நந்தாவின் கங்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 108 
 
 

“நந்தா… நந்தா…”

ரிஷிகேஷின் மலைகளுக்கிடையே, கங்கையின் சீற்றத்தை வெல்லும் அளவுக்கு ஒரு பெண் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒரு எளிய ஹிமாலயக் குடிலில், குளிர் காய தீ பளிச்சென்று கனன்று கொண்டிருந்தது . பக்கத்தில், மூச்சை சுரண்டும் அமைதியில், ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க நந்தா, அசைவற்ற முகத்துடன் முக்காலியில் ஒரு பழைய ஷாலும் தலை குல்லாவுமாக அமர்ந்திருந்தான்.

“சாய் வேணுமா?” என கேட்ட வீட்டுப் பணிப்பெண்ணின் குரல், அவன் காதில் ஏறவேயில்லை. அவன் நினைவெல்லாம் மந்தா மந்தா மந்தாதான்.

மழைக்கால சீசனில் கங்கை சீற்றமெடுத்தபோது யாரும் பயணிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையை மீறி, அன்று அவளை காணத்தான் சென்றான். அந்த ஒரு நாளை மட்டும் தவிர்த்திருந்தால் , இன்று வாழ்க்கையே வேறாக இருந்திருக்குமோ!!!!

அவன் கண்கள் சுட சுட சளைக்கத் துவங்கின. அது கண்ணீர். கனமான சுவாசம். தூக்கமின்றி கழிந்த பல நாட்களில், இந்த இரவு மட்டும் தனக்கு நிம்மதியானதாக இருந்தது. ஏனெனில், இன்று மனத்தில் மந்தா இருந்தாள்.

மூன்று வருடங்களுக்கு முன் பிரயாகையில், ருத்ராட்சம் விற்பனை செய்தாள் மந்தா. நந்தாவின் முதல் பயணமே அது. கங்கை,

யமுனை, சரஸ்வதி என்ற கலந்த இடத்தில் நந்தாவுக்கு ஒரு புதிய பரிச்சயம் கிடைத்தது.

அந்த பரிச்சயமே, அவன் இதயத்தில் காதல் துளிர்க்காதிருந்த இடத்தை நிரப்பியது. மந்தா பேசும் பேச்சு, துளி துளி சிரிப்பு, அவளது கடும் பார்வையிலும் சிக்கிய பாசம்… அனைத்தும் நந்தாவின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.

காலங்கள் மாறின. வழக்கமான சுற்றுலா பயணங்கள், காத்திருப்புகள், கடிதங்கள், சில நேரம் ரகசிய சந்திப்புகள்… இவை அனைத்தும் அவர்களின் காதலை வலுப்படுத்தின. ஆனால், இது காதலாக மட்டும் இருந்தது. சமுதாய ஒப்புதலாக வரவேயில்லை.

மந்தாவின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வந்தது. “குலம் வேறுபாடு, மதம் வேறுபாடு” என்ற பெயரில் நந்தாவுடன் இருக்க கூடாது என கட்டளைகள். ஆனால் மந்தாவுக்கு இது தனது வாழ்வின் ஒரு முக்கியமான அடுத்த நுழைவாக மனதில் பதிந்தது . காதலுக்காக அந்த இளம் பெண் மந்தா நதியோரத்தில் உள்ள தனது வீட்டுக்கு ஒரு நாள் நந்தாவை அழைத்தாள்.

அந்த நாள்… இன்று நினைக்கும் போதும் நந்தாவின் உள்ளம் கதறுகிறது.

மேக வெடிப்பால் ஏற்பட்ட கொட்டும் மழை, ஆற்றை விட நெஞ்சை நனைத்தது. வெள்ள எச்சரிக்கையை மீறி, ஒரு குடையை சுமந்தபடியே வாசலில் காத்திருந்தாள் மந்தா. அவளை எட்டிப் பார்வையிட்ட நந்தா, ஓர் கணம் நின்றான். ஆனால் அடுத்த நிமிடம், மழையை வென்று மந்தாகினி நதி சீறிப்பாய்ந்தது.

வாசலில் நின்ற மந்தாவை அந்த நதி விழுங்கியது.

“மந்தா!” என்று கத்தினான். ஆனால் குரலுக்குள் தண்ணீர் நிரம்பி வந்தது. அவளது கை, ஒரு கணம் தோன்றியது, மறுநொடியே மறைந்தது. இன்றுவரை நந்தா அவள் மீண்டும் திரும்புவாளா என்ற நம்பிக்கையில் வாழ்கிறான்.

வெள்ளத்திற்கு பிறகு, பல உயிர்கள் போனதாக செய்திகள் வந்தது . ஆனாலும், மந்தாவின் உடலை நந்தா பார்க்கவேயில்லை. இதுதான் அவனுக்கு ஒரு புதிய ஏக்கம். “இவள் எங்கே?” என்ற வினா, அவனை உயிரோடு வைத்திருக்கிறது.

அந்தக் கோர மழைக்கால வெள்ளத்தில், பலமக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில், பிரயாகை முதல் கேதார்நாத் வரை… மக்கள் வீடுகளை, குடும்பங்களை இழந்தனர். ஆனால் நந்தா இழந்தது, ஒரு வாழ்க்கையை.

மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு ஜூன் மாதமும், ரிஷிகேஷ் வந்தவனாக, அவளது நினைவுகளை தேடி அலையும். கங்கை கரையோரம், பூஜை செய்கிறான். எங்கோ ஒரு மூலையில் மந்தா உயிருடன் இருப்பாள், ஒருநாள் திரும்புவாள் என்ற நம்பிக்கையில், அவன் இரவுகள் கழிகின்றன.

அன்று காலை, உதவியாளர் சாய்க்காக நந்தாவை தேடிக் கொண்டிருந்தாள். நந்தவை காணும் அதே நேரம், சற்று தூரத்தில், பரத்புரி ஆஸ்ரமத்திற்கு அருகே, கங்கை நதி ஓரம், வெண்ணிறக் குடை பிடித்தவள் ஒருத்தி ஒரு புனிதமான புன்னகையுடன் கடவுளை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த முகம்… மந்தா போலவே தோற்றம் தந்தது நந்தவிற்கு .

மந்தாகினியும் அலக்நந்தாவும், பிரயாகையில் ஒன்று சேர்ந்து, ரிஷிகேஷில் சீறி பாய்ந்து, இறுதியில் ஹரித்வாரில் கங்கையாக நுரைத்துப் பெருக்கெடுப்பது போல, நந்தாவின் காதலும் மந்தாவின் நினைவுகளும் மனத்தில் கலந்தே ஓடின.

முடிவில்…

அவளது குரல் கங்கையோடு சேர்ந்துவிட்டதா? அல்லது, அவள் இன்னும் எங்கேயோ காத்திருக்கிறாளா?

காதலின் மறக்க முடியாத குரலாகவே மாறிவிட்டாள் மந்தா.

“நந்தா… நந்தா…” என்ற அந்த ஒரு பெண் குரலோடு சேர்ந்து “ மந்தா மந்தா” என்ற ஆண் குரலும் கங்கையின் ஆர்ப்பரிக்கும் ஓசையில் இன்னும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *