கறுப்பும் வெள்ளையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 269 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெல்லிய இளமாலைப் பொழுதின் தென்றல் கழுத்தோரமாக கிச்சுகிச்சு மூட்டிற்று. வாடிக்கையாளர்கள் வரும் நேரம். எல்லாவற்றிற்கும் மேலாக சந்தடியின்றி அந்தப் பொலிஸ்காரன் வரும் நேரமும்கூட. சாரதா மெல்ல எழுந்துகொண்டாள். கையில் வைத்திருந்த சிறிய கையகலக் கண்ணாடியில் முகத்தை மீண்டும் ஒரு தரம் பார்த்துக் கொள்கிறாள். அந்தக் கண்ணாடியே நிரம்பி வழிவதுபோன்று தெரிந்த வட்ட, சிவந்த முகத்தில் செவேரென்ற குங்குமப் பொட்டு பிரகாசமாக ஒளிவீசிற்று. கண்ணாடியை சற்றே வளைக்க, காதோரங்களில் சுருளாக விழுந்திருந்த கேசம் அழகு காட்டிற்று. 

அவள் எத்தனை தடவையாக இந்தக் கண்ணாடியைப் பார்த்துக்கொள்கிறாள் என்று தெரியாது. எத்தனையோ தடவைகள்! அவளைப் பொறுத்தவரை அவளது பொழுதுபோக்கே இதுதான். தனது அன்றாட வேலைகளை முடித்துக்கொண்டுவிட்டால், வீட்டின் முன்புற ஹோலின் முன்வாசல் கதவோரமாக வந்து அமர்ந்து விடுவாள்.பின்னர் என்ன, கண்ணாடி அவள் கையில் ‘சீஸோ’ விளையாடும். 

சாரதா இந்த ஊரில் பிரபலமான ஒரு சாராய வியாபாரி. இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த இவளது அம்மா பலே குடிகாரி. குடிக்கச் செல்லும்போது சாரதாவையும் எப்போதும் தன்னோடு இட்டுச் செல்வதுண்டு. நாளடைவில் சாராய சமாசாரங்கள் அத்துபடியாகிவிட, சாரதா பிரபல “கசிப்பு” வியாபாரியாக மாறிவிட்டாள். எனினும், அவள் ஒருபோதும் சாராயக் கிளாஸொன்றை உதட்டருகே கொண்டு சென்றதுகூட இல்லை. ஆனால், அவளைப் பார்ப்பவர்கள் மதர்ப்பான அந்தத் தேகக்கட்டின் பின்னால் ஒளிந்திருக்கும் அழகின் ரகசியம் அவள் குடிக்கின்ற சாராயமோ என்று ஐயுறுவார்கள். அந்தளவுக்கு செக்கச் சிவந்து ஜெகஜோதியாக அவளது முகமும், உடம்பும் சுடர்விடும். 

அவளது தொழில் முதலிய யாவற்றையும் தெரிந்துகொண்டே வேலுச்சாமி அவளைக் கரம் பிடித்தான். அவளைத் திருத்தி நல்ல குடும்பப் பெண்ணாக ஆக்கிவிடலாம் என்ற நப்பாசையின் காரணத்தாலோ என்னவோ, துணிந்து நல்ல குடும்பத்தைச் சேர்ந்த அவன் பெற்றோரை எதிர்த்து வந்து அவளை மணமுடித்துக்கொண்டான். ஆனால், ஐந்து வருடங்கள் முயன்றும் அவனால் எதுவும் செய்ய முடியாது போயிற்று. 

திருமணத்தை அடுத்து ஒரு வருடத்துக்குள் பிறந்த ஆண்குழந்தை ‘குப்பை’. அதுதான் அவனது செல்வ மகனின் பெயர். அவனுக்கு இப்போது பத்து வயது நெருங்குகிறது. ஆண்டவன் தந்த அருளால்தான் தாம் எதிர்பாராத விதமாக ஒரு ஆண்மகன் தலைச்சனாகக் கிடைத்தது என்று மனங்கொள்ளாத பூரிப்பில் லயித்திருந்த சாரதா– வேலுச்சாமி தம்பதிகள் பிறர் கண்ணூறு செய்யாதிருக்கும் பொருட்டு அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்டி மகிழந்தனர். இப்போதெல்லாம் வேலுச்சாமி அவளுடன் இல்லை. அவளது பிடிவாத குணம் காரணமாக மனம் விட்டுப்போய் நான்கு வருஷங்களுக்கு முன்பு, குப்பையின் ஆறாவது வயதில் தனது குடும்பத்தை விட்டே பிரிந்துசென்று எங்கோ தொலைதூரம் போய்விட்டான். 

அவள் ஒரு துணிந்த கட்டை. வாழ்க்கையில் எதற்குமே அஞ்சியது இல்லை. சாராயம் விற்பவளாயினும்கூட அவள் இன்றுவரை அந்த சமாசாரங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங் களுக்கெல்லாம் போனதில்லை. அதற்கெல்லாம் உதவிக்கு ஏகப்பட்ட ஆட்கள் தயாராக இருந்தார்கள். சாராயத்தை மலிவு விலையில் காய்ச்சுவதற்கு ஒருவன், அதைக் கொண்டுவந்து தருவதற்கு ஒருவன், தற்செயலாக அவள் பிடிபட்டுவிட்டால் தானே அந்தக் குற்றத்திற்குப் பொறுப்புதாரி எனக்கூறி, வலிந்துசென்று பொலிஸில் தண்டனையை அனுபவித்துவிட்டு வந்து, பிறகு அவளிடம் கூலி பெற்றுக்கொள்ள ஒருவன் என, ஏக தடபுடலாக சாரதா வாழ்ந்து வந்தாள். 

ஒருதடவை, எதிர்பாராதவிதமாக பொலிஸ் திக்விஜயம் செய்தபோது சாரதா வீட்டில் இருக்கக்கண்டு, அவளையும், சாராய முட்டியையும் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். அப்போது விளக்கமறியலில் இருந்த காலத்தில் அவளுக்கு அறிமுகமாகியவனே அந்த பொலிஸ்காரன். நாளாவட்டத்தில் அவன் அவளது வாடிக்கையாளனாக மாறிவிட்டான். 

சாரதாவின் தாய் வள்ளியம்மா சில வருடங்களுக்கு முன்னர் இறந்துபோனாள். சாரதா ஒரு கேவலமான சாராய வியாபாரியாக மாறிவிட்டது குறித்து அவளுக்கு ஏகப்பட்ட மனவருத்தம். அடிக்கடி சண்டை பிடிப்பாள். முற்றத்து மணலை வாரி வீசி, திட்டிக்கொட்டுவாள். அப்படித்தான் ஒருநாள் போனவள் குடிபோதையில் கீழே விழுந்து, அருகில் இருந்த பெரிய கல்லில் தலை மடேரென்று மோதி அடிபட, பொட்டென்று போய்விட்டாள். 

சாரதாவுக்கு உள்ள வருத்தமெல்லாம் ஒன்றே. அவள் அருமை பெருமையாகப் பெற்ற ஒரே மகன் குப்பை மூளை வளர்ச்சியற்ற பையனாக இருந்தான். சட்டென்று பார்த்தால் தோற்றத்தில் எதுவும் தெரியாது. சிறிது நுணுகிப் பார்த்தால் அவன் தன்னையொத்த ஏனைய சிறுவர்களைவிடவும் வித்தியாசமாக இருப்பது தெரியும். பன்னிப் பன்னிப் பேசுவான். செயல்களில் பத்து வயதுப் பையனின் முதிர்ச்சி இல்லை. நாலு வயதுக் குழந்தையின் சமர்த்துக்கூட இருக்காது. கை, கால்கள், கண்பார்வை, மூளை என்பவற்றிலும் சரியாக இயங்கும் திறன் இல்லை. வெள்ளை வெளேரென்று மெலிந்த அழகிய சிறுவன் அவன். 

சிவனேயென்று போட்டதைத் தின்றுவிட்டு தன்பாட்டுக்குக் கிடப்பவனாக அவன் இருந்திருந்தால் அவள் இவ்வளவு வருத்தமாக இருந்திருக்க மாட்டாள். கெக்கிராவ பிரதான வீதியின் அசுரப் போக்குவரத்தில் இருந்து நாளும் அவனைக் காப்பதே பெரும்பாடாக இருந்தது. பக்கத்து வீடுகளுக்குப் போய் ஏதாவது தொல்லை கொடுப்பான். அவர்கள் ஒரு நடை நடந்து வந்து முறைப்பட்டுவிட்டுப் போவார்கள். சாரதா சமாளித்து அனுப்புவாள். பக்கத்து வீட்டுக் கூனிக் கிழவி குனிந்து கூட்டுவதற்கென்று செய்துவைத்திருந்த கூட்டுமாறைத் தூக்கி மதிலுக்கு அப்பால் எறிவான். முன் வீட்டுச் சிறுமி கண்ணே பொன்னே யென்று வைத்திருக்கும் விளையாட்டுச் சாமான் களைத் தூக்கியெறிவான். 

பின்வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங் களைக் கண்டால் அவனுக்கு ஒரு நரம்புத் துடிப்பு கூடிவிடும். ஏறி உட்கார்ந்து ரிப்பேர் பார்ப்பான். யாருக்கும் தெரியாமல் மெல்ல கதவை இழுத்து, மூடித்திறந்து கையில் பலத்த அடியுடன் வந்து அதை கொஞ்சங் கொஞ்சமாகக் காட்டி எரிச்சல் மூட்டுவான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இரத்தக் காயங்களோடு வரும் அவனுக்கு அவள் ஏசி மருந்துபோட்டு விடுவாள். மருந்தும் மாயமும் பண்ணிப்பண்ணி சமயங்களில் தண்டணை அனுபவிப்பது போல் இருக்கும் அவளுக்கு. 

இதையெல்லாம்விட பெரிய வேதனை பொலிஸ் காரனின் உருவத்தில் வந்தது. தொழில் முறையில் மிகவும் வேண்டப்பட்டவனல்லவா அவன்? கள்ளச்சாராயம் குடிப்பவர் களைவிட விற்பவர்கள் ஏறத்தாழ நூறு என்று விகிதம் காணப் பட்ட அவ்வூரில், சாரதா தவறியும் பொலிஸ் நிலையத் திற்கு போக நேராதபடி அவன் பார்த்துக்கொண்டான். மாதாந்தம் ஐம்பதாயிரம் ரூபாவரை வருமானம் தருகின்ற கள்ளச் சாராய கேஸ்களை வெகு உற்சாகமாகக் கையாளுகின்ற தனது சகாக்களை ஒரே கண் ஜாடையில் சாரதாவின் வாசலுக்குப் போகாமல் தடுத்துவிட அவனால் முடியும். ஈஸ்ட்டையும், பேரீச்சம்பழத்தையும், சீனியையும் எவ்வெவ் விகிதங்களில் கலந்தால் என்ன சுவை கிடைக்கும் என்று கூறுமளவிற்கு அவன் அவ்விடயத்தில் கைதேர்ந்தவனாக இருந்தான். சமயங்களில் இரண்டு கிளாஸ் கசிப்போடு அவனது தேவைகள் முடிந்துவிடும். சிலவேளைகளில் அதற்கும்மேல்.. சிறிது மேலே… 

அப்போதெல்லாம் சாரதாவிற்குப் பெரிய பிரச்னையாக இருக்கும். எல்லாவற்றிற்கும் குறுக்கே குப்பை நின்றான். அவனைச் சமாளித்துத் தூங்கவைப்பதற்குள் போதுமென்றாகி விடும் அவளுக்கு. 

இவனை எங்காவது தொலைத்துக்கட்ட முடியுமானால் எவ்வளவு நிம்மதி? யோசித்துக் கொண்டிருந்தவளின் கவலையை ஒருநாள் அந்த பொலிஸ்காரனே தீர்த்து வைத்தான். 

“மாத்தளையில் ஒரு ஸ்கூல் இருக்காம். அங்க போய் தள்ளிடலாம்….” 

மூளை வளர்ச்சி குறைந்த மாணவர்களுக்காக புதிதாகக் கட்டப்பட்டிருந்த அந்தப் பாடசாலை பெரிய ஆரவாரங்கள் எவையுமின்றி இரண்டு கட்டடங்களுடன் இருந்தது. அவர்களது பிரயோக அறிவுத் திறன்களுக்காக பொருட்கள் நிறைந்திருந்த ஒரு மண்டபமும் தவிர, பிள்ளைகள் விளையாடுவதற்கான பூங்கா ஒன்றும் வெளியே காணப்பட்டது. தோட்டத்தின் மேல் மூலையில் ஒரு சிறிய குவாட்டர்ஸ் இருந்தது. 

சாரதா குப்பையை அழைத்துக்கொண்டு சென்றது ஒரு மாலை நேரம் ஆதலால், இரு மண்டபங்களும் மூடப்பட்டு பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. விளையாட்டுப் பூங்காவைக் கண்டதுமே உற்சாகம் மேலிட்டதால் அங்கு மிங்கும் ஓடியாடி, அதிலும் இதிலும் தொங்கிப் பாய்ந்து குப்பை விளையாடத் தொடங்கிவிட்டான். அவனை அப்படியே விட்டுவிட்டு, குவாட்டர்ஸின் திறந்திருந்த வாசல் கதவுகளின் முன்னே தயங்கி நின்றாள் சாரதா. 

உள்ளேயிருந்து டீவியின் சப்தம் மெல்லிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. ஆள் அரவமில்லை. இரண்டுமுறை கதவில் தட்டினாள். 

உள்ளேயிருந்து ஒரு பெண் வந்தாள். அந்த அம்மணியின் கையில் ஒரு பத்திரிகை இருந்தது. மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடியே புருவங்களை நெரித்தபடி வாசலில் வந்துநின்று, மிக நேர்த்தியாக உடையணிந்து கௌரவமான தோற்றத்துடன் வெளியே காத்து நிற்கின்ற சாரதாவைப் பார்த்தாள். 

சாரதா எப்போதுமே இப்படித்தான். வெளியே புறப்பட்டாளானால் அவளது இனம், குலம், கோத்திரம், தொழில் பற்றிய சந்தேகங்கள் யாருக்கும் எழவே எழாது. அந்தளவுக்கு படித்த நாகரிகமான ஒரு தொழில் செய்கின்ற பெண்ணைப் போன்று கனகச்சிதமாகக் காட்சியளிப்பாள். சற்று உருண்டு திரண்ட உருவம் ஆயினும் போதுமான உயரம் இருந்ததால் அவளது தோற்றம் யாரையும் ப்ரீதி கொள்ள வைக்கும். ஜொலிக்கும் குங்குமப் பொட்டு எப்போதும் நெற்றியில் பெரிதாகத் துலங்க, தலையில் மலர்ச்சரம் இல்லாவிட்டாலும் ஒரேயொரு ஒற்றைப்பூவாவது பின் கொண்டையில் கொலு விருக்க, பளீரென ரோஜா நிறத்தில் ஒளிர்கின்ற முகத்தில் செவ்விரத்தம் கோலம் காட்ட, அவள் அனேகமாக ஒரு தேவதை போன்றுதான் இருப்பாள்… 

“என்ட, எத்துலட்ட என்ட” என்று அவளை வரவேற்றாள் அம்மணி, யாரோ வேலை தேடி வந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தில். நெடிய, மெல்லிய அவளது தேகத்தையும், முகத்தின்மீது தொங்குகின்ற சுருள் முடிகளையும், தூய வெள்ளை நிறத்தில் பளீரென்று கட்டியிருக்கும் வெள்ளைச் சேலையையும் கண்ணால் அளந்து, மனதால் எடை போட்ட படியே உள்ளே வந்தமர்ந்தாள் சாரதா. அது வரை விளையாடிக் கொண்டிருந்த குப்பை ஓடிவந்து ஏக உரிமையுடன் அவளது மடியில் உட்கார்ந்துகொண்டான். 

அவனைப் பார்த்ததும் அம்மணிக்கு எல்லாம் புரிந்தது. இருவருக்குமிடையில் மொழி ஒரு பிரச்சினையாக இல்லை. சாரதாவுக்கு சிங்களம் நன்கு தெரியும். அம்மணியும் புதிதாகக் கொஞ்சம் தமிழ் கற்றிருந்தாள். 

சாரதா குப்பையின் பிரச்சினையை எடுத்துக் கூறினாள், தனது தொழில் என்ன என்பதை மட்டும் மறைத்துவிட்டு. அவனை ஏற்க சம்மதித்த அம்மணி, தினமும் காலையில் அவனைக் கொண்டு வந்து விட்டு, பின்னேரம் கூட்டிச்செல்ல வரவேண்டுமென்று கண்டிப்பாகக் கூறினாள். 

இந்த இடத்தில்தான் உதைத்தது. ஏறத்தாழ ஐம்பது, அறுபது கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் கெக்கிராவையில் இருந்து தினமும் அவனைக் கூட்டி வந்து, கூட்டிச் செல்வதென்றால் வேறு வேலை இல்லையா சாரதாவுக்கு? 

கெஞ்சிக் கூத்தாடி அவனை அங்கேயே விட்டுச்செல்ல அனுமதிக்குமாறு வேண்டினாள் அவள். ஏற்கனவே அவனுக்குத் தேவையான உடைகளையும், பொருட்களையும் ஒரு ட்ரவலிங் பேக்கில் எடுத்து வந்திருந்தாள். தான் தினமும் போக்குவரத்திற்கு செலவளிக்க முடியாதளவிற்கு ஏழை என்று பேசி அந்தப் பெண் அதிபரை நம்பவைத்துவிட்டாள். 

மிஸ் குருகுலசூரிய…அவளுக்கு இந்தப் பொறுப்புமிக்க அதிபர் பதவிதான் புதியதே தவிர, அல்லும் பகலும் மனவளர்ச்சியற்ற சின்னக்குழந்தைகளுடன் பழகி, அவர்களது நாடித்துடிப்பை அறிந்து செயல்படுவதில் நல்ல அனுபவம் பெற்றிருந்தாள். ஏற்கனவே பல சமூகசேவை நிறுவனங்களில் கடமையாற்றியிருந்தாள். அரசாங்கம் தற்போது இந்தப் பள்ளியின் நிருவாகியாக அவளை நியமித்தபோது மனப்பூர்வமாக அதை ஏற்றுக்கொண்டு, இனி தனது வாழ்நாளை இத்துறையிலே அர்ப்பணித்துவிட வேண்டும் என்ற சங்கற்பமும் கொண்டிருந்தாள். 

ஏறத்தாழ வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டி ருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் சமூகப்பணி செய்து வாழ்ந்து, ஊருக்கும் உலகுக்கும் பல சேவைகள் செய்து இப்படியே காலங் கழித்துவிடவேண்டும் என்று அவள் தீர்மானித்திருந்தாள். இன்று நேற்றல்ல, பல வருடங் களாகவே தன்னுள் சுடர்விடும் இக்கனவை, அதன் ஜோதியை இன்றுவரை யாரும் அழித்துவிடாதபடி மிகக் கவனமாகவே தனது வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவள்…. வைப்பவள்… அவள். 

இந்தப் பாடசாலையை நடத்தி வருகின்ற இந்த ஒரு வருட காலத்தில் இத்தகைய மாணவர்களைப் பயிற்றிப் பல கலைகளையும் கற்பிப்பதற்கு ஏற்றபடி ஒரு விடுதியையும் தானே நடத்திவர வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் இருந்தது. ஏற்கனவே ஓரிரண்டு மாணவர்கள் அவளுடன் வந்து தங்கி நிற்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். இப்போது குப்பையும் சேர்ந்துகொள்ளவே, பரீட்சார்த்தமாக விடுதியைத் தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், அவனைப் பொறுப்பேற்றுக்கொண்டாள் அவள். 

குப்பையைத் தள்ளிவிட்டு வெற்றிக் களிப்புடன் திரும்பி, பஸ் பிடித்து வீடு போய்ச்சேர இரவு எட்டு மணியாகியிருந்தது. சமையல்கட்டில் இருந்த பிஸ்கட்டை உண்டுவிட்டு, சூடாக LO தயாரித்துக் குடித்துவிட்டு படுத்துக்கொண்டாள் சாரதா. மனது ஏனோ வெறுமையாக இருந்தது. 

காலையில் நேரங்கழித்தே எழுந்தாள். எழுந்ததும் வழக்கமாக “அம்மா” என்று குரலெடுத்து அழைத்து எழுப்பி விடுகின்ற குப்பையின் குரல் கேளாதது சந்தோஷமாகவே இருந்தது. கூடவே ஒருவித வெறுமைசூழ் அமைதியாகவும் இருந்தது. 

வீட்டு வேலைகளை நிதானமாகச் செய்து முடித்தாள். வீட்டைக் கூட்டிப் பெருக்கும்போதும், தட்டித் துப்புரவு செய்யும் போதும், ஆங்காங்கே சிதறிக் கிடந்த குப்பையின் பொருட்களை யும், விளையாட்டுச் சாமான்களையும் காணுந்தோறும் மனதைப் பிசைந்தது. பாத்ரூம் கதவோரத்தில் பின்புறம் ஒளித்து வைத்திருந்த சாராயக்குடம் காலியாக இருப்பதைக் கண்ட அவள், ராமலிங்கத்திடம் ஒரு கேன் எடுத்து வரச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். 

மாலை வந்தது. அவள் சொல்லியனுப்பியதுபோல ராமா ஒரு பிளாஸ்டிக் கேனில் சரக்கு எடுத்து வந்திருந்தான். பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு, மாலை கறுக்கும்போது வரும் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதில் மும்முரமானாள் அவள். 

இரவு முற்றிப் பழுத்து, மின்விளக்குகளின் பளீர் ஒளியால் கனிந்துகொண்டிருந்தபோது பொலிஸ்காரன் வந்து சேர்ந்தான். அவன் வருகின்ற நாள்தான். அவனது வரவை அவளும் எதிர்பார்த்திருந்தாள். இடையிடையே பல்வேறு சிந்தனைகள் மனதில் சூழ மனதுக்குள் குழப்பமாகவே இருந்தது அவளுக்கு. குப்பையின் நினைவும் மேலோங்கி நின்றது. 

தனக்குக் கள்ளச் சாராயத்தைக் கொண்டு தந்துவிட்டுப் போகும் ராமலிங்கத்திற்கும், தன்னிடம் கிளாஸ் கணக்கில் குடித்துவிட்டு பணம் தந்து செல்கின்ற வாடிக்கையாளர் களுக்கும், தனக்கும் என்ன உறவோ, அவ்வளவே தனக்கும் இந்தப் பொலிஸ்காரனுக்குமான உறவு எனுமாப்போல ஒரு நிரந்தரமற்ற தன்மை தன்னை சூழ்ந்துகொண்டிருப்பதை அவளால் இப்போது உணர முடிந்தது. ஒரு கிளாஸை மேலதிகமாகக் குடித்துவிட்டு, “நாளை பணம் தருகிறேன்” என்று யாரும் அவளை ஏமாற்றிவிட முடியாது. பணம், கடன் போன்ற விடயங்களில் பேய் அவள். வந்தவனிடம் கண்டிப்பாகப் பேசி, கறாராக பணத்தை வாங்கியபின்பே திரவம் கையில் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும்போது எக்குத்தப்பாக வந்தவன் ஏதும் சில்மிஷம் செய்துவிட்டால் போதும்; தொலைத்துவிடுவாள். அவளது வலிய தடக்கைகள் எப்போதும் சுறுசுறுப்பாகச் சுழலும். ஓட ஓட விரட்டுவாள். எனவே, அந்த ஊரிலேயே “ராங்கிக்காரி” என பேரெடுத்திருந்தாள். 

இந்த பொலிஸ்காரனோ பொலிஸ் விவகாரங்களில் மட்டுமன்றி தனது சுதந்திரத்திலும் தலையிடுவது அவளுக்கு நீண்ட காலமாகவே பிடிக்கவில்லை. அவளது கொள்கைகளில் கூட அவன் அதிகம் தலையிட்டான். எப்போதும் கடன் வைத்துக்கொண்டுதான் குடிப்பான். பொலிஸ் உருட்டல் மிரட்டல் களுக்கென்று அவள் அவ்வப் போது கணக்குத் தீர்த்துப் பணத்தைக் கொடுத்துவிடுவாள். அல்லது, போனால் போகிற தென்று ஒருநாள் பிடிபட்டாலும் தண்டப்பணம் கட்டி வெளியே வந்து ஒரு குப்புசாமியையோ, மாடசாமியையோ அனுப்பி, பிடிபட்ட சாராயக் குடத்திற்கு பொறுப்பேற்க வைத்துவிடுவாள். வீடுவாசலின்றி கட்டாக்காலியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் மாதக்கணக்கில் மாமியார் வீட்டில் இருந்து ஹாய்யாகச் சாப்பிட்டுவிட்டு. முடிந்தால் பொலிஸ்காரர்கள் முதல் வக்கீல்கள் வரையில் கூட்டாளிகளாக்கிக்கொண்டு வெகு கம்பீரமாக வந்து சேர்வார்கள். சிலவேளைகளில், நீதவான் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக பொலிஸ் மூலம் அனுப்பப்படும்போது அங்கே நீதவானுக்கு உதவி ஒத்தாசை புரிந்து அவர் மனதை வென்றவர்களாகவும் திரும்புவார்கள். 

எப்படிப் பார்த்தாலும் சாரதாவுக்கு இந்தத் தொழில், இதன் ஏற்ற இறக்கங்கள் தண்ணீர் பட்டபாடுதான். இந்த பொலிஸ்காரனோ பல வேளைகளில் அதிகபட்ச தொல்லை யாக, ஒரு கடன்காரனாக, அடிக்கடி அவளை ஏமாற்று வதற்கே வழிபார்த்தவனாக, அல்லது ஒவ்வொரு முரண்பாடான யோசனைகளையும் கதைகளையும் சொல்லி அச்ச மூட்டுப வனாக, எரிச்சலூட்டுபவனாக இருந்து கொண்டி ருந்தான். இப்போது குப்பையை அனுப்ப யோசனை சொன்னவனும் அவன்தானே! 

“என்ன மூஞ்சி ஒரு மாதிரி செவக்குது?” 

பொலிஸ்காரன் இளித்தவாறு கேட்டான். அவனுக்கு வழக்கமாகக் கொண்டுதரும் உயரமான, விஷேடமான, பூப்போட்ட கிளாஸை நிரப்பி நீட்டியவாறு சொன்னாள். 

“குப்பையை ஸ்கூல்ல வுட்டுட்டு வந்துட்டேன் நேத்து….” அவளை அறியாமல் குரலில் சோகம் தொனித்தது. 

“அடிசக்கை…” கும்மாளமிட்டுச் சிரித்தான் சந்தோஷத்தில். உடனே சரக்கை காலி பண்ணாமல் கிளாஸை மேசைமீது வைத்துவிட்டு குறும்பாகப் பார்த்தான். 

“அப்ப இனி தொல்லையே இல்லை…” நெருங்கி நின்று கண் சிமிட்டினான். 

சாரதாவுக்கு திடீரென அழுகை பொங்கியது. ஒருகணம், தன்னை உயர்த்தி வாழவைப்பதற்காகவே தன்னைக் கரம் பிடித்து, பொறுமைகாட்டி வாழ்ந்துவந்த வேலுச்சாமியின் சாந்தமான முகம் மனக்கண்ணில் வந்து நின்றது. அவன் எங்கே? இந்த சுயநலமி எங்கே? அவன் எவ்வளவு நல்லவன்…! 

ஏதோ ஒரு குணத்தால் பொலிஸ்காரன் சொன்னபடி குப்பையைத் தள்ளிவிட்டு வந்துவிட்டாலும், அந்த யோசனை அவளுக்கு முற்றாகப் பிடிக்கவில்லை எனுமாப்போல் ஒரு குமைச்சல் அவளுள் அடிக்கடி எழுந்துகொண்டிருந்தது. ‘இவன் சொன்னபடிதானே அவனைத் தள்ளிவிட்டேன்… இப்ப என்னால் நிம்மதியா இருக்க முடியுதா…? முந்தியைவிட கொடுமையா இருக்கே அவன் நெனப்பு…?’ என்றெண்ணிக் கலங்கினாள் சாரதா. 

அவளது முகபாவத்தைக் கவனித்த அவன், கிளாஸை நிதானமாகக் காலி பண்ணிவிட்டு, வாயைத் துடைத்துக் கொண்டு, கிளாஸை டமாரென்று மேசையில் வைத்தான். அந்த சத்தத்தில் திடுக்கிட்டுப் பார்த்தாள் அவள். அவளது அகன்ற விழிகளில், கடைசியாக தான் டொபி வாங்கித் தருவதாகப் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டு வந்தபோது தன்னை நம்பியும், நம்பாமலும் நிலைகுத்திப் பார்த்த குப்பையின் கண்கள் வந்து நின்றன. 

பொலிஸ்காரன் முகம் நிறையச் சிரித்துக்கொண்டு, சாராய நெடி அவளைச் சூழும்படி இன்னும் மிக நெருங்கி அவளது தோள்களைத் தொட்டான். 

ஏனோ… தனக்கு மட்டுமே முழு உரிமையில்லாத ஒரு பொருளை… வேலுச்சாமிக்குச் சொந்தமான ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு நிற்பதுபோல் ஒரு குற்ற உணர்வு மேலிட்டு கொதித்துப் போயிருந்த அவள் வெறிகொண்டு ‘பளாரென’ அவனது முகத்தில் அறைந்தாள். 

“யோசன சொல்லிட்டு சிரிச்சிட்டு வாரியா, மவனே போடா வெளியே… நீ நெனக்கிறது இனி நடக்காது. தூ… ஒன் யோசனயும் நீயும்… தொலஞ்சி போ…” 

திகைத்துத் தள்ளாடி நின்ற அவனைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச் சாத்தினாள். கண்ணீர் கண்களில் கோடாக வழிந்து நெஞ்சை நனைத்தது. “நாளையே குப்பைய கூட்டி வந்திரணும்” என்ற எண்ணம் கொஞ்சங் கொஞ்சமாக முளைவிட்டு அவளுள் உறுதியாயிற்று. அதற்கும் மேலாக, பத்து வருடமாக தன்னை விட்டுப் பிரியாத குப்பையை…. மூணு வயசுக் குழந்தையின் புத்திசாலித்தனம்கூட ஒரு பச்சைப் பாலகனை….. எங்கோ தள்ளிவிட்டேனே என்ற குற்றவுணர்வு படமெடுக்கும் நல்ல பாம்பு போன்று அவளைச் சுற்றி சீறிக் கொத்தியது. அந்தத் துன்பத்தில் மிக உழன்று, மூடிய கதவில் சாய்ந்து, “எங் கண்ணே குப்பை….” என்று ஓலமிட்டு அழத்தொடங்கினாள் சாரதா. 

– ஜீவநதி, கார்த்திகை-மார்கழி 2007. 

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *