பனிப்படலம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 242 
 
 

சென்னைக் கடற்கரைவிளிம்பு வெள்ளியைக் காய்ச்சி ஊற்றினாற்போல , அந்த சூரிய வெளிச்சத்தில் பளபளத்தது. அளவோடு வந்த கடற்காற்றின் சப்ளையில் ஜனங்கள் உஸ் உஸ் என்று பெருமூச்சு விட்டபடி, வெய்யிலை அநுபவித்துக் கொண்டிருந்தனர்.

கடற்கரையை ஒட்டி இருந்த ஹவுஸிங்க் போர்ட் ஃப்ளாட்டுகள் உப்புக் காற்றில் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தன.

Z block மூன்றாம் மாடி ஹாலில் உட்கார்ந்து கையில் ‘ஆப்பிள் ஃபோனை’ வைத்துக் கொண்டு, அன்றைய நிகழ்ச்சி நிரலை மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ரங்கபாஷ்யத்திற்கு வயது ஐம்பதைத் தாண்டினாலும் வசீகரம் குறையவில்லை. ‘என் அம்மாவின் அழகு எனக்கு வந்து விட்டது!’ என்ற நாராயணீயம் பெருமையை வெளியில் சொல்ல முடியாமல் ஒரு சங்கடம் அவருக்கு! ஏன்னா, அம்மா பேர் நாராயணி.

எல்லைக் கட்டுப் பாடுகளை மீற ஆபீசிலும் வீட்டிலும் அவர் பழகவே இல்லை! கல்பாத்தி டிரெயினிங்க்தான் காரணமோ?

கடிதங்கள் குறைவாகிக் கொண்டிருந்த காலத்தில், அம்மா டெலிகிராம், வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக், இ-மெயில் போன்றவற்றில் நல்ல தேர்ச்சி!

அம்மாவிடமிருந்து வந்திருந்த ஒரு வாட்ஸப் செய்தி, கொஞ்சம் பரபரப்பை வரவழைத்தது. “நான் சென்னைக்கு சனிக்கிழமை காலையில் வருகிறேன். ரயிலடியில் வந்து அழைத்துப் போகவும்”

பொதுவாகவே நாராயணி கிராமத்து வீட்டை விட்டு நகர மிகவும் தயங்கினாள். அவளுக்கு கல்பாத்தியின் மனுஷாள், அவர்களுடைய நல்ல சுபாவம், அங்கே கிடைக்கும் உப்பிலிட்டது(ஊறுகாய்), காயா வறுத்தது(சிப்ஸ்), பப்படம், கொண்டாட்டம் (வத்தல், வடாம்), நியாய தர்மம் – இவெல்லாம் வேறெங்கும் கிடைக்காது என்று உறுதியாக அந்த 75 வயதிலும் நம்பினாள்.

ஒரே மகன் ரங்கபாஷ்யம் சென்னையில் சென்ட்ரல் கவர்ன்மென்ட் பணியில் இருந்ததால் அம்மாவுடன் நிரந்தரமாக வந்து இருக்க முடியாது! ஆசை மகள் திவ்யாவும், மெல்பர்னில் செட்டில் ஆகி இருந்ததால், நாராயணி தனியாகவே கல்பாத்தியில் தாமஸம்! ‘மெட்ராஸும் ரொம்ப அகலயாணு!’ என்ற காரணத்தினால்.

அவ்வப்போது, மெல்போர்ன் போய் வரவும் செய்தாள். மாப்பிள்ளை தங்கமானவர். கேப் ஜெமினி கம்பெனியில் பெரிய வேலையில் இருந்தார். “சென்னாகி மாதனாடுவார்” மாமியார் சேவுகம் அதிகம்!

நாராயணிக்கும் மாப்பிள்ளை புராணம் ரொம்பப் பெருமையாக இருந்தது! “கன்னடக்காரர்கள் ரொம்ப ஸாஃப்ட்! என் மாப்பிள்ளை தரோ ஜென்டில்மேன்!” என்று புகழ்வாள்.

ஓகே! இப்ப கதைக்குத் தாவுவோம்!

வாட்ஸ் ஆப் பார்த்து பரபரப்பான ரங்கபாஷ்யம் உடனே சகதர்மிணி அம்புஜத்திடம் விஷயத்தைக் குறிப்பிட்டார். பரபரப்பு இடம் மாறியது!

“ஏன்னா! போனதடவை அம்மா கொண்டு வந்த பூகம்பமே இன்னும் இங்க ஓயல! ஏதாவது சொல்லி கேன்சல் பண்ணிடுங்களேன்!”

அம்புஜம் சொன்ன பூகம்பத் தெளிவுகளை கௌதம் (ரங்க பாஷ்யத்தின் ஒரே குழந்தை-வயசு 17) மீண்டும் நினைவில் நிறுத்திக் காண்பிக்க ஆரம்பித்தான்.ரயில்வே போர்ட்டர் காசு மேட்டர் தொடங்கி, மீட்டருக்கு மேல டாக்ஸி சார்ஜ் வரை, பாட்டி வரிந்து கட்டிப் போட்ட PS-1, PS-2 மாடல் சண்டைகளை அவன் ரீ வைண்டில் பார்க்கத் தொடங்கினான்.

தன் வீட்டுப் பால்காரர், தபால்காரர், பேப்பர்காரர், வீட்டு வேலை செய்யும் ரஞ்சிதா, செக்யூரிடி ஷாகுல்பாய், பக்கத்து ஃப்ளாட் பத்மினி, கீழ் ஃப்ளாட் ஷெணாய், பக்கத்து Y பிளாக் அம்மாசி, அற்புதராஜ்… என்று நாராயணி அம்மாவின் போர்முனைகள் பல்கிப் பெருக, அம்புஜம் வெறி பிடித்துப் போனாள். சவுண்டு விட்டாள்.

ஒரு வழியாக, போர் முறைகள் மாறி, போர் ஓய்வு ஏற்பட்டபின், போர்முனை, வீட்டின் உள்ளே திரும்பியது; உக்ரைன் போர் மாதிரி வருஷக் கணக்கில் கனன்று கொண்டிருக்கும் இந்த மாமியார் மருமகள் போர், இன்னும் ட்ரம்ப்பை எதிர் பார்த்துக் கொண்டு காத்திருந்த விந்தை! “எங்கேந்து புடிச்சடா இவள? இந்தக் கத்து கத்தறா! அன்னிக்கே சொன்னேன் இந்த சம்பந்தம் சரிப் படாதுன்னு. மாப்பிள்ளை கூட ஒத்துக்கல்ல.

போர் நிறுத்தம் மட்டும் ஏற்படவேயில்லை! ரங்கபாஷ்யம் ரெஃப்ரீ மாதிரி மாட்டிக் கொள்ள, கௌதம் அடிக்கடி, சேம் சைட் கோல் போட்டு விளையாடி, அப்பாவைத் துன்புறுத்தினான். அம்புஜம் என்ன கொக்கா? தன் பங்கிற்கு நவீன போர் முறைகளைப் பின்பற்றி திறமையாக விளையாடினாள். நாராயணி சற்றும் மனம் தளராத விக்கிரமனின் பாணியில், வேதாளனை மீண்டும் தோளில் சுமந்து ஊக்கத்துடன் போரிட்டாள். “இங்கல்லாம் மனுஷா ரொம்பப்

பொல்லாதவாளா இருக்கா. காட்டுக் கத்தல் கத்தறா! இவ என்னடான்னா ஏஷியா நெட்- டீவி சீரியல் பாக்க விட மாட்டேங்கறா? எங்க கல்பாத்தில ரொம்ப டீசன்ட் எல்லாரும்! இங்க எல்லாரும் ஏமாத்தறா! அநியாயமா நடக்கறா. தூ! நேக்கு பிடிக்கல்ல”

திடீரென்று ஒரு நாள், “டேய்! எனக்கு நாளைக்கு டிக்கேட் போட்டுடு! நான் கல்பாத்தி போணம். நம்ப கிரிஜாவின் பேரனுக்கு சோறூண்-குருவாயூரில் வச்சிருக்கா! கண்டிப்பா வரணம்னு பிடிவாதம் பிடிக்கறா. திவ்யாவும் வரா.

அம்புஜம் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் , “ ஏன்னா! நார்மல் இல்லைன்னா பிரிமியம் தட்கால் இருக்குமே! அம்மா சவுகரியமா செகண்ட் ஏசி யில போயிடலாமே? திவ்யாவும் ஆஸ்திரேலியாவிலிருந்து கல்பாத்திக்கு சீராட வராளாமே? புக்கிங்க் பண்ணிடுங்கோ!” என்று டிரான்ஸ்பர் ஆர்டரை கன்ஃபர்ம் செய்து விட்டாள்.

இதெல்லாம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது.

மீண்டும் நாராயணி!

எல்லைப் பிரச்சினை பற்றிப் பேச வந்த வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மாதிரி நாராயணிக்கும், அம்புஜத்துக்கும் இடையில் சுமுகப் பேச்சு வார்த்தை நடத்த ரங்க பாஷ்யம் உழைத்துக் கொண்டிருந்தார். கௌதம் அவ்வப்போது படம் எடுத்து, அம்மாவின் சொந்தம் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தான்.

பேப்பரில் போர் நிறுத்தம் வந்தாலும், நிஜத்தில் எல்லைச் சண்டை நடப்பது போலவே, அம்புஜம் – நாராயணி போர் களை கட்டியது! கொஞ்சம் கொஞ்சமாக மற்ற எல்லைகளிலும் சமகாலத்தில் போர் தொடங்கியது விசேஷம்!

போனமுறை விட்டுப் போன போர்முனைகள் இந்த முறை சேர்க்கப் பட்டன. இந்த தடவை படைத் திறமை அதிகரித்திருந்தது- “என் மாப்பிள்ளை நிறைய இது பத்தி சொல்லி எனக்குப் புரிய வச்சார். நான் யாரையும் சும்மா விட மாட்டேன்.” என்று கொக்கரித்தாள் நாராயணி அம்மாள்.

உச்ச கட்டத்தில் வழக்கம்போல திடீர் கல்பாத்தி பயணம் அறிவிக்கப் பட்டது. மீண்டும் ப்ரிமியம் தட்கால் டிக்கட்! இந்த முறை 3 tier A/C sleeper தான்.

நாராயணி கிளம்பிப் போனாள்.

U-பிளாக்கில் அய்யங்கார் மாமி ராதிகா, அம்புஜத்தை மஞ்சள் குங்குமம் வாங்கிப் போக அழைத்திருந்தாள்.

ராதிகாவின் மாமியார் கும்பகோணத்திலிருந்து வந்திருந்தாளாம். மாமியாரை அத்தனை சீராட்டினாள் ராதிகா. அம்புஜத்திற்கு ஆச்சரியம். எப்படி இவ்வளவு ஒற்றுமை?

“மாமியார் இன்னிக்குத்தான் வந்தா! தனியா அங்கேதான் இருந்தா-மாமனார் போய் ஒரு வருஷம் ஆச்சு! இனிமே இங்கேதான் இருப்பா. பாவம்! ஒரே பையன்-வெங்கடராமன். பையனோட இருந்தால் அவளுக்கு ஒரு சந்தோஷம். ஆறுதல். ஒரே குழந்தைன்னா இந்தக் காலத்துல அவாள அண்டித் தான் இருக்க வேண்டியிருக்கு”

“உனக்கும் மாமிக்கும் சரிப்படுமா ராது?” கிசுகிசுவாகக் கேட்டாள் அம்புஜம்.

“என்ன அப்படி கேட்டுட்டே? அவா காலம் முடியப் போறது-நாம இன்னும் அதிக நாள் இருக்கப் போறவான்னு நம்பறோம். எது எப்படி இருந்தாலும் ரெண்டு பேரும் இருக்கும்போது சந்தோஷமா இருக்கத் தான் முயற்சி பண்ணனும். அவா இருக்கற கொஞ்ச காலத்திற்கு அவா சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே! அவாளோட முதல் சந்தோஷம், வயசான தன் குழந்தையின் அருகாமை! அடுத்த சந்தோஷம் பேரன் பேத்திகள்! மூன்றாவதுதான் மாட்டுப் பெண்! நம்ம சந்தோஷம் என்ன?- கணவர் சந்தோஷம்தான்-வேறென்ன இருக்கு நமக்கு?”

“அதுனால?” மேலே கேள்வி எழவில்லை எனக்கு.

“அம்புஜம். உனக்கும் ஒரே பையன். நாளைக்கு நீ கடைசி காலத்தில அவனோட இருந்தா உனக்கும் பரம சந்தோஷம். அவன் கட்டிக்கப் போற பொண்டாட்டி உனக்கு ஓரளவு அட்ஜஸ்ட் ஆகவேண்டியதுதான். முழுசா அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கவே இருக்காது. லைஃப்ல கோ-எக்ஸிஸ்டென்ஸ் அப்படீன்னு ஒண்ணு உண்டு! அதாவது வேற்றுமையிலும் ஒற்றுமை!”

எங்கேயோ ஏதோ புரிந்த மாதிரி அம்புஜத்திற்குத் தோன்றியது- ‘மாற்றி யோசி!-இந்தாம்மே! நடிய மாத்து!’ போர் மேகங்கள் திடீரென்று இடம் பெயர்ந்து போன மாதிரியும் தோன்றியது.

அவளுக்கு ஞாபகம் வந்தது: அவளுடைய அம்மா அப்பா அவளுடைய தம்பி வீட்டில் தான் நிரந்தரமாக இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. எதிர்மறையான ஃபீட்பேக் கிடையாது-இதுவரையில்!

கிடுகிடுவென்று வீட்டிற்குள் நுழைந்தாள். ரங்க பாஷ்யத்தை மொபைலில் கூப்பிட்டாள். “ஏன்னா! அம்மா நம்மளோடவே இருந்தா நன்னா இருக்கும்தானே! பாவம்! தனியா கல்பாத்தியில ஏன் கஷ்டப் படணும்?” தன் குரலின் ஆழத்தை ஆதங்கத்தை, தானே நம்ப முடியவில்லை அம்புஜத்துக்கு.

ரங்க பாஷ்யம் அலைகளின் நடுவில் சிக்கிக் கொண்ட மாதிரி ஆர்ப்பரிப்பை உணர்ந்தார். “என்ன மாயம்! எப்படி?”

‘யோசிப்போம் அம்புஜா” என்றார்.

“என்ன யோசனை? நீங்க கூப்பிடறீங்களா இல்ல, நானே கூப்பிடட்டுமா?”

பனிப் படலம் நிரந்தரமாக விலகி விட்டது என்று தெரிந்தது. ஒப்பந்தமில்லாப் போர் நிறுத்தம்- கண்ணில் பட்டது!

– இக்கதை  நான் 1981 ஆம் ஆண்டில் எழுதியது. பிரசுரிக்கவில்லை. இப்போது மாற்றங்கள் பல செய்து அனுப்பியுள்ளேன். 

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *