அவள் சாரதி
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 12,322
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாத்தனூர் அணைக்கட்டுக்கான பிரிவுச்சாலையில், அந்தத் தனியார் பஸ் விலகி வேகம் பிடித்தபோது, ஈரப் புழுதியின் வெக்கையான வாடை, நாசியைத் துளைத்தது. சிலமணி நேரத்திற்கு முன்தான் எறிதூறலாக தூவானம் போட்டிருக்கிறது.
சரசுக்குள் சந்தோஷம் கும்மியடிக்கத் துவங்கிவிட்டது. முகத்தில் அதன் வெளிப்படையான மலர்ச்சி, கண்களில் ஒரு விரிவு, ஒரு மின்னல்.
சாலையின் ஓரத்தில் ஸல்யூட் அடிக்கிற சிலையைப் பார்த்ததும், முகமெல்லாம் சிரிப்பாய்க் கை கொட்டினாள். குதூகலமாய் இவனைப் பார்த்தாள். ‘அய்ய…! நம்மளுக்கு வணக்கம் சொல்லி வரவேற்கிறாரு.
சந்தோஷ நதியாகத் துள்ளுகிற சரசுவை, ஒரு மெலிந்த புன்னகையோடு நோக்கினான் ராசேந்திரன். உள் மனசின் இருட்டும், கலக்கமும் அவனது கண்களில் நிழலாகத் தொங்கியது. சரசுவைப் போல மகிழவும், துள்ளவும் அவனால் இயலவில்லை. காலையிலே அவளுக்குத் தெரியாமல் ‘பாலிடால்’ வாங்கி வைத்துவிட்டான். இருவருக்குமான முடிவு எது என்பதை, அவன் நேற்றே முடிவு செய்துவிட்டான். அதை அவளிடம் சொல்லுகிற தைர்யம்தான் இன்னும் வரமாட்டேன் என்கிறது. அந்த முடிவு- இன்று இரவே…!
இவன் மனசுக்குள் அழுத்துகிற கனம்; மூச்சுத்திணற வைக்கிற பாரம். குழந்தையைப்போலக் கும்மாளமிடுகிற இந்தக் காதலியின் இதயத்தில், அந்தச் சோக முள்ளை எப்படிச் சொருகுவது?
ஓரக் கண்களால் சரசுவைப் பார்க்கவிடாமல், திரை போட்டு மறைக்கிற நீர்க்கசிவு…
“என்னங்க, இங்கதா நாம எறங்கணுமா?”
ஆவல் பரபரப்பில், சரசு, அவன் தொடையைத் தட்டினாள். அவன் தடுமாறிப்போய்ப் பார்த்தான். “ஆ…ங் ஆமாமா… இங்கதா’ அவன் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டான். அவளும் ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டாள். கைலியும், காக்கி ஷர்ட்டுமாக இருந்த கண்டக்டர், ‘எறங்குபா” என்று பயணிகளை துரிதப்படுத்தினார். இறங்குகிற பயணிகளுக்குள் வார்த்தைகள். சத்தங்கள்.
‘புச்சுக்கபா’, ‘இன்னாபா’ ஒன்னோட ஒரே பேஜாரு பா’. அந்நிய பூமி என்று உணர்த்துகிற அந்நிய உச்சரிப்புகள். எல்லோரும் இறங்கியபிறகு, கடைசியாக இந்தக் கிளிகள் இறங்கினர். கிளை கிளையாய் ஏற்றமாய் இறக்கமாய் ரோடுகள். ‘எந்த வழியில் செல்வது?’ மற்ற சுற்றுலாப் பயணிகள் செல்கிற திசையிலேயே இவனும் நடந்தான். மதிய வெயில், காற்று சிலுசிலுப்பதால்… சற்றுச் சுகமாகவே இருந்தது. குறுக்காக ஒரு கேட். மறித்துக்கொண்டு ஒரு காக்கி உடுப்பு.
“உள்ளே போவணும்னா டிக்கட் வாங்கிக்கினு போ.”
“சரி.”
“இங்கே பாருங்க…நெசப்பாம்பு மாதிரியே செய்ஞ்சுருக்காக. அடியாத்தாடி.” அவன் தோளைச் சுரண்டி வியப்புக் கூச்சலாய் கத்தினாள். இவன் மெலிதான அதே புன்னகையில்… மலைபோல் உயரமாய், பிரம்மாண்டமாய் நிற்கிற அணைக்கட்டு. இத்தனை பெரிய அணைக்கட்டை ஒரு பொட்டலம்போல மடியில் போட்டு பொத்திக்கொண்டு, ஓங்கு தாங்காய் நிற்கிற மலைத்தாய். தொட்டிலைப்போல் வளைவாய்க் கிடந்த சிமெண்ட் ரோடு. இறங்குமுகமான ரோட்டில், தன் பாதம் ‘சட் சட்டென்று சத்தம் கிளப்ப, குஷியாக நடந்தாள் சரசு.
ஆங்காங்கே சிறிய சிறிய பூங்காக்கள், வண்ண வண்ணச் செடிகள், கலர்க் கலராய் இலைகள், வானத்து நட்சத்திரங்களாய்ப் பூக்கள். குடும்பங்கள் தனித்தனியாக உட்கார்ந்து, கொண்டு வந்திருந்த பொட்டலங்களை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்து… புதிய உலகில் பிரவேசித்த சிறுமியைப்போல அவள் மனசாலும் உடலாலும் குழந்தையாகி, புதிய அழகிலும், யௌவனத்திலும் ஜொலிக்கிற சரசு…
இன்று இரவு இவனோடு சேர்ந்து, மரணத்தைத் தழுவப்போகிற சரசு…
கந்தகப் பூமியான காமராசர் மாவட்டத்தில், செவல்பட்டி வட்டாரத்தில், வேலி மரங்களுக்கு எமனாகப் பிறந்தவன் ராசேந்திரன். விறகு வெட்டுவது இவனுக்குச் சுவாசத்தைப்போல. கடின உழைப்பு என்கிற களைப்பே காணாமல் இயல்பாகச் செய்வான்.
வேலி முள் விஷ முள். காலில் குத்தி, நீர்கட்டி, புரையோடிச் செத்தவர்கள் உண்டு. அந்த வேலி முள், இவனைக்கண்டால் நடுங்கும்; அரிவாளும் துரட்டியும்தான் சாதனம். கல்குவாரித் தொழிலாளி கழற்றிப்போட்ட கனத்த பூட்ஸ், காலுக்குக் கவசம். துரட்டி அவன் கையில் மின்னலைப்போல் செயல்படும். நீள நீள முள்கிளைகளை கவை கவையாக இழுத்துப்போடும். அரிவாளைக் கையில் எடுத்துவிட்டால்… உயரஉயரமாய் ஓடி வளர்ந்திருக்கிற மரத்தின் கொப்புகளையெல்லாம் நிமிஷத்தில் துண்டு துண்டான விறகாக்கிக் குவியலாக்கிவிடுவான்.
டவுசரும், தலைப்பாகையும்தான். உடம்பெல்லாம் படிந்திருக்கிற வியர்வையில் பொடிப் பொடியாய் வேலி இலைகள் ஒட்டியிருக்கும்.
மூணு குறுக்கம் அளவுக்குக் காற்று நுழையாத நெருக்கத்தில், அடர்த்தியாய், வேலிமரங்கள் அசோகவனமாய் கிடந்தாலும்… ஒற்றையாளாகவே நான்கு நாளில் விறகாக்கிவிடுவான். புஞ்சை வெறிச்சோடிப்போகும்.
விறகுதான் முக்கியம். துரட்டியால் இழுத்து ஒதுக்கப்பட்டு மலைமலையாகக் குவிந்து காய்ந்து கிடக்கின்ற முள் கிளைக் குவியல், எதற்கும் பிரயோஜனப்படாது.
கூலிவேலை கிடைக்காத நாட்களில், கூலிக்காரப் பெண்கள் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது? முள்ளுக்கு வருவார்கள். ஒரு கட்டு கட்டிப் போய் விற்றால், பத்தோ பதினைந்தோ கிடைக்கும். அடுப்பு எரியும். வயிறு நனையும்.
இவனிடம் வந்து முள்ளு கேட்டுக் கெஞ்சுவார்கள். கித்தாப்பாக மறுப்பான். அடாவடி செய்து விரட்டுவான். ஒரு சிலர் கெஞ்சிக் கூத்தாடுவார்கள். கொஞ்சமாய் இளகுவான். சிரிப்பும், நக்கலுமாய் பேசுவான், நெருங்குவான். ‘அங்க இங்க’ தொட்டுச் சிரிப்பான். ஒன்றிரண்டு படிந்துவிடும்.
இவனுக்கு இது பெரிய குற்றமாகத் தெரிந்ததேயில்லை. வெறுமனே வாலிப விளையாட்டு. வயசுக் குறும்பு, இவனது இளமையின் வெற்றி, ஈர்ப்பு சக்தியின் வெற்றி, முகராசி,பட்சி- அப்படித்தான் நினைப்பான்.
அப்படித்தான்,சரசுவும் ஒருநாள் வந்தாள். கையில் சும்மாட்டுத் துணி,கயிறு, ஒரு தடித்த குச்சி,மூகத்தில் ஏகமாய் தயக்கம்.
“மோலாளி,”
பயம் கலந்த அந்த அழைப்புக் குரல், அவனுள் ரகசியமாய் ஒலித்தது. திரும்பினான். ‘முதலாளி’ என்று பவ்யமாய் அழைப்பது யார்?
நல்ல இளம் கிளி.சிவப்பான -ஒல்லியான – அழகுக் கிளி.
அவனுள் நரம்புகளில் ஓடிய இன்பச் சிலிர்ப்பு.
“என்னம்மா?”
“அஞ்சாறு முள்ளு எடுத்துக்கிட்ட்டா?”
”யாரும்மா நீ?”
”நம்ம ஊருதா மோலாளி.”
”நம்ம ஊரா?”
“பூச்சன் மகள், கடைக்குட்டி, தேனி சைடுலெ கட்டிக் குடுத்துருந்தாக.”
“பெறகு ஏன், இங்கே இருக்கே?”
“தீர்த்துக்கிட்டோம்.”
“எப்ப?”
“பத்து நாளாச்சு.”
“எப்ப கல்யாணம் நடந்துச்சு?’
“போன வைகாசியிலெ.’
“ஒரு மாசத்துக்குள்ளேயா தீத்துட்டீக? எதுக்கு?”
“அது ஒரு அசிங்கம் பிடிச்ச குடும்பம், மோலாளி. துப்புக் கெட்ட மனுசங்க. அப்பனுக்கும் பொண்டாட்டியாயிருன்னு புள்ளையே சொல்றான். த்தூ! அஞ்சாம் நாளே வண்டியேறி ஓடியாந்திட்டேன். அவுக வந்து தீத்துட்டுப் போயிட்டாக.”
இவனுள் மோகப் பரவசம். வலையில் விழக்கூடிய கிளிதான்… பேரத்தை முறுக்காகத் துவக்கினான். இங்க முள்ளெல்லாம் யாரும் எடுக்கக்கூடாதும்மா. கரிமூட்டம் போடுறவுக இந்த முள்ளெல்லாம் வேணும்னு ரேட்டு பேசி, அட்வான்சு குடுத்துட்டுப் போய்ட்டாக.”
“அப்படியா மோலாளி, அப்பச்சரி.”
முகத்தில் மெல்லிய வாட்டம். ஏமாற்ற நிழல். கண்களில் வருத்தம். திரும்பிவிட்டாள். இவனுக்கும் ஏமாற்றம். பகீரென்றது. கெஞ்சுவாள் என்று எதிர்பார்த்திருந்தான்.
“இந்தா, ஏம்மா! வந்தது வந்துட்டே, வெறுங்கையோட போக வேண்டாம். முள்ளைத் தட்டி எடுத்துக் கட்டு. சமாளிச்சிடுக்கிடுதேன்”
“சரி, மோலாளி.”
இவனைப் பார்த்தாள். பார்வையில் குளிர்ச்சியாய் ஒரு நன்றி பாஷை. இவனுள் ஏராளமான குருவிகள் ‘ஜிவ்’ வென்று சிறகடித்தன.
அப்புறம் இவனுக்கு வேலையே ஓடவில்லை. வெட்டிக் கொண்டிருந்த மரத்து நிழலில் நின்றான். தலைப்பாகையை அவிழ்த்து, உடம்பைத் துடைத்துக்கொண்டான். பெருமூச்சுடன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான்.அவனது பார்வை, அவள்மீதே நங்கூரமிட்டிருந்தது.
பின்னிப் போய், சிக்கலும் சிடுக்குமாய்க் கிடந்த குவியலிலிருந்து சிரமத்துடன் முள்ளைக் குலுக்கி குலுக்கி உருவுகிறாள். சிலுப்பிக் கொண்டிருக்கிற இணுக்குகளை குச்சியால் அடித்து நொறுக்கி… நீட்டிப் போட்டிருக்கிற கயிறின் மீது போட்டு…கட்டி முடித்துவிட்டாள். நீளமாக பெரிய கட்டு. ஆவரங்கொழையை ஒடித்து தலைப்பத்திக்கிற இடத்தில் சொருகிக் கொண்டாள். நிமிர்ந்து, தூரத்தில் நிற்கிற அவனைப் பார்த்தாள்.
“தூக்கிவிடணுமா?”
‘ஆமா’ என்பதுபோலத் தலையசைக்கிறாள்.
“இங்க வா.”
தயங்கினாள், திகைத்தாள். மானின் மருட்சி. அப்புறம் மெதுவாக வந்தாள்.
“வேலை முடிச்சாச்சா?”
“ம். கட்டிக்கிட்டேன்”
“வா இப்புடி,நிழலுக்கு வேர்வையை ஆத்திட்டுப் போ.”
“இன்னும் செமந்து வீடு கொண்டுபோய்ச் சேக்கணுமே.”
“இதைக் கொண்டுபோனா, இருவது ரூவா கெடைக்குமா?”
“அம்புட்டு எப்புடி குடுப்பாக? எட்டோ பத்தோ கிடைக்கும்.”
“சரி…ஒரு மணி நேரத்துலே வேலை முடிஞ்சிருச்சே”
“அது நெசந்தா” பெருமூச்சில் அயற்சியும், ஆயாசமும் தெரிகிறது. அத்துடன் மெல்லிசாகச் சிரித்தாள். உதடுகளில் அதே நன்றி உணர்ச்சி. மெல்லிய காற்று, காதோர ரோமங்களை அசைக்கிறது. வியர்வையைத் தழுவியணைத்துச் செல்கிற காற்றின் சுகத்தில் கிறங்கிப்போய்… கண்களை மூடியவளாய் சிலிர்த்தாள்.
அந்தக் கணம் பேய்க்கணம்.
விருட்டென்று –
அவளது தோளில் இடதுகை வைத்த மாத்திரத்தில், இடுப்பில் வலதுகையைச் சுற்றி இழுத்து அணைத்தான். அவன் எதிர்பார்த்த மாதிரி அவள் துள்ளவில்லை. திமிறவில்லை. கத்தக்கூடச் செய்யவில்லை. பரவசப் பரபரப்பில் முத்தமிட முனைந்தபோது-
எதிர்ப்பட்ட அவளது கண்கள்; அமைதியான அழுத்தமான பார்வை; ‘நில்லடா பொறுக்கி’ என்று செவிட்டில் அறைகிற கண்டிப்பான பார்வை. ‘சீ, நாயே’ என்று காறித்துப்புகிற நிதானமான பார்வை.
“கையை எடுங்க.”
பதற்றமில்லாத அதிகாரத் தொனி. அசந்துவிட்டான். பெட்டிப் பாம்பாகக் கட்டுப்பட்டான். குழம்பிப்போய் விலகி நின்றான்.
“என்ன இது?”
வார்த்தைகள் அவனுள் மாயம் காட்ட, நாக்குத் தடுமாறித் தவித்தான்.
“முள்ளு கட்டச் சொன்னேனில்லே.”
“அதுக்கு இதுதான் ஞாயமா? ஒரு கட்டு வெறகைக் குடுத்துட்டு, உங்க தங்கச்சியை அனுப்பி வைக்கச் சொல்லி ஒருத்தன் கேட்டா..அனுப்புருவீகளா?…
“ஏய்… நாக்கை அளந்து பேசு. சாதிகெட்ட பொட்டச்சி நீ.”
“நா சாதி கெட்டவ இல்லே. இப்ப நீருதா கீ(ழ்) சாதி. நடந்துக்கிட்ட நடத்தையிலும், கொணத்துலயும் கீசாதி. முள்ளு பொறுக்க வர்ற கூலிக்காரப் பொண்ணுகன்னா…ஒமக்கு அம்புட்டு எளப்பம்? தாராளமா கை போடுவீரு இல்லே? எங்களுக்கு மானமில்லியா? சூடு சொரணையில்லியா? என்னத்துக்கு துணியை உடுத்தியிருக்கோம்? இப்படி மானங்கெட்டு பொழைக்கணும்னா… தேனிக் காட்டுலேயே தாலியோட இருந்துருக்கலாமே…”
தீச்சுடராய் அவள் கக்கிய அக்கினியில், அவன் வேர்கள்வரை கருகிப்போனான். குற்ற உணர்ச்சி மனசில் முள்ளாகக் குத்தி உறுத்த… அங்கும் இங்குமாகப் பார்வையால் அலைந்தான்.
“சரி, சரி…வா.தூக்கி விடுதேன். வீடு போய்ச் சேரு.”
மேலும் வாய் திறக்கப் போனவளை, கைச்சாடையில் தடுத்தான்.
“போதும். நல்லமாட்டுக்கு ஒரு சூடு போதும். நா சண்டிமாடு இல்லே.”
விறகுக் கட்டை நோக்கி அவள் நடக்க, இவன் பின்னால்…
இவனுள், அவளது வேர்கள். சாதி மண்ணைப் பிளந்து கொண்டு உள் நுழைகிற வேர்கள். இவனைப் பக்குவப்படுத்தி உரமாக்குகிற உறவுவேர்கள்.
சுமையைத் தூக்கிவிட்டான்.
“நெதம் இங்கவா. மனசுலே எதையும் வைச்சுக்காதே. நெசமாகவே இன்னிக்கு நீ எம்புத்தியிலே செருப்பாலே அடிச்சுட்ட”
மனசு குழைந்த அந்தச் சொல், சரசுக்குள் கருணை கசியச் செய்தது. அவனை முழுசாக மனசில் வாங்கிவைத்துக்கொள்வதைப் போல… ஆழ்ந்த, கனிந்த பார்வை பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் நடந்தாள்.
மறுநாளும் வந்தாள். தினந்தோறும் வந்தாள்.
வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஊர் வாய்க்கு, அவலாக இவர்கள் கதை. அரசல் புரசலாக எல்லா இடத்திலும் பேசப்பட்டது.
அவளுக்குத்தான் துன்பம், சோதனை. ஆள் ஆளுக்கு அவளை மிரட்டினர். குத்திக் காட்டினர். திட்டித் தீர்த்தனர். அவனை யாரும் அதட்டவுமில்லை, கண்டிக்கவுமில்லை. மாறாக, குஷியாகக் கிண்டல் செய்தனர்.
”எலேய்…ராசு! ஒங்காட்லே மழைதாண்டா. தேனிச்சிட்டு தேடிவந்து கொஞ்சுதாமே… ம்…அனுபவிச்ச வரைக்கும் ஆதாயந்தானே…”தாலிகட்டி குடும்பமாய் வாழப் போவதாக அவன் சொன்னபோதுதான், சாதிக்காரர்கள் கொதித்துப் போனார்கள். ஒவ்வொருவரும் ஆவேசம் வந்து சாமியாடினர். ”ஏலேய்.. ஊர்ப்பகையை உன்முதுகு தாங்காதுடா. அக்குருமம் செய்யாதே.”
மொத்தக் கிராமமே அவனை உர்ரென்று பகையோடு பார்த்தது. அவன் வீட்டிற்குள் அன்றாடம் புயல்… பூகம்பம்… வாய்ச் சத்தங்கள்… ஞாயிற்றுக்கிழமை நடக்கிற ஜாதிக் கூட்டத்தில் ராசேந்திரனைக் கூப்பிட்டு விசாரிப்பது, அபராதம் போடுவது, கட்டுப்படாமல் திமிறினால் பலாத்காரமாய்ப் பணியவைப்பது என்று ரகசியமாய் ‘முடிவு’ செய்யப்பட்டது.
அது கசிந்து, இவர்கள் காதுகளிலும் விழுந்தது.
டி.வி.யில் சினிமா முடிந்தவுடன் ஜாதிக் கூட்டம்.
சரசுவிடம் 125 ரூபாய் இருந்தது.இவனிடம் நானூறு சொச்சம் தேறியது. மொத்த ஊரை, ஒற்றை ஜோடியாய் நின்று எதிர்க்க முடியாது. அதற்காக காதலைக் கொல்லவும் சம்மதம் இல்லை. வேறு வழி?
கிளிகள், ஏழுமணிக்கே சிறகு விரித்துவிட்டன.
பாலத்தில் இறங்கி ஏறினார்கள். சரசு மகிழ்ச்சியில் பரவசமாகிக் கொண்டிருக்கிறாள். குதிரையில் அமர்ந்த நிலையில், ஒரு வினோத மிருகத்தின் மீது ஈட்டியை சொருகிற வீரனின் சிலை. நரிகளும் யானைகளும் மேளம் கொட்டி நாதஸ்வரம் வாசிக்கிற சிலை வட்டம். கடப்பாறையால் பாறையைப் புரட்டுகிற உழைப்பாளி சிலை. பெரிய பெரிய கடல் சங்குகள்.
“இங்க பாருங்க குளிக்கிற பொண்ணு. அப்படியே அச்சா செஞ்சுருக்காகளே…..அய்ய்! இந்தா ஒரு தோட்டம். பாம்பு இருக்கு. மான் மேயுது… கிளி, புறா அப்படியே அசலா செஞ்சிருக்காகளே.. இது என்னங்க, ச்சேய்! துணிமணி இல்லாம, ஆணும் பெண்ணுமா… த்தூ!”
“இது…ஆதாம்-ஏவாள் தோட்டம் சரசு.”
இன்னும் ஏறுமுகமாய் நடந்தார்கள். சமுதாயக் கூடம். மேட்டில் ஓர் ஓட்டல். இனிமைச் சூழலின் அமைதியைக் கொலை செய்து கொண்டிருந்த ஸ்டீரியோ டேப்பின் கர்ண கடூர இரைச்சல். உயிருடன் மேய்ந்துகொண்டிருந்த நிஜ மானைப் பார்த்தாள். பறவைக் கூடுகளைப் பார்த்தாள். விதவிதமான, பறவைகள். விநோதமானக் கலர் பறவைகள். ஒவ்வொன்றையும் கை நீட்டுகிறாள். ரசிக்கிறாள்.
“ரசி… ரசி…சரசு…ஆசை தீர சிரி… இருக்கிற சிரிப்பையெல்லாம் இன்னைக்கே கொட்டித் தீர்த்துப்புடு. நாளைக்கு நாம சிரிக்க வேண்டியிருக்காது.”
காதலோடும், திகிலோடும் புறப்பட்ட கிளிகள், ஊரார்கள் கையில் சிக்கிவிடக்கூடாதே என்கிற பயத்தில், தூரந்தொலைவுக்குப் போய்விட வேண்டும் என்ற துடிப்பில் மதுரையைக் கடந்து, திருச்சி வந்து, விழுப்புரம் வந்து…
…திருவண்ணாமலை வந்து, பிரசித்தி பெற்ற கோயிலைச் சுற்றிப் பார்த்து சாமி கும்பிட்டுவிட்டு, தாலியையும் கட்டிக்கொண்டு, சினிமா சூட்டிங் நடந்த சாத்தனூர் டேமைப் பார்த்துவிட ஆசைப்பட்டு…இதோ வந்தாகி விட்டது.
காசெல்லாம் கரைந்துவிட்டது. இனி இருப்பது பதினேழு ரூபாய் முப்பது காசுதான். ஊர் திரும்பப் பணம் இல்லை.
பிறந்த ஊருக்குப் போகமுடியாது. நுழைந்தால்… கொத்திக்குதற காத்திருக்கிற சாதி வெறி, ரணகளப்படுத்திவிடும். மனித உணர்வுகளை உணர்வின் அருமைகளையெல்லாம் பொருட்படுத்தாத குருட்டுச் சாதி வெறி.
காதலோடு வாழ்ந்த நாட்கள். அதன் இனிமைச் சுகங்கள்- மிரட்டுகிற கிராம சாதி வெறி – மரணத்திற்கான காரணங்கள் எல்லாவற்றையும் விளக்குகிற நீண்ட கடிதம் ஒன்றை நேற்றே எழுதியாகிவிட்டது. இதோ..அண்டிராயர் பையில் இருக்கிறது. உலகத்துக்கான உயில். உயிரோடு வாழப்போகிறவர்களின் ஆன்மாவை, அறையப்போகிற உயில்.
சந்தோஷத்தின் உச்சத்தில் சஞ்சரித்து, சிறு குழந்தையின் மனசாகி, துள்ளித் துள்ளி விளையாடிக் களிக்கிற சரசுவை, ஓரக் கண்ணால் பார்த்தான்.
தாழ்ந்த சாதியில் பிறந்த சாதி மான் கன்று. மாசில்லாத மானஸ்தி. அழுக்கைக் கழுவி மனிதனாக்கியவள். சோதனைக் காலத்தில் தோள் கொடுத்த இனிய காதலி. நேரிட்ட இடர்பாடுகளுகளுக்கும், இடையூறுகளுக்கும் நெஞ்சுறுதி காட்டியவள்.
‘இவளும் அநியாயமாச் சாகணுமா…’
அவனுள் ஆழத்தில் அதிர்கிற உணர்வுகள். குழந்தைகள் ஏறிவிளையாடுகிற ரயிலைப் பார்த்தனர். தேங்கிய அணையைப் பார்த்தனர். கொஞ்சமாய்க் கிடக்கின்ற தண்ணீரில், ஒன்றிரண்டு படகுகள். ஹோவென்று வெறுமையாகக் கிடக்கிற நீரில்லாத வெற்றிடம். தூரத்தில் மரங்கள். அடர்த்தியாய் மரங்கள். ஆயுள் முழுக்க வெட்டிச் சரித்தாலும் குறையாத மரங்கள். சூரியனை உள் வாங்குகிற மரங்கள்.
அணையின் தலையில் இவர்கள் இருப்பதால், தாராளமாய் வருகிற காற்று முழு வேகத்தில் மோதித் தழுவிச் செல்கிறது. மணி ஆறு இருக்கும். ஜெகஜோதியாய் வர்ண விளக்குகள். தேவலோகமாய் மாயமுகம் காட்டுகிற ஒளி மயம்.
“ஏங்க, இன்னும் எம்புட்டு ரூவா இருக்கு?”
“ஏங் கேக்கே?”
“சும்மாதான்.’
“இருவது ரூவாய்க்குள்ளே.”
சட்டென்று வாடிக்கறுக்கிற அவள் முகம். கவலைகளற்ற குழந்தையாக இருந்த அவள், நிமிஷ நேரத்தில் கிழவியாகிப் போனது போல் கண்களில் கலக்கம். கனத்த மௌனம் நெஞ்சையழுத்த, கவலையோடு அவனை நோக்கினாள்.
“ரூவா இம்புட்டுத்தான் இருக்கா?”
“ஆமா.”
நிலைமையின் பயங்கரம் – நிஜத்தின் கொடூர கணம். மனசை அழுத்துகிறது. உடைந்து தளர்கிற சரசு.
”நம்ப ஊருக்குப் போறதுக்கு எப்புடியும் நூறு ரூவா வேணுமில்லே”.
“ஆமா.”
“இந்த அயலூர் மண்ணுலே -அத்துவானக் காட்டுலேயிருந்து போகவே முடியாதா ? நம்ம ஊரு, நம்ம சனங்களைக் கண்ணாலே பார்க்கவே முடியாதா?’
மௌனத்தில் மண் பார்த்தான். அவள் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் சங்கடப்பட்டான். விறுவிறுவென்று வேகமாய் முன்னால் நடந்தாள் சரசு. திரும்பியே பார்க்கவில்லை. வேரறுந்த செடியாய் குலைந்து போய்விட்டாள்.
நாளை பார்க்க முடியாத சூரியன் மறைந்துவிட்டான். ஆசையோடு வந்து சூழ்கிற அந்தி இருட்டு.
பஸ் நிற்குமிடம் வந்தவுடன், கால் வலியெடுத்துவிட்டதுபோல் குத்துக்கால்வைத்து உட்கார்ந்துவிட்டாள். முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டாள். முதுகு குலுங்குகிறது.
“சரசு, அழுகிறீயா?”
அவனும் பக்கத்தில் உட்கார்ந்தான். சுற்றிலும் ஆட்கள்; பஸ் வந்தால் ஏறக் காத்திருக்கிற சுற்றுலாப் பயணிகள். ஐயய்யோ… வேடிக்கைப் பொருளாகி விடுவோமோ
இவளை இப்படியே அழவிடக்கூடாது. தேற்றணும், ஏதாச்சும் சொல்லித் தேற்றணும். என்ன சொல்லித் தேற்ற? ஏத்தாச்சும் சொல்லு.
“ஏம்மா… அழற? அழாதே சரசு, மனசுக்குச் சங்கடமாயிருக்கு. இங்கபாரு,எதுக்காக அழணும்? நாம ஊர்ல சொத்தை வுட்டுட்டு வரலை… காடுகள் கரைகளை வுட்டுட்டு வரலை. பறிகுடுக்க எதுவுமுல்லாத கூலிக்காரங்க, நாம. ஒழைக்குற கூலிக்காரனுக்கு எந்த ஊரும் அயலூர் இல்லேம்மா. எல்லா ஊரும் நம்ம ஊருதான்; எல்லா சனமும் நம்ம சனங்கதான். ஒன்னாச் சேந்து உழைக்கப்போறோம். ஒழைச்ச கூலியிலே உசுர் வாழப்போறோம். இதை நம்ம ஊர்லெ செய்ஞ்சா என்ன, திருவண்ணாமலையிலே செய்ஞ்சா என்ன? எல்லாமே ஒண்ணுதான்.” அவளது விசும்பல் சத்தம். மூக்கை உறிஞ்சிக் கொள்கிறாள்.
“சரசு, நம்ம ஊருலே எஞ்சாதிக்காரங்க நம்ம ரெண்டு பேரையும் கொத்தி புடுங்கக் காத்திருக்காங்க. இங்கன்னா… ங்கன்னா… அந்தக் கவலையேயில்ல. பயமில்லாம பாடுபட்டு, பாசத்தோட இங்கேயே இருந்துருவோம். என்ன நா சொல்றது? நாயந்தானே?”
நிமிர்ந்தாள் சரசு. கசங்கிக் கிடக்கின்ற முகம். சிவந்து ஈரம் படிந்த விழிகள். வடிந்த கண்ணீரில் மனச்சுமை இறங்கிவிட்டதா… இவன் சொல்லிய நியாயம் உறைத்துவிட்டதா…
“நெசமாவே சொல்லுதீகளா? இங்கேயே இருந்துருவோமா?”
“ம், திருவண்ணாமலை போய்ச் சேருவோம்.கூலிச்சனங்க வாழற ஓரங்கள்லே நமக்கு ஒரு குடிசை வாடகைக்குக் கிடைக்காமலா போயிரும்? இந்தப் பரந்த ஊர்லே – மலைக நெறைஞ்ச இந்த ஏரியாவுலே-கல் ஒடைக்கிற வேலைகூடவா நமக்குக் கெடைக்காமப் போயிரும்? எந்தி… அழாதே… எந்தி.”
அவள் மூகத்தில் ஒரு மலர்ச்சி. தெளிவின் பிரகாசம்.
“பேச்சு மாறமாட்டிகளே?”
“ஊஹூம்,மாற மாட்டேன். இது நல்ல மாடு.”
பஸ் வந்துவிட்டது. வட்டமடித்துத் திரும்பிய பஸ்ஸில் முதல் ஆளாக ஏறி உட்கார்ந்து கொண்டாள்; வாழ்க்கையைப் பற்றிப் பிடிக்கிற வேட்கையின் பரபரப்பு அவளுக்கு. இவனும் ஏறிக் கொண்டான். ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டான்.
மூட்டி மோதிக்கொண்டு ஏறுவதில் சச்சரவிடுகிற பிரயாணிகளின் மனிதக் கூச்சல் எதுவும், இவன் செவிகளில் விழவேயில்லை. இவன், இவனது உலகத்துக்குள்…
சரசுவைத் தேற்றுவதற்காக இவன் சொன்ன ஆறுதல் வார்த்தைகளே, இவர்களின் வாழ்க்கைப் பாதைக்கான வெளிச்சமாயிற்று. வாழ்க்கையோடு மல்லுக்கட்ட துணிவு கொண்ட உழைப்பாளிகளிடம், பாலிடாலுக்கு ஏது வேலை?
டிக்கட்டுக்குப் பணம் எடுக்கிற சாக்கில், அண்டிராயர் பைக்குள் மடித்துக் கிடந்த நீண்ட உயிலை ரகசியமாய் எடுத்தான். சரசுவுக்குத் தெரியாமல் கிழித்து வெளியே எறிந்துவிட்டு, திருப்தியுடன் பெருமூச்சுவிட்டான்.
மனசு இப்போது இலேசாகிப் போயிருந்தது. சுவாசம் சுலபமாகி விட்டது.
பாராததுபோலப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சரசு, கிழித்துப்போட்ட காகிதத் தூளை கடைக்கண்ணால் பார்த்தாள். மெல்லியதாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள். அர்த்தமுள்ள சிரிப்பு; உதட்டுக்குள் ஒளிந்து நின்ற சிரிப்பு.
– செம்மலர், டிசம்பர் 1990.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
