கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 1,256 
 
 

(1960ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-22

16. சிறைச்சாலை அறச்சாலையானது

உதயகுமாரன் மேற்கூறியவாறு சம்பாபதி கோயிலிற் சபதஞ் செய்தவுடன் அக் கோயிலி லுள்ள சித்திரங்களுள் ஒன்று, அவன் கேட்கும் படி பின்வருமாறு கூறிற்று. 

“நீ, எம்பெருமாட்டியாகிய சம்பாபதித் தெய்வத்தின் முன் ஆராய்ந்துபாராமற் சூளுரைத்தனை ; இங்ஙனங் கூறியதில் யாதொரு பயனுமில்லை.’ இவ்வாறு கூறிய வார்த்தையைக் கேட்ட உதயகுமாரன், மனங்கலங்கி மணி மேகலையைப் பெறுதற்குத் தான் வேறு என்ன செய்யமுடியும் என்பது விளங்காமையால் மனஞ் சோர்வுற்றான். அப்பொழுது பொழுது சாய்ந்து விட்டது ; வர வர இருள் அடர்ந்துகொண்டிருந்தது; உதயகுமாரன் அவ்விடத்தை விட்டகன்றான். 

‘என் சுயவடிவத்தோடு திரிந்தால் உதய குமாரன் என்னை விட்டு நீங்கான்; ஆதலால், காயசண்டிகை வடிவுடன் இருத்தலே நன்று’ என, மணிமேகலை எண்ணி அவ்வடிவுடன், பசித்துவந்த யாவருக்கும் உணவளித்து வந்தாள். ஒருநாள் அவள் அந்நகரிலுள்ள சிறைச்சாலையிற் புகுந்து ஆங்குச் சிறையிருந்தோருள் பசியால் வருந்துவேரை அருளுடன் நோக்கி, இனிய மொழிகள் கூறி, உணவளிப்பாளாயினள். அதனைக் கண்ட காவலாளர் ஒரு பாத்திரத்திலிருந்தே பலருக்கு உணவளிக்கும் ஆச்சரியத்தைக் கண்டு வியப்புற்று, அந் நிகழ்ச்சியைத் தம் அரசனுக்குத் தெரிவிப்பது கடனெனக் கருதி அரசனது அரண்மனைக்குச் சென்றனர். 

சோழ அரசனாகிய கிள்ளிவளவன் அச்சமயம் தன் அரசியாகிய சீர்த்தி என்பவளுடன் பூங் காவில் உலாவச் சென்றிருந்தான். அரசன் மனைவியாகிய சீர்த்தி, மாவலி மரபில் வந்த அரசனின் புதல்வி. அரச தம்பதிகள் அப் பூங்காவின் வனப்பு மிக்க காட்சிகளில் ஈடுபட்டு மகிழ்ந்திருந்தனர். 

குளிர்ந்த நறுமணமிக்க தடாகமொன்றின் புல்லுத்தளத்தின் மீது ஒரு மயில் ஒய்யாரமாகத் தன் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தது; குயில்கள் கூவிக்கொண்டிருந்தன; தேனீக்கள் மேலே வளைந்தளாவிய கொம்புகளிற் பொம் மென்றிரைந்தன; அடர்ந்த கொடிப்பந்த ரொன்றில் ஒரு கொடியிலே பெண்மந்தி ஊசலாட, கடுவன் அக் கொடியை ஆட்டிக்கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அரசனும் அரசியும், ‘கல கல’ எனச் சிரித்தனர். அச் சிரிப் பொலி அப்பூங்கா எங்கும் எதிரொலித்தது. 

அரசனும் அரசியும் செய்குன்றுகளில் ஏறி, அவற்றிலுள்ள செயற்கை அருவிகளைப் பார்வை யிட்டனர்; குளிர்மிகுந்த முழைகள், நீரூற்றுக் கள் ஆகியவற்றினூடே சென்று மெல்லென வீசும் தென்றலின் அணைப்பிலே பூங்காக்கள் தோறும் உலாவினார்கள். இவ்வாறு பூங்காக்கள் தோறும் உலாவிக் களைப்புற்றவராய். தம் அரண்மனையை அடைந்தனர். அரசன் தன் அத்தாணி மண்டபத்தை அடைந்தான். அரசனைக் காண் பதற்காகக் காத்துக்கொண்டிருந்த சிறைக் காவலர், தம் வரவை அரசனுக்குத் தெரிவித்த னர். அரசனது விருப்பப்படி சிறைக்காவலர் அத்தாணி மண்டபத்தை அடைந்து தாழ்ந்து தலைவணங்கி, “அரசே, வாழி ; இந்நகரில் யானைத்தீ என்னும் நோயால் வருந்தி உடல் மெலிந்து அலைந்து திரிந்துகொண்டிருந்த ஒரு பெண், சிறைக்கோட்டத்தில் அவள் கையிலுள்ள ஒரு பாத்திரத்திலிருந்து உணவெடுத்து அளவற்ற மக்களை உண்பித்து வருகிறாள். இந்த அற்புதத்தை அறிவீராக,” எனக் கூறி நின்றனர். 

சிறைக்காவலர் கூறியவற்றைக் கேட்ட அரசன், “அம் மங்கையை இங்கே அழைத்து வருக”, எனக் கூறினான். உடனே அவர்கள் சென்று, மணிமேகலையை அழைத்துவந்து அர சன் திருமுன் விட்டனர். அரசன் அவளைப் பார்த்து, “தவத்தான் மிக்க பெண்ணே! நீ யார்? கையிலேந்திய பாத்திரம் உனக்கு எவ்வாறு கிடைத்தது?” என வினாவ, அவள், ‘‘அரசே, அறம் என்றும் வாழ்வதாக. நான் ஒரு விஞ்சைய மகள். சிலகாலமாக இந்நகரில் வாழ்கின்றேன். அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று இதனை எனக்கு அருளியது. இது தெய்வத்தன்மை வாய்ந்த பாத்திரம்; யானைத்தீ என்னும் தீராப் பசியை இது தீர்த்தது. எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் இதனால் உணவளித்தல் முடியும்; அரசே, நீ நீடு வாழ்வாயாக ” எனக் கூறினாள். 

மணிமேகலை கூறியவற்றைக் கேட்ட அரசன் “யான் செய்யவேண்டியது யாது?” எனக் கேட்க, அவள் “நகர்ச் சிறைக்கூடம், அறக்கூடம் ஆக்கப்படல் வேண்டும்,” என்று வேண்டினாள். 

அவள் விரும்பியவண்ணமே அரசன் சிறைச் சாலையை அழித்துத் தூய்மை செய்து பலவகைத் தருமங்களும் நிகழத்தக்க அறச்சாலையாக மாற்றினான். 

அரசனுடைய கட்டளைப்படி சிறைச்சாலை பலவகைப் புண்ணியங்களும் நிகழும் அறச்சாலை யாக மாறிற்று. இச் செய்தியை உதயகுமாரன் அறிந்தான். மணிமேகலைமீது அவன்கொண்ட மோகம் இன்னும் மாறிவிடவில்லை. உலக அறவிக்கு வெளியே அவள் வரும்போது, அவளைக் கைப்பற்றி அவள் கற்ற வித்தைகளையும் இனிய மொழிகளையும் கேட்டு, அவளை அரண்மனைக்குக் கொண்டுவரல் வேண்டும். என, எண்ணிக் கொண்டிருந்தான். இதனால், அவளிருக்கும் உலக அறவியை அடைந்தான். 

17. உதயகுமாரன் இறப்பு 

பொதிய மலைச்சாரலிலுள்ள காட்டாற்றின் கரையில் விருச்சிகமுனிவனால் இடப்பட்ட சாபங் காரணமாகப் பன்னிரண்டு வருடங்கள் பெரும் பசியுற்றிருந்த காயசண்டிகையின் சாபம் நீங்குங் காலம் வந்துவிட்டதை அறிந்த அவள் கணவ னாகிய காஞ்சனன் என்னும் வித்தியாதரன், ஆகாயமார்க்கமாகக் காவிரிப் பூம்பட்டினத்தை அடைந்தான். அங்கே பூஞ்சோலைகளிலும் முனி வர்கள் வாழும் தவச்சாலைகளிலும் அம்பலம், மன்றம் ஆகிய இடங்களிலும் தேடித் திரிந்தான். ஈற்றில், காயசண்டிகையின் உருவுடனிருந்த மணிமேகலையைக் கண்டு அவளையே தன் மனைவி யாகிய காயசண்டிகையென எண்ணி அவளை அணுகி, அவளது நோய் அகன்றுவிட்டதா ? என அவளை அன்புக்கனிவுடன் வினாவினான். அவளது கையிலுள்ள பாத்திரத்தின்மூலம் பலருக்கு அவள் உணவளிக்கும் தன்மையைப் பார்த்து அப் பாத்திரம் அவளுக்கு எங்ஙனங் கிடைத்தது? என விசாரித்தான். 

மணிமேகலை அவனுடன் யாதும் பேசாது, அங்கே நின்ற உதயகுமாரனைக் கண்டு அவனுக்குச் சில அறிவுரைகள் புகன்றாள். இளமை யின் நிலையாமையை அவனுக்கு அறிவுறுத்த விரும்பி அதோ அம்முதுமை வாய்ந்த அப் பெண்ணைப் பாரும்,’ என, ஒரு கிழவியைக் காட்டி, ஒருகாலத்தில் மேகம் போன்று கருமையாயிருந்த இவள் கூந்தல் இப்போது நரைத்துவிட்டது ; பளபளப்புடனிருந்த இவளது நெற்றி இன்று சுருக்கம் பெற்றுக் காணப்படு கிறது. வில்லைப்போல வளைந்திருந்த இவளது புருவங்கள் இன்று செத்த நண்டின் கொடுக்குகள் போலக் காணப்படுகின்றன : செவ்வரி படர்ந் திருந்த அழகிய கண்கள் இப்போது பீளை தள்ளி ஒளி மங்கியுள்ளன. பவளம்போன்றிருந்த செவ் விதழ்கள் வெளிறி அழகிழந்துள்ளன. பெண்மையின் அழகு இருந்தவாறு இது” எனக் கூறி நின்றாள். 

இவ்வாறு இளவரசனின் எண்ணங்களை உலகப்பற்றுக்களிலிருந்து மாற்றி, உயிருக்கு உறுதி பயக்கும் மெய்ம்மைகளில் அவன் கருத் தைச் செலுத்துதற்கேற்ற விதமாக உரையாடி னாள். ஆனால் அவளைத் தொடர்ந்து காய சண்டிகையின் கணவன் வந்துகொண்டிருந்தான். பொறாமை அவனது உள்ளத்திலே சுடர்விட் டெரிந்துகொண்டிருந்தது. தன் மனைவி தன் னிடம் பராமுகமாய் இருந்தது மாத்திரமன்றி, இளவரசனுடன் உரையாடுவதையும் காண அவன் மனம் கொதித்தது. ஆகவே. அவள் செயலை மேலும் அவதானிக்க எண்ணி, மிக்க கோபங் கொண்டு புற்றில் இறங்கும் பாம்பைப் போல, அவ்வுலக அறவியினுள்ளே ஒளித்திருந்தான். 

மணிமேகலையே காயசண்டிகை உருக் கொண்டு பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தனள் என்பதை அறிந்த இளவரசன், ஊர் அடங்கிய பின்பு அவ்விடத்தே வந்து அவளியல்பை அறிய வேண்டுமென எண்ணியவனாய், அவ்விடம் விட்டகன்றான். 

நடுயாமம் ஆயிற்று ; இளவரசன் தனியே புறப்பட்டு உலக அறவியுள் நுழைந்தான். இள வரசன் தன் திருமேனிமீது பூசிய நறுஞ்சாந்துக ளின் இனிய மணம் அவனுக்கு முன்னதாக அவ் வறவியுள்ளே புகுந்து பரவிற்று. அவன் வரவையே எதிர்பார்த்துத் தீமைசெய்யக் கருதி ஒளித்திருந்த காஞ்சனன், தன் வாளை உருவி, இளவரசனை வெட்டி வீழ்த்தினான். பின்னர் காயசண்டிகை யைக் கைப்பற்றிக்கொண்டு ஆகாயமார்க்கமாகச் செல்லலாமென அவன் எண்ணி, மணிமேகலை யருகே செல்ல எழுந்தான். அப்பொழுது அங்கேயுள்ள சிலைகளில் ஒன்றாகிய கந்திற்பாவை, “காஞ்சன, உள்ளே நுழையாதே” என எச்சரித்து, “இவள் உன் மனைவியாகிய காயசண்டிகையல்லள்; மணிமேகலை கொண்ட வேற்று வடிவம் இது; உன் மனைவியாகிய காயசண்டிகை, நோய் நீங்கி ஆகாயவழியே செல்லுகையில் விந்தய மலையின் மேலாகச் செல்லுங்கால் அதனைக் காக்கும் விந்தகடிகையென்னும் காவற்றெய்வம் அவளைத் தன் வயிற்றுள் அடக்கிவிட்டது. துர்க்கா தேவி எழுந்தருளியிருக்கும் விந்தய மலைக்கு மேலாக யாருஞ் செல்லல்கூடாது. அதுவே காய சண்டிகை செய்த குற்றம் ஆகும். இப்பொழுது உதயகுமாரன் தன் பழவிவினைப்பயனால் உயிர் நீத்தானேனும் அவனைக் கொலை செய்ததனால் நீ பெரும் பழி செய்திருக்கிறாய். இது உன்னை விடாது; தொடர்ந்து வருத்தும்” எனக் கூறிற்று. 

இச் சொற்களைக் கேட்ட காஞ்சனன் மனம் உடைந்தவனாய்த் தன் நகரத்துக்குச் சென்றான். 

18. மணிமேகலையும் கந்திற்பாவையும் 

இதற்குள் மணிமேகலை துயிலிலிருந்து விழித் துக் கொண்டாள்; காஞ்சனனது வரலாற்றையும் அவனால் உதயகுமாரன் வெட்டுண்டு வீழ்ந்தமை யையும் கந்திற்பாவை கூறிய மொழிகளிலிருந்து அறிந்துகொண்டாள். உடனே கோயிலிலிருந்து வெளியேறித் தான் கொண்ட வேற்று வடிவத்தை மாற்றி உதயகுமாரன் இறந்து கிடந்த இடத்தை அடைந்தாள். அவன் இறந்து கிடந்த நிலைகண்டு புலம்பினாள். “ஆ, என் அன்புக்குரியவரே, முற் பிறப்பில் நீர் திட்டிவிடமென்னும் பாம்பால் தீண்டப்பட்டு இறந்தபோது, உமது ஈமச்சிதை யில் ஏறி யானும் உயிர் விட்டேன். பின்னர் இட் பிறப்பில் உம்மை உவவனத்திற் கண்டபோது என்மனம் உம்பால் ஈர்ப்புண்டது. அதை அறிந்த மணிமேகலா தெய்வம் என்னை மணிபல்லவத் திற்குக் கொண்டு சென்று புத்தபீடிகைத் தரிசனம் தந்தது. அப் பீடிகையின் காட்சியாற் பழம் பிறப்பை உணர்ந்தேன். இதனால் நீர் என் கணவ னாக இருந்ததை அறிந்தேன். உமக்கு நல்லறிவு உண்டாக்கி அறவழியிலே திருப்பும் பொருட்டுக் காயசண்டிகையின் வடிவம் கொண்டேன். அந்தோ, இதனாற் காஞ்சனனது பொறாமைக் காளாகி வாளுக்கு இரையாகினீரே,” என்று புலம்பி அவனருகிற் செல்லலானாள். அப்பொழுது 

“நீ இவனிடத்திற் செல்லாதே; செல்லாதே; இள நங்கையே, இவன் உன் கணவனாகவும் நீ இவனுக்கு மனைவியாகவும் இருந்தது சென்ற பிறவியில் மட்டும் நிகழ்ந்ததன்று. அதற்கு முன்னரும் எத்னையோ பிறவிகளில் நிகழ்ந்தன. பிறவித் துன்பத்தை ஒழிப்பதற்கு முயலும் அறிவினையுடையாய், இவன் இறந்ததற்காகத் துன்பம் அடையாதே, என ஓர் அசரீரி கேட்டது. 

மணிமேகலை கந்திற்பாவையின் இத் தெய்வ வாக்கிற்குத் தலைவணங்கி அறிவிற் சிறந்த ஆவியே, இவ்வம்பலத்தில் யாவருக்கும் மெய்ம்மை சொல்லிக்கொண்டு எழுந்தருளி யிருக்கும் தெய்வம் ஒன்று உண்டு என்கின்றனர். அது நீதானா? உன் திருவடியை வணங்குகின் றேன். சென்ற பிறப்பிற் றிட்டிவிடமென்னும் பாம்பாலும், இப்பிறப்பில் வித்தியாதரனுடைய வாளாலும் இவன் இறந்தமைக்குரிய காரணத்தை நீ அறிவாயா ? அறிந்தால், துன்புறும் இந்த நெஞ்சத்துக்கு ஆறுதல் அளிக்கும்படி இதனைக் கூறுவாயா?” என்று வினாவினாள். 

கந்திற்பாவை கூறத் தொடங்கிற்று: 

“சொல்லுகிறேன் கேள்: நங்கையே, உன் முற்பிறப்பிலே காயங்கரை என்னும் ஆற்றங் கரையிலிருந்து புத்ததேவனது அவதாரத்தைப். பற்றிக் கூறித் தருமோபதேசஞ் செய்துகொண் டிருந்த பிரமதரும முனிவரை, நீயும் உன் கணவனாயிருந்த இராகுலனும் அமுது செய்விக்க ‘நினைத்தீர்; அக்கருத்தை அவருக்கு அறிவித்த போது அவரும் அதற்குடன்பட்டார். அதன் பொருட்டு மறுநாள் விடியற்காலையில் உணவு ஆக்கும்படி உனது பரிசாரகனிடம் ஆணையிட் டிருந்தாய். ஆனால், அவன் யாது காரணத்தாலோ சிறிது காலந்தாழ்த்தி வந்தான். காலந்தாழ்த்தி வந்தமையால் அச்சங் கொண்டு, உணவுக் கலங் களின்மீது கால்தடுக்கி வீழ்ந்து அவற்றை உடைத்துவிட்டான். அவ்வாறு வீழ்ந்ததைக் கண் டும் அதற்காக இரங்காது, இராகுலன் அவனை வெட்டி வீழ்த்திவிட்டான். அப்பழியே அப்பிறப் பில் அவனைத் திட்டிவிடமென்னும் பாம்பால் இறக்கச் செய்ததுமன்றி, இப்பிறப்பிலும் இங்கு வெட்டுண்டு வீழச்செய்தது; உதயகுமாரன் இங் ஙனம் இறந்தமைக்குக் காரணம் இதுவே. வினை தன் பயனை ஊட்டாமல் விடாது; இது திண்ணம். 

“இனி, உனக்கு நடக்கவிருப்பதையுங் கூறுகிறேன்: தன் மகன் கொலை கேட்டு அரசன் உன்னைச் சிறையில் இடுவான். ஆனால், அரசி யாகிய இராசமாதேவி உன்னைச் சிறையினின்றும் மீட்டுத் தன் காவலில் வைத்துக்கொள்ளுவாள். பின்னர் அறவணவடிகளுடைய சொல்லால் நீ சிறையினின்றும் நீங்கி, சாவக நாட்டிற்குப் போய் ஆபுத்திரனைக் கண்டு அவனுடன் மணிபல்ல வத்தை அடைவாய். அவனும் தன் வரலாற்றைப் புத்தபீடிகையின் உதவியால் அறிந்து, தன் நாட்டை அடைவான். பின் நீ ஒரு துறவியின் வடிவங் கொண்டு வஞ்சிமாநகரம் அடைந்து ஆங்குள்ள சமயவாதிகளிடம் சமயக்கொள்கை களைக் கேட்பாய். என் வரலாற்றையும் நீ அறிவா யாக: நான் தெய்வ கணத்துள் ஒருவன். என் பெயர் துவதிகன். மயனாற் செய்யப்பட்ட இவ் வடிவத்தில் நீங்காது உறைவேன்,” என விளக்கமாகக் கூறியது. 

தன் எதிர்கால நிகழ்ச்சியையும் கந்திற் பாவையின் வரலாற்றையும் அறிந்த மணி மேகலை, தன்னுடைய மரணம்வரை நிகழ விருப்பனவற்றையும் தெரிவித்தல் வேண்டும் என, கந்திற்பாவையை வேண்டினாள். அதற்கு அத் தெய்வம், ”நீ வஞ்சிநகரத்து இருக்கும்போது, காஞ்சி மாநகரத்து மழையின்மையால் அங்கு வாழும் உயிர்கள் பசியால் வருந்துதலையும் அற வணவடிகள், மாதவி, சுதமதி என்போர் நின் வரவை எதிர்பார்த்துக் காஞ்சி நகரத்திருப்பதை யும் கேள்வியுற்று அந்நகரம் செல்வாய். அங்கே உன்னாற் பல அற்புதங்கள் நிகழும். அப்பால் அறவணவடிகளைக் கண்டு தருமோபதேசம் பெறு வாய். பின்னர், உனது பிறவிகள் அனைத்தும் ஆண் பிறப்புக்களாகவே இருக்கும். அவ்வப் பிறவிகளிலெல்லாம் அறத்தினின்றும் வழுவாது ஒழுகி ஈற்றில் புத்ததேவனது முதல் மாணவனாய் நிருவாணமடைவாய். 

“உன்குலத்து முன்னோர்களின் கடற்றெய்வ மாகிய மணிமேகலா தெய்வம், நீ சாதுசக்கர முனிவனுக்கு உணவு அளித்த புண்ணிய விசே டத்தால் உன்னை மணிபல்லவத்திற் கொண்டு .சென்று புத்தபீடிகையைத் தரிசிக்கச் செய்தது,” என்று கூறிற்று. இவற்றால் மணிமேகலை தன் கவலை நீங்கப்பெற்றாள். அப்பொழுது இரவு கழியச் சூரியன் உதயமாயிற்று. 

19. மணிமேகலை சிறைப்பட்டமை 

மறுநாட்காலை கந்திற்பாவையையும் சம்பா பதியையும் வழிபடக் கோயிலுக்கு வந்தவர்கள் உதயகுமாரன் வெட்டுண்டு இறந்து கிடத்தலைக் கண்டு, அதனைச் சக்கரவாளக் கோட்டத்தி லுள்ள முனிவர்களுக்குத் தெரிவித்தனர். அவர் கள் மணிமேகலையை உசாவ, அவள் நிகழ்ந்தன வற்றை விபரமாகக் கூறினள். அவர்கள் உதய குமாரனுடைய உடலை ஓரிடத்துப் பாதுகாப்பாக வைத்து, மணிமேகலையையும் ஓரிடத்து மறைத்து விட்டு அரசனைக் காண அரண்மனைக்குச் சென்ற னர். அங்கே தம்முடைய வரவை வாயில் காப்போர் மூலம் அரசனுக்குத் தெரிவித்தார்கள். பின்னர் உள்ளே போய் அரசனை அடைந்து அவனை வாழ்த்தினர். பின்னர் அவர்களுள் ஒரு முனிவர் கூறலானார்: ‘அரசே, இந்நகரிற் காமவிகாரத் தால் மயங்கி, பத்தினிப் பெண்டிரையும் தவ மகளிரையும் விரும்பி அதனால் ஒறுக்கப்பட்டு இறந்தோர் முற்காலத்தும் பலர் ஆவர். அரசர்க ளுடைய இருபத்தொரு தலைமுறையை வேரறுப்ப தாகச் சபதம்பூண்டு அவ்வாறே செய்த பரசுரா மன் அந்நாளில் இந்நகருக்கு வந்தபோது இந் நகரை யாண்ட காந்தமன் என்னும் அரசனைத் துர்க்காதேவி பார்த்து, ‘நீ இப்பொழுது பரசு ராமனுடன் போர்செய்தல் தக்கதன்று’ எனக் கூறினள். அதனால் அந் நகரைவிட்டு வேறிடஞ் செல்ல நினைத்த காந்தமன், இந் நகரைப் பாது காப்பதற்குத் தகுதியானவர் யாரென ஆராய்ந்தான். தன் காதற்’ கணிகையின் புதல்வனும் வீரருள் வீரனுமாகிய ககந்தன் என்பவனே தகுதியானவன் என நிச்சயித்து, அவனுக்கு அரசுரிமையை நல்கி, ‘யான் மீண்டு வருமளவும் இந் நகரை நீ பாதுகாப்பாயாக ; நீ அரசனா யிருந்து இந் நகரையாளுவதால் இந் நகர்க்கு, காகந்தி என்ற பெயர் உண்டாகக் கடவது. என்று கூறி வேற்று வடிவுடன் தான் விரும்பிய இடத்துக்குச் சென்றான். 

“ககந்தன் இந் நகரை ஆட்சிபுரிந்து வரும் போது, ககந்தனின் இளையபுதல்வன், காவிரி நதியில் நீராடிவிட்டுத் தனித்து வருபவளாகிய ய மருதி யென்னும் பார்ப்பனியைக் கண்டு அவள் மீது காம பரவசனாய் உரையாடலாயினன். அவள் மனங்கலங்கி இவ்வுலகிற் பத்தினிப் பெண்டிர் பிறர் நெஞ்சிற் புகார். நானோ அந்நிய னுடைய நெஞ்சிற் புகுந்தேன். ஆதலால், இனி அந்தணன் செய்யும் யாகத்திற்கு உதவிசெய்யும் தகுதி எனக்கில்லை. இவ்வாறு ஏற்பட்டமைக்குக் காரணம் எதுவோ?’ எனத் துன்பமுற்று, தன் னுடைய இல்லத்துக்குச் செல்லாது பூதசதுக்கம் என்னும் இடத்துக்குச் சென்றாள். சென்று, ‘கற்பினின்று தவறும் மகளிரைப் பாசத்தாற் கட்டிக் கொன்று உண்ணும் சதுக்கப் பூதமே, யான் என் கணவனுக்கு யாதொரு தீமையும் மனத்தாலும் நினைத்தேனல்லேன். அங்ஙனமாக வும் மற்றொரு ஆடவனுடைய மனத்துட் புகுந் தேன். யான் செய்த தவறு எது? என்று எனக்கே புலப்படவில்லை. அந்நியனொருவனின் மனத்துட் புகுந்த என்னை, நீ இன்னும் அறைந்துண்ணாதது ஏனோ?’ என்று கூறி அழுதாள். அப்பொழுது சதுக்கப்பூதம் தோன்றி, ‘நீ கணவனுக்கேற்ற பத்தினியாயினும் கோயில்களில் நிகழும் விழாக்களுக்குச் சென்று கடவுளை வழிபடும் நியமம் பூண்டுள்ளாய்; இதனால், அந்நியனுடைய மனத் தைச் சுடும் தன்மை உனக்கு இல்லாது போயிற்று.ஆயினும், கணவனுக்குத் தீங்கிழைக் கும் மகளிரைக் கட்டுவது போல என்னுடைய பாசம் உன்னைக் கட்டாது. குற்றஞ் செய்தவரை ஏழு நாட்களுக்குள் அரசன் தண்டித்தல் முறை. அவன் அக்கால எல்லைக்குள் அவனைத் தண்டியா தொழியின் அதன்பின் நான் தண்டிப்பேன். இனி வரும் ஏழு நாட்களுள் இச் செய்தியை அறிந்த ககந்தன் தீமைபுரிந்த அவனைத் தண்டிப்பான்’ எனக் கூறிற்று. அவ்வாறே தீமைபுரிந்த ககந்த னின் புதல்வன் தன் தந்தையாகிய ககந்தனின் வாளினாலே கொல்லப்பட்டான். 

‘‘அதுமாத்திரமன்று, முன்னர் இந்நகரிலே விசாகை யென்னும் பெயருடைய கன்னி ஒருத்தி இருந்தாள். அவளுடைய மாமன் மகனாகிய தருமதத்தன் என்னும் வணிகனுடன், விசாகை என்பவள் அன்பு பாராட்டி உரையாடிக்கொண் டிருந்தாள். அதனைக் கண்டோர், ‘இவ்விருவரும் களவுமணம் செய்துள்ளனர்’ எனப் பழித்துக் கூறினர்.. அதனைப் பொறுக்கமாட்டாத விசாகை, கந்திற்பாவையை அடைந்து, ‘இந்தப் பழிச்சொல்லை ஒழிப்பாய்” என வேண்டினாள். 

அப்பொழுது கந்திற்பாவை, ‘நகரமக்களே, விசாகை யாதொரு குற்றமும் அற்றவள்; என்று தனது தெய்வவாக்காற் கூறிற்று. அது கேட்டு ஊரார் அவளைப் புகழ்ந்து கூறினர். 

“கந்திற்பாவைத் தெய்வத்தாற் பழிச் சொல் நீங்கப்பெற்ற விசாகை வீதியில் வருகை யில் ககந்தனது மூத்த புதல்வன் அவளிடத்து அதிக மோகங் கொண்டு தன் தலையிலணிந்த மாலையை எடுத்து, அவள் கழுத்தில் இடுதற்குத் துணிந்து தன் மாலையைத் தன் தலையிலிருந்து கழற்ற எண்ணித் தன் குடுமியிற் கையை வைத் தான். ஆயின், அவனது கை அவனது குடுமியை பலர் விட்டு நீங்காதாயிற்று. இதனைக்கண்ட ‘விசாகையின் ஒழுக்க விசேடத்தால் அவன் கை இங்ஙனம் ஆயிற்று,’ எனக் கூறக்கேட்ட ககந்தன், அவனையும் வாளால் வெட்டிக் கொன்றான். 

“தனதில்லமடைந்த விசாகை, ‘மறுபிறப்பிலே தான், நான் மைத்துனனுக்கு மாலை சூட்டுவேன். இப்பிறப்பிற் கன்னிமாடம் புகுந்து தவஞ் செய்வேன்,” எனத் தன் நற்றாய்க்குக் கூறித் தவஞ்செய்யப் புகுந்தாள். 

“தருமதத்தனும் தன் பழியைப் போக்கிய கந்திற்பாவையை வணங்கிக் காவிரிப்பூம்பட்டி னத்தை நீங்கி தென்மதுரையை அடைந்து, “இப் பிறப்பு இங்ஙனம் ஒழிவதாக” என்று கூறி, வாணிகஞ் செய்யத் தொடங்கினான். இவ்வாறு வாணிகத்தாற் பெரும் பொருள் திரட்டி, எட்டி முதலிய பல பட்டங்களைப் பெற்று அறுபதாம் வயதுவரை தென்மதுரையிலேயே தங்கினான், ஆண்டுறைந்த அவனை ஓரந்தணன் அடைந்து, ‘மனைவியில்லாதவர்கள் தருமஞ் செய்யின் அத் தருமம் பயனுடையதாகாது. ஆகையால், நீ உன் நகருக்குச் செல்வாயாக’ என்று கூறினன். 

“தருமதத்தன் தன் பெரும் பொருளுடன் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தான். இதனைத் தலைநரைத்து முதுமையடைந்த விசாகையறிந்து, அவனை அடைந்து, ‘இப்பிறப்பில் யானுன்னை அடையேன். மறுபிறப்பில் உன்னை மணப்பது திண்ணம். இளமையும் யாக்கையும் நில்லா. ஆதலாலே, தானம் செய்க,’ எனக் கூறினள். தருமதத்தன் தான் ஈட்டிய பொருளைக் கொண்டு நல்லறங்கள் பலவற்றைச் செய்தான்” என முனிவர்கள் கூறியதைக் கேட்டு, கிள்ளிவளவன், “இதை நீவிர் கூறியதேன்?’ என வினாவினான். அம் முளிவர்களுள் ஒருவர், ” தன் கணவனாகிய கோவலன் கொலையுண்டதைச் சகிக்கமாட்டாத மாதவி உலகவாழ்வை வெறுத்து முனிவர்கள் வாழும் தவச்சாலையை அடைந்தாள். அவள் புதல்வியாகிய மணிமேகலை இளம்பருவத் திலேயே உலகப்பற்றைத் துறந்து துறவியாயி னள். அவளை அடைய விரும்பிய உதயகுமாரன் அவளைத் தொடர, அவள் தன்னுரு விட்டுக் காய சண்டிகை உருப்பூண்டாள். காயசண்டிகையை அழைத்துச் செல்வதற்கு அங்கே வந்து காத் திருந்த, காஞ்சனன் என்னும் வித்தியாதரன் அங்கே வந்த உதயகுமாரனை தன் மனைவியின் மீது, காமுற்று வந்தானென எண்ணிக் கோபமுற்றுத் தன் வளால் வெட்டி வீழ்த்தினன்” எனச் சொன்னார். 

அரசன் தன் மகன் இறந்ததற்குச் சிறிதும் வருந்தாமல், தன் மந்திரிகளிலொருவனைப் பார்த்து “தன் மகனைப் பூமியிலே கிடத்தி, அவன்மீது தேர்க்காலை விட்டு முறைசெய்த அரசனது பரம்பரையில் ஒரு தீவினையாளன் பிறந்தான்’  என்பதை மற்றைய அரசர்கள் அறியுமுன் அவனுடலைப் புறங்காடடைவியுங்கள்; மணிமேகலையையுஞ் சிறைப்படுத்துங்கள்” என்றான்; மந்திரி அவ்வாறே செய்தான். 

20. மணிமேகலையும் இராசமாதேவியும் 

கிள்ளிவளவனின் மனைவியாகிய இராசமா தேவி, உதயகுமாரன் இறப்பால் ஏற்பட்ட புத்திர சோகங் காரணமாக, ஆற்றமுடியாத மனக்கலக்கங்கொண்டிருந்தாள். அவளுடைய துன்பத்தைக் கண்டு மனம் வருந்திய கிள்ளிவள வன், அவள் துயரத்தை நீக்குமாறு வாசந்தவை என்னும் முதியவளை இராசமாதேவியிடம் அனுப்பினான். 

வாசந்தவை இராசமாதேவியிடம் சென்று, அவளுடைய வருத்தம் நீங்குமாறு பல ஆறுதல் மொழிகளைக் கூறினாள். அவளுடைய மொழி களால் இராசமாதேவி, புறத்தே தன்னுடைய வருத்தம் நீங்கியவளைப்போன்று காணப்பட்டா ளாயினும் உதயகுமாரனின் இறப்புக்குக்காரணள் ஆகிய மணிமேகலை மீது வஞ்சந்தீர்க்கும் மனக் கொதிப்புடையவளா யிருந்தாள். அதனால், அவள் அரசனை அடைந்து “பிக்குணியாகிய மணிமேகலைக்குச் சிறை தகுதியன்று,” எனக் கூறினாள். ‘உன் கருத்து அதுவாயின் அவளைச் சிறையினின்றும் விடுவி.’ என, அரசன் இராசமா தேவியிடம் தெரிவித்தான். 

இராசமாதேவி, மணிமேகலையைச் சிறையி னின்றும் விடுவித்து அழைத்துக்கொண்டு அரண் னையை அடைந்தாள். அடைந்து அவளுக்கு மயக்கும் மருந்தைக் கொடுத்து அவளைப் பைத் தியம் கொண்டவளாகச் செய்யக் கருதி அவளுக்கு மருந்தை ஊட்டினள். ஆனால், மணிமேகலை மறு பிறப்புக்களை அறிந்திருந்தமையினால் அம் மருந்து அவளுக்கு எவ்வித மாற்றத்தையுங் கொடுக்க வில்லை. இதனைக்கண்ட இராசமாதேவி மனங் கவன்று, ஓர் இளைஞனை அழைத்து “இவளை அவமானப்படுத்தி உன்னை இவள் விரும்பியதாகப் பலருக்குஞ் சொல்லு,” எனக் கூறி, அதன் பொருட்டு பொற்காசுகள் பலவற்றை அவனிடங் கொடுத்தாள். அவ் விளைஞன் அதற்குடன்பட்டு மணிமேகலை இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். 

இளைஞன் தன்னை நோக்கி வருவது இராசமா தேவியின் வஞ்சனையான ஏவுதலின் பொருட்டே. என எண்ணிய மணிமேகலை வேற்றுருவடையும் மந்திரத்தை உச்சரித்து ஆண்வேடம் பூண்டு அங்கே யிருந்தாள். 

தீயநோக்கத்துடன் மணிமேகலை யிருந்த இடத்தை அடைந்த இளைஞன், அங்கே ஓர் ஆண் இருத்தலைக் கண்டு, ‘இது இராசமாதேவியின் சூழ்ச்சியோ ‘, எனப் பயந்து அவ்விடத்தைவிட்டு ஓடிப்போய் விட்டான். இதனை அறிந்த இராசமா தேவி, ‘இனி, இவளை உயிரோடு விடேன்’ எனத் துணிந்து ‘• மணிமேகலையை ஏதோ நோய் பீடித்துவிட்டது,’. என்று. பிறர்க்குக் கூறி, அவளை ஓர் அறையில் அடைத்து உணவு முதலி யன யாதொன்றுங் கொடாது விட்டாள். 

மணிமேகலை உணவின்றி வாழும் மந்திரத்தை அறிந்தவளாதலின் அம் மந்திரத்தின் உதவியால் யாதும் வாட்டமின்றி அவ்வறையில் இருந்தாள். 

மணிமேகலையின் இவ்வியல்பைக்கண்ட இராச மாதேவி, ஆச்சரியப்பட்டு நடுநடுங்கி நல்லறிவு வரப்பெற்று, அவளை நோக்கி, ‘மகனை இழந்த துன்பத்தைப் பொறுக்கமாட்டாது இத் தீங்குக ளைச் செய்தேன். நீ இவற்றைப் பொறுத்தருளல் வேண்டும்,” என்று வேண்டினாள். அப்பொழுது மணிமேகலை, “நீ முந்திய பிறப்பில் அரசி நீல பதியாயிருந்தாய். அப்பிறப்பில் உன் மகனாயிருந்த இராகுலனே முன்பிறப்பில் என் கணவனா யிருந்தான். முந்திய பிறப்பில் என் கணவன) யிருந்த இராகுலன் என்பவனே, இப் பிறப்பில் உன் வயிற்றில் உதயகுமாரனாகத் தோன்றினான். இத் தொடர்பினால், நான் துன்பமுற்றும் உன்னை நல்வழிப்படுத்தல் வேண்டும் என்னும் எண்ணத் தினால், ஆகாயவழியே செல்லும் ஆற்றலை நான் பெற்றிருந்தும் அங்ஙனம் செய்யாது, நீ செய்த தீவினைகளைப் பொறுத்திருந்தேன். நீ மருந்தினால் என்னைப் பைத்தியமாக்க எண்ணினாய். நான் முற்பிறப்புணர்ந்தவளாதலின் அறிவு மயங்கா திருந்தேன். உன் ஏவலினால் என்னை அடைந்த இளைஞன்முன் மந்திரவலியால் ஆணுருக்கொண் டேன். நோயற்ற என்னை நோயுடையள் எனக் கூறி அறையில் அடைத்து உணவு தாராது விட்டாய். நான் ஊணின்றி வாழும் மந்திர வலியின் சக்தியால் அதனின்றுந் தப்பினேன். 

“முந்திய பிறப்பில் என் கணவனாயிருந்த இராகுலன், மடைத்தொழில் செய்த தன் சமயற்காரனை வாளால் வெட்டினான். அதனால், அவனை அப் பிறப்பில் திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்டிற்று. அதனால், உயிரிழந்த இரா குலன் பொருட்டு வருந்தினேன்; எனது உயி ரையும் விட்டேன். இப் பிறப்பிலும் அவனது முன்பழி தொடர்ந்தமையால் வித்தியாதரனாற் கொலையுண்ண நேர்ந்தது. இவையெல்லாவற்றையும் நான் புத்தபீடிகைத் தரிசனத்தால் அறிந் தேன்’ என, உவவனம் சென்றது முதல் அன்று காறும் நிகழ்ந்தன அனைத்தையும் விளக்கிக் கூறி னாள். பின்னர் இவ்வுலகத்தோருக்குத் துன்பந் தரும் பொய், கொலை, களவு, கள், காமம் என்னும் பஞ்சமாபாதகங்களை விட்டோரே ஒழுக்கமுடையோர், என்னும் உண்மையையுங் கூறினாள். 

மணிமேகலை கூறிய நல்லுபதேசங்களால் மனத்தெளிவடைந்த இராசமாதேவி, மணிமே கலையை வணங்கினாள். அதனைப் பொறாத மணி மேகலை ”நீ என் கணவனைப் பெற்ற தாய்; அன்றி இவ் வுலகனைத்தையும் புரக்கும் அரசனின் பெருந்தேவி; ஆகையால், என்னை வணங்குதல் தகுதியன்று ; என்று கூறி, இராசமாதேவியை மணிமேகலை வணங்கினாள். 

மணிமேகலையைக் காமுற்றுச் சென்ற உதய குமாரன் வித்தியாதரனால் வெட்டுண்டு. இறந் ததையும் மணிமேகலை. சிறையிலடைக்கப்பட்டதையும் அறிந்த மாதவியின் தாயாகிய சித்திரா பதி அவளைச் சிறையினின்றும் நீக்க நினைந்தாள். அதற்கான வழிகளைச் சிந்தித்த சித்திராபதி இராசமாதேவியிடம் சென்று “கோவலன் இறந்தமை காரணமாக மாதவி துறவு பூண்டு தவச்சாலையை அடைந்தாள். அவள் மகள் மணி மேகலை பிச்சைப்பாத்திரம் ஏந்திப் பிச்சை யேற் றாள். இவற்றால் உலகம் அவர்களை நகைக்கின்றது. மணிமேகலையால் உதயகுமாரன் இறந்தது மாத்திரமன்றி, இந் நகர்க்கு அவளால் இன்னும் ஓர் பெருந்துன்பம் உண்டாகப்போகின்றது. அது இது,” என்று கூறத் தொடங்கினாள். 

“முன்னொருநாள் இவ்வூர் அரசன், இந் நகரின் கடலோரத்திலுள்ள புன்னைமரச் சோலை யில் ஓரழகிய மங்கையைக் கண்டு, அவள்மீது காமுற்று, அவளுடன் அச்சோலையில் ஒரு மாதத்தை இன்பமாகக் கழித்தான். ஒருநாள் அவள் அரசனைவிட்டுத் தன் இருப்பிடஞ் சென் றாள். அவளைக் காணாத அரசன் அவளை எங்குந் தேடினான். அப்பொழுது அற்புத சத்திவாய்ந்த சாரணன் ஒருவன் அங்கே வந்தான். அரசன் அவனை வணங்கி, ‘ என் உயிர்போல்பவள் ஒருத்தியைக் கண்டனையோ? கண்டாயாயிற் கூறு, ” எனலும், அச்சாரணன், ‘அரச, அம் மங்கையை நான் இப்பொழுது கண்டிலேன். ஆயினும், அவளைப்பற்றி அறிவேன். அவள் நாக நாட்டரசனாகிய வளைவணனுக்கு அவன் மனைவி யாகிய வாசமயிலை என்பவள் வயிற்றில் பிறந்தவள். பீலிவளை என்பது அவள் பெயர். அவளே நீ கூறிய மடந்தை; இனி அவள் வராள். அவள் வயிற்றில் உன் புத்திரனாகத் தோன்றும் புதல்வனே வருவான். ஆகையால், நீ துயருறாதே; அவள் வயிற்றிலே தோன்றும் உன் புதல்வன் காரணமாக இந்நகரில் ஒருமுறை இந்திரவிழாச் செய்யாதொழிவை. அந்நாளில் மணிமேகலா தெய்வத்தின் சொல்லாலும் இந்திர சாபத்தினாலும் இந்நகரைக் கடல் கொள்ளும். ஆதலால், யான் கூறியதை மனத்துட்கொண்டு வருடந்தோறும் இந்திர விழாவை மறவாது செய்,’ என்று சொல்லிச் சென்றனன். அவன் சென்றபின் எப்பொழுது கடல் கோள் வருமோ! என, இந் நகரத்தார் நடுங்கிக் கொண்டே வாழ் கின்றனர். மணிமேகலாதெய்வத்தின் பெயரைப் பெற்றவள் மணிமேகலை. ஒருகால் இவள் துன்பங் காரணமாக மணிமேகலா தெய்வம் இந்நகரை அழிக்கினும் அழிக்கும். ஆகையால், அவளை என்று என்னிடம் ஒப்படைத்தல் வேண்டும், ” சித்திராபதி இராசமாதேவியை மன்றாடினாள். இதைக் கேட்ட இராசமாதேவி, இனி மணி மேகலை உன்னுடன் வாழ ஒருப்படாள். அவள் என்னோடுதானே இருத்தற்குரியள்,” எனத் தெரிவித்தாள். 

இச் சந்தர்ப்பத்தில் மாதவியும் சுதமதியும் அறவணவடிகளை வணங்கி அவரையும் அழைத் துக்கொண்டு மணிமேகலையைச் சிறைமீட்கும் நோக்கமாக இராசமாதேவியை அடைந்தனர். 

அறவணவடிகளைக் கண்டமாத்திரத்தே இராசமாதேவி எழுந்து எதிர்சென்று அவரை வணங்கினாள். அவர் அவளுக்கு ஆசி கூறினார். இராசமாதேவி, அவரை ஆசனத்திருத்தி “எனது நல்வினையே தங்களை இங்கே எழுந்தருளச் செய்தது,” என்று உபசரித்தாள். அவளுக்கு அறவணவடிகளும் பல நல்லுபதேசங்களைச் செய்து, தானும் மாதவி, சுதமதி முதலியோரும் அங்கு வந்தமையைப் புலனாகுமாறு செய்தார். பின்னர் மணிமேகலையை நோக்கி, முற்பிறப் பறிந்த இள நங்கையே, நீ முதலில் மற்றைய சமயங்களின் தருமங்களைக் கேட்டறிதல் வேண் டும். அதன் பின்னர் பல உண்மைகளை உனக்கு நான் போதிப்பேன்” என்று கூறிப் போவதற்குப் புறப்பட்டார். 

அவர் போக எழுந்ததும் மணிமேகலை அவர் காலில் வீழ்ந்து வணங்கி, “நான் இன்னும் இந் நகரிலே தங்குவேனாயின் மன்னன் மகனுக்கு இவள் கூற்றாயிருந்தாளென்று உலகோர் தூற்று வர். ஆதலால் இங்கு இரேன். நான் ஆபுத்திரன் நாட்டுக்குச் செல்லல் வேண்டும். அங்கிருந்து மணிபல்லவஞ் சென்று புத்த பீடிகையைத் தரி சிப்பேன். அங்கிருந்து வஞ்சிமாநகரை அடைந்து பத்தினிக்கடவுளாகிய கண்ணகியைத் தரிசிப் பேன். அங்கு கண்ணகிக்கு ஒரு கோயில் எழுப்பப் பட்டிருக்கிறது, எனக் கேள்வியுற்றேன். ஆகை யால், யான் ஆங்குப் போதல் வேண்டும் ” என்று கூறினாள். பின்னர் தன் பாட்டியாகிய சித்திராபதியையும் தாயாகிய மாதவியையும் தோழியாகிய சுதமதியையும் நோக்கி, “எனக்கு ஏதேனும் துன்பம் நேரிடுமென்று கவலாதீர், என்று கூறிப் புறப்பட்டாள். 

சூரியாத்தமனமாயிற்று. அந்திமாலைப் பொழுதில், மணிமேகலை சம்பாபதியையும் கந்திற் பாவையையும் வலங்கொண்டு துதித்து, ஆகாய வழியே பறந்து சென்று, புண்ணியராசன் என்னும் பெயருடன் நாகநாட்டை ஆண்டு கொண்டிருந்த ஆபுத்திரனது நாட்டை அடைந்து, ஒரு சோலையின் புறத்தே இறங்கினாள். இறங்கிய மணிமேகலை, ஆங்குள்ள ஒரு முனிவனை வணங்கி இந்நகரின் பெயர் யாது? இதனை ஆளும் அரசன் யார்?” என வினவினாள். 

“இந்நகரின் பெயர் நாகபுரம். இதனை ஆள் பவன் பூமிசந்திரன் புதல்வனாகிய புண்ணிய ராசன். இவன் பிறந்தநாள் தொடக்கம் இந் நாட்டில் மழை பிழைத்ததில்லை. உயிர்களும் ஒருவகையான நோய் நொடியின்றி வாழ்கின் றன. என, அம்முனிவன் மணிமேகலைக்குக் கூறினான். 

21. புண்ணியராசன் மணிபல்லவத்திலே தன் வரலாறு அறிதல் 

புண்ணியராசன் தன் மனைவியோடு மணி மேகலையிருந்த சோலையை அடைந்தான். ஆங் குள்ள தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி, அவனிடம் பல தருமங்களையுங் கேட் டறிந்து ஒருபுறத்தே யிருந்தனன். அவ்விடத்தே காணப்பட்ட மணிமேகலையைப் புண்ணியராசன் கண்டு “இவள் யார்? பிச்சைப் பாத்திரம் ஏந்தித் தருமோபதேசம் கேட்கின்றாளே,’ என, தன் அயலில் நின்ற பிரதானியைக் கேட்டான். 

பிரதானி அரசனை வணங்கி, “இந்தச் சம்புத் தீவகத்தில் இவளை ஒப்பார் யாருமில்லை. ஒரு கால் நான் காவிரிப்பூம் பட்டினத்துக்குச் சோழ அரசனாகிய கிள்ளிவளவனைக் காணச் சென்றிருந் தேன். அப்பொழுது ஆங்கேயுள்ள அறவணவடி கள் இவள் வரலாறுகளை எனக்குக் கூறினார். அதனை நான் முன்னரே தங்களுக்குக் கூறிய துண்டு. அவளே இவள்,” என்று தெரிவித்தான். 

மணிமேகலை புண்ணியராசனை நோக்கி “முற்பிறப்பில் உன் கையிலிருந்த பிச்சைப் பாத்திரமே இப்பொழுது என் கையிலிருக்கிறது. உங்கள் முற் பிறவியையும் நீங்கள் அறியவில்லை. இப்பிறப்பைக்கூட அறியமாட்டீர்கள். மணி பல்லவத்திலுள்ள புத்த பீடிகையைத் தரிசித்தா லன்றிப் பழம் பிறப்பை அறிதல் முடியாது. ஆதலால், அரசே, அங்கே வரும்படி அறிவுரை கூற விரும்புகிறேன்” என்றாள். இவ்வாறு கூறிவிட்டு மணிமேகலை ஆகாயவழியே சென்று மணிபல்லவத்தில் இறங்கிப் புத்த பீடிகையை வலங்கொண்டு தரிசித்தாள். 

புண்ணியராசன், சோலையை நீங்கி நகரை யடைந்து தன்னை வளர்த்த தாயாகிய அமர சுந்தரியைக் கண்டு, தன் வரலாற்றைக் கூறு மாறு கேட்டான். அவள், அவன் பசு வயிற் றிலே தோன்றியமையையும், அவன் அங்ஙனம் தோன்றிய வைகாசிப் பூர்ணிமையன்று சில நன்னிமித்தங்கள் நிகழ்ந்தமையையும், மகப் பேறில்லாத தானும் தன் கணவனாகிய பூமி சந்திரனும் மண்முகமுனிவனை வணங்கி அக் குழந்தையை எடுத்து, புண்ணியராசன் என, நாமமிட்டு வளர்த்தமையையும், அரசாளும் உரிமை அவனுக்குக் கொடுக்கப்பட்டமையை யுங் கூறினாள். 

தான் அமரசுந்தரியின் புதல்வனல்லன் என்பதையும், பூமிசந்திரனால் வளர்க்கப்பட்ட புதல்வனே என்பதையும் உணர்ந்த புண்ணிய ராசன், அரசவாழ்வைத் துறந்து துறவு வாழ்வை மேற்கொள்ள விரும்பி அக்கருத் தைத் தன் மந்திரியாகிய சனமித்திரனிடம் தெரிவித்தான். 

சனமித்திரன் அரசனை வணங்கி, “அரசே, என் சொல்லைக் கேட்பீராக; அரசனாகிய பூமி சந்திரன், உம்மைப் புதல்வனாகப் பெறுவதன் முன் இந் நாட்டிலே பன்னிரண்டு வருடம் மழை பெய்யவில்லை. வறுமை மிகுந்திருந்தது. தாய்மார் தங்கள் குழந்தைகளையே விற்க முனைந்தனர். பதினாயிரக்கணக்கில் மக்கள் பட்டினியால் மாண்டார்கள். எல்லா உயிர் களும் வருந்தின. அக்காலத்திலே கோடை யிலே பெய்த பொன்மழைபோல, நீர் தோன்றி னீர். நீர் தோன்றியபின் இந் நாட்டிலே பருவந் தவறாமல் மழை பெய்தது ; வாவிகள் நிரம் பின ; வறுமை ஒழிந்தது ; எல்லா உயிர்களும் பசிப்பிணியின்றித் துயரம் நீங்கி இன்ப வாழ்வு வாழ்ந்தன. நீர் இந்நாட்டை விட்டகன்றால் இங்குள்ளார் அனைவருந் தாயைப் பிரிந்த குழந்தைகளைப் போல அழுவர். மீண்டும் பஞ் சம் புகுந்துவிடும். இந் நாட்டை மறந்து உங்கள் பயனையே விரும்பிச் செல்லுதல் தகுதியன்று. தன்னுயிரைப் பொருட்படுத்தாது பிறவுயிர் களைப் பாதுகாக்கவேண்டியவன் அரசன். அதனினின்று மாறுவது அரச நீதியன்று ‘” என்று கூறினன். 

சனமித்திரன் கூறியவற்றை அரசன் கேட்டு “எது எங்ஙனமாயினும் ‘மணிபல்ல வத்திலுள்ள புத்த பீடிகையை வலங்கொள் ளல் வேண்டும்,’என்னும் ஆசை, என்மனத்தே யிருக்கின்றது. அங்கே போகாமல் என் மனம் ஆறமாட்டாது. ஒருமாதகாலம் இந் நகரைப் பாதுகாத்தல் உன் கடன். நான் மணிபல்லவம் போய்வருவேன்” என்று கூறித் தன் கடற் பயணத்துக்கு வேண்டியவற்றை ஆயத்தஞ் செய்தான். 

அரசன் செல்வதற்கு வேண்டிய கப்பல் வருவிக்கப்பட்டதும் அரசன் கப்பலில் ஏறிக் காற்றின் உதவியோடு கப்பலைச் செலுத்தி மணிபல்லவத்தை அடைந்தான். மணிமேகலை அவனை வரவேற்று அழைத்துச் சென்று, அத் தீவை வலம்வந்து பழம் பிறப்பை உணர்த்த வல்ல புத்த பீடிகையைக் காட்டினாள். 

அரசன் புத்த பீடிகையை வலம்வந்து தரி சித்து வணங்கித் துதித்தான். துதித்தலும் நிலைக் கண்ணாடியின் முன் தோன்றும் பிரதிமை போல, அவனது பழம் பிறப்புக்கள் அவன் மனக்கண்முன் தோன்றலாயின. 

பழம் பிறப்பை அறிந்து வியப்புற்ற புண்ணியராசன் மனத்தே அமுதசுரபி என்னும்  அட்சயபாத்திரத்தை முற்பிறப்பிலே தனக்கு அளித்த தென்மதுரைச் சிந்தா தேவி தோன்றினள். உடனே அவன், “தமி ழகத்திலே தென்மதுரையில் எழுந்தருளி யிருக்கும் கல்விக்கிறைவியே, இன்று என் முற் பிறப்பை அறிந்தேன்; என் கவலைகள் அகன் றன. உன் கோயிலில் ஒருநாள் மழைக்கால இரவின்போது துயின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே பெருந் திரளான இரவ லர் வந்து உணவு வேண்டி நின்றனர். அவர்களுக்குக் கொடுக்க உணவில்லாமற் றிகைத்து நின்ற என் கையில் எத்தனை பேருக்கு வேண்டு மானாலும் உணவு உதவத்தக்க தெய்வீக ஆற்றல் வாய்ந்த அமுதசுரபியைத் தந்தாய். அதன்பொருட்டு அன்று உன்னை வணங்கியது போலவே இன்று வணங்குகின்றேன்” என்று கூறினான். 

புத்த பீடிகையிடம் விடைபெற்று, மணி மேகலையுடன் அவன் புன்னைமரநிழலில் அமர்ந் தான். அப்பொழுது புத்த பீடிகையின் காவற் றெய்வமான தீவதிலகை அங்கே தோன்றி அவனை நோக்கி, ‘“ அமுதசுரபியைக் கையி லேந்தி, உயிர்களின் பசிப்பிணியைத் தீர்த்த பெரியோனே ! அக்காலத்தில் நீ, கப்பலில் ஏறிவிட்டாய் என எண்ணி, கப்பலைச் செலுத் திச் சென்று இடையில் உன்னைக் காணாமை யால் இங்கே திரும்பி வந்து நீ இறந்துகிடத் தலைக் கண்டு மனத் துயருற்றுத் தம்முயிரையும் விட்ட ஒன்பது செட்டிகளின் உடல்கள் இவை. அச் செட்டிகளாற் காப்பாற்றப்பட்டு அவர்க ளுடன் வாழ்ந்தவர்கள், செட்டிகள் இறந்த மையைப் பொறுக்காது தாமும் உயிர்விட் டனர். அவர்களின் உடலென்புகள் இவை. இதோ மணலால் மூடுண்டு புன்னைமர நிழலிலே காணப்படும் இவ்வெலும்புகள் உனது உட லென்புகள்; இவற்றைப் பார். உனது உயிரை விட்டாய்; உன் உயிருக்காக இரங்கிப் பின் னால் வந்த பலரை இறக்கச் செய்தாய். ஆகையால், நீ கொலைஞன்’ என அரசனுக்குக் கூறினாள். 

பின்னர் தீவதிலகை மணிமேகலையை நோக்கி, “காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டது. ஏனெனில், நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளை என்பாள், தன் மகனுடன் இந்திரனாற் காக்கப்படும் இத் தீவையடைந்து புத்த பீடிகையை வலம்வந்து வணங்கினாள். அவள் இங்கே தங்கியிருக்கும்போது கம்பளச் செட்டி என்னும் வணிகனுடைய கப்பல் இத் தீவில் நங்கூரமிட்டுத் தங்கியது. அக்கப்பல் காவிரிப்பூம் பட்டினத்துக்குப் போக இருக் கிறது, என்பதை உணர்ந்த பீலிவளை, தன் மகனை அவ்வணிகன் வசம் ஒப்புவித்து, ‘இவன் அரசன் புதல்வன். இவனை அவனிடம் சேர்ப் பாயாக’ என்று கூறினாள். 

‘‘வணிகன் இளவரசனை மகிழ்வுடன் தன் கப்பலில் ஏற்றிக்கொண்டு பிரயாணத்தை ஆரம்பித்தான். ஆனால், நள்ளிரவிற் கொடுமை யான புயற்காற்று எழுந்துவீசக் கப்பல் கல்லில் மோதுண்டு உடைந்தது. தப்பிப் பிழைத்த வணிகனும் சில கப்பலோட்டிகளும் அரசனிடம் சென்று அதனைத் தெரிவித்தனர், 

“கிள்ளிவளவன் தன் புதல்வனை இழந் தமையால் மனநடுங்கித் துயருற்று மகனைத் தேடிச் சென்றதால் இந்திரனுக்குரிய விழாச் செய்தலை அந் நகரார் மறந்தனர். அதனைப் பொறாமல் மணிமேகலா தெய்வம் ‘ இந் நகரைக் கடல் கொள்ளுக’ என்று சபிக்க, ஒரு பேரலை கிளம்பிக் காவிரிப்பூம் பட்டினத் தைக் கடலுள் ஆழ்த்திற்று. அரசன் வேறிடஞ் சென்றான். அறவணவடிகளோடு மாதவியும் சுதமதியும் யாதொரு வருத்தமுமின்றி வஞ்சி மாநகரம் புக்கனர்,” என்று சொல்லி, தீவ திலகை அகலுதலும், புண்ணியராசன், தன் முன்பிறவிக்குரிய உடலைக் காணும் அவாவினால் புன்னைமர நிழலிலுள்ள மணலைத் தோண்டி, அங்கே தோன்றிய தன்னுடைய பழைய உடம் பின் எலும்பைக் கண்டு மயக்கமுற்றான். 

மணிமேகலை அரசனுக்கு ஆறுதல் கூறினாள்: “அரசே, முன்னைப் பிறப்பை உணர்ந்தால், சமயப்பற்றுடைய நல்ல அரசனாய், நீங்கள் ஆளும் பல தீவுகளிலும் உங்கள் புகழ் பரவும் என்ற நல்லவாவுடனேயே நான் உங்கள் நகர்க்கு வந்து உங்களை இங்கு அழைத்துவந் தேன். மன்னர்களே துறவிகளாக விரும்பினால், ஏழைகள் எங்ஙனம் உய்வர்? உணவும் உடை யும் உறையுளும் கொடுத்து உதவுவதே உண் மையான அறம் என்பதை மறவாதேயுங்கள்,” என்றாள். 

“எனது நாட்டிலாயினும் சரி, பிறநாடுகளி லாயினும் சரி, நீங்கள் நாட்டிய அறநெறியின் படி நடப்பேன். என் பழம்பிறப்புக்களை உணர்த்தி நீங்கள் என்னைத் திருத்தினீர்கள். இவ்வாறு அன்பு காட்டிய தங்களை எவ்வாறு பிரிவேன்,” என மன்னன் மொழிந்தான். 

மணிமேகலை அரசனை நோக்கி, “இப்பிரி வுக்கு வருந்தாதீர்கள்; உங்கள் நாடு உங்களை அழைக்கிறது. ஆகையால், உடனே திரும்பிச் செல்லுங்கள்’” என்று கூறி, வானில் எழுந்து சென்றாள். 

22. மணிமேகலை வஞ்சிநகர் அடைந்தமை 

மணிமேகலை ஆகாயவழியே சென்று வஞ்சி 

மாநகரை அடைந்தாள். அங்கே, தன் தாய் கண்ணகியையுந் தந்தை கோவலனையுந் தரிசிக்க விரும்பி, கண்ணகி கோயிலிற் புகுந்து வணங்கி, ‘கணவனிறந்தும் அவனுடன் இறவாமற் சினங் கொண்டு மதுரையை அழித்த காரணம் யாது? கூறியருளல் வேண்டும்,” என்று பிரார்த்தித்தாள். 

பத்தினிக் கடவுளாகிய கண்ணகி, “என் தலைவனுக்கு நேர்ந்த மரணத் துன்பத்தைப் பொறுக்க இயலாமையால் மதுரையை எரித்து அழித்தேன். இப்பொழுது மதுராபுரித் தெய் வம் தோன்றி எமது பழைய வரலாற்றைக் கூறியது. அது : 

‘கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தரச னாகிய வசுவும், கபிலபுரத்தரசனாகிய குமரனும் தம்முட் பகைகொண்டு போர் செய்தனர். அக் காலத்து, சிங்கபுரத்துக் கடைவீதியிலே சங்க மன் என்னும் வணிகன் தன் மனைவியாகிய நீலி என்பவளுடன் பண்டம் விற்றுக்கொண்டிருந் தான். அவன்மேற் பொறாமையுற்ற பரதன் என்பவன், அந்நகரத்தரசனிடஞ் சென்று, சங்கமன் கபிலபுரத்தரசனின் ஒற்றன்,’ எனக் றினான். யாதொரு குற்றமுமறியாத சங்க மனை, சிங்கபுரத்தரசன் பரதனின் தொல்லைக் கேட்டு ஒற்றனென எண்ணிக் கொலை செய் தான். இதனை அறிந்த சங்கமன் மனைவி நீலி, அதனைப் பொறுக்கலாற்றாது அழுது புலம்பிப் பெரியதொரு மலைமீதேறி அதனினின்றும் வீழ்ந்திறந்தாள். அங்ஙனம் இறக்கும் பொழுது ‘எனக்கு இத்துன்பத்தைச் செய்தோர் மறுபிறப்பில் இத்தகைய துன்பத்தை அனு பவிப்பாராக’ எனச் சபித்தாள். அப்பரதனே கோவலனாகப் பிறந்தான். அவ் வினையால் இத் துன்பம் அடைந்தான், பழம்பிறப்பிற் செய்த வினைப்பயனை எவரும் அனுபவியாதிருத்தல் முடியாது;’ என்பது. 

“இங்ஙனம் தெய்வம் கூறிய பின்னும் கோபம் அடங்காது மதுரையை எரித்தேன். முன்பு செய்த தவப்பயனால் நானும் கணவனுந் தேவர்களானோம். ஆயினும், மதுரையை எரித்த இப் பாவத்தின் பலனை அனுபவித்தே தீரல் வேண்டும் ” எனக் கண்ணகித் தெய்வம் கூறிற்று. 

பின்னர், மணிமேகலை முனிவனது வேடங் கொண்டு கோயில்களும் பொழில்களும் பொய்கைகளும் மலிந்து, முனிவர்களும் கற் றோரும் புலவரும் மிக்குள்ள வஞ்சிமாநகரை அடைந்தாள். வஞ்சிமாநகரிற் பல சமய வாதி களின் சமயக்கோட்பாடுகளையும் வினவி அறிந்து கொண்டாள். 

மாதவியையும் சுதமதியையும் அறவண வடிகளையுங் காண விரும்பிய மணிமேகலை, வஞ்சிமாநகரத்துள்ளே சென்றாள். அங்கே, பலவகை மாந்தர்கள் இருக்கும் வீதிகளையுங் கடந்து பௌத்த முனிவர்கள் தங்கியிருக்கும் தவச்சாலையை அடைந்தாள்; ஆங்கு மாசாத் துவான் என்னும் முனிவன் தவஞ் செய்து கொண்டிருத்தலைக் கண்டு, அவனை வணங்கினாள். வணங்கி, தன் கையிலுள்ள அமுத சுரபியின் இயல்பையும், அதிலிருந்து உணவை எடுக்க எடுக்க உணவு வளருந் தன்மையையும், அப் பாத்திரத்தை முற்பிறப்பிற் சிந்தா தேவியின் அருளாற் பெற்ற ஆபுத்திரன் வர லாற்றையும், அவனது புண்ணிய விசேடத்தால் இப் பிறப்பிற் புண்ணியராசனாய்ப் பிறந்து சாவகநாட்டை ஆண்டுவருஞ் சிறப்பையும், தான் அவனை மணிபல்லவத்துக்கு அழைத்துச் சென்று புத்த பீடிகையைத் தரிசிக்கச் செய்.த வரலாற்றையும், அப்பொழுது தீவதிலகை என்னும் காவற்றெய்வம் தோன்றிக் காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல்கொண்ட வரலாற் றைக் கூறியமையையும், தான் தன் தாயாகிய கண்ணகி கோயிலை வணங்கி அவள்பால் அவள் பழம்பிறப்பின் வரலாற்றைக் கேட்டமை யையும், பல சமயவாதிகளிடமுந் தான் சமய உண்மைகளையு முணர்ந்த வரலாற்றையுங் கூறினாள். 

மணிமேகலை கூறிய அனைத்தையுங் கேட்ட மாசாத்துவான், தான் ஆங்குவந்த காரணத் தையுங் கூறினான். அப்பொழுது, மாதவியும் சுதமதியும் அறவணவடிகளும் ஆங்கு வந்தமை யையும், ஆங்கிருந்து ஆங்கிருந்து அவர்கள் காஞ்சிமா நகரம் புகுந்தமையையும், அவ்விடத்திலேயே அறவணவடிகள் மணிமேகலைக்குத் தருமோப தேசஞ் செய்ய நினைந்தமையையும், காஞ்சிமா நகரத்திலே மழையின்மை காரணமாகப் பல உயிர்கள் பசிப்பிணியால் இறந்தமையையும் தெரிவித்து, காஞ்சிமாநகர மக்களை வாட்டும் பசிப்பிணியை நீக்க மணிமேகலை ஆங்குச் செல்லவேண்டிய ஆவசியகத்தையுங் கூறினான். 

மணிமேகலை மாசாத்துவ முனிவனை வணங்கி அமுதசுரபியுடன் ஆகாயவழியே எழுந்து, வடதிசைகண் மழையின்மையால் அழகுகெட்டு, செல்வங் குன்றி வறுமையுற் றிருக்கும் காஞ்சிமாநரை அடைந்தாள். அந் நகரின் நடுவே இளங்கிள்ளி என்னும். அரச னாற் கட்டுவிக்கப்பட்ட புத்தகோயிலை வணங்கி அதனயலிலுள்ள ஒரு சோலையிலே தங்கினாள். 

இவ்வாறு தங்கியிருக்கும் மணிமேகலையின் இயல்பை அறிந்த ஒருவன், அரசனை அடைந்து அச் செய்தியைத் தெரிவித்தான். அமுதசுரபி யின் ஆற்றலைக் கேள்வியுற்ற அரசன், மந்திரி மார்களுடன் விரைந்து சென்று மணிமேகலை யைக் கண்டு அவளை வணங்கினான். வணங்கி, “என் அரசுமுறை பிழைத்தமையாலோ, அல்லது என் தவக்குறைவினாலோ, அன்றி, கற்புடைய மாதரின் குறைபாட்டினாலோ இந் நாடு மழையின்றி அல்லலுற்று வருந்துகிறது. இனி என்ன செய்வேன்? என, வருந்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு தெய்வம் தோன்றி ‘நீ வருந்தாதே; உன் நல்வினைப் பயனால் ஒரு பெண் இங்கே வருவாள். அவளது கையிலுள்ள தெய்வப்பாத்திரத்தினுதவியால் இந்நாடு பசிப்பிணியின்றி வாழும்; இந்நாடும் உய்யும்; அவளுடைய கருணையால் மேகமும் மழை பொழியும்; பல அற்புதச் செயல் களும் நிகழும். அவள் வருகையை எதிர் பார்த்து மணிபல்லவத்திலுள்ள கோமுகியென் னும் பொய்கையைப்போல ஒரு பொய்கையை யும் ஒரு சோலையையும் உண்டாக்கு’ என்று கூறிச் சென்றது. தெய்வம் கூறியபடியே இச் சோலையையும் பொய்கையையும் அமைப்பித் தேன்’ என்று கூறினன். 

மணிபல்லவம் போன்ற சோலையையும் கோமுகி போன்ற பொய்கையையும் மணி ‘மேகலை பார்த்து மகிழ்ச்சியடைந்து தன் பழம் பிறப்பை யுணர்த்திய புத்தபீடிகையையும் தீவ திலகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வணங்குதற்கேற்ற கோயில்களையும் உண்டாக். கினள். அவற்றிற்குரிய பூசையையும் திரு விழாவையும் அரசனைக்கொண்டு செய்வித் தனள். பின் அவ்விடத்துள்ள புத்த பீடிகையி லிருந்து அமுதசுரபியின் உதவியால் எல்லா உயிர்களையும் உண்ண வருமாறு அழைத்தாள். அப்பொழுது குருடர், செவிடர், முடவர், ஊமையர், நோய்வாய்ப்பட்டோர்,பசித்தோர், வறியோர் ஆகிய யாவரும் வந்து கூடினர்: அவர்களுக்கு உணவு கொடுக்கக் கொடுக்க உணவு மேலும் மேலும் பெருகியது. அப் புண்ணிய விசேடத்தால் எங்கும் மழை பெய் தது. வளம் மிகுந்தது. 

இங்ஙனம் நிகழுங் காலத்து அறவணவடிகள் அந்நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்று மாதவி யோடும் சுதமதியோடும் அறச்சாலையை அடைந்தார். அவர்களைக் கண்ட மணிமேகலை விரைந்து சென்று அறவணவடிகளை வணங்கி உபசரித்து, அறுசுவை வாய்ந்த போசனத்தை அமுது செய்வித்தாள். ‘யான் செய்த புண் ணியம் பலன் அளித்தது’, எனக் கூறி மீண்டும் வணங்கினாள். 

தம்மை வணங்கிய மணிமேகலையை அறவண. வடிகள் வாழ்த்தி, “பீலிவளைபெற்ற குழந்தை யைக் கம்பளச்செட்டி கடலிற் பறிகொடுத் தமையால் அரசன் வருத்தமுற்று அக் குழந்தை யைத் தேடி அலைந்தான். இதனால், காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரவிழா நிகழாது போயிற்று. அது தெரிந்த மணிமேகலா தெய்வம், இந் நகரைக் கடல்கொள்ளுக’; எனச் சபித்தது.. இந்திரனும் சபித்தான். அதனால் அந்நகரம் கடல் கொள்ளப்பட்டது. உன் தாயும் சுதமதி யும் யானும் உன்பொருட்டு இந் நகரடைந்தோம்” என்று கூறினார். 

மணிமேகலை அறவணவடிகளை வணங்கி, மணிபல்லவத்திலே புத்தபீடிகையைக் காத்து நிற்கும் தீவதிலகையும் இச் செய்தியைக் கூறினள். நான் வேற்றுருக்கொண்டு வஞ்சிமா நகரத்தை அடைந்தபோது பல சமய வாதிக ளிடமும் அவரவர் கொள்கைகளைக் கேட்டேன். அவை என் மனத்துக்குப் பொருந்தாமையால் இந்நகரம் அடைந்து உம்மைச் சரண் அடைந் தேன். உண்மைப் பொருளை உணர்த்தியருளல் வேண்டும்,” என்று வேண்டிநின்றாள். 

மணிமேகலையின் வேண்டுகோளுக்கிணங்கி அறவணவடிகள் மணிமேகலைக்குப் புத்த தரும உண்மைகளை உபதேசித்தருளினார். மணி மேகலை அவ்வுபதேச மொழிகளைக் கேட்டு அந் நகரிலேயே தவஞ் செய்துகொண்டிருந்தாள். 

(முற்றும்)

– மணிமேகலை சரிதை, முதற் பதிப்பு: 1960, ஆறாம் வகுப்புக்குரியது, வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *