ஆண்டாள் கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 132 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை சுமார் 4-30 மணி இருக்கும். 

“யாரையா தெற்கே போகிறது? தினமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம்!” என்று ஒரே மூச்சில் தொண்டை கிழியக் கத்தினான், ரகுநாத விலாஸ் பஸ் சர்விஸ் கண்டக்டர். 

நான் பஸ் மானேஜரிடம் போய், “ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒரு டிக்கட்டுக் கொடுங்கள்” என்று சொன்னேன். மானேஜர், பக்கத்தில் உட்கார்ந்திருந்த காக்கி ஷர்ட் பேர்வழி ஒருவரிடம், “என்ன ஐயா, உங்கள் ஆட்கள் இன்னும் வரக் காணோம். கார் இன்னும் ஐந்து நிமிஷத்திற்குள் புறப்படப் போகிறது. உங்கள் டிக்கட்டைக் கான்ஸல் பண்ணி இவருக்கு ஒரு டிக்கட் போடப் போகிறேன். நீங்கள் அடுத்த காரிலேதான் போக வேண்டியிருக்கும். என்ன சொல்லுகிறீர்கள்?” என்றார். 

“என்ன ஐயா, அநியாயம்? நேற்று இரவே பணங் கொடுத்து டிக்கட் வாங்கியிருக்க இப்படி அநியாயம் பண்ணலாமா? கொஞ்சம் பொறுங்கள். அரை நிமிஷத்தில் வந்துவிடுவார்கள்” என்று கெஞ்சினார் காக்கி ஷர்ட் பேர்வழி. 

“அப்போ, டிக்கட் காலியில்லை ஸார்” என்றார் மானேஜர். 

“நான் நேற்றுச் சாயந்தரமே வந்து ஒரு டிக்கட் வேண்டுமென்று கேட்டதற்கு, காலை 5 மணிக்கு வரச் சொன்னீர்கள். நான் 4-30 மணிக்கே வந்திருக்கிறேன். இப்பொழுது டிக்கட் இல்லை என்றால் நான் எங்கே போவது?” என்று மன்றாடினேன். 

“எடுங்க ஸார், ரூபாயை எடுங்கள். என்ன செய்வது? நேற்றே சொல்லியாய்விட்டது. சொன்ன சொல் மாறுவது அழகல்ல. ‘ஓவர் லோடா’னாலும் பரவாயில்லை எடுங்கள் ரூபாயை!” என்று வேண்டா வெறுப்போடு சொன்னார் மானேஜர். 

எனக்குப் பரம சந்தோஷம். வாதாடி வழக்காடி ஒரு டிக்கட் வாங்கிக்கொண்ட என் சாமர்த்தியத்தை நானே மெச்சிக்கொண்டேன். காரில் இடமே காலி இல்லாதபோது ‘கண்டக்டர்’ ஏன் தொண்டை கிழியக் கத்தினான் என்பது எனக்குக் கொஞ்சமேனும் விளங்க வில்லை. 

டிக்கட் கிடைத்துவிட்டது. இனிமேல் என்னவேண்டு மானாலும் செய்யலாமல்லவா? “கார் எப்பொழுது புறப்படப்போகிறது? கொஞ்சம் காபி சாப்பிட்டுவிட்டு வருகிறேனே?” என்று கேட்டேன். கேட்டதுதான் தாமதம். மானேஜருக்குக் ‘கரை மீறி எழுந்தது வெஞ்சினம்’. “விடிய விடிய ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்கிறீர்களே! இந்தா புறப்பட்டாச்சு ஸார் இன்னா?” என்று அவர் கடுகடுத்தார். 

“காலையில் ஒன்றும் சாப்பிடவில்லை” என்று பரிதாபகரமான குரலில் மீண்டும் விண்ணப்பித்துக் கொண்டேன். 

“மற்றப் ‘பாசெஞ்சர்’கள் எல்லோரும் காபி சாப்பிடத்தான் போயிருக்கிறார்கள். இன்னும் அரை நிமிஷத்தில் வந்துவிடுவார்கள். அவர்கள் வருவதற்குள் நீங்கள் வருவதாக இருந்தால், போகலாம்” என்று மானேஜர் அருள் புரிந்தார். 

நான் ஓட்டோட்டமாய்ப் பக்கத்திலுள்ள ஹோட்டலுக்குச் சென்று ஒரு கப் காபி மட்டும் நாப்பொசுக்கச் சாப்பிட்டுவிட்டு ஓடோடியும் வந்தேன். நல்ல வேளையாக மற்றப் ‘பாசெஞ்சர்’கள் இன்னும் வரவில்லை. என்னைக் கண்டதும் மானேஜர் காக்கி ஷர்ட் பேர்வழியைப் பார்த்து, “என்ன ஐயா, உங்கள் ஜனங்கள் இன்னும் வரவில்லை; கார் புறப்படப் போகிறது. அப்புறம் என்னைக் குறை சொல்லாதீர்கள்!” என்று விரட்டினார். 

“இந்தா வந்து விட்டார்கள்; கொஞ்சம் பொறுங்கள்” என்று சமாதானப்படுத்தினார் பக்கத்தில் இருந்த பேர்வழி. 

மணி ஆறு ஆகிவிட்டது. காபி சாப்பிடப்போன ‘பாசெஞ்சர்’களும் இன்னும் வந்தபாடில்லை. 

கொஞ்ச நேரத்தில் ஐயங்கார் ஒருவர் வந்து, “ராஜபாளையம், 3 டிக்கட் இருக்கிறதா?” என்று கேட்டார். 

மானேஜருக்கும் காக்கி ஷர்ட் பேர்வழிக்கும் மறுபடியும் ‘லடாய்’. மானேஜர் கறாரானவர். அந்த வழுவழுத்த பேர்வழி என்ன கெஞ்சியும் கேளாமல் அவருடைய 5 டிக்கட்டுகளில் 3 டிக்கட்டுகளைக் ‘கான்சல்’ செய்து, ஐயங்காருக்குக் கொடுத்துவிட்டார். காலத்தின் மதிப்புத் தெரியாத விளக்கெண்ணெய் ஆசாமிகளுக்கு இப்படித்தான் புத்தி புகட்டவேண்டும். அடுத்தாற்போல் என்னைப் பாருங்கள்! 5 மணிக்கு வரச் சொன்னதற்கு 4:30 மணிக்கே வந்துவிட்டேன் அல்லவா? அதனால்தான் எனக்கு டிக்கட் கிடைத்தது. கைமேல் பலன்! 


மணி ஏழாகி, எட்டாகி, ஒன்பதும் அடிக்கப் போகிறது. காபி சாப்பிடப்போன ‘பாசெஞ்சர் ‘களையும் காணவில்லை. காக்கி ஷர்ட் பேர்வழியின் மீதி 2 டிக்கட்டிற்கு ஆளையும் காணவில்லை. நான் எப்படியும் 11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கவேண்டும். ஆகையால் நான் மானேஜரைச் சற்றுக் கோபிக்க ஆரம்பித்தேன். 

அதற்கு அவர், “இந்தியர்களுடைய விஷயமே இப்படித்தான் ஸார். காலத்தின் அருமை அவர்களுக்குக் கொஞ்சமேனும் புரிவதில்லை. என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்!” என்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று என் கதராடையைப் பார்த்ததும் பேச்சை மாற்றி, “காந்தியைப் பாருங்க, ஸார்? ‘மஹாத்மா’ என்கிற பட்டம் அவருக்கே தகும். மணி என்றால் மணி; நிமிஷம் என்றால் நிமிஷம். காலத்தின் அருமை என்றைக்குத்தான் நம்ம ஜனங்களுக்குத் தெரியப் போகிறதோ?” என்று பரிதவித்தார். 

காக்கி ஷர்ட் பேர்வழி தமக்குள்ளேயே சிரித்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. 

மணி 10 ஆகிவிட்டது.நானும் ஐயங்காருடைய ஜனங்களும் காரில் போய் உட்கார்ந்துகொண்டோம். காக்கி ஷர்ட் பேர்வழி மெதுவாக எழுந்திருந்து, கண்ணைக் கசக்கிக்கொண்டே காரண்டை வந்து, டிரைவரது ஆசனத்தில் உட்கார்ந்து, காரை ஓட்ட ஆரம்பித்தார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் ‘டிரைவ’ராக இருப்பாரென்று நான் சிறிதேனும் சந்தேகிக்கவில்லை. 

கார் புறப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.எங்கள் முன்னோர் செய்த தவப் பயன் தானோ என்னவோ, நாங்கள் மதுரை முழுவதும் ஊர்வலம் சென்றோம்! டிரைவர் புண்ணியத்தில், இப்பொழுது மதுரையில் எனக்குத் தெரியாத தெரு இல்லை. கண்டக்டரும், “ஸ்ரீவில்லிபுத்தூர், ஒரு ஆள், ஒரு ஆள்” என்று கத்திக் கொண்டே வந்தான். எங்கள் காரில் ஓர் ஆளுக்குமேல் இடமில்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே! மற்றப் பாசெஞ்சர்கள் எல்லாரும் காபி சாப்பிடப் போயிருப்பதாகத்தான் இன்னும் கண்டக்டர் சொல்லிக் கொண்டு வந்தான். மணி பன்னிரண்டு ஆனது அவனுக்கு ஞாபகம் இல்லைபோலும்! 

கார் நிலயத்திற்குப் போனதும் அங்கேயுள்ள பாசெஞ்சர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட வேண்டியது தான் தாமதம் என்று டிரைவர் (காக்கி ஷர்ட் பேர்வழி) என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டே வந்தார். 

“உம்முடைய ய மீதமுள்ள இரண்டு டிக்கட் என்ன ஆச்சு?” என்று நான் டிரைவரைக் கேட்டேன். 

“மானேஜர் பொல்லாதவர், ஸார்! இதற்குள் அதையும் ‘கான்ஸல்’ செய்திருப்பார்!” என்றார். 

பாவம்! இப்படியே தினந்தோறும் அவருடைய டிக்கட்டுகளெல்லாம் ‘கான்சல்’ செய்யப்படுவதை யோசிக்கையில் பரிதாபகரமாக இருந்தது. 

மணி ஒன்று அடித்தது. கார் நிலயம் வந்துசேர்ந்தது. மானேஜர் தம் சாமர்த்தியத்தினால் நாலைந்து பிரயாணிகளைச் சேர்த்திருந்தார். அவர்களையும் ஏற்றிக் கொண்டு சுமார் இரண்டு மணிக்குக் கார் மதுரையை விட்டுக் கிளம்பியது. வழியில் அநேக திருக்கண்கள். ஒவ்வொரு திருக்கண்ணிலும் குறைந்தது அரைமணியாவது நிற்கும். இப்படியாகக் கல்லுப்பட்டி போய்ச் சேர மணி நான்கு ஆகிவிட்டது. அதற்குத் தெற்கே பிரயாணம் வெகு ‘குஷி’. 

வலது பக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வரிசை. அவற்றை மேகங்கள் வந்து முத்தமிடும் அழகிய காட்சி. இயற்கையன்னை அம் மலைகளில் நின்று கூத்தாடுகின்றாள். அவ் வனப்பைக் கண்டு களித்துக் கொண்டே செல்கையில், கீழ்ப் புறம் ஒடிந்து விழுவது போல் ஒரு குன்றும், அதன்மேல் ஒரு புராதனக் கோவிலும் தென்பட்டன. இயற்கையழகு எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் தமிழர்கள் ஒரு கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் அநேகமாகக் குன்று தோறும் ஒரு கோவிலைப் பார்க்கலாம். தமிழர்களுடைய இயற்கை மோகத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே வருகையில், “அது கோபாலசாமி கோவில் ஸார்!” என்றான் கண்டக்டர் 

தூக்கத்திலிருந்து விழித்தவன்போல் “என்ன சொன்னாய்?” என்றேன். 

“கோபாலசாமி ஸ்ரீ ஆண்டாளைக் கல்யாணம் பண்ணுவதற்காக வந்தார். இந்த மலைக்குப் பக்கத்தில் வந்ததும், ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்க மன்னருக்கும் கல்யாணமாகிவிட்டது என்ற செய்தி அவருக்குத் தெரிந்தது. உடனே அவர் இம் மலையிலேயே தங்கி விட்டார்” என்று கண்டக்டர் சொன்னான். 

“அவர் உங்கள் பஸ்ஸில் வந்தார் போலிருக்கு? அதனால்தான் காலம் தவறிவிட்டது!” என்றேன். 

கண்டக்டர் சிரித்துக்கொண்டே, “ஏமாந்தது கோபாலசாமி மட்டுமல்ல, ஸார். திருத்தங்கல் பெருமாள், திருவண்ணாமலைப் பெருமாள், காட்டழகர், எல்லோரும் ஏமாந்தவர்கள் தாம்!” என்றான். 

“அவர்களும் உங்கள் பஸ்ஸில் சென்றிருக்கலாம்!” என்றார் ராஜபாளையத்து ஐயங்கார். 

“எல்லோருக்கும் முன்னதாகச் சென்று கல்யாணம் செய்துகொண்ட ஸ்ரீரங்க மன்னர் எந்தக் காரில் சென்றார்?” என்று நான் கேட்டேன். 

“அவர் இந்தப் பஸ் சர்வீஸ்களையே நம்புவதில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து நடந்தே வந்துவிட்டாராம்” என்றார் என் பக்கத்தில் ஒருவர். “ஆசாமி கால் நடையாக உலகத்தை மூன்று தடவை சுற்றியிருக்காராம்” என்றார் அவர் மீண்டும். 

“முயலும் ஆமையும் கதைபோல் இருக்கே!” என்றான் ஐயங்காருடைய பையன். அவன் இரண்டாம் வகுப்பு வாசிக்கிறானாம். 

“எல்லோரும் காலம் தவறுவதனால் உண்டாகும் தீமைகளைப் பற்றித்தான் பேசுகிறார்களே தவிர, ஒருவராவது அதனால் உண்டாகும் நன்மைகளைப்பற்றிப் பேசக் காணோம்!” என்றார் டிரைவர். 

“என்ன நன்மை ஐயா?” என்றேன் நான். 

“இந்தப் பஸ்களெல்லாம் பெருமாள்களைக் குறித்த நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுபோய்ச் சேர்த்திருந்தால் எனன நடந்திருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்; ஐந்து மாப்பிள்ளைகள். கல்யாணப் பந்தலில் ஒரே கலாட்டா தான்!” என்றார் டிரைவர். 

மேற்கூறிய சம்பவம் நடந்து ஏறக்குறைய இரண்டு மா தங்கள் இருக்கும். மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போகவேண்டி இருந்தது. ரகுநாத விலாஸ் மானேஜரிடம் சென்று, “முதல் கார் எப்பொழுது போகிறது?” என்று கேட்டேன். 

“சரியாய்க் காலை 5 மணிக்குப் புறப்படும்; நீங்கள் 4-30 மணிக்கே வந்தால்தான் இடம் கிடைக்கும் ” என்றார் மானேஜர். 

“என்ன ஐயா! என்னிடத்திலுமா உங்கள் கடையை விரிக்கிறீர்கள்?” என்றேன். 

“ஓ! நீங்களா? நான் யாரோ என்று நினைத்தேன். நாங்கள் என்ன ஸார் செய்வது? விருதுநகர்-தென்காசி ரெயில்வே போட்டாலும் போட்டான். எங்கள் வாயில் மண்தான். அதற்கப்புறந்தான் நான் பஞ்சதந்திரம் படிக்க ஆரம்பித்தது” என்றார் மானேஜர். 

சிரித்துக்கொண்டே, “நான் எத்தனை மணிக்கு வர?” என்று கேட்டேன். 

“நீங்கள் எதற்கும் 4-30 மணிக்கே வந்துவிடுங்கள். ஆள் சேர்ந்துவிட்டால் ஒருவேளை 5 மணிக்கே புறப்பட்டாலும் புறப்பட்டுவிடும்” என்று மானேஜர் சொன்னார். 

அவர் சொன்னதை நான் நம்பி மறு நாள் 4-30 மணிக்கே சென்று பஸ்ஸில் ஏகசக்கராதிபத்தியம் செலுத்தினேன்! 

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *