொண்டு அழுத்தமாகக் கேட்டார்:

“அப்படி ஒன்றுமில்லை; அது என்ன விஷயம்?”

ஜானகி பீதி நிறைந்த ஆவலோடு விரிவுரையாளரை உற்று நோக்கினாள்.

“உங்கள் மனைவி என் மாணவி மட்டுமல்ல, சரஸ்வதியைப் போல் அவளும் என் புதல்வியே. ஜானகி கண்கலங்கக் கூடாது என்பதற்காகவே உங்களை அழைத்தேன்.”

விரிவுரையாளர் குரல் சற்றுக் கம்மிக் கொண்டது. சிவலிங்கம் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

ஜானகி கண்கலங்கும்படி அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் நடந்துகொண்டதாக அவருக்கு நினைவில்லை. அப்படியிருக்க, விரிவுரையாளரின் பேச்சு சிவலிங்கத்துக்குப் புதிராகவும் ஆச்சரியமாகவும் தோன்றியது.

சிவலிங்கம் ஜானகியை அனுதாபத்துடன் நோக்கி ‘உன் மட்டில் நான் அப்படி நடந்து கொண்டேனா?’ என்று கேட்பது போல் பார்த்தார்.

சிவலிங்கத்தின் தடுமாற்றம் விரிவுரையாளருக்குப் பூரணமாக விளங்கியது.

“நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.  உங்களால் ஜானகி கண்கலங்கியதில்லை என்பது உண்மை. ஆனால் அவள் ஏற்றுக்கொண்ட இலட்சியம் அவளை அப்படி ஆக்கும். உங்கள் நோக்கு வேறாகவிருப்பின் இது சாத்தியமாகு மல்லவா?”

“ஜானகிக்கென்று ஓர் இலட்சியம் உண்டா? அது என்ன?”

அவரிடம் கேட்டுக்கொண்டே ஜானகியை நெருடிப் பார்த்தார் சிவலிங்கம்.

”அது இதுவரை நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய சங்கதி. ஒரு பெண் கல்யாணச் சந்தையில் ஆண் மகனுக்கு ஜோடி சேர்க்கப்படுகின்றாள். அவளுக்குக் ‘குடும்பப் பாரம்’ தலையில் விழுந்து அதையே அவள் ஞானப் பிராப்தியாக்கி வாழவேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அது மகா தப்பு. பெண்கள் இந்த உலகத்தைப் பற்றியும், மக்கள் வாழும் முறை பற்றியும் தெரிய சிந்திக்கப் பூரண உரிமையுண்டு. பெண்கள் சகல மனிதர்களின் தாய்களாக விளங்குபவர்கள் தாய்க்குலத்தைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி ஒரு குடும்பச் சிறைக்குள் தள்ளி வேடிக்கை பார்ப்பதே ஆண்மையின் பேடித்தனம்; படு முட்டாள்தனம்”.

அவளை அப்படி எந்தச் சிறையிலும் அடைத்த்தாகவோ, அவள் மட்டில் தான் ஒரு பேடியாக நடந்து கொண்டதாகவோ சிவலிங்கம் கனவால்கூட ஒப்ப வில்லை.எனவே, விரிவுரையாளர் பேச்சு அவருக்கு ஓர் புதிராகப்பட்டது. அவரின் முகபாவத்தினில் ஒன்றும் பிடிபடவில்லை என்பதை யூகித்த விரிவுரையாளர் தயக்கமின்றி நேரடியாகவே விஷயத்தை அவிழ்த்து விட்டார்.

‘பொலிஸ் நாடுமுழுதும் பொன்ராசாவை வலை போட்டுத் தேடுகிறதே, அது உண்மையல்லவா?”

“ஆம். உண்மைதான்” என்றார் இன்ஸ்பெக்டர். விரிவுரையாளர் தேகங்குலுங்கக் ‘கல கல’த்துச் சிரித்தார்.

“என்னிடம் பயின்ற எத்தனையோ மாணவர்கள் பெரும் பதவிகளில் டொக்டர்களாக, இஞ்சினியர்களாக, நீதிபதிகளாக, அமைச்சர்களாக-தங்கள் வாழ்க்கையை அமைத்துத் தங்களுக்குள் தன்னிச்சையாக காலங் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். பொன்ராசனோ தனது வாழ்க்கையை மனித சமுதாயத்துக்காக அமைத்துக் கொண்டவன். அவன் எழுத்தாளன், கலைஞன், தத்துவவாதி, சிந்தனாவாதி வரிசையில் சேர்ந்த உலகச் சொத்தாளன். அவனைக் கூட்டுக்குள்ளே போடுவது சமுத்திரத்தை ஓர் குடுவைக்குள் அடைக்கும் முயற்சி. அவன் மக்களுக்காகப் போராடுபவன்.”

இவ்வாறு சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரை நோக்கினார். இன்ஸ்பெக்டர் முகத்தில் வியர்வை துளிர்த்தது. அது வெட்கம், பீதி, மயக்கம் அல்லது கோபம் ஏதாவது ஒன்றினாலாகவிருக்கலாம்.

“நான் இப்படிக் கூறும்போது உங்கள் சித்தத்தில், பொன்ராசாவுக்காக நான் வாதிடுவதாக நீங்கள் அர்த்தப் படுத்துகிறீர்களல்லவா?”

விரிவுரையாளர் தொடுத்த கேள்வி இன்ஸ்பெக்டரைச் சங்கடத்திலாழ்த்தியது. மனசை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘அது உண்மைதானே?’ என்று கூறுவது போல் பார்த்தார்.

விரிவுரையாளர் அவர் நிலையைப் புரிந்து கொண்டார். மீண்டும் அழுத்தமாகச் சொற்களைப் பிரயோகித்தார்:

“இதோ பாருங்கள். உண்மை அதுவல்ல. ஒரு வாக்கில் சொல்வதானால் நான் பொன்ராசனுக்காகவல்ல; உங்களுக்காக – ஜானகிக்காகவே பரிந்து பேசுகின்றேன்.”

சிவலிங்கத்தைக் கவனித்தபோது, அவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். எனினும்,  தான் சொல்ல வந்தது எதுவோ அதைக் கடைசியாக விரிவுரையாளர் கக்கியே விட்டார்.

“இதை மட்டும் உறுதியாக நம்புங்கள். இந்த விவகாரத்தில் – பொன்ராசனை உள்ளே தள்ளும் உங்கள் முயற்சி தோல்வியில் முடியும். இதனால், கண்ணீர் விடுவது ஜானகிதான். இதை நேரில் சொல்லவே உங்களை அழைத்தேன்.”

விரிவுரையாளரின் கண்கள் ஜானகியை வாஞ்சையுடன் பரிதவித்துப் பார்த்தன.

“உங்களால் எப்படிக் கூற முடியும்?”

இன்ஸ்பெக்டர் சற்று ஆக்ரோஷமாகவே கேட்டார்.

விரிவுரையாளர் அமைதியாகப் பதிலளித்தார்:

“உங்களிடம் ஆயுதபலமுண்டு; ஆனால், ஆத்ம பலமில்லை”

“அதென்ன ஆத்ம பலம்?”

“ஆம், ஜானகிகூட உங்கள் போக்கை ஆதரிக்க மாட்டாள்.”

இன்ஸ்பெக்டரின் நெஞ்சு கோடை முழக்கமாக இடியுண்டதிர்ந்தது.

‘ஜானகி என் கருத்துக்கு போக்குக்கு வைரியா? எனது முயற்சி தோல்வியானால், ஜானகிக்குச் சந்தோஷமா? அப்படியானால். இவள் அவனுடன்…?’

பிரளயித்த மனசில் சிங்க கர்ஜனை ஒலித்தது.

இன்ஸ்பெக்டர் ஜானகியை அர்த்த புஷ்டியோடு வெறிக்கப் பார்த்தார்.

ஜானகியின் கண்கள் குமிழிட்டுக் கலங்கிக் கொண்டு வந்தன.

அத்தியாயம் – 6

“தொரே அவரு வந்திட்டாருங்களா?”

வெளியே ஒரு கிழவன் குரல் கேட்டது.

விரிவுரையாளர் எழுந்து முற்றத்தில் வந்து பார்த்தார். வெள்ளைச்சாமி.

“வெள்ளைச்சாமியா? என்ன சங்கதி?”

“ஆமாங்க, சங்கத்து ஆளுங்கல்லாம் ஆபிசில வந்து காத்துக் கிட்டிருக்காங்க. ஆனா அவரு இன்னும் வந்து சேரலீங்க. என்ன ஆவிச்சுதோ தெரியலீங்க?”

வெள்ளைச்சாமி அங்கலாய்த்தான். அவன் யாரைக் குறிப்பிட்டான் என்பது விரிவுரையாளருக்குத் தெரிந்து விட்டது. அவர் மெதுவாக அவனுக்குச் சைகை காட்டிக் கொண்டு சொன்னார்:

“நீ போ. அவர் குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் வந்து சேர்வார்.”

விரிவுரையாளர் முகம் அவரை மீறிக் குல்லிட்டது.

இதைக் கவனித்த ஜானகி வெளியே வந்து, ”அந்தக் கிழவன் யாரைத் தேடுது? என்ன அவசர காரியம்” என்று விடுத்துக் கேட்டாள்.

“கண்டி முனிசிபல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போகிறார்கள். அதற்கு வேண்டிய தயாரிப்பு வேலைகள் செய்யும் ஒருவரைத் தேடிவந்த சங்கத்து ஆள்” என்றார் விரிவுரையாளர்.

‘தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம்’ என்ற தும் பொன்ராசன் நினைவே – அவன் உருவமே அவள் மனதில் நிழலாடிற்று.

“நோயாளர்கள் வைத்தியர்களை நாடுவது போல, உரிமை இழந்த தொழிலாளர்கள் போராட்ட இயக்க வீரர்களையே நாடுவார்கள். யாழ்ப்பாணத்தில் தொழிலாளர் பிரச்சினையென்றால் பொன்ராசா பெயர்தானே அடிபடுகிறது. இங்கேயும் அவனைப் போல இலட்சியப் போராளி இருக்க வேண்டும். இதற்கு எங்கள் விரிவுரையாளரே வழி செய்து வைப்பார்.”

ஜானகி யூகித்தாள்.

‘இந்தச் சமுதாயத்திலே இலட்சிய வாதிகளைத்தான் பொலிஸ் எப்போதும் வேட்டையாடுகிறது.’

ஒரு நாவலில் இதை எப்பவோ வாசித்திருந்தாள். யாருடைய நாவல் என்று நினைவில்லை.

இதை ஒருநாள் அவள் விரிவுரையாளரிடம் கூறிய போது, அவர் சிரித்துக் கொண்டு விளக்கினார்:

“அடக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக உண்மையில் போராடுபவனை எந்த அடக்குமுறைகளாலும் தடுத்துவிட முடியாது. கொடுமைகள் அதிகமாக அவன் போராட்ட வீறு புடமிடப்படுகின்றது. அப்போதுதான் அந்த இலட்சியம் வஜ்ஜிரமாகின்றது.”

“அப்படியாயின் பொன்ராசாவும் புடம் போட்ட போராளிதான்.”

அவள் தனக்குள் முறுவலித்துக் கொண்டே விரிவுரையாளரின் ‘றீடிங் றூமில்’ கண்ணெறிந்தாள்.

அங்கே இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஏதோ ஒரு புத்தகத்தை விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

‘அவர் எங்கள் பொன்ராசனைப் போல் தீவிரவாதியாக இருப்பாரா?’

ஜானகி துருவிக் கேட்டாள். விரிவுரையாளர் மௌனமானார். அவள் மனசு பொன்ராசாவில் தாவியிருப்பதை அவர் உணர்ந்தார். அவளின் அந்தராத்மா இப்படித் தவித்துக்கொண்டிருப்பதன் சூட்சுமம் அவருக்கு நன்றாகப் பளிச்சிட்டது. இதனால் சிவலிங்கத்தின் கெடுபிடியும் போக்கும் மேலும் முரண்பாடாக வெடிக்கக் கூடும் என்று நினைத்த போதே அவர் மனம் சாம்பிற்று. ஜானகியின் வாழ்க்கை இரு கன்னைப் போர்க்களமாகி விடுமோ என்ற தடுமாற்றம் அவரை ஆட்டியது.

‘ஜானகிக்கு இப்படி ஓர் இலட்சிய வெறி பிடிக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் கழுத்தில் சிவலிங்கத்தின் தாலி ஏற விட்டிருக்கமாட்டேன். என் வாக்கை நம்பி பொன்னையா தன் புத்திரியை இவருக்குத் தானம் செய்ய நேரிட்டதே. இப்போ அவள் மனம் பேதலித்துவிட்டது. நான் என்ன பரிகாரம் செய்வது.’

தனது இலட்சிய மாணவி, சிவலிங்கத்தைத் தன் சித்தாந்த வழிக்கு இழுத்து விடுவாள் என்றே விரிவுரையாளர் நம்பியிருந்தார். ஆனால், அது சிதைவுக்கு வழியாக அமைந்துவிட்டதே.

பெண்மனம் ஒருவனில் தாவிய பின் அவளை மீட்கவே முடியாது. அது முரண்பட்டவனிடம் சிக்கினால் அவள் இறந்து கொண்டேயிருப்பாள். ஜானகியின் மனசு ஒன்றில் தாவி மற்றொன்றுடன் இறந்து கொண்டிருக்கிறது.

தர்க்க வாதம் புரிந்தவர் ஜானகியை இரக்கம் தோய்ந்த கண்களால் நுணாவினார். அப்போது அவர் இதயம் அவருள் பூகம்பித்துச் சாம்பியது.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம். ஜானகியை அழைத்த குரல் அவர் காதில் அதிர்ந்து ஒலித்தது:

“ஏ, நாங்கள் நாளைக்கே யாழ்ப்பாணம் செல்ல வேண்டும். ஆயத்தம் செய்.”

அவரில் எழுந்த கடுகடுப்பு, முறைப்பு, கண்டிப்பு விரிவுரையாளருக்கு முகத்தில் அறைந்தாற் போல் தொனித்த போதும், அவர் அதைக் கவனித்துக் கொண்டே ஒன்றும் கேளாதவர் போல் நின்றார்.

பொன்ராசா மட்டில் இன்ஸ்பெக்டர் மிகத் தீவிர நடவடிக்கையில் இறங்கப் போகின்றார். நான் சொன்னவை அவருக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளன. அதுதான் இந்தக் கொதிப்பு.

இன்ஸ்பெக்டருக்கு உண்டான கடுகடுப்பை ஜானகியும் கவனித்தாள். அவள் மனசு குழம்பி விட்டது. ரண சிகிச்சைக்குள்ளான புண் அழுந்துவது போல் அவள் நெஞ்சு புரைந்து நெருடிற்று. இனி ‘சித்திரவதைக் காண்டம்’ நடக்கப்போகிறது என்று ஜானகிக்குத் தெரியும். கணவரின் ஸ்பரிசம் இன்ப ஊற்றுக் கண்ணாவதற்குப் பதில் துன்ப ஈறலுக்குள் மாய்ந்து கொள்ளவிருக்கும் கோரத்தை அவள் மனசு கற்பனை பண்ணிற்று.

“என்ன ஊமையாட்டம் முழிசிக் கொண்டு பேசாமல் நிற்கிறாய்?”

“சரி போவது தானே. ஆனால்….”

“சொல்லவந்ததை விழுங்கி விட்டாயே, ஏன் அலகு பூட்டிக்கொண்டதோ?”

கேலியும், கிண்டலும், குரோதமும் அவர் வாக்கினில் தெறித்தன.

‘அலகு பூட்டவில்லை. மனசுதான் அடங்கிக் கிடக்கிறது. அது ஒரு நாளைக்கு உடைந்து திறபடும்’ என்று சொல்ல நினைத்தாள். ஆனால். சொல்லவில்லை.

‘தனது உணர்வையே அடுத்தவன் கொள்ள விரும்புபவன் பேசும் ‘சுதந்திர’த்தில் தேங்கிய பயங்கரம் ஜனநாயகம் என்ற வார்த்தைக்குள் அமுங்குகிறது. இவர் சட்டத் துணுக்கின் கவசத்துக்குள் மனிதாபிமானத்தை எடை போடுவதும் அப்படித்தான்.’

இப்படித் தன்மனதில் தீய்த்துக் கொண்ட ஜானகி இதமாக வினவினாள்:

“அன்போடு அழைத்த விரிவுரையாளரிடம் மகிழ்வாக இரண்டு வார்த்தை பேசாமல் ஏன் கடுகடுத்துக் கொண்டு போக வேண்டும்?”

இன்ஸ்பெக்டர் எடுத்தாற்போல் கூறினார்:

“அவர் உனக்கும் பொன்ராசனுக்கும்தான் விரிவுரையாளர், எனக்கல்ல.”

ஜானகியின் நெஞ்சு கமாரிட்டது.

எவ்வளவு கொடிய வார்த்தை. ஒரு கணவரின் வாயிருந்து இந்தக் கிலிசகெட்ட சொல் வரலாமா?

ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, முகஞ் சிலிர்க்க துடிதுடித்த வண்ணம் ஜானகி கேட்டாள்.

“இதென்ன கேவலமான பேச்சு, இது உங்களுக்கு மவுசா?”

“மவுசுபற்றியா பேசுகிறாய்? வாயை மூடு. எல்லாம் எனக்குத் தெரியும்.”

வாய் குழறி அழவேண்டும் போல் அவள் நெஞ்சு துருத்தி அந்தகாரித்தது.

“உங்களுக்கு என்ன தெரியும்?’ என்று அங்கலாய்ப் போடு கேட்டாள் ஜானகி.

“வீட்டுக்கு வா, சொல்கிறேன்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இல்லை, இப்பவே சொல்லவேணும்.”

“உமக்கு இப்ப சொல்லத்தான் வேணுமோ?”

“ஓம்”.

“இந்தா” என்று பொரிந்து கொண்டே அவள் கன்னத்தில் ‘சடா’ ரென்று ஓங்கி அறைந்தார் இன்ஸ்பெக்டர்.

அந்த அடி விரிவுரையாளர் காதில் சளக் என்று கேட்கவே, அவர் அங்கம் பதற கிட்டவிரைந்து, இரக்கம் மேலிட விழித்துப் பார்த்தார்.

இன்ஸ்பெக்டர் வாய் மௌனித்துக்கொண்டது.

விரிவுரையாளர் கண்ணில் பட்டதும், “ஐயோ எல்லாம் போச்சு” என்று ஜானகி பெருங்குரல் வைத்து ஓவென்று அழுதே விட்டாள்.

அழுகைக் குரல் கேட்டுக் குசினியிலிருந்து கவடு பாய்ந்து ஓடி வந்த சரஸ்வதி, “ஜானகி இதுக்குள்ளே என்ன நடந்தது? ஏன் இப்படிச் சத்தம் போட்டு அழுகிறாய்”” என்று விடுத்துக் கேட்டாள். அவள் கண்களே கலங்கிக் குமிழிட்டன. இதயம் இடியேறு விழுந்ததுபோல் கமாரிட்டது.

“சரஸ்வதி நீ உள்ளே போய் உன்வேலையைக் கவனி. அது அவர்கள் குடும்ப விவகாரம்.”‘

விரிவுரையாளர் அங்கே நின்று வீடு அதிர உத்தரவிட்டார்.

மகுடியில் கட்டுண்ட நாகம் போல் தந்தையின் சொல்லில் சரஸ்வதி மெல்ல நகர்ந்தாள்.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் அப்பவும் பேசாமல் விறைத்துப் போய் நின்றார். அவர் முகம் கொந்தளித்துச் சினந்து குதறிக் கொண்டிருந்தது.

விரிவுரையாளர் மிகப் பதனமாக முகம் மலரச் சிரித்துக் கொண்டு ‘றீடிங் றூமு’க்குள் போய் எதையோ அவசரமாகத் தேடினார்,

அவர் தேடுகின்ற கடிதம் எந்தப் புத்தகத்துள்ளும் இருக்கவில்லை.

அவருக்கு முற்றாக ‘விஷயம்’ புரிந்து விட்டது.

உடனே அவர் நெஞ்சு மலாரடித்தது. கதிரையில் ‘சக்’ கென்று குந்தினார். நெற்றியில் கையை வைத்து யோசனையிலாழ்ந்தார். என்றாலும் இருப்புக் கொள்ள வில்லை. மண்டை பனங்காய் பினைந்தது.

‘றீடிங்றூமில்’ எல்லாரும் சேர்ந்திருந்தும் பொன்ராசா எழுதிய கடிதம் ஒருவருக்கும் தெரியாமல் இன்ஸ்பெக்டர் கையில் எப்படிச் சிக்கியது?’

சொற்ப வேளையால் மௌனத்தைக் கலைத்தவராக, நிதானமாக எழுந்து, “இன்ஸ்பெக்டர், உங்கள் உள்ளத்தில் ஏன் இப்படிக் கோபாக்கினி சீறிப் பாய்ந்தது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்” என்று சிரித்தபடி கூறினார் விரிவுரையாளர்.

இன்ஸ்பெக்டர் அப்பவும் ஒன்றும் பேசாமல் விரிவுரையாளரை ஒருவிதமாக முறைத்துப் பார்த்தார்.

”குற்றப் பிரிவில் வேலை செய்யும் ஒரு பொலிஸ் அதிகாரியான நீங்கள் சின்ன உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமலிருக்கிறீர்கள். இதை நினைக்க சிரிப்பாகவும் அவமானமாகவும் இருக்கின்றது” என்று சொல்லிக் ‘கலகல’த்துச் சிரித்தார் விரிவுரையாளர்.

“எந்த உண்மை?”

“அப்படிக் கேளுங்கள்”

ஏதோ புதிர் விடுபடப்போகிறது என்ற தோரணையில் அவரையே பார்த்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

“எனக்கு வந்த கடிதத்தை எனது அனுமதியின்றியே நீங்கள் திருடியதும் போதாமல் அதன் உண்மையைக்கூட நீங்கள் கண்டுகொள்ளவில்லையே! அதைத்தான் குறிப்பிட்டேன்” என்றார் விரிவுரையாளர்.

அவர் போட்ட குண்டு இன்ஸ்பெக்டர் நெஞ்சைதகர்த் தெறிந்தே விட்டது. விரிவுரையாளர் முன் அவர் ஓர் குற்றவாளி போல் மருண்டு நின்றார். அவர் நிலை விரிவுரையாளருக்கு முற்றாகப் புரிந்துவிட்டது. விரிவுரையாளர் சிரித்துக் கொண்டே அழுத்தமாக மறுபடி கூறினார்.

“நான் இதைக் கூட ஒரு குற்றமாகக் கருதவில்லை. உண்மையைத் தெரியாமல் வீணே எதையோ கற்பித்துக் கொண்டு ஜானகியை அடித்தீர்களே, அதுதான் என் நெஞ்சில் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் குற்ற உணர்வுகளையும், கபட நினைவுகளையும், தந்திர உபாயங்களையு ம் பொலிசார்தான் மக்களுக்கு ஊட்டுகின்றார்கள். அதனால் தான் பொலிஸார் மக்களிடம் உண்மை அறிவதை விட்டு, அதைக் ‘கறந்து எடுக்க’ பார்க்கின்றார்கள். மக்களோ நிரபராதிகள். அப்படித்தான் ஜானகியும் நிரபராதி.”

இன்ஸ்பெக்டர் ஒன்றும் புரியாமல் முழிசுவது விரிவுரையாளருக்கு விளங்கி விட்டது.

“அந்தக் கடிதம் பொன்ராசா உங்கள் ஜானகிக்கு எழுதியது என்று தானே நினைத்தீர்கள்?” என்று ‘பச்சை’யாக விடுத்துக் கேட்டவர். “ஆனால், உண்மை அதுவல்ல” என்றார்.

அவர் கண்கள் இன்ஸ்பெக்டரின் பதிலை எதிர்பார்த்துத் தவித்தன.

இப்படி விரிவுரையாளர் சொன்னதும், ஜானகி, சரஸ்வதி, இன்ஸ்பெக்டர் மூவரும் சமித்துப் போய் நின்றார்கள்.

ஜானகியின் நெஞ்சு ‘படக் படக்’ கென்று அடித்தது.

“அப்போ, உண்மை எது?” என்று வினவினார் சிவலிங்கம்.

“சற்று வேளைக்குமுன் ஒரு கிழவன் – வெள்ளைச்சாமி வந்தானே, அவன் குழந்தை பேரும் ஜானகிதான். அந்தக் குழந்தை ஜானகி என் வீட்டில்தான் உதவிக்கு இருந்தாள். அந்தக் குழந்தை ஜானகியைத்தான் பொன்ராசா சுகம் விசாரித்து எழுதியிருந்தான். தொழிலாளர்களின் குழந்தையென்றால் அவனுக்கு உயிர்.”

தந்தையின் ‘கற்பனை’யில் உற்பவித்த ஜானகியை எண்ணிய சரஸ்வதி முகத்தை வெறுப்பாக வைத்துக் கொண்டு தறுதறு’த்து முழிசினாள். மதிப்புக்குரியவர் வாய்மை பொய்க்கலாமோ? அவர் வாயில் பொய் வரலாமோ?

இன்ஸ்பெக்டர் ஜானகியை ஒரு குற்ற உணர்வோடு நோக்கினார்.

விரிவுரையாளர் தனக்குள் நெஞ்சு பூரிக்கச் சிரிக்கலானார்.

“மன்னிச்சுக் கொள்ளுங்கோ.”

வாய் புரைய இன்ஸ்பெக்டர் விநயமாகச் சொல்லிக் கொண்டே அந்தக் கடிதத்தை விரிவுரையாளரிடம் நீட்டினார்.

விரிவுரையாளர் கடிதத்தை வாங்கிக் கொண்டு ‘றீடிங் றூ’மிற்குள் சென்றார்.

சரஸ்வதி அவர் பின்னே அறைக்குள் சென்று தந்தையை வியப்போடு பார்த்தாள். அவளின் வியப்புக்குக் காரணம் அவருக்கு நன்றாகத் தெரியும். புத்திரியை நோக்கிக் கண்களைச் சிமிட்டியபடி சொன்னார்:

”நீ உனக்குள் அங்கலாய்ப்பது எனக்குத் தெரியும்.”

“ஏன் அப்படிப் பொய் சொன்னீர்கள்! ஜானகி என்றொரு பெண் குழந்தை எங்கள் வீட்டில் எப்போ இருந்தது?” என்று ஆசுவாசத்துடன் அடுத்தடுத்துக் கேட்டாள் சரஸ்வதி.

”உனக்கு இன்னும் விளங்கவில்லை. முதலாளித்துவ சமுதாயம் மனிதர்களைப் புத்தி பேதலித்தவர்களாகவும், போக்கிரிகளாகவும், வஞ்சகர்களாகவும் ஆக்கிவிட்டது. இங்கே யாரும் பொய் பேசுவதில்லை. பொய் பேசப்படுகின்றார்கள். எனவே, மூசுகிற மாட்டுக்கு இடிக்கிற மாடு போல் வஞ்சிக்கிறவனை வஞ்சித்து அடக்க வேண்டும். இப்படிப் பொய் சொல்லாவிடின் ஜானகியின் கதை எப்படி இருக்கும் தெரியுமா? நமது வள்ளுவனார் ‘வாய்மை’க்கு வகுத்த இலக்கணம் உனக்குத் தெரியும். எனது வாக்கும் அப்படி வாய்மைதான்.”

“வாய்மை என்பது யாதெனில், யாதொன்றும் தீமை இலாது சொலல்”

திருகி எடுத்த குறள் அவள் மனசில் பாராயம் செய்தது.

“அப்போ பொன்ராசா கடிதத்தில் குறிப்பிட்டது நமது இந்த ஜானகியைத்தானா?”

“ஆம், நமது ஜானகியைத்தான்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு சிரித்தார் தந்தை.

சரஸ்வதி, தந்தையின் போக்கில் லயித்து அப்படியே ஸ்தம்பித்துப் போயிருந்தாள். பூகம்பம் நிகழ்ந்து ஓய்ந்தது போல் மனசு பிரவாகித்துப் போயிருந்தது.

‘திருமணமான ஒரு பெண்ணைப் பற்றி பொன்ராசா அப்படி எழுதியிருக்கவே கூடாது. அது அபத்தமல்லவா?’

தனக்குள் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் சரஸ்வதி.

ஜானகியின் எதிர்கால வாழ்க்கையை இதனுடன் ஓப்பிட்டுப் பார்க்க, அவள் நெஞ்சு பரிதவித்துப் பதறியது.

‘பாவம், ஜானகி… அந்தரப்படப் போகிறாள்’.

– தொடரும்…

– மண்ணில் தெரியுதொரு தோற்றம் (நாவல்), முதல் பதிப்பு: பெப்ரவரி 1978, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *