சாயாவனம்
கதையாசிரியர்: சா.கந்தசாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2025
பார்வையிட்டோர்: 4,830
(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

ஒவ்வொரு நாளும் சிதம்பரத்தைப் பலர் தேடிக் கொண்டு வந்தார்கள். விசாரிப்பு, கதை, ஊர் வம்பு, அரட்டை. அவன் சலிப்புற்றான். அவனே ஒவ்வொன் றின் முதலும் முடிவுமாக இருப்பது எரிச்சலூட்டியது. இன்னும் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கும் காரணத்தைத் தெரிந்துகொள்ளப் போட்ட கேள்விகள் மனத்தை ரொம்பவும் வருத்திவிட்டன. அவனுக்குப் பேச்சே எழும்பவில்லை. இதற்கெல்லாம் காரணம் அன்பா, இல்லை இன்னொருவன் கபடத்தைக் கண்டறிந்து கொள் வதில் உள்ள ஆர்வமா என்பது புலனாகவில்லை அவனுக்கு.
யாரோ ஒருவன் வெடவெட என்றிருந்தான்.கண்கள், பாதாளத்தில் கிடக்கும் மணி மாதிரி சுழன்று கொண்டி ருந்தன. சிதம்பரத்தின் பக்கம் நெருங்கி, “மாப்ளே, அந்தப் பக்கத்துப்பெண்ணெல்லாம் ரொம்ப ஜோராமே ? ” என்று கேட்டான். கூட இருந்தவர்கள் உற்சாகத்தோடு பெருங்குரலில் கூச்சலிட்டுச் சிரித் தார்கள்.
சிதம்பரம் அமைதியாக, தலை குனிந்தபடியே, “அப்படீன்னா?…” என்று வினவினான்.
“பொம்மனாட்டின்னாலே, ஜோருதாண்டா!…” என்று ஒரு குரல் தனித்து வந்தது.
“எலே, கயவாலிப்பய மவனே, என்னடா பேசுறே?” வாசலிலிருந்து தேவர் கத்தினார். அவர் குரல் முரட்டுத்தன மாகவும் அதிகாரத்தோடும் ஒலித்தது. கலகலப்பு அடங்கி பேச்சின் தொனி இறங்கியது. விஷயம் மாறியது. சுவா ரசியம் குறைந்ததும் கூட்டம் கலைந்தது.
அவன் மகிழ்ச்சியுற்றான். துண்டை உதறி தலையணை மீது போட்டுக்கொண்டு படுத்தான்.
அரைத் தூக்கத்திலிருந்தபோது, தேவர் அவனை அழைத்துக் கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்துக் கொண்டு, இந்தப் பசங்களெல்லாம் சுத்த வாயாடிங்க; வெத்துவேட்டுங்க. மண்ணெ கயிராத் திரிச்சிடுவேன்னு சவடாலடிப்பானுவ ஒரு வேலென்ன ஒருத்தனும் அம்புடமாட்டான்…… அதாங்க தம்பி…
சிதம்பரம் அவரை ஆழ்ந்து பார்த்தான்.
“… இதைச் சொல்லத்தாங்க தம்பி, கூப்பிட்டேன். போங்க, போய்ப் படுத்துக்குங்க; காத்தால ரொம்ப வேல இருக்கு.”
மீண்டும் படுத்தான். சற்றைக்கெல்லாம் கோழிகள் கூவின. சாலையில் மாடுகளின் மணியோசை ; மனிதர் களின் நடமாட்டம். தூக்கமும் லேசான குளிரும் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டன. அவன் படுக்கையை விட்டெழுவதற்கு முன்னேயே, ‘நாத்தங்காலுக்குப் போறேன்’ என்று தேவர் சென்று விட்டார். பாயைச் சுருட்டிப் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தான். கூட்டிக் கொண்டிருந்த குஞ்சம்மா சற்று ஒதுங்கி அவனுக்கு வழி விட்டாள்.
காவிரியைத் தாண்டி சுடுகாடு, கொய்யாத் தோப்பு, அப்பாச் சா வடிவரை ஒருவிதத் திட்டமுமின்றிச் சென்றான். அப்புறம் தென்கிழக்காகத் திரும்பி, கள்ளிக் காட்டோடு நாற்றங்காலுக்குப் போனான். அங்கு தேவர் இல்லை. அவர் இன்னும் வரவில்லை என்று சொன்னார்கள். எங்கு போய் இருப்பார் என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குத் திரும்பினான்.
ஆற்றங்கரையில் கறுத்த, பலம் பொருந்திய இரண்டு சிறுவர்கள் வழி மறிப்பது மாதிரி நின்று கொண்டு, “நாட்டா டாண்மைக்காரங்க அனுப்பினாங்க ” என்றார்கள்.
“என்ன சொன்னாங்க?”
“அவுங்கள போய்ப் பாருங்கன்னாங்க!”
“சரி, சரி …… தோட்டம் தெரியுமில்லே?”
“தெரியுங்க!”
“போய்ச் சாப்பிட்டுட்டு சுருக்கா வந்துடுங்க!”
“சரிங்க!” – இரண்டு பேரும் மூங்கில் படுகையில் இறங்கினார்கள்.
“தம்பி, இங்க வாங்க” என்று உரக்கக் கூவி அழைத் தான் சிதம்பரம். பக்கத்தில் வந்ததும், தனித்தனியாகப் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அப்புறம், அப்போதுதான் நினைவிற்கு வந்ததுபோல, “அன்னைக்குத் தாழம்பூ எடுத்தது நீங்கதானே?” என்று கேட்டான்.
அவர்கள் முகபாவம் மாறிவிட்டது; பீதியுற்றது மாதிரி சற்றே பின்னால் நகர்ந்தார்கள்.
“அப்ப விட இப்ப பூ ரொம்ப இருக்கு, பாத்தீங்களா?….”
அவர்கள் முகம் மாறுதலுற்றது.
“பெரிசு பெரிசா இருக்கு: சுருக்காப் போய் எடுத்துக்குங்க.”
“சரிங்க.”
“உம்.”
“வரேங்க!”
அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றான். தேவர் இன்னும் வரவில்லை. காத்திருக்க முடியாது என்று பட்டது. சாப்பிட்டுவிட்டுத் தோட்டத் திற்குப் புறப்பட்டான். வலது கையில் இரண்டு அரிவாள் கள் – புத்தம் புதியன – குப்புசாமி ஆசாரி உலையில் துவைந் தது. நடக்கையில் கருக்கரிவாள் பளபளவென்று மின்னி ஒளிர்ந்தது. இடது தோளில் பெரியதும் சிறியதுமாக இரண்டு அலக்குகள். வழியில் சந்தித்தவர்களிடமெல் லாம் பேச்சை இரண்டொரு வார்த்தையில் முடித்துக் கொண்டு தோட்டத்திற்குள் சென்றான். பார்வை நாலா புறமும் சென்றது. சிறுவர்கள் இன்னும் வரவில்லை.
பார்வையை மறைக்கும் பெரிய இலுப்பை மரத்தில் அலக்குகளை மாட்டிவிட்டு, அரிவாளை மரத்தில் கொத்தி னான். பச்சை மரத்தில் அரிவாள் சதக்கென்று பாய்ந்தது. மரப்பால் தெறித்தது. மேலே விழுந்த பாலைத் துடைத் துக் கொண்டு, வேட்டியை இறுக்கிக் கோவணமாகக் கட்டிக் கொண்டான்.
காய்ந்த சருகுகள் படபடத்தன. யாரோ வேகமாக ஓடிவருவது போல இருந்தது. உன்னிப்பாகப் பார்த் தான். நரி ஒன்று எதிரே வந்து நின்று, தலை தூக்கிப் பார்த்துவிட்டு, ஒரே பாய்ச்சலில் ஓடி மறைந்தது.
“நீங்களும் இங்க இருக்கிறீங்களா?” என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அப்புறம் பார்வை மேலே சென்றது. ஆகாயம் சரியாகத் தெரியவில்லை. பச்சைப் பசுந்தழைகளால் மூடப்பட்டிருந்தது. வானமே வனமாகி விட்டதுபோல ஒரு காட்சி – மேலும் கீழும் பச்சை ; திசை யெங்கும் பச்சை. இயற்கையின் சௌந்தர்யம் மிகுந்த வனத்திற்குள் அவன் மெல்ல மெல்லப் பிரவேசித்துக் கொண்டிருந்தான்.
பூவரசு மரத்தை மூடி மறைத்துக்கொண்டு கோவைக் கொடி தாழப் படர்ந்திருந்தது. அநேகமாக பூவரசு மரமே தெரியவில்லை. வெள்ளைப் பூக்களுக்கிடையில் கருஞ் சிவப்பாக அணில் கொய்த பழங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மேலே இன்னும் போகப் போக பல விதமான கொடிகள். நெட்டிலிங்க மரத்தில் குறிஞ்சாக் கொடி உச்சி வரையில் சென்றிருந்தது.
யாரோ குறிஞ்சாக் கொடியை இணைத்து ஊஞ்சல் ஆடியதின் தடயம் தெரிந்தது.
சிதம்பரம் ஊஞ்சல் கொடியை அசைத்து விட்ட வாறு சற்று நேரம் மௌனமாக நின்றான். அவன் பார்வை” வனம் போன்ற தோட்டத்தில் ஆழ்ந்து பரவியது. வேக மாகத் திரும்பிப் போய், இலுப்பை மரத்தில் கொத்தி யிருந்த அரிவாளை எடுத்து வந்து, ஊஞ்சலாகி இருந்த கொடியை அறுத்துவிட்டான். அப்புறம் ஒவ்வொரு கொடியாக, கைக்கு எட்டிய கோவைக்கொடி, குறிஞ்சாக் கொடி, காட்டுப் பீ ர் க் கு, பிரண்டை எல்லாவற்றை யும் அறுத்தெறிந்தான். களிப்புற்ற மனத்தோடு தொடங்கிய வேலை வெகு விரைவில் நின்று போயிற்று. காரையும், சப்பாத்தியும், கள்ளியும் ஓங்கி வளர்ந்து வழி மறித்தன.
அவன் திரும்பிச் சென்றான். அரிவாளை மீண்டும் மரத் தில் கொத்தினான். தளர்ந்த வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு, அலக்கை எடுத்துக்கொண்டு போனான். அரிவாள் கட்டிய அலக்கு; கொடிகளை இழுத்துக்கொண்டு வரவில்லை ; அறுத்து விட்டது. ஒவ்வொரு கொடியும் அறுந்து பாதியில் தொங்கியது.
அரிவாள் கட்டிய அலக்கு கொடிகளை இழுக்கப் பயன் படாது என்று தெரிந்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. உடனே கீழே உட்கார்ந்து அரிவாளை அவிழ்த்துவிட்டு, பூவரசுக் கிளையை வெட்டிச் சீவித் தொரட்டியாக வைத்துக் கட்டினான்.
தொரட்டியைக் கொடியில் மாட்டி முழு பலத்தோடு இழுக்க, கொடி கொஞ்சம் கீழே வந்தது. நினைத்தது மாதிரி ஒரேயடியாகத் தரைக்கு வரவில்லை. தொரட்டி யைத் தொங்க விட்டுவிட்டு யோசித்தான். கொடிகளை அறுத்து இழுப்பதைவிட, வேரைக் கண்டுபிடித்து அறுத்து விடுவது இன்னும் சரியாகப்பட்டது.
‘அப்படித்தான் செய்யணும்’ என்று முணுமுணுத் துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தான். வடக்குப் பகுதி சப்பாத்திக் கள்ளிக்காடு. இப்போதைக்கு அந்தப் பக்கம் செல்ல முடியாது. அவன் பார்வை மேற்கே சென்றது. மற்றப் பகுதிகளைவிட மரங்கள் குறைவு. அடுக்கடுக்காய் செடிகளும் கொடிகளும் உயர்ந்துகொண்டு போய் புன்னை மரத்தில் முடிவடைந்தது; அதைத் தொடர்ந்து சரிந்து செல்லும் இன்னொரு தொடர்.
நான்கடிகள் பின்னுக்குச் சென்று தீவிரமான நோக் கோடு தன்னுடைய வேலையைத் தொடங்கினான் சிதம் பரம். சீமைக்காட்டாமணக்கு முதன்முதலாக வெட்டுண்டு சாய்ந்தது. அதைத் தொடர்ந்து வெள்ளை ப் பூ பூக்கும் எருக்கு, மேக வண்ணப் பூ பூக்கும் நொச்சி – இவைகளை ஒரே மூச்சில் வெட்டித் தள்ளிக்கொண்டு காரைப் புதரில் நுழைந்தான்.
அநேகமாகத் தோட்டம் முழுவதும் வளர்ந்து இருப்பது காரைதான். தண்ணீர் இல்லாத பிரதேசத்தி லேயே செழித்து வளரும் காரை நீர் நிறைந்த பகுதியில் மதமதவென்று வளர்ந்திருந்தது.
ஒவ்வொரு செடியாக வெட்டி வீழ்த்திக்கொண்டே முன் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் சிதம்பரம். அவன் அரிவாள் பட்டதும் சில செடிகள் தரையில் சாயும்; சில நான்கைந்து வெட்டுக்களுக்குப் பிறகு சாயும்; முற்றிய காரையோ அரிவாளை எதிர்த்து நிற்கும். ஒவ்வொரு வெட் டிற்கும் அரிவாள் மேலே எழும்பும்.
மரமும், செடியும், கொடியும் மனிதனோடு நடத்தும் ஒரு போராட்டம்; ஒவ்வொரு அடியும் பலமான தோல்வி தான், அவைகளுக்கு. ஆனால்,தன்னுடைய எதிரியைக் கொடூரமாக – கர்வத்தோடு பலவீனப்படுத்தின. தற்கா லிகமாகவாவது அவன் சோர்ந்து களைப்புற்றுப் போனான். சலிப்புற்று அமரும்போதெல்லாம், ஒரு மரமோ ஒரு செடியோ மெல்ல அசைந்து, மலர்களை எவ்விதப் பிரயா சையுமின்றி உதிர்க்கும்.
உள்ளங்கையில் வியர்வை துளிர்க்கப் பிடி நழுவியது. சருகுகளை நீக்கிவிட்டு, அரிவாளால் நிலத்தைக் கீறி கையில் மண்ணைப்போட்டுத் தேய்த்துக்கொண்டு தொரட்டியைப் பிடித்தான்.
தொரட்டியை இழுத்த வேகத்தில் தழைகள் உதிர்ந் தன. காட்டு மலர்கள் பொலபொலவென்று கொட்டின. இன்னும் இன்னுமென்று இழுக்க, மேற்கிளையில் இருந்த குருவிக்கூடொன்று சரிந்து விழுந்தது. ஒரு சின்னஞ்சிறு குருவியின் பரிதாபக்குரல் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தது.ஆனால், விழுந்த இடம் தெரியவில்லை.
அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. தன் வேலையில் ஆழ்ந்தான். ஆனாலும், சின்னஞ் சிறிய குருவியின் குரல் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது. தொரட்டியை விட்டுவிட்டு, உடம்பெல்லாம் முட்கள் கீற உள்ளே சென்றான்; நான்கு பக்கமும் தேடினான். வடக்குப் பகுதியில், இறக்கை சரியாக முளைக்காத ஒரு குஞ்சு வெட்டுண்ட கிளையின் நுனியில் செருகிக்கொண்டு கிடந்தது. ஒரு கணம் விழியிமைக்காமல் அதைப் பார்த்துக் கொண் டிருந்தான். கண்களில் நீர் திரையிட்டது. உடம்பெல் லாம் ஈச்சன் குத்திக் கீறுவதையும் பொருட்படுத்தாமல் தலை குனிந்தபடியே வெளியே வந்தான்.
சரக்கொன்றை மரத்தடியில் தலைகவிழ சற்று நேரம் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு எதிரே மென்காற்றில், பரபரப்பு ஏதுமின்றி, அலக்கு அசைந்தாடிக் கொண்டி ருந்தது. ‘சரக்’கென்று எழுந்துபோய் அலக்கைப் பற்றி, மார்போடு அணைத்துக்கொண்டு, மரத்தையும் கொடிகளை யும் பூக்களையும் நிமிர்ந்து பார்த்தான். ஓணான் கொடியும் குறிஞ்சாக் கொடியும் மரம் முழுவதும் படர்ந்திருந்தன. குறிஞ்சாக் கொடியின் சின்னஞ் சிறு பூக்கள் மெல்ல உதிர்ந்து கொண்டிருந்தன.
அலக்கை எடுத்து நடுக்கொடியில் மாட்டித் தன் பலத்தையெல்லாம் ஒன்று சேர்த்துக்கொண்டு இழுக்க ஆரம்பித்தபோது, கலியபெருமாளும் பழனியாண்டியும் வந்தார்கள்; தலையசைத்து வரவேற்றான். ஆளுக்கொரு கரம் பற்றி, சிதம்பரத்தோடு ஒன்றாக நின்று அலக்கைப் பற்றி இழுத்தார்கள். கொடி நைந்து அறுந்து போகவே, திடீரென்று பலங்குன்றி ஒருவர்மீது ஒருவர் சரிந்து விழுந் தார்கள். இது, கொஞ்சம் அவர்கள் எதிர்பார்த்தது தான். காலையூன்றி சப்பாத்தியில் விழாமல் காத்துக் கொண்டான் பழனியாண்டி. முதலில் துள்ளியெழுந்த கலியபெருமாள் கைலாகு கொடுத்து நண்பனைத் தூக்கி விட்டுவிட்டு, சிதம்பரம் பக்கம் திரும்பினான்.
விழுந்த கணத்திலேயே எழுந்த சிதம்பரம் மிகுந்த பரி வோடு, “என்ன, அடிபட்டுப் போச்சா?” என்று கேட்டான்.
“நாங்க மரத்திலேயிருந்துகூட குதிப்போம்; அப்பக் கூட அடி படாதுங்க!”
ஆச்சரியத்தால் சிதம்பரத்தின் முகம் கோணலாக மாறியது.
“அப்படியா?…”
“விழறச்சே ஒரு ‘டிர்க்கு’ இருக்கு; அப்படி விழுந்தா அடிபடாதுங்க.”
சிதம்பரம் தலையசைத்தான். அவன் பார்வை அறுந்த ஓணான் கொடி, குறிஞ்சாக் கொடிமீது விழுந்தது. இனி அவைகளை இழுக்க முடியாது; அதற்குப் பலமும் சாமர்த் தியமும் பயன்படாது. கொடிகள், ஒரு விதத்தில் மிகுந்த தந்திரசாலிகள் ; பலம் மிகுந்தவை ; வாழ்க்கைப் போராட் டத்தின் லாவகம் முழுவதும் தெரிந்தவை. புத்திசாலித் தனத்தால் மட்டுமே அவைகளை வெல்ல முடியும் ! கஷ்டப் பட்டு, சுற்றியலைந்து, வேரைக் கண்டுபிடித்து அறுத்து விட்டால் வெற்றியுறலாம். அப்புறம் ஏழெட்டு நாட்களில் கொடி வாடி உலர்ந்து விடும். ஆனால் வேரைக் காண்பது எளிதல்ல. ஒவ்வொரு கொடியின் வேரும் எங்கு இருக்கிறதோ!
சிதம்பரம் வெட்டிக் குவித்திருக்கும் செடி கொடி களைப் பார்த்துக் கலிய பெருமாளும், பழனியாண்டியும் திகைத்துப் போனார்கள். ஒரு கணம் நேருக்கு நேராக நோக்கிக் கண்களைச் சிமிட்டி, பொருள் பொதிந்த புன்ன கையைப் பரிமாறிக் கொண்டார்கள்.
பழனியாண்டி சிதம்பரத்தின் பக்கம் நெருங்கி, “எம்மாஞ் செடியை வெட்டிப் போட்டுட்டிங்க!” என்று புகழ்ந்துரைத்தான்.
சிதம்பரம் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, “ரொம்ப வேல நமக்குக் கிடக்கு” என்றான்.
அதனை ஏற்றுக் கொண்டவர்கள் மாதிரி அவன் வெட்டிப்போட்டிருந்த காட்டாமணக்கு, நொச்சி, நுணா, எருக்கு, காரை- ஆகியவற்றை இழுத்துக்கொண்டு போய்ப் பூவரசு மரத்தடியில் குவித்தார்கள். நீண்ட ஆலோசனைக்கும் தர்க்கத்திற்கும் பிறகு அந்த இடத்தைத் தீர்மானித்தான் சிதம்பரம். பழனிதான் அந்த இடத்தை முதலில் தேர்ந்தேடுத்தான். ‘ஒரு தலைப்பிலிருந்து ஆரம் பித்தால், வெட்ட வெட்ட முட்டு முட்டாய்ப் போட்டுக் கொண்டு போக வசதியாக இருக்கும்’ என்று அவன் சொன்னது சரியாகப்பட்டது.
நீண்ட கடினமான யாத்திரையின் முதல் பாதை இது; இன்னொரு விதத்தில் படுகளம் மாதிரியும் தோன்றியது. இந்த எண்ணமே தனக்குக் கூடாதென்று ஒதுக்கித் தள்ளி விட்டுத் தன் வேலையில் மூழ்கினான் சிதம்பரம்.
தானே வலிய ஏற்றுக்கொண்ட நித்தியப் போராட் டம்; வாழ்வோ சாவோ வனத்தோடு பிணைக்கப்பட்டு இருக்கிறது. முழு சக்தியையும் திறமையையும் பிரயோ கித்து, முடிந்தால் தன்னைக்காத்துக்கொள்ளலாம்; இயற் கையை வென்று தனக்குக் கீழ் கொண்டு வரலாம். இல்லா விட்டால் கண்காணாத இடத்தில் பரிதாபமான முறையில் வீழ்ச்சியுறலாம். எல்லாம் தன் கையில் இருக்கிறது.
செடியும் கொடியும் பலத்தைக் குன்றவைத்தாலும் கூடப் பயணத்தை ஒரேயடியாகத் தடைப்படுத்த முடிய வில்லை. ஆனால், ஊவா முள்ளும் நாயுருவியும் காஞ்சூரும் அவனுக்குப் பெருந்தடையாக இருந்தன. காஞ்சூரு பட்ட இடமெல்லாம் அரிப்பெடுக்கச் சொரிந்து சொரிந்து எரிச்சல் எடுத்தது ; தாளமுடியாத வேதனையுற்றான்.
‘நாளைக்குத் தாள முடியாது; இதுக்கு ஒரு வழி பண்ணணும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, நெட்டிலிங்க மரத்தைக் குனிந்து வெட்டிய போது, தேனீக் கூட்டமொன்று ‘ஜூவ்’ வென்று பறந்து வந்தது; அவனறியாமலே கோடாரி பட்டுத் தேன் கூடு சிதைந்து விட்டது. அவன் பின்னுக்குச் சென்றான். தேனீக்கள் கூட்டமாக வந்து அவன் முகத்தில் மோதின. கோடாரியை அப்படியே போட்டுவிட்டு, இரு கையாலும் முகத்தை மூடிக்கொண்டு, இலுப்பை மரத்தின் பின்னே ஓடிமறைந்தான். ஆனாலும் தேனீக்கள் படை படையாகத் திரண்டு வந்தன. தேனீக்களின் ரீங்காரம் பெருகப் பெருக, பீதி நிறைந்த உணர்ச்சி பரவியது. சிதம்பரம் தன் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு, கலியபெருமாளை நோக்கி ஓடினான்.
“என்னங்க! பாம்பா?”
“தேனீ!”
அவன் சொல்லி முடிப்பதற்குள், திரண்டுவரும் தேனீக் கூட்டத்தைக் கலியபெருமாளும் கண்ணுற்றான். கூடு கலைந்துவிட்டால் இப்படித்தான் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக அலைந்து திரியும். மூவரும் பின்னோக்கிச் சென்று பூவரசு மரத்தடிக்குப் போய், வேட்டியை அவிழ்த்து நன்றாகப் போர்த்திக் கொண்டார்கள். தேனீக்கள் வேட்டி யில் மோதி தரையில் விழுந்தன. நேரம் செல்லச் செல்ல அவைகளின் ஆர்ப்பாட்டம் குறைந்துகொண்டே வந்தது. மரத்தில் நன்றாகச்சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, தேனீக்களைப் பற்றியும், தேன் எடுப்பதைப் பற்றியும், தேனீ கொட்டினால் ஏற்படும் வலியைப் பற்றியும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இரண்டு சிறுவர்களிட மிருந்தும் சிதம்பரம் பல விஷயங்களை அறிந்து கொண் டான். அவர்களின் அச்சமற்ற போக்கும், பறவைகள், பூச்சிகள், மரங்கள் பற்றி அவர்கள் சொன்ன விஷயங் களும் அவனை வியப்புற வைத்தன. தான் இப்படி தேனீக் களுக்காகப் பயந்துகொண்டு வந்திருக்கக் கூடாதென்று தோன்றியது.
அவர்கள் தேனடையை நோக்கிச் சென்றபோது, ஒரு விதமான கலவரத்தோடு, செடி கொடிகளின் பின்னே மறைந்தவாறு சிதம்பரமும் சென்றான். பெரிய அடை ; தாமரை இலை மாதிரி தரையில் கிடந்தது. இன்னொரு பகுதி நெட்டிலிங்க மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது கலியபெருமாள் தன்னை நன்றாக மறைத்துக் கொண்டு, ஒரு நீண்ட சுள்ளியால் தேனடையைத் தள்ளித் திருபபிப் போட்டான். தேனடையை மொய்த்துக்கொண்டிருந்த தேனீக்கள் ஜுவ்வென்று மேலே எழும்பிப் பறந்தன.
“நம்மளப் பாத்து, படையா வருது!”
“ஆமாங்க!” என்று சொல்லிக்கொண்டே வேட் டியை அவிழ்த்துத் தலையில் போட்டுக் கொண்டு, ஓடிப் போய்த் தேனடையை எடுத்தான் கலியபெருமாள். இரண்டு மூன்று தேனீக்கள் அவன் கையில் ஆத்திரத் தோடு கொட்டின. தேனடையைப் பழனியாண்டியிடம் தூக்கியெறிந்து, எடுத்துக்கொண்டு அவனை ஓடிப்போகச் சொன்னான். அவர்கள் செய்கை சிதம்பரத்திற்குப் புரிய வில்லை; அவன் திகைப்புற்றான். தேனீக்கள் படையாகத் திரண்டு வந்தன.
“நீங்க ஓடுங்க!” என்றான் கலியபெருமாள்.
மூவரும் வெகு தூரம் ஒடிக் குளத்தங் கரைக்கு வந்தார்கள்.
“நல்லா கொட்டிடுச்சா!” என்று கலியபெருமாள் கையையெடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு கேட்டான் சிதம்பரம்.
“கடுக்குது.”
“செத்தைக்கெல்லாம் சரியாப் போயிடும்” என்று சொல்லிக்கொண்டே பழனியாண்டி தேனடையைப் பிழிந் தான். விரல் இடுக்கு வழியே தேன் சொட்டியது.
“ஆ, தேன்!” என்று கலியபெருமாள் நாக்கை நீட்டி னான். மூன்று சொட்டுத் தேன் விழுந்தது. “ரொம்ப ருசி” என்று நாக்கை நீட்டி சப்புக் கொட்டினான்.
“உங்களுக்கு ஒரு சொட்டு” என்று கையை பழனியாண்டி நீட்டியபோது, சிதம்பரம் தலையசைத்தான். கோதும் புழுவும் நிறைந்த தேன் அவனுக்கு அருவருப் பைத் தந்தது.
மீண்டும் அவர்கள் வேலைக்குத் திரும்பியபோது சூரியன் உச்சியில் இருந்தான். அறுந்த கொடிகளும் வெட்டுண்ட செடிகளும் வாடிக்கொண்டிருந்தன. ஓர் இயக்கம் : ஜீவன் நிறைந்த வாழ்வு எதிர்பாராத விதமாக முடிவடைந்துகொண்டு வந்தது. காரை இன்னும் வாட வில்லை. அதற்கு வெய்யில் காணாது; நாளை வரையிலுங் கூட பசுமை மாறாது; அப்படியே இருக்கும். அது ஒரு வகை ஜாதிச் செடி. ஆனாலும் கடைசியில் வாடிமக்கி மண்ணோடு மண்ணாக வேண்டியதுதான் ; வேறு வழியில்லை. அதன் வாழ்வு தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.
மூன்று நெட்டிலிங்க மரங்களையும் ஒரு புன்னை மரத் தையும் வெட்டிச் சாய்த்ததும், தான் ரொம்பவும் களைத் துப் போய்விட்டதை உணர்ந்தான் சிதம்பரம் ; நாவறட்சி யுற்றது. அ ரிவாளையும் கோடரியையும் எடுத்துக் கொண்டு, வெட்டிப்போட்ட செடிகளைத் துவைத்துக் கொண்டு திரும்பி வந்தான்.
பழனியாண்டி ஒதிய மரத்தைப் பிடித்துக்கொண்டு நிற்க, கலியபெருமாள் அவன் காலிலிருந்து முள்ளை கவன மாகப் பிடுங்குவது தெரிந்தது.
“என்ன, முள்ளா?”
“ஒரு சின்ன முள்ளுங்க” — குதி காலில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு பதிலளித்தான் அவன்.
“பார்த்து நடக்கணும்; இங்க, காலு வைக்கிற இடமெல்லாம் முள்ளா இருக்கு”
“இது என்னங்க முள்ளு ! முள்ளுன்னா, ராஜன் தோட்டம் தாங்க; வண்டி வண்டியா முள்ளுங்க. ஒரு வாட்டி ரெண்டு சப்பாத்தி முள்ளு ஒரு காலில் குத்திடுச்சு. அவ்வளவுதான் காலு ஆனக்காலு கணக்கா புஸ்ஸுன்னு வீங்கிடுச்சு. பத்து நாளைக்கு நடக்கப்படாதுன்னு வைத் தியர் சொன்னாங்க. நம்பளாலே முடியுங்களா? மூணாம் நாளே நடக்க ஆரம்பிச்சிட்டேன். வீக்கம், வலி – எல்லாம் இருந்த இடந்தெரியாம போயிடுச்சி…”
”ரொம்ப ஆச்சரியமா இருக்கே!”
“நெசங்க!”
அவன் புன்னகை பூத்தான். “வூட்டுக்குப் போய் கொஞ்சம் மருந்து போட்டுக்கோ” என்று சொல்லி அவர் களுக்கு விடை கொடுத்தான். அவர்கள் சாப்பாட்டிற்குப் போனார்கள்.
தூரத்தில் நாணற் பூக்கள் மறைந்தும் மறையாமலும் தெரிந்தன. எங்கோ வெகு சமீபத்தில் குளமோ, வாய்க் காலோ இருக்கிறது என்று அனுமானித்துக்கொண்டான். அவன் நடை துரிதமாயிற்று. தெற்கு முனையில் புன்னை மரங்களுக்கிடையில் வாய்க்கால் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றான்; மனம் நிறைந்தது. தன் தோட்டத் திலேயே சலசலத்தோடும் வாய்க்கால்! ஆனால், இறங்கித் தண்ணீர் மொண்டு குடிக்கத் துறை இல்லை. அவன் பார்வை இப்படியும் அப்படியுமாக வெகுதூரம் சென்றது சரியான துறை ஏதும் புலப்படவில்லை; அது மட்டுமல்ல, மாயம் மாதிரி வாய்க்காலே மறைந்துவிட்டது! பெரிய தோப்புதான்!
மாடுகள் துவைத்துக்கொண்டு போய் உண்டாக்கிய சருகலான பாதையில் இறங்கி, இரண்டு கையாலும் நீரை அள்ளி முகத்தை அலம்பிக்கொண்டு, தாகம் தீரக் குடித் தான். குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் தெம்பு பிறந்தது. வேட்டித் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு கரையேறிய போது,”தோப்பு வாங்கி இருக்கிறது நீங்க தானா?” என்ற குரல் கேட்டது. அவன் நிமிர்ந்து எதிர்க் கரையில் நின்றவரைப் பார்த்தபடியே, “ஆமாங்க” என்றான்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி ஐயரைப் பார்த்தேன். என்னமோ ஒரு பேச்சு வந்துச்சு. அப்ப ஐயர், ‘குமாரசாமி, தோப்பை வித்துட்டேண்டா’ என்னாங்க. என்னாலே நம்பவே முடியலே. ஏதோ சும்மனாச்சிக்குச் சொல்லுறாங்கன்னு நெனைச்சிக்கிட்டு, ‘போங்க சாமி’ன்னேன்…”
சிதம்பரம் அவரைக் குத்திட்டு நோக்கினான்.
“ஐயர் சொன்னாங்க. நீங்க, என்னமோ ஆல வெக்கப் போறீங்களாமே?”
“ஆமாங்க ; கரும்பு ஆலங்க.”
“சக்கரை ஆலங்களா?”
“ஆமாங்க.”
நம்ப மறுப்பது மாதிரி குமாரசாமி தலையசைத்தார்.
“மன்னிச்சிக்கணும். நீங்க…?”
“நானா? மாங்குடிங்க.”
“மாங்குடி நாட்டாண்மைக்காரவுங்க யில்லே… மாமா ரொம்பச் சொல்லி இருக்காங்க. அக்கரையிலேயே நின்னுட்டிங்களே,வாங்க.”
“பரவாயில்லே. இங்க ஒரு ஜோ லியா வந்தேன். என்னமோ சப்தம் கேட்டுச்சேன்னு எட்டிப் பாத்தா, நீங்க நிக்கிறீங்க…”
”கொஞ்சம் வேலைங்க…” என்று சொல்லிக்கொண்டே வாய்க்காலுக்குள் இறங்கினான் சிதம்பரம். குமாரசாமி பலமாகக் கூச்சலிட்டு அவனைத் தடுத்தார்.
“தெக்கால பனைமரம் கிடக்கு…அப்படியே வாங்க” என்று அவனுக்கு வழி காண்பித்தார்.
சிதம்பரம் பின்னுக்குத் திரும்பி நாணலையும் கோரை யையும் விலக்கிக் கொண்டுதெற்காகச் சென்றான். கொஞ்ச தூரத்தில் இலுப்பை மரங்களுக்கிடையில் வாய்க்காலுக்குக் குறுக்கே பாலம் மாதிரி ஒரு பனைமரம் கிடந்தது. ஆடுகள் போக – மாட்டுக்காரப் பையன்கள் போக – எப்பொழுதாவது பெரியவர்கள் போக – அது பாலம். சாயாவனத்தையும் மாங்குடியையும் இணைக்கும் சங்கிலி அது.
அவன் அக்கரை அடைந்ததும் குமாரசாமி மிகுந்த கனிவோடு, ‘நீங்க தேவருக்கு என்ன வேணும்? ” என்று கேட்டார்.
“தங்கச்சி பிள்ளைங்க”.
“அதான், சொல்லிக்கிட்டாங்க… ஜாடையும் தெரியுது”.
“உங்களை வந்து பார்க்கணுமென்னு ரெண்டுவாட்டி பயணப்பட்டேன். ஒண்ணு ஒண்ணா வேலை வந்து தட்டிப் போச்சுங்க.”
“ஒரு வேலையைத் தொடங்கிட்டா, இப்படித்தான். ஆயிரம் வேலை ஒண்ணா வந்துகிட்டே இருக்கும்.”
“சரியாச் சொன்னீங்க!”
“நாம்ப வேலை ஆரம்பிச்சுப் பாக்காதவங்களா?”
“உங்களுக்குத் தெரியா தது ஒண்ணுமில்லேன்னு மாமா ராத்திரிகூடச் சொன்னாங்க.”
“அவுங்க எப்பவும் இப்படித்தான்,ஏதாச்சும் சொல் லிக்கிட்டே இருப்பாங்க. அதையெல்லாம் நீங்க நம்பாதீங்க.”
சிதம்பரம் புன்முறுவல் பூத்தான்.
“தேவர், வூட்டுல இருக்காங்களா?”
“இருக்குறாங்க ; வாங்க.”
“உங்களோடே பேசிக்கிட்டே போய் அவுங்களையும் பாத்துடலாம்” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் குமாரசாமி.
எதிர்பாராதவிதமாய்க் கிடைத்த நண்பரின் பின்னே சென்றான் சிதம்பரம்.
அத்தியாயம் – 5
ஒளிவீச்சில் அழகிய இனிமை வாய்ந்த பொழுது மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது. சிதம்பரம் தோட்டத்திற்குத் தன்னந்தனியே சென்றான். அவன் வெட்டிச் சாய்த்த செடிகள் வாடிச் சோர்ந்து கிடந்தன. காரைகூட வதங்கிக் கொண்டு வந்தது. எதிர்பார்த்த தற்கு மாறாகக் காரியங்கள் நடந்தாலுங்கூட, அவன் மகிழ்ச்சியுற்றான். இயற்கை பல விதங்களில் தனக்கு மிகுந்த அனுசரணையாக இருப்பது போல தோன்றியது.
சிதம்பரம் கொடிகள் காலில் பின்ன, நடந்து சென்று பக்கத்திற்கொன்றாய் சிதறிக் கிடந்த அலக்கு, தொரட்டி, அரிவாள், மண்வெட்டி எல்லாவற்றையுங் கொண்டு வந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் வேலையைத் துவக்கினான்.
காட்டாமணக்கைவிட, ஆடாதொடையைவிட குத்துக் குத்தாகத் தாழ்ந்தும் உயர்ந்தும் வளரும் கள்ளி யையும் சப்பாத்தியையும்விட, காரைதான் தோட்டம் முழுவதும் வியாபித்திருந்தது. ஒவ்வொரு மரத்தின் கீழும் காரை பெருகி வளர்ந்து, தழைத்துப் படர்ந் திருந்தது. கொடி மாதிரி ஒரு முடிவின்றி, தோட்டம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வந்துவிட்டது. இயற்கையின் அதிசயப் போக்கு அது. வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி வாகை சூடிய காரையைச் சற்றே வளைத்துச் சின்ன முட்கள் கீறிக்கிழிக்க வெட்டிச் சாய்த்துக் கொண்டு போனான் சிதம்பரம். வரவர செடிகொடி களோடு போராடுவது அவனுக்கு எளிமையாகிக் கொண்டு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் நெளிவு சுளுவுகளையெல்லாம் அவன் தெரிந்து கொண்டு விட்டான். எப்படி வளைத்துப் பிடித்தால் ஒரே வெட்டில் காரை சாயும் என்பது அத்துப்படியாகி விட்டது. ஆடா தொடையை வெட்டுவது மாதிரி ஒருவித முயற்சியுமின்றி காரையை வெட்டிச் சாய்த்தான். அவனுடைய சக்தி யைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்த காரை, படிப் படியாக அதே கர்வத்தோடும் பெருமிதத்தோடும் சரணடையத் தொடங்கியது.
காரைக்கு இடையே ஒரு ஈச்சன் பரப்பு ; ஈச்சனின் வீச்சு வீச்சாய் மட்டைகள்; ஒவ்வொரு சிறு இலையின் முனையிலும் கரும் சிவப்பு முட்கள். ஒரு புதுமையான பரப்பு: தொடர்ந்து வெகு தூரம் வரையில் சென்று கொண்டிருந்தது. ஒரு வண்ண மாற்றம்; பூமாதேவி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறாள்; எவ்வளவு கவர்ச்சி கரமான மாற்றம்!
ஈச்சனைத் தாழ வளைத்து வெட்டும்போது அரிவாள் அவன் து கையில் பாய்ந்தது. வலுவான, ஆழமான வெட்டு. ரத்தம் குபு குபுவென்று வந்தது. முகத்தைச் சுளித்து, வலியை மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்கிக் கொண்டு வாயில் கையை வைத்து ரத்தத்தை உறிஞ் சினான். உறிஞ்ச உறிஞ்ச ரத்தம் வந்துகொண்டே இருந்தது. அவன் சோர்வுற்றான். எரிச்சலோடு தலையை உசுப்பிக்கொண்டு, வேட்டியை அவிழ்த்துத் தலைப்பைக் கிழித்துக் காயத்தில் சுற்றிக்கொண்டு, இலுப்பை மரத் தடியில் வந்து அமர்ந்தான்.
ஒரு நரி அவனைத் தாண்டிக்கொண்டு வேகமாக ஓடியது. நரியைத் துரத்திக் கொண்டுவந்த கலிய பெரு மாளும் பழனியாண்டியும், பெரிய கட்டோடு படுத் திருக்கும் சிதம்பரத்தைப் பார்த்துத் துணுக்குற்றுப் போனார்கள். பழனியாண்டி அவன் அருகே வந்து தாழ்ந்த குரலில், “என்னங்க காயம்?” என்று வினவினான்.
“சின்னக் காயம். அறுவா பட்டுப் போச்சு”
“ரத்தம் ரொம்ப வருதுங்களே!”
அவன் தலையசைத்தான்.
“ஒருவாட்டி எங்க அப்பாவுக்கு ஒரு காயம்; பெரிய அறுவா பட்டுடுச்சு. எங்க அம்மா, நாயுருவியும் பூண்டும் வச்சு, ஒட்ட ஒட்ட அரைச்சுப் போட்டாங்க. ரெண்டே நாளுலே காயம் ஆறிப் போயிடுச்சு”.
கலியபெருமாளை நோக்கித் தலையசைத்தான் சிதம் பரம். அப்புறம் துணியைப் பிரித்து சரியாகக் கட்டிக் கொண்டான்.
“நானும் அதையே போடுறேன்.”
“ஒரு வாட்டி மரத்திலே இருந்து உளுந்துட்டேன். முட்டியிலே நல்லா அடி. எலும்பு வெளியே தெரிஞ்சிச்சு. அப்பக்கூட அதான் போட்டாங்க; பத்து நாளிலே சரியாப் போயிடுச்சு.”
“அப்படியா?”
“நிஜங்க!”
அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டு, “சாப்பாடு, ஆச்சா?” என்று கேட்டான் சிதம்பரம்.
“ஆச்சுங்க.”
“இன்னைக்கு வெட்டினது இவ்வளவுதான். வாரி ஒண்ணாக் குமிச்சிடலாம், வாங்க” என்று சொல்லிக் கொண்டு, முன்னே சென்றான் அவன்.
ஓய்விலிருந்தும், களைப்பிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. நில்லாது இயங்கும் சக்தி அது. தன் போக்கில் காரியங்கள் துரிதமாகவும் தீவிர மாகவும் நிகழ வேண்டும். வெலை ஆரம்ப நாட்களைவிட இப்போது உற்சாகம் தருவதாக இருந்தது. அடை பட்டுக் கிடந்த தோட்டத்தின் நெடுங்கதவுகள் அவர் களின் சின்னஞ்சிறிய கரத்திற்கு அசைய ஆரம்பித்து விட்டன. இன்னும் பலத்தோடு இடைவிடாது அசைத் துக் கொண்டே போனால், மாயம் மிகுந்த கானகத்தின் ரகசியமெல்லாம் வெளிப்பட்டுவிடும்.
ஒன்று ஒன்றாய் மூன்று தழைப் போர்களை ஏற்படுத்தி னார்கள்; ஒன்றைவிட மற்றொன்று பெரிதாகக் காட்சி அளித்தது. பின் நோக்கிச் செல்லச் செல்ல தூரம் கூடிக் கொண்டு வந்தது. இது முற்றிலும் புதிய பாதை. அ அநேகமாக இப்போதுதான் புல்லிதழ்களின்மீது மனிதர் களின் பாதங்கள் படுகின்றன. சௌந்தரியம் கொழிக்கும் பூமியின் மீது மெல்ல நடந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள்.
அகண்டு பரந்திருக்கும் இந்தக் கோளம் மனிதனுக் குத்தான்; அவனுடைய வாழ்விற்கும் நலத்திற்குந்தான் படைக்கப்பட்டு இருக்கிறது. அறிவும் வல்லமையும் மிகுந்த மனிதன், வெல்வதற்கே இயலாது என்று எண்ணப்பட்ட மண்ணைத் தன்னுடைய சுவாதீனத்திற்கு மெல்ல மெல்லக் கொண்டுவந்துவிட்டான். மனித சந்ததி பெருகும் போதெல்லாம், எழில் பூக்கும் பூமியின் ஒரு பகுதி தவிர்க்கவொண்ணாத விதத்தில் மாற்றி அமைக்கப் படுகிறது. அதனுடைய இயற்கையான அம்சம் – மரமும் செடிகொடிகளும் புல்லிதழ்களும் அகற்றப்படுகின்றன.
மண்ணோடு மனிதன் நிகழ்த்தும் போராட்டம் வலி மையும் உக்ரமும் நிறைந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு கணமும் இயற்கை அவனுக்கு அறைகூவல் விடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒரு தடயத்திலிருந்து இன்னொரு தடயத்திற்கு உற்சாகத்தோடு அழைத்துக் கொண்டுபோய், மீளமுடியாத சிக்கலில் பிணைத்துவிட்டு விட்டு, ஏளனமாக நகைக்கிறது. அவன் தன் தோல்வி யில் – பலங்குன்றி நிற்பதில் – அதற்கோர் ஆனந்தம். மனிதன் இடறி வீழ்வதைக் கண்டு நகைத்தாலும் அதில் வெற்றியின் பெருமிதமில்லை ; மாறாகத் தோல்வியின் பல வீனம் தெரிகிறது.
நெடிதுயர்ந்து நின்ற மரங்களின் அடியில் செடி கொடிகளைக் கொண்டு வந்து குவித்தார்கள். சிதம்பரம் பெரிய கிளைகளையும், முள் நிறைந்த கருவேல மரக்கிளை களையும் இழுத்துவரும் பொ றுப்பை ஏற்றுக் கொண் டான். ஆனால், நேரம் செல்லச் செல்ல, அவன் சலிப் புற்றான். வேலைப் பளு அவனை அழுத்தியது. கிளையை இழுக்க முடியாமல் ஒரோர் சமயம், பலமனைத்தையும் இழந்தவன் மாதிரிக் காட்சியளிப்பான். கண்களை இறுக மூடிக் கொண்டு மரத்தடியில் உட்கார்வான். மென் காற்று அவனைத் தழுவிக்கொண்டோடும். அவன் முகத்தில் சோர்வு நீங்கும். கைகளை உதறிக்கொண்டு திடீ ரென்று எழுவான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தரை யில் கிடக்கும் முள்ளை அழுத்தி மிதிப்பான். செருப்புக் கால் பட்டு முள் உள்ளே செல்லும் முள் பூமியில் புதையப் புதைய அவன் மனம் துள்ளிக் குதிக்கும். இப்படி முள்ளை மிதித்துக் கொண்டேதான் அதன் பெருமையைப் பற்றி கலியபெருமாளுக்கும், பழனியாண்டிக்கும் எடுத்துரைத் தான். இன்னும் இரண்டு நாட்களில் அவர்களுக்குப் புத்தம் புதிய செருப்புக்கள் வந்துவிடும்.
கலியபெருமாளும் பழனியாண்டியும் வரப்போகும் செருப்பைப் பற்றிய இனிய நினைவுகளோடு, உற்சாக மாகக் கிளைகளையும் கொடிகளையும் இழுத்துக் கொண்டு வந்து போட்டார்கள். பெரிய கிளைகளை இருவரும் சேர்ந்து இழுக்க முடியாமல் இழுத்துக்கொண்டு வரும் போது சிதம்பரம் கைகொடுத்து உதவுவான்.
“நீங்களும் என்னெ மாதிரி வளந்துட்டா, இதை யெல்லாம் சுலபமா இழுத்தாந்துடலாம்!”
கலியபெருமாள் தலையசைத்தான்.
“நீங்க ரொம்ப சுருக்கா மரம் வெட்டுறீங்க: உங்க மாதிரி இஞ்ச யாரும் வெட்ட மாட்டாங்க” என்று வியந் துரைத்தபோது, சிதம்பரம் அவன் கரத்தை மெல்ல ஆதரவோடு பற்றிக் கொண்டு புன்முறுவலித்தான்.
மூன்று போர்கள் குவித்த பிறகும் இங்குமங்குமாக ஏராளமான செடிகளும் கொடிகளும் கிளைகளும் கிடந்தன. எல்லாவற்றையும் ஒன்று திரட்டிக் குவித் தால் இன்னும் இரண்டு போர்கள் போடலாம்.
இது எல்லாத்தையும் என்ன பண்ணப் போறீங்க?” என்று ஒரு பெரிய குறிஞ்சாக் கொடியை இழுத்துக்கொண்டு வந்து சிதம்பரத்தின் அருகே போட்டு விட்டு, பழனி கேட்டான்.
“என்ன பண்ணலாம், நீதான் சொல்லேன்.”
“யாரையாச்சும் வாரிகிட்டுப் போவச் சொல்லலாம்.”
“எதுக்கு?”
“எருவுக்குத்தான்.”
“காரைய ஆரும் எருவுக்குப் போட மாட்டாங்க” என்றான் கலியபெருமாள்.
“நொச்சி, நுணா, ஆடாதொடை…”
“அதையெல்லாம் போடுவாங்க.”
“அப்படீன்னா, பாதி எருவுக்குப் போயிடும். சரி, ஒரு வேல முடிஞ்சுபோன மாதிரிதான். நீங்க போய் சுருக்கா ஆரையாச்சும் கூட்டியாங்க” என்று எழுந்தான் சிதம்பரம்.
ஐந்தாறு நரிகள், விட்டு விட்டு ஊளையிடும் சப்தம் வெகு அருகில் கேட்டது.கலியபெருமாளும் பழனி யாண்டியும் கட்டுக் கடங்காத சந்தோஷத்தால் முகம்மலர சிதம்பரத்தைப் பார்த்தார்கள். அவன் முகம் லேசாக வெளிறிக் காணப்பட்டது.
“இஞ்ச நரிங்க… ஜாஸ்திங்க : நாங்க வரச்ச நாலு நரிங்க ஓடிச்சு.”
“உம்…”
“ஒரு நாளைக்கு அம்பது அறுபது நரிங்க கூட்டமா நின்னுக்கிட்டு கத்தும் பாருங்க; அடே அப்பா, என்ன கத்த! ஆத்தங்கரை வரைக்குங்கூட கேக்குங்க ! நாங்க ளெல்லாம் பயந்து கூடப் போயிடுவோம்; சின்னப்பசங்க ளெல்லாம் மரத்து மேலே ஏறிக்குங்க.”
“அப்புறம்..”
“நாங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு ஓயின்னு கத்துவோம்; நரியும் கத்தும்; நாங்களும் கத்துவோம். ஒரு ஒரு நா நரிங்க ஓடிடும் ; ஒருஒரு நா நாங்க ஓடிடுவோம்…”
அந்தி மயங்கியது. வெட்டுண்ட மரங்களுக்குப் பின் னால் தோட்டம் கறுத்துக் கொண்டு வந்தது. அநேகமாக இனி வேலைசெய்ய முடியாது; இரவு வந்துவிட்டது.
“அப்ப, ரொம்ப இருட்டுறதுக்கு முந்திப்போய், எருவுக்குத் தழையெடுக்க, ஆரையாச்சும் கூட்டிக்கிட்டுக் காத்தாலே வாங்க.”
“சரிங்க.”
இருவரும் கோவணமாகக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த புல்லிதழ் களையும் சருகுகளையும் தட்டிக்கொண்டு நடக்கலானார்கள்.
“பழனி!”
உரத்தக் குரல் கேட்டு, இருவரும் சிதம்பரத்திடம் திரும்பி வந்தார்கள்.
‘இந்தாங்க’ என்று ஆளுக்கு மூன்று தம்பிடி காசு கொடுத்தான் சிதம்பரம். தயக்கத்தோடும் ஆசையோடும் அதனை வாங்கிக்கொண்டார்கள். மாமாவுக்கு அப்புறம், சிதம்பரம்தான் அவர்களுக்குக் காசு கொடுக்கிறான். ஊர் லிருந்து வரும்போதெல்லாம் மாமா ஆளுக்கொரு தம்பிடி தருவார். கொஞ்ச நேரந்தான் அந்தக் காசு அவர்கள் கையில் இருக்கும். அப்புறம் எப்படியும் அம்மா கைக்குப் போய்விடும். ஒரு சமயம் அன்பாகப் பேசி, வாங்குவாள். இன்னொரு சமயம் அதட்டி, அது பயன்படாவிட்டால் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிக் காசை வாங்குவாள். அவர்கள் கையிலிருந்து காசைப் பறித்துக் கொள்வதில் அவளுக்கு ஒரு திருப்தி. ஆனால், இந்தக் காசு அவளிடம் போகாது; காட்டமாட்டார்கள்! அம்மாவுக்குத் தெரி யாமல் கிடைத்த காசை அவர்கள் விருப்பப்படியே செலவு செய்வார்கள்.
துண்டு முனையில் காசை முடிந்து கொண்டு, வரப்பு மேலே செல்கிறவர்களை சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றான் சிதம்பரம். அப்புறம் எவ்விதக் குறிப்புமின்றி பிரப்பங்காட்டை நோக்கிச் சென்றான். பெரிய காடு அந்தியில் பார்க்கையில், இன்னும் பெரிதாகவும் எல்லை யற்றது மாதிரியும் தோன்றியது. புன்னை மரமொன்றில் நன்றாகச் சாய்ந்துகொண்டு இருள் சூழ்ந்த தோட்டத்தை ஆழ்ந்து நோக்கினான். தன்னுள்ளேயும் தனக்கு வெளியே யும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது அவ னுக்குச் சரியாகப் புலனாகவில்லை. ஆனால், ஒவ்வொரு செயலும் நிகழ்ச்சியும் ஒரு பாடத்தை உணர்த்துவது போலத் தோன்றியது.
பழனியாண்டி, செடியின் மறைவிலிருந்து வெளிப் பட்டு, இரைக்கும் குரலில், “கலியன் தலையாரியைக் கூட்டியாராங்க” என்றான்.
“எங்க?”
“அந்தால வந்துகிட்டிருக்காங்க.”
இருவரும் கொன்றை நிறைந்த பழைய இடத்திற்கு வந்தார்கள். தூரத்தில் கலியனின் பேச்சுக் குரல் கேட்டது.
“என்ன சொல்லுறாங்க?
“தழை போட்டா குச்சி குத்துமின்னு, நடவுக்கு. ஆரும் இறங்க மாட்டாங்களாம்.”
“அப்படியா?”
“இதோ, அவுங்க வந்துட்டாங்களே!”
மார்பில் புலிப்பல் அசைந்தாட முறுக்கிய பெரிய மீசையோடு வந்த தலையாரி “அடே எங்கப்பா! தோட்டத்தியே அழிச்சிட்டீங்களே?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
சிதம்பரம் தலையாரியின் பேச்சுக்குப் பதிலொன்றும் அளிக்கவில்லை.நிமிர்ந்து, வானில் எழும் நிலவைப் பார்த் தான். அப்புறம் மெல்லக் குனிந்து, தரையில் கிடந்த மணிப்புறாவின் சிறகை எடுத்தான். தன்னுடைய வேலை யில் திருப்தி இருந்தாலும் வேகம் காணாது என்று தோன்றியது.
நாளை வேலை தொடங்குவதற்கு முன்னே, வெட்டிக் குவித்தவைகளை இழுத்து வந்து, ஒன்றாகப் போட்டுவிட் டால் நன்றாக இருக்கும். தழையை எருவாகப் போட யாராவது முன்வந்தால், ஒரு காரியம் அநேகமாக முடிவ டைந்ததுபோல. ஆனால், இப்போது காலம் கடந்து விட்டது. குறுவை நடவு போட்டு விட்டார்கள். தாளடிக் கும் சம்பாவுக்கும் இன்னும் நாட்கள் இருக்கின்றன.
இருந்தாலும் சம்பா நடவு போடுகிறவர்கள் எருவுக் குத் தழையை யெடுத்துக்கொண்டு போகலாம். ஆனால், எவ்வளவு பேர் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை இதுபற்றி தலையாரி சரியான பதிலைத் தரலாம்.
அவன் நம்பிக்கையற்ற நிலையில் பேசினான் ; காலம் கடந்து விட்டதைப் பற்றி ரொம்ப விஸ்தாரமாகப் பேசினான். கடைசியில், “இங்க ரொம்ப பேருங்க, தழை போடுறது இல்லை. ஆனா, நீங்க கவலைப்படவேணாம். நான் ஒரு வழி பண்ணிடறேன்” என்று திடமான குரலில் சொன்னான்.
“நீங்க பண்ண மாட்டீங்களா” என்றான் சிதம்பரம்.
தலையாரி அவன் பக்கம் நெருங்கி, “ஆல வைக்கப் போறீங்களாமே?” என்று கேட்டான்.
“ஒரு கரும்பு ஆல வைக்கலாமுன்னு இருக்கேன்.”
“கரும்பு ஆலைங்களா? இஞ்ச சுத்துப் பட்டிலே கரும்பு ஒண்ணும் வராதுங்களே.”
“அப்பிடியா?”
“ஆமாங்க. ஒரு வாட்டி சுப்பிரமணிய ஐயரும் பாவாடைப் படையாச்சியும் கரும்பு போட்டாங்க. போட்டது போட்டதுதான்; நெரங்கிப் போச்சு.”
“அப்படியா?” என்று தன் தலையை விரலால் கோதி விட்டுக்கொண்டு, “வில்லியனூரில் கரும்பு விளையுதே” என்றான்.
“அங்க கரும்பு ரொம்ப நல்லா விளையுதுங்க.”
“சடைசடையா, என்ன மாதிரி கரும்பு!”
“நீங்க அங்க இருந்து கொண்டாறப் போறீங்களா?”
“அப்படியொரு, உத்தேசம் இருக்கு.”
“குறுக்கால ஆறு இருக்குதுங்களே…”
“ஆமாம், அதுக்கென்ன?”
சிதம்பரத்தின் பேச்சைக் கேட்டுத் தலையாரி திடுக்கிட்டுப் போனான். ஆற்றைப் பற்றி காவிரியைப் பற்றி அவனுக்குத் தெரியும்; தண்ணீர் ஓட்டத்தைப் பற்றியும் தெரியும். எட்டு வயதிலிருந்து ஆற்றுக்குக் குறுக்காக வண்டி ஓட்டுகிறவன் அவன். ராமசுப்பிரமணிய ஐயருக்கு இன்றைக்கும் அவன்தான் வண்டி ஒட்ட வேண்டும்; அவன் ஓட்டும் வண்டியில்போனால்தான் அவருக்குத் திருப்தி.
காவிரிப்பட்டணத்திலிருந்து மாயவரத்திற்கு திங்கட் கிழமை சந்தைக்கு அஞ்சலைக்காகக் கருவாடு வண்டி ஓட்டுகிறவனும் அவன்தான். வஞ்சனை, நெத்திலி, சென்ன குன்னி, சுறா ஒரு வண்டி கருவாட்டைத் தன் மதி நுட்பத்தால் வெள்ளத்திலிருந்து அவன் காப்பாற்றி னான். அன்று முதல், ஏழு வருடங்களாக அவன் அஞ்சலை யின் நம்பிக்கையான ஆள். கணக்கு வழக்கின்றி பணம் தருவாள். செம்படவத் தெருவில் அவனுக்கு ஒரு தனி மதிப்பு: கௌரவம் உண்டு. பத்து நாட்களுக்கு முன்னே கப்பக்கார ராமுத் தேவரின் அரிசி வண்டி நடு ஆற்றில் சிக்கி அச்சு முறிந்தது அவனுக்குத் தெரியும். அவன் அப்போது அக்கரையில் நின்று கொண்டிருந்தான். ஒரு நிமிடத்திற்குள் அது நடந்தது. யார் யாரோ தண்ணீ ரில் குதித்து ஐந்து மூட்டைகளைக் கரையேற்றினார்கள். பத்து மூட்டையை ஆறு அடித்துக்கொண்டு போய் விட்டது.
“அப்ப, நான் உத்தரவு வாங்கிக்கிறேன்” என்றான் தலையாரி.
“இதுக்கொரு ஏற்பாடு பண்ணணும்.”
“அதுக்கு நான் இருக்கிறேங்க.”
“அப்ப சரி.”
“வரங்க.”
“வாங்க.”
தலையாரிகூட கலியபெருமாளும் பழனியாண்டியும் சென்றார்கள்.
தனிமையில் நிலவு பொழியும் தோட்டத்தில் உட் காரந்து அவன் யோசித்துப் பார்த்தான். எருவுக்குத் தழையெடுத்துப் போவார்கள் என்ற நம்பிக்கையும் சிதைந்துபோயிற்று. ஆனால், தலையாரியின் முயற்சியில் ஏதாவது நடந்தால், தன் காரியங்கள் கொஞ்சம் சுலப மாகும். இப்போது அதற்கு வழி இருப்பதாகத் தெரிய வில்லை.
அவனுக்குத் தேவை யெல்லாம் மனிதர்கள்தான். ஆரண்யம்போன்ற தோட்டத்தை அழிக்க வானரப்படை போன்ற ஒரு கூட்டம் வேண்டும். கூலி கொடுக்கவும், வைத்து வேலை வாங்கவும் அவன் தயாராக இருந்தான். ஆனால், ஆட்கள் கிடைக்கவில்லை. மத்தியானம் மாங்குடி குமாரசாமியை இது பற்றிக் கேட்டதும், ‘ஆளுங்களா?’ என்று கேட்டுவிட்டு மெளனம் சாதித்தார்.
ஒற்றைக் காக்கை பயங்கரமாக அலறியது.
அவன் திடுக்கிட்டெழுந்தான்.தலைக்கு மேலே பறந்த காக்கையைத் திட்டிக்கொண்டே முன்நோக்கி நடந்தான். அவன் பார்வை வெட்டிப்போட்டிருந்த செடிகளின்மீது விழுந்தது. அப்புறம் இலுப்பை மரங்கள் பக்கம் சென்றது.
ஐம்பத்திரண்டு இலுப்பை மரங்களையும் வெட்ட வேண்டும். அதை விட்டுவைப்பதென்பது எவ்விதத்திலும் முடியாத காரியம். ஆலை நிர்மாணிக்கும் இடமே இலுப்பை இருக்கும் பகுதிதான். அங்கிருந்து துவங்கினால்தான், பல காரியங்களுக்கு வசதியாக இருக்கும். அதோடுகூட வீடு கட்ட, ஆலை அமைக்க, காளவாய்போட, மரம் வேண்டும். எல்லாவற்றுக்கும் இலுப்பைதான்! அதைத்தான் வெட் டிச் சாய்க்க வேண்டும்.
சிதம்பரம் மௌனமாக ஒரு தீர்மானத்தோடு வந்து கோடரியைக் கையில் எடுத்தான். கருக்கைத் தடவிப் பார்த்தான். மனம் குறுகுறுத்தது. வலியை மீறிக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்ற தாபம் உடல் முழுவதும் பெருகியது. செடியும் கொடியும் தழுவிக் கொண்டிருக்கும் வானளாவிய நெட்டிலிங்க மரத்தில் கோடரியை வீசினான். ஒவ்வொரு வெட்டும் ஆங்காரத் தோடும், வலிமையோடும், தப்பாமல் மரத்தில் போய்ப் பாய்ந்தது. பூவரசு மாதிரி, பனை மாதிரி, எவ்வளவு நாளா னாலும் நெட்டிலிங்கங்களில் வைரம் பாயாது. அதன் வளர்ச்சியெல்லாம் உயரம்தான். ஒரு சாது மாதிரி, அம்மரம் சகல விதத்திலும் அவனுக்குப் பணிந்து கொடுத்தது.
காயம் பட்ட கை கடுக்கும்போதெல்லாம் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொள்ளுவான். தான் வெட்டிச் சாய்க்கப்போகும் பெரிய மரத்தைப்பற்றி எண்ணிப் பார்ப்பான். எத்தனையோ விதங்களில் அவ னுக்கும் அதற்கும் சிறப்புண்டு. பெரிய நீண்ட நெட்டி லிங்கம் தெற்குப் புறமாக விழுந்தால், பிரப்பங்காட்டில் போய் விழும். அதன் முனை தாழங்குத்தை எட்டினாலும் எட்டலாம். மரம் மெல்லமெல்ல சாயும் போக்கிலிருந்து தெற்காகத்தான் போய் விழும் போலப்பட்டது. இது அவன் வெட்டும் முதல் பெரிய மரம். இதுபோல எத்த னையோ பெரும் மரங்களைப் பின்னால் வெட்ட வேண்டி யிருக்கிறது. ஆனால், ஒரு துணையின்றி, நிலவு பொழியும் இரவில் தன்னந்தனியே மரம் வெட்டும் சந்தர்ப்பம் ஒரு வேளை வராமலேயே போகலாம்.
சற்றே பின்னுக்கு வந்து, எந்தத் திசையில் மரம் விழும் என்று கவனித்துப் பார்த்தான். பழைய தீர்மானம் உறுதிப்பட்டது. ஆனால், ஒற்றைத் தென்னை தடுத்தால், தென் கிழக்காக இலுப்பை மரத்தின்மேல் விழக்கூடும். அப்படி விழுந்தால், கொஞ்சம் கஷ்டம்; வேலைப் பளு கூடும். இலுப்பையை வெட்டித் தள்ளி, பிறகு நெட்டி லிங்க மரத்தை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும்.
வடக்குப்பக்கமாக நின்று ஒரே நிதானத்தோடும் முன் னெச்சரிக்கையாகவும் கோடரியை வீசினான். மரம் பெரும் இரைச்சலோடு தரையில் சாய்ந்தது. தூரத்தில் ஓடி நின்று பார்த்தான். தோட்டம் முழுவதும் வெறிச்சோடி யது மாதிரி காட்சியளித்தது.
அவனுக்கு ஆனந்தம் தாள முடியவில்லை; கோடரியை ஒரு கையில் பற்றியவாறு, விழுந்த நெட்டிலிங்க மரத்தின் மீதேறி நடந்தான். மனம் நிறைந்தது. இன்னும் இரவு முடியவில்லை. ஆனாலும், குறிப்பிடத்தக்க விதத்தில் வேலை செய்திருப்பது மாதிரி பட்டது.
மரம் விழுந்ததால் வானத்து நிலவும், விண்மீன்களும் ஜொலிப்பது தெரிந்தன. மேலே அழகு கொழிக்கும் வானம்: கீழே அமைதியான தோட்டம். பொழுது புலரும் நேரத்தில் அவன் தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்தான்.
அத்தியாயம் – 6
இருள் இன்னும் பிரியவில்லை ; ஒளியும் வரவில்லை. இரண்டும் மயங்கித் தவிக்கும் நேரம். எங்கோ மாடுகளை அதட்டும் குரலும், கன்றின் அழைப்பும் மெல்லக் கேட்டன். ‘கீச் கீச்’சென்று பறவைகளின் குரல்: காற்றின் அசைவில் பொத்தென்று பழங்கள் உதிர்ந்தன.
அடர்ந்த தோப்பில் இருளினூடே சென்றான் சிதம் பரம். அவன் மனம் கிளர்ச்சியுற்றிருந்தது. நேற்று வெட்டி வீழ்த்திய மரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னே சென்றான்.
பிரம்மாண்டமான நெட்டிலிங்க மரம் தலைவிரி கோல மாகக் கிடந்தது. அவன் நினைத்ததற்கு மேல் ரொம்ப அனுசரணையாகவும், உதவி செய்வது போலவும் விழுந்து கிடந்தது மரம். நான்கைந்து ஈச்சங்கன்றுகளை அழுத்திக் கொண்டு, பிரப்பங்காட்டில் ஒரு வழி – சிறிய வழியை ஏற்படுத்தி இருந்தது. அவன் மகிழ்ச்சியுற்றான். பிரப் பங்காட்டை அழிக்கத் தடயம் கிடைத்துவிட்டது. நெட்டிலிங்க மரத்தின்மீது ஏறி நின்றபடி அரிவாள் கருக்கைத் தடவிப் பார்த்தான். எல்லாம் கூடி வந்து விட்டது மாதிரி இருந்தது.
வழியை மறித்துக் கொண்டிருந்த கிளைகளை வெட்டித் தள்ளிக்கொண்டே சென்றான் சிதம்பரம். மரத்தின் மேலேயே நடந்து பிரப்பங் காட்டிற்குள் சென்றான். நடுக்காட்டில் அந்தரத்தில் நிற்பது மாதிரி ஒரு தோற்றம். சுற்றிலும் பச்சைப் பசும் பிரம்பு – வெகு தூரம் வரையில் பரவியிருந்தது. அரிவாள் பயன்படாது என்றதும் திரும்பி வந்து, அலக்கையும் தொரட்டியையும் எடுத்துக் கொண்டு சென்றான். ஆனால், பிரம்பில் அலக்கை மாட்டி இழுக்கமுடியவில்லை; ஒவ்வொரு இழுப் பிற்கும் முன்னே தள்ளப் பட்டான். பிரம்பின் சின்னஞ் சிறிய முட்கள் கீறிய இடத்திலெல்லாம் எரிச்சல் மூண் டது. மரம் வெட்டுவதைவிட இதுவே சலிப்பளித்தது. ஆனாலும், அவன் பின்வாங்கவில்லை. நிதானமாகக் குனிந்து குனிந்து எட்டுப் பிரம்பை வெட்டி இழுத்துக் கொண்டு, ஒரு கிளையில் சாய்ந்தவாறு, கானகத்தை நோட்டம் விட்டான்.
அடர்த்தியான பிரப்பங்காட்டிற்குப் பின்னால், மரங்க ளற்ற பகுதியொன்று இருப்பது போலப்பட்டது. சூரி யன் உதயமாகாததாலும், தோட்டம் இருளில் ஆழ்ந்து கிடந்ததாலும், அவனால் சரியாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவன் கனவு காண வில்லை; உண்மையாகவே காண்பது. இந்த எண்ணம் தோன்றியதும் புதுத்தென்பும் பலமும் பெற்றான். வேட் டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு பிரப்பங்காட்டிற்குள் நுழைந்தான். வசதியாக நின்றுகொண்டு, வெட்டிய பிரம்பை இழுக்க வழியில்லை; சமதளமில்லை. ஒரு இழுப் பிற்கும் இன்னொரு இழுப்பிற்குமிடையே பரிதாபமான முறையில் அலைக்கழிக்கப் பட்டான். ஆத்திரம் நிறைந்த உணர்ச்சி மூண்டது. இரண்டு முறைகள் தவறி விழுந் ததையும் பொருட்படுத்தாமல், வெட்டிப் போட்ட நெட்டி லிங்க மரக்கிளைகளை எடுத்துவந்து, பாதுகாப்பாகப் போட்டுக் கொண்டான். நிற்கவும் சாய்ந்து கொள்ளவும் முடிந்தது. அவன் உதடுகளிலிருந்து புன்முறுவல் வெளிப் பட்டது.
ஒரே சீராய், பரபரப்பு ஏதுமின்றி, நிதானமாக அவன் சென்று கொண்டிருந்தான். வடக்குப் பக்கத்தில் ஏராளமாகப் பிரம்பு சூழ்ந்த பகுதியில் சுரங்கம் மாதிரி ஒரு வளைவு. எப்பொழுதோ விழுந்த இரண்டு பனைமரங் களுக்குமேல் பிரம்பு படர்ந்தபடியால், கீழே சுரங்கம் அமைந்துவிட்டது. பிரப்பங்காட்டில் இப்படி அமைவது அபூர்வம்; எப்போதோ ஒரு தடவை நிகழக்கூடியது. சகலமும் அவனுக்கு ஒத்துழைக்கின்றன.
உட்கார்ந்து, கொஞ்சம் கஷ்டப்பட்டுச் சென்றால் ஒரு வேளை தோட்டத்தின் மறுபகுதியை அடையலாம். ஆனால் அது நிச்சயமல்ல. சிறு அலக்கையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். கொஞ்சதூரம் வரை யில் வழி நன்றாக இருந்தது ; அப்புறம் போகப் போகப் பிரம்புக்கள் கூடின; வழி மறைந்தது. ஒரே இருள். பனைமரத்தின் மீதே பிரம்பு கொடியாய்ப் பின்னிக்கொண் டிருந்தது. மேலே பயணம் தொடர வழியில்லை.
சிதம்பரம் உட்கார்ந்தபடியே யோசித்தான். எவ் வளவு தூரம் வந்தோம் என்பது தெரியவில்லை. ஆனால், ரொம்ப தூரம் வரவில்லை என்று பட்டது.
வெகு நேர சிந்தனைக்குப் பிறகு, பிரம்பை அடியில் வெட்டி, அலக்காலும் கத்தியாலும் விலக்கிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்தான். சற்றைக்கெல் லாம் அவன் முயற்சி தடைப்பட்டது. ஆர்வத்தையும், உற்சாகத்தையும், பிரப்பங்காடு அழித்துவிட்டது. கையைத் தூக்கி வெட்ட முடியாத அளவிற்குப் பிரம்பு செழித்திருந்தது. பிரம்பு, அவன் முயற்சிக்கும் இலட்சிய வேகத்திற்கும் எதிரான அறைகூவல்.
சிதம்பரம் ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடியே திரும்பினான். நினைத்தது ஒன்றும் நடக்கவில்லை ; ஆசை பூர்த்தியுறவில்லை. திரும்பி இலுப்பை மரத்தடிக்கு வந்தான்.
கீழ்வானில் தோன்றிய கதிரொளி தோட்டத்திலும் லேசாகப் பரவியது. பறவைகளின் ‘கீச்கீச்’சென்ற ஒலியும், இறகுகளின் படபடப்பும் முன்னிலும் அதிக மாயின. கீழே விழுந்த அலக்கை எடுத்துப் பூவரசு மரத்தில் மாட்டிவிட்டு, தன்னுடைய காயத்தைப் பார்த் தான் சிதம்பரம். வெட்டு வாய் மூடியிருந்தது; இன்னும் நான்கு நாட்களில் சரியாகப் போய்விடலாம். துணியை அவிழ்த்து நன்றாகக் கட்டினான்.
“நமஸ்காரங்க ; வரச் சொன்னீங்களாமே?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் சிதம்பரம். பழனி யாண்டியின் தகப்பனாரை வரச் சொல்லியிருந்தான். அநேகமாக இப்போது வரலாமென்று ஆவலோடு மனத் திற்குள்ளேயே எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தான். இதற்கு முன், பழனியாண்டியின் தகப்பனாரை அவன் பார்த்ததில்லை ; நேற்று வீட்டிற்குப் போனபோதுகூட காண முடியவில்லை. பழனியாண்டி ரொம்ப வருத்தத் தோடு, ‘இப்பத்தாங்க, அப்பா செட்டியார் வூட்டுக்குப் போனாங்க’ என்றான். அந்த ஆறுமுகந்தான் இப்போது வந்திருக்கிறான். அந்தக் கண், அந்த முகம், அந்த ஜாடை- எல்லாம் மகன் போலவே இருக்கிறது.
“பழனி நேத்தியே புடுச்சு இஞ்சதான் வேலை செய்யறான்… ஆமாங்க… கூட இருக்கானே ஒரு பையன், அது ஆரு?”
“தங்கச்சி பயலுங்க; இஞ்சதான் இருக்குதுங்க.”
”ரொம்ப சிநேகிதமா இருக்கிறானுங்க.”
”ஊரிலே இப்படித்தாங்க சொல்லுறாங்க.”
“நெசந்தான்” என்று, அவன் ஆறுமுகம் பக்கம் நெருங்கி, எதுக்கு உங்கள வரச் சொன்னேன்னா, பசங்க நல்லா வேலை செய்யுறானுவோ நான் ஏதோ போட்டுத் தாரேன். இஞ்சியே இருந்துக்கட்டும்…… இதை காதுலே போட்டு வைக்கத்தான்.
“அது சரிங்க. ஆனா நாங்க பரம்பரையா, கல்லூட்டுக்காரச் செட்டியார் வூட்டுக்குப் பண்ணை ஆளுங்க.”
சிதம்பரம் தலையை உயர்த்திக் குத்திட்டு அவனை நோக்கி, “சரி. ஆனா,தோட்டத்திலே மாட்ட வுட்டுட்டு, சும்மா இருக்கற அப்ப, இஞ்ச செத்த வேலை பாக்கட்டுமே.”
“அது எப்படிங்க?”
“கூலி போட்டுத் தரேன்.”
வெற்றிலைக் காவி படிந்த, பெரிய விகாரமான பற்கள் தெரியச் சிரித்தான். “பசங்க, என்னா பெரிசா வேலை செய்யப் போறாங்க; நீங்கத் தனியா கூலி போட்டுத் தரப்போறீங்க?”
“அது ஒரு பேச்சா; வேலைன்னா அதுக்குக் கூலி உண்டு. நான் ரெண்டு பேருக்கும் சேத்து மாசத்துக்கு மூணு மரக்கா தரேன்”.
“உங்க இஷ்டங்க; நாட்டாண்மைக்காரவுங்களும் சொன்னாங்க. நீங்களும் இம்மாஞ் சொல்லுறீங்க; அப்புறம் பேச என்னங்க இருக்கு? ஆனா. எதுக்கும் செட்டியார் கிட்ட ஒரு வார்த்தை போட்டு வைங்க.”
“ஆரு …கனக சபை செட்டியார் கிட்டத்தானே?”
“ஆமாங்க.”
“அவுங்க கிட்ட நான் சொல்லிடறேன். வேணுமின்னா மாமாவையும் விட்டுச் சொல்லச் சொல்றேன்.”
“அம்மாந்தூரம் வேணாமுங்க.நீங்க ஒரு வார்த்தை சொன்னாலே போதுங்க. அவுங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. தெரியாம ஒண்ணும் பண்ணக் கூடாது பாருங்க ; அதுக்காகத்தான்.”
“சரிதான்.”
“அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேங்க.”
“வாங்க.”
ஆறுமுகம் இரண்டடி போனதும் சிதம்பரம் அவனை அழைத்து, “மரம் வெட்டக் கொஞ்சம் ஆளுங்க வேணும். ஆராச்சம் இருந்தா, கொஞ்சம் பாத்து அனுப்புங்க” என்று கேட்டுக் கொண்டான்.
“நம்பவூரிலே பாண்டுரெங்குதானுங்க மரம் வெட்டுற வுங்க. அடேங்கப்பா ! ஆனானப்பட்ட மரத்தை எல்லாம் நாலு நாளிலே வெட்டிச் சாச்சுடுவாங்க. ஆனா,பாருங்க. அவுங்க கெட்டகாலம் அவுங்க வெட்டின மரமே எமனா இருந்துச்சுங்க. அதுலே இருந்து நம்ப ஊரிலே மரம் வெட்டுறவங்களே அத்துப் போயிட்டாங்க. இப்பெல் லாம் வில்லியனூர் ஆளுங்கதானுங்க இஞ்சயெல்லாம் வந்து மரம் வெட்டுறதுங்க.”
“வில்லியனூரிலிருந்தா?”
“ஆமாங்க.அப்புசாமி, அவுங்க தம்பி ரெண்டு பேருங்க.இப்ப அவுங்கதானுங்க பெரிய ஆளுங்க. அவுங்க கூட ஏதோ அசலூருக்குப் போய் இருக்கிறதா கேள்வி. சாயரச்ச அந்தப் பக்கமா போறேங்க; அப்பப் பாத்து சொல்லறேங்க.”
“கட்டாயமா சொல்லுங்க.”
“சொல்றேங்க; அப்ப வரட்டுங்களா?”
”வாங்க.”
ஆறுமுகம் விடை பெற்றுக்கொண்டான்.
சிதம்பரம், தலையில் விழுந்த பூக்களைத் தள்ளிக் கொண்டு நிமிர்ந்தான். பெரிய கோவில் கலசம் உதயத்தின் ஒளியில் தகதகவென்று பிரகாசித்தது. அது பெரிய கலசம் ; கோவிலும் பெரியது. தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னர்கள் கட்டியது; நாயக்கர் கள் காலத்தில் கணிசமான செல்வாக்கும் பெற்றிருந்தது; மகத்துவம் பொருந்திய ஊர். சாயாவனம்,நெய் விளக்கு, மாங்குடி, வில்லியனூர், மல்லியக் கொல்லை, மேலகரம் இவற்றிற்கெல்லாம் மாயவரம் தாய் போல. மக்களின் வாழ்க்கையை நிர்மாணிப்பதில் அது முக்கியமானதொரு டத்தைப் பெறுகிறது. அவர்கள் வாழ்க்கையின் ஒரு இலக்கு மாயவரம்; மற்றொரு இலக்கு கும்பகோணம்; மூன்றாவது இலக்கு சீர்காழி.
மாயவரத்துக் கடை முழுக்கைப் பற்றியும், கும்ப கோணத்து மகாமகத்தைப் பற்றியும், அவன் அம்மா எப்போதும் பேசிக்கொண்டிருப்பாள். ஒவ்வொரு ஐப்பசி யிலும் அவள் நினைவு காவிரிக் கரையில் லயித்துவிடும். புரியாத கனவுகளும் சிந்தனைகளும் பின்னிக்கொண்டிருந்த காலம் அது அவள் உணர்ச்சிகள் புரியாவிட்டாலும், பக்கத்திலமர்ந்து, அவள் சொல்வதையெல்லாம கேட்டுக் கொண்டிருப்பான். அவன் கேட்பதில் அவளுக்குத் திருப்தி; சந்தோஷம். ஆனால், அந்தக் கதைகள் ஏதும் மனத்தில் தங்கவில்லை; ஒன்றை இன்னொன்று அடித்துக் கொண்டு போய்விட்டது.
எத்தனையோ ஆண்டுகள் சென்றுவிட்டன. ஐப்பசி மாதம் வந்துகொண்டிருக்கிறது. சொந்த மக்களிடையே வந்துவிட்டான். அவர்களின் ஆசாரங்களும் பழக்கங் களும படிகின்றன. ஆனால் மதத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் குழப்பமான சிந்தனைகளே அவனுக்கு மேலோங்கின.
அவன் கலவை ஆகிவிட்டான். இரண்டு மதங்கள் அவனை வெகுவாகப் பாதித்துவிட்டன. பிறப்பின் சீதன மாக சநாதனத்தைக் கொண்டு வந்திருப்பவன் அவன். இந்து தர்மத்தின் பெருமை, பாரம்பரியம், கருணை, கொடுமை, தீண்டாமை, நல்லது, கெட்டது – எல்லாம் ஒருவித காரணமுமின்றி அவன்மீது சுமத்தப்பட்டிருக் கின்றன. அவற்றை உதறித் தள்ளிக்கொண்டு போவ தென்பது முடியாத காரியம்; அப்படிப் போய்க்கூடப் பார்த்துவிட்டான். பாதிக்குமேலே போக முடியவில்லை. கால்கள் துஞ்சத் தன்னந்தனியே திரும்பியாகிவிட்டது. ஆனால், கதைபோல பல ஆச்சரியமான சம்பவங்கள் அவன் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன.
பால்யகால நினைவுகள் வரும்போதெல்லாம் சிதம்பரம் மௌனமாகத் தவிப்பான். தேயிலைத் தோட்டத்தில் அவனும் அம்மாவும் பட்ட துயரமெல்லாம் மேலோங்கி உறுத்தும். இன்றைக்கு அவள் இருந்தால் – எவ்வளவோ சௌகரியமும் சுகமும் அனுபவிப்பாள். ஆனால், சட்டென்று இந்த எண்ணம் மாறும். அவள் இருந்தால் தனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்குமா என்ற கேள்வி மேலெழும்.
தாய் அம்மை வார்த்துக் குளிர்ந்தபோது, வெறித்துச் சவத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரத்தைக் கறுப்பு உபதேசியார் அழைத்துக் கொண்டு போனார். எவ்வித கலக்கமுமின்றி அவர்கூடச் சென்றான். புதிய சூழ்நிலையைப் பிடித்துக்கொள்ளவே அவனுக்கு நான் சூ நாட்கள் பிடித்தன. தன் வாழ்க்கையையும், கர்த்தா வைப் பற்றியும் உபதேசம் செய்த பிறகு, சிதம்பரத்தை ‘சர்ச்சு’க்கு அழைத்துப் போனார் உபதேசியார். அம்மா கோதிவிடும் நீண்ட முடி சிரைக்கப்பட்டது. ஒரு வெள் ளைப் பாதிரியார், ஒரு காக்கிக் கால் சட்டையும் வெள்ளை மேல் சட்டையும் கொடுத்தார். அதை எப்படிப் போட்டுக் கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் விட்டுக்கொண்டு தவித்த போது, பாதிரியாரே உதவி செய்தார். அ வன் ஞான ஸ்னானம் பெற்றான். பேர் டேவிட் சிதம்பரம் என்று மாறியது. காதில் போட்டுக் கொண்டிருந்த சிவப்புக்கல் கடுக்கனைக் கொஞ்சமும் வருத்தமின்றி கழற்றிக் கொடுத்தான். சர்ச்சுப் பள்ளிக்கூடம் அவனுக்கு ரொம்பப் பிடித்திருந் தது. பள்ளிக்கூடத்திற்குப் போன பிறகு, அம்மா நினைவு வருவது அநேகமாக நின்று போய்விட்டது.
எட்டு வருடத்திற்குப் பிறகு, கறுப்பு உபதேசியார் பள்ளிக் கூடத்திலிருந்து அவனை அழைத்துக்கொண்டு போய் வேலையில் சேர்த்தார். மூன்று மாதத்திற்குமேல் வேலை பார்க்க முடியவில்லை. பத்து ரூபாயை அந்த வீட்டிலிருந்து திருடிக்கொண்டு கொழும்புக்குப் போனான். ஒரு வருடம்போல என்னென்னவோ வேலைகள் செய்தான். ஒரு பெண்ணையும் காதலித்தான். அந்தக் காதல்கூட சர்ச்சில்தான் ஏற்பட்டது. அவனைவிட அவள் மூன்று வயது பெரியவள்; மணமாகி ஒரு குழந்தைக்கும் தாயாகி இருந்தாள். ‘நீ தான் என் உயிர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவள், ஒன்பதாம் மாதம் அவனைத் துரத்தி யடித்தாள். அவள் ஏளனம் அவனைப் பைத்தியமாக்கியது. நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் அவளைத் தொடர்ந்து போனான். அவள் திரும்பிப் பார்த்துவிட்டு, வேகமாகச் சென்றாள். அவன் பாதை திரும்பியது. சர்ச்சுப் பக்கம் வருவதை விட்டுவிட்டான் ; வேலை தேடினான்.
சிவ சண்முகத்தின் பாத்திரக் கடையில் ஒரு வேலை கிடைத்தது. அவன் வேலையில் சேர்ந்ததும் சிவசண்முகம் “என்ன பேரு?” என்றார். “டேவிட் சிதம்பரம்” என்றான்.
“என்ன, டேவிட்! வெறும் சிதம்பரம் போதும் – இன்னமெ உன் பேரு சிதம்பரந்தான்” என்றார்.
அவன் மௌனமாகத் தலையசைத்தான்.
“அந்தால மாடத்திலே திருநீறு இருக்கு; அள்ளி நெத்தியிலே பூசிக்கோ.”
சிதம்பரம், பிறகு தன் முதலாளியோடு பூசத்திற்குக் கதிர்காமம் சென்று வந்தான். ஆனால், அங்கிருந்து புறப் பட்டபோது அவனுக்குக் கடவுள் நம்பிக்கையே ஒரு பிரச்சனை ஆகிவிட்டது.
பின்னால் இதையெல்லாம் நி னைத்து அவன் ஒரு பொழுதும் வருந்தவில்லை ; உற்சாகமும் அடையவில்லை. எல்லாம் தனக்குச் சம்பந்தம் இல்லாதது மாதிரி நடந்து கொண்டான்.
பிறந்த ஊருக்கு வந்து ஒன்றரை மாதத்திற்கு மேலா கியும், தன்னைக் கோவிலுக்குப் போகவிடாமல் தடுக்கும் சக்தி எதுவென்று அவன் ஒவ்வொரு சமயம் எண்ணிய துண்டு. ஆனால், அது தெரியவில்லை. பறச்சேரி இலுப்பை மரத்தடி பத்ரகாளி, தேவர்களின் பெரிய கறுப்பு, உயர் ஜாதி இந்துக்களின் சனீஸ்வரன், பிராமணர்களின் சிவன், விஷ்ணு அவசியமென்று படும்போதெல்லாம் மற்ற சாதிக்காரர்கள் பாகுபாடின்றி போகும் இக்கோவில்களுக் கெல்லாம் தன்னைப் போகவிடாமல் தடுப்பது எது? டவுள் பற்றியும், அவரது எல்லையற்ற சக்தி பற்றியும் எண்ணிக் குழம்பினான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, தேவரின் மருமகள் குஞ்சம்மா மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்குப் போட்டபோது சிதம்பரத்தையும் அழைத்தாள். தேவர் படித்துப் படித்து வரச்சொல்லிவிட்டு முன்னே போனார். சற்று நேரத்திற்கு முன்பு வரையில், போகவேண்டும் என்று இருந்தான்; அப்புறம் ஒரு நினைப்பு.
“பட்டமங்கலத் தெரு வரைக்கும் கொஞ்சம் சுருக்கா போயிட்டு வரேங்க்கா… என்று சொல்லிவிட்டுப் படி இறங்கி நடந்தான் சிதம்பரம். குஞ்சம்மா வாசலுக்கு வருவதற்குள் அவன் தெரு முனையைத் தாண்டிவிட்டான்.
அவன்தான், கிராப்போடு வந்து நிற்கும் முதல் மனிதன். பாழ்நெற்றி, மேல் சட்டையோடு ஊர்ஊராகச் சுற்றி வருகிறான். ஆரம்பத்தில் பலநாட்கள் வரையிலும் எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்; சற்று வில கிப்போனார்கள். இப்போதோ அவன் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்துவிட்டான்!
ஒரு பூவரசம் பூ தலையில் விழுந்தது. அதைத் தள்ளி விட்டுக்கொண்டு, அரிவாளையும் அலக்கையும் எடுத்துக் கருக்கு இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான். இரண் டும் மழுங்கிப் போய்விட்டன. கோடரி பரவாயில்லை; இன்னும் நான்கு நாட்களுக்கு எப்படி வேலை செய்தாலும் கூர் மழுங்காது. இப்பொழுது அத்தியாவசியமாக அரி வாளுக்கும் கத்திக்கும் சாணை பிடிக்கவேண்டும்; இல்லா விட்டால் உலையில் வைத்துத் துவைய வேண்டும். கருமா னைப் பார்க்கும் நோக்கோடு ஊர்நோக்கித் திரும்பினான்.
காவிரிக் கரையில் சுப்புரத்ன ஐயரும், பதஞ்சலி சாஸ் திரியும் நின்று கொண்டிருந்தார்கள். வாழைத் தோப்பு சுப்புரத்ன ஐயருக்குப் பத்துப் பன்னிரண்டு நாட்களா கவே சிதம்பரத்தைப் பார்க்க ஓர் ஆசை. அவரும் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டார். அவன் கண்ணில் படவேயில்லை. ஆனால், அவனைப் பற்றிய கதைகள் கூடிக்கொண்டே வந்தன.
பதஞ்சலி சாஸ்திரி அவனை இரண்டு முறைகள் பார்த் திருக்கிறார்; ஆனால்,பேசவில்லை. சந்தர்ப்பம் வராமலே போய்விட்டது.
இவர்களுக்கு நேர்விரோதமானவர் மேலகரம் பார்த்த சாரதி ஐயங்கார். சிதம்பரத்தை, ஊருக்கு வந்த எட்டாம் நாளே சிநேகிதம் பிடித்துக்கொண்டார்; அந்த நட்பு அவருக்குப் பிடித்தது. ஏதாவது பேச்சு வரும்போதெல் லாம், செதம்பரத்தைப் பார்த்தீரா, ஓய்?’ என்று கேட்டுவிட்டு, பதஞ்சலி சாஸ்திரி தொடையில் அடித்துக் குலுங்கக்குலுங்க சிரிப்பார். பெரிய குரல் – நான்கு வீடு தள்ளிக் கேட்கும்.
“அவனென்ன துரையா, பார்க்கறதுக்கு?’
“நீர் பாரும்; ரெண்டு வார்த்தை பேசிட்டு அப்புறஞ் சொல்லும்.”
“அவனுக்கு ரெண்டு கொம்பு மொளச்சிருக்காங்கணும்?”
“ஓய்,உமக்கு ரொம்ப கொழுப்புங்கணும்!” – கையிலிருக்கும் சீட்டை வீசியெறிவார். கைக்குச் சீட்டு வராத போதெல்லாம் அவர் செய்யும் காரியம் இதுதான்! அரை யிலிருந்து நழுவும் வேட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு எல்லோரும் எழுவார்கள்.
“சிதம்பரமா?” என்று கேட்டார் சுப்புரத்னம்.
அவன் நமஸ்காரம் பண்ணினான்.
“நீங்கதான் வாழைத் தோப்பு ஐயருன்னு நினைக் கிறேன். மாமா உங்களைப் பத்தி ரொம்ப சொல்லியிருக் காங்க.நானும் ரெண்டுவாட்டி உங்களைப் பாக்க வந்தேன். பாக்க முடியலே…”
“அதுக்கென்ன, பரவாயில்லே. சிவனாண்டி நமக்கு ரொம்ப வேண்டியவன். அவன்தான் சொன்னான், நம்ப தங்கச்சி பையன் வந்திருக்கான்னு. எங்கேன்னேன்? இதோ இதோன்னான். ஆனா ஆளுதான் கண்லே படலே… இவாளத் தெரியுமோ – பதஞ்சலி சாஸ்திரி…”
”கொஞ்சம் தெரியும்… பாத்திருக்கேன்…”
“ஊரெல்லாம் சுத்திட்டு வந்திருக்கே!”
“அப்படிச் சொல்றதுக்கு இல்லே.”
“தோட்டத்தை, ரெண்டாம் பேருக்குத் தெரியாம வாங்கிட்டே.”
“என்னமோ, சட்டென்னு சுருக்கா முடிஞ்சு போச்சுங்க.”
“என்ன பண்ணப்போறே தோட்டத்திலே?” பதஞ்சலி சாஸ்திரி கட்டைக் குரலில் கேட்டார்.
சிதம்பரம் கரும்பாலை தொடங்கப் போகும் செய்தி ஊர் முழுவதும் பரவி இருந்தது. ஆனால்,இரண்டொரு வரைத் தவிர மற்றவர்கள் நம்பவில்லை.ஏதோ ரகசிய மான காரியங்கள் பண்ணுவதற்காக இப்படிச் சொல்லிக் கொண்டு இருப்பதாக வதந்தி உலவிக் கொண்டிருந்தது. சுரங்கம் வெட்டித் தங்கம் எடுக்கப் போவதாகவும் ஒரு செய்தி! காட்டை அழித்து ரயில்வேக்காரர்களிடம் தரப்போவதாக இன்னொரு செய்தி.இப்படியெல்லாம் கதை கட்டுகிறவர்கள் யார் என்று தெரியவில்லை. அவன் கலக்கமுறுவான் ; ஆனால், தேவரோ கலகலவென்று சிரிப் பார். அது மாதிரி அவனால் சிரிக்க முடியாது; முயற்சி பண்ணினாலும் முடியாது.ஆனால் இப்போது அவனுக்குப் பெரிதாகச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு, “கரும்பாலை வைக்கப் போறேன்” என்றான்.
“ஊர்லே அதாஞ் சொல்லிக்கறா.” பதஞ்சலி சாஸ்திரி சுப்புரத்னம் ஐயர் பக்கம் திரும்பிக் கண்ணைச் சிமிட்டினார்.
“கரும்பு இஞ்ச வெளையுமா செதம்பரம்?”
“விளையுமுன்னு தோணுதுங்க.”
‘பகபக’வென்று, தண்ணீர் கொப்பளிப்பது மாதிரி ஐயர் சிரித்தார்.
“இதோ இருக்காரே நம்ப சாஸ்திரி, இவர் எட்டுவரு ஷத்துக்கு முந்திக் கரும்பு போட்டார்- ரெண்டு வேலி யிலே. ஒரு முழத்துக்கு மேலே வளர்லே அப்படியே நரங்கிப்போயிடுத்து.”
“நான்தான் இஞ்ச கரும்பு போட்ட முதல் பேர்வழி; இதுவரைக்கும் கடைசியும் நாந்தான். என்னமோ தெரியலே, கரும்புக்கும் இந்த மண்ணுக்கும் அப்படியொரு ராசி.”
சிதம்பரம் மெளனமாக அவர்கள் சொன்னதையெல்லாம் கவனத்துடன் கேட்டுக்கொண்டான்.
“நீ, வாழை போடு ; ஜோராக் கிளம்பும்.”
“ரஸ்தாளி, மொந்தன் – இந்த மண்ணுக்கு எப்படிக் கிளம்பும் தெரியுமா?”
“அப்படிங்களா?”
“என் பேரே வாழைக் கொல்லை ஐயருன்னுதான்…”.
அவன் மெல்லச் சிரித்தான்.
“நீ ஏன் வாழை போடக்கூடாது?”
“போடக்கூடாதுன்னு என்னாங்க. அதைப்பத்தி இன்னும் யோசிக்கலீங்க.”
“நன்னா ஒருவாட்டிக்கு ரெண்டுவாட்டியா யோசி.நாலு ஊரு சுத்தினவன்னு கேள்வி. எதோ அங்கயிங்க குருவி மாதிரி கொத்திப் பொறுக்கி, நாலுகாசு சம்பாதிச்சுண்டு வந்துருக்கே. நாளைக்கு இஞ்ச ஒண்ணு ஆச்சுன்னா என்ன சொல்லுவே? இத்தன பேரு இருந்தாங்களே, ஒரு வார்த்தை சொன்னாங்களாம்பே… அப்ப அப்படித் தான் சொல்லத் தோணும்…தப்புன்னு சொல்ல முடி யாது. மனுஷா மனசு நாலு விதமா யோசிக்கும்; நாக்கு நூறு விதமா பேசிண்டு இருக்கும்..”
“ரொம்ப சந்தோஷங்க. இப்ப சட்டுப் பொட்டுன்னு ஒண்ணும் இல்லீங்க. எல்லாம் மெல்லதான். மொதல்ல, மரம் மட்டைகளை அழிக்கணும். அதான் மொதல் வேல. அதுக்கு அப்புறந்தான் பாக்கி வேலங்க.”
“அந்தக் காட்டையா? முப்பது தலெமொறக் காடாச்சே அது! அதுக்குள்ள போனவன் உசுரோட திரும்பி வந்ததில்லே. எதுக்கு நீ அதைப் போய் வாங்கினே? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கப் படாதோ? சாலையோரத்தில் இருபது வேலி பொட்டத் திடலா கொடுத்திருப்பேனே…”
“தெரியாம போச்சுங்க.”
இருவரும் ஓரடி எடுத்து முன்னே வைத்தார்கள்.
சிதம்பரத்திற்குத் தன்னுடைய காரியம் முடிவடைந்து விட்டது என்று தெரிந்தது.அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு நடையை எட்டிப் போட்டான். அவன் மனத்தில் இரண்டு விதமான எண்ணங்கள் தோன்றின; முதல் காரியமாக கனகசபாபதி செட்டியாரைப் போய்ப் பார்க்க வேண்டும்; அப்புறம் அரிவாள், மண்வெட்டி அலக்கு, தொரட்டி, கோடரி எல்லாம் சேகரிக்க வேண்டும். கார்காலம் முடிவடைந்து, புதிதாக ஆட்கள் வரும் வரையில் காரியம் ஒன்றும் வேகமாக நடக்காது. அதற்காக அவன் வருந்தவில்லை. பிறரை எதிர்பார்ப்பதைவிடத் தானே கடுமையாக உழைக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டான்.
– தொடரும்…
– சாயாவனம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1969, வாசகர் வட்டம், சென்னை.
![]() |
சா.கந்தசாமி (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை…மேலும் படிக்க... |
