உதவி மறக்காத உள்ளம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 537

1980 ஆம் ஆண்டு. கோடை காலம். சனிக்கிழமை . விடியற்காலைப் பொழுது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தின் தேருக்கு எதிராக வீரபத்ரன் தெருவில் உள்ள ஒரு ஒண்டுக்குடித்தன காம்பவுண்டில் , மூன்றாவதாக உள்ள தன்னுடைய வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து குனிந்து கோலமிட்டு நிமிர்ந்த ஒடிசலான இளம்பெண் மல்லிகா , வீட்டின் உள்ளே செல்ல முற்பட்ட போது பால்காரர் வந்து நின்றார். பாத்திரத்தை எடுத்து வந்து பாலை வாங்கிச் சென்று சமையலறையில் வைத்து விட்டு , வாசற் கதவை அடைக்க நினைத்த போது அவளுடைய கணவன் கட்டுடல் இளைஞன் பாஸ்கர் வந்து நின்றான். அவள் அவனைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் கைகளைப் பிடித்தான்.
“ஆபீஸ்ல ஆடிட்டிங் முடிக்க நேரமாயிடுச்சு . “ சொன்னான்.
“எந்த ஆபீஸ்.. கல்யாணம் ஆகாத ஒங்க ப்ரண்ட்ஸ் ரூமா ? “ என்றாள் மல்லிகா.
பின்பக்கம் சென்று விட்டு வந்த பாஸ்கர், உடை மாற்றிக் கொண்டு மர மேசையில் அவள் வைத்திருந்த காபி பானத்தை மர நாற்காலியில் அமர்ந்து பருகினான். அவளிடம் வாயைக் கொடுக்க கூடாது என்று தான் நினைத்தான். ஆனால் முடியவில்லை.
“என்ன மல்லி ஏன் உர்ன்னு இருக்கே உனக்கு என்ன குறை வைச்சேன்…. எப்பயாவது நைட்ல ஒன்ன தனியா இருக்க வெச்சுடறேன். மத்தப்படி… “
“என்ன மத்தப்படி …. ஊர்ல நாங்க இருந்த எங்க வீட்ல வாசல்லேந்து தோட்டம் வரைக்கும் நடந்தாலே வாக்கிங் ஆயிடும் … இங்க புறாக்கூண்டு வீடு.. ஒரு சின்ன கூடம் சின்ன சமையலறை … குளிக்கறதும் மத்ததும் வீட்டுக்கு வெளியே எங்கேயோ…
வசதியான வேற வாடகை வீட்டுக்குப் போற அளவுக்கு சம்பளம் அதிகமா கொடுக்கற கம்பெனிக்கு தாவணும் … நீங்க இந்த கம்பெனிலய இருப்பேன்னு இருக்கீங்க … “
“அப்ப எனக்கு வருவாய் ஈட்ட துப்பு இல்லேன்னு சொல்றே? அதானே?“
“உங்களுக்கு துப்பு இல்லேன்னு எங்கே நான் சொன்னேன். ஒங்க திறமைக்கு நீங்க பெரிய பெரிய கம்பெனில சேர்ந்து படிப்படியா உயர்ந்து வாழ்ந்து காட்டலாம் அதை ஏன் செய்ய மாட்டேங்கறீங்க ன்னு தான் சொல்றேன்.“
“பிரைவேட் கம்பெனி அக்கவுன்டன்ட் ஒய்ப் ன்னா ஒன்ன சொல்றாங்க … எழுத்தாளர் கதிரோட மனைவின்னு காம்பவுண்ட் பெண்கள் எல்லாம் சொல்றாங்க இல்ல … “
“அந்த பெருமையை வெச்சுகிட்டு நகைநட்டு வாங்க முடியுமா? சோபா செட் வாங்க முடியுமா? நான் ஒண்ணு சொன்னா நீங்க வேற சொல்வீங்க கதை எழுதி எல்லாம் சம்பாதிக்கறீங்க இல்ல பேங்க் ல அறுபதாயிரம் வைச்சு இருக்கீங்களா?“
“கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு அவ்வளவு பணம் என் கிட்ட எங்கே?“
“கிராமத்துல மாமாவும் அத்தையும் நிறைய சம்பாதிக்கறாங்க இல்ல நீங்க பட்டினத்துல சம்பாதிக்கறதை விட … ? “
“அம்மாவும் அப்பாவும் ஊர்ல விவசாயம் பார்த்து … மாடு வளர்த்து நிறைய சம்பாதிக்கறாங்க.. மருதகாசி ஐயாவோட மணப்பாறை மாடு கட்டி பாட்ல அம்மா , ஆறை நூறாக்குவாங்கன்னு வருமே அது போல எங்க அம்மா ஆறை நூறாக்கும்…”
“அப்ப அவங்களுக்கு லெட்டர் போட்டு அறுபதாயிரம் அனுப்ப சொல்லுங்க”
“என்ன அறுபதாயிரத்துல இருக்கே … மனை வாங்கப் போறியா ? ஒன் தம்பிக்கு கொடுக்கப் போறியா?“
“மனையும் இல்ல ஒண்ணும் இல்ல என் தம்பிக்கு நான் ஏன் ஒங்க பணத்தை கொடுக்கணும். இது நீங்க இழுத்துகிட்ட வம்பு..”
“என்ன உளர்றே?“
“ம்ம்.. ஆமாம் உளறல்தான். ஏன் பேச மாட்டீங்க.. அமுதம் பத்திரிகையில நம் அருகில் இவர்கள் … ன்னு கற்பனை கேரக்ட்டர்ன்னு எழுதறீங்க இல்ல.. அதுல போன வாரம்.. செங்கல்பட்டு வீரான்னு எழுதினீங்க இல்ல…
நிஜமாவே செங்கல்பட்டுல வீரான்னு ஒருத்தர் இருக்காரு நீங்க மாமூல் வாங்கறவன் அடாவடி பண்றவன்னு அவரை பத்தி எழுதி ஊர்ல அவருக்கு இருக்கிற நல்ல பேரை கெடுத்திட்டீங்களாம் .. அதுக்கு நீங்க அவருக்கு அறுபதாயிரம் நஷ்ட ஈடு தரணும் னு நோட்டிஸ் பத்திரிகை ஆபீஸ் அட்ரசுக்கு அனுப்பி இருக்காரு … ஒங்க கிட்ட கதை வாங்கிட்டுப் போவாரே பத்திரிகை ஆபீஸ் பெரியவர் நேத்து சாயந்திரம் இந்த நோட்டிசை கொடுத்துட்டு போனாரு … “
பாஸ்கர் அதனைப் படித்தான்.
சில நிமிடங்களில் இதுதான் எழுத்தாளர் கதிர் வீடா என்று கணீர் குரல் ஒலித்தது. கணவனும் மனைவியும் திரும்பிப் பார்த்தனர். அந்த கூடத்தில் இடம் இல்லாத இடத்தில் ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர்.
குரல் கொடுத்தவர் வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டை அணிந்த வாட்டசாட்டமான , உயரமான உருவம் பெரிய மீசை கொண்ட நடுத்தர வயதினர். அவருடைய நான்கு சகாக்களும் உயர்ந்த கனமான உருவம் கொண்ட இளைஞர்கள். மல்லிகா அவரைப் பார்த்து முகம் மலர்ந்தாள். பாஸ்கருக்கு அவரைப் பார்க்க உள்ளூர அச்சம் தோன்றியது . வெளிக்காட்டிக் கொள்ளாமல் எழுந்து நின்றான்.
“வீரமுத்து அண்ணே …. வாங்க … இவர்தான் என் வீட்டுக்காரர் … “
பாஸ்கர் கைகூப்பினான். பாஸ்கர் அமர்ந்து இருந்த நாற்காலியில் வீரமுத்து அமர்ந்தார். பாஸ்கர் அருகில் உள்ள ஸ்டூலில் அமர்ந்தான்.
மல்லிகா ,அவரிடம் எவர்சில்வர் டம்ளரில் தண்ணீர் கொடுத்தாள்.
பருகி விட்டு அவர் பேசினார் –
“மணி என்ன ஆச்சரியம் பார்த்தியா இந்த மல்லி என் தங்கச்சி மாதிரி..
என் தங்கச்சி மீனாவோட சிநேகிதி … மீனா, பெரிய புள்ளியோட பையனை காதலிச்சுது அவங்க முறையா பொண்ணு கேட்டாங்க மனசு ஒத்துப் போச்சேன்னு நாங்களும் எப்படியோ பணம் புரட்டி ஏற்பாடு பண்ணிட்டோம். கல்யாணத்து அன்னிக்கு வரதட்சிணை பாக்கி உடனே கொடுன்னு அமர்க்களம் பண்ணாங்க பையன் வீட்லே … நாங்க கையைப் பிசைஞ்சுகிட்டு நின்னப்ப , இந்த மல்லிகா . சின்னப் பொண்ணு அவங்க கிட்ட பேசற விதத்துல பேசி , கல்யாணத்தை நிறுத்தினா என்ன ஆகும்னு சொல்லி கல்யாணத்தை நடத்தி கொடுத்துச்சு… பெரிய உதவி … அப்ப எல்லாம் நாம ஜனங்க கிட்ட பெரிய ஆளா உருவாகாத காலம் .. மல்லிகாதான் என் தங்கச்சிய கரை ஏத்துச்சி.. இது போய் பேசறப்ப சம்பந்தி வீட்ல நீ யார் பேசறதுக்குன்னாங்க .. வீரமுத்து என் அண்ணன் மீனா என் தங்கச்சி .. நான் அவரோட சித்தப்பா பொண்ணு ன்னு ஒரே போடா போட்டு அவங்க வாயை அடைச்சுது . காலத்தினால் செய்த உதவிங்கறது .. . “
மல்லிகா பேசினாள் – “பத்து வருசம் ஆயிடுச்சு இன்னும் ஞாபகம் வெச்சு இருக்கீங்க அண்ணே.. மீனா எப்படி இருக்கா?“
“கோயம்புத்தூர்ல சௌக்கியமா இருக்கா .அவ . ரெண்டு ஆண் பிள்ளைங்க.. “
“அண்ணே … இது ஒண்டுக்குடித்தனம் வீடு திடுதிடுப்புன்னு இத்தனை பேர் “…
“ஆமாம்பா நீங்கள் எல்லாம் போங்க இந்த காம்பவுண்ட் கிட்டயே நிக்காதீங்க தெருமுனைல நில்லுங்க .. ஒருத்தர் மட்டும் பூவும் பழமும் வாங்கிட்டு சீக்கிரம் வாங்க ” என்றார் வீரமுத்து.
வீரமுத்துவின் சகா ஒருவன் , சில நிமிடங்களில் வெவ்வேறு பழங்கள் அடங்கிய கூடையையும் வாழை இலையில் சுற்றிய மல்லிகைப்பூவையும் வீரமுத்துவிடம் கொடுத்தான். அவர் அதனை மல்லிகையின் கைகளில் கொடுத்து விட்டு எழுந்து நின்றார்.
“சரி வரேன்ம்மா.. பத்து வருசம் கழிச்சு மெட்ராஸ்ல ஒன்ன பார்க்க வெச்சிருக்கு சாமி வரேன் மாப்பிள்ளை … “
மல்லிகா “அண்ணே அந்த நோட்டிஸ் … “
வீரமுத்து சொன்னார் – “உன் புருசன் எனக்கு மாப்ளே.. அதை வாபஸ் வாங்கறதா கடிதம் அனுப்ப சொல்றேன்… ஆனா , அடுத்த வாரம் ஆசிரியர் கிட்ட சொல்லி மாப்பிள்ளைய ஒரு குறிப்பு போட சொல்லு.. செங்கல்பட்டு வீரான்னு ஒருத்தர் நிஜமாவே இருக்காரு ஆனால் அவர் மக்கள் தொண்டனா சேவகனா இருக்காரு ஓடோடி உதவுபவரா இருக்காரு நானே நேர்ல பார்த்தேன் ன்னு ஒரு குறிப்பு எழுத சொல்லிடு கால் பக்கத்துக்காவது … “
“என்னங்க அண்ணா சொன்னதை கேட்டுகிட்டிங்களா?” என்று கணவனின் முகத்தைப் பார்த்தாள் மல்லிகா.
“சரிங்க அய்யா” என்றான் பாஸ்கர் .
“மச்சான்னு சொன்னா ஆகாதா?“ என்று தமது முரட்டுக் கரங்களால் அவனுடைய முதுகில் தட்டி விட்டு வெளியே சென்றார் வீரமுத்து . மல்லிகாவின் முகத்தில் புன்னகை.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
