நினைவுச் சுவடு
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அநேகமாக தினம் மாலையில் அரை மணி நேரமாவது கடற்கரையில் உலாவிக் கழிப்பது என் வழக்கம். நேற்று என்னுடைய ஆபீஸ் அலுவல்கள் ஜாஸ்தியாக இருந்ததன் நிமித்தம், சிறிது நேரம் சென்றே வீட்டை அடைந்தேன். நாழிகை ஆகிவிட்டாலும் மனது கொஞ்சம் நிம்மதி பெற வேண்டுமென்று வழக்கம் போல் கடற்கரைக்குச் சென்றேன். கடற்கரையில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு கண்டு கொண்டிருந்தது. எட்டி மணலில் உட்கார்ந்து பொழுது போக்குபவர்களுடைய வெளிக் கோட்டுருவங்கள் அந்த வேளையில் ஒரு வசீகரத் தோற்றமாய் எனக்குத் தெரிந்தது. தூரத்தில் பக்க வசத்தில் உட்கார்ந்து எதையோ நோக்குவது போன்று இருந்த ஒருவன் எனக்குத் தெரிந்தவன் எனத் தோன்ற அவனை நெருங்கினேன்.
தனியாக உட்கார்ந்து இருந்த அவன் தன் முழங் காலைக் கட்டிக் கொண்டிருந்தான். சுமார் இருபது வருஷங்களுக்குப்பின் திடீரென்று என்னுடைய கல்லூரி சிநேகிதன் சேகரை அப்போது அங்கே பார்த்தது ஒரு அதிர்ச்சியாய்த்தான் எனக்கு இருந்தது. அவனும் நானும் இருபது வருஷங்களுக்குமுன் பட்டணத்தில் கல்லூரியில் சேர்ந்து படித்தோம். அன்றைக்குப் பார்த்தபடியேதான் நேற்று நான் பார்த்தபோதும் தோன்றினான். அதே முகக்களை, அதே கம்பீரமான பார்வை.
கடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கட்டுமரங்கள் எல்லாம் கரை அடைந்துவிட்டன. காலந் தவறி வந்ததென இரண்டொரு கட்டுமரங்கள் வேகமாகக் கரையை நெருங்கி வந்து கொண்டிருந்தன. பாய் விரித்ததொன்று வெகு தூரத்தில் கடல் பரப்பில் தெரிந்தது. அமைதியற்ற தன்மையில் எட்டி நெளியும் சாந்தமான சிற்றலைகள் கரை கண்டதும் அலை மோத ஆராவாரித்துக் கொண்டிருந்தன. சமுத்திரக் கரையில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டிருந்தது. அவனோடு உட்கார்ந்து நான் என்ன பேசினேன் என்பது கிடையாது. எதெல்லாமோ சம்பந்தமற்றுத்தான் நான் பேசினேன்.
படிக்கும்போதே அவன் ஒருவிதமான பையன். எல்லா மாணவர்களுடைய நன்மதிப்பிற்கும் உரியவன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரன் என்பதும் உண்மை. எல்லோ ரிடமும் அவன் நெருங்கிப் பழகியது கிடையாதென்றாலும், என்னைப் பற்றிய வரையில் அவன் என்னுடைய அந்தரங்க நண்பன்.
“சேகர் எப்போது வந்தாய்-என்ன விசேஷம்-ஊரில் எல்லோரும் சௌக்கியமா-என்ன செய்கிறாய்…” என்று என்னவெல்லாமோ கேட்டு, ஒரு பதிலில் அவனைப் பற்றிய இருபது வருஷ சமாசாரத்தையும் அறிய முயன்று கொண்டு இருந்தேன்.
அவனும் எனக்கு ஏதோ பதிலளித்துக் கொண் டிருந்தான். அவன் அதிகமாகப் பேசவில்லை. அவன் பேசுவதற்கு நானும் இடம் கொடுக்கவில்லை. சிறிது சென்று பேச்சு நின்றவுடன் அவன் முகத்தைத்தான் நான் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் பேச்சில் ஒரு தனி அடக்கம் தெரிந்தது. வேறு அவன் ஒருவிதத்திலும் கடந்த இருபது வருஷமாக மாறவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. அதே வளைந்த மூக்கு, உயர்ந்த புருவம், மிருதுவான கன்னங்கள். அதே இருபது வயதுக் கல்லூரி மாணவன் சேகர்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான் அவன் பார்த்துக் கொண்டிருந்த பக்கம் திரும்பினேன்! பத்துப் பதினைந்து கஜம் முன்னால் நாலைந்து பெண்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவர்களுக்குச் சுமார் இருபது வயதிருக்க லாம். குதூகலமாகப் பேசி வார்த்தையாடிக் கொண்டிருந்த அவர்கள் ஏதோ கல்லூரி மாணவிகள் போலும். நன்றாக இருட்டி விட்டது. அனேகமாக எல்லோரும், போய் விட்டனர். ஏனையோரும் எழுந்து புறப்பட ஆயத்த மானார்கள். எங்கள் எதிரே உட்கார்ந்திருந்த அப்பெண் களும் எழுந்தனர். பிறகு நாங்கள் சிறிது நாழிகை பேசிக் கொண்டிருந்தோம். “சரி வா சுந்தரம், நாழிகையாகி விட்டது. கிளம்பலாம்” என்று சொல்லி என்னுடன் அவனும் புறப்பட்டுவிட்டான்.
வீதியில் அதிகக் கூட்டமில்லை. எங்களுக்கு முன்பு அந்தப் பெண்கள் போய்க் கொண்டிருந்தனர். அவர்களைத் தவிர பார்வையைக் கொள்ள விதியில் ஒருவரும் இல்லை. ஒரு தெரு அவ்வீதியைக் குறுக்கிட்டது. ஒருத்தியைத் தவிர மற்றப் பெண்கள் அந்தத் தெருவில் திரும்பினர். தனிப்பட்ட அந்தப் பெண் மட்டும் முன் செல்ல நாங்கள் சிறிது பின்னால் சென்று கொண்டிருந்தோம். மற்றும் ஒரு தெருவில் அந்தப் பெண்ணும் திரும்பினாள். அவளோடு அந்தத் தெருவில் அவள் பின்னால் சேகர் திரும்பினான். அவளோடு அந்தத் தெருவில் அவள் பின்னால் சேகர் போன போது தான், அவன் அப்பெண்ணைப் பின் தொடருகிறான் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. நாங்கள் பேசவில்லை. அவள் பின் மெல்லமாகச் சென்றோம்…சிறிது சென்று அந்தத் தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டிற்குள் அப்பெண் மறைந்துவிட்டாள். அருகில் இருந்த ஒரு கடையில் சேகர் நின்றான். ஒரு தரம் வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டான். தன் மனத்தை ஒருவிதத்தில் சமாதானம் செய்து கொள்ளவே அவன் அந்தக் கடை வாயிலில் நின்றான் போலிருந்தது. அவ்வீட்டை அவன் முன்னால் சென்று கடக்கும் போது, அந்த வெளிச்சத்தடியில் அவன் நடை அவன் மனம் போல் கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்ததாய் எனக்கு ஒரு தோற்றம். அந்த வீட்டை அனேகமாக நாங்கள் கடந்துவிட்டோம்…
“சேகரா-வரக்கூடாதா…” என்ற ஒரு அசரீரியான சப்தம் எங்கள் காதில் விழுந்தது. அந்த வீட்டு வாயிற்புறம் இருட்டாக இருந்தது…எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்! கனவில் நடப்பவனே போன்று சேகரன் அவ்வீட்டினுள் நுழைந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பின்னால் நானும் உள் நுழைந்தேன். அந்தக் குரல் அவனுக்குத் தெரிந்தவர் களுடையதா என்றும் அவன் அறிந்தவனா என்பதிலும் எனக்குச் சந்தேகம். ஆனால் அது சிறிது முன் உள் நுழைந்த அந்தப் பெண்ணுடையது அல்ல. அவ்வளவு குழைந்து அப்பெண் அவனைக் கூப்பிடுவாள் என்ற எண்ணத்தை என் மனது அப்போது ஏற்க மறுத்தது போலும். ஒருக்கால் அவனே பட்டணம் வந்ததும் அவ்விடத்தில் தங்கியிருந்தால்? அதுவும் இல்லை; உள் நுழைய அவனுக்கு ஏன் அவ்வளவு தயக்கம்? வாயிற் படியை மிதித்ததும் இருட்டிலிருந்து வந்தவள்… “உள்ளே வர என்ன இவ்வளவு தயக்கம்? வீட்டிற்கு வா…உன்னை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உன் விஷயத்தில் எதிர்பார்ப்பது ஒன்றும் நடக்காதுதான்” என்றாள். சேகரன் மெதுவாய்ச் சிரித்தான். அவள் பேசின குரல் ஒரு மாதிரியாகக் கம்மலாய் இருந்தது. அவள் என்னைக் கவனிக்காதது போலவே அவனை அணைத்துக் கொண்டு உள்ளே சென்றதும் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. உள்ளே நுழையும் முன்பே, எதிரே ஒரு விசாலமான கூடம் பிரகாசமாகத் தெரிந்தது. நடை மிகவும் இருட்டாக இருந்தது. நடையைக் கடந்து வரவேற்புக் கூடத்திற்குச் சென்றபோதுதான் அவளைக் கவனித்தேன். என்னை அப்போதுதான் கவனித்தவள் போன்று அவள் சேகரனைத் தன் அணைப்பினின்றும் விடுவித்தாள். எதிரே இருந்த ஒரு சோபாவில் அவன் உட்கார்ந்த போது அவன் பக்கத்தி லேயே அவள் அமர்ந்தாள்.
அவள் அரை இருட்டில் சமுத்திரக் கரையில் கண்ட அந்தப் பெண்ணைப் போலவேதான் இருந்தாள். இருந் தாலும், அவள்தான் என்று நிச்சயிக்க முடியாத வகையில் கொஞ்சம் வயதில் பெரியவளாகத் தோன்றினாள். முக்கியமாக அவள் அல்ல என்பதற்குக் காரணம் அந்தப் பெண் சேகரிடம் இப்படி நடந்து கொண்டிருக்க முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. எதிரே உட்கார்ந்திருந்த என்னை அவர்கள் கவனிக்கவில்லை.
பிரியமான சேகரா, என்னை நீ மறந்தது சரி…நானும் உன்னை மறப்பது பிசகல்ல. ஆனால் முடியவில்லையே…”
என்னைப் போலத்தான் அவளும் அவனை வெகு நாட்கள் கழித்து அன்று சந்திக்கிறாள் போலும். அந்த எதிர்பாராத சந்திப்பின் அதிர்ச்சி அவளை வெகுவாக வசீகரப்படுத்தியது. கடற்கரையில் நாங்கள் பார்த்த பெண்ணைக் கூடத்தில் காணவில்லை; சேகரனோ ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளக் கிளர்ச்சி அவனை மெளனமாக்கியது போலும்.
ஆனால் அவன் முகம், ஆம், அவன் முகம் எவ்வளவு வசீகரம் கொண்டு விட்டது! இளமையின் தனி சோபை அதில் தெரிந்தது.
“சுசீலா-என் ஞாபகம் இன்னமுமா உனக்கு இருக் கிறது? உன்னை மறுபடியும் பார்ப்பேன் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. இன்று கடற்கரையில்தான் ஏதோ ஒன்று என்னுள் புரண்டது. இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு நாள் ஆனபின் உன்னை இப்படிக் காண முடியுமென்று நினைக்கவில்லை…”
அவள் பெயர் சுசீலா…அவன் வெகு அழகாக இருந்தாள். ஒரு வசீகரமும், வயது நிர்ணயிக்க வேண்டு மென்ற எண்ணமே தோன்றாத ஒரு வற்றாக்களையும் அவள் முகத்தில் புகுந்திருந்தன. சேகரன் பழைய காலத்தில் இம்மாதிரியாகப் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறான் என்றாலும் இப்போது அவன் இந்த விஷயத்தில் எப்படி என்பது எனக்குத் தெரியாது. படித்து முடித்த பின்பு கல்யாணம் செய்து கொண்டு அவன் தன் ஊரில் இருக்கிறான் என்பது மட்டுமே எனக்குத் தெரியும்.
இருவரும் பக்கத்தில் அமர்ந்து இருந்தனர். எட்டிய நாற்காலி ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன். சுசீலா ஒரு பையனைக் கூப்பிட்டாள். “பையா-காந்தா எங்கே? மாடியிலா? நான் கூப்பிடுவதாகச் சொல்லு. நீ வாசலி லிருந்து கொண்டு, யாராவது வந்தால் இன்று என்னைப் பார்க்க முடியாது என்று சொல்லிவிடு” என்றாள்.
அந்தக் கூடம் அவசியமற்ற சாமான்களால் நிரப்பப் படவில்லை. இரண்டு மூன்று சோபாக்களும் இரண்டொரு நாற்காலிகளும், நடுவில் ஒரு சிறிய மேஜையும்தான். அவைகளும் கண்களை உறுத்துபவையாக இல்லை. சுவரில் நாலைந்து படங்கள்தான் மாட்டப்பட்டிருந்தன. எனக்கு எதிரே ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் இருந்தது. அப்போது மணி எட்டு ஆகிவிட்டது.
இரண்டொரு நிமிஷத்தில் காந்தா உள்ளே நுழைந் தாள். அவளைத்தான் நானும் சேகரும் கடற்கரையில் பார்த்தோம். வந்தவள் எங்களைக் கண்டதும் கொஞ்சம் தயங்கினாள். சிறிது நேரம் சுசீலா அவள் வந்ததைக் கவனிக்கவில்லை போலும். திரும்பி மாடிக்குப் போகிறவள் போன்று திரும்பிய அவளை “என்ன காந்தா, நீ வந்ததே தெரியவில்லை. கொஞ்சம் அப்படி உட்கார்ந்து கொள்” என்று சுசீலா தன் அருகிலிருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக்காட்ட, தயக்கத்துடன் என் எதிரில் அவள் உட்கார்ந்தாள்.
சுசீலாவும் சேகரும் நான் இருப்பதையே, அல்ல நாங்கள் இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். இதில் ஆத்திரம் கொள்வதற்கு ஒன்றுமில்லை. வெகு நாட்கள் சென்ற பின் இந்த எதிர்பாராத சந்திப்பு அவர்களுக்கு எவ்விதமாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் புலனாகாமல் அவர்கள் எதிரில் வீற்றிருப்பது எனக்குக் கொஞ்சம் மதிப்பற்றுத் தோன்றியது. காந்தா என் எதிரில் இருந்ததால் என் மனம் சிறிது ஆறுதல் கொண்டது. காந்தாவும் மனக் கசப்புடன் இருந்தாள் என்று தோன்றியது-எனக்கு. அவள் முகம் வசீகரம் காட்டியும், மனது மட்டும் ஏதோ வேதனைக்குள்ளாகியது போல் அவள் உதடுகள் உறுதியாய் இருந்தன. அடிக்கடி அவள் கவனிப்புக் கொள்ளாத பார்வையுடன் மிரண்டு விழித்துக் கொண்டிருந்தாள்.
எட்டிய வெளியில் இன்பம் காண்பதைப் போல் சுசீலா அடிக்கடி காந்தாவைப் பார்க்கிறாள். அவளைப் பார்க்கும் போது அவள் முகம் கொஞ்சம் மாறுகிறது. கொஞ்சம் வயதான தோற்றம் கொடுக்கிறாள். ஆனால் அருகில் அமர்ந்திருக்கும் சேகரனைப் பார்க்கும்போது, என்ன உள்ளக்கிளர்ச்சியோ, அவள் வெகு பாலியமாகத் தென்படு கிறாள். அவனோடு பேசும் போதோவெனில் அவள் குரலில் ஒரு தனி உதறல் தொனிக்கிறது.
“நீ என்னைப்பற்றி என்ன எண்ணுகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கும் உன்னைப்பற்றிய எண்ணம் தெளிவாகவில்லை. ஆனால், இப்போது உன்னைப் பற்றிய பழைய எண்ணங்கள் இனிமையாய் என்னைத் துன்புறுத்துகின்றனவே. அநந்தத்திலும் அவியாது என்னுள் இருந்து உன்னைப் பார்த்ததும் உணர்வு கொள்ளுவது எது ?…… சேகரா….”
அவள் ஒரு விலைமாது. ஒரு காலத்தில் சேகருடன் உறவு கொண்டாடியவள். எத்தனையோ பேர்களின் அடிச்சுவட்டைத் தாங்கிய மணல் பரப்புத்தான் அவள் உள்ளம். முன் நடந்தவன் சுவட்டை அழித்து நடப்பவரும், நடக்கும் போதே சின்னத்தைக் களைந்து நடப்பவரும் உண்டு. யார், எப்படி நடந்தால் என்ன, மணல் பரப்பிற்கு நடப்பவர் யாரென்று உணர்வு உண்டா? மயங்கிய எண்ணங்களில் தான் இன்பக் கனவு காண்பது?…
காந்தா ஒரு புதிராக விளங்கினாள். அவள் யாரென்று தெரியவில்லை. ஒருக்கால் சுசீலாவின் சகோதரியா இவள்? என்ன செய்கிறாள்? படித்துக் கொண்டு இருக்க லாம். எனக்குள் அவளைப் பற்றி ஏதோ எண்ணங்கள் தோன்றலாயின. நேரமோ நிற்பதில்லை. எனக்கோ நாழிகை ஆகிக் கொண்டிருக்கிறது. நான் வீட்டிற்குப் போகும் நேரம் ஆகிவிட்டது. எனக்காக என் மனைவி மக்கள் காத்திருப் பார்கள். அவர்களுக்கு நேரமானதன் காரணம் நான் என்ன சொல்லப் போகிறேன்?
வாயிற்புறத் தோட்டத்தில் மரங்களின் இலை அசைவுச் சப்தம், சிறு தூறல் சப்தமாகக் கேட்டது. “மழையா?” என்று காந்தாவைப் பார்த்துக் கேட்டேன். “இல்லை. காற்றுதான்” என்று சொன்னாள். அநாவசிய மானவனென்ற தோற்றத்தின் போது, அர்த்தமற்ற கேள்விகள் கேட்பதால்தான் ஒருவன் இருப்பதை நிரூபித்துக் கொள்ள முடிகிறது? காந்தாவுக்கு அந்த இடத்தில் இருப்பே கொள்ளவில்லை. அங்கிருந்து எப்படிப் போவது என்றும் புரியாமல் உட்கார்ந்து இருந்தாள். என் எதிரில் இருந்த அவளையும் நான் அடிக்கடி பார்க்க முடியவில்லை. அந்த ஹாலில் எதைத்தான் நான் பார்த்துக் கொண்டிருப்பது என்பது புரியவில்லை.
காந்தாவை அடிக்கடி பார்த்துக் கொண்டே சுசீலா சேகருடன் பேசினாள்: “நீங்கள் அன்றுமாதிரியே இன்றும் தோன்றுகிறீர்கள். அதே முகத்தைத்தான் நான் பார்க்கிறேன். உங்களை என்னால் மறக்க முடியவில்லை…? இதோ காந்தா இருக்கிறாள்… நீங்கள் பார்க்கவில்லையா…? உங்களிடம் சொல்லவில்லை… நீங்கள் போகும் போது எனக்கு ஒரு மாதம் – இரண்டு மாதமாக இருக்கலாம்…… இவளுக்கும் தெரியாது. இவளைப் பார்க்கும் போது உங்கள் நினைவு வருகிறது…” சுசீலா நிறுத்தி நிறுத்திப் பேசின பேச்சை நிறுத்தினாள். இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்கள் சிறிது கலக்கம் கொண்டன. “…ஆம், உங்கள் எண்ணம் கொள்ள காந்தா இருக்கலாம்… ஆனால் அவளைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் எண்ணந்தானா… உங்கள் நினைவா தெரிகிறது?… மறைந்த காரணத்தை நான் காரியத்தில் எப்போதும் பார்க்க முடிய வில்லை. இரண்டும் ஒன்றாக என் கண்முன் தோன்றும் போதுதானா இந்த உள்ளக் கிளர்ச்சி?……”
அவள் கண்கள் கலங்கிவிட்டன. எழுந்து காந்தா விடம் வந்தாள். தாயாரைக் கண்டதும் எழுந்த காந்தாவை அணைத்துக் கொண்டாள். அவள் நெஞ்சம் ஒருதரம் விசித்தது… “காந்தா உனக்குத் தெரியவேண்டாமா யார் உன் தகப்பனென்று? இதோ சேகர்… இவர்தான். அன்று போனவரை இன்றுதான் நான் பார்க்கிறேன். ஆனால் என்றாவது ஒரு நாள் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது…” அவள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்து காந்தாவின் உச்சந் தலையில் சொட்டியது…… “இப்போது என்னுடைய எண்ணங்கள் எவ்வளவு இனிமை யாக மனத்தைத் துன்புறுத்துகின்றன? என் இன்பக் கண்ணீருடன் என் வாழ்க்கை இனிக் கரைந்தாலும் பாதகமில்லை…” எங்கேயோ ஒரு நாயின் குரைப்புக் கேட்டது. “ஏய் பையா, ஏண்டா நாய் குரைக்கிறது? மாடியிலிருந்து அதை அவிழ்த்துவிடு… இல்லை, அங்கேயே இரு; நான் அவிழ்த்து விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே அவள் மாடிக்குச் சென்றுவிட்டாள்.
காந்தா யௌவனத்துடன் விளங்கினாள். அவளுக்கு இருபது வயதிருக்கும். அவளை அப்போது என்னால் மதிக்க முடியவில்லை. அவள் பெண் என்றாலும்,என் சினேகிதன் சேகரின் பெண் என்றாலும், என்னால் அவளை மதிக்கமுடியவில்லை. அவள் தன் தகப்பனாரைப் பார்த்து விட்டாள். அவளுக்குத் தன் தாயாரைத்தான் நன்றாக தெரியுமே. ஆனால், அவனைத் தெரிந்து கொள்ள வேண்டியது, தெரிந்துகொண்டது. அவசியமா என்ற கேள்வியாகத்தான் சேகரனைப் பார்த்து நின்றாள். அவன் பேசவில்லை. காந்தாவைப் பார்த்தான். அவனை அறியாமலேயே அவன் கால்கள் அவனை அவளிடம் இழுத்துச் சென்றன. அவள் அருகில் வந்தான். அவளை அணைத்துக் கொண்டான். துவண்டு அவனுடைய அகன்ற மார்பில் தலையைப் புதைத்து நின்றாள் காந்தா. அவள் உச்சந்தலையில் ஒரு முத்தமிட்டான். அவனாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவன் முகத்திலும் ஒரு முதுமை கண்டது. “காந்தா – காந்தா” மேற்கொண்டு அவன் ஒன்றும் பேசவில்லை. பேசமுடியவில்லை.
உள்ளே கசீலா நுழைந்தாள். அவள் பின் ஒரு நாய் துள்ளி விளையாடிக் கொண்டு ஓடி வந்தது. காந்தாவைப் பார்த்ததும் அவளிடம் வந்து நின்றது. நாயைக் காந்தா கவனிக்கவில்லை. இருவரையும் பார்த்தாள் கசீலா. அவள் ஒரு தாயானாள். அவளுக்கு வயது நாற்பதுக்கு மேலே கூட இருக்கலாம். அவள் கன்னம் பூமியைத் தொடும் வண்ணம் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.
காந்தா சொன்னாள் – அப்போது சேகர் வாயிற்படிப் பக்கம் சென்று கொண்டிருந்தான் – “அப்பா!” அவள் வாயில் அந்த வார்த்தையின் உச்சரிப்பு விசித்திரமாக இருந்தது… “அப்பா, எங்கே போகிறீர்கள்? இங்கே இருக்க மாட்டீர்களா? அம்மாவுக்காக இல்லாவிடினும் எனக்காக இருக்கமாட்டீர்களா?” அந்தப் பேச்சில் சோகம் அந்த வீட்டையே சூழ்ந்ததை என் மனது உணர்ந்தது.
ஒருமுறை சேகரன் திரும்பினான். அவன் முகம் மிக மாறுதல் அடைந்து இருந்தது. அதில் வெறுப்புக் கூடத் தெரிந்தது. தன்னைத் தானே வெறுத்துக் கொண்டவன் தான் தன்னுள் தெம்பு குறைந்ததாக உணர்கிறான் போலும். அவனுடைய யௌவனக்களை ஒரு வினாடியில் அழிந்தது. அவனுக்கும், வயது நாற்பதுக்கு மேல்தான் ஆகிறது.
அவர்களால் அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் அந்த வீட்டைவிட்டு வெளிக் கிளம்பிவிட்டான். தெருவில் வந்தவுடன் சேகர் தெருவழியே போய்க் கொண்டு இருந்தான். அவன் என்னைக் கவனிக்காதபோது நானும் கவனியாமலே என் வீட்டிற்குச் சென்றேன். நான் வீட்டை அடையும்போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது.
– தேனி 1948.
![]() |
மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம்,…மேலும் படிக்க... |