காதலெனும் தீவினிலே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நாடகம்
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 110 
 
 

பாரதியாரின் புதுச்சேரி வாழ்வின் ஒரு நாளை விவரிக்கும் சிறு நாடகம்.

(திரை எழுகிறது. மேடையில் அந்தக் காலத்து வீட்டின் முற்றம் போன்ற அமைப்பு . அந்தக் காலத்து சிறிய முக்காலி . மேடையின் வலப்பக்கத்திலிருந்து பாரதியார் வருகிறார். முக்காலியில் அமர்கிறார்.

பாரதியார் பாடுகிறார் –

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா ….

(அவர் பாடிக் கொண்டிருக்கும் போது அவரது மனைவியார் செல்லம்மா ,

மேடையின் இடப் பக்கத்திலிருந்து வருகிறார். அவரது கைகளில் அரிசி உள்ள முறம் )

செல்லம்மா : ஆமாம் . வீட்டு நிலைமையைப் பார்க்காதீங்கோ . பாடிண்டே இருங்கோ ஒண்ணு பாட்டு இல்லேண்ணா எழுத்து இல்லே வந்துடுவாங்க ஒங்க சிநேகிதா … ஒங்களுக்கு மட்டும் என்ன கோடி இன்பம் கொடுத்துட்டாரு பகவான் என்பதே எனக்கு தெரியல … புரியல

( அமர்ந்திருந்த பாரதியார் எழுந்திருந்து செல்லம்மாவின் அருகில் வருகிறார். )

பாரதியார் : ( வேறு பாடல் பாடுகிறார் )

காதலெனும் தீவினிலே

அன்று கண்டெடுத்த பெண்மணியே

காதலெனும் சோலையிலே

நின்ற கற்பகமாம் பூந்தருவே மாதரசே

வானவர்களின் வாழ்வே …

(செல்லம்மா , போலிக் கோபத்துடன் கணவரை முறைத்து விட்டு முறத்தைப் புடைத்து அதில் உள்ள கற்களைத் தள்ளுகிறார்.)

செல்லம்மா : அதோ பாருங்கோ காகம் ஒண்ணு உட்கார்ந்து இருக்கு. உங்களுக்குத் தான் காக்கா பிடிக்குமே அதைப் பார்த்து என்னை விடுங்கோ ..

பாரதியார் : நன்றாகச் சொன்னாய் என் செல்லம்மா ..

(காக்கை கரைகிறது)

காவென்று கத்திடும் காக்கை

கண்ணுக்கினிய கருநிறக் காக்கை ..

உன் சிறகைப் பார்க்கையில் கண்ணன்தான் தெரிகிறான் ..

காக்கைச் சிறகினிலே நந்தலாலா

நின்றன் கரியநிறம் தோன்றுதயே நந்தலாலா

பார்க்கும் மரங்கள் எல்லாம் நின்றன்

பச்சை நிறம் தோன்றுதயே நந்தலாலா

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா ..

செல்லம்மா : வாங்கோ அடுப்பு எரிஞ்சுண்டு இருக்கு. அக்னியை தொட்டு பார்க்கறீங்களா .. ?

பாரதியார் : கள்ளி நீ கள்ளி ..

(செல்லம்மா , ஏதோ நினைவு வந்தவராக அடுப்பில் பால் வைச்சிட்டு வந்தேன் என்று மேடையின் இடப் பக்கத்தை நோக்கி ஓடுகிறார் . அரிசி உள்ள முறத்தை கீழே வைத்து விட்டுச் செல்கிறார் )

( பாரதியார் , அந்த அற்ப சொற்ப அரிசி மணிகளை வாரியிறைக்கிறார். குருவிகள் , அரிசி மணிகளை உண்கின்றன.)

பாரதியார் : காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்க களியாட்டம்

(மேடையின் வலப் பக்கத்திலிருந்து பாவாடை சட்டை அணிந்த நான்கு சிறுமிகள் பாரதியார் அருகே ஓடி வருகின்றனர்.)

பாரதியார் : செல்வங்களே செல்லங்களே .. சகுந்தலா , தங்கம் .. மாலா ..

யார் இந்த புதிய குழந்தை ?

சிறுமி : என் பெயர் மீனா மாமா .. நான் கருப்பா இருக்கேன்னு இந்த மாலா எங்க கூட விளையாட வராதேன்னு தள்ளி விடறா மாமா ..

பாரதியார் : செல்லம் மாலா அப்படி சொல்வது தவறு. நான் ஒரு கதைப் பாட்டு சொல்கிறேன் … கேளுங்கள் அனைவரும் பாடுகிறார்

வெள்ளை நிறத்தொரு பூனை

எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றது அப்பூனை

அவை பேருக்கு ஒரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி

கருஞ்சாந்து நிறமொரு குட்டி

பாம்பு நிறமொரு குட்டி

வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறம் இருந்தாலும் – அவை

யாவும் ஒரே தரமன்றோ ?

இந்த நிறம் சிறிதென்றும் இஃது

ஏற்றம் என்றும் சொல்லலாமோ ?

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமை இல்லை

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் – இங்கு

யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

புரிந்ததோ என் கண்மணிகளே ..அன்பு தனில் செழிக்கும் வையம் . போய் நன்றாக விளையாடுங்கள் ஒன்றாக விளையாடுங்கள் …

(சிறுமிகள் போகிறார்கள் .. செல்லம்மா வருகிறார் )

செல்லம்மா : என்ன காரியம் இது … நீங்க குருவிக்கு இரைச்சுட்டு பாட்டு பாடலாம் .. பசங்களுக்கு ஆகாரத்துக்கு நான் எங்கே போவது ?

(பாரதியார் முக்காலி ஆசனத்தில் அமர்ந்து சிந்தனை வயப்பட்டவராக இருக்கிறார். பாரதியாரின் நண்பர் திருமலாச்சாரியார் , மேடையின் இடப் பக்கத்திலிருந்து வருகிறார் )

செல்லம்மா : வாங்க அண்ணா ..

திருமலாச்சாரியார் : வரேன் அம்மா ..என்ன சொல்றாரு உங்க புருசன் ?

செல்லம்மா : பசங்களுக்கு சாதம் வடிக்க வெச்சிருந்த அரிசி மணிகளை குருவிகளுக்கு தானம் பண்ணிட்டாரு .. நான் என்ன தான் பண்ணுவேன் சொல்லுங்க

திருமலாச்சாரியார் : ஓய் பாரதி ஏன் செல்லம்மாவை இப்படி படுத்துகிறீர் ? கோட் மேல போட்டிருந்த அங்கவஸ்திரம் எங்கே ஸ்வாமி ?

பாரதியார் : வாரும் திருமலாச்சாரி .. என்ன விசேஷம் ?

திருமலாச்சாரியார் : அங்கவஸ்திரம் எங்கேன்னு கேட்டேன்..

பாரதியார் : அதை ஏன் கேட்கிறீர் ?

( சற்றே கோபத்துடன் )

திருமலாச்சாரியார் : கோபம் வர்றது பார்த்தியாம்மா ? நான் கொடுத்த அங்கவஸ்திரத்தை நேத்து சாயங்காலம் தானம் பண்ணிட்டு வந்துட்டாரு ..

செல்லம்மா : அதுதான் வழக்கமாச்சே ..

( இடப் பக்கத்திலிருந்து பாரதியாரின் புதல்வி தங்கம்மா , ஓடி வந்து கட்டிக் கொள்கிறாள் . மற்றொரு மகள் சகுந்தலா வருகிறாள் .

சகுந்தலா : அவளை விடுப்பா .. என்னை கிண்டல் பண்றாப்பா ..

( பாரதியார் கீழே குனிந்து இரு புதல்விகளையும் அணைத்துக் கொண்டு பாடுகிறார் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே

என்னைக் கலி தீர்த்தே – உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்

பிள்ளைக் கனியமுதே , கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமே

அள்ளியணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேனே …

( இந்தக் காட்சியைக் கண்டு செல்லம்மாவும் திருமலாச்சாரியாரும் மனத்தைப் பறி கொடுத்து நிற்கின்றனர். )

( குறிப்பு – 1998 ஆம் ஆண்டு , ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அடியேனுடைய பாரதியின் பார்வைகள் என்னும் பாரதி ஆய்வு நூலில் இடம்பெற்ற அடியேனுடைய ஆக்கம் இந்த சிறு நாடகம் )

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *