காடுவரை
(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிணத்தின் மீது விழுந்து பெஞ்சமின் கதறிக் கொண்டிருந்தான். விஜயலெட்சுமி இன்று காலை பதினொரு மணிக்கு போய் விட்டாள்.
பெஞ்சமின் நிறை மஞ்சளில் சிவப்பு ரேக்குகளுடன் இருப்பான். மீசையில்லாத முகம், கால்களில் காந்தி செருப்புகள். இரண்டிற்கும் நடுவிலுள்ள நிறங்களில் கண்ணைக் குத்தாத பேண்ட், ஷர்ட், சைக்கிள் ஓட்டத் தெரியாது; வேகமாக நடக்கவும் வராது. மாலையில் கைலிகட்டி ஸ்லாக் போட்டு நடக்கையில் பிராமணன் பட்டுவேஷ்டி கட்டி சட்டை போட்டு வருவது போல் துல்லிய அழகில் இருக்கும்.
பெஞ்சமின் திருச்சி ரெயில்வே காலனியிலிருந்து கலெக்டர் ஆபீஸ் வேலைக்கு வந்த ஒரு ஆங்கிலோ இந்தியன்.
விஜயலெட்சுமி நிறை சிவப்பில் மஞ்சள் ரேக்குகளுடன் இருந்தாள். பளபளவென்ற முகம். கால்களில் குதி உயர் செருப்புகள். பளிச்சென்ற நிறங்களில் கண்ணைக் குத்தும்படி புடவை ஜாக்கெட். விறுவிறுவென்ற நடை. கலகலப்பாய்ப் பேசுவாள். உடைகள் பறக்க சைக்கிள் விற் விற்றென்று வருவாள்; போவாள். மாலையில் முழு கவுனோடு கம்பிக் கிராதிக்கப்பால் அடுக்களையில் நிற்கும் அவளைப் பார்க்கையில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் போல் இருக்கும்.
விஜயலெட்சுமி ஸ்ரீரங்கத்திலிருந்து கலெக்டர் ஆபீஸ் வேலைக்கு வந்த ஐயங்கார்ப் பெண்.
பெஞ்சமின் அலுவலகத்தில் ஒருநாளைக்கு எத்தனை வார்த்தைகள் பேசினான் என்பதை சாதாரணமாக எண்ணி விடலாம். வார்த்தைகள் ரொம்பவும் மெதுவாக வரும். இதனால் அவன் என்ன மொழியில் பேசினான் என்பதை சட்டென்று உணர்ந்து கொள்ள முடியாது.உண்மையில் எல்லோரும் பேசும் தமிழில் தான் அவனும் பேசினான். அவனைப் பொறுத்த வரை பேசுவதென்பது கடைசிப் பட்சம்; தவிர்க்க முடியாத போது ஒன்றிரண்டு வார்த்தை பேசுவ தோடு சரி.
வருவாய்த்துறையின் சட்டதிட்டங்கள் விதிகளில் அவன் நிபுணன் என்று மாவட்டம் முழுதும் பெயர் வாங்கியிருந்தான். நிலவரிச் சலுகை, மேல் முறையீடுகள், சட்டம் ஒழுங்கு போன்ற மிகவும் முக்கியம் வாய்ந்த சீட்டுகளில் தான் அவனை எப்போதும் உட்கார்த்தி வைப்பார்கள். பத்து நாளைக் ஒருமுறை அலுவலகம் சப்பந்தமாய் சென்னைக்குப் போய்வந்து கொண்டிருப்பான். பட்ளிக் பிராஸிக் யூட்டருடன் டிஸ்கஷன், ஹைக்கோர்ட்டில் ஃபைல் சமர்ப்பிப்பது போன்ற காரியங்கள் பெஞ்சமின் லீவில் இருந்தால் வாய்தா வாங்கப்படும். பெஞ்சமின் தான் அவற்றை நூறுசதம் சரியாய்ச் செய்வான்.
பி.ஏ. கூப்பிட்டனுப்பினால் பெஞ்சமின் உள்ளே நுழைவான். குட்மார்னிங் சொன்னது போலிருக்கும். கைமேலே வந்து வணங்கியது போலிருக்கும். வார்த்தை, கை ரண்டையும் கண்டுபிடிப்பதற்குள் மறைந்து விடும். ஒரு மணிநேரம் பி. ஏ இவனோடு ஒரு ஃபைலை வைத்துக் கொண்டு டிஸ்கஷன் நடத்துவார். பெஞ்சமின் அது சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களையும் சொல்லி முடிப்பான். கேட்டுக் கொண்டிருந்தவர் பதினாலாயிரம் வார்த்தைகள் பேசியிருப்பார். சொல்லிக் கொண்டிருந்தவன் நூறு வார்த்தைகளில் நிறுத்தியிருப்பான்.
விஜயலெட்சுமி டைப் மெஷின் முன்னால் உட்கார்ந்திருப்பாள். கண்கள் கடிதத்தின் மேலும் டைப் எழுத்துக்கள் மேலும் போகும். கைகள் மெஷினை வெளுத்துக் கட்டிக்கொண்டிருக்கும். வாய் அதே வேகத்தில் பேசிக்கட்டிக் கொண்டிருக்கும். ஃபேர் காப்பிக்காக அடித்துத்திருத்தி கொலை கொலையாய் வரும் ட்ராபட்களை டைப்பிஸ்ட் பெண்கள் வக்கணை வக்கணையாய்ப் பேசிக் கொண்டே அடிப்பார்கள்.
பெஞ்சமினின் ட்ராப்ட்களும் ஃபேர்காப்பிக்காக வரும். அவன் கையெழுத்து முத்துக்களைச் சேர்த்தது போல் ஒளிரும். பக்கம் பக்கமாயெழுத மாட்டான், எது வேண்டுமோ அது மட்டும் எழுதப்பட்டிருக்கும். அவன் எழுதியதற்கு மேல் சூப்பரெண்ட் ஒரு வார்த்தை சேர்த்திருப்பார்; பி.ஏ .அது அனவாசிய மென்று அடித்திருப்பார். சிலவற்றில் பி.ஏ. எதை யாவது சேர்த்திருப்பார்; கலெக்டர் அது அனாவசிய மென்று அடித்திருப்பார். ஆக பெஞ்சமின் எழுதிய வாசகம் ஒரு பிறழ்ச்சியில்லாமல் டைப்பிற்கு வந்து சேரும். பெஞ்சமினுக்கு மேல் உட்கார்ந்திருப்பவர்கள் பெஞ்சமினை சரிபார்க்கவில்லை, பெஞ்சமினிடம் கற்றுக்கொள்கிறார்கள் என்று விஜயலெட்சுமி நினைத்து சிரித்துக் கொள்வாள்.
இவ்வளவிருந்தும் கலெக்டர் ஆபீஸ் பெண்களில் ஒருவர்கூட பெஞ்சமின் பார்ப்பதற்கு உண்டான ஆண்பிள்ளை என்று நினைத்து லேஸாய்க்கூட அவன் முன் புன்னகைத்ததில்லை. அவன் ஆண் பிள்ளை என்றாலும் ஆங்கிலோ இந்தியன் என்ற நினைவே பெண்களை வேறு வேறு பக்கத்திற்குத் துரத்தியது. அலுவலகத்தில் அவன் ஸ்தானம் எவ்வளவு உயர்ந்திருந்தாலும் அவன் பிறந்து வந்த இனப் பழக்கங்களுக்கு வெருண்டு போய் பெண்கள் அவனிடம் மரியாதை காட்டிவிட்டு விலகிக் கொண்டார்கள்.
விஜயலெட்சுமிக்கு மட்டும் வித்தியாசமான குணம். பெயரே தெரியாத காய் புதிதாய் வந்து மார்க்கெட்டில் கிடக்கும். பச்சு பச்சென்று முறுக்கு முறுக்குக் காய்களாய் மின்னும். என்னவோ ஏதோ என்று அம்மா வாங்கமாட்டாள்; விஜயலெட்சுமியின் கண்ணும் மனதும் அந்தக் காய்களுக்கருகில் போய் காந்தங்களாகி விடும். இதைக் கூட்டு வைப்பதா; பொரியல் செய்வதா? என்று கடைக்காரனிடம் கேட்பாள். ‘பெங்களூர் பக்கம் இதைப் பொரியல் செய்கிறார்கள்; திருவனந்தபுரத்தில் கூட்டு வைக்கிறார்கள்’ என்பான் கடைக்காரன். மறுபடி அம்மா வேண்டாமென்பாள். விஜயலெட்சுமிக்கு பசுமையும் அழகுமாய்க் கிடக்கும் அந்தக் காய்களைப் பார்த்து நாக்கில் நீர் ஊறும் அரைக்கிலோவாவது அம்மாவை வாங்க வைத்து விடுவாள்.
புதுசு என்று அவள் எதற்கும் பயந்ததில்லை. புது டிரஸ் புது ஊர், புது ஆட்கள் எல்லாம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
திருச்சி ஜங்க்ஷனிலிருந்து புதுக்கோட்டைக்கு ஆபீஸ் நேர ரயிலில் தினசரி ஒரு பட்டாளம் ஏறும். இரண்டு மணிநேரம் பயணம். ஜன்னல் ஓரத்தில் பெஞ்சமின் உட்கார்ந்திருப்பான். கிழங்கள் மகன் வேலை, மகள் கல்யாணம் பற்றிப் பேசிக் கொண்டு வருவார்கள். நடுவயசுகள் முந்திய நாள் ஆபீஸ் விவகாரங்களை அள்ளிவிட்டுக் கொண்டு வருவார்கள். ஆபீஸ் புதுசுகள் அரசாங்கச் சட்டவிதிகளின்படி தாங்கள் நீளநீளமாய் ட்ராப்ட்கள் எழுதியது பற்றித் தம்பட்டம் அடிப்பார்கள். புதிய சினிமா பற்றி, புதிய புடவை, பத்திரிக்கையில் வந்த புதிய கதைபற்றி விஜயலெட்சுமி இரண்டு கரையும் நிறைந்து ஓடும் ஆற்றுத் தண்ணீர் போல் சலசலவென்று பேசிக் கொண்டிருப்பாள். பெஞ்சமின் எதுவும் பேச மாட்டான். ஏற்கனவே படித்ததற்கான அடையாளம் தெரியும் சின்ன சின்னக் கசங்கலோடு ‘எக்ஸ்பிரஸ்’ நாலாய் மடித்தபடி கையில் இருக்கும். யாராவது கேட்பார்கள்; கொடுத்துவிட்டு ஜன்னல் வழியாய் வெளியே பார்க்கத் துவங்கி விடுவான். விஜயலெட்சுமி ஜன்னலைப் பார்க்கும் போதெல்லாம் பெஞ்சமினையும் பார்த்தாள். பெஞ்சமின் ஜன்னல் வழியாக மண்ணையும், மரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
விஜயலெட்சுமியோடு ஏராளமான ஆண்கள் ரயிலில் வலியப் பேசினார்கள். எல்லார் கூடவும் விஜயலெட்சுமி ஏராளமாய் பேசுவாள்.. ஆனால் பார்வை மட்டும் வர வர பெஞ்சமின் மீதே விழுந்து கொண்டிருந்தது. பெஞ்சமின் எப்போதாவது ஜன்னலிருந்து பார்வையை விலக்குவான். விஜயலெட்சுமி பளிச்சென்று ஆயிரம் அழகுகளோடு உட்கார்ந்திருப்பாள்.
தன்னைத் திரும்பிக்கூடப் பார்க்கத் தோணாத அந்த ஆண் பிள்ளையின் மீது அவளுக்குக் கோபம் தோன்றியதோ, வஞ்சம் வந்ததோ. இது இரண்டும் இல்லாவிட்டால் இப்படியும் ஒரு ஆண்பிள்ளை ரயிலில் உட்கார்ந்து ஜன்னலைப் பார்ப்பது, ஆபிசில் உட்கார்ந்து ஃபைல்களைப் பார்ப்பது என்று என்னவோ போல் கிடக்கிறானே என்பதால் பிரிவு வந்ததோ. அடிக்கடி பெஞ்சமினின் செக்ஷனுக்குப் போய்வர ஆரம்பித்தாள். ரயிலில் தினமும் அவனிடம் ‘எக்ஸ்பிரஸ்’ கேட்டு வாங்கினாள்.
ஆபீஸ் ஆண்கள் எல்லோருக்கும் பற்கள் ஆரோக்கியமாயில்லை என்று விஜயலெட்சுமி மற்ற டைப்பிஸ்ட் பெண்களிடம் சிரித்துக் கொண்டே சொல்வதுண்டு எல்லா ஆண்களும் அவள் முன் பல்லைக் காட்டியிருக்கிறார்கள். அவள் முன் வாயைக் கூடத் திறக்காத பெஞ்சமின் முன் அவள் பற்கள் அடிக்கடி தெரிய ஆரம்பித்தன.
பெஞ்சமினுக்கு முதலில் இதெல்லாம் ஆச்சரியமாயிருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சிற்கு ஏராளமாய் இவன் இனத்துப் பெண்கள் வருவார்கள். இளவயசுப் பையன்கள் விதம் விதமாய் உடை உடுத்தி-ஒரேயடியாய் இறுக்கிப் பிடித்தபடி, தொள தாளவென்று தரையைப் பரவியபடி வருவார்கள். உற்றுப் பார்க்கும்படி ஒவ்வொரு பெண்ணும் உடுத்தி வரும்.
இவன் எப்போதும் அணியும் இரண்டுங்கெட்டான் நிறத்தில் உடுத்தி, காந்தி ‘செருப்புகளில் போயிருப்பான். பிரார்த்தனை முடிந்ததும் காம்பவுண்டுக்குள்ளும் சாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் ஆண்பிள்ளைகள் அளந்து விடுவார்கள். அவைகளைக் காதுகளால் கேட்டால் போதாதென்று பெண் பிள்ளைகள் வாய்களைத் திறந்து கேட்பார்கள். கைகோர்த்து நடப்பார்கள். அந்த ஆண்கள் சொல்லும் அற்ப சொற்ப விஷயங்களுக் கெல்லாம் பெண்பிள்ளைகள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்கள். அந்த ஆண்களில் யாரும் நிலவரிச் சட்டங்கள், மாவட்ட சட்டம் ஒழுங்கு இவற்றில் நிபுணர்களல்ல. இருந்தும் அவர்கள் அளந்து விட்டார்கள்.
பொய்களை நினைத்துக் கொண்டும், பொய்களைப் பேசிக்கொண்டும் செல்பவர்களே காதலிக்கிறார்கள் என்று பலரையும் பார்த்து இவன் ஒரு முடிவிற்கு வந்திருந்தான். அதிகமாய் அலட்டிக் கொள்பவர்களுக்கே காதல் கீதலெல்லாம் சாத்தியம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். தன்னுடைய குணங்களைக் கொண்டு தன் இனத்தில் ஒரு பங்கரைப் பெண்ணைக்கூடத் தன்னால் கவர முடியாது என்பது எப்போதும் அவன் எண்ணமாயிருந்தது.. இப்போது விஜயலெட்சுமி சிரித்ததும் அவனுக்குள் கிடந்த என்னென்ன வெல்லாமோ ஒன்று சேர ஆரம்பித்தன.
ஆரம்பத்தில் ரெவினியூ இலாகாவின் பிரிஸ்ட்டி ஜோடுதான் விஜயலெட்சுமியைக் காதலிக்கத் தொடங்கினான். சளா புளாப் பேச்சுக் கிடையாது. சாயங்கால உலாக் கிடையாது ; ஒரு கணப்பார்வையில், ஒரு சிறு நெருக்கத்தில் காதலைக் காண்பித்தான். நாளாக ஆக அவை வடிவம் மாறின. விஜயலெட்சுமி இவனை போதைப்படுத்தினாள்:ஆகாயத்திற்கும் பூமிக்கும் தீமூட்டினாள்.
ஒரு நாள் இங்கிலீஷில் அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதினான். அப்புறம் அப்புறம் அநேகக்கவிதைகளை எழுதிக் குவித்தான்.
தேவதையே
உன் விரல்களைத்தேடி
நான் தவித்திருக்க
இரும்பாலான இயந்திரத்தை
ஏன் இப்போது
ஸ்பரிசிக்கிறாய்?
ரோஜாப் பூவிற்கு
டைப் மிஷின் முன்னால்
என்ன வேலையோ?
என் இதயம் அல்லவா
அது இருக்க வேண்டிய இடம்!
இப்படி ஏராளமாய் பேப்பர்களில் எழுதி ட்ராயரில் அமுக்கினான். மிகுந்த நெருக்கத்திற்குப் பிறகு ஒரு நாள் அள்ளி அவைகளை விஜயலெட்சுமியிடம் கொடுத்தான். இதற்காக விஜயலெட்சுமி நாலு வருஷங்கள் காத்திருந்தாள்.
பெஞ்சமினின் இங்கிலீஷ் கவிதைகளை வாங்கி வைத்து கொண்டு இரவெல்லாம் படித்தாள். அதிகமான வார்த்தைகளுக்கு டிக்ஷ்னரியிலிருந்து தான் அர்த்தம் தெரிந்தாள். மறுநாள் கொண்டு வந்து மேசையில் பரப்பி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக டைப் அடித்தாள். அன்று ஃபேர் காப்பிக்காக அவள் பங்கிற்கு வந்த ட்ராப்ட்களை யெல்லாம் பக்கத்துப் பக்கத்துப் பெண்களிடம் தள்ளிவிட்டாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு பக்கத்துப் பெண்கள் என்ன டைப் ஆகிறதென்று எட்டிப் பார்த்தார்கள். அவர்களுக்குக் கொஞ்சம்தான் புரிந்தது, ஊகம் அதிகமாயிருந்தது. புரிந்த கொஞ்சத்தையும் அதிக ஊகத்தையும் காண்டீன்,தெரு, திண்ணை,ரயிலடி, பஸ்ஸ்டாண்டு என எங்கும் ஊதி விட்டார்கள்.
விஜயலெட்சுமி இதைப் பேசுகிறவர்களோடு மல்லுக்கு நிற்கவில்லை. குழந்தைகளைப் பார்ப்பது போல் அவர்களைப் பார்த்தாள். ஸ்டேஷனில் இறங்கி சைக்கிள் ஏறி விர் விர்றென்று எல்லோர்க்கும் முன் பறந்து கொண்டு சென்றவள் சைக்கிளை உருட்டிக் கொண்டு பெஞ்சமினுடன் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் நடந்தே ஆபீஸ் வந்தாள். ஆகக் கடைசியாய் ஆபீஸ் வருவது விஜயலெட்சுமி என்றானது; கூட பெஞ்சமின்.
ஆபீஸ் வேலைகளிலேயே வெகுகாலமாய் வறண்டு போயிருந்த பெஞ்சமினுக்கு ஒரு ஜீவநதிக்கரையோரத்தில் திடீரென்று வந்தது போலாயிற்று. பால்ய காலம், படித்த காலம் எல்லாம் மறந்துபோய் தான் பிறந்திருப்பதே இப்போது தான் என்று எண்ண ஆரம்பித்தான். விஜயலெட்சுமி பேசினால், சைகை காட்டினால் அவனுக்கு சட்டென்று புரிந்தது. ஆபீஸ் ஃபைல்களிலிருந்த எழுத்துக்கள், அடுத்த நபர்கள் பேசியவை இவையெல்லாம் புரிய ஒவ்வொரு தடவையும் அவனுக்கு வெகுநேரமாயிற்று. செடிகள், பூக்கள், வானம் இவையெல்லாம் திடீரென்று அவனுக்கு வசீகரமாய்த் தோன்றின. தூக்கத்தின் நடுவே அவன் நிறைய ஷேக்ஸ்பியர் பேசுவதாய் அம்மா விடிந்ததும் சொன்னாள்.
மஞ்சலாயிருக்கும் ஒரு பையனோடு விஜயலெட்சுமி அலைகிறாள் என்று கேள்விப்பட்டதும் அவன் அம்மா ஜாடைமாடையாக அவளிடம் அதைப் பற்றிப் பேசிப்பார்த்தாள். ஏதாவது பிராமணப் பையனாயிருப்பான் என்று எச்சரிப்பில் கொஞ்சம் அசட்டையிருந்தது. அவன் ஒரு ஆங்கிலோ இந்தியன் என்று தெரிந்ததும் கடைசித் தம்பிகூட வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தான். விஜய லெட்சுமி எதிர்ச்சண்டைக்கு நிற்கவில்லை. சிரித்தும் ஜோக்கடித்தும் சமாளிக்கப் பார்த்தாள்.
பெஞ்சமினின் அம்மா பெஞ்சமினைக் கொச்சையான இங்கிலீஷில் கண்டபடி திட்டினாள். இரவு எட்டு மணிக்கு சாராயக்கடைக்கு அம்மா ஆள் அனுப்பும் போது அவன் வீட்டை விட்டு வெளியே கிளம்பினான். இல்லை யென்றால் குடித்ததும் சட்டையைக் கிழிக்க வருவாள். ராத்திரி அகால நேரங்களில் விஜயலெட்சுமி வீடு இருக்கும் ஸ்ரீரங்கம் அக்ரகாரப் பகுதிகளில் அலைந்து திரிந்தான். இவன் அலைந்து திரிந்த ஆயிரம் தடவைகளில் விஜயலெட்சுமி எப்போதாவது ஒருமுறை ரேழியில் அரைகுறையாய் உருவம் தெரிய வீட்டிற்குள் புழங்கியிருப்பாள். ஒரு முறை மின்னல் போல் வாசல் நடைப் பக்கம் தெரிந்தாள். இவன் அந்த நேரங்களில் ஆடிப்போவான். அன்றைக்கு சாயங்காலம் வரை ஆபீஸில் பார்த்தது, இருட்டி வெகுநேரம் வரை ரயிலடியில் பேசியது எல்லாம் பத்து வருஷத்திற்கு முன் நடந்தது போல் தெரியும்.
அவனுக்கு வீட்டிற்குள் படுக்கப் பிடிக்கவில்லை. அந்தக்காலத்து கேம்ப் கட்டில் ஒரு மூலையில் சுற்றிக் கட்டி வைக்கப்பட்டிருந்ததை தூசி தட்டி எடுத்து வந்து வெளியே போட்டான். இரவு வெகுநேரம் வரை நட்சத்திரங்களை எண்ணினான். பொதி பொதியாய் மேகம் ஏன் அலைகிறது என்று யோசித்தான். விஜயலெட்சுமியை நட்சத்திரமாக்கினான்; தன்னை மேகமாக்கினான் தொடர்ந்து நடுச்சாமம் வரை கற்பனையும் பெருமூச்சுமாய்க் கிடந்தான்.
காலையில் ரயில்வரும் நேரத்திற்கு ஒரு மணி முன்பாகப் போய் ஸ்டேஷனில் காத்திருந்தான். எதையாவது பார்த்தால் வெறித்துக்கொண்டு ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று பார்த்துக் கொண்டே யிருந்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பற்றி வந்து கொண்டிருக்கும் இந்தக் கிறுக்கு, லட்சத்தில் ஒருவருக்குத்தான் இவ்வளவு தீவிரமாய்ப் பிடித்துக் கொள்கிறது. பெஞ்சமின் அந்த ஒருவனாகத் திரிந்தான்.
பெஞ்சமினின் நண்பர்கள் கச்சை கட்டிக்கொண்டு உதவிக்கு வந்தார்கள் ஆபீஸ் போவதாய் ரயிலேறி வந்த விஜயலெட்சுமியும், பெஞ்சமினும் ஒரு நாள் நேராய் ரிஜீஸ்த்ரார் ஆபீசிற்குள் நுழைந்தார்கள். ஆபீஸிலிருந்து ஒரு பட்டாளம் வந்து நான், நீயென்று போட்டி போட்டுக் கொண்டு சாட்சிக் கையெழுத்து களைப்போட்டது. குடித்தனம், தேனிலவு எல்லாம் காலனி வீட்டில்தான்.
விஜயலெட்சுமிக்கு நேற்று ராத்திரி ஒருமணி சுமாரில் இடுப்பு வலித்தது. பெஞ்சமின் காலனியிலிருந்து ஒரு மைல் நடந்து போய் சைக்கிள் ரிக்ஷாவை அழைத்து வந்தான். பெண்கள் ஆஸ்பத்திரிப் பிரசவ வார்டில் ஒன்றரை மணிக்கு விஜயலெட்சுமி சேர்க்கப்பட்டாள்.
இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸிலிருந்து விஜயலெட்சுமியின் பிரேதம் காலனியில் இறங்கியது. பெஞ்சமின் கதறிக் கதறி விழுந்து கொண்டிருந்தான்.
பிரேதம் வீட்டு ஹாலில் கிடத்தப்பட்டிருந்தது. குழந்தையை எடுக்க முடியவில்லை. வயிறு ஊதியிருந்தது. “இன்னும் பத்து நிமிஷம் தூங்கி விட்டு எழுந்து விடுவேன்” என்பது போல் விஜயலெட்சுமி படுத்திருத்தாள். நூறு பெண்களின் தைரியத்தை ஒரே பெண் கொண்டிருந்தாள். நூறுவாய்ப் பேச்சை ஒரு வாயில் அவசரம் அவசரமாய்ப் பேசிவிட்டு வாயை மூடிக் கொண்டாள்.
மரணம் சகஜமானது; ஆனால் திடுக்கென்று பிடித்து நிறுத்தும் ஆச்சரியம்.
ஸ்டவ்களை அணைக்கவில்லை; கதவுகளைப்பூட்ட வில்லை; பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அரக்கப் பறக்க பெஞ்சமினின் வீட்டிற்குள் நுழைவதும் முந்தானையில் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வருவதுமாயிருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி அம்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு மூலையில் ஓவென்று அழுது கொண்டிருந்தாள். கிருஷ்ணமூர்த்தியும் பெஞ்சமினும் ரொம்ப நெருக்கம். முந்தா நாள் விஜயலெட்சுமி கிருஷ்ணமூர்த்தி அம்மாவிடம் மாங்காய் ஊறுகாய் கேட்டு வந்தாள். வெறும் ஊறுகாய் தரமாட்டேன் எங்காத்துல நீ சாப்பிட்டு ஒரு மாசத்துக்கு மேலாச்சு. ஒக்கார். ஒக்கார் என்று வயிற்றுப் பிள்ளைக்காரிக்கு பக்கத்தில் உட்கார்ந்து பரிமறினாள். அதையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருந்தாள்.
பெஞ்சமின் அரைப் பைத்தியமாகி விஜயலெட்சுமியின் உடலைக் கொஞ்சிக்கொண்டும், அழுது கொண்டுமிருந்தான்.
வீட்டிற்கு வெளியே ஆபீஸ் ஆள்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. பெஞ்சமினின் செக்ஷன் சூப்பரெண்ட் வந்தார். நாலைந்து தாசில்தார்கள் வந்தார்கள். ‘கலெக்டர் வருவார்’ என்று வந்தவர்கள் மத்தியில் சர்ச்சையும், சந்தேகமும் கிளம்பியது. அனுபவமான ஒரு ஆள் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளிவைத்தார், “டிபுடி கலெக்டர் ரேங்க்கில் செத்தால்தான் கலெக்டர் வருவார், செத்தது ஆஃப்டர் ஆல் ஒரு டைப்பிஸ்ட். உங்கள் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்; கலெக்டர் வர மாட்டார்”
சங்கத்திலிருந்து நாலைந்து பேர் வந்து ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையை வைத்துவிட்டுமெளனமாய் நின்று விட்டு வெளியே வந்தார்கள், செயலாளர் ஐநூறு ரூபாய் கொண்டு வந்திருந்தார். யாரிடம் கொடுப்பது என்று தெரியவில்லை. விக்கலும் அழுகையுமாய் நின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். ஒன்றும் புலப்பட்டு வரவில்லை. தானே நின்று எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது என்று தெரிந்ததும் மளமளவென்று வேலைகளை ஆரம்பித்தார். சங்கத்தின் மற்ற முக்கிய ஆட்களோடு பேசி விட்டு சொந்தக்காரர்களின் முகவரிகளை வாங்க பெஞ்சமினிடம் போனார்.
பெஞ்சமின் “என் விஜயாவிற்கு ஒடிக்கோலன் வாங்கி வாருங்கள், என் விஜயாவிற்கு செண்ட் வாங்கி வாருங்கள் என் விஜயாவிற்கு ம்யூசிக் போடுங்கள்” என்று இங்கிலீஷில் சொல்லிக் கொண்டிருந்தான். செயலாளரைத் திரும்பிப்பார்க்கவில்லை. பேனாவையும், பேப்பரையும் வைத்துக்கொண்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்து மெல்ல மெல்ல பேசி பெஞ்சமின் அம்மா, விஜயலெட்சுமி அப்பா வீட்டு முகவரிகளை செயலாளர் சிரமப்பட்டு வாங்கி வந்தார். தந்திகள் கொடுக்க ஆளனுப்பினார்.
அடுத்து மயானத்திற்கு ஆள் சொல்லி விட வேண்டும். எந்த மயானத்தில் ஏற்பாடு பண்ணுவது என் பதில் செயலாளர் குழம்பிப் போனார். பெஞ்சமினிடம் மெல்ல வந்தார்.
பெஞ்சமின் “உனக்கு மேரிவிஜயா என்று பெயர் வைத்தேனே. கிறிஸ்து ஏன் உன்னை இவ்வளவு அவசரமா யெடுத்துக் கொண்டார்? என் அன்பே சொல், என் கண்ணே சொல்” என்று இங்கிலீஷில் அழுது கொண்டிருந்தான்.
செயலாளர் வெளியே வந்தார். பொருளாளரை அழைத்து ‘ஆர்.ஸி’ சர்ச் முறைப்படி தான் அடக்கம் நடக்க வேண்டும் போலிருக்கிறது. நீ சர்ச்சுக்குப் போய் என்னென்ன செய்ய வேண்டுமென்று கேட்டு வா” என்று அனுப்பினார்.
இந்தச் சத்தம் காதில் விழுந்ததோ, இல்லையோ உள்ளே மூலையில் அழுது கொண்டிருந்த கிருஷ்ண மூர்த்தி அம்மாவுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. வெளியே வந்து கிருஷ்ணமூர்த்தியை அழைத்தாள், “ஏண்டா ஸ்ரீரங்கத்திலே விசேஷமான குடும்பம்டா உசிராயிருந்தப்பத் தான் அலங்கோலமாப் போனா. இப்போ பெணத்தையும் கொண்டு போய் சர்ச்சிலெ வச்சி அலங்கோல மாக்கணுமாடா” என்று அழுதுகொண்டே கேட்டாள். “அதெல்லாய் அவா அவர இஷடம். நீ போய் ஒன் வேலையைப் பாரு” என்று கிருஷ்ணமூர்த்தி கத்தினான்.
“நான் போறேனப்ப. எனக்கு இதையெல்லாம் பார்க்க சகிக்காது நான் போறேனப்பா நான் போறேனப்பா” என்று சொல்லிக்கொண்டே அடுத்த பளாக்கில் இருந்த அவள் வீட்டிற்குப் போனாள். விஜயலெட்சுமிக்கு ரொம்ப வேண்டியவர்களென்று இப்போது பெஞ்சமினைத் தவிர வேறு யாரும் பிணத்தருகில் இல்லை, பெண்கள் வருவதும் சற்று நேரம் உட்கார்வதும், வெளியே போய்மரத்தடிகளில் கூடி நின்று பேசுவதுமாயிருந்தார்கள்.
ஐந்து மணி இருக்கும் ஒரு ஆட்டோ வந்து நின்றது இரண்டு பெண்கள் தலைநிறைய பூ வைத்து பவுடர் பூச்சுக் கலையாமல் வந்து இறங்கினார்கள். விஜயலெட்சுமி அம்மாவும் விஜயலெட்சுமி தங்கையுமாம் உள்ளேயிருந்த பெண்கள் வருவது யாரென்று தெரிந்ததும் துக்கம் தொண்டை அடைக்க விம்மத் தொடங்கினார்கள். வந்த இருவர் முகங்களிலும் பெரிய மாதிரிக் கவலை இல்லை. “நீ ரெண்டு வருஷத்துக்கு முந்தியே செத்துப் போயிட்டெடி. இப்பத்தான் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு”, என்று அம்மாக்காரி சத்தம் போட்டாள். தங்கைக்காரி உட்காரக்கூட இல்லை “இங்கே டெலிபோன் எக்ஸ்சேஞ் எங்கே யிருக்கு. என் அண்ணாவுக்கு ஃபோன் பண்ணனும்” என்று கேட்டுக்கொண்டே வெளியேவந்து விட்டாள். அம்மாக்காரி சிறிது நேரம் உடலருகில் உட்கார்ந்தாள், சற்று கலங்குவது போல் வந்தது. வெளியே யிருந்து சின்ன மகள் கூப்பிடும் சத்தம் கேட்டதும் உதட்டை ஒருமுறை கடித்து விட்டுக் கொண்டே வெளியே வந்தாள். ஆட்டோ காத்திருந்தது.
இருவரும் ஏறிப்போய் விட்டார்கள்.
மரத்தடியில் கூடி நின்ற பெண்கள் அம்மாக்காரியும் மகள்காரியும் வந்த பவிசையும், போன பவிசையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தாளே விஜயலெட்சுமி மறுபடி அவள் வீட்டிற்குள் போகவில்லையே தவிர இப்போது வந்த தங்கைக்காரி மாதா மாதம் சம்பளம் நாளன்று வந்து விஜயலெட்சுமியிடம் நூறு இருநூறென்று பற்றிக் கொள்ளாமல் போனதில்லையாம். விஜயலெட்சுமி யோடு கொஞ்சம் நெருங்கிப் பழகிய பெண் ஒருத்தி சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆறுமணியாயிற்று. இன்னும் பெஞ்சமின் வீட்டிலிருந்து ஆள் யாரும் வரவில்லை. செத்தது ரெட்டை உயிர்கள். வயிறு வீங்கி உயரமாகிக்கொண்டிருந்தது. பிணத்தின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. பெஞ்சமின் பஞ்சை எடுத்து அடைத்தான்; எறும்புகளை விரட்டினான்; கர்ச்சிப்பால் விசிறிவிட்டான்; தனியாய் அழுது கொண்டிருந்தான்.
பாதிரியாருக்கு ஆள் போய்சொல்லிவிட்டு வந்தார். வண்டிக்கு ஏற்பாடு செயதாகி விட்டது. தச்சர் வந்து அளவெடுத்துப் பெட்டி செய்து கொண்டிருந்தார் மரப்பிளாச்சுகளில் சிலுவை ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. சங்கத்து ஆட்கள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்,
வெளியே இருந்த ஆட்களுக்கு நேரம் கஷ்டப்பட்டுக் கழிந்து கொண்டிருந்தது பொறுமை மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. பொழுதும் நன்றாக இருட்டி வந்து கொண்டிருந்தது. உள்ளே பிணத்தின் வயிறு எந்த நேரமும் சேதமாகி விடலாம் என்ற நிலைமைக்கு ஊதிக் கொண்டு போனது பெஞ்சமின் வீட்டிலிருந்து இன்னும் ஆட்கள் வர வில்லை.
பிணம் மயானத்திற்குப் போகும்முன்பே கிருஷ்ண மூர்த்தி அம்மா குளித்துவிட்டு மடியாகி விட்டாள். விஜயான்னா எனக்கு உசிராச்சே; ‘விஜயான்னா எனக்குக் கரும்பாச்சே; அவளைப் பாக்காமெ எனக்கு ஒரு நாளும் தூக்கம் வராதே’ என்று ஆரம்பத்தில் புலம்பியவள் பெட்டி செய்வதையும் சிலுவை செய்வதையும் சகிக்க முடியாமல் விஜயலெட்சுமியின் பிணம் என்னவாவது ஆகட்டும் என்று குளித்து முடித்து ஃபேனுக்கடியில் தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
ஒன்பது மணிக்கு இரண்டு ஆங்கிலோ இந்தியர்கள் ஒரு ரிக்ஷாவில் வந்து இறங்கினார்கள். பெஞ்சமினின் அண்ணனும், தம்பியுமாம். ‘வேர் இஸ் மம்மி வேர் இஸ் மம்மி’ என்று அவர்களைப் பார்த்து கத்தி அழுதான் பெஞ்சமின். ‘அம்மா வராமல் விஜயாவை அனுப்ப மாட்டேன்’ என்று விஜயாவின் உடலைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.
பெஞ்சமின் அம்மா ஏன்வரவில்லை என்று யாருக்கும் புரியவில்லை. வந்தவர்ளை வெளியே அழைத்துப் போய் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் ஒழுங்காய் ஒரு பதிலில்லை.
செயலாளர் ஒரு டாக்ஸி கொண்டுவரச் சொன்னா பொருளாளரையும் பெஞ்சமினின் அண்ணனையும் அதில் ஏற்றினார். ”போக ஒரு மணி நேரம். வர ஒரு மணி நேரம். பதினோரு மணிக்குள் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்து விடுங்கள். பாதிரியார் சர்ச்சிலேயே படுத்திருப்பார். பன்னிரெண்டு மணிக்குள் அடக்கம் நடந்தாக வேண்டும். சீக்கிரம் வண்டியைக் கிளப்பு” என்று தள்ளிவிட்டார்.
ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு மங்குவதும் பிரகாசமாவதுமாய் வெளியே எரிந்து கொண்டிருந்தது. மதியம் இருந்த கூட்டத்தில் கால்வாசிப் பேர் பெஞ்சுகளிலும், சாலையிலும் தூங்கி வழிந்தார்கள்.
பெஞ்சமின் மட்டும் விஜயலெட்சுமியின் உடலோடு தனிமையில் பேசிக் கொண்டிருந்தான். நடு நடுவே உடலில், கன்னத்தில் வாயில் முத்தமிட்டுக் கொண்டே அழுதான். அவனைத் தணிக்க யாராலும் முடியவில்லை.
காலனியில் எல்லோர் வீடுகளிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கிருஷ்ணமூர்த்தி வீடு மட்டும் இருளோவென்று கிடந்தது. “மாமி படுத்திருப்பாள்” என்று பெண்கள் கிசுகிசுத்தார்கள்.
பன்னிரண்டு மணி சுமாருக்குப் போன டாக்ஸி வந்து இரண்டு வயதான கிழவிகள், இரண்டு நடுத்தர வயதுப்பெண்கள் – கவுன்களோடு, மூன்று ஆண்கள் பூட்ஸ் கால்களோடு இறங்கினார்கள்.
எல்லோர் வாய்களிலும் சாராயவாடை. இங்கிலீஷில் கத்திக்கொண்டு, ஆடிக்கொண்டு அழுது கொண்டு ஒரே கலாட்டா.
ஒருவழியாய் விஜயலெட்சுமியின் உடலை பெட்டியில் வைத்து வண்டியிலேற்றும் பொழுது மரங்களில் அடைந்திருந்த பறவைகள் எழுந்து சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தன.
வந்திறங்கிய ஆங்கிலோ இந்தியர்களின் வாய் சாராய வாடை மயானமெங்கும் நிறைந்திருந்தது . பெட்டியை இறக்கி மூடியதும் ஒரு ஆங்கிலோ இந்தியர் அழுது கொண்டே சிகரெட் பெட்டியை திறந்தார். மூன்று , நான்கு பேர் பெஞ்சமின் சொந்தக்காரர்கள் விம்மல்களுக்கிடையே சிகரெட்களைப் பற்ற வைத்தார்கள். ஒருவன் சிலுவையை வாங்கிப் பிணமேட்டில் ஏறினான். நிறைந்த போதையில் தள்ளாடினான். சிலுவையின் இரண்டு பக்கங்ளையும் பிடித்து அழுத்தி ஊன்றப்போனான் சிலுவையின் ஒரு கை ஒடிந்து விழுந்தது. பெஞ்சமின் மேலும் அழுது விழுந்தான்.
காலனி ஆட்கள் வீடு வந்து சேர வெகு நேரமாகி விட்டது. கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்குப் போய்க் கதவைத் தட்டினான், கிருஷ்ணமூர்த்தி அம்மா நிறை தூக்கத்திலிருந்து வந்து கதவைத் திறந்தாள்.
– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.
![]() |
கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 143
