கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 146 
 
 

(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

சிவனாண்டித்தேவர், வீட்டிற்கு எதிரே ஒதிய மரத்திலிருந்து தழையொடித்துக் கொண்டிருந்தார். ஒரு வெள்ளாடு இரண்டு குட்டிகளோடு அவர் காலைக் சுற்றிக் கொண்டிருந்தது. 

“தழை அறுக்கிறீங்களா?” என்று பவ்யமாகக் கேட்டான் சிதம்பரம். 

அலக்கில் மாட்டியிருந்த சிறிய கிளையை வெட்டி இழுத்தபடியே தேவர், “தம்பியா,வாங்க. அந்தப் பய மவன் எங்கேயோ ஓடிப்போச்சு. குட்டி போட்ட ஆடு; கத்தித் தவிக்குது” என்றார். 

“இங்க கொடுங்க, மாமா.” 

“வேண்டாங்க தம்பி; ரெண்டு இணுக்குத்தான். நானே ஓடிச்சுடறேன்.” 

“அதை நான் தான் ஓடிக்கக் கூடாதா?” என்று, அவரிடமிருந்து அலக்கைப் பிடுங்கி, ஐந்தாறு கிளையை முறித்துப் போட்டான் சிதம்பரம். 

“போதுங்க, போதுங்க, தம்பி! குட்டி போட்ட ஆடுங்க; ரொம்ப தின்னா கழியுங்க.” 

“அப்படிங்களா?” என்றபடி அலக்கை ஒரு பக்கமாய்ச் சாற்றிவிட்டு, தேவரோடு கட்டிலில் வந்தமர்ந்தான் சிதம்பரம். அப்புறம் அவர் பக்கம் நெருங்கித் தாழ்ந்த குரலில், “ஒரு காரியத்தை முடிச்சிட்டேங்க, மாமா” என்றான். 

“செட்டியாரைப் பாத்திங்களா?” 

“ஆமாங்க. அவுங்களப் பாத்து, பழனியையும் கலிய பெருமாளையும் கொஞ்ச நாளைக்கு இங்க உடணும்ன்னு கேட்டேன். நீ தேவருக்கு சொந்தமா, என்ன வேணும் என்னு கேட்டாங்க. தங்கச்சிப்பிள்ளை ஆகவேணுங்க என்னு சொன்னேன். அவ்வளவுதான்; அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். முகம் அப்படியே மலந்து போச்சு. இரண்டு வாலுங்களும் இனிமே உன் ஆளுங்க என்னாங்க.” 

தேவர் நளினமாக, மீசை துடிக்க முறுவலித்தார். பெருமை முழுவதையும் தானே அறிந்திருப்பது மாதிரியும் அதை அங்கீகரிப்பது மாதிரியும் இருந்தது அது. 

“நம்ப செட்டியார் இருக்காங்களே, அவுங்க தங்க மின்னா தங்கங்க, தம்பி. அவுங்களுக்கு ஈடு சொல்ல இஞ்ச சுத்து வட்டாரத்திலேயே ஆளுங்க இல்லீங்க, தம்பி. அவையாம்பா கோவிலுக்குத் தங்கக் கலசம் பண்ணி வெச்சாங்க; மாங்குடி பிள்ளையார் கோவிலைப் புதுப்பிச் சாங்க. தை பூசமுன்னா, செட்டியார் வடலூரிலேதான் இருப்பாங்க. அவுங்க போறதுக்கு முந்தி ரெண்டு வண்டி அரிசியும், ஒரு வண்டிச் சாமானும் போய் முன்னே நிக்கும்…” 

“அப்ப அவுங்களுக்கு சொத்து ரொம்ப இருக்குன்னு சொல்லுங்க!” 

“என்ன சொத்து? நஞ்செயிலே நூறு வேலி; புஞ்செய்யிலே அறுபது வேலி – பரம்பரைச் சொத்துங்க. அப்புறம், ஆச்சி கொண்டாந்தது ஒரு நூற்றைம்பது வேலி. இதுலே வேடிக்கை என்னான்னா, எங்க எம்மாஞ் சொத்து இருக்குன்னு ரெண்டுபேருக்குந் தெரியாது. இந்த கணக்கெல்லாம் சும்மா உத்தேசம்தாங்க..” 

செட்டியார் என்றதும், அவர் ஏற்படுத்தி இருந்த பாடசாலைகளும் நினைவிற்கு வந்தன. இரண்டு பாடசாலை களையும் அவன் ஒரு சமயம் பார்த்திருந்தான். அவைகளில் வேதபாடசாலை அவனுக்குப் பிடித்திருந்தது. அதைப் பற்றி அதிகமாக விசாரித்தான். உண்மையில் செட்டி யார் அதை ஏற்படுத்தவில்லை ; அது பழையது, இரண்டு தலைமுறையாக நடந்து வருவது. ஆனால், எட்டு வருடத் திற்கு முன்னே ஆசிரியர் இல்லாமல் பள்ளிக்கூடத்தை மூடிவிட்டார்கள். பாலசுப்பிரமணிய ஐயரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அக்கரஹாரம் முழுவதும் உதவி கேட்டார். இரண்டு மாதம் பொறுத்திருந்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருநாள், காலையில் செட்டியார் வீட்டுக்குப் போய், தன் உத்தேசத்தை நிதானமாகச் சொன்னார். 

செட்டியார் தன் பெரியப்பா வாழ்ந்த புராதன விட் டைக்கொடுத்து, ஒன்றரை வேலி மானியமும் அளித்தார். அப்புறம் நாராயணராவ் கால் காணி; முருகபூபதி பிள்ளை பத்து குழி; கல்யாணி ஆச்சி மூன்று மா; குப்பையூர் ராமானுஜதாசர் இரண்டு குழி என்று மானியம் வந்தது. 

வேதபாடசாலை ஆசிரியர் பாலசுப்பிரமணிய ஐயரை யும் ஒரு முறை சிதம்பரம் பார்த்தான். எண்பது வய திருக்கும் – தாடி மீசை, கண் புருவமெல்லாம் நரைத்து விட்டது. கடுமையான நியம நிஷ்டைகளாலும், பிரமச்சர் யத்தாலும் வாடி உலர்ந்த உடல் குச்சி மாதிரி. ஆனால் உடலை மீறிய குரல் வெண்கலம் மாதிரி கணீர் கணீ ரென்று ஒலித்தது. அவன் பாடசாலைக்குப் போனபோது சமஸ்கிருதம் நடத்திக் கொண்டிருந்தார்; அவனுக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை. அந்தக் குரல் பிடித்திருந்தது; அவரை நேசித்தான். ஆனால் அவரால் சிதம்பரம் கவர்ச்சி யுறவில்லை. ‘இந்த வாழ்க்கை வெறுமையை நோக்கிப் போவது ரொம்பவும் பிற்போக்கானது’ என்று சொல்லிக் கொண்டான். 

அவன் வாழ்க்கை சகல விதத்திலும் அவர் வாழ்க்கை யிலிருந்து மாறுபட்டது. அனுபவங்கள் விசித்திர மானவை. அவன் தகப்பனாரும், அவருக்குத் தகப்பனாரும் கனவில்கூடக் காண முடியாத வாழ்க்கை அவனுடையது. அவன் சிந்தனையை இரண்டு மதங்கள் உருவாக்கி இருக்கின்றன; இந்த வாழ்க்கையின் முதல்வன் அவனே! 

தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த அவன் எண்ணத்தை, “தம்பீங்களா?…” என்ற ராமசாமித் தேவரின் குரல் கலைத்தது. 

“ஆமாம், நீ எங்க இப்பிடி?” 

“மல்லியக் கொல்லைக்கு, மாமா!” 

சிவனாண்டித் தேவர், மீ சை யை த் தள்ளிவிட்டுக் கொண்டு, “வாளுக்கார பயல வரச்சொல்லு. நாலுவாட்டி ஆளுவிட்டுட்டேன்; தோ தோன்னு பாச்சா காட்டிக்கிட்டிருக்கான்.” 

“சொல்றேங்க, மாமா. ஆனா, பய குத்தாலம் போய் இருக்கான்னு கேள்வி.” 

“பய குத்தாலம் போயிட்டானா?” 

“ஆமாங்க, மாமா.” 

“சரி, வரட்டும். இஞ்ச வராம எங்க போயிடப் போறான் அப்ப பாத்துக்கிறேன்” என்றவர், ராமசாமி பக்கம் திரும்பி, “எலே, ராமு, கப்பக்காரவுங்க கிட்டே ரெண்டு மூட்டை சம்பா நெல்லு வேணுமுன்னேன்னு சொல்லிட்டுப் போ!” என்றார். 

“சரிங்க, மாமா.” 

“மறக்காம சொல்லிட்டுப் போ” 

“மாமா ஒண்ணு சொன்னா மறக்குமா?” 

சிதம்பரம் ராமசாமியை நிமிர்ந்து பார்த்தான். 

“தம்பி ஒண்ணும் பேசலியே?” 

“என்ன பேசச் சொல்லுறே?” 

“சரியா கேட்டிங்க!” 

“நான் ஒன்னைக்கேட்டா, யாரயோ கேக்கற மாதிரி நினைச்சுக்கிட்டு சிரிக்கிறியே!” 

“மாமா பேசினா சிரிப்புத்தானே வருது.” 

“அப்படியா?” 

“வரேங்க, தம்பி.” 

”வாங்க” – சிதம்பரம் கட்டிலை விட்டெழுந்து கரம் கூப்பி விடை கொடுத்தான். 

தேவர் சிரித்துக் கொண்டே, “அவனுக்கு அம்மாம் மரியாதை எதுக்குத் தரணும்?” என்று கேட்டார். 

அவன் கண்களை இடுக்கிக் கொண்டு தேவரைப் பார்த்தான். 

“அவன் நமக்குச் சொந்தந்தான். ஆனா,மதிப்புத் தர முடியுமா?” 

அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. 

குஞ்சம்மா கூப்பிட்டாள். “இதோ வந்துட்டேன், குஞ்சம்மா என்று எழுந்து, திண்ணையிலிருந்த செம்பை அவனிடம் கொடுத்தார். கைகால் அலம்பிக் கொண்டு உள்ளே சென்றான். பெரிய மாடத்தில் விபூதி இருந்தது. அதை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டான். 

“என் பட்டையைவிட பெரிசா இருக்கே!” 

“பழக்கம் விட்டுப் போனதுங்க, மாமா.” 

உள்ளே வாழைச்சருகில் பிழிந்துவைத்த பழையதும், ஒரு கிண்ணத்தில், கட்டி எருமைத் தயிரும் இருந்தன. இலையின் ஒரு பக்கத்தில் சுண்டக் குழம்பு: இன்னொரு பக்கத்தில் சுட்ட கருவாட்டுத் துண்டு. கருகித் தீய்ந்த கருவாட்டிலிருந்து கம்மென்று வாசனை வீசியது. ஒற்றை விரலால் அதைச் சற்று அப்பால் தள்ளி வைத்துவிட்டு, சாப்பிட ஆரம்பித்தான் சிதம்பரம். 

பக்கத்திலமர்ந்தும், அடுத்த இலையைப் பார்க்காது சாப்பிட்டுக் கொண்டிருந்த தேவர், “என்ன பாப்பா, சென்ன குன்னிப் பொடி இல்லியா…?” என்று கேட்டார். மருமகளை சாதாரணமாக அப்படித்தான் கூப்பிடுவார்; பேத்திக்கும் அதுதான் பேர்; ஒரு பெயரிட்டு அழைத்து இரண்டு பேரைப் பரிகாசம் செய்வது அவருக்கு வரவர கூடிக்கொண்டு வந்தது. 

“தோங்க மாமா..” – தன் மறதிக்கு வருந்தி, விரைவாக வந்தாள். 

“தம்பிக்கு ரொம்ப வை ; எத்தனையோ பட்டணம் பாத்தது. இதெல்லாம் பிடிக்குமோ என்னமோ அட அட !… என்ன தம்பி, கருவாட்ட அப்படியே வச்சிட்டீங்க…” 

“….”

“வஞ்சனை” என்றாள் குஞ்சம்மா. 

“பாருங்க தம்பி, வஞ்சனை கருவாடு ! மீனுலேயே இதுதான் ஒசத்தி ; கருகச் சுட்டு, இளஞ்சூட்டிலே தின்னா தேவாமிர்தம் கெட்டுச்சு போங்க… அட ..”
 
“ஒரு முள்ளு கூட இல்லாத கருவாடுங்க தம்பி” என்றாள் குஞ்சம்மா. 

தீயில் கருகிய மேல் பாகத்தை நீக்கிவிட்டு, ஈரம் பாய்ந்த சிறு கருவாட்டுத் துண்டை எடுத்து வாயில் போட்டு, “ரொம்ப, நல்லா இருக்கு!” என்றான். 

“வஞ்சனையில் நெய் மணக்கும்ங்க” என்ற தேவர், குஞ்சம்மாவைக் கூப்பிட்டு, இன்னும் இரண்டு துண்டுகள் வைக்கும்படி சொன்னார். அவன் வேண்டாமென்று மறுத் துரைக்கவில்லை. 

சாப்பிட்டெழுந்திருக்க வெகு நேரமாயிற்று. கை நிறைய சவிக்கச் சவிக்கப் பூசிய தேங்காய் எண்ணெயை மீறிக்கொண்டு, லேசாகக் ‘கவிச்சி’ நாற்றம் வீசியது. வெற்றிலைத் தாம்பாளத்தை முன்னே இழுத்து வைத்துக் கொண்டு, தேவர் கேட்டார், “தம்பி ரெண்டு நாளா தோட்டத்திலே என்ன பண்ணுது? இஞ்ச பாக்கவே முடியறதில்லே…” என்று. 

“ரெண்டு செடி, ரெண்டு தழை … அப்படி இப்படி என்று ஏதோ கொஞ்சம் வேலை நடக்குதுங்க…” 

“அதான். ஏதாச்சும் பண்ணிக் கிட்டே இருக்கணும்.” 

“அருவாதான் மழுங்கிப் போச்சுங்க.” 

அவன், பக்கம் திருப்பிப் பார்த்தார். பெருமிதத் தால் மனம் நிறைந்தது. 

“நம்ப வூட்டுலே நாலு வெட்டருவா இருக்கு. ராமுத் தேவர் வூட்டுலே ஆறு அருவா கிடைக்கும் ..அப்புறம், இஞ்ச ஆருகிட்டே கிடைக்கும் …… ஹும்… அஞ்சாறு அருவா சாமிக்கண்ணு படையாச்சி வூட்டுலே இருக்கு. அதையும் வாங்கிக்கலாம்…” 

“எதேஷ்டம்ங்க, மாமா.. ஆனா, நமக்கும் கொஞ்சம் அருவா, மண்வெட்டி, கோடாலி, அலக்கு எல்லாம் வேணுமுங்க.” 

சிவனாண்டித் தேவர் அவன் சொன்னதையெல்லாம் கிர்ர் என்று வாங்கிக் கொண்டார். அவன் போக்கின் வேகம் புரிந்தது. 

“தங்கசாமி ஆசாரி கிட்டே ஒரு வார்த்தை சொல் லிட்டாப் போதும்; நாலு நாளிலே பண்ணிக் கொடுத் துடுவான். போறச்ச பாத்துட்டுப் போவலாம்.” 

“தோட்டத்துக்கு நீங்களும் வறீங்களா, மாமா ?” 

“தம்பி, தோட்டத்துலே என்ன பண்ணுதுன்னு தெரிஞ்சிக்க வேணாமா?” 

“கட்டாயம்.” 

ராமுத் தேவர் வீட்டிலிருந்து அரிவாள் வாங்கிக் கொண்டு தேவர் திரும்பிவரும்போது, ராஜாத்தி, “மாமா, ரெண்டு எல வேணுங்க” என்றாள். 

“மடியிலே இருக்கு … செத்த கிட்ட வா, அவுத்துத் தாரேன்.’ 

“போங்க, மாமா.” 

“எதுக்குடீ சிணுங்கறே … எல வேணுமின்னா போய் அறுத்துக்கிட்டுப் போவியா… அதெ விட்டுப் புட்டு, கிளவன வந்து கேட்டா…” 

அவள் நளினமாகப் புன்னகை பூத்தாள்.

“அப்படியா சங்கதி ! ஆரு வந்திருக்காக?” 

“அலமேலு வூட்டுக்காரு… மோவூரிலே இருந்து…” 

“அது ஆருடீ அலமேலு வூட்டுக்காரன்! சின்ன மச்சான்னு சொல்லேன்.” 

“போங்க, மாமா” என்று உடலை நெளித்துக்கொண்டு ஓடியவள், திரும்பி வந்து, “மாமா!” என்றாள். 

“என்ன ராஜாத்தி…” 

“கடைப்பக்கம் போறீங்களா, மாமா?” 

“எதுக்கு?” 

“விருந்தாளியெல்லாம் வந்துகிட்டே இருக்கு; மளிகை சாமான் வாங்கத்தான்…” 

“நான் போவ ரெண்டு நாளு ஆகும்; நேத்திதான் பாப்பா கடைக்குப் போயிட்டு வந்தா…” 

“அப்ப அக்காவைப் பாத்துக்கறேன், மாமா” என்று வேகமாக நடக்கத் தொடங்கினாள். 
 
சாயாவனத்தின் தெற்கு முனையில் இரண்டு மளிகைக் கடைகள் ஒன்று அப்பு செட்டியாருடையது; மற் றொன்று மொகதீன் ராவுத்தருடையது. இரண்டையும் தள்ளி, நெய்விளக்கு முனையில் ஒரு கடை- கோமுட்டி செட்டிக் கடை; மளிகை சாமான்களைவிட மருந்து சாமான்களே அதிகம்; அறை மருந்துக்குக் கோமுட்டி கடை பிரசித்தி பெற்றது. 

அத்தியாவசியத் தேவையெல்லாம் குறைவின்றி ஊரி லேயே கிடைத்துவந்தது. அங்கே கிடைக்காததை குறிப்பாகக் கம்பு, கேழ்வரகு, தினை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு,கரும்பு – இவைகளை வெளியூர்க்காரர்கள் வண்டி யில் கொண்டுவந்து விற்றார்கள். தங்களிடம் அதிகமாக உள்ளதைக் கொடுத்துவிட்டுத் தேவையானதை சாயா வனத்து மக்கள் வாங்கிக் கொண்டார்கள். 

புளிக்கு, கடைக்குப் போக வேண்டியதில்லை ; ஐயர் தோட்டத்தில் உலுக்கித் தேவர் கொண்டுவந்து தருவார். வீட்டுக் கொல்லையில் மிளகாய் பயிராகும். செட்டியார் காணம் போட்டு நல்லெண்ணெய் தருவார்; அதற்குக் கணக்கில்லை. செக்கடிக்குப் போனால், வேண்டுமென்ற வரையில் மொண்டு வரலாம்; கேள்வி முறை கிடையாது. சொந்தச் செக்கு; சொந்தக் காணம் மாதிரி. 

துணிகளுக்குத்தான் மாயவரம் போக வேண்டும் பத்து மைல் நடைப்பயணம் ; வண்டியில் போனால் செட்டி யார் வீட்டு வாசலில் இறங்கலாம். செட்டியார் வீட்டுத் தறி சொந்தத் தறி போல – தேவையானபோது வேட்டி, புடவை, துண்டு – எடுத்துக்கொண்டு, அறுவடைக்குப் பிறகு, நான்கைந்து பேராகச் சேர்ந்து வண்டியில் நெல் அனுப்புவார்கள். இதற்கெல்லாம் துல்லியமான கணக்கு கிடையாது; நினைவும் வார்த்தையுந்தான் கணக்கு. 

அவள் வார்த்தைகளை நம்பினார்கள். அவர்கள் வாழ்க்கை வாய்ச்சொற்களின்மீது ஆதாரப்பட்டிருந்தது. ஆனால், அதனைச் சோதித்துப் பார்ப்பதுபோல ஒரு சம்பவம் நடந்தது; குழம்பிப்போனார்கள் அவர்கள். 

வேணுகோபால ஐயர் மகன் கிருஷ்ணன் பட்டணத் திற்குப் படிக்கப்போய், அப்படியே சீமைக்குச் சென்றதும் அக்கரஹாரம் திகைப்பிற்கு உள்ளாகியது ; மனங்குன்றிப் போனார்கள்; சொந்த வீட்டில் துக்கம் ஏற்பட்டதுபோல நடந்து கொண்டார்கள். கிருஷ்ணன் திரும்பி வந்தால். ஜாதியை விட்டே நீக்கிவிட வேண்டுமென்று உரத்த குரலில் பேசினார்கள்; அவன் தகப்பனாரை ஒரு வருடம் போலத் தள்ளி வைத்தார்கள். அவர் தமக்கும் மகனுக்கும் சம்பந்தமில்லை என்றதும் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. 

ஒரு நாள் உதய காலத்தில், கிருஷ்ணன் திரும்பி வந்தான். பெரிய பெரிய பெட்டிகளோடும் நிறைய பணத் தோடும் வந்ததும், அவனுக்கு எதிரான ஆரவாரங்களு கண்டனங்களும் அடங்கின. அது ஒரு விசித்திர நிலை; அவனை எதிர்த்தவர்களே சாஸ்திரத்திலிருந்து பிராயச் சித்தத்திற்கு ஆதரவாக உள்ள அம்சங்களை எடுத்துக் காட்டினார்கள். 

பிராயச்சித்தம், மூன்று நாட்கள் வேள்வித் தீ சுடர் விட்டெரிய நடந்தது. நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் – வேதம் அறிந்தவர்கள் – மாயவரம், மேலகரம், நெய் விளக்கு, மாங்குடி, இன்னும் எட்டத்திலிருந்தெல் லாம் வந்து கலந்து கொண்டார்கள். ஆனால், உள்ளூரி லிருந்த பாலசுப்பிரமணிய ஐயர் போகவில்லை. 

கிருஷ்ணன்,பிராயச்சித்தமான இரண்டாவது மாதம் பட்டணத்திற்குப் போனான். ஒரு கிறிஸ்துவப் பெண்ணை சர்ச்சில் கல்யாணம் பண்ணிக்கொண்டான். இந்தச் செய்தி, சாயாவனத்தை மிகக் குழப்பியது. அந்த அலை இன்னும் ஓயவில்லை; அதற்குள் சிதம்பரம் வந்திருக் கிறான் கடல்கடந்து சென்றவன்; நாடு நாடாய்ச் சுற்றியவன். அவனுக்குச் சாதிக் கட்டுப்பாடும் பிராயச் சித்தமும் கிடையாது. அவன் சாதிவேறு; அதன் தத்துவம் வேறு. கிருஷ்ணன் போல சாயாவனத்தைக் கலவரப் படுத்திவிட்டுப் போகக் கூடியவன் அல்ல, சிதம்பரம். அவன் ஒரு தீர்மானத்தோடு வந்திருக்கிறான்; அவனுக்கு உற்ற துணையும் இருக்கிறது. 

ஆளோடியிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, இலுப்பை மரத்தில் சாற்றியிருந்த அலக்கைத் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டான், சிதம்பரம். பெரிய நீண்ட அலக்கு: பழக்கமின்மையால் தோளில் நிற்க வில்லை; அசைந்து நெளிந்தது. 

“செத்த, இப்படிக் கொடுங்க.” 

“….”

“அத … அலக்க…” 

அவனிடமிருந்து அலக்கை வாங்கித் தன் தோளில் சாற்றிக்கொண்டு முன்னே நடந்தார் சிவனாண்டித் தேவர். 

“நான் தூக்கினப்ப அலக்கு என்ன ஆட்டம் ஆடுச்சு! இப்ப, அசையவே காணோமே!” என்று சிதம்பரம் வியந் துரைத்தான். 

“இதுலே என்ன இருக்கு, பழக்கந்தான். இன்னும் பத்து நா போனா, நீயும் தூக்குவ இப்படி…” 

“நானா?”

அவர் திரும்பி, “உன்னாலே முடியாதது ஒண்ணு மில்லே, தெரியுமா?” என்று கேட்டார். 

அவன் பதிலொன்றும் அளிக்கவில்லை; விசித்திரமாக அவரைப் பார்த்தான். பின்னால் யாரோ வேகமாக நடந்து வருவது தெரிந்தது. இரண்டுபேரும் திரும்பிப் பார்த்தார்கள். 

“என்னங்க, அண்ணா? அலக்கெல்லாம் எடுத்துக் கிட்டு எங்க கிளம்பிட்டீங்க…?” 

“இவுங்க தோட்டத்துக்கு, சொர்ணம்! இவுங்களத் தெரியுமில்லே; ஐயர் தோட்டத்தை வாங்கி இருக்கிறவங்க இவுங்கதான்.” 

“இவுங்கதானா அந்தத் தம்பி. நமஸ்காரங்க தம்பி!” 

“நமஸ்காரங்க,” 

“சொர்ணவேலு படையாச்சி. இந்தப் பக்கத்து யாவாரி; ஆனா, சுத்தப் போக்கிரி…” 

“அண்ணா…அண்ணா!” 

“என்னடா? ….” 

“எதுக்குங்க அண்ணா தம்பிக்கு முன்ன அதைப் போட்டு உடைக்கணும்…” என்றவன், சிதம்பரம் பக்கம் திரும்பி, “ஆல வைக்கப்போறீங்களாமே?” என்று கேட்டான். 

“ஆமாம்.” 

“அப்ப, இனிமே சக்கரை நயமா கிடைக்கும்…” 

“நீ கடைகூட வைக்கலாம்!” 

“அண்ணா ஒரு தினுசு; அவுங்க பேசுறது ஒரு தினுசு அதை இன்னிக்கெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கலாம்!” 

“உன் வாயில புகுந்து வர என்னால முடியாது. செத்த  வழிய விடு; நான் போவணும்…” 

“நான்கூட அங்க வரணுங்க அண்ணா; தோட்டத் திலே ரெண்டு தாறு பழுத்துப் போச்சு…” 

“நீ வந்தாத்தானே ?” 

“நீடூரிலே சாயபு வரச் சொன்னாருங்க, அண்ணா ; ஒரு நா வேலை, நாலு நாளிலே முடிஞ்சிச்சு..” 

“சுருக்கா வா, நாங்க போவணும்.” 

“சரிங்க, அண்ணா!” 

மேல வீதியைக் கடந்து செல்லும்போது, புதிய வீட்டின் நினைவு வந்தது. சிதம்பரந்தான் குறிப்பாக அதை உணர்த்தினான். தேவருக்கு ரொம்ப சந்தோஷம். தன் நினைவு அடிக்கடி தப்பிப் போவதைப் பற்றி வருத்தத் தோடு சொல்லிக் கொண்டார். 

மூங்கில் படலைத் திறந்து கொண்டு, உள்ளே சென் றார்கள். இன்னும் கொத்தனார் வரவில்லை. அநேகமாக வரவேண்டிய நேரம். ஆனால்,அதுவரையில் பொறுமை யோடு காத்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு வேலை நிறைய இருக்கிறது. 

கட்டப்பட்டுவரும் வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்த பிறகு, சிதம்பரம் கேட்டான்: “அரிகாப்படி தூக்கி வைக்கலாம் போலவிருக்கே, மாமா !” 

“ஐயரைப் பாத்து, நாளு முடிவு பண்ணனும்.” 

ஒரு வாழையிலை, காற்றில் சற்றே தாழ்ந்து பார் வையை மறைத்தது. 

“மாமா, வாழை இங்க ரொம்ப நல்லா பயிராவும் போல இருக்குங்களே?’ 

“என்ன ராசியோ தெரியலே, இந்த மண்ணுக்கு வாழை சடைசடையாப் பிடிக்குதுங்க, தம்பி.”வாழையின் இயற்கையைப் பற்றியும் அதில் உள்ள பிரிவுகளைப் பற்றியும் தேவர் மிதமிஞ்சிய உற்சாகத்தோடு பேசினார்.

“வாழையின்னா என்ன… ஒரு பொம்பளை மாதிரி தான்.” 

அவன் புன்னகை பூத்தான். 

“மத்ததுக்கெல்லாம் ஒரு மாசமுண்டு ; வாழைக்கும் பொம்பளைக்கும் ஒன்னும் கிடையாது!” 

அவர்கள் வெளியே வந்தபோது, சொர்ணவேலு உள்ளே வந்தான். 

“அண்ணா ரெக்க கட்டிகிட்டு இப்பெல்லாம் பறக்குறாங்க” 

“எலே, உன் வேலையைப் பாருடா” என்று நடையை எட்டிப் போட்டார். 

சொர்ணவேலு வாழைத் தோட்டத்தை ஊடுருவி நோக்கினான். பெரிய பெரிய தார்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று நாட்களுக்குச் சரியாக வேலையிருக்கும்; அவன் மகிழ்ச்சியுற்றான். இடுப்பிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, நிதானமாகக் கிடங்குகள் நிறைந்த வாழைத் தோட்டத்தினுள் புகுந்தான். 

அத்தியாயம் – 8

தோட்டத்தின் முகப்பில் நின்று பார்வையை நிதா னமாக வெகுதூரம் வரையிலும் செலுத்தினார் சிவனாண்டித்தேவர். பெரிய வனம் போன்ற தோட்டம்; எப்படி சின்னா பின்னம் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வனத்தின் ஒரு பகுதி வளர்ந்து பெருங் காடாகியது, அவ ருக்குத் தெரியும்; தாத்தாவோடும் தகப்பனாரோடும் ஐந்து வயதிலிருந்தே தோட்டத்திற்கு வந்து போய்க் கொண்டிருக்கிறவர். எட்டு வயதில் மரமேறிப்பு உலுக் கத் தொடங்கினார். புளி உலுக்குவதில் அவருக்கு சாமர்த் தியம் உண்டு. குரங்கு மாதிரி கிளைக்குக் கிளை தாவுவார்; பிடி நழுவாது. கிளை தாழ்ந்து மேலே உயரும். இப்படி ஒரு நாள் தாவும்போது, பட்டுப்போன கிளையைப்பற்ற, அது முறிந்து கீழே விழுந்தார். நல்ல அடி; ஒரு மாதம் போலப் படுக்கையில் கிடந்தார். மூட்டு பிசகிவிட்டது. அப்புறம் மெல்ல சரியாகியது. நடக்க முடிந்தது. ஆனால், மரம் ஏறுவது நின்று போய்விட்டது. 

புளியமரத்தடிக்கு வந்து அப்படியும் இப்படியுமாகப் பார்ப்பார்; கீழே விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து ஆட்டிப் பார்ப்பார். அப்புறம் அவரிடமிருந்து புளி உலுக்கக் கட்டளை புறப்படும். 

அப்போதெல்லாம் தோட்டம் எப்படியிருக்கும்! பக்கத்தில் இருப்பதுகூடத் தெரியாது; மரம் மட்டைகள் அடைத்துக் கொண்டிருக்கும். இன்றோ, தோட்டம் வெறிச்சோடிவிட்டது! நடக்கப் பயந்து கொண்டிருந்த பகுதிகளிலெல்லாம் யார் யாரோ வே க மா க நடந்து போவது மாதிரி ஒரு காட்சி. 

நேற்று வெட்டிப்போட்ட செடிகொடிகளைப் பழனி யும், கலியபெருமாளும் இழுத்துக்கொண்டு வந்தார்கள். “நான் என்னவோ நெனச்சேன். ஆனா, நீங்க அப்படி யில்லே !’ தேவர் மனம் பெருமையாலும் களிப்பாலும் பூரித்தது. 

சிதம்பரம் தலையசைத்தான். 

“நான் என்ன பண்ணிட்டேன் ; ஒரு வேலையும் செய்யலே.” 

“நீங்க சொன்னா போதுமா! இஞ்ச வெட்டிப் போட் டிருக்கறதே சாட்சி சொல்லுதே!” 

பழனியும் கலியபெருமாளும் அவர்கள் பக்கம் ஓடி வந்தார்கள். 

“முன்னாடியே வந்துட்டீங்களா?” 

“செத்த முந்தீங்க.” 

“இன்னம இஞ்சதான் வேல. செட்டியார்கிட்ட சொல்லிட்டேன்.” 

“ஐயா வூட்டுக் கணக்கப் புள்ள சொன்னாங்க.” 

“கிழக்கால கிடக்கறதையெல்லாம் சுருக்கா எடுத் தாந்து போட்டுடுங்க. அப்புறம் இன்னக்கி வேற வேல் இருக்கு” என்று இருவருக்கும் விடை கொடுத்தனுப்பினான் சிதம்பரம். 

வேட்டியைக் கோவணமாக இறுக்கிக் கட்டிக் கொண்டே தேவர், “எனக்கு என்ன வேலை சொல்லுங்க, தம்பி ” என்று கேட்டார்.

அவன் பார்வை குத்திட்டு நின்றது. 

“நீங்கதான் மாமா சொல்லணும்.” 

“நானா?” அவர் தலையசைத்தார். “தோ, பாருங்க தம்பி. இஞ்சயே நான் பொறந்திருக்கலாம்; ரொம்ப வருஷம் இஞ்சயே சுத்தியிருக்கலாம்; ஆனா, உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கிற சங்கதியெல்லாம் இஞ்ச ஒத்தருக்கும் தெரியாது. நான் சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லலே; நிஜமாகத்தான் சொல்லுறேன். நிஜத்தைச் சொல்லறதுலே என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கு, சொல்லுங்க.” 

சிதம்பரம் ஆழ்ந்த மௌனத்தோடு நின்றான். 

“இஞ்ச ரொம்பப் பசங்க சவடாலு அடிப்பாங்க; தனக்குத் தெரியாதது ஒண்ணுமில்லே எம்பானுங்க. இப்படி எவன் சொல்லுறானோ அவனுக்கு ஒண்ணுந் தெரியாதுங்க!” 

“வாஸ்தவங்க, மாமா.” 

”சொந்தப் பையன்கிட்டே கடவுள் கத்துகிட்டதா ஒரு ஐதீகங்கூட உண்டுங்க, தம்பி.” 

அவன் மிருதுவாகப் புன்னகை பூத்தான். 

“தெக்கால ரொம்ப காரையும் கள்ளியும் மண்டிக் கிடக்குதுங்க,மாமா.” 

”பழய காடு; அதான். இன்னைக்கு நேற்று முளைத் ததா என்ன ! எத்தனையோ வருஷமா இருக்கறது. அதோடுங்க காரை ஒரு தனிச் செடி … 

“…வெட்ட ரொம்பக் கஷ்டமா இருக்குதுங்க.” 

“தேக்கு மாதிரி, ஒரு சாதி அது. நீங்க அதைப் பார்த்துக்குங்க; ஆடாதொடையைப் பசங்க பார்த்துக் கட்டும். நான்…” 

“நீங்க…?” 

சிவனாண்டித் தேவர் நெடிதுயர்ந்திருக்கும் மூங்கில் குத்தைச் சுட்டிக் காட்டினார். கிழக்கு மேற்காக தோட் டத்தை இரண்டாகப் பிரித்தது அது; நெடுங்காலத்துக் குத்து. அநேக ஆண்டுகளைக் கடந்த மரங்கள், முதுமை எய்திப் பூத்துக் காய்த்து தரையில் சாய்ந்து கிடந்தன. 

மனித நடமாட்டமே அற்ற பகுதியில், நீரோடையின் பக்கத்தில் மூங்கில்கள் தன்னிச்சையாக வளர்ந்திருந்தன. ஒவ்வொரு முள்ளும் அதிசயிக்கத்தக்க விதத்தில் நீண் டிருந்தன. 

புத்தம் புதிய சிங்கம் மண்ணைப் பிளந்து கொண்டு கொழுகொழுவென்று வந்துகொண்டிருந்தது. மூங்கிலை வெட்டி வெளியே இழுப்பதென்பது கனவு காணமுடி யாத செயல். ஒவ்வொரு மரமும் முள்ளோடு பின்னிக் கொண்டிருந்தது. முதலில் முள்ளை வெட்டி இழுத்து, மரத்தைத் தனிமைப்படுத்த வேண்டும். 

“முள்ளு அறுக்கப் போறீங்களா, மாமா?” 

“ஆமாங்க, தம்பி.” 

“கொளுத்திட்டா என்னங்க, மாமா – தழையோடு சேர்த்து?” 

“தோ, பாருங்க தம்பி. நமக்கு வூடுகட்ட, ஆலை கட்ட மரமாகும்; வேலிக்கு முள்ளாகும். இதையெல்லாம் விட்டுப்புட்டு வெறுமனே கொளுத்திடலாங்களா, சொல்லுங்க தம்பி?” 

“அப்ப, நீங்க சொல்றது சரிதாங்க, மாமா”. 

சிவனாண்டித் தேவர் அலக்கைப் பற்றினார். வெகு நாட்களுக்கு முன்னே வாலிப மிடுக்கு நிறைந்திருந்த போது செய்த வேலை – அதே சுறுசுறுப்போடும் வேகத் தோடும் இப்பொழுது வேலை செய்ய முடியாது. ஆனால், அனுபவம் இருக்கிறது; முள்ளை வெட்டி இழுக்கும் முறை தெரியும். அரிவாளில் கருக்கு இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக்கொண்டே மூங்கில்குத்தருகே சென்றார் தேவர். 

அலக்கை, எட்டிய, வசதியான ஒரு முள்ளில் மாட்டி விட்டுக் கை கூப்பி, மனமொன்றிய நிலையில் மந்தையத் தேவரைத் தொழுதார். அது ஒரு மரபு; ஒரு பழக்கம். வேலையைத் தொடங்குவதற்கு முன்னே மனத்திற்குள் ளேயே வழிபாடு. இஷ்ட தெய்வம் உத்தரவு கொடுத்து விட்டது மாதிரி,உடலை சிலிர்த்துக் கொண்டு முன் நோக்கிச் சென்றார். 

அலக்கு முள்ளைப் பற்றியது.தேவர் இரண்டடி பின் னுக்கு வந்து, முள்ளை வெட்டி வெட்டி இழுத்தார். மூன் றாவது வெட்டிற்கு முள் அறுந்துவிட்டது. இன்னொரு கவையில் மாட்டி, அறுந்த முள்ளை வெளியே இழுத்தார். கொஞ்சம் வெளியே வந்த முள், மற்றொரு முள்ளில் சிக்கிக் கொண்டது. மூங்கில் குத்திலே இதுதான் கஷ்டம். ஒரு முள்ளோடு ஐந்தாறு முட்கள் பின்னிக்கொண்டிருக்கும். பத்துப் பதினைந்து முட்களை வெட்டி, சிடுக்கைப் பிரித்து இரண்டு மூன்றை வெளியே இழுக்கலாம். அநேகமாக இரண்டாள் உயரம் கழிக்கும் வரையிலும் வேலை கடுமை யாகவும் சலிப்பூட்டக்கூடியதாகவும் இருக்கும். 

தேவர் சற்றே முன்னோக்கிச் சென்று, ஒவ்வொரு கணுவிலும் அலக்கை மாட்டி முட்களை வெட்டி, அப்படி யப்படியே விட்டார். அலக்குப் பிடிக்கும்போது மனத்தி லிருந்த முழுத் திட்டமும் இப்போது மாறிவிட்டது. குத்தை விட்டு முட்களை வெளியே இழுக்கும் யோசனை யைத் தாமாகவே கைவிட்டார். மரத்தின் வலுவைக் குறைக்க வேண்டும்; தனிமைப் படுத்த வேண்டும். அது தான் முதல் வேலை; அதற்குப் பிறகுதான் முன்னோக்கிச் செல்ல இயலும். 

ஒவ்வொரு முள்ளாக அறுத்துவிட்டுக் கொண்டு போனார் தேவர். வரவர வேலை சலிப்பூட்டும் விதத்தில் மாறியது. கை கடுத்தது; அலக்கை ஒரு முள்ளில் தொங்க விட்டுவிட்டு, மேட்டின் மீதேறி கீழ்க்கோடியை நோக்கிப் பார்வையைத் திருப்பினார். 

சிதம்பரம் இருக்குமிடம் தெரியவில்லை. அவன் காரைச் செடிகளோடு போராடிக் கொண்டிருந்தான். காரையைப் போர்த்திக் கொண்டிருக்கும் கோவைக் கொடி, குறிஞ்சாக் கொடி, ஓணான் கொடிகளை அறுத்து வெளியே இழுப்பதற்குள் அவனுக்கு முழுபலமும் போய் விடும் போல் இருந்தது. சிறு கொடிகள் – புதருக்குப் புதர், செடிக்குச்செடி தாவிப் பின்னிப்பிணைந்து கிடந்தன. ஒரு புதரை வெட்டிச் சாய்த்து இழுத்த வேகத்தில் கால் இடற, மேட்டிலிருந்து உருண்டு பள்ளத்தில் போய் விழுந் தான் சிதம்பரம். 

இடுப்பிலும் தொடையிலும் காரை குத்திக் கிழித்தது. காலில் சப்பாத்தி அட்டையாய்க் குத்திக் கொண்டது. சிறிய முட்கள் ஒவ்வொன்றும் தாளமுடி யாத வலியைத் தந்தன. தாழ்ந்த கிளையொன்றைப் பற்றிக்கொண்டு எழுந்து, சப்பாத்தியை ஆத்திரத்தோடு பிடுங்கித் தூர எறிந்தான். வலி முன்னிலும் கூடியது; லேசாக ரத்தம் வந்தது. அவன் சோர்ந்து உட்கார்ந்தான். 

சற்று நேரத்திற்கெல்லாம் எழுந்து, சுற்றுமுற்றும் பார்த்தான். பழனியோ, கலிய பெருமாளோ, தேவரோ கண்ணில் படவில்லை. ஆனால் செடி கொடிகளின் அசைவி லிருந்து அவர்கள் இருக்குமிடத்தை அனுமானிக்க முடிந்தது. அவர்கள் தான் விழுந்ததைப் பார்க்கவில்லை என்பது மகிழ்ச்சியை அளித்தது. 

கைகளை அசைத்துக் கொண்டு எழுந்தான். ஆவேச மும், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் மூள, அரி வாளை வீசினான். அவன் முழு பலத்தையும் காரைச் செடி எதிர்த்து நின்றது. பலம் மிகுந்த எதிரி; அவனைப் போலவே சாதுரியம் நிறைந்தது. தன் தோல்வியைக் கடைசி வரையிலும் ஒத்துக் கொள்ளாமல், நிலைகுலைந்து தரையில் சாயும்போதுகூடப் பெருமைக்குரிய வீரனைப் போல் நடந்து கொண்டது. 

அரிவாளைவிடக் கோடரியால் காரையை வெட்ட லாம். அது வேலையை இன்னும் சுலபமாக்கிவிடும்; பலம் மிகுந்த எதிரியை விரைவில் மாய்த்துவிடும். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, நின்று கோடரியை வீச முடியாது. சுற்றிலும் செடியும் கொடியும் மரங்களும் சூழ்ந்து நிற் கின்றன. அரிவாள்தான் போராட்டக் கருவி ; சலிப் படைய வைத்தாலும், அதை வைத்துக் கொண்டுதான் காரியத்தை சாதிக்கவேண்டும். 

பழனியாண்டியைத் தேவர் அழைக்கும் குரல் கேட் டது. எல்லோரும் வெகு அருகில்தான் இருக்கிறார்கள்! 

சிறுவனின் தலை தெரிந்ததும் தேவர் உற்சாகத்தோடு மீசையை ஒரு பக்கமாகத் தள்ளி விட்டுக் கொண்டார். தம் வேலைகள் சரியாக நடந்து வருவது அவருக்குத் திருப்தி அளித்தது. 

அவன், “என்னங்க” என்றதும், உன் கூட்டாளி யையும் கூட்டிக்கோ ; முள்ளைத் தனியா அடுக்கிடணும்’ என்றார். 

கலியபெருமாள் வந்ததும் வேலையை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவர்கள் பேச்சிலும் வேலைப் பிரிவினையிலும் சம்பந்தமே இல்லாதவர் மாதிரி தேவர் முட்களை அறுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். நெடு நேர வேலையால் உடம்பிலிருந்து வியர்வை கொட்டியது. ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு அலக்கை மாற்றிக் கொண்டார். 

முதல் குத்து கால்வாசிக்குமேல் அழிந்துவிட்டது. இறக்கை பிய்க்கப்பட்ட கோழி மாதிரி மூங்கில் குத்து கலகலத்து விட்டது. ‘நாளைக்கு மூங்கில் குத்துக்குள்ளே நுழைந்து விடலாம்; உள்ளே நுழைந்துவிட்டால், குத்தை அழித்தது மாதிரிதான்’ என்று சொல்லிக் கொண்டே புன்னை மரத்தடிக்கு வந்தார் தேவர்.உட்கார அவருக்கு மனம் வரவில்லை ; கண்கள் சிதம்பரத்தைத் தேடின. அவன் இருக்கும் இடத்தை நிதானிக்க முடிய வில்லை. இரண்டு மூன்று முறைகள் கூவியழைத்தார். மூன்றாவது குரலுக்கு அவனிடமிருந்து கணீரென்று பதில் வந்தது. 

“கொஞ்சம் தெக்காலத் திரும்பி, இஞ்ச வாங்க மாமா!” 

“அதாங்க தம்பி தெரியலே.” 

“அப்ப, இருங்க,தோ நா வந்துடறேன்.” 

சிதம்பரம் மண்டிக்கிடந்த செடிகொடிகளைத் தள்ளி விலக்கிக் கொண்டு வெளியே வந்தான். 

“நல்ல தோப்பு, பக்கத்திலே இருக்கிறவுங்க கூடத் தெரியமாட்டேங்குது!” 

“இன்னம் எம்மா நாளைக்குங்க, மாமா!” 

“இது சரியான பேச்சுங்க,தம்பி. கொஞ்ச நாளைக்கு அப்புறம், ‘இஞ்ச காரை இருந்துச்சு: இஞ்ச மூங்கில் இருந்துச்சு; இஞ்ச இலுப்பை இருந்துச்சு ; இஞ்ச புளி இருந்துச்சு’ என்னு சொல்லறதுக்கு வந்துடும்.” 

சிதம்பரம் மகிழ்ச்சியோடு அந்தக் காட்சிகளை நினைவு கூர்ந்தான். மாமா சொல்வது மாதிரி சீக்கிரத்தில் நடந் தால் அவனுக்கும் தெரிந்தது. வார்த்தைகளைவிடச் செயல் பன்மடங்கு மெல்லச் செல்வது. சலியாத உழைப் பின் ஒவ்வொரு அடியும், கோடிக்கணக்கான வார்த்தை களை ஜீரணித்துக் கொண்டிருப்பது. கனவு மாதிரி இருக் கும் திட்டங்கள் பூர்த்தியானால், இப்போது புல்லும், பூண்டும், நாணலும், இலுப்பையும் மண்டியிருக்கும் இடத்தில் கருப்பந்தோகை சலசலவென்று ஆடும்.கரும்பு ஆலையிலிருந்து சிம்னி வழியே புகை வானமண்டலத்தை நோக்கிச் செல்லும். 

நம்பிக்கை நிறைந்த மனத்தோடு இருவரும் ஆல மரத் தடிக்கு வந்தார்கள். தோட்டத்திற்கு இது இரண்டாவது மரம்; விழுது விட்டுப்பரவி இருக்கும் பெரிய மரம். கரும்பச்சையாகப் புல்லுருவிகள் ஆங்காங்கே படர்ந்திருந்தன. புல்லுருவியைப் பார்த்துக் கொண்டிருந்த தேவரிடம், “அப்புறங்க, மாமா?” என்று கேட்டான். 

“முதல்லே, முள்ளு அறுக்கணும்; அப்புறம்,மரம் வெட்டணும். இதையெல்லாம் முடிக்க ஒரு மாசமோ ஒண்ணரை மாசமோ பிடிக்கும்.” 

“ரெண்டு பேரும் சேர்ந்தாங்க, மாமா.” 

“செத்த சுருக்கா ஆயிடுங்க, தம்பி. ஆனா, காரை வெட்டற வேலை நின்னுபோயிடாதுங்களா?” 

“ஆமாங்க.” 

மூங்கில் குத்தை அழிப்பது மாதிரி இன்னொரு விதத் தில் காரையை அழிப்பது முக்கியமானது. அநேக வேலை களுக்கிடையில், தேவர் துணையாக வந்து, தோளோடு தோள் நின்று பணியாற்றுவது புதுத் தெம்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அவன் நிமிர்ந்து உட்கார்ந் தான். இனி துணைக்கு – ஒத்தாசைக்கு யார் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, காரியங்கள் தடையேதுமின்றி நடைபெறும் என்று தோன்றியது அவனுக்கு. தன் திட்டங்களை அவன் விவரித்தான். அவர் மகிழ்ச்சியுற்று அவைகளை ஏற்றுக் கொண்டார். 

ஒவ்வொரு நாளும் வெட்ட வெட்டக் குவிந்த காரை, போர் போராய் உயர்ந்துகொண்டே வந்தது. பழனி யாண்டி, கலியபெருமாள், தேவர் – இவர்களுக்கெல்லாம் வேலைக்கென்று ஒரு நேரமிருந்தது. காலையில் வந்தால், இருட்டியபின் திரும்பிப் போய்விடுவார்கள். ஆனால் சிதம்பரம் காலநேரமின்றி தனியாக வனம்போன்ற தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.எப் பொழுதாவது ஒரு முயல் குறுக்காக ஓடும்; நரி கூட்டமாக ஊளை இடும். அவன் வேலையை சற்றே நிறுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பான். 

நாளுக்கு நாள், தோட்டம் கடுமையான சோதனைக் களமாக மாறி, அவனை வேதனையுறவைத்தது. சக்தியை உறிஞ்சிவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்கும் போலத் தோன்றியது. தன்னுடைய பிரதான இலட்சியத்தை மிகவும் தாழ்ந்த குரலில் மீண்டும் பிரகடனப்படுத்திக் கொண்டான். 

“காடே, உன்னை நான் அழிக்க வர்லே. நான் உன் நண்பன். எனக்கு உதவி செய்; என்னோடு ஒத்துழை!” 

படர்ந்த இருள் பிரியும் முன்னே, அவன் வேலைகள் தொடங்கிவிடும். வேலை கடினம் ஆகஆக உற்சாகம் கூடிக் கொண்டு வந்தது; தன் வாழ்க்கையைப் பல விதங்களி லும் தோட்டத்தோடு சம்பந்தப் படுத்திக் கொண்டு விட்டான்.காரையின் ஒரு பகுதி தன்னந்தனியே அழித்து நிர்மூலமாக்கப் பட்டுவிட்டது ; மூங்கில் குத்துக்குப் போக நேரான பாதை. மூங்கில் குத்தின் ரகசியங்களும் மர்மங் களும் அகன்றுவிட்டன. 

காரை அழிய, இலந்தை மரங்கள் வந்தன. இலந்தை யிலிருந்து பொன்வண்டு கூட்டம் கூட்டமாக வந்தது. மின்னியொளிரும் வர்ணத்தை அவன் சொக்கினான். 

மூங்கில் குத்தை அழிக்கும் தேவர் வேலை, எதிர்பார்த்த படி நடக்கவில்லை. அடிக்கடி தாமதப்பட்டுக் கொண்டே வந்தது. செட்டியாருக்கு மாடு வாங்க என்று காங்கேயம் போனார். திரும்பிவர பன்னிரண்டு நாட்கள் ஆயின. வந்தவுடனே வேலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலூரில் சாதிப் பஞ்சாயத்து என்று ஓலை வந்தது: உடனே போய்விட்டார். 

அவர் திரும்பி வந்து அலக்குப் பிடித்த மூன்றாம் நாள், சிதம்பரம் காரையை அழித்துக்கொண்டுபோய் முன்னே நின்றான். 

சிவனாண்டித் தேவர் மகிழ்ச்சியுற்றார். மனம் பெரு மிதத்தால் நிறைந்தது. கையை அகல விரித்து மார்போடு அவனை அணைத்துக் கொண்டார். 

“தம்பியை ஜெயிக்க ஜெகத்திலே யாருமில்லே!”

“நீங்க நின்னு வேலை செய்தா … அடே அப்பா, ஒருத்தர் கிட்ட நிக்க முடியுமா?” 

“சிங்கம் கிளமாப் போயிடுச்சு; அதோட பல்லும் போயிடுச்சு….” 

அதை அவன் மறுத்துரைத்தான். அவர் மனம் நிறைவுறும்படி பேசினான். 

வேலையில் இறங்கியபோது, அவர்கள் தனித்தனியே பிரிந்தார்கள். மூங்கில் குத்தை வடக்குப் பக்கமாகத் தாண்டிக்கொண்டு சென்றான், அவன். புதிய பூமி அது ; மனிதர்களின் பாதங்கள் படாதது. என்னென்ன ஆச்சரியங்களும் விந்தைகளும் காத்துக்கொண்டிருக் கின்றனவோ! அதைப் பற்றி சிந்திக்கவோ, தேவரிடம் விவாதிக்கவோ அவனுக்கு நேரமில்லை.வேலையில் ஆழ்ந் திருக்கும் மனிதன் அவன். அவனைப் பொறுத்த வரையில் எல்லாம் வேலைதான்! 

மூங்கில் குத்தைத் தாண்டி உள்ளே செல்லச் செல்ல மனிதர்களின் துணை குறைந்து கொண்டு வந்தது. நால் வர்களுக்குள்ளேயே பேச்சற்றுப் போயிற்று. பிற மனிதர் களின் குரல் எட்டாத வனத்திற்குள் சென்று விட்டார் கள். வண்டுகளின் ரீங்காரம் ; தேனீக்களின் உய் என்ற சப்தம்; எப்போதாவது காற்றில் மூங்கில் கிறீச்சிடும் ஓசை ; உதிரும் சருகுகள் ; பழங்கள் : பூக்கள் – இதுதான் அவர்கள் உலகம். 

உதயத்திற்கு முன்னே பறவைகள் கூட்டை விட்டு வெளியே புறப்பட்டுச் செல்லும் சமயத்தில், சிதம்பரம் தோட்டத்திற்குள் நுழைவான்.வேலை தொடங்கியதி லிருந்து அது பழக்கமாகிவிட்டது. இரண்டு மரங்களை வெட்டித் தள்ளிய பிறகு, பழனியாண்டியும் கலியபெரு மாளும் வருவார்கள். அவர்களுக்குப் பிறகு தேவர் வந்து சேர்வார்.ஆனால்,யாருடைய வருகைக்காகவும் யாரும் காத்துக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நிறைய வேலை இருந்தது; குந்திக் கதை பேசிக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு முன்னே, பெருங் காடுபோன்ற தோட்டம்; அதை வென்று ஜெயக் கொடி நாட்டத் துடிக்கிறவர்கள் அவர்கள். 

சிதம்பரம் மெல்ல முன்நோக்கிச் சென்று கொண் டிருந்தான். வெட்டுண்டு தரையில் விழும் செடிகொடி களின் புதர்களிலிருந்து உடும்புகளும் முயல்களும் பாய்ந் தோடின. ஒரு வானரக்கும்பல் கிரீச்சிட்டுக் கொண்டு, மரத்திலிருந்து கீழே குதித்தோடியது. விநோதமான கூட்டம்; பெரிதும் சிறிதுமாக முப்பதுக்கு மேல்- இருந்தன. 

சிதம்பரம் சற்றே ஒதுங்கி, அவைகளுக்கு வழிவிட்டு பதுங்கி நின்றான். கடைசியில் சென்ற பெரிய குரங்கு, கூட்டத்திலிருந்து பிரிந்து, அவனை நோக்கிப் பல்லை இளித்துச் சீறியது. அவன் கொய்யாவின் பின்னே மறைந்து கொண்டான். 

எத்தனையோ காலமாக, மனிதர்களின் குறுக்கீடு இன்றி, விருப்பப்படி பிராணிகள் வாழ்ந்த பகுதி அது. இன்றைக்கு ஒரு தனிமனிதனின் தலையீட்டால் கலவர முற்றுப் போய்விட்டது. மரம் செடிகொடிகள் மாதிரி வண்டுகளும் பறவைகளும் பிராணிகளும் அழிவை நோக்கிக் கொண்டிருந்தன. அவைகளின் அமைதியான வாழ்க்கை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிவிட்டது. 

முற்பகுதியைவிடத் தோட்டத்தின் பிற்பகுதி பல அம்சங்களில் தனித்திருப்பதை உணர்ந்தான். கொடிகள் குறைந்து, செடிகள் மிகுந்திருந்தன. 

வண்ணப் பூக்கள் அழகு சொரிந்தன; பொன் வண்டு கள் ஜிவ்வென்று பறந்து வந்தன. சின்னஞ் சிறு தேனீக் களின் ரீங்காரம் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது. விதவிதமான தட்டான்களும் வண்ணாத்திப் பூச்சிகளும் தாழப் பறந்தன. 

தோட்டம் மாறிவருவதின் அடிப்படையில், ஒரு நாள் கனவு மாதிரித் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்தான் சிதம்பரம். பரவலாக செடிகொடிகளை வெட்டிக் கொண்டு போவதை விட்டுச் சுரங்கம் மாதிரி வெட்டிக் கொண்டு சென்றான். ஒரு நாளாயிற்று; இரண்டு நாளா யிற்று. அவன் இன்னும் இன்னுமென்று மேலே சென்று கொண்டிருந்தான். எதிர்பார்த்த காட்சி ஏதும் தெரிய வில்லை. மனமும் உடலும் சோர்ந்துவிட்டன. ஐந்தாம் நாள் வீட்டிற்குப் போனதும் தேவரிடம் அதைப்பற்றிப் பேசினான். 

தேவர் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு, “நம்பதாங்க தம்பி, வேலை செய்றோம். அதாங்க தம்பி விஷயம்!” 

தன் பொறுப்புக்களைக் கீழே இறக்கி வைக்கத் துடித்தது பற்றி நாணினான். 

“அரிவாளக் கீழே போட்டுட மாட்டெங்க, மாமா.” அவர் மனம் பெருமிதமுற்றது. 

“நம்ப அந்த சாதியில்லை. தேவேந்திர வம்சம்ங்க, தம்பி!” 

சிவனாண்டித் தேவர், தேவேந்திரன் மூலமாகத் தோன்றிய தம் குலத்தைப் பற்றி அற்புதமாக விவரித் தார். மதுரையை விட்டு, தஞ்சைப் பகுதியில் தேவர்கள் குடியேறியபோது, தம் சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல் களையும், நிரந்தரமான போக்கையும் விவரித்தபோது, அவன் ஒரு சிறு குழந்தையைப்போல எல்லாவற்றையும் மனதில் வாங்கிக் கொண்டான். 

அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. மனமும் உடலும் பரபரத்தது. திண்ணையை விட்டு வாசலுக்கு வந்தான். இருள் கவிந்த தெருக்களின் ஊடே நடந்து, தோட்டத்திற்குச் சென்றான். நிலவில் ஆழ்ந்து உறங்கு வது போலத் தோட்டம் காட்சியளித்தது. காற்றோ அசைவோ துளிகூட இல்லை. 

வெட்டுண்டு கிடக்கும் ஒருமரத்தின்மீது ஏறி நின்று, தோட்டம் முழுவதையும் ஊடுருவி நோக்கினான்.நில வொளியில் புதர்களெல்லாம் இருட்குன்றுகளாகவும், மரங்களெல்லாம் வானத்திற்கும் பூமிக்குமிடையே தொங்கும் கயிறுகளாகவும் தோன்றின. சிதம்பரம் இடுப் பில் செருகியிருந்த அரிவாளை எடுத்து, வழிமறிக்கும் செடி களை வெட்டிக்கொண்டே சென்றான். சிறிது நேரத்திற் கெல்லாம் பாதை தவறிவிட்டது போன்ற ஓர் உணர்வு. சப்பாத்தியும் கொடிக்கள்ளியும் பிரண்டையும் கொண்ட புதர்க் காடு; மேலே போக வழியில்லை. 

சிதம்பரம் பின்னுக்கு நகர்ந்து, பூவரசு மரத்திலேறி, புன்னை மரத்திற்குத் தாவி, நெட்டிலிங்க மரத்தின் வழியே கீழே இறங்கினான். அந்த இடத்தில் கோரையும் நாணலும் வளர்ந்திருந்தன ; பூவரசும், கொய்யாவும் தாழப் படர்ந் திருந்தன. ஒவ்வொரு அடியாகக் கிளைகளைத் தள்ளிக் கொண்டு முன்னே சென்றான். இலை அசைவிலும், கிளை குலுங்கலிலும் பறவைகள் பீதியுற்று அலறின. ஒவ்வொரு சமயம் நெஞ்சைப் பிழிவதுமாதிரி ஒரு குரல் திடீரென்று வரும். பகலில் சில வேளைகளில் இம்மாதிரியான சப் தத்தை அவன் கேட்டிருக்கிறான். அப்போதெல்லாம் பதட்டமுறாத நெஞ்சம் இப்போது துணுக்குற்றது. 

மரமேறி, கிளைக்குக் கிளை தாவி, குரங்குகளின் சீறலுக் கும் பறவைகளின் அலறலுக்கும் பின்வாங்கிப் பதுங்கி, முன்நோக்கிச் சென்றான் சிதம்பரம். 

வானில் விடிவெள்ளி முளைத்தது. அவன் புங்க மரத்தி லிருந்து கண்களை அகல விரித்துப் பார்த்தான். எதிரே ஆச்சரியமான சிறு சமவெளி – ஒரு மரமில்லை; பெருங் குன்றுபோன்ற புதரில்லை. அவன் கீழே குதித்துக் கை களைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்கு மாக நடந்தான். ஒரு முயல், காலுக்குக் கீழேயிருந்து புறப்பட்டு ஓடியது. 

இரண்டு நரிகள் ஊளையிட்டன. புதரொன்று அசைந் தது. அவன் நின்று, ஒவ்வொன்றையும் கவனமாகப் பார்த்தான். ஒரு எருது எழுந்தது; அதைத் தொடர்ந்து இன்னொன்று; மற்றொன்று. காத்தவராயன் எருதும் பசுவும் அவை- யாருக்கும் அடங்காதவை. பிடித்துக் கட்ட எத்தனையோ முறைகள் முயன்று பார்த்தாகிவிட் டது ; முடியவில்லை. ஒரு முறை பிடிபட்டு, சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டன. 

சிதம்பரம் பதுங்கிப் பதுங்கிப் போய் மரத்திலேறிக் கொண்டான். மாடுகள் வாலைச் சுழற்றிக்கொண்டு சம வெளி முழுவதும் அதிர ஓடின ; கூச்சலும் இரைச்சலும் கூடின. நரிகள் தொடர்ந்தாற் போல ஊளையிட்டன. குரங்குகள் கிரீச்சிட்டன. சிதம்பரம் வந்த வழியே திரும்பிச் சென்றான். 

காலையில் தேவர் இதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் சந்தோஷமுற்றார். அவன் கையைப் பற்றிக்கொண்டு, “தம்பி, லேசுப் பட்டவங்கயில்லே!” என்று புகழ்ந்துரைத்தார். 

தோட்டத்தின் தாவரங்கள் மாறியதின் விளைவில் பல பிரச்சினைகள் தோன்றின. முற்பகுதியில் வெட்டிப் போட்ட செடிகொடிகள் அப்படியே கிடந்தன. தேவர் மட்டும் ஆடாதொடையும் காட்டாமணக்குமாக ஐந்து வண்டிகள் எடுத்துப் போனார். மற்றவர்கள் யாரும் எரு விற்குத் தழையெடுக்க வரவில்லை. போர் போராய்க் காய்ந்து கிடப்பவைகளை அகற்றினாலொழிய, மூங்கிலை வெளியே கொண்டுவர முடியாது. 

தணிந்த குரலில் சிதம்பரம் தன் திட்டத்தை) தேவ ரிடம் கூறினான். அதை சரியென்று ஏற்றுக் கொண்டார். 

“அப்ப, எப்ப நெருப்பு வைக்கலாம்?” 

“நாளைக்கு மாசம் பொறக்குது. நாளைக்கு வேணாம். அடுத்த வெள்ளிக்கிழமை வைக்கலாங்க, தம்பி.” 

“சரிங்க, மாமா”. 

அத்தியாயம் – 9

திரள் திரளாய் வானத்தில் மேகங்கவிழ, மங்கிய இருள் எங்கும் படர்ந்தது. ஒரே சீராகவும் அமைதியாக வும் குளிர்காற்று வீசியது. இரண்டு நாட்களாகப் பளீ ரென்று காய்ந்து கொண்டிருந்த சூரியன் மறைந்தான். பருவ மழை சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். 

சிதம்பரமும் தேவரும் வானத்தை அண்ணாந்து பார்த்து, பஞ்சாங்கத்தைப் புரட்டிப்புரட்டி, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை தீயிடுவதாக இருந்ததைத் தள்ளி வைத்தார்கள். கருமேகக் கூட்டங் கள் கலைந்து வானம் வெளுக்கும் வரையில் நெருப்பு வைக்க முடியாது. 

திண்ணையில் உட்கார்ந்து,படுத்து, சிதம்பரம் அலுத்துப் போனான்; சோர்வு மண்டியது. நன்றாக இருட்டிய பிறகு பஞ்சவர்ணத்தின் வீட்டிற்குப் போனான். மிதமிஞ்சிய உற்சாகத்தோடும், களிப்போடும் அவனை வரவேற்றாள். கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தான். மனத்தில் பொங்கிய உணர்ச்சி வடிந்துவிட்டது. அந்த இரவு வெறுமனே மெல்லக் கழிந்துகொண்டு வந்தது. அவளோ, அவன் மார்பில் தலைசாய்த்தபடியே தூங்கி விழுந்து கொண்டிருந்தாள். ‘எனக்கு என்ன வந்து விட்டது! உள்ளமும் உடலும் எதற்கோ பறக்கிறது. ந்திரிய சுகத்திற்கு அல்ல என்பது, பஞ்சவர்ணம் மார்பில் துவண்டு கிடக்கையில் தெரிகிறது.பின்,எனக்கு வேண்டியது என்ன? வேட்கை என்ன? எதை நாடி மனம் துடிக்கிறது? எதற்காக இவ்வளவு தூரம் வந்தேன்!’ 

அவனுக்கு நெற்றிப் பொட்டும் கண்ணும் வலித்தது. 

பஞ்சவர்ணத்தை மெல்லப் படுக்கையில் கிடத்திவிட்டு வெளியே வந்தான். குளிர்காற்று ஜில்லென்று உடம்பைத் தழுவிக் கொண்டு போயிற்று. துண்டைத் தலையில் சுற்றிக்கொண்டு வெட்டாற்றின் கரைமீது ஏறினான். சந்திரவொளியில் தண்ணீர் பளபளத்தது. 

பிள்ளையார் கோவில் துறையில் வேட்டியை அவிழ்த்து வைத்துவிட்டுக் கதகதப்பான வெட்டாற்று நீரில் இறங்கிக் குளித்தான்: அக்கரைக்கும் இக்கரைக்குமாக இரண்டு தடவைகள் தண்ணீருக்குள்ளேயே மூழ்கிச் சென்றான். கரைக்கு வந்ததும் குளிரால் உடம்பு வெட வெடவென்று ஆடியது. ஆனாலும், தவிப்பு அடங்கியது. அவன் முகத்தில் ஆச்சரியமான ஓர் உணர்வு படர்ந்தது. 

தோட்டத்திற்குச் சென்றபோது நன்றாக விடிந்து விட்டது. யார் யாரோ சாலையில் போய்க்கொண்டிரு தார்கள். பார வண்டிகளும் கருவாட்டு வண்டிகளும் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தன. மழை மூட்டங்களைக் காற்று அடித்துத் தள்ளிக் கொண்டு இருந்தது. 

சிதம்பரம் புன்னை மரத்தடியில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். காலடியில் கிடந்த மண்வெட்டி மீது ஒரு செவ்வட்டை எச்சிலை உமிழ்ந்தவாறு ஊர்ந்து கொண்டிருந்தது. அரிவாள், அலக்கு, தொரட்டி, கோடரி,பாரை – எல்லாம் தாறுமாறாகக் கிடந்தன. ஒவ்வொன்றையும் எடுத்து வந்து, கொய்யா மரத்தடியில் குவித்து, எண்ணிப் பார்த்தான். ஓர் அலக்கும் இரண்டு அரிவாளும் இல்லை. வைத்த இடம் நினைவுக்கு வரவில்லை. காரைப் புதரையும் தும்பையையும் விலக்கி விலக்கித் தேடினான். ஒரு அரிவாள், தென் பகுதியில் காரையை ஒட்டிக் கிடந்தது. இலந்தை மரத்தில் அலக்கு தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால், பெரிய அரிவாள் மட்டும் கிடைக்கவில்லை. புல்லையும் தும்பை மிதித்துக் கொண்டு கள்ளிக்காடு வரையிலும் சென்று, வெறுங் கையோடு திரும்பிவந்தான் சிதம்பரம். 

‘சீ, இந்தக் காட்டில் இதுதான். வச்சா வச்ச இடம் தெரியறதில்லே.’ அவன் சோர்ந்து பனைமரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்தான். 

“தம்பி, இங்சயா இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டு வந்தார் தேவர். 

“வாங்க,மாமா.” 

அவனைத் தலை தாழ்த்திப் பார்த்தார். 

“தம்பிக்கு, உடம்புக்கு என்ன?” 

அவன் தோள்களை குலுக்கிக் கொண்டு எழுந்தான். 

“ஒன்றுமில்லீங்க, மாமா.” 

“இப்ப வரச்செ ஐயரைப் பாத்தேன். இந்த வருஷம் கண்டிப்பா மழை பிந்திதானாம்…” 

அவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். 

“மழையைப் பிந்தி வச்சுக்கிட்டு நெருப்பு வைக்கணுமா என்று ஒரு சந்தேகங்க, மாமா” என்றான். 

தேவர் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை. டி விழுந்த மரத்திலிருந்து பறந்து செல்லும் மணிப் புறாவையே பார்த்துக் கொண்டிருந்தார். சிதம்பரம் அவர் பக்கமாக நெருங்கிச் சென்றான். 

“பாருங்க, மாமா! இங்க இருந்த ரெண்டு அறுவா; மூணு மண்வெட்டி; ரெண்டு அலக்கு எல்லாத்தியுங் காணுங்க!’ 

“எங்க போயிடும்? எங்கயாச்சும் இஞ்சதான் கிடக்கும்.” 

“ரெண்டு வாட்டி தேடிட்டேங்க.” 

“சின்னத் தோட்டமா, சட்டென்று அம்புட…?”

“வாஸ்தவங்க. அதுனாலே எனக்கொரு யோசனை தோணுதுங்க.” 

”சொல்லுங்க.” 

“இங்க ஒரு சின்ன வூடு – குடிசை மாதிரி ஒண்ணா கட்டிட்டா, சாமான் போட, நம்ப வந்து செத்த குந்த, எல்லாத்துக்கும் ஒரு சௌகரியம். அதோடுகூட இப்ப வர்றதும் மழைக்காலம்…”

“நீங்க சொல்றது நல்ல உத்தமமான யோசனை. ஆனா, மழையைப் பின்னாடி வெச்சுக்கிட்டு, இஞ்ச வூடு கட்ட முடியுமான்னு யோசனை பண்ணிப் பாக்கணும்…”

“வூடுன்னா,பக்கா வூடுங்களா மாமா? சும்மா நாலு மூங்கில நட்டு,மேல ரெண்டு கீத்துவுட்டா போதுங்க…”

“….” 

“நல்லா மழை அடிச்சா, காத்து அடிச்சாப் போயி டும்… போவுட்டுமே. என்ன மோசம T போயிடும் நமக்குங்க, மாமா.” 

அவர் தலையசைத்தார். 

மூன்றாம் நாள் வேலை தொடங்கும் சமயத்தில் ஆரம்பத் திட்டங்கள் மாறின. இரண்டு பேரும் கொஞ் சம் கொஞ்சமாக மாற்றியமைத்தார்கள். இலுப்பை மரத்திற்கு சற்று அப்பால், பலா மரத்தை யொட்டிப் புதிய வீடு நிர்மாணமாகியது. தேவர் மண்ணை வெட்டிச் சேறு மிதித்துத்தரும் வே லையை ஏற்றுக் கொண்டார். வாய்க்காலிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தது பழனி யாண்டி. கலியபெருமாள் தூக்கி வந்த சேற்றை வாங்கி சுவர் வைத்தான் சிதம்பரம். 

சுற்றுச்சுவர் அரையாள் உயரத்திற்கு உயர்ந்ததும், மண்வெட்டும் வேலையைத் தேவரிடமிருந்து சிதம்பரம் ஏற்றுக்கொண்டான். பாளம் பாளமாக மண்ணை வெட்டி ழுத்தன, அவன் கரங்கள். மண்ணைவெட்டி இழுத்து, வீசியெறிந்த பாங்கு தேர்ந்த உழைப்பாளியான தேவரைப் பெருமிதமடையச் செய்தது. 

அவன் மண்வெட்டி கல்லில் விழ, பூண்கழண்டு இழை தெறித்து விழுந்தது. ஏக்கத்தோடும் ஆத்திரத்தோடும் தேவர் பக்கம் திரும்பினான். 

“அது கிடக்கட்டுங்க, தம்பி; செத்த நாழியிலே போட்டுக்கலாம்.” 

“இது மூணாவது வாட்டிங்க, மாமா” என்று சொல்லிக் கொண்டு, சேற்றிலிருந்து கரையேறினான் சிதம்பரம். 

“உருக்கிலே பட்டா அதான் ; கூட பூண் கழண்டு இருக்கும். செத்த தட்டிப் போட்டா சரியாப் போயிடுங்க தம்பி.” 

“ஆனாங்க, மாமா… நானும் பார்த்துக்கிட்டே இருந்தேன்; ஒரு வாட்டிகூட உங்களுக்குப் பூண் கழல்லியே!…”

அவர் மிருதுவாகப் புன்னகை பூத்தார். 

“ஒரு காட்லேங்க தம்பி, ஒரு முசலும் ஒரு ஆமையும் சிநேகிதமா இருந்துச்சுங்க. சிநேகிதமென்னா அப்படி யொரு சிநேகிதம்; ரொம்ப நல்ல சிநேகிதம். ஒரு நா ரெண்டுக்கும் ஒரு போட்டி. என்ன போட்டி? கூப்பிடு தூரத்துக்கு யாரு முதல்லே போறதுன்னு எதுக்குங்க தம்பி சிரிக்கிறீங்க… வேடிக்கையான போட்டின்னு தானே? சின்னக் கதைதான். சொச்சத்தையும் கேளுங்க ஆமைக்கும் முசலுக்கும் போட்டி ஆரம்ப மாச்சு. முசலு வேகம் கேட்கணுங்களா? நாலு பாய்ச் சலிலே ரொம்ப தூரம் வந்துடுச்சு. ஆமையாலே அம்மாம் வேகமா வர முடியுங்களா? அது மெல்ல, பின்னாலே நிதானமா வந்துக்கிட்டு இருந்துச்சு. முசலு ரெண்டு காலிலே நின்னு, ஆமை எங்கன்னு பாத்துச்சு. அதைக் கண்ணிலேயே காணோம். சரி, ஆமை இஞ்ச வரத்துக் குள்ள ஒரு தூக்கம் போடலாமுன்னு ஒரு புதரிலே பூந்து கிச்சு. ஆனா, பாருங்க தம்பி, முசலு கண்ணு விழிச்சுப் பார்த்தப்ப, ஆமை பந்தைய தூரத்தைத் தாண்டிடுச்சு…” 

சிதம்பரம் கண்களை இருக்கிக்கொண்டு, தேவரை ஆழ்ந்து நோக்கினான். 

தேவர் கண்களைச் சிமிட்டி, “கதை எப்படிங்க, தம்பி?” என்று கேட்டார். 

“எனக்கொண்ணும் பிடிக்கிலீங்க” என்று வெறுப் போடு பதிலளித்தான். 

“ரொம்ப நல்ல கதை” – தேவர் மண் வெட்டியைத் தட்டிக் கொண்டெழுந்தார். 

ஒவ்வொரு நாளும் சுவர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டேயிருந்தது. தேவர் நுட்பமாக விஷயங்களை அவனுக்குப் போதித்தார். கீழ்ச்சுவர் காய்ந்து பலம்பெறாத வரையில் மேலே சுவரை எழுப்பிக் கொண்டு போக முடியாது. மண்சுவர் வைப்பதில் து தான் சங்கடம். தேவர் ஆட்சேபணையும், எதிர்வாதமும் பொருள் பொதிந்தவை என்பதை சிதம்பரம் உணர்ந்தான். 

சுவர் மேலே வரவர சற்றே ஒரு பக்கமாகச் சாய்ந்தது. சிதம்பரம் உள்ளங்கையால் தட்டித் தட்டிச் சீர்படுத்தினான். 

மண்குழியை விட்டு வந்த தேவர், நிதானமாக அவன் செய்யும் காரியத்தைப் பார்த்துவிட்டு, “இப்ப நீங்க ரொம்ப தேறிட்டீங்க தம்பி!” என்று புகழ்ந்துரைத்தார். 

“அப்ப, ஆமையா ஆயிட்டேன்!” 

தேவர் பெரிதாகச் சிரித்தார். 

“அந்தக் கதையை நீங்க இன்னும் மறக்கிலியா?”

“ரொம்ப நல்ல கதைங்க மாமா, அது.” 

தேவர் கண்களைத் தாழ்த்திப் பார்த்தார். 

நான்கு பக்கமும் சுவர் வைத்த பிறகு உள்ளே ஒரு குறுக்குச்சுவர் வைத்து, வீட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றான் சிதம்பரம். அவரால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது விஸ்தாரத்தையும் அழகை யும் பாதித்துவிடுமென்று தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். 

“அந்த அடப்பு இருந்தா, ஒரு பக்கத்தில் சாமாங்க போடலாம் ; ஒரு பக்கத்தில் ரெண்டு பேரு வந்தா குந்திப் பேசலாம்; அசந்தா, செத்த படுத்துக்கலாங்க, மாமா.” 

“உம்……” 

“அங்கெல்லாம் சின்னச் சின்ன குடிசையும் இப்படித் தாங்க மாமா கட்டுறாங்க.” 

“எங்க… கொழும்பிலா?” – வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டார் தேவர். 

“ஆமாங்க.” 

“அதான்!” 

“கட்டி முடிச்சுப் பார்த்தா ரொம்ப அழகா வசதியா இருக்குங்க, மாமா.” 

அவர் சிரித்தார்; 

இருவரும் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். அவனுடைய அகங்காரத்தின்மீதும் கர்வத்தின் மீதும் அளவிட முடியாத வெறுப்பு மூண்டது. ‘இந்தப் பயலைக் கிட்ட அண்ட விட்டிருக்கக்கூடாது. அதான் நாம் செஞ்ச தப்பு. அதுனாலதான் இப்ப நம்பளையே எதுத்துக் கிட்டு நிக்கிறான் ! கையிலே நாலு காசு இருக்கு; சும்மா கிடக்க முடியுமா?’ 

சிதம்பரம் புல்லிதழ்களைத் துவைத்துக்கொண்டு சென்றான். தனக்கு அனுகூலமான முறையில் காரியங்கள் நடந்துவருவது மாதிரி தோன்றியது. கூடவே தேவரின் நினைவும் வந்தது. உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண் டான். ‘தென்னயில்லே, நாணல் காத்தடிக்கிற பக்க மெல்லாம் நல்லா வளைஞ்சுக் கொடுக்கிற நாணல் அடுத்த கணமே இம்மாதிரி நினைப்பது நிந்திக்கத் தக்க தென்று சொல்லிக் கொண்டான். 

‘தான் சந்தித்த மனிதர்களிலேயே விவேகமும் தீரமும் பொருந்தியவர் தேவர்; நேசப்பாங்கும், உழைப்பில் நம்பிக் கையும் கொண்டவர்; கொஞ்சம் முரட்டுத் தனமும், நகைச்சுவையும் கொண்டவர்; உண்மையான திடமான மனிதர்’ இதையெல்லாம் நினைவு கூர்வதின் அர்த்தம் புலனாகவில்லை. 

மணி குலுங்கும் ஓசை கேட்டது. அவன் தலை நிமிர்ந்து பார்த்தான். ஆல மரத்தடியில் வண்டி வந்து கொண்டிருந்தது. அடக்கமான வில்லு வண்டி; மணி களும் குஞ்சங்களும் கட்டியது. 

“நமஸ்காரங்க!” சிதம்பரம் கை குவித்து வணங்கினான். 

“எங்க இப்படி?” 

“மணி சப்தம் கேட்டுச்சு; பாத்தா, நம்ப வண்டி. நீங்கதான் வர்றீங்கன்னு தீர்மானிச்சுட்டேன்…” 

“நல்ல கணிப்புத்தான்” என்று சொல்லிக்கொண்டே செட்டியார் வண்டியைவிட்டுக் கீழே இறங்கினார். 

“வூட்டுக்குத்தானா?” 

“ஆமாங்க.” 

“வேலை எம்புட்டு தூரத்திலே இருக்கு?” 

“ஒண்ணும் சொல்லும்படியா இல்லீங்க … ஏன்? எதுக்கு!” 

“ஆளுங்க ஒண்ணும் தோதாக் கிடைக்கிலீங்க…” 

“இஞ்ச அது கொஞ்சம் கஷ்டந்தான். இப்ப, குத்தாலம் வரைக்கும் போறேன். அங்க நம்ப சம்பந்தி பண்ணையிலே ஆளுங்க இருக்கும்; பாத்து ஏற்பாடு பண்ணுறேன்.” 

“எனக்கு ரொம்ப உபகாரமா இருக்குங்க.”

செட்டியார் வண்டியைப் பிடித்தார். 

“கும்மோணம் கூடப்போகணும்; ஒரு ஜோலி இருக்கு. உனக்கு ஏதாச்சும் ஆகணுமா?” 

“இப்ப சத்தியா, ஒண்ணும் இல்லீங்க!” 

“கூச்சப்படாம சும்மா சொல்லு. இப்ப நாமெல்லாம் ஒண்ணாயிட்டோம்…” 

“இப்படி நீங்க சொன்னதே எப்படி இருக்கு தெரியுமாங்க எனக்கு!” 

“நான் என்ன சொல்லிட்டேன்?” 

அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். 

சரிந்த மேல்துண்டை மேலே இழுத்துப் போட்டுக் கொண்டு, “அப்ப வரட்டுமா, சிதம்பரம்” என்று கேட்டார். 

“வாங்க.” 

கரம் கூப்பிப் பணிவோடு விடையளித்தான். இரண்டடி முன்னே நடந்துபோய், வண்டியில் ஏறி அமர்ந் தார் செட்டியார். 

“சாமி !” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். சின்னத் தம்பிப் படையாச்சி தலை குனிந்தபடியே நின்றுகொண் டிருந்தான். வேகமாக ஓடிவந்ததால், மேல் மூச்சு வாங்கியது. 

“வாடா!” 

“வூட்டுக்குப் போனேங்க; ‘இப்பத்தாண்டா போறாங்க’ன்னு ஆச்சி சொன்னாங்க …”

‘”காரியத்துக்குள்ளே வந்துடுவேன்.” 

“கொரநாட்டுலே, மூணுகல்லுக்குச் சொல்லிட்டுப் போங்க, சாமி ….” 

“ எதுக்குடா?” 

“அவங்கதான் சுமையோடு போயிட்டாங்களே.” 

நான்கு நாட்களுக்கு முன்னால், ஏழுமாத கர்ப்பிணி யான அன்னகாமு ஜூரத்தால் காலமானாள். ஐந்து நாள் ஜூரம், அவள் மூச்சை அடக்கிவிட்டது. செய்தி கிடைத் ததும் அப்படி அப்படியே வேலையைப் போட்டுவிட்டு, இழவு வீட்டின் முன் கூடினார்கள். பெண்கள் கதறி அழுவது இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. 

சிதம்பரம் தூங்குமூஞ்சி மரத்தடியில் உட்கார்ந்து வேடிக்கை மாதிரி இதனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இது முற்றிலும் புதிய அனுபவம்: சாவை ரொம்ப நாட்களுக்குப் பி றகு, அருகில் இருந்து பார்க் கிறான். பல விஷயங்களை அவனால் புரிந்துகொள்ள முடிய வில்லை; தவிப்புற்றுப் போனான். அவன் தாய் மரண முற்றுக் கிடந்தபோது, எதிர் வீட்டுக்காரியைத் தவிர, மற்றவர்களெல்லாம் வேலைக்குப் போனார்கள். அவர்கள் வேலைவிட்டு வரும் வரையில் பிணம் காத்துக்கொண்டு இருந்தது.இங்கேயோ ஊர் முழுவதும் வந்து குழுமியிருக்கிறது! 

நடுப்பகலுக்குச் சற்றுப்பிந்தி அன்னகாமுவின் பெரியண்ணன், செட்டியார் வீட்டிலிருந்து கோடி எடுத்து வந்தான். முரட்டு சிவப்புச் சேலை. அவன் கையில் கொடுக்கும்போது செட்டியார் குலுங்கக் குலுங்க அழு தாராம். கல்யாணத்திற்கு, விலையுயர்ந்த தாழம்பூக்கரை யிட்ட மஞ்சள் புடைவையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத் தவர் அவர்தான். வருஷம் ஒன்றரை ஆகவில்லை ; கடைசிச் சேலை தருகிறார் ! 

அன்றைய பகல் பொழுது முழுவதையும் இழவு வீட்டி லேயே கழித்தான் சிதம்பரம். பிணம் எடுப்பதற்கு சற்று முன்னால் செட்டியார் வந்தார். அவர் வந்துபோன பிறகு, சாம்பமூர்த்தி ஐயரும் பதஞ் ச லி சாஸ்திரியும் வந்து போனார்கள். 

மாலையில் ஊரெல்லாம் கூடி, அழுது அரற்ற, பாடை தூக்கினார்கள். சிதம்பரம் வேளாளத்தெரு வரையில் பிணம் சுமந்தான் நல்ல பளு; சற்றைக்கு ஒருதரம் தோள் மாற்றிக்கொண்டான். 

மணி குலுங்க, செட்டியார் வண்டி ஓடத்தொடங்கியது. 

கண்களில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்த சின்னத் தம்பிப் படையாச்சியின் தோளைத்தொட்டு, “போவலாங்களா?” என்று கேட்டான் சிதம்பரம். 

அவன் தலையசைத்தான். மேல் துண்டால் கண்ணீ ரைத் துடைத்துக் கொண்டான். அப்புறம் எவ்விதப் பேச்சுமின்றி இருவரும் பிரிந்தார்கள். 

கள் குடித்துவிட்டுத் தேவர் திண்ணையில் வந்து சாய்ந்தபோது, சிதம்பரம் ஆளோடியில் காலடியெடுத்து வைத்தான். அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தது. 

தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்துக்கொண்டு, “வாங்க இப்படி வந்து பக்கத்திலே குந்துங்க, தம்பி” என்றார். 

அவன் திண்ணையில் ஏறி உட்கார்ந்தான். 

“தம்பி, இம்மா நேரமா எங்க போயி இருந்துச்சு?” 

“சும்மா, ஆத்தங்கரப் பக்கமாங்க, மாமா!” 

“கோச்சுக்கிட்டு, அப்படி எங்காச்சும் கிளம்பிட்டீங்களோன்னு பார்த்தேன்!” என்று உரக்கச் சிரித்தார் தேவர். 

“மாமா மனசு எனக்குத் தெரியாதா?” 

“ரொம்பத் தெரியுமா?” என்று முகம் மலர வினவிய வர், “இப்பத்தான் குஞ்சம்மாகிட்டே சொல்லிக்கிட்டு இருந்தேன். தம்பிக்கும் எனக்கும் இன்னக்கி பெரிய சண்டைன்னு..” என்றார். 

“நம்ப சண்டை ஒரு சண்டையா?” 

தேவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். 

நம்ப போட்டுக்கிட்டது சண்டை இல்லீயா?”

அவன் தலையசைத்தான். அப்புறம் ரொம்பவும் தாழ்ந்த குரலில், “ஒரோர் சமயம் தோணுதுங்க மாமா, நம்பதான் உண்மையாகச் சண்டை போட்டுக்கிறோ மோன்னு…” என்றான். 

தேவர் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை. குஞ்சம்மாவைக் கூப்பிட்டு, “தம்பி வந்திருக்கு” என்றார். 

பேச்சு இப்படித் திடீரென்று முடிந்தது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ‘நல்லா குடிச்சாலும், நினைவு தப்பறதுல்லே!’ என்று சொல்லிக் கொண்டே வீட் டிற்குள் சென்றான். 

மூன்றாம் நாள், அவன் தோட்டத்திற்குப் போன போது, தேவர் உருக்காங்கல்லில் அரிவாளைப் பளபள என்று தீட்டிக்கொண்டிருந்தார். பக்கத்தில் தண்ணீர் சொட்டச்சொட்ட ஊறிய பாளைக்கட்டு கிடந்தது. 

“செத்த அசந்து தூங்கிட்டெங்க, மாமா.” 

“இப்ப அதுக்கென்ன?”

“பசங்க எங்கங்க, மாமா; சத்தத்தைக் காணோமே.”

“கீத்து எடுத்தற பட்டுவூட்டுக்குப் போய் இருக்கானுவ”. 

அதான், சத்தத்தைக் காணோம்.” சிதம்பரம் ஓணாங் கொடியை அவிழ்த்துப் பாளையைப் பிரித்துப் போட்டான். 

“இப்ப வந்துடுவானுவ” என்று சொல்லிக் கொண்டே, பாளையை எடுத்துக் காலில் மிதித்துக் கொண்டு கிழிக்க ஆரம்பித்தார். அவர் கைகள் ஆச்சரியப் படத்தக்க விதத்தில் ஓடின.சிதம்பரம் ஒவ்வொரு பாளை யாக எடுத்து அடியும் நுனியும் தறித்து வைத்துக்கொண்டிருந்தான். 

கீற்றுவிடும் வேலை இரண்டு நாட்களில் முடிந்துவிடும். அப்படியொன்றும் பெரிய வேலையில்லை அது. 

‘வானம் இப்படியே வெளுத்திருந்தால்,நாளைக்கே தீ இடுவதைத் தொடங்கிவிடலாம்’ என்று எண்ணினான். கால நிலையும் அதற்கு ஏற்றாற்போல இருந்தது.

– தொடரும்…

– சாயாவனம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1969, வாசகர் வட்டம், சென்னை.

சா. கந்தசாமி (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *